திங்கள், 20 ஜூலை, 2015

சௌதி அரேபியா வரலாறு 1

சௌதி அரேபியா வரலாறு 

கூ.செ.செய்யது முஹமது
இப்போது இருக்கும் சௌதி அரேபியாவுக்கு 1932 ல் அப்துல் அஜீஸ் அல் சௌத் என்பவர் தான் அடித்தளம் அமைத்தார். 20,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான ஆதாரத்தைக் கொண்ட சௌதி அரேபியாவுக்கு இரண்டு வரலாறுகள் உண்டு. ஒன்று 7 ம் நூற்றாண்டில் இஸ்லாம் வளர்ந்து அரேபியப் பேரரசானது. மற்றொன்று 20 ம் நூற்றாண்டுகளில் எண்ணெய்வளம் கண்ட பிறகான வரலாறாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெர்ஷிய வளைகுடா பகுதிகளில் தில்முன் சமூகமும், ஹிஜாசின் வடக்குப் பகுதியில் தமூத் மக்களும் வாழ்ந்ததற்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இங்கிருந்து பலர் அருகாமை பாலைவனப்பகுதிகளில் சென்று குடியேறி இருக்கிறார்கள். காரணம் திம்னா (பாலஸ்தீனம்), தெல் எல் கெலீஃபீ (ஜோர்தான்) ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மண்பாண்ட சிதிலங்கள் இதை வடமேற்கு சௌதி அரேபியாவைச் சேர்ந்ததென உறுதி செய்கின்றன. கிரேக்க, ரோம ஆட்சியின் போது இப்பகுதி முற்றிலும் பயன்படாத பாலைவனப் பகுதியாகக் கருதப்பட்டு புறக்கணிக்கப்பட்டன.
570 களில் நபிகள் (ஸல்) நாயகம் இங்குள்ள மக்கா நகரத்தில் பிறந்து, 610 ல் தான் ஒரு இறைதூதர், இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என பிரச்சாரம் செய்ய அப்பகுதி மக்களால் துன்பம் செய்யப்பட்டு அங்கிருந்து மதீனா நகருக்குச் சென்றார்கள். மதீனாவிலுள்ள சில பழங்குடியினரின் கூட்டுடன் இஸ்லாம் மார்க்கத்தின் கீழ் முதல்முறையாக ஒரு ஆட்சியை இங்கு நிறுவினார்கள். நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் இறப்பிற்குப் பின், ஆட்சிக்கு வந்த அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் அட்சியில் அரபு பழங்குடியினரிடையே புரட்சிகள் தோன்ற ‘ரித்தா போரில்’ எதிர்கொண்டு அருகாமை பலம் வாய்ந்த பைசாந்தியர்களை எதிர்த்தார்கள். அவர்களுக்குப் பிறகு, வரிசையாக உமர் பின் கத்தாப் (ரலி), உதுமான் பின் அல் அஃப்ஃபான் (ரலி), அலி இப்ன் அபு தாலிப் (ரலி) ஆகியோர் ‘ராஷிதீன் கலீஃபாக்கள்’ என்றும், நான்கு நேர்மையான கலீஃபாக்கள் என்றும் இஸ்லாமிய ஆட்சியைத் தொடர்ந்தார்கள். இந்த ஆட்சியிலிருந்தே உமய்யாத் என்ற குடும்பத்தினர் தோன்றி ஆட்சியைக் கைப்பற்றி அரேபியாவின் வெளிப்பகுதிகளுக்கும் ஆட்சியை விரிவுபடுத்தினார்கள். பைசாந்தியப் பேரரசு, பெர்ஷியப் பேரரசுகளை வென்று ஐபீரிய பாலைவனப் பகுதியையும் வென்று இந்தியா வரை ஆட்சியை விரிவு படுத்தினார்கள். இஸ்லாமியர்களின் கடமைகளில் வசதி இருக்கும் பட்சத்தில் வாழ்நாளில் ஒரு முறையேனும் புனித பயணமாக மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்குச் செல்ல வேண்டும். இஸ்லாமியர்களின் வேதமான திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அன்றிலிருந்து இன்றுவரை இந்நகரங்கள் புனிதமாகக் கருதப்படுகின்றன. அதனால் பல ஆட்சியாளர்களின் காலங்களில் பரபரப்பான பாக்தாத், டமாஸ்கஸ், கெய்ரோ போன்ற நகரங்களிலிருந்து அமைதியாக விலகி இருந்தது.
ஆனால், உமய்யாத்களின் முதல் கலீஃபா மு ஆவியா (ரலி) அவர்கள் மக்காவில் கட்டிடங்கள் கட்டி, கிணறுகளையும் தோண்டினார்கள். இவருக்குக் கீழ் வந்த மர்வான்கள் ஆட்சியில் மக்காவில் இசைக்கும், கவிதைகளுக்குமான உறைவிடமாக இருந்தது. முன்னாள் கலீஃபா அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் மகள் அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கும், ஸுபைர் இப்ன் அல் அவ்வாம் (ரலி) அவர்களுக்கும் பிறந்த அப்துல்லாஹ் அல் ஸுபைர் (ரலி) என்ற சஹாபா, உமய்யாத் கலீஃபா முதலாம் யசீதுக்கு எதிராக மக்காவில் சிரியா இராணுவத்தை அழைத்து வந்து புரட்சி செய்தார். அப்போது தீவிபத்தினால் கஃபா சேதமடைந்தது. 747 ல் மக்கா எமன் நாட்டிலிருந்து வந்த கரீஜியாக்களால் எதிர்ப்பின்றி கைப்பற்றப்பட்டு, பின் கலீஃபா இரண்டாம் மர்வானால் மீட்கப்பட்டது. 10 ம் நூற்றாண்டுகளில் ஹாஷிமிட்கள் ஹிஜாஸ் பகுதியை வளப்படுத்தினார்கள். பின் 13 நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டு வரை ஹிஜாஸ் பகுதி நல்ல வளம் கண்டது. பல இஸ்லாமிய ஆட்சிகளில் ஹிஜாஸ் கப்பம் செலுத்திய பகுதியாக இருந்தது. சௌதி அரேபியாவின் ஆட்சி அப்பாஸிட்கள், ஃபாத்திமிட்கள், அய்யுபிட்கள், மம்லுக்குகள் மற்றும் இன்னபிற ஆட்சியாளர்களிடம் மாறி மாறி வந்தது. 16 ம் நூற்றாண்டில் ஹிஜாஸ், அசிர், பெர்ஷிய வளைகுடாப் பகுதிகள் ஓட்டோமானின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஓட்டோமானின் கவர்னர் மக்கா நிர்வாகத்தைக் கவனித்தார். 17 ம் நூற்றாண்டில் அல் ஹசா பகுதியின் அதிகாரத்தை ஓட்டோமான் இழந்தாலும், 19 ம் நூற்றாண்டில் மீண்டும் கைப்பற்றியது.
1744 ல் ‘வஹ்ஹாபி’ என்னும் இஸ்லாமிய அமைப்பின் ஸ்தாபகராக இருந்த முஹம்மது இப்ன் அப்தல் வஹ்ஹாப் (ரஹ்) என்பவரின் துணையுடன் ரியாத் நகரின் அருகிலிருந்த அத் திர்ஃஇய்யா என்ற பகுதியிலிருந்து முஹம்மது இப்ன் சௌத் என்ற பழங்குடித் தலைவர் சௌதி ஆட்சிவம்சத்தைத் தோற்றுவித்தார். ஷெய்க் சௌத் இப்ன் முஹம்மது இப்ன் முக்ரீன் என்பவர் 16 ம் நூற்றாண்டில் அத் திர்ஃஇய்யா பகுதியில் குடியேறி பேரீச்சம் பழத்தோட்டம் வைத்து வாழ்க்கை நடத்தினார். நாளடைவில் அவர் தான் சார்ந்த மக்களுக்கு அப்பகுதியில் தலைவராக ஆனார். அவரின் மகன்தான் முஹம்மது இப்ன் சௌத் ஆவார். தந்தைக்குப்பின் தலைவரான முஹம்மது இப்ன் சௌத், அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களுடன் அப்பகுதியில் இஸ்லாமைத் தூய்மைப்படுத்த இணைந்தார். அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் தன் மகளை முஹம்மது இப்ன் சௌதின் மகன் அப்துல் அஜீஸுக்கு மணமுடித்துக் கொடுத்தார். இது மேலும் அவர்கள் சார்ந்த வம்சத்தை நட்பாக்கியது. இமாம் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய தன் பழங்குடியினத்தவரைக் கொண்டு படை ஒன்றை தயார் செய்தார். இதன்மூலம் அருகாமை பழங்குடியினத்தவர்களின் ஆதரவையும் திரட்டினார். ஓட்டோமானின் கீழ் இருந்தபோதே அத் திர்ஃஇய்யா பகுதியில் தங்களுக்கென தூய இஸ்லாமிய வழியில் நிர்வாகம் செய்தார். இது முதல் சௌதி மாகாணாகமாக இருந்தது. இன்றும் அவர் வழியில் தான் சௌதி அரேபியாவின் ஆட்சி செயல்படுகிறது. இவரது பெயரில் இமாம் முஹம்மது இப்ன் சௌத் இஸ்லாமிக் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகம் இருக்கிறது. கிழக்கில் குவைத் பகுதியிலிருந்து, வடக்கில் ஒமான் வரை தனது பகுதியை இப்ன் சௌத் நீட்டித்தார். இமாம் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் மக்களை ஜிஹாத் செய்ய அழைத்தார்கள். வஹ்ஹாபி அமைப்பு ஈராக், எகிப்து, இந்தியா, ஏமன் மற்றும் சிரியாவிலும் பரவியது. இப்ன் சௌத் அவர்கள் அசிர் பகுதியையும் தன் கீழ் கொண்டுவந்து கப்பம் செலுத்த வைத்தார். 1765 ல் இவர் இறந்த பிறகு அவர் மகன் அப்துல் அஜீஸ் பின் முஹம்மது இரண்டாவது ஆட்சிவம்சத்தினராக முதல் மாகாணத்தை ஆட்சி செய்தார்.
