புதன், 8 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 16

நூர் உத் தீன் முஹம்மது ஜஹாங்கீர்
கூ.செ.செய்யது முஹமது
1605 அக்டோபர் மாதம் 10 ந் தேதி அக்பர் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின், சலீம் என்று அழைக்கப்பட்ட நூர் உத் தீன் முஹம்மது ஜஹாங்கீர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆட்சிக்கு வரும் போது ஜஹாங்கீருக்கு முப்பத்தி எட்டு வயது. ஜஹாங்கீர் பாதுஷா என்றும் அழைக்கப்பட்டார். தான் வெளியிட்ட நாணயத்தில் பேரரசர் அக்பரின் மகனும், உலகப் பாதுகாவலருமான ஜஹாங்கீர் என்று பொறித்துக் கொண்டார். ஆட்சிக்கு வரும் போது 150 கோடி ரூபாயும், 4,000 கிலோ தங்கமும் அரசு பொக்கிஷத்திலிருந்ததாகவும், தனது கிரீடம் ஒரே வடிவம் கொண்ட பனிரெண்டு அமைப்புகளில் பெரிய வைரமும், நடுவில் நான்கு முத்துக்களும் பதிக்கப்பட்டு அன்றைய மதிப்பில் ஒரு கோடியே எட்டு லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள் மதிப்பில் இருந்ததாகவும் தனது சுயசரிதையில் சொல்லி இருக்கிறார். ஜஹாங்கீரின் பதவியேற்பு நாற்பது நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்டது. மது மற்றும் ஓப்பியம் பழக்கத்திற்கு அடிமையாய் இருந்து ஆடம்பரமாக வாழ்ந்தாலும், கல்வியறிவாலும், புத்திசாலித்தனத்தாலும் மொகலாயப் பேரரசின் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இருபது கோப்பைக்கு மேல் மது குடித்த இவர் பின் ஐந்து கோப்பைகளாகக் குறைத்துக் கொண்டார். தான் பிறந்த மாதத்தில் நாட்டில் இறைச்சியையும், கால்நடைகளை அறுப்பதையும் தடை செய்தார். இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்தார். பயத்திலிருந்த தந்தையின் நெருங்கிய நண்பர்களுக்கும், நம்பிக்கையான அதிகாரிகளுக்கும் அவர்களின் பொறுப்புகளுக்கும் உத்திரவாதம் அளித்தார். ஹிந்துக்களிடமும் நம்பிக்கை பெற்று, இளவரசர் குஸ்ருவுக்கு ஆதரவளித்த ராஜா மான் சிங் போன்றோரை மன்னித்தார். பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்தார். 1606 மார்ச்சில் முதல் நௌரோஸ் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடச் செய்தார்.
  1605 ல் சில தலைவர்கள், ராஜா ராம் தாஸ், முர்தஸா கான், சைய்யத் கான், கூலிச் முஹமது மற்றும் மிர்சா அஜீஸ் கோகா ஆகியோர் ராஜா மான் சிங் தலைமையில் ஜஹாங்கீரின் மகன் குஸ்ருவை பதவிக்கு கொண்டுவர திட்டமிட்டார்கள். அக்பரின் மரணத்தின் போது சற்று ஒத்துப்போன தந்தை ஜஹாங்கீர் மற்றும் மகன் குஸ்ரு உறவு அதன் பின் பாசமற்றுப் போனது. ஆக்ராவிலிருந்து தப்பித்துப் போன குஸ்ரு 350 குதிரை வீரர்களுடன் லாகூருக்கு சென்றார். வழியில் மதுராவின் ஆட்சியாளர் ஹுசெய்ன் பேக் பதக் ஷானின் உதவியுடன் மேலும் மூவாயிரம் குதிரை வீரர்களை சேர்த்துக் கொண்டு, லாகூரின் திவான் அப்துர் ரஹாமனின் உதவி, குரு அர்ஜன் (க்ரன்த் சாஹிப் எழுதிய ஆசிரியர்) உதவி ஆகியவற்றுடன் லாகூர் சென்றார். லாகூரின் கவர்னர் திலாவர் கான் நகரின் கதவுகளை அடைத்து குஸ்ருவை தடுத்தார். குஸ்ரு எதிர்தாக்குதல் நடத்தி நகரின் ஒரு கதவை தீயிட்டுக் கொளுத்தினார். குஸ்ரு ஒரு வாரமாக தாக்குதல் நடத்தினார். தந்தை ஜஹாங்கீர் தன்னை நோக்கி வருவதை அறிந்த குஸ்ரு வடமேற்காக ஓடினார். ஜஹாங்கீர் குஸ்ருவை தீவிரமாக எதிர்த்தார். ஜஹாங்கீரின் கோபத்தைக் கண்டு, உஸ்பெக்குகளும், பெர்ஷியர்களும் பயந்தனர். ஜஹாங்கீருக்கும், குஸ்ருவுக்கும் இடையே முயற்சித்த சமாதானங்கள் தோல்வியில் முடிய, பைரோவால் என்ற இடத்தில் மோதிக் கொண்டனர். இறுதியில் குஸ்ரு தப்பித்து ஓடினார். குஸ்ருவின் நகைப் பெட்டகத்தையும், விலைமதிப்பில்லாத சில பொருட்களையும் ஜஹாங்கீர் கைப்பற்றினார். இடைவிடாத ஜஹாங்கீரின் படைகளையின் தேடுதலுக்குப் பிறகு, குஸ்ரு கைது செய்யப்பட்டு, பலமான சங்கிலியில் பிணைக்கப்பட்டு ஜாங்கீரின் முன் நிறுத்தப்பட்டார். குஸ்ருவின் கண்கள் பிடுங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். 
