ஞாயிறு, 12 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 30


கூ.செ.செய்யது முஹமது
முஹம்மது ஷாவுக்குப் பிறகு, முந்தைய பேரரசர் ஜஹந்தர் ஷாவின் இரண்டாவது மகன் அஸீஸுத்தீன் இரண்டாம் ஆலம்கீர் ஆட்சிக்கு வந்தார். இமாத் உல் முல்க் என்பவர் இடையிலிருந்த அஹ்மத் ஷா பஹதூரை விலக்கி விட்டு இரண்டாம் ஆலம்கீரைக் கொண்டு வந்தார். தனது முன்னோர் ஔரங்கஸேபின் வழிமுறையை இவர் தொடர்ந்ததால் இந்த பெயர் இவருக்குண்டானது. ஔரங்கஸேப் இறந்த போது இவருக்கு ஏழு வயது. பாட்டனார் முதலாம் பஹதூர் ஷா இறந்த ஆட்சிக்காக நடந்த போரில் இவரின் தந்தை மாஸுத்தீன் தோற்கடிக்கப்பட்டு அடுத்த பேரரசர் ஃபரூக் ஷியரால் சிறை வைக்கப்பட்டார். அப்போது வைஸ்ராயராக இருந்த இமாத் உல் முல்க் பிற்காலத்தில் தனக்கு கட்டுப்பட்டு இருப்பார் என்று இவரைப் பாதுகாத்தார். பின் 1699 ல் முல்தான் பகுதியில் பிறந்த இவருக்கு சையித் பேகம், ஸீனத் மஹல், ஃபயஸ் பக்த் பேகம், அஸீஸாபதி மஹல், லதீஃபா பேகம், ஸீனத் அஃப்ரஸ் பேகம் மற்றும் ஔரங்காபாதி பேகம் என்று ஏழு மனைவிகளும், மிர்சா அப்துல்லா அலி கௌஹர், இரண்டாம் ஷா ஆலம், மிர்சா முஹம்மது அலி அஸ்கர் பஹதூர், மிர்சா முஹம்மது, ஹாரூன் ஹிதாயத், பக் ஷ் பஹதூர், மிர்சா தலி முராத் ஷா பஹதூர், மிர்சா ஜமியத் ஷா பஹதூர், மிர்சா முஹம்மது ஹிம்மத் ஷா பஹதூர், மிர்சா அஹ்சனுத்தீன் முஹம்மது பஹதூர், மிர்சா முபாரக் ஷா பஹதூர் என்று பதினோரு மகன்களும், ஸுஹ்ரா பேகம் உட்பட பனிரெண்டு மகள்களும் இருந்தனர்.
ஆட்சிப் போட்டியால் பல ஆண்டுகள் சிறையிலிருந்த இவர் ஐம்பத்தி ஐந்து வயதில் தான் ஆட்சிக்கு வந்தார். மிகவும் பலவீனமான இவர் நிர்வாகத் திறமை, இராணுவ திறமை கொஞ்சமும் இல்லாதவர். முழு அதிகாரமும் காஸியுத்தீன் இமாத் உல் முல்கிடமே இருந்தது. 1756 ல் அஹ்மத் ஷா அப்தலி டெல்லியை ஆக்கிரமித்து மதுராவில் கொள்ளையடித்தார். இமாத் உல் முல்கின் அரவணைப்பில் மராட்டியர்கள் வட இந்தியா முழுவதிலும் பலம் பெற்றிருந்தார்கள். ஏற்கனவே பலவீனமாக இருந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தை மராட்டியர்கள் மேலும் சரித்தனர். இமாத் உல் முல்க் அரச வருமானம் முழுவதையும் தான் எடுத்துக் கொண்டார். நாட்டு வளர்ச்சியில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இரண்டாம் ஆலம்கீரின் மூத்த மகன் அலி கௌஹரை கொடுமைப்படுத்தினார். மராட்டிய தலைவன் பாலாஜி ராவ் அவ்வப்போது கொள்ளையடித்துக் கொண்டிருந்த மொகலாயர்களைச் சார்ந்திருந்த கர்னூல், கடப்பாஹ், சவானூர் நவாப்களை ஒருங்கிணைத்தார். அஹ்மத் ஷா துர்ரானியிடம் நட்புறவு வைத்திருந்தார். மராத்தியர்களுக்கு ஆதரவளிக்கும் இமாத் உல் முல்கை வெளியேற்ற திட்டமிட்டனர். ஆலம்கீரின் மகள் ஸுஹ்ரா பேகமை, துர்ரானியின் மகன் திமூர் ஷா துர்ரானிக்கு மணமுடித்துக் கொடுத்தார். அஹ்மத் ஷா துர்ரானியும் மேலும் மொகலாய உறவு வலுப்பட முன்னாள் பேரரசர் முஹம்மது ஷாவின் மகள் ஹஸ்ரத் பேகத்தை மணந்து கொண்டார். இவரது ஆட்சியில் நஜீபாபாத் என்ற இடத்தில் நஜீபத் தௌலா என்பவரால் பத்தர்கர் (கல் கோட்டை) கோட்டை கட்டப்பட்டது. 