அப்துல் அஜீஸ் பின் முஹம்மது ஆட்சியின் நிலப்பரப்பை ரியாத் நகரம் வரை நீட்டித்தார். தூய்மையான மதக் கொள்கையும், இராணுவ நடவடிக்கையும் அடுத்து நஜ்த் பகுதியைக் கைப்பற்ற வைத்தது. சுற்றுவட்டார பழங்குடியினர் தன்னை எந்நேரமும் சந்திக்கும் வண்ணம் எளிமையாக இருந்தார். 1801 ல் ஈராக்கில் படைநடத்தி நஜஃப் பிரதேசத்தில் கர்பலாவையும், அலி இப்ன் அபு தாலிப் (ரலி), ஹுசைன் இப்ன் அலி (ரலி) ஆகியோரின் சமாதிகளை சேதப்படுத்தி, பல முஸ்லீம்களையும் கொன்றதாக இவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. அத் திர்ஃஇய்யாவில் அஸ்ர் என்னும் மாலைத் தொழுகைக்குச் செல்லும் போது ஈராக்கின் அஃஅமராஹ்வைச் சேர்ந்த ஒருவனால் கூறிய கத்தியால் குத்தப்பட்டு அப்துல் அஜீஸ் பின் முஹம்மது அவர்கள் கொல்லப்பட்டார்கள். பின்னர் அவர் மகன் சௌத் பின் அப்துல் அஜீஸ் (சௌத் அல் கபீர் பின் அப்துல் அஜீஸ் பின் முஹம்மது பின் சௌத்) 1803 ல் முதல் சௌதி மாகாணத்திற்கு ஆட்சிக்கு வந்தார். இவர் தாயிஃப் நகரத்தையும், மக்கா, மதீனா நகரங்களையும் கைப்பற்றினார். மக்கா, மதீனாவிலிருந்த பல சமாதிகளை இவர் இடிக்கச் சொன்னார். இது 1517 லிருந்து மக்கா, மதீனா புனித நகரங்களை ஆண்டுவந்த ஓட்டோமான்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. அவர்களின் பெரும்பாலான துருப்புகள் ஐரோப்பாவில் இருந்ததாலும், உள்ளூர் பழங்குடியினரை எதிர்த்து அந்நகரங்களை அப்போதைக்கு மீண்டும் கைப்பற்ற ஓட்டோமான் முயலவில்லை. சௌத் ஆட்சிவம்சத்தின் பகுதிகள் மேலும் வலுவடைவதைக் கண்ட ஓட்டோமான் சுல்தான் நான்காம் முஸ்தபா எகிப்தின் வைஸ்ராயராக இருந்த திறமை மிகுந்த முஹம்மது அலி பாஷா மற்றும் அவர் மகன்கள் துசுன் பாஷா, இப்ராஹீம் பாஷா மூலம் நடவடிக்கை எடுக்கச் செய்து 1818 ல் மக்கா, மதீனா, ஹிஜாஸ் பகுதி உட்பட பல சௌத்களின் பகுதிகளைக் கைப்பற்றினார். சௌத் பின் அப்துல் அஜீஸுக்குப் பிறகு, அவர் மகன் அப்துல்லாஹ் பின் சௌத் 1818 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் வந்த போது சௌதியின் முதல் மாகாணங்கள் பல ஓட்டோமான் வசம் சென்றிருந்தது. ஒவ்வொரு பகுதியாக பிடித்துக் கொண்டு வந்த இப்ராஹீம் பாஷா இறுதியில் அத் திர்ஃஇய்யாவை அடைய வேறுவழியின்றி முதல் மாகாணத்தின் ஆட்சியாளர் அப்துல்லாஹ் பின் சௌத் ஓட்டோமான்களிடம் சரணடைந்தார். சௌத் ஆட்சிவம்ச முக்கிய குடும்பத்தினர்களை கைது செய்த இப்ராஹீம் பாஷா அவர்களை எகிப்துக்கும், இஸ்தான்புல்லுக்கும் அனுப்பினார். அப்துல்லாஹ் பின் சௌதும் இஸ்தான்புல் நகரில் மரணதண்டனைக் கொடுக்கப்பட்டார். கர்பலாவில் பலரைக் கொன்றும், மதீனாவில் நபிகளாரின் (ஸல்) மஸ்ஜிதை சேதப்படுத்தி பல ஷியா பிரிவு முஸ்லீம்களை மனம் புண்படச் செய்ததற்காக அப்துல்லாஹ் பின் சௌதுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அத் திர்ஃஇய்யாவின் முதல் சௌதி மாகாணம் அழிக்கப்பட்ட பின் எஞ்சியிருந்த வஹ்ஹாபி ஆதரவாளர்களுடன் துர்கி இப்ன் அப்தல்லாஹ் என்பவர் 1824 ல் எகிப்திய படைகளை வென்று ரியாத் நகரைக் கைப்பற்றினார். இதிலிருந்து சௌதிகளின் இரண்டாவது மாகாண ஆட்சிவம்சம் தொடங்கியது. இவர் அப்துல்லாஹ் இப்ன் சௌதின் மகனாவார். கடந்த அத் திர்ஃஇய்யாஹ் போரின் போது இவர் தப்பித்து பனி தமீம் கூட்டத்தின் அல் கோராயிஃப் இளவரசரிடம் தஞ்சமடைந்தார். 1821 ல் சிறிய படை திரட்டி எகிப்தியர்களை எதிர்த்து அத் திர்ஃஇய்யாஹ்வை வென்று ரியாதை தலைநகராக்கி மீண்டும் சௌதுகளின் ஆட்சியைக் கொண்டு வந்தார். 1827 ல் இவர் உறவினன் முஷாரி பின் அப்துல் ரஹ்மான் செய்த புரட்சியிலிருந்து உயிர் தப்பினார். இருந்தாலும் 1834 ல் படுகொலை செய்யப்பட்டார். அப்துல்லாஹ் பின் சௌதின் மகன் வகை வாரிசுகளிலிருந்து இவர் குடும்பம் மூன்றாகப் பிரிந்தது. அவை அல் ஃபைசல் (தற்போது வரை ஆட்சியிலிருக்கும் குடும்பம்), சௌத் அல் கபீர் மற்றும் அல் ஜிலுவி ஆகியவை ஆகும். இதில் அப்துல்லாஹ் பின் சௌதுக்குப் பிறகு, அவர் மகன் ஃபைசல் பின் துர்கி 1834 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் முன்பு இப்ராஹீம் பாஷாவால் கைது செய்யப்பட்டு எகிப்துக்கு கொண்டு செல்லப்பட்டவர். அங்கிருந்து தப்பித்து வந்து தந்தையுடன் சேர்ந்து எகிப்திய படைகளை எதிர்த்தார். தந்தை ஆண்ட போது கிழக்கில் அல் ஹசா பகுதியில் இராணுவ நடவடிக்கைகளில் இருந்தார். தந்தை கொல்லப்பட்ட செய்தி அறிந்தவுடன் ரியாத் திரும்பி புரட்சியை அடக்கி முஷாரியைக் கொன்றார். எகிப்தின் அரேபிய கவர்னராக இருந்த குர்ஷித் பாஷா, ஃபைசல் பின் துர்கியின் அதேகுடும்பத்தைச் சேர்ந்த எதிரி குடும்பமான காலித் பின் சௌதை ஆதரித்தார். காலித் இடையில் மூன்றாண்டுகள் ஆண்டார். இதனால் ஃபைசல் பின் துர்கி தப்பித்து பனி தமீம் கூட்டத்தினரிடம் அடைக்கலம் புகுந்தார். மீண்டும் 1843 ல் திரும்ப குர்ஷித் பாஷாவிடமிருந்து தப்பித்து கெய்ரோவிற்கு ஓடினார். இதற்கிடையில் திறமையில்லாத காலீத் பின் சௌதை புரட்சியால் வென்று அப்துல்லாஹ் பின் துனய்யான் என்பவர் ஆண்டு வந்தார். இவர் மூன்றாண்டுகள் இடையில் ஆண்டார். ஃபைசல் பின் துர்கி துனய்யனை சுலபமாக வென்று ஆட்சியைக் கைப்பற்றினார். ஃபைசல் ஹைல் பகுதியைச் சேர்ந்த அல் ராஷித் குடும்பத்துடன் நட்புறவாக இருந்து அவர்களின் ஆதரவைப் பெற்றார். இரு குடும்பமும் திருமண உறவுகள் மூலம் மேலும் இணைந்தன. ஃபைசலின் வெற்றிக்கு அப்துல்லாஹ் பின் ராஷித் மிகவும் துணை நின்றார். ஹைல் பகுதிக்கு ராஷிதையே ஃபைசல் கவர்னராக்கினார். ஃபைசல் பின் துர்கி 1865 வரை வெற்றிகரமாக ஆட்சி செய்தார். இவர் எகிப்திலிருந்து தப்பிக்க பழங்குடிகளான ஒசாமிக்கள் (ஒசாமா?) தான் காரணமாக இருந்தார்களாம்.
 

சௌதி அரேபியா வரலாறு 2

இவருக்குப்பின் மகன் அப்தல்லாஹ் இப்ன் ஃபைசல் 1865 லிருந்து 1871 வரை ஆறு ஆண்டுகள் ஆண்டார். அவருக்குப்பின் 1871 ல் சௌத் இப்ன் ஃபைசல் சில மாதங்கள் ஆண்டு, மீண்டும் அப்தல்லாஹ் இப்ன் ஃபைசல் மூன்றாண்டுகள் ஆண்டார்கள். இவர்கள் இருவருமே சகோதரர்கள் ஆனாலும் தாயார் வேறு. சௌதும், உடன்பிறந்த இன்னொரு சகோதரர் அப்துல் ரஹ்மானும் ரியாதின் தென்கிழக்கிலுள்ள பிதோயின் பழங்குடியின பிரிவான உஜ்மான் கூட்டத்தைச் சேர்ந்த தாயாருக்குப் பிறந்தவர்கள். அப்துல்லாஹ்வும், இன்னொரு சகோதரர் முஹம்மதுவும் சௌத் குடும்பத்தைச் சேர்ந்த தாயாருக்கு பிறந்தவர்கள். தந்தையால் ஆட்சிக்கு அப்தல்லாஹ் இப்ன் ஃபைசல் தான் பரிந்துரைக்கப் பட்டிருந்தார். ஆரம்பத்தில் சகோதரர்களுக்கிடையில் ஆட்சிக்காக வளரும் பகையைத் தவிர்ப்பதற்காக தந்தையார் அப்தல்லாஹ்வை நஜ்தின் அல் கர்ஜ் பகுதிக்கு கவர்னராக அனுப்பினார். ஆனால் தாயாரின் பழங்குடியினரின் ஆதரவினால் சாதுரியமாக சௌத் ஆட்சியைக் கைப்பற்றினார். 1870 ல் சௌத் இப்ன் ஃபைசலுக்கு அல் ஹசா பகுதி பழங்குடியினர், ஒமான், அபுதாபி மற்றும் பஹ்ரைன் ஆட்சியாளர்கள் ஆதரவுதர அப்தல்லாஹ் இப்ன் ஃபைசலின் படைகளைத் தோற்கடித்து, அவர் சகோதரர் முஹம்மதையும் சௌத் கைது செய்தார். அப்தல்லாஹ் ரியாதுக்கு தப்பி ஓட, சௌத் குடும்ப வழக்கப்படி தானும் ஒரு இமாம் என்று கூறினார். இடையில் சௌதின் சிறிய தகப்பனார் அப்தல்லாஹ் பின் துர்கி புரட்சியின் மூலம் தலைநகரை சௌதிடமிருந்து கைப்பற்றினார். தப்பி ஓடிய அப்தல்லாஹ் இப்ன் ஃபைசல் ஓட்டோமானின் பாக்தாத் கவர்னர் மிதாத் பாஷாவிடம் உதவி கோரினார். அவர் ஓட்டோமான் பேரரசுக்காக அல் ஹசாவைக் கைப்பற்ற இதுதான் சரியான தருணம் என்று கருதி, படையுடன் வந்த அவர் சௌதின் மகன் அப்துல் அஜீஸின் பாதுகாப்பிலிருந்த அப்தல்லாஹ் இப்ன் ஃபைசலின் சகோதரர் முஹம்மதை விடுவித்தார். சகோதரர்கள் அப்துல்லாஹ்வும், முஹம்மதுவும் ரியாதுக்கு வர, 1873 ல் சிறிய தந்தையிடமிருந்து மீண்டும் தலைநகரைக் கைப்பற்றி இருந்த சௌத் இப்ன் ஃபைசல் சகோதரர்கள் இருவரையும் பழங்குடிகள் முதைய்ர் மற்றும் ஒதைய்பா கூட்டத்தினருடன் வெளியேற்றினார். போரில் பட்ட காயங்களாலும், சிறிய அம்மை நோயாலும் சௌத் இப்ன் ஃபைசல் மரணமடைந்தார். இதன்பின் முஹம்மது, அப்தல்லாஹ் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஒன்றாக இணைந்தார்கள். சௌதின் மற்ற பிள்ளைகள் அல் கர்ஜ் பகுதியைத் தலைமை இடமாகக் கொண்டு அப்தல்லாஹ் இப்ன் ஃபைசலை சில காலம் எதிர்த்தபோது 1888 ல் ஒரு தாக்குதல் போது அனைவரும் கொல்லப்பட்டார்கள். சௌதின் வழி, சௌத் பின் அப்துல் அஜீஸ் பின் சௌதின் பேரர்கள் இன்றைக்கும் சௌதி அரேபியாவின் மூத்த சௌத் அல் கபீரின் குடும்பத்தினர்களாக அரசு விழாக்களில் கௌரவம் பெறுகிறார்கள்.
சௌதி அரேபியாவின் இரண்டாவது மாகாண ஆட்சிவம்சத்தினராக ஃபைசல் பின் துர்கியின் இளைய மகன் அப்துல் ரஹ்மான் பின் ஃபைசல் அல் சௌத் ஆட்சிக்கு 1875 ல் வந்தார். முதலில் ஓராண்டு மட்டுமே ஆட்சியிலிருந்த இவரை புரட்சி செய்து விரட்டிவிட்டு, அப்துல்லாஹ் இப்ன் ஃபைசல் மூன்றாம் முறையாக 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்தார். பின்னர் 1889 ல் மீண்டும் அப்துல் ரஹ்மான் பின் ஃபைசல் ஆட்சியைப் பிடித்தார். 1902 ல் அப்துல் ரஹ்மானின் மகன் அப்துல் அஜீஸ் என்ற இப்ன் சௌத் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் இன்றைய சௌதி அரேபியாவை நவீனப்படுத்தியவர். இப்ன் சௌத் 1876 ல் ரியாத் நகரத்தில் பிறந்தவர். இவரின் தாயார் சுதைய்ரி குடும்பத்தைச் சேர்ந்த சாராஹ் அல் சுதைய்ரி ஆவார். தாயார் 1910 ல் காலமானார். 1890 களில் சௌத் குடும்பத்திற்கு பகையாக இருந்த ராஷித்களை விட்டு 15 வயதில் இப்ன் சௌத் அரேபியாவின் தென் பாலைவனப் பகுதியான பிதோயின் பழங்குடியினரான அல் முர்ராஹ் கூட்டத்தினரிடம் அகதிகளாக குடும்பத்துடன் சென்றார். பின் சில மாதம் கதாரிலும், சில காலம் பஹ்ரைனிலும், அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கும் மேல் குவைத்திலும் இருந்தார். மிகச்சிறிய உறவினர் கூட்டத்துடன் இப்ன் சௌத் ராஷித்கள் இருந்த நஜ்த் பகுதியின் மீது தாக்குதல் நடத்தினார். அதில் நல்ல பலன் கிடைக்க, இதனால் கவரப்பட்ட பழங்குடியினர் மேலும் சேர 200 பேராக ஆனார்கள். 1902 ரமதான் மாதம் இரவில் 40 திறமையான வீரர்களுடன் ரியாத் சென்றார். பேரீச்சமரங்களின் மேலமர்ந்து வளைத்து நகரச் சுவற்றைத் தாண்டி உள்ளே குதித்து, ராஷிதி கவர்னரைக் கொன்று அஜ்லான் கோட்டையைக் கைப்பற்றி சௌதியின் மூன்றாவது மாகாண ஆட்சியைத் தோற்றுவித்தார்.