குரு அர்ஜன் சபைக்கு வரவழைக்கப்பட்டு, தன் மகளை மருமகளாக ஏற்க மறுத்த சந்து ஷா என்பவருக்கு இழைத்த அநீதிக்காக குரு அர்ஜனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இதனால் சீக்கியர்கள் ஜஹாங்கீருக்கு எதிராக இருந்தார்கள். அப்போதைய ஆசியாவின் சிறந்த மன்னராக இருந்த பெர்ஷியாவின் ஷா அப்பாஸ் என்பவர் 1595 ல் அக்பரால் வென்றெடுக்கப்பட்ட கந்தாரை கைப்பற்ற படையெடுத்தார். ஷா பேக் கானால் பலமாக எதிர்க்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டார். சுமுகமான ராஜதொடர்புகள் இருப்பது போல் இருந்து கந்தார் சற்று பாதுகாப்பு தளர்த்தப்பட்டவுடன், 1662 ல் திடீரென்று எதிர்ப்பின்றி ஷா அப்பாஸ் கந்தாரை கைப்பற்றிக் கொண்டார். தூரப்பிரதேசமாக இருந்த கந்தாரை மீண்டும் கைப்பற்ற ஜஹாங்கீர் தன் மகன் குர்ரமை படையுடன் செல்லச் சொன்னார். ஆனால், ஜஹாங்கீருக்கு அடுத்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக கருதிய குர்ரம் போரிடச் செல்ல மறுத்து விட்டார். இது தன் மருமகன் ஷஹ்ர்யாரை ஆட்சிக்கு கொண்டு வர எண்ணும் நூர்ஜஹானுக்கு சாதகமாக இருந்தது. அவர் கணவரிடத்திலே சமயம் பார்த்து குர்ரமின் ராஜதுரோகத்திற்கு தூபம் போட்டார். ஜஹாங்கீர் குர்ரம் வசமுள்ள படைகளை திரும்பப் பெற்று அவரை தலைநகர் திரும்பச் சொன்னார். இதற்கு மறுப்பு தெரிவித்த குர்ரமுக்கு எதிராக மீண்டும் ஜஹாங்கீரிடம் எதிர்கருத்துகளை சொல்லி குர்ரமை எதிரியாக்கினார் நூர்ஜஹான். நீண்டகாலமாக குர்ரமின் கனவாய் இருந்த தோல்பூரை நிர்வகிக்கும் ஆசையைத் தகர்த்து அதை ஷஹ்ர்யாருக்குப் பெற்றுத் தந்தார். நூர்ஜஹான் மேலும் ஷஹ்ர்யாரை முன்னேற்றும் வண்ணம் கணவரிடம் பரிந்துரைத்து மன்சாபாக (மன்சாப் என்பது இராணுவத்திலும், குடிமக்களிடத்திலும் உண்டான ஒரு தகுதி-RANK / ஐந்தாயிரம் மன்சாப்களுக்கு மேலுள்ளவர்கள் அமீர் அல் உமரா என்னும் உயர் தகுதிக்குண்டானவர்கள்) பனிரெண்டாயிரம் ஸாட்டுகளையும், எட்டாயிரம் சவார்களையும் (சவார் என்பது தனது கட்டுப்பாட்டுக்கு கீழுள்ள குதிரைப் படையின் எண்ணிக்கையின் தகுதி) பெற்றுத்தந்தார். மேலும் கந்தார் படைக்கு தலைமை ஏற்கும் பொறுப்பையும் ஷஹ்ர்யாருக்குப் பெற்றுத் தந்தார்.
இதனால் முற்றிலும் நிலைகுலைந்த இளவரசர் குர்ரம் தந்தையின் கோபம் தணிக்க ஜஹாங்கீரிடம் மன்னிப்பு கோர தயாரானார். ஆனால் நூர்ஜஹான் அதற்கு பெரும் இடையூறாக இருந்தார். குர்ரமுக்கு மன்னரை எதிர்த்து புரட்சி செய்வதை தவிர வேறு வழியில்லாமல் போனது. கந்தார் முற்றுகையும் தோல்வியில் முடிந்தது. ஹிந்துக்களின் புனித இடமாக இருந்த பஞ்சாபின் காங்க்ராவை வெல்ல ஜஹாங்கீர் முடிவு செய்தார். இதற்கு குர்ரம் தளபதியாக நியமிக்கப்பட்டார். காங்க்ராவைச் சுற்றியுள்ள மலைப்பகுதி தலைவர்களை வெற்றி கொண்டு பிரதான கோட்டையின் தொடர்புகளை மொகலாயப் படைகள் துண்டித்தார்கள். ஏறக்குறைய ஓராண்டுக்கு மேலாக நீடித்தது தாக்குதல்கள். காங்க்ராவின் கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு உணவுக்கு வேறு வழியில்லாமல் காய்ந்த புற்களை கொதிக்க வைத்து உண்டார்கள். வேறு வழியில்லாமல் 1620 நவம்பரில் காங்க்ரா ஜஹாங்கீரிடம் சரண்டைந்தது. அடுத்து ராஜபுத்திரர்களின் பெருமையான பகுதியான மேவாரின் மீது ஜாங்கீரின் கவனம் திரும்பியது. போற்றத்தக்க ராஜாவாக இருந்த ராணா பிரதாபின் மகன் அமர்சிங் உதைபூரில் ஆட்சியில் இருந்தார். அமர்சிங்கும் தந்தையைப் போல் நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார். மொகலாயர்களிடம் அடிபணிய மறுத்தார். ஜஹாங்கீர் தன் மகன் இளவரசர் பர்வேஸின் தலைமையில் தகுந்த போர்க்கருவிகளுடன் மேவாரின் மீது படையெடுக்கச் செய்தார். ராஜபுத்திரர்கள் கடுமையாக எதிர்த்தனர். இடையில் இரு படைகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரண்டாண்டுக்கு பிறகு மீண்டும் மேவாரின் மீது ஜஹாங்கீர் படை நடத்தினார். இம்முறை மொகலாயப் படைக்கு மஹபத் கான் தலைமை தாங்கினார். மஹபத் கான் ராஜபுத்திரர்களை வென்றபோதும் பொருளாதார ரீதியாக பலன் தரவில்லை. 1614 ல் இளவரசர் குர்ரம் தலைமையில் மீண்டும் மேவாரின் மீது புது உத்வேகத்துடன் படையெடுக்கப்பட்டது. திறமையான இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையின் படி ராஜபுத்திரர்களின் வெளியுலக உணவு மற்றும் தகவல் பரிமாற்றங்கள் தடுக்கப்பட்டது. இதனால் ராஜபுத்திரர்கள் சரணடைந்தனர். இதனால் சமாதானத்திற்கு ராஜபுத்திரர்கள் ஒப்புக் கொண்டனர். அதன் விளைவாக ராணா மொகலாயர்களின் கீழ் ஆட்சி செய்வதாக பணிந்து ராஜபுத்திரர்களின் இளவரசர் கரண் தலைநகருக்கு சென்று பேரரசரை சந்திக்க அனுப்பப்பட்டார். 