இப்ன் சௌதின் ரியாத் வெற்றியால் பழைய சௌத் குடும்ப ஆதரவாளர்கள் இவர் பக்கம் அணி திரண்டார்கள். மிகச் சிறப்பான தலைவரான இப்ன் சௌத் ஆயுதங்கள் கொடுத்து அவர்களை அரவணைத்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆதரவாளர்களுடன் நஜ்த் பகுதியின் பல பகுதிகளை ராஷிதிகளிடமிருந்து கைப்பற்றினார். 1904 ல் ராஷிதிகளின் அப்துல் அஜீஸ் என்பவர் இப்ன் சௌதை அடக்க ஓட்டோமான்களிடம் இராணுவ உதவியைக் கோரினார். ஒப்புக்கொண்ட அவர்கள் அரேபியாவுக்குள் ஓட்டோமான் இராணுவத்தை அனுப்பினார்கள். தொடர்ந்து இப்ன் சௌதின் படைகளைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்கள். இப்ன் சௌத் போர்த் தந்திரத்தை மாற்றி கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து கொரில்லா தாக்குதல் நடத்தி ஓட்டோமான் மற்றும் ராஷித் படைகளின் இராணுவம் மற்றும் பொருள் பரிமாற்ற வழிகளைத் தடுத்தார். இதனால் அவர்கள் பின்வாங்கினார்கள். இதில் முக்கியமானது கஸ்ஸிம் பகுதியில் நடந்த “ரவ்தத் முஹன்னா” போர். கஸ்ஸிம் பகுதி தலைவர்களுடன் கூட்டு வைக்க படைகளுடன் அப்துல் அஜீஸ் ராஷித் சென்றார். இப்ன் சௌத், இப்ராஹீம் இப்ன் அகீல் என்பவர் தலைமையில் ஒரு படையை அனுப்பி, போரிட்டு அப்துல் அஜீஸையும் கொன்றார். இப்ன் சௌதுக்கு மிகத் திருப்பு முனையாக அமைந்த போர் இது. இதனால் ஓட்டோமான் மற்றும் ராஷித் படைகள் நஜ்த் மற்றும் கஸ்ஸிம் பகுதியிலிருந்து ஒரே அடியாக மறைந்தன. பின் அரேபியாவின் கிழக்குக்கரை பகுதிகளையும் 1912 ல் வென்ற இப்ன் சௌத், சல்ஃபி உலமாக்களின் அனுமதியுடன் “இக்வான்” என்னும் மதசார்புள்ள இராணுவம் ஒன்றை பிற்கால படையெடுப்புகளுக்காக உருவாக்கினார். அரபு பழங்குடியினரிடையே இருந்த புராதன வழிமுறைகளை மாற்றி, ‘அக்ரேரியன் கொள்கை’ எனப்படும் பொருளாதாரம் சார்ந்த விவசாயம், தொழில்நுட்பங்களை இந்த இக்வானாவுடன் சேர்ந்து அவர்களுக்கு குடியிருப்பு காலனிகளை அமைத்து சமூகத்தில் இணைய வைத்தார்.
முதல் உலகப்போரின் போது கேப்டன் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவரை தூதுவராக அனுப்பி பிரிட்டிஷ் அரசாங்கம் இப்ன் சௌதிடம் “டாரின் ஒப்பந்தம்” என்று ஒன்றைப் போட்டது. அதன்படி சௌதுகளின் நிலப்பரப்புக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் பாதுகாப்பதாகவும், மேலும் வளர்ச்சிக்கான அனைத்து ஒத்துழைப்பையும் தருவதாகவும் உறுதி அளித்தது. பதிலுக்கு இப்ன் சௌத் ஓட்டோமான்களுடன் அவ்வப்போது தொல்லைதரும் எஞ்சியுள்ள ராஷித் குடும்பத்தினரை அழிக்க உதவ வேண்டும் என்று கேட்டார். இதே பிரிட்டிஷ் அரசாங்கம் 1915 ல் டி. இ. லாரன்ஸ் (லாரன்ஸ் ஆஃப் அரேபியா) என்பவர் மூலம் ஷரீஃப் ஹுசென் பின் அலியை ஆதரித்தது. இப்ன் சௌத் 1925 ல் ஷரீஃப் ஹுசெனை வென்று மக்கா நகரத்தைக் கைப்பற்றினார். இதனால் 700 ஆண்டுகால ஹாஷிமிட்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மக்கா, மதீனா, ஜெத்தா பகுதியினர் அனைவரும் இப்ன் சௌதை மன்னராக ஏற்றுக்கொண்டார்கள். இப்போது 1927 ஜெத்தா மாநாடு, 1952 தம்மாம் மாநாடுகளின் மூலம் சௌதிக்கு மாதம் 5,000 பவுண்டுகளும், ஆயுதத்தளவாடங்களும் தர ஒப்புக்கொண்டது. சர்வதேச ஒத்துழைப்புடன் இப்ன் சௌத் மத்திய அரேபியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றினார். பின் அவர் போர் நடவடிக்கைகளை கைவிட இக்வானாவுடனான தொடர்பு நொறுங்கிப் போனது. சில மத்திய அரேபிய பகுதிகள் பிரிட்டிஷின் ஒப்பந்தப் பகுதியாக இருந்ததால் இப்ன் சௌதால் கைப்பற்ற முடியவில்லை. இதற்கிடையில் வஹ்ஹாபி அல்லாதவர்கள் இப்ன் சௌதால் நாட்டு மக்களைப்போல் கருதப்படவில்லை என்று இக்வானா அமைப்பு புரட்சியில் இறங்கியது. இரண்டாண்டு கால நடவடிக்கைக்குப் பிறகு, இப்ன் சௌதால் ‘சபில்லா போரால்’ இக்வானாக்கள் அடக்கப்பட்டார்கள்.
1932 ல் இப்ன் சௌத் தன் வசமிருந்த அனைத்துப் பகுதிகளையும் இணைத்து சௌதி அரேபியாவாக மாற்றி தான் அதன் மன்னர் என்று அறிவித்தார். 1938 ல் மஸ்மக் கோட்டையிலிருந்து முரப்பா அரண்மனைக்கு குடியிருப்பை மாற்றிக் கொண்டு 1953 ல் மரணிக்கும் வரை அதில் வாழ்ந்தார். சௌதி அரேபியாவில் எண்ணெய் வளம் அறியப்பட்டு, வளம் செழிக்க ஆரம்பித்தவுடன் பழங்குடியினருக்கு தங்குவதற்கு சிறப்பான வசதிகளைச் செய்து கொடுத்தார். வாஹ்ஹாபிச கொள்கைகளை கடைபிடித்த வந்த அக்காலத்தில் புனிதபயணமாக வந்த பல வெளிநாட்டினரை இஸ்லாமிய முறைப்படி இல்லாததற்காக சௌதிகள் தாக்கினார்கள். குறிப்பாக எகிப்திய வாசிகள் சிலர் கேளிக்கையில் ஈடுபட்டு வந்ததை அறிந்த சிலர் கடுமையாகத் தாக்க, இதனால் எகிப்திய அரசாங்கத்தினரிடம் இப்ன் சௌத் மன்னிப்புக் கோரினார். ஜோர்டானின் மன்னர் ஹுசெனுக்கு எதிராக கலகம் செய்த ஷரீஃப் ஹுசெனை முறியடிக்க ஜோர்டானுக்கு உதவிகள் புரிந்தார். 1937 ல் இளவரசர் ராஷித் அல் குஸாய் ஜோர்டானை விட்டு விரட்டப்பட்டபோது இப்ன் சௌதின் உபசரிப்பில் பல வருடம் சௌதி அரேபியவில் இருந்தார். சௌதியின் ஆட்சியை வளப்படுத்த சொந்த தந்தையையே வெளியேற்றினார். தன் ஐந்து சகோதரர்களுக்கு ஆதரவாக இருந்தார். குறிப்பாக ஆட்சியைப் பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த  முஹம்மதுவுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இரண்டாம் உலகப்போரின் போது நடுநிலையாக இருந்தாலும், கூட்டுப்படைகளுக்கு ஆதரவாக இருந்தார். 1938 ல் ஈராக்கின் மன்னராட்சியில் பிரிட்டிஷின் எண்ணெய் குழாய்கள் தாக்கப்பட்டதற்கு ஜெர்மனியின் தூதர் ஃப்ரிட்ஸ் க்ரோப்பா குற்றம் சாட்டப்பட்டார். இப்ன் சௌத் க்ரோப்பாவுக்கு சௌதியில் அடைக்கலம் கொடுக்க பிரிட்டிஷார் இவர் மீது கோபம் கொண்டனர். இவர் ஆட்சிக்கு வர பிரிட்டிஷ் பலவகையிலும் உதவி புரிந்தாலும், எண்ணெய் வளத்திற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்து கொண்டார். 1945 ல் சூயஸ் கால்வாயில் யூ.எஸெ.எஸ். க்வின்சி என்ற கப்பலில் அமெரிக்க அதிபர் ஃப்ராங்கிலின் டிலானோ ரூஸ்வெல்டுடனான சந்திப்பில், இரு நாடுகளுடனான எதிர்கால சந்திப்புக்கு பேச்சுவார்த்தை நடத்தினார். 1945 ல் கெய்ரோ நகரத்தின் ஃபய்யூன் பாலைவனத்தில் க்ராண்ட் ஹோட்டல் டு லாக்கில் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்சிலை சந்தித்து பாலஸ்தீன விவகாரம் பற்றிப் பேசினார். 1948 ல் அராப் இஸ்ரேல் போரில் பங்கு கொண்டார். மன்னர் குடும்பத்தினரின் விருப்பப்படி, அரண்மனைகள், தோட்டங்கள், விலையுயர்ந்த கார்கள் என வசதி செய்து கொடுத்தார். தனது நீண்ட நாள் கனவான பாலைவனத்தில் ரயில் ஓடச்செய்வதை, அராம்கோ என்னும் நிறுவனத்தின் மூலம் 70 மில்லியன் டாலரில் பூர்த்தி செய்தார். இப்ன் சௌதின் மறைவிற்குப் பிறகு, ரயில் போக்குவரத்து வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டது. தலைநகர் ரியாதை உலகத்தரத்திற்கு முன்னேற்றினார்.