மேலும் ஆயிரம் குதிரைகளை மொகலாயர்களுக்கு அளிப்பதின் பேரில், சித்தூர் கோட்டை ராஜபுத்திரர்கள் வசமே இருக்கும் என்றும், ராணாவும், அவர் மகனும் ஐந்தாயிரம் குதிரைகளை நிர்வகிக்கும் பொறுப்பும் ஏற்பர் என்றும் முடிவானது. ஜஹாங்கீர் ராணாவின் வயதை கருதி மொகலாய அரண்மனை கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் தந்து நன்கு மரியாதை செய்தார். ராணா மற்றும் அவர் மகனின் ஆளுயர உருவங்களை சலவைக்கல்லில் குடைந்து ஆக்ராவின் தோட்டத்தின் (ஜரூகா) பார்வையாளர்கள் வரிசையில் வைத்து கௌரவம் செய்தார். மேவார் பல ஆண்டாக மொகலாயர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் ஜஹாங்கீர் கூடுமானவரை ராணாவிற்கு மரியாதை செய்ததாக ஒரு கருத்துண்டு. மேவாரின் வெற்றிக்குப் பிறகு முப்பதாயிரம் மன்சாபிற்கு மதிப்பளிக்கப்பட்டு, இளவரசர் குர்ரம் “ஷா குர்ரம்” என்று கௌரவமளிக்கப் பட்டார். அக்பர் அஹ்மத் நகர், பிரார் மற்றும் காந்தேஷ் ஆகியவற்றை வெற்றி கொண்டு மேலும் தெற்கு நோக்கி பரவ திட்டமிட்டிருந்தார். ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக டெக்கான் பகுதியிலிருந்து கவனத்தை திருப்பினார். 

மொகலாய வரலாறு 17

தற்போது அக்பரின் ஆசையின்படி ஜஹாங்கீர் டெக்கான் மீது கவனம் செலுத்தினார். முதலில் அஹ்மத்நகர் மீது படையெடுத்த போது நிஜாம்ஷாஹி மன்னராட்சியாக இருந்த அஹ்மத் நகரின் அபிசீனிய மந்திரி மலிக் அம்பரின் எதிர்ப்பு பலமாக இருந்தது. அவரின் வயதும் இராணுவ அநுபவமும் மொகலாயர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மலிக் அம்பர் மிகச் சிறந்த நிர்வாகியாகவும், பொருளாதார வல்லுனராகவும் இருந்தார். நாட்டின் வருவாயை மறுசீரமைப்பு செய்து வெற்றி கண்டிருந்தார். இவரின் இந்த வெற்றி அணுகுமுறையையே அக்பர் தொடர்ந்திருந்தார். இராணுவத்தினரை ஒழுங்கு படுத்தி கொரில்லா பயிற்சியும் அளித்திருந்தார். மொகலாயப் படைகளுக்கு அப்துர் ரஹீம் தலைமை தளபதியாக பொறுப்பேற்று அஹ்மத்நகரில் மலிக் அம்பரிடம் படுதோல்வி அடைந்தார். 1611ல் அப்துர் ரஹீம் தங்கத்தை கையூட்டாகப் பெற்று தோல்வி அடையச் செய்தார் என்று அவரின் எதிரிகளால் சொல்லப்பட்டது. ஜஹாங்கீர் கான் ஜஹான் லோதி என்பவரை தளபதியாக நியமித்து இளவரசர் பர்வேசுடன் காந்தேஷிலிருந்து அஹ்மத்நகர் மீது தொடர் தாக்குதல் நடத்தச் செய்தார். குஜராத்தின் கவர்னர் அப்துல்லாஹ்வும் கலந்து கொண்டார். ஆனாலும் தோல்வியிலேயே முடிந்தது. மொகலாயர்களுக்கு பெரும் சவாலாக இருந்த அஹ்மத்நகர் மீது 1617 ல் இளவரசர் குர்ரம் தலைமையில் சிறந்த இராணுவ அதிகாரிகள் துணையுடன் அனுப்பப்பட்டார். ஜஹாங்கீரின் ஆலோசனைப்படி ஆதில் ஷாவிடம் அமைதிக்கு பேச்சு வார்த்தை நடத்தினர். ஆதில் ஷா இளவரசருக்கு பதினைந்து லட்சம் ரூபாய் பெருமான பரிசுகளை அளித்து மலிக் அம்பரால் கைப்பற்றப் பட்டிருந்த மொகலாய பிரதேசங்களை திருப்பித் தர ஒப்புக் கொண்டார். இதில் இளவரசர் குர்ரமின் நடவடிக்கையும் பாராட்டப்பட்டு “ஷா ஜஹான்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். பேரரசர் ஜாங்கீரால் தட்டு நிறைய தங்கத்தை தலையில் கொட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார். சிறப்பான விருந்தளிக்கப்பட்டு மேலும் விலைமதிப்பில்லாத பரிசுகள் வழங்கப்பட்டன. 1629 ல் ஜஹாங்கீரின் மறைவிற்குப் பிறகு, அஹ்மத்நகர் வெல்லப்பட்டது. 