சௌதி அரேபியாவை உருவாக்குவதற்காக பல பழங்குடியினரின் அரவணைப்பு தேவைப்பட்டதால் பல திருமணங்களை அவர்களிடையே செய்து கொண்டு பல மனைவிகளுடன் வாழ்ந்தார். 45 மகன்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இவருக்கு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறுவயதில் ராஷித்களின் பிடியிலிருந்து மறைந்து வாழ தென் அரேபியாவின் பழங்குடியினத்தவர்களுடன் வாழ்ந்த போது இவரது அத்தை ஜவ்ஹரா பின்த் ஃபைசல் தான் ஆதரவாக இருந்தார். சௌத் குடும்பத்தின் பாரம்பரிய வரலாறுகளைச் சொல்லி இவருக்கு வீரமுண்டாக்கினார். சௌத் குடும்பம் அரேபியாவின் ஆட்சியை வென்றெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டினார். அத்தை ஜவ்ஹரா பின்த் ஃபைசல் இஸ்லாமைப் பற்றியும், பழங்குடியினத்தவர்களின் குணநலன்கள், வாழ்க்கைமுறை பற்றியும் நன்கு அறிந்தவர். அவையாவும் கேட்டு வளர்ந்த இப்ன் சௌதுக்கு பிற்காலத்தில் பெரும் பயனைத் தந்தது. இப்ன் சௌத் தன் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் அத்தையைச் சந்தித்து ஆலோசனைக் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். 1930 ல் அத்தை இறக்கும் வரை தினசரி அவரைச் சென்று சந்திப்பதை இப்ன் சௌத் வழக்கமாக வைத்திருந்தார். தன்னைவிட ஒரு வயது மூத்த சகோதரி நௌராவுடனும் இப்ன் சௌத் அன்பாக இருந்தார். பல பொது நிகழ்ச்சிகளின் போது நான் நௌராவின் சகோதரன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். அந்த அளவுக்கு பாசமுள்ள சகோதரி நௌரா இப்ன் சௌத் இறப்பதற்கு சில வருடங்கள் முன்பு காலமானார். 1935 ல் புனித ஹஜ் மேற்கொள்ளும் போது ஆயுதம் தாங்கிய சிலரால் தாக்க முற்பட்டபோது காயமின்றி தப்பித்தார். இவர் அடிக்கடி நம் மக்களும், மண்ணும் மிக முக்கியம். மதமும், உரிமைகளும் தந்தையர்களின் வழி வந்தவை என்று கூறுவார். பெண்கள் கல்வி பயில உரிமை உள்ளவர்கள் என்றும் சொன்னார். அப்போது வருங்கால ஆட்சியாளர்களாக இருந்த தன் மகன்கள் மன்னர் சௌதுக்கும், இளவரசர் ஃபைசலுக்கும் சகோதரர்களாய் இருக்கும் நீங்கள் இணைந்திருங்கள் என்றார். மேலும், என் பிள்ளைகளும், என் உடமைகளுமே எனக்கு பெரிய எதிரிகள் என்றார். இப்ன் சௌத், 1953 ல் இருதய நோயால் பாதிக்கப்பட்டு தாயிஃப் நகரத்தில் ஃபைசல் அரண்மனையில் காலமானார். தாயிஃபின் அல் ஹவியாவில் இவருக்கு இறுதித் தொழுகை நடத்தப்பட்டு, உடல் ரியாதுக்கு கொண்டு வரப்பட்டு அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் இறக்கும் போது இளவரசர் ஃபைசல் உடனிருந்தார். அமெரிக்க செயலாளர் ஜான் ஃபாஸ்டர் டுல்லெஸ், நாட்டுக்காக பல சாதனைகள் செய்தவர் இப்ன் சௌத் என்றார். இப்ன் சௌத் பல விருதுகளை வென்றிருக்கிறார்.

சௌதி அரேபியா வரலாறு 3

இப்ன் சௌதுக்குப் பிறகு, மகன் சௌத் பின் அப்துல் அஜீஸ் 1953 ல் ஆட்சிக்கு வந்தார். முன்னவர் இப்ன் சௌத் என்றால், இவரை மன்னர் சௌத் என்றும் இளவரசர் சௌத் என்றும் அழைத்தார்கள். இவர் இப்ன் சௌதின் இரண்டாவது மகனாவார். 1902 ல் குவைத்தில் பிறந்தார். இவருடைய தாயார் இப்ன் சௌதின் இரண்டாவது மனைவியாவார். அவர் கஹ்தான் என்னும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வதாஹ் பின்த் முஹம்மது பின் அகப் ஆவார். இளவரசர் சௌதுக்கு ஐந்து வயதான போதே தந்தையார் இவரை ஷெய்க் அப்துல் ரஹ்மான் முஃபைரீஜ் அவர்களிடம் இஸ்லாமிய ஷரீயாவைவும், திருக்குரானையும் பயில வைத்தார். பழங்குடியினருக்கே உண்டான குதிரைச்சவாரி, அம்பெறிதல், போர்க்கலை, ஓப்பந்தங்கள் போடும்முறை, அரசியல், நிர்வாகம், தூதரக உறவு போன்றவற்றை தந்தையிடமிருந்து பயின்றார். தந்தை இப்ன் சௌதுடன் பல பாலைவனப்போர்களில் பங்கு பெற்று அனுபவம் பெற்றார். நகைச்சுவை உணர்வு, அழகிய தோற்றம், உண்மைத்தன்மை, அன்பு, திறமையான அணுகுமுறை என்று பல தோற்றங்களை இளவரசர் சௌத் அவர்கள் தன்னகத்தே கொண்டவர்கள். ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய நெறிமுறைகளை என்ன விலைகொடுத்தேனும் காப்பாற்ற வேண்டும் என்று தந்தையால் அறிவுறுத்தப்பட்டார். 13 வயதிலேயே அரசியல் குழுவுக்கு தலைமை தாங்கி கதார் நாடு சென்றார். 1921 ல் முதல்முறையாக ஏமனின் ‘ஹாஃஇல் போரில்’ கலந்து கொண்டு சௌதி அரேபியாவின் படைகளுக்கு தலைமை தாங்கினார். தான் மன்னராக ஆட்சிக்கு வரும் முன்பே க்ராப் போர், யாபெத் போர், த்ருபா போர், அல்குரஸ் போர், ஹாஃஇல் போர், அல் ஹிஜாஸ் போர், அல் மஹ்மல் போர் மற்றும் இக்வான் கலவரம் என்று எட்டு போர்களில் கலந்து கொண்டுள்ளார். 1933ல் தந்தையால் பட்டத்து இளவரசராக அறிமுகப்படுத்தப்பட்டார். 1937 ல் தந்தையுடனும், இளவரசர் முஹம்மதுவுடனும் லண்டனில் மன்னர் ஆறாம் ஜார்ஜின் முடிசூட்டுவிழாவில் கலந்து கொண்டார். தந்தையுடன் நெருங்கி இருந்த இளவரசர் சௌத் 1953 ல் பிரதம மந்திரியாகவும் இருந்தார். தந்தை இறந்தபோது, ‘நான் எனது தந்தையையும், நல்ல நண்பரையும் இழந்தேன்’ என்றார்.
இளவரசர் சௌதும் சௌதி அரேபியாவின் பல முன்னேற்றங்களுக்கு பாடுபட்டார். 1957 ல் இண்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட் அமைப்பில் நாட்டை உறுப்பினராக்கினார். அதே ஆண்டு ரியாதில் கிங் சௌத் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். 1953 லிருந்து 1964 வரை அரசகுடும்பத்தினர்களை முக்கிய மந்திரிப்பதவிகளில் வைத்தார்.  1957 ல் தன் மகன் ஃபஹ்தை இராணுவ மந்திரியாக ஆக்கினார். அனைத்து மகன்களையும் மந்திரிகளாகவும், மற்ற பிராந்தியங்களின் கவர்னர்களாகவும் ஆக்கினார். ஆட்சி கைமாறிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக சகோதரரின் மகன்களுக்கு பொறுப்பு கொடுப்பதைத் தவிர்த்து, அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்லிவிட்டார். 1962 ல் சௌதி அரேபியாவில் தொலைக்காட்சி நிலையத்தை அமைத்தார். அதிகப்படியான பொருளாதாரத்தை அரண்மனை மற்றும் தன் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவு செய்ததால் பொருளாதார வீழ்ச்சி கண்டார். நாட்டின் அரபு தேசியவாதிகளையும், மதவாதிகளையும் சர்வதேச அரசியலில் தலையிடுவதை தடை செய்து தானே முடிவுகள் எடுத்தார். அராம்கோ என்னும் நிறுவனம் இருமுறை அரசை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்து சங்கடத்தை ஏற்படுத்தியது. 1953 ல் நல்ல பணிச்சூழல் வேண்டுமென்றும், 1956 ல் அரசு ‘தஹ்ரான் வான்துறை’ யை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராகவும் இவ் வேலை நிறுத்தங்கள் நடந்தன. எகிப்தை எதிர்ப்பதற்கு பல இஸ்லாமிய நாடுகளை அழைத்தார். ஈராக் இராணுவத்திற்கு வெளிநாட்டு ஆதரவைக் கொண்டுவந்ததற்காக எதிர்ப்பு தெரிவித்த எகிப்து மற்றும் சிரியா நாடுகளின் கூட்டுக்கு தலைமை வகித்தார். கமால் அப்தெல் நாசர் சூயஸ் கால்வாயைக் கைப்பற்றிபோது அவருக்கு ஆதர்வு தெரிவித்தார். ஃப்ரான்சிடமும், பிரிட்டனுடனும் தூதரக உறவை முறித்து அவர்களுக்கு எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்தார். சூயஸ் கால்வாய் விவகாரத்தில் இளவரசர் சௌத் பெரும் அரசியல் சிக்கலில் மூழ்கி எழுந்தார். இன்ஷா அல்லாஹ் அதை வேறொரு கட்டுரையில் வெளியிடுகிறேன்.
நாட்டின் கடன் சுமை 250 மில்லியன் டாலர்களிலிருந்து 450 மில்லியன் டாலராக உயர்ந்தது. அராம்கோவும், சர்வதேச வங்கிகளும் கடன் தர மறுத்தன. இதனால் இளவரசர் சௌத் பல அரசு திட்டங்களை நிறுத்தினார். ஆனால் தனது ஆடம்பர வாழ்க்கையை மட்டும் தொடர்ந்தார். ஏற்கனவே மூத்த சகோதரர் ஃபைசல் ஆட்சிக்காக பகைத்துக் கொண்டிருந்தார். இவரின் ஆடம்பரப் போக்குக்கு எதிராக ஃபைசல் இறையச்சம் உடையவராக இருந்தார். இவர்களின் பனிப்போர் சில அரசியல் கூட்டங்களிலும் வெளிப்பட்டது. அரச அதிகாரத்தை பிரதம மந்திரியைக் கலைத்து தானே பிரதம மந்திரியாகவும், மன்னராகவும் இருந்து ஃபைசலின் அதிகாரத்தைக் குறைத்தார். சௌதி அரேபியாவில் ஊழல் தலையெடுத்தது. எகிப்தில் ரேடியோ கெய்ரோ இளவரசர் சௌதுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. இளவரசர் சௌத் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த சமயம் இளவரசர் ஃபைசல், இளவரசர் ஃபஹ்த் மற்றும் இளவரசர் சுல்தானுடனும் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தார். அதில் பத்து புதிய மறுசீரமைப்பு சட்டங்களைச் சேர்த்தார். அதில் அடிமைகளை ஒழிப்பதும், நீதிக்கென தனி துறை அமைப்பதும் அடங்கும். இந்த புதிய ஆட்சியை இளவரசர் சௌத் மறுத்து ஃபைசல் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஃபைசல் உலமா சபை மூலமாகவும், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மூலமாகவும் இளவரசர் சௌதுக்கு அழுத்தம் கொடுக்க      1964 ல் பணிந்தார். அதன்பிறகு, இளவரசர் சௌத் ஜினீவாவிலும், ஐரோப்பிய நகரங்களிலுமே இருந்தார். 1966 ல் எகிப்து அதிபர் நாசர் அழைத்தார் என்றும், இல்லை இவரே புகலிடம் கேட்டார் என்றும் சொல்லப்பட்டது. எது எப்படியோ எகிப்தில் இருந்தபடி, மகன்கள் இளவரசர் காலித், இளவரசர் பத்ர், இளவரசர் சுல்தான் மற்றும் இளவரசர் மன்சூர் ஆகியோருடன் இணைந்து ரேடியோ கெய்ரோவில் இழந்த தங்கள் ஆட்சிக்காக ஆதரவு திரட்டினார். இதற்கிடையே 1967 ல் அராப் இஸ்ரேல் போர் வர எகிப்தின் ஆதரவை இழந்த இளவரசர் சௌத் 1969 வரை க்ரீஸில் இருந்தார். எண்ணற்ற மனைவிகளும், 115 குழந்தைகளும் இவருக்கு இருந்தார்கள். அதில் சில மகன்கள் சௌதி அரேபியாவின் மந்திரிகளாகவும், கவர்னர்களாகவும் இருந்தார்கள். இவர் மகள் ஹெஸ்ஸா சௌதியின் பள்ளிக்கூடத்தில் முதல் பிரின்சிபாலாக ஆனார். இன்னொரு மகள் புனையாஹ் என்பவர் உலகம் முழுவதும் 2001 ல் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கான, பணிப்பெண்ணைத் தாக்கிய வழக்கில் அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் கைது செய்யப்பட்டு ஒருநாள் காவலில் வைக்கப்பட்டு, பாஸ்போர்ட் ஒப்படைத்து 5,000 டாலர் ஜாமீனுக்கு மறுநாள் விடுதலை செய்யப்பட்டு வழக்காடினார். இளவரசர் சௌத் தனது மூத்த சகோதரர் துர்கி இறந்தபின், அவரது மனைவி முனீரா பின்த் ஒபைதை திருமணம் செய்து கொண்டார். இளவரசர் சௌத் கிரீஸில் ஹோட்டல் கவூரியில் தன் மகள் நோஸாஹ்வுடன் இருந்த போது 1969 பிப்ரவரியில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது உடல் மக்கா ஹரம் ஷரீபுக்கு கொண்டு வரப்பட்டு இறுதித்தொழுகைக்குப் பின் ரியாதில் அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்து சகோதரர் இளவரசர் சௌதின் ஆடம்பரத்தால் வீழ்ந்து கிடந்த சௌதி அரேபியாவின் பொருளாதாரத்தை உயர்த்திட ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் 1964 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் 1906 ல் ரியாத் நகரத்தில் பிறந்தவர். இவரது தாயார் இமாம் அப்துல் வஹ்ஹாபின் அல் அஷ் ஷெய்க் குடும்பத்தைச் சேர்ந்த தர்ஃபா பின்த் அப்துல்லாஹ் பின் அப்துல்லதீஃப் அல் ஷெய்க் ஆவார். ஃபைசல் பின் அப்துல் அஜீஸின் தாயார் இளவயதிலேயே மரணமடைய தாய்வழிப்பாட்டனார் அப்துல்லதீஃபிடம் வளர்ந்து திருக்குரான் மற்றும் அனைத்து மத சம்பந்தமான கல்வியையும் கற்றார். இவருக்கு நூராஹ் என்று ஒரு சகோதரி உண்டு. பழங்குடியின தலைவர்களை அரவணைத்துச் செல்பவராக இருந்தார். 1919 ல் லண்டன் அரசு மன்னர் அப்துல் அஜீஸை அழைத்த போது, மன்னர் 14 வயதான இவரை அனுப்பினார். சௌதியின் அரச குடும்பத்தில் முதல்முறையாக வெளிநாடு சென்றவர் ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தான். ஐந்துமாத காலம் பயணம் மேற்கொண்ட அவர் அரசுப்பயணமாக ஃப்ரான்சுக்கும் சென்றார். 1922 ல் அசீரைக் கைப்பற்றியபின், அசீருக்கும், முன்னர் கைப்பற்றிய ஹாஃஇல்லுக்கும் 6,000 வீரர்களுடன் சென்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 1925 ல் சௌதிப்படைகளுக்கு தளபதியாக இருந்து ஹிஜாஸை வெல்ல துணைபுரிந்தார். இவரும், இளவரசர் முஹம்மதும் இக்வான் படைகளுக்கு பொறுப்பாக இருந்தார்கள். 1926 ல் ஹிஜாஸ் பகுதிக்கு வைஸ்ராயராக இருந்தார். 1930 ல் சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்து 1932 ல் போலந்துக்கும், 1933 ல் ரஷ்யாவுக்கும், மேலும் பல ஐரோபிய நாடுகளுக்கும் சென்றார். 1963 ல் சௌதிக்கு தொலைக்காட்சி நிலையம் அமைத்ததில் இவருக்கும் பங்குண்டு. ஆரம்பத்தில் இதற்கு மதவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பினாலும், ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாமிய கோட்பாடை விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அணுவும் அகலாது என்று உறுதி கூறி இரண்டாண்டுகளுக்குப் பிறகு தான் நிகழ்ச்சிகள் தொடங்கின. 1961 ல் மதீனாவில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் கொண்டுவரவும் பாடுபட்டார். 1962 ல் முஸ்லீம் வேர்ல்ட் லீக் என்ற நிதி அமைப்பை ஏற்படுத்தி பின்னாளில் பில்லியன் டாலர்களுக்கு மேல் அரச குடும்பத்திலிருந்து நிதி அளித்தார். மன்னர் சௌதிடமிருந்து ஆட்சியைப் பிடித்தபின், எல்லாத்துறைகளிலிருந்தும் அனைவரையும் நீக்கிவிட்டு, ஆர்வத்துடன் பணிபுரியும் இளவரசர்களைக் கொண்டுவந்தார். இளவரசர் அப்துல்லாஹ்வை தேசிய பாதுகாப்புப்படைக்கு தளபதி ஆக்கினார்.
ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தான் ஆட்சிக்கு வந்தவுடன் மிகவும் உருக்கமாக, ‘என்னை உங்கள் சகோதரனாகவும், சேவகனாகவும் பார்க்க வேண்டி உங்களிடம் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். ஆட்சி என்பது பூமியிலும், சொர்க்கத்திலும் அல்லாஹ் ஒருவனிடத்தில் தான் உள்ளது. மன்னர் அப்துல் அஜீஸ் குடும்பத்திற்கு பயன்படுத்திய அதே சொல்லே இந்த மன்னர் ஃபைசல் பின் அப்துல் அஜீஸும் தொடர்கிறார். இது கீழ்வரும் சந்ததியினருக்கான ஒரு அடையாளம் தான். அதனால் மன்னரை “ஹிஸ் ராயல் ஹைனெஸ்” என்றும், அவர் சகோதரர்கள், தந்தை வழி சகோதரர்கள் “ஹிஸ் ஹைனெஸ்” என்றும், அவர்களிலிருந்து பிரிந்து செல்லும் வம்ச வழியினரை “ஹிஸ் எக்ஸலன்சி” என்றும் அழைக்கப்படுவார்கள்’ என்றார். 1967 ல் ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் இளவரசர் ஃபஹ்தை இரண்டாவது பிரதம மந்திரியாக அறிவித்தார். முதல் வேலையாக தலைகீழாகிப் போயிருந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தினார். முதல் இரண்டாண்டுகளுக்கு பழைமைவாத பொருளாதாரத்தைக் கடைபிடித்து வெற்றிகண்டார். எண்ணெய் வள உற்பத்தியை மேலும் அபிவிருத்தி செய்தார். அரசாணை வெளியிட்டு அனைத்து சௌதி அரச இளவரசர்களின் பிள்ளைகள் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்லாமல் உள்ளூர் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை முன்னுதாரனமாகக் கொண்டு சௌதியின் பணக்காரர்களும் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளிலிருந்து திரும்பி அழைத்துவந்து உள்ளூர் பள்ளிகளில் சேர்த்தார்கள். மாகாணங்களை தனி நிர்வாகப் பகுதிகளாக ஆக்கி நவீன நலத்துறைகளை அறிமுகப்படுத்தினார். 1970 ல் பொருளாதாரத்திற்கென ஐந்தாண்டுத் திட்டத்தை கொண்டுவந்து நீதித்துறைக்கென அமைச்சகம் ஏற்படுத்தினார். 1965 ல் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட, 1966 ல் ஃபைசல் பின் அப்துல் அஜீஸின் உறவினர் ஒருவர் நிலையத்தைத் தாக்கினார். பாதுகாப்புப்படையினர் அவரை சுட்டுக் கொன்றார்கள். நாட்டின் மீதான இவரது மறுசீரமைப்பை சௌதியின் பழைமைவாதிகள் எதிர்த்த போதிலும், அனைத்தையும் இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையிலேயே வைத்துக் கொண்டார்.

சௌதி அரேபியா வரலாறு 4

1950 லிருந்து 1960 வரை சௌதி அரேபியா பல ஆட்சி கவிழ்ப்புகளை எதிர்கொண்டது. 1969 ல் எண்ணெய் வளமிக்க லிபியாவில் மாம்மர் கடாஃபி என்பவர் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க, இது தங்களுக்குமான ஒரு அச்சுறுத்தலாக எண்ணிய ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்தினார். 1969 ல் நூற்றுக்கணக்கான இராணுவ அதிகாரிகளை சில ஜெனரல்கள் உட்பட கைது செய்து ரகசியமாக திட்டமிடப்பட்டிருந்த ஆட்சி கவிழ்ப்பை முறியடித்தார். ஆட்சி கவிழ்ப்பு விமானப்படை அதிகாரிகளால் திட்டமிடப்பட்டது. அவர்கள் முன்பிருந்த நாசர்கள் குடும்ப ஆட்சியைக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தார்கள். இது அமெரிக்க உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, தெரிய வந்தபின் அனைத்தும் ரகசியமாக முடிக்கப்பட்டது. ஃபைசல் பின் அப்துல் அஜீஸின் ஆட்சிக்கு முன்பு வரை தனித்தனியாக இருந்த ஏமன் பழங்குடியினர், இஸ்மாயிலி பிரிவினர், வஹ்ஹாபியைச் சாராதவர்கள் அனைவரையும் சௌதியின் மக்கள் என்று மார்க்கத்தால் ஒன்று சேர்த்தார். இவரின் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும் உலமாக்குழு தலையிடுவதை பெரும்பாடுபட்டு சமாளித்தார். அல் மதீனா கல்லூரியில் ஷெய்க் பின் பாஸ் என்பவர் தீவிரவாதம் சார்ந்த வகையில் மாணாக்கர்களுக்கு கல்வி போதித்ததால் அவரை பணியை விட்டு நீக்கினார். உலகமெங்கும் மிகவும் லாபகரமாக நடந்து கொண்டிருந்த அடிமை வியாபாரம் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தது. சௌதி அரேபியாவில் மட்டும் தடை செய்யப்படவில்லை. இதற்காக 1945 ல் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் சௌதி மன்னரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இப்போது மீண்டும் 1962 ல் அமெரிக்க ஜனாதிபதி ஜான். எஃப். கென்னடி பேச்சுவார்த்தை நடத்த சௌதி அரேபியாவில் அடிமை வாணிபத்தை தடை செய்ய ஒத்துக்கொள்ளப்பட்டது. ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தந்தை துவக்கிவைத்த அமெரிக்காவுடனான நட்பில் அதிக கவனம் செலுத்தினார். தனது வீரர்களுக்கு அமெரிக்கா மூலம் இராணுவப்பயிற்சி பெற வைத்தார். இவர் கம்யூனிசத்தை எதிர்த்ததால் ரஷ்யா போன்ற நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ளவில்லை. கம்யூனிசத்தை யூதர்களின் ஸியோனிசத்துடன் இணைத்துப் பேசினார். அதேநேரத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் நல்லுறவை வைத்திருந்தார். 1967 ல் இங்கிலாந்து சென்றபோது ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு வைர கழுத்தணி பரிசளித்தார். அரபு தேசியத்தின் மூலம் அனைத்து முஸ்லீம் நாடுகளையும் ஒன்றிணைக்க அவர்கள் நாடுகளுக்குச் சென்று பேசினார். 1969 ல் அல் அக்ஸா மஸ்ஜிதில் இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அது பிடித்து வைத்திருந்த பாலஸ்தீன பகுதிகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று 25 முஸ்லீம் நாடுகளை அழைத்து கூட்டம் நடத்தினார். அக்கூட்டம் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாக மாறி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்தது. 1970 ல் எகிப்தின் நாசர் இறந்ததற்குப் பின் எகிப்தின் அதிபரான அன்வர் சதாத் 1973 ல் அராப் இஸ்ரேல் போரை நடத்தினார். இதற்கு ஆதரவு தெரிவித்து ஐரோப்பியர்களுக்கான எண்ணெய் ஏற்றுமதியை ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தடை செய்தார். ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளும் பதறிப்போயின. இந்த நடவடிக்கையின் மூலம் இஸ்லாமிய நாடுகளின் கௌரவத்தை ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் உயர்த்தியதாகவே கருதப்பட்டது. 1974 ல் ‘டைம்’ பத்திரிக்கை இவரை மேன் ஆஃப் தி இயர் என்று புகழுரைத்தது. இவரின் கிடிக்கிப்பிடியால் எண்ணெய் விலை உயர்த்தப்பட்டு அதன் வருமானத்தை எகிப்து, சிரியா மற்றும் பாலஸ்தீன் லிபரேஷன் ஆர்கனைசேஷன் நடத்திய அராப் இஸ்ரேல் போருக்கு உதவினார். இதனால் பாதிக்கப்பட்ட மேற்கத்தியர்கள் இவரைக் கொல்ல திட்டம் தீட்டினார்கள்.