குஸ்ரு என்ற இன்னொரு இளவரசர் தந்தை ஜாங்கீருக்கு எதிராக சதி செய்து ஆட்சியைப் பிடிக்க முயற்ச்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்து இளவரசர் கண்கள் பறிக்கப்பட்டார். ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு, நான்கு பேர் தூக்கிலிடப்பட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு, குஸ்ருவின் துரோகம் மறக்கப்பட்டு, தந்தையின் பாசத்தால் கை தேர்ந்த மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குஸ்ருவிற்கு சிறிது பார்வை தெரியுமாறு செய்யப்பட்டது. அதனால் குஸ்ரு தந்தையின் கீழ் மரியாதையாக இருந்தார். இது சகோதரர் ஷாஜஹானுக்கு சற்று பிடித்தமானதாக இல்லை. இதனிடையில் தான் நூர்ஜஹான் தனது மருமகன் ஷஹ்ர்யாரை அடுத்து ஆட்சிக்கு கொண்டுவர திட்டமிட்டார். அவரும் குஸ்ருவை விரும்பவில்லை. 1616 ல் பரம எதிரியான ஆசஃப் கானால் இளவரசர் குஸ்ரு சிறை பிடிக்கப்பட்டார். பின் ஷாஜஹான் வசம் 1622 ல் ஒப்படைக்கப்பட்டு புர்ஹான்பூர் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார். ஆனால் கடுமையான குடல் வலியால் இறந்து போனதாக சொல்லப்பட்டது. குஸ்ருவின் மீது பாசமாயிருந்த ஜஹாங்கீரால் இவரது அடக்கவிடம் தோண்டப்பட்டு, அலஹாபாத்தில் குஸ்ரு பாக் என்ற தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டார். இளவரசர் குஸ்ரு நாட்டு மக்களால் மதிக்கப்பட்ட அழகான தோற்றம் கொண்டவராய் இருந்தார். முப்பத்தைந்து வயது வரை ஒரே மனைவியுடன் அன்பாக இருந்தார். 
அவ்வளவாக கவனம் செலுத்த முடியாத தூரத்தில் அக்பர் ஆட்சியிலிருந்து பெங்கால் மொகலாயர்கள் வசம் இருந்தது. மொகலாயர்களுக்கு அடிபணிந்தவராக ராஜா மான் சிங் ஆண்டு வந்தார். அவர் பெயருக்கு தான் மொகலாயர்களுக்கு கீழிருப்பது போல் நடித்தாரே தவிர அவர் எண்ணமெல்லாம் ஆப்கானியர்களை இந்தியாவில் ஆளச் செய்யவேண்டும் என்ற ஆசையில் இருந்தார். எப்படியாவது மொகலாயர்களை அழிக்க எண்ணி தானே பெங்கால் முழுதும் சுற்றி புரட்சி குழுக்களையும், ஜமீந்தார்களையும் சந்தித்தார். அதற்கேற்றவாறு பல பகுதிகளின் கவர்னர்களை மாற்றி வைத்தார். உஸ்மான் என்பவரின் மூலம் 1612 ல் புரட்சியில் இறங்கி மொகலாயர்களுக்கெதிராக போரிட்டார். இதில் பலமான காயம் அடைந்த நிலையிலும் உஸ்மான் ஆறு மணி நேரம் படைகளை நடத்தினார். இறுதியில் தோல்வியுற்று பெங்கால் மொகலாயர்கள் வசமானது. ஜஹாங்கீர் இஸ்லாம் கான் என்பவரை தரம் உயர்த்தி அதன் கவர்னராக்கினார். ஆப்கானியர்களை கனிவாக நடத்தி அவர்களுக்கும் பதவிகளை ஜஹாங்கீர் கொடுத்தார். இதனால் பெங்கால் பலமானதாக இருந்தது. 1616 ல் இந்தியாவில் அக்குள் பகுதியை கடுமையாக தாக்கிய ப்ளேக் நோய் பரவியது. முதலில் எலிகளிடம் ஆரம்பித்த இது வேகமாக மனிதர்களிடம் பரவியது. பஞ்சாபில் துவங்கிய நோய் மொத்த வட இந்தியாவையும் தாக்கியது. அடுத்தடுத்து பலர் இறந்தனர். பெரும் தொற்றாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு காடுகளுக்கு ஓடினர். லாகூர், காஷ்மீர் மற்றும் ஆக்ராவில் பலர் உயிரிழந்தனர். 
       ஜஹாங்கீரின் ஆட்சியில் அவரின் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. டெஹ்ரானைச் சேர்ந்த கியாஸ் பேக் என்பவரின் அழகிய மகள் மெஹ்ர் உன் நிசா என்பவருடன் ஜஹாங்கீருக்கு திருமணம் நடந்தது. மணமகள் உச்ச அழகியாக இருந்தார். கியாஸ் பேக் தன் சொந்த ஊரை விட்டு நல்ல வாழ்க்கையை நாடி இந்தியா வந்தார். அவர் கந்தாரில் இருந்த போது அவர் மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. வறுமையின் காரணமாக கியாஸ் பேக்கால் தாயையும், குழந்தையையும் சரியாக கவனிக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக நல்ல மனம் படைத்த மலிக் மசாவூத் என்ற வியாபாரியின் உதவியுடன் இந்தியாவிற்கு வந்தார். அந்த வியாபாரிக்கு மொகலாய அரண்மனையில் சில தொடர்புகள் இருந்தது. மலிக் மசாவூத் மன்னர் அக்பருடன் பணியில் இருந்த போது சரியான சந்தர்ப்பத்தில் கியாஸ் பேக்கை அறிமுகப் படுத்தினார். உடனே அக்பரால் பணி கிடைக்கப்பட்டு அரண்மனையில் சேர்ந்தார். கியாஸின் குணத்தாலும், வேலைத்திறனாலும் பாராட்டைப் பெற்று முன்னூறு (RANK) தரத்திற்கு தகுதி பெற்றார். கியாஸின் மனைவியும், இளைய மெஹ்ர் உன் நிசாவும் தாராளமாக அந்தப்புரத்திற்கு நடமாடும் அனுமதி பெற்று ராஜகுடும்பத்திற்கு உதவியாக இருந்தார்கள். மெஹ்ர் உன் நிசா பருவம் எய்தி பதினேழு வயதான போது, பெர்ஷியாவின் இரண்டாம் ஷா இஸ்மாயிலிடம் மேஜைப் பணியாளராக இருந்த அலி குலி இஸ்தஜ்லூ (இன்னொரு பெயர் ஷேர் ஆப்கான்) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அலி குலி பேரரசர் அக்பரிடம் பணிக்கு சேர ஆவல் கொண்டார். அக்பர் அலி குலியை இளவரசர் சலீமுக்கு (ஜஹாங்கீர்) பணி செய்ய உத்தரவிட அதன் மூலம் மேவார் சென்றார். அலி குலியின் கனிவான சேவையில் மனம் குளிர்ந்த சலீம் ‘ஷேர் ஆப்கான்’ என்ற சிறப்புப் பெயரை அளித்தார். சலீம் தந்தைக்கு எதிராக புரட்சி செய்த போது அனைத்து ஆதரவாளர்களும் சலீமை விட்டு ஓடிவிட, அதில் ஷேர் ஆப்கானும் ஒருவர். தான் ஆட்சிக்கு வந்த பின் ஷேர் ஆப்கானை மன்னித்து பதவி உயர்வாக பெங்காலின் புர்த்வான் பகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார். 
ஷேர் ஆப்கான் ஜஹாங்கீருக்கு எதிராக புரட்சி செய்ய தயாராவதாக பெங்காலிலிருந்து தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அரண்மனைக்கு வந்து விளக்கம் கொடுக்க ஜஹாங்கீர் உத்தரவிட்டார். அதற்கு ஷேர் ஆப்கான் பணியவில்லை. இதை அப்பகுதியின் கவர்னரான குத்புதீன் கோகாவிடமும் ஜஹாங்கீர் தெரியப்படுத்தினார். குத்புதீன் கோகா முட்டாள்தனமாக ஷேர் ஆப்கானை கைது செய்ய உத்தரவிட்டார். குத்புதீன் கோகா பெரும் ஆட்களுடன் சென்று ஷேர் ஆப்கானை சூழ்ந்து கொள்ள, அதிர்ச்சியுற்ற ஷேர் ஆப்கான் ‘இது என்ன நடைமுறை? என்று வினவ, ஜஹாங்கீரின் உத்தரவை தெரிவிக்க குத்புதீன் அவரை நெருங்க, ஷேர் ஆப்கான் கவர்னரின் பணியாளை வாளினால் காயப்படுத்தினார். இந்த செயலினால் அருகிலிருந்த கவர்னரின் இன்னொரு பணியாள் ஷேர் ஆப்கானை எதிர்பாராத விதமாக வாளால் வெட்டிக் கொலை செய்தார். கணவர் இறந்த பிறகு மெஹ்ர் உன் நிசாவும், அவரின் சிறிய மகளும் அந்தப்புரத்திற்கு வரவழைக்கப்பட்டு, விதவையான ராணி சலீமா சுல்தானுக்கு பணிவிடை செய்ய நியமிக்கப்பட்டார். 1611 மே மாதம் ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசாவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசா மீது காதல் கொண்ட காரணத்தால் திட்டமிட்டே ஷேர் ஆப்கான் கொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல் நடமாடியது. ஆனால், ஷேர் ஆப்கானின் ஜஹாங்கீருடனான காலகட்டங்களை நன்கு ஆராய்ந்த பின்னும், கவர்னர் குத்புதீன் கோகாவின் கொலைக்கான விளக்கமும், அது தற்செயலாக நடந்தது தான் என்றும் ஜஹாங்கீருக்கு துளியும் சம்பந்தமில்லை என்று தெளிவானது. ஷேர்கான் இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் எதேச்சையாக ராணியை சந்திக்கச் சென்ற ஜஹாங்கீர் மெஹ்ர் உன் நிசாவின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொண்டார். அவரை மிகவும் விரும்பிய ஜஹாங்கீர் நூர் மஹால் ( அரண்மனையின் ஒளி) என்றும், நூர்ஜஹான் (உலகின் ஒளி) என்றும் புகழ்ந்தார். பதினாறு ஆண்டுகள் ஷேர் ஆப்கானுடன் வாழ்ந்த நூர்ஜஹான் ஜஹாங்கீருடனான நான்காண்டுகால வாழ்க்கையிலேயே பேரரசி ஆனார். இவர் மீது ஜஹாங்கீர் கொண்டிருந்த அன்பின் அடையாளமாக இஸ்லாமிய மன்னர்களிலேயே முதல்முறையாக நாணயத்தில் மனைவியைப் பொறித்தார்.