ஃபைசல் பின் அப்துல் அஜீஸுக்கு நான்கு மனைவிகள். மூன்று மனைவிகள் சக்திவாய்ந்த சுதைய்ரி, அல் ஜிலுவி, அல் துனயன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர் முதல்மனைவி சுல்தானா பின்த் அல் சுதைய்ரியின் மூத்த மகன்தான் இளவரசர் அப்துல்லாஹ். ஃபைசலுக்கு 15 வயதாகும்போதே அப்துல்லாஹ் பிறந்து விட்டார். இவரின் இரண்டாவது மனைவி இஃப்ஃபத் அல் துனைய்யின் துருக்கியில் பிறந்து அல் சௌத் குடும்பத்தின் வழிவந்தவர்.  மூன்றாவது மனைவி அல் ஜவ்ஹராவை 1935 ல் மணந்தார். நான்காவது மனைவி இளவரசர் காலிதின் தாயாராவார். மகன்கள் அனைவரையும் அரசியலில் பங்குபெறவைத்து அனுபவம் கிடைக்கச் செய்தார். இளவரசர் சுல்தான் தன் மகன் பந்தர் பின் சுல்தான் அரச பாரம்பரியத்தைச் சேராத மனைவி மூலம் பிறந்ததின் காரணமாக தயக்கத்துடன் இருக்க ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தன் மகள் ஹைஃபா பின்த் ஃபைசலை பந்தர் பின் சுல்தானுக்கு மணமுடித்துக் கொடுத்து பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.
 ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் அரபுகளின் வழக்கப்படி, மஜ்லிஸ் எனப்படும் பொதுச்சபையில் அமர்ந்து தன்னைக் காணவரும் மக்களையும் மற்ற பிரதிநிதிகளையும் சந்திப்பது வழக்கம். 1975 மார்ச் 25 ல் அப்படி ஒரு சந்திப்பில் ஒன்றுவிட்ட சகோதரர் மகன் ஃபைசல் பின் முசைய்த் என்பவனும் சந்திக்க வந்திருந்தான். ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அப்போது தான் அமெரிக்க பயணத்திலிருந்து திரும்பி இருந்தார். அப்போது குவைத்திலிருந்து சில விருந்தினர்களும் சந்திக்க வந்திருந்தார்கள். அரபு வழக்கப்படி, பின் முசைய்தை நெற்றியில் முத்தமிட வந்த ஃபைசல் பின் அப்துல் அஜீஸை தன் கையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான் முதல் குண்டு அவரின் நாடியில் பாய்ந்தது. இரண்டாவது குண்டு அவர் காதில் பாய்ந்தது. உடனிருந்த பாதுகாவலன் ஒருவன் உறையுடனிருந்த வாளினால் ஃபைசல் பின் அப்துல் அஜீஸைத் தாக்கினான். அருகிலிருந்த எண்ணெய்வள மந்திரி ஸகி யமானி மன்னரைக் கொல்லாதீர்கள் என்று உரக்கக் கத்தினார். பாதுகாவலர்கள் வர உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னரைக் காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றும் முடியாமல் ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் மரணமடைந்தார்கள். இது முன்பு தொலைக்காட்சி கொண்டுவருவதற்கு எதிர்ப்பாக இருந்த காலித் பின் முசைய்தை ரியாத் நகரில் பொதுவில் வைத்து தூக்கிலிட்டதற்கு பழிவாங்குவதற்காக கொலை செய்யப்பட்டதாக ஒரு கருத்திருந்தாலும், இந்தக் கொலைக்கு பின்ணனியில் அமெரிக்கா இருந்ததாக சந்தேகித்தார்கள். அன்றையதினம் மொத்த சௌதி அரேபியாவும் ஸ்தம்பித்தது. மூன்றுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  அவரது உடல் ரியாதில் அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்குப்பிறகு, காலித் பின் அப்துல்அஜீஸ் அல் சௌத் 1975 ல் சௌத் குடும்பத்திலிருந்து ஆட்சிக்கு வந்தார்.
1913 ல் ரியாதில் பிறந்த இவர் தாயார் அல் ஜிலுவி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 14 வயது ஆகும்போதே மன்னர் அப்துல் அஜீஸ் இவரை பழங்குடியினர்களைச் சந்திக்க வைத்து அவர்களின் குறைகளைக் கேட்க வைத்தார். 1932 ல் ஹிஜாஸ் பகுதியின் வைஸ்ராயராக இருந்தார். 1934 ல் இளவரசர் ஃபைசலுடன் எமனி படைகளுடன் போரிட்டுள்ளார். 1934 ல் சௌதி உள்துறை மந்திரியாக இருந்தார். பாலஸ்தீன் விவகாரத்தில் லண்டனில் நடந்த செயிண்ட் ஜேம்ஸ் மாநாட்டில் இளவரசர் ஃபசலுக்கு உதவியாக இருந்தார். 1943 ல் அமெரிக்க துணை அதிபர் ஹார்ரி ட்ரூமென் வெள்ளைமாளிகையில் அளித்த விருந்தில் ஃபசலுடன் கலந்து கொண்டு, பின்னர் அமெரிக்க அதிபர் ஃப்ராங்கிளின் ரூஸ்வெல்டையும் சந்தித்தார். காலித் பின் அப்துல்அஜீஸ் சௌதியின் ஆட்சியில் மிக நல்ல மனிதர் என்ற பெயரைப் பெற்றார். இளவரசர் முஹம்மது, இளவரசர் காலித், இளவரசர் அப்துல்லாஹ் ஆகிய அனைவரும் அல் ஜிலுவி குடும்பத்திலேயே திருமணம் செய்திருந்தார்கள். மன்னர் ஃபைசலின் சார்பாக மக்கா நகரின் கவர்னராகவும் இருந்தார். மன்னர் ஃபைசல் இல்லாத சமயங்களில் கூட்டங்களையும், மாநாடுகளையும் அவர் சார்பில் நடத்தி இருக்கிறார். அரச குடும்பத்தினரிடையே ஏற்படும் குழப்பங்களுக்கு மன்னரின் சமரசமே இறுதி முடிவு என்னும் பழக்கத்தை ஏற்படுத்தினார். தன் ஏழாண்டு ஆட்சியில் சௌதியின் அடிப்படை கட்டமைப்பை சீர்படுத்தி கல்வி, மருத்துவத்துறைகளில் கவனம் செலுத்தினாலும் திறமை இல்லாதவராகவே கருதப்பட்டார். ஆனாலும் இவருக்குண்டான சில தனிச்சிறப்புகளால் புகழ் பெற்றார். இதனால் அனைத்துத் தரப்பினரும் இவரது ஆட்சிக்கு உதவினார்கள். இவரது ஆட்சியில் தான் சௌதி அரேபியா மிகப்பெரும் பணக்கார நாடாக ஆகியது. விவசாயத்தில் கவனம் செலுத்தினார். ஜுபெய்ல், யான்பு பகுதிகளில் தொழிற்பேட்டை பகுதிகளாக்கினார். எண்ணற்ற பள்ளிக் கூடங்களை நாடெங்கிலும் திறந்தார். 3,028 தொடக்கநிலைப் பள்ளிக்கூடங்கள், 649 இரண்டாம்நிலைப் பள்ளிக்கூடங்கள், 182 உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள் என்றிருந்ததை முறையே 5,373, 1,377, 456 என்று 1980 ல் உயர்த்தினார். கிங் ஃபைசல் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். 1980 ல் மூன்றாவது முன்னேற்றத் திட்டமாக 250 பில்லியன்களில் வரவு செலவு கொண்டு வந்தார். 1979 ல் 500 பேர் கொண்ட குழுவொன்று புனித மக்காவின் பள்ளியை ஆயுதங்களுடன் பிடித்தபோது, காலித் பின் அப்துல்அஜீஸ் உலமாக்களின் ஆலோசனையைப் பெற்று இராணுவ நடவடிக்கை எடுத்தார். முதலில் வெறுப்புடனும், அமைதியுடனும் இருந்த உலமாக்கள் மூன்று தினங்களுக்குப் பிறகுதான் இராணுவ நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்தார்கள். உலமாக்களின் தீர்ப்புப்படி பல்வேறு நகரங்களில் 63 புரட்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.
1979 ல் சௌதியின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்த ஷியாபிரிவு சிறுபான்மையினர் அரசுக்கெதிராக ஊர்வலங்களையும், போராட்டங்களையும் நடத்தினார்கள். அவர்களைக் கைது செய்த காலித் பின் அப்துல்அஜீஸ் 1980 ல் அவர்களை விடுதலை செய்து அவர்களின் நகரங்கள் அனைத்துக்கும் பட்டத்து இளவரசர் ஃபஹ்துடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டின் உள்விவகாரத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த காலித் பின் அப்துல்அஜீஸ் அப்போது நடந்த ஈரானியப்புரட்சி, அன்வர் சதாத் படுகொலை, ஆப்கானிஸ்தான் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆகிய வெளிநாட்டு விவகாரங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதிருந்தார். அபுதாபிக்கும், ஒமானுக்கிடையேயான புரைய்மி பாலைவன விவகாரத்தில் மட்டும் தலையிட்டார். 1975 ல் சிரியா சென்று அதிபர் ஹஃபிஸ் அல் அஸ்ஸாதை சந்தித்து லெபனானின் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்த சிரியாவுக்கு தன் ஒத்துழைப்பைத் தந்தார். GCC  எனப்படும் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்புக்கு பாடுபட்டார். 1979 ல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டபோது, கொமெய்னிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனாலும் 1980 ல் ஈரான் ஈராக் போரில் சௌதி அரேபியா ஈராக்கை ஆதரித்தது. 1981 ல் சௌதி அரேபியாவில் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சரைச் சந்தித்ததைப் பற்றிக் கேட்டபோது அவருடன் கழுகுகளைப் பற்றி பேசியது நன்றாக இருந்தது என்றும் நிர்வாக விவகாரங்களை பட்டத்து இளவரசர் ஃபஹ்த் பேசுவார் என்றார். 1982 ல் அமெரிக்க அதிபர் கார்டரிடம் 60 எஃப்-15 ரக விமானங்களை சௌதி அரேபியாவுக்காக வாங்கினார். நவீனரக போயிங் 747 தான் பயணிக்கவும் வாங்கினார். வெளிநாட்டு பணியாளர்களை வரவழைத்து பணியில் அமர்த்தினார்.
காலித் பின் அப்துல்அஜீஸுக்கு நான்கு மனைவிகள். நான்கு மகன்களும், ஆறு மகள்களும் இவருக்கு இருந்தார்கள். கழுகு வேட்டையும், குதிரையேற்றமும் இவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. கழுகு விளையாட்டுக்காகவே 1955 ல் டொயாட்டா லாண்ட் க்ரூசர் என்னும் காரை வாங்கினார். 1975 ல் 25.2 மீட்டர் நீளமுள்ள நீண்ட கடிலாக் காரை வாங்கினார். இவரது பெயரில் ரியாதில் கிங் காலித் இண்டர்நேஷனல் விமான நிலையம், கண் மருத்துவமனையும், கிழக்குப் பிராந்தியத்தில் கிங் காலித் மருத்துவ நகரமும் இயங்குகின்றன. 1981 ல் ஐக்கிய நாட்டு சபையின் தங்கபதக்கம் பெற்றார். நீண்ட காலமாகவே இவருக்கு இருதய நோய் இருந்தது. 1970 ல் பலமான மாரடைப்பு வர, 1972 ல் அமெரிக்காவின் க்ளீவ்லாண்ட் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 1978 ல் மீண்டும் க்ளீவ்லாண்டில் இரண்டாவது இருதய அறுவை சிகிச்சை செய்தார். 1976 ல் லண்டனில் இடுப்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மீண்டும் இவருக்கு 1980 ல் சிறிய மாரடைப்பு வந்தது. ஏழாண்டு ஆட்சிக்குப்பின் 1982 ல் தாயிஃப் நகரத்தில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார். மக்காவின் புனித பள்ளியில் இறுதித்தொழுகை நடத்தப்பட்டு, ரியாதில் அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது இறுதிச் சடங்கில் கதார், குவைத், திபூத்தி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டார்கள். இவருக்குப்பின் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 1982 ல் ஆட்சிக்கு வந்தார்.