நூர்ஜஹான் விரைவில் பேரரசியாக புகழின் உச்சத்திற்கு வந்தார். உயர் கலாச்சாரத்தின் வடிவமாக திகழ்ந்த இவர் அரபு மற்றும் பெர்ஷிய மொழியில் புலமை வாய்ந்திருந்தார். கவிதைகளைப் புனைவதிலும் திறமை வாய்ந்த இவர் அரண்மனையின் மதிய வேளைகளை சிறப்பாக்கினார். இந்தியாவில் அதுவரை இல்லாத வகையில் புதுமையாக ஆபரணங்களையும், சில்க் மற்றும் காட்டன் உடைகளுக்கு அலங்காரங்கள் வடிவமைத்தார். இன்றைக்கும் இருக்கும் ரோஜா வாசம் கொண்ட அத்தர் என்னும் நறுமணம் இவர் கண்டுபிடித்தது தான். நூர்ஜஹானின் உருவ அமைப்பும் அவரின் பேரரசி தோற்றத்திற்கு கம்பீரமாக இருந்தது. கணவருடன் வேட்டைக்குச் சென்று புலிகளை வேட்டை ஆடியிருக்கிறார். ஒரு சமயம் இவர் திறமை கண்டு ஜஹாங்கீர் வியந்து வைரங்கள் பதிக்கப்பட்ட இரண்டு கை வளயங்களை பரிசளித்தார். மேலும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆயிரம் தங்க வில்லைகளையும் அளித்தார். தனது அதிபுத்திசாலி தனத்தால் எந்த சிக்கலும், ஆபத்துகளும் விளையாவண்ணம் பார்த்துக் கொண்டார். போரின் போது யானையின் மீது அமர்ந்து அம்புகளை எதிரியின் மீது எரிவதைப் பார்த்து இராணுவ அதிகாரிகளும், திறமையான போர் வீரர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
     

மொகலாய வரலாறு 18

ஜஹாங்கீரின் அரசியல் அதிகாரத்திற்கு பின் பலமாக நூஜஹான் திகழ்ந்தார். இவரின் உடன் புரிந்து கொள்ளும் ஆற்றலும், நுண்ணறிவும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஜஹாங்கீருக்கு பக்கபலமாக விளங்கினார். மந்திரிகளும், அறிவாளிகளும் இவரின் ஆலோசனைகளை ஏற்றார்கள். நிர்வாகத்தின் எந்த விஷயமும் இவரின் கவனத்திலிருந்து தப்பாது. அதே நேரத்தில் எல்லாமே நல்லதாக செய்தார் என்று கொள்ள முடியாது. தன் சொந்த குடும்பத்தினரின் நன்மையையே கருதினார். அவர்களை நல்ல பதவிகளில் அமர்த்தி தன்னைச் சுற்றி அவர்களையே வைத்துக் கொண்டார். ஷேர் ஆப்கான் மூலம் தனக்குப் பிறந்த மகளை ஷஹ்ர்யாருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மேலும் தான் அதிகாரம் பெற ஷஹ்ர்யாரை ஆட்சிக்கு கொண்டுவர முயற்ச்சித்தார். ஜஹாங்கீருக்குப் பிறகு இளவரசர் குர்ரம் தான் ஆட்சிக்கு வருவார் என்று தெரிந்தும் தன் மருமகனை பதவிக்கு கொண்டுவர முயற்சி செய்தார். இதனால் அரண்மனையும், அந்தப்புரமும் அரசியலின் மத்திய களமானது. மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்த இளவரசர் குஸ்ருவை இடைவிடாத சதி செய்து கணவரிடமிருந்து தூரமாக்கினார். மேவாரின் வெற்றிக்குப் பிறகு ஷா குர்ரம் என்றும், டெக்கானின் வெற்றிக்குப் பிறகு ஷாஜஹான் என்றும் ஜஹாங்கீரால் புகழப்பட்ட குர்ரமின் புகழைக் குறைக்க பெரும் முயற்சி செய்தார். இளவரசர் குஸ்ருவின் மரணம், கந்தாரின் இழப்பு மற்றும் குர்ரம், மஹபத் கானின் புரட்சி ஆகியவற்றை தனக்கு சாதகமாக திட்டமிட்டார். அதேநேரத்தில் அநாதைப் பெண்களுக்கும், ஏழைப் பெண்களுக்கும் ஆதரவளித்தார். தனது சொந்த வருவாயிலிருந்து பலருக்கு உதவி செய்து நற்பெயரைப் பெற்றிருந்தார். கலப்படமில்லாத அன்பை கணவர் மீது வைத்திருந்தார். ஜஹாங்கீரின் போதை பழக்கங்களைக் குறைத்தார். அரசின் அநாவசியமான செலவுகளையும் தடை செய்தார். 
ஷாஜஹான் தந்தை நூர்ஜஹான் மீது வைத்திருந்த அன்பை அளவிட முடியாமல் இருந்தார். தன் ஆட்சியை காத்துக் கொள்ள புரட்சியில் இறங்கினார். பெரும் படையுடன் ஆக்ராவை நோக்கி முன்னேறிய ஷாஜஹான் தந்தையின் படையுடன் பலோச்பூர் என்ற இடத்தில் மோதினார். இதில் ஷாஜஹான் தொல்வி அடைய, மொகலாய தளபதி ஷாஜஹான் போகுமிடமெல்லாம் விரட்டி வந்து அசீர் என்ற இடத்தை எதிர்ப்பின்றி கைப்பற்றினார். ஆதரவாளர்கள் அனைவரும் ஷாஜஹானைக் கைவிட மலிக் அம்பரிடம் ஆதரவை வேண்டினார். அவர் மறுத்துவிட, கோல்கொண்டாவின் ஆட்சியாளரிடம் சென்றார். அவரும் மறுத்துவிட பெங்காலுக்கு வந்தார்.  பெங்காலின் ஆதரவுடன் அலஹாபாதில் மொகலாயப் படைகளுடன் மோதினார். மீண்டும் தோல்வியைத் தழுவ தப்பி ஓடி, ரோஹ்டாஸ் கோட்டையில் சில காலம் ஓய்வெடுத்தார். மீண்டும் டெக்கான் திரும்பி மொகலாயர்களின் பழைய எதிரியாக இருந்த மலிக் அம்பரிடமே வந்தார். இம்முறை மலிக் அம்பர் அரவணைக்க, புர்ஹான்பூர் மீது தாக்குதல் நடத்தினார். மீண்டும் மொகலாய படைகளிடம் தோல்வியுற்றார். ஷாஜஹானின் அதிகாரிகளும், வீரர்களும் இவரை விட்டு மொகலாயப் படைகளுடன் சேர்ந்து கொண்டனர். மீண்டும் ரோஹ்டாஸ் கோட்டையில் தஞ்சமடைந்த ஷாஜஹானால் பெரும் மொகலாய படைகளை சமாளிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் தான் இதுவரை புரிந்த எதிர்ப்புகளுக்காக மன்னிக்க வேண்டி கடிதம் எழுதினார். அதேநேரத்தில் மொகலாய அரசில் அதிவேகமாக வளர்ந்து வரும் மஹபத்கான் மற்றும் இன்னொரு இளவரசர் பர்வேசின்வளர்ச்சியை விரும்பாத நூர்ஜஹான், கணவர் ஜஹாங்கீரிடம் ஷாஜஹானை மன்னித்துவிட ஆலோசனை சொல்கிறார். ஷாஜஹான் தன் வசமிருந்த ரோஹ்டாஸ் கோட்டை மற்றும் அசீர் பகுதிகளை தந்தையிடம் ஒப்படைத்தார். மேலும் உத்தரவாதமாக பத்து வயதுள்ள தாரா மற்றும் எட்டு வயதுள்ள ஒளரங்கஸேப் ஆகிய தனது மகன்களையும் ஜஹாங்கீரின் அரண்மனைக்கு அனுப்பினார். ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளையும் பேரரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனது மனைவி மற்றும் இன்னொரு மகன் முராதுடன் நாசிக் சென்றார். 