சௌதி அரேபியா வரலாறு 5

ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் இப்ன் சௌதின் எட்டாவது மகனாவார். 1921 ல் ரியாதில் பிறந்த இவரின் தாயார் ஹஸ்ஸா அல் சுதைய்ரி ஆவார். அரச குடும்பத்தினர் படிப்பதற்காக இப்ன் சௌத் அவர்களால் துவக்கப்பட்ட பிரின்ஸ் பள்ளியிலேயே ஆரம்பக்கல்வி படித்தார். இவருக்கு ஷெய்க் அப்துல் கானி கயாத் அவர்கள் ஆசிரியராக இருந்தார். மார்க்கக்கல்வி பயில்வதற்காக மக்காவிலும் படித்தார். தாயாரின் அறிவுரையின் பேரில் அரச ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றார். 1945 ல் முதல்முறையாக அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு ஐக்கியநாட்டு சபையின் ஒரு தீர்மானத்தில் கையெழுத்திடுவதற்காகச் சென்றார். பின் 1953 ல் ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவிற்கு சௌத் குடும்பத்தின் சார்பாக இங்கிலாந்து சென்றார். நாட்டின் முதல் கல்வித்துறை அமைச்சராக 1953 ல் பதவி பெற்றார். 1959 ல் லீக் ஆஃப் அராப் ஸ்டேட்ஸ் என்னும் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 1962 ல் சௌதியின் உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது மொத்த அரபுநாடுகளின் தலைவராக எகிப்தில் 1965 ல் கலந்து கொண்டார். 1967 ல் துணைப் பிரதமராகப் பதவி பெற்றார். மன்னர் காலித் இறந்தபோது இவருக்கு இருந்த இரண்டு மூத்த சகோதரர்களான இளவரசர் நாசரும், இளவரசர் ஸாதும் மன்னராக போதிய தகுதி இல்லாத காரணத்தால் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் ஆட்சிக்கு வந்தார். ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் பட்டத்து இளவரசராக 1986 ல் அறிவிக்கப்பட்ட போது இருபுனித பள்ளிகளுக்கும் பாதுகாவலராக இருந்தார். 1979 ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக சௌதிக்கும் ஏதேனும் பாதிப்பு வருமோ என்று அச்சப்பட்ட ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 1982 ல் ஈரானுடனான போரின்போது சதாம் ஹுசெய்னுக்கு ஆதரவாக இருந்தார்.
ஃபஹ்த் எப்போதுமே ஐக்கியநாட்டுசபைக்கு ஆதரவாக இருந்தார். சௌதியின் மொத்த வருமானத்தில் 5.5. சதவீதத்தை சௌதி முன்னேற்ற நிதி அமைப்புக்கு கொடுத்து வந்தார். வெளி அமைப்புகளான போஸ்னியன் முஸ்லீம்கள், யூகோஸ்லாவ் போர், நிக்காராகாவன் ஆகியவற்றிற்கு மாதம் ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்து உதவினார். அமெரிக்க நட்பை பெரிதும் விரும்பினார். சௌதியின் இராணுவ விமான நிலையங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்தார். 1988 ல் நியூக்ளியர் சக்திளைத் தாங்கிச் செல்லும் CSS-2 என்னும் ஏவுகணைகள் 60 வாங்கினார். அல்ஜீரியாவுக்கும், மொரோக்கோவுக்கும் இடையே சமாதானத் தூதுவராக செயல்பட்டார். குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பின் போது எதிர்த்த அரபு நாடுகளுக்கு தலைமை தாங்கினார். சிரியா அதிபர் ஹஃபீஸ் அஸ்ஸாதுக்கும், எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கும் இடையே சிறப்பு ஒப்பந்தம் காண காரணமாய் இருந்தார். பல மில்லியன்களை மார்க்க விஷயங்களுக்காக செலவு செய்தார். பழைய இஸ்லாமிய கொள்கைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். மார்க்கத்துக்கென தனி போலீஸ் படையை நிர்மாணித்தார். ஷெய்க் அப்த் அல் இப்ன் பாஸி சௌதி இளைஞர்களை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மோசமான கலாச்சாரம் கொண்ட நாடுகளுக்குப் பயணிப்பதை எதிர்த்து வெளிப்படையாக பேசியதை ஆதரித்தார். 1990 ல் குவைத்தை சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக் படைகள் ஆக்கிரமித்தபோது ஈராக் படைகள் சௌதி குவைத் எல்லையில் குவிக்கப்பட்டிருந்தன. இதனால் ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ், அமெரிக்கபடைகளை வரவழைத்து சௌதியின் எல்லையில் நிறுத்தினார். இதற்கு சௌதி அரேபிய மக்களிடமிருந்தும், அரச குடும்பத்தின் சுதைய்ரி சகோதரர்கள் ஏழு பேரும் எதிர்த்தார்கள். இவரது ஆட்சியிலும் அரச குடும்பத்தினர் ஆடம்பரமான செலவுகள் செய்தார்கள். மிகப் பெரிய இராணுவ செலவீனமாக 90 பில்லியன் டாலர்களுக்கு அல் யமாமாஹ் ஆயுத கொள்முதல் செய்யப்பட்டது. இதற்காக சௌதி அரேபியாவின் மருத்துவமனை, சாலை, பள்ளிக்கூடங்களுக்கான கட்டுமானப் பணிகள் 1986 லிருந்து 1999 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் தொடர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தார். இவர் 60 வயதானபோது உடல் எடை கூடி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் பக்கவாதம் எனப்படும் உடலின் ஒரு பகுதி செயலிழந்தது. தடி ஊன்றியும், சக்கர நாற்காலியிலும் நடமாடினார். இவரின் அலுவலக நடவடிக்கைகளை இளவரசர் அப்துல்லாஹ் கவனித்துக் கொண்டார். இவரது மூத்த மகன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்த இளவரசர் ஃபைசல் பின் ஃபஹ்த் இறந்த போது ஸ்பெயின் இருந்தார். 2002 ல் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை இவரின் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள் என்றும் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்பெயினில் கோஸ்டா டெல் சோல் என்ற இடத்தில் ஒரு அரண்மனை வைத்திருந்தார். 147 மீட்டர் நீளத்தில் இரண்டு நீச்சல்குளங்கள், பால்ரூம், உடற்பயிற்சிக்கூடம், திரைஅரங்கம், சிறிய தோட்டம், தீவிர கண்காணிப்பு கொண்ட மருத்துவமனை, நான்கு அமெரிக்க ஏவுகணைகள், இரண்டு இயக்க அறைகள் கொண்ட பிரமாண்டமான யாட் என்னும் சொகுசுக்கப்பல் வைத்திருந்தார். அதன் மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 150 மில்லியன் டாலரில் சொந்தமாக போயிங் 747 விமானம் வைத்திருந்தார். லண்டனில் சூதாட்டம் தடை செய்திருந்த போது தனது ஹோட்டல் அறையிலிருந்து கள்ளத்தரகர்கள் மூலம் சூதாடி பல மில்லியன் டாலர்களை இழந்தார். இவர் பலமுறை திருமணம் செய்தவர். மனைவிகள் அல் அனூத், அல் ஜொவ்ஹரா ஆகியோர் இறந்து போனார்கள். மனைவிகள் ஜவ்ஸா, அல் ஜொவ்ஹரா, மோதி, ஜொஸாஃஅ, துர்ஃபா, வத்ஃபா, லொல்வா, ஷெய்கா, சீடா ஆகியோரை மணவிலக்கு அளித்திருந்தார். ஜனன் ஹர்ப் மட்டும் இறக்கும் வரை இருந்தார். இவருக்கு ஆறு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தார்கள். ரியாதின் கிங் ஃபைசல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸ் 2005 ஆகஸ்டு மாதம் மரணமடைந்தார். இவர் எப்போதும் அணிந்திருக்கும் சிறப்பு அரபு அங்கியுடனேயே (தவ்ப்) அடக்கம் செய்யப்பட்டார். இமாம் துர்கி பின் அப்துல்லாஹ் மஸ்ஜிதுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மூத்த இமாம் ஷெய்க் அப்துல் அஜீஸ் அல் ஷெய்க் இறுதித் தொழுகை நடத்தப்பட்டது. இவரது இறுதித்தொழுகை நாடெங்கிலும் உள்ள மஸ்ஜிதுகளிலும் நடத்தப்பட்டது. உடல் மகன் அப்துல் அஜீஸால் இரண்டு கி.மீ தூரம் சுமக்கப்பட்டு அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சௌதி அரேபியாவின் கொடியில் இஸ்லாமிய ஷஹாதா பொறிக்கப்பட்டுள்ளதால் கொடி எப்போதும் அறைக் கம்பத்தில் வைக்கப்படாது. அனைத்து இஸ்லாமிய நாடுகளும் மௌனம் அனுசரித்தது. பல வெளிநாட்டு தலைவர்களும் அடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.
ஃபஹ்த் பின் அப்துல் அஜீஸுக்குப் பிறகு, 2005 ல் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இவர் இரு புனிதபள்ளிகளின் பாதுகாவலராகவும் இருந்தார். 1924 ல் ரியாதில் பிறந்த இவர் மன்னர் அப்துல் அஜீஸின் பத்தாவது மகனாவார். சௌத் குடும்பத்தின் நெடுநாள் பகையாளிகளான அல் ராஷித் குடும்பத்தைச் சேர்ந்த ஃபஹ்தா பின்த் அசி அல் ஷுயைய்ம் இவரது தாயார் ஆவார். இதனாலேயே இவர் அதிகாரம் பெற பல் ஆண்டுகள் ஆனதாக ஒரு பேச்சு உண்டு. பலமான ஷம்மர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் தாயார் இவருக்கு ஆறு வயது ஆகும்போதே இறந்துவிட்டார். 1963 ல் சௌதியின் தேசிய பாதுகாப்புப்படையின் தளபதியாக இருந்தார். இதனால் இக்வான் படையை நிர்வகிக்கும் வாய்ப்பைப் பெற்று சௌத் குடும்பத்தின் முன்ணனிக்கு வந்தார். இந்த SANG எனப்படும் சௌதி தேசியபாதுகாப்புப்படை ஜனதிரிய்யா என்னும் கொண்டாட்டத்தின் போது கிராமிய நடனங்கள், ஒட்டகப்பந்தயம், பழங்குடியின பாரம்பரியம் ஆகியவற்றை நடத்தும். 1975 ல் மன்னர் காலிதால் துணைப்பிரதமராகவும் ஆக்கப்பட்டார். இதனால் சௌதியை ஆட்சிசெய்யும் முக்கிய மூன்று நபர்களில் ஒருவரானார். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட சௌதியின் இளவரசர்கள் இதை எதிர்த்தார்கள். மன்னர் ஃபஹ்த் நோய்வாய்ப்பட்டு இருந்தபோது நாட்டின் தலைமையை ஏற்றிருந்தார். 2001 ல் அமெரிக்கா அழைத்தபோது, அவர்கள் இஸ்ரேலுக்கு சாதகமாக இருந்ததால் புறக்கணித்தார். இஸ்ரேல் பாலஸ்தீன பெண்களின் மீது காட்டிய கொடூரத்தனத்தை கண்டனம் செய்தார். அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப்பிறகு, அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதினார். 2005 ல் சௌதி அரேபியாவின் இளைஞர், இளைஞிகள் வெளிநாடுகளில் நான்காண்டு இருந்து படிக்க அனைத்துச் செலவுகளையும் அரசு ஏற்க நிதியளித்தார். இதனால் 25 நாடுகளில் 70,000 மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர். பொதுமருத்துவ பரிசோதனைக்காக (மார்பு புற்றுநோய் பரிசோதனை உட்பட) 3 மில்லியன் ஹஜ் பயணிகளுக்கென செலவிட்டார். அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்தார். நோரா அல் ஃபயாஸ் என்னும் அமெரிக்காவில் படித்தவரை துணை கல்வி அமைச்சராக்கினார். தன் மைத்துனர் ஃபசல் பின் அப்துல்லாஹ்வை கல்வி அமைச்சராக்கினார். 2010 ல் உலமாக்களின் மூத்த குழுவை ஃபத்வா தீர்ப்பளிக்க அனுமதித்தார்.