ஷாஜஹானின் இந்த சமாதானம் நூர்ஜஹானிடம் சற்று அமைதியை ஏற்படுத்தியது. இளவரசர் குஸ்ருவின் மரணம், ஷாஜஹானின் அமைதியைப் பயன்படுத்தி அவ்வப்போது புரட்சியில் ஈடுபடும் மஹபத்கானின் பக்கம் நூர்ஜஹான் கவனம் செலுத்தினார். அடுத்து தன் மருமகனுக்கு ஆட்சியைப் பிடிப்பதில் எதிராக இருப்பது இளவரசர் பர்வேஸ் மட்டுமே என்பதையும் கவனம் கொண்டார். நூர்ஜஹானின் திட்டப்படி, இராணுவ தலைமையில் இருந்து மஹபத் கானை ராஜினாமா செய்துவிட்டு பெங்காலின் நிர்வாகத்தைக் கவனிக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்த பர்வேஸ் பின் அடங்கிப் போனார். மஹபத்கான் உத்தரவை ஏற்காவிட்டால் ஊழல் செய்ததாக விசாரிக்கப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டு, இதுவரை அவர் வசம் இருந்த முக்கிய துறைகளின் கணக்குகளை ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டார். மேலும் அரசின் ஆலோசனை இன்றி தன் மகளுக்கு க்வாஜாஹ் உமர் நக் ஷ்பந்தியின் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்தது பற்றியும் விசாரிக்கப்பட்டார். மஹபத்கானின் மருமகனாக வர இருப்பவரையும் விசாரணை என்ற பேரில் தொந்திரவு செய்யப்பட்டார். மேற்கூறிய மொத்த புகாருக்கும் அரண்மனைக்கு வந்து விளக்கம் கூற உத்தரவிடப்பட்டார்.
ராஜாங்கத்தின் இந்த அணுகுமுறையால் பெரிதும் அவமானம் கொண்ட மஹபத்கான், ஜஹாங்கீர் தன் குடும்பத்துடன் ஐந்தாயிரம் ராஜபுத்திர வீரர்களுடன் ஜீலம் நதியைக் கடக்க இருந்த போது சென்று சிறை பிடிக்கச் சென்றார். நூர்ஜஹான் தன் மருமகனுடன் தப்பித்துக் கொண்டார். மொகலாய தளபதி ஃபிதாய்கான் எதிர் தாக்குதல் நடத்தி ஜஹாங்கீரைக் காப்பாற்ற முயன்று தோல்வி கண்டார். நூர்ஜஹான் ஆற்றைக் கடந்து யானை மீது அமர்ந்து மொகலாய வீரர்களுக்கு உத்தரவிட முயன்றார். ஆனால் அதிகாரிகள் ஓடிவிட்டனர். அசஃப்கான் தன் மூவாயிரம் வீரர்களுடன் ஓடி அட்டாக் கோட்டையில் ஒளிந்து கொண்டார். நூர்ஜஹான் ஒரு திட்டத்தை மனதில் கொண்டு மன்னருடன் சேர்ந்து கொண்டார். மிச்சமிருந்த வீரர்களின் உதவியுடன் மஹபத்கானை எதிர்கொண்டு, அவரின் செல்வங்களைக் கைப்பற்றினார். தப்பி மேவார் ஓடிய மஹபத்கான் பின் டெக்கான் சென்று ஷாஜஹானுடன் சேர்ந்து கொண்டார்.