சௌதி அரேபியா வரலாறு 6

அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் வேலை இல்லாதவர்களுக்கு சிறப்பூதியம், கல்வி மற்றும் வீடுகட்ட உதவிகள் என்று 37 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்தார். 2013 ல் குடும்ப வழக்குகளுக்கென்று தண்டனையாக 50,000 ரியால்கள் மற்றும் ஓராண்டு சிறைத்தண்டனையும் தீர்ப்பாக சட்டம் கொண்டுவந்தார். 2007 ல் அப்போஸ்தலிக் அரண்மனை சென்று பதினாறாம் போப் பெனெடிக்டைச் சந்தித்து போப்பைச் சந்தித்த முதல் சௌதி மன்னரானார். 2008 மக்கா மாநாட்டில் அனைத்து முஸ்லீம்களும் யூத, கிறிஸ்தவ தலைவர்களுக்கெதிராக ஒரே மாதிரி பேச வேண்டும் என்றார். அமெரிக்காவுக்கு அதிக மதிப்புள்ள பரிசுகளைக் கொடுத்தவர் இவர்தான். 300,000 டாலர் மதிப்பிலான பொருட்களை இரண்டாண்டுகளில் கொடுத்தார். 132,000 டாலர் மதிப்பில் ரூபி வைரம் பரிசளித்தார். ஈராக் மீதான அமெரிக்கா ஆக்கிரமிப்பை எதிர்த்தார். ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்தார். 2008 ஏப்ரலில் ஈராக்கின் அமெரிக்க தூதர் ரயான் க்ராக்கருக்கும், ஜெனரல் டேவிட் பெட்ராயிசுக்கும், ‘பாம்பின் கழுத்தை வெட்டிவிடுங்கள்’ என்று சொன்னதாக ‘விக்கிலீக்ஸ்’ செய்தி வெளியிட்டது. அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் ஈரான் ஹிஸ்பொல்லாஹ் போன்ற அமைப்பை ஆப்பிரிக்க நாடுகளில் அமைக்க முயற்சிக்கின்றது அதனால் விளையும் தீமைகளைப்பற்றி அது கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன்பேரில் ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் பலத்த வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். 2014 ல் பஹ்ரைன் விவகாரத்தில் சௌதி படைகளை அனுப்பி தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பளித்தார். இவர் ஈரானின் நியூக்ளியர் திட்டங்களை அழிக்க அமெரிக்காவிடம் கோரினார் என்றும் ‘விக்கிலீக்ஸ்’ செய்தி வெளியிட்டது. 1990 லிருந்து சீனாவிடனான தூதரக உறவிலிருந்து 2006 ல் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பெய்ஜிங்க் சென்று வாணிப ஒப்பந்தமும் செய்து கொண்டார். இதனால் சீனாவிடமிருந்து மிகப்பெரிய இறக்குமதி செய்யும் நாடாக ஆனது. மேலும், 8 பில்லியன் டாலருக்கு ஃப்யூஜியன் சுத்திகரிப்பு ஆலைக்கு சீனாவில் முதலீடு செய்தார். 2011 ல் துனீஷிய தலைவர் ஸைன் எல் அபிதீன் பென் அலிக்கு இனி அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையில் அடைக்கலம் தந்தார். சிரியாவின் பஷார் அல் அஸ்ஸாதிடமும் நட்புறவில் இருந்தார். பின்னர் சிரியாவில் உள்நாட்டுக்கலவரம் அதிகமானவுடன் தூதரக அலுவலகத்தை மூடச்செய்து விட்டு தூதரை சௌதிக்கு அழைத்துக் கொண்டார். 2003 ல் ‘பாரேட்’ இதழில் டேவிட் வல்லாச்சின்ஸ்கி என்பவர், மன்னர் ஃபஹ்தும், அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸும் இரண்டாவது மோசமான சர்வாதிகாரிகள் என்றார். தீவிரமாக ஷரீயா சட்டத்தைப் பின்பற்றுவதால் இவ்வாறு குறிப்பிட்டார். இவர் கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு மரணதண்டனை கொடுப்பதையும், பெண்களுக்கு அதிகப்படியான சுதந்திரம் கொடுப்பதையும் பலர் விமர்சனம் செய்தார்கள். ஹஜ் புனிதபயணம் வந்த ஷியா பிரிவினரைக் கைது செய்ததற்காகவும் விமர்சனம் செய்யப்பட்டார். 2007 ல் மனிதஉரிமை கழகம் சௌதி அரசாங்கம் ‘அஹமதிய்யா’ என்ற பிரிவினரிடையே காட்டும் பிரிவினையை விலக்கிக் கொள்ள வேண்டி கடிதம் எழுதியது. ஆனால், சௌதி அப்படி ஒரு கடிதம் வந்ததாகவே இதுவரை காட்டிக்கொள்ளவில்லை.
சௌதி அரேபியாவின் இராணுவ பலத்தை 260,000 வீரர்களாக உயர்த்தினார். அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸுக்கு 30 மனைவிகளும், 35 குழந்தைகளும் உள்ளனர். இளவரசி அலனூத் மூலம் பிறந்த மகள்களில் சாஹர்ம் ஜவஹர் ஆகியோர் 13 வருடகாலம் வீட்டுக்காவலில் இருந்ததாக வீடியோ வெளியிட்டு, லண்டனில் சௌதி அரேபிய தூதரகத்தில் முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 2010 லிருந்து வெளித்தொடர்புகளிலிருந்து விலகி இருந்தார். ஃப்ரான்சிலிருந்து வந்த அழைப்பையும் புறக்கணித்தார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தடியுடன் காணப்பட்டார். 2014 ல் அமெரிக்க தூதருடன் உரையாடும் போது மூக்கில் சுவாசக்குழாய் பொருத்தப்பட்டதிலிருந்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாக அறியப்பட்டது. 2010 லிருந்து 2012 வரை நான்கு முறை முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தார். இரண்டுமுறை அமெரிக்காவிலும், இரண்டுமுறை ரியாதிலும் செய்து கொண்டார். இவையெல்லாம் பின்னர் தான் தெரியவந்தது. அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் ரியாதில் கிங் அப்துல் அஜீஸ் நூலகமும், மொரோக்கோ காசாப்ளாங்காவில் ஒரு நூலகமும் திறந்தார். கத்ரீனா புயலுக்குப்பின் நியூ ஆர்லன்சில் உயர்பள்ளிக்கூடம் கட்ட 300,000 டாலரும், 2008 ல் உலக உண்வுத்திட்டத்திற்கு 500 மில்லியன் டாலரும், சீனாவின் சிசூவான் பூகம்பத்திற்கு 50 மில்லியன் தொகையும், 10 மில்லியன் உடனடி நிவாரணப் பொருள்களும், கிங் அப்துல் அஜீச் விஞ்ஞானம் மற்றும் தொழிற்கல்வி பல்கலைக்கழகத்திற்கு 10 பில்லியன் டாலர்களும் கொடுத்தார். 2011 ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை இவரது சொத்துமதிப்பு 21 பில்லியன் என்றும் உலகின் முதல் பணக்கார மன்னர் இவரென்றும் செய்தி வெளியிட்டது. இளவயதில் குதிரைகளின் மீது ஆர்வமாய் இருந்தார். 1000 குதிரைகளை சொந்தமாக வைத்திருந்தார். ரியாதில் மிகப்பெரிய ‘ஜனாத்ரியா’ என்ற பண்ணையும் வைத்திருந்தார். மொரோக்கோவின் காசாப்ளாங்காவில் இரண்டு ஹெலிகாப்டர்களை நிறுத்தும் தளத்துடன் பல தங்கும் அறைகளைக் கொண்ட 137 ஏக்கரில் அரண்மனை வைத்திருந்தார். 2015 ஜனவரியில் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் காலமானார். அவருக்குப்பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் ஆட்சிக்கும், இரண்டு புனித மஸ்ஜிதுகளுக்கு பாதுகாவலராகவும் பொறுப்பேற்றார்.
சல்மான் பின் அப்துல் அஜீஸும் சுதைய்ரி சகோதரர்களில் ஒருவர். இப்ன் சௌதின் 25 வது மகனான இவர் முரப்பா அரண்மனையில் வளர்ந்தார். ரியாரிதின் இளவரசர்களுக்கான பள்ளியில் பயின்றார். 1959 ல் 19 வயதில் ரியாதின் கவர்னராக பதவிபெற்று 1955 வரை இருந்தார். பின்பு மீண்டும் 1963 ல் ரியாதின் கவர்னராகி 2011 வரை இருந்தார். மத்திய தரத்திலிருந்த ரியாத் நகரத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தினார். 2011 ல் ரியாதிலிருந்த அனைத்து பிச்சைக்காரர்களையும் பிடித்து வெளிநாட்டுக்காரர்களை அவர்களின் நாட்டுக்கும், உள்ளூர் பிச்சைக்காரர்களை மறுவாழ்வு நிலையத்திற்கும் அனுப்பினார். சௌதி அரேபியாவின் உறவை பலப்படுத்த குவைத், பஹ்ரைன், கதார் நாடுகளுக்கு பயணம் செய்தார். கனடா, பாரீஸ், போஸ்னியா, ஹெர்ஸிகோவினா, பாகிஸ்தான், ஜப்பான், ப்ருனைய், ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். இவரது கீழ் ரியாத் நகரம் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்கங்கள், சுற்றுலா தலங்கள் என்று மத்திய கிழக்கின் பணக்கார நகரமாக இருந்தது. ரியாத் நகரைப்பற்றி சல்மான் பின் அப்துல் அஜீஸ் சொல்லும்போது, ‘ரியாத் நகரின் ஒவ்வொரு பகுதியும் எனது இதயத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளது. ரியாதை நினைக்காமல் என்னால் இருக்கமுடியாது என்றார். 2011 ல் இரண்டாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டார். சௌதியின் தேசிய பாதுகாப்பு குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். அரச குடும்பத்தில் மத்திய வயதுள்ளவராக இருந்ததால் நாட்டின் இருதலைமுறையினருடனும் சமூகரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் தொடர்பு கொள்ள இவருக்கு ஏதுவாக இருந்தது. 2012 ல் அமெரிக்கா சென்று பராக் ஒபாமாவையும், இங்கிலாந்து சென்று டேவிட் காமரூனையும் சந்தித்தார். இராணுவத்திற்கு 67 பில்லியன் டாலர்கள் செலவு செய்து இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜப்பானைத்தாண்டி உலகில் இராணுவச்செலவில் நான்காவது நாடாக சௌதியை ஆக்கினார். 2014 ல் இராணுவ மந்திரியாக ஈராக்குக்கும், சிரியாவுக்கும் எதிரான வான்வெளித்தாக்குதலுக்கு ஆதரவளித்தார். 2012 ல் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார். சௌதி அரச குடும்பத்தில் முதல்முறையாக 2013 ல் டிவிட்டரில் இணைந்தார். சோமாலியா, சூடான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏழை இஸ்லாமிய நாடுகளுக்கு ஆதரவாக இருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்தார். அரசு அலுவலர்கள், இராணுவத்தினர், ஓய்வூதியம் பெறுபவர், மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் இரட்டை ஊதியம் வழங்கி, அவர்களின் தொழுகைகளில் தனக்கு பிரார்த்திக்குமாறு கேட்டார். 2015 ல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆறு நாள் சுற்றுப்பயணமாக சௌதி அரேபியா வந்திருந்த இளவரசர் சார்லஸை வரவேற்றார். 2015 ல் இவரது முடிசூட்டுவிழாவிற்கு 32 பில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டது.
சல்மான் பின் அப்துல் அஜீஸ் ஏமன் அரசுக்கெதிரான படைகள் மீது பத்து சுன்னிப்பிரிவு நாடுகளின் கூட்டுடன் வான்வெளித்தாக்குதல் நடத்தினார். ஒரு முஸ்லீம் நாடு தன்னிச்சையாக செயல்பட்டால் தான் மேலைநாட்டினருக்குப் பிடிக்காதே. உடனே மனித உரிமை கழகம் இது போர் சட்டத்திற்கு எதிரானது என்றது. மீண்டும் கொத்து குண்டுகளை ஏமன் பொதுமக்கள் மீது வீசுவதாக குற்றம் சாட்டியது. அமெரிக்கா 26 நாடுகளுடன் சேர்ந்து ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் வீசும்போது உறக்கத்தில் இருந்தார்கள் போலும். சிரிய அரசுக்கெதிரான படைகளுக்கு சௌதி அரேபியா ஆயுதமும், பணமும் வழங்குவதாகச் சொல்லப் படுகிறது. 4000 பேராக பெருகிப்போய்விட்ட சௌதியின் இளவரசர்களுக்கு இவரே பொறுப்பாக இருக்கிறார். சல்மான் பின் அப்துல் அஜீஸ் தன் குடும்பத்திற்கு சொந்தமாக ‘அஷர்க் அல் அவ்சத்’, ‘அல் எக்திசாதியாஹ்’ என்று இரண்டு பத்திரிக்கைகள் வைத்திருக்கிறார். இவருக்கு மூன்று மனைவிகள். இவர் முதல் மனைவி 2011 ல் காலமானார். மூத்தமகன் ஃபஹ்த் பின் சல்மான் 47 வயதில் இருதய நோயால் காலமானார். இரண்டாவது மகன் அஹ்மத் பின் சல்மான் 43 வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது இன்னொரு மகன் சுல்தான் பின் சல்மான் உலகின் முதல் அரச குடும்பத்தினராக, முதல் முஸ்லீமாக, முதல் அரேபியராக 1985 ல் வான்வெளிக்கு ராக்கெட்டில் பயணமானார். 2010 ல் அமெரிக்காவில் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்த் கொண்டார். மேலும் இவருக்கு இடக்கை செயலிழந்து போனது.