1626 ல் இளவரசர் பர்வேஸும், 1627 ல் காஷ்மீரிலிருந்து திரும்பும் போது ஜஹாங்கீரும் மரணமடைந்தார்கள். இப்போது பட்டத்துக்கு உரியவரான ஷாஜஹான் ஷஹ்ர்யாரை எதிர்க்க முழுவீச்சில் தயாரானார். பேரரசர் ஜஹாங்கீரின் உடல் லாகூரில் ஷஹ்தாரா என்ற இடத்தில் உள்ள நூர்ஜஹானின் தில்குஷா தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது டெக்கானிலிருந்த ஷாஜஹானுக்கு தந்தை இறந்த செய்தியை மாமனார் அசஃப் கான் தான் தெரியப்படுத்தினார். லாகூரில் ஜஹாங்கீரின் அடக்கப் பணியிலிருந்த நூர்ஜஹானும், ஷஹ்ர்யாரும் எல்லாம் முடிந்த பிறகு, ஷஹ்ர்யார் மொகலாய மன்னராக அறிவித்து அரசு பெட்டகத்தைக் கைப்பற்றிக் கொண்டார். தன் மருமகன் ஆட்சிக்கு வரவேண்டியவர் என்று நம்பிய அசஃப்கான், ஷாஜஹான் வரும் வரை இறந்து போன குஸ்ருவின் மகன் தாவர் பக் ஷை தற்காலிக மன்னராக ஆக்ராவில் அறிவித்தார். நூர்ஜஹான், தனது சகோதரன் அசஃப்கானுக்கு தன் புறம் சாதகமாக இருக்க வேண்டுகோள் விடுத்தார். அசஃப்கான் பலத்த இராணுவத்துடன் லாகூரிலிருந்த ஷஹ்ர்யாருடன் மோதி, அவரை வென்று சிறையிலடைத்து கண்களைப் பிடுங்கினார். இதற்கிடையில் டெக்கானிலிருந்து திரும்பிய ஷாஜஹான் 1628 பிப்ரவரியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். காலமெல்லாம் ஷாஜஹானுக்கு எதிராகவே இருந்து சதி செய்த நூர்ஜஹான் மன்னிக்கப்பட்டு கௌரவமாக நடத்தப்பட்டார். ஷாஜஹான் அவருக்கு ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் ஓய்வூதியமாக வழங்கினார். தனது ஆடம்பரங்களை எல்லாம் துறந்த நூர்ஜஹான் தனது விதவை மகளுடன் (ஷஹ்ர்யாரின் மனைவி) லாகூரில் வாழ்ந்தார். 1645 டிசம்பரில் இறந்த நூர்ஜஹானின் உடல் லாகூரில் கணவர் ஜஹாங்கீருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜஹாங்கீரின் ஆட்சியின் போது தான் மூன்று ஐரோப்பிய நாட்டினர் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள் மற்றும் இங்கிலாந்தினர் வருகை தந்தனர். அவர்கள் மொகலாயர்களுடன் நல்லுறவைப் பேணினர். ஜஹாங்கீரும் போர்ச்சுகீசியர்களுடன் சுமுகமான உறவை வைத்திருந்தார். ஆக்ராவிலும் லாகூரிலும் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டி சுதந்திரமாக வழிபடும், விரும்பியவர்கள் கிறிஸ்தவ மதம் மாறவும் அனுமதித்தார். தானும் ஏசு மற்றும் கன்னி மாதா உருவப்படங்களை வைத்திருந்தும், கிறிஸ்தவ மடங்களுக்கு பொருளுதவியும் செய்தார். போர்ச்சுகீசியர்களும் ஜஹாங்கீருக்கு மேற்கத்திய ஆயுதங்களை வரவழைத்து தந்தார்கள். 1613 ல் போர்ச்சுகீசியர்கள் மொகலாயர்களின் நான்கு கப்பல்களை சிறைப்பிடித்து கொள்ளையடித்தார்கள். இதன் எதிர் விளைவாக தாமன் பகுதியில் சர்ச்கள் மூடப்பட்டு அவர்களின் கிறிஸ்தவ கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதன் முழு விளைவுக்கும் போர்ச்சுகீசியர்களே காரணம்.
அப்போது பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் வாணிகம் செய்ய ஆவல் கொண்டன. 1600 ல் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்டது. 1600 லிருந்து 1608 வரை ஆங்கிலேயர்கள் மூன்று குழுக்களை ஜஹாங்கீரிடம் அனுப்பி வாணிபத்திற்கு பேச்ஸ்ர் வார்த்தை நடத்தினார்கள். அவைகள் தோல்வியில் முடிந்தது. காரணம் ஆங்கிலேயர்களின் வரவை போர்ச்சுகீசியர்கள் போட்டியாகக் கருதினார்கள். 1608 ல் வில்லியம் ஹாக்கின்ஸ் என்ற கடற்தளபதி, இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மொகலாயர்களுக்கு எழுதிய கடிதத்துடன் ஆக்ரா வந்தார். சூரத் நகரத்தில் ஒரு தொழிற்சாலைக் கட்டி தொழில் செய்ய உத்தரவு வேண்டினார். வில்லியம் ஹாக்கின்ஸை பேரரசர் நன்றாக வரவேற்று ஒரு மன்சாப் தகுதியும், 30,000 ஊதியமும் கொடுத்து கௌரவித்தார். ஆங்கிலேயர்களின் தொழிற்சாலைக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உடனே போர்ச்சுகீசியர்களின் வற்புறுத்தலால் மறுக்கப்பட்டது. ஹாக்கின்ஸ் போன பிறகு, வில்லியம் எட்வர்ட் என்ற ஆங்கிலேயர் அதே கோரிக்கையுடன் வந்தார். அவருக்கும் அனுமதியளிக்கப்பட்டு, உடனே மறுக்கப்பட்டது. ஹாக்கின்ஸ் மற்றும் எட்வர்டுக்குப் பிறகு, இங்கிலாந்தின் தூதர் சர். தாமஸ் ரோய் இந்தியாவிற்கு வருகை தந்தார். வந்தவர் தூதுவர் ஆனதால் சிறப்பான முறையில் அரசியல் ரீதியான அணுகுமுறையாலும், வாணிபக் கண்ணோட்டத்திலும் பேச்சு வார்த்தை நடத்தினார். நூர்ஜஹான், அசஃப்கான், ஷஹ்ர்யார் மற்றும் ஷாஜஹானுக்கு மதிப்பான பரிசுகளைக் கொடுத்தார். இறுதியில் சூரத்தில் ஆங்கிலேயர்கள் தொழிற்சாலை கட்டிக் கொள்ள ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார். ஆங்கிலேய கப்பல்களும் சுதந்திரமாக துறைமுகம் வர அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் வரவை விரும்பாத போர்ச்சுகீசியர்கள் அவர்களின் கப்பல்களை தாக்கினார்கள். ஆங்கிலேயர்களின் வருகை இந்தியாவில் ஒரு புதிய உறவை ஏற்படுத்தியதின் விளைவாக நினைவு கல்வெட்டை பதித்தார்கள்.