 ஆண்டுக்கு 50 லட்சம் கப்பம் கட்டி வந்த பெங்காலின் நவாப் அலிவர்தி கான் இறந்து போக, அடுத்து அங்கு சிராஜுல் தௌலாவை இரண்டாம் ஆலம்கீர் ஆதரவளித்தார். ஆனால் உள்நாட்டுப் பிரச்சினையால் அவருக்கு அங்கு ஆதரவில்லை. இதனால் சிராஜ் உத் தௌலா ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தமான கல்கத்தாவை பேரரசரின் அனுமதியின்றி பெங்காலுடன் இணைக்க முற்பட்டார். இதனால் ஆங்கிலேயர்களுடன் சிராஜ் உத் தௌலாவுக்கு புகழ் பெற்ற ‘ப்ளாசி போர்” உண்டானது. அதில் தப்பித்த சிராஜ் உத் தௌலாவை துரோகி மீர் ஜாஃபர் கொன்றான். இரண்டாம் ஆலம்கீர், மீர் ஜாஃபரை பெங்காலின் நவாபாக அங்கீகரிக்க மறுக்கவே அவன் இமாத் உல் முல்க்கை நாடினான். இரண்டாம் ஆலம்கீர் ஃப்ரான்சுக்கு கடிதம் எழுதி தளபதி டி புஸ்ஸியுடன் 1000 வீரர்களையும் அனுப்பும் படியும், அதற்கான அனைத்து செலவுகளையும் தான் ஏற்பதாக வேண்டினார். டெக்கானில் சலபத் கானும், ஹைதர் அலியும், ஃப்ரென்ச் தளபதி டி புஸ்ஸி மற்றும் லல்லியுடன் மராட்டியர்களை அப்பகுதியில் எதிர்த்தார்கள். அவர்கள் தான் புதிய போர் முறையாக கண்களுக்குத் தெரியாத பூமியில் புதைக்கப்படும் ‘கண்ணி வெடியை’ அறிமுகப்படுத்தினார்கள். இது மமதையிலிருந்த மராட்டியர்களை திக்குமுக்காடச் செய்தது. இதனால் இரண்டாம் ஆலம்கீரிடம் அவர்கள் புகழடைந்தார்கள். 1758 ல் போபாலில் மொகலாய நவாபாக இருந்த ஃபயாஸ் முஹம்மது கானை அவரது மாற்றாந்தாய் மமோலா பாய் மராட்டியர்களின் உதவியுடன் ரைசன் கோட்டையில் தாக்கினார். ஆலம்கீர் மேலும் படைகளை ஃபயாஸ் முஹம்மது கானுக்கு அனுப்பி ‘பஹதூர்’ என்ற பட்டமும் கொடுத்தார். மமோலா பாய் வசமிருந்த கோட்டையை ஃபயாஸ் முஹம்மது கான் மீண்டும் கைப்பற்றினார். ஆலம்கீரின் கொலைக்குப் பிறகு, மராட்டிய சதாஷிவ்ராவ் பாவ் என்பவனால் போபால் மிரட்டப்பட்டு மூன்றாம் பானிபட் போருக்கு வழி வகுத்தது. இரண்டாம் ஆலம்கீர் ரகசியமாக மூத்த மகன் இளவரசர் அலி கௌஹரை மொகலாய மன்னராக அறிவிக்க இருந்தார். இது தெரியவர பேரரசர் இரண்டாம் ஆலம்கீருக்கும், இமாத் உல் முல்குக்கும் பிரச்சினை வெடிக்க, இமாத் உல் முல்க் மராட்டிய தலைவன் சதாஷிவ்ராவ் பாவ் என்பவருடன் சேர்ந்து இரண்டாம் ஆலம்கீரை கொலை செய்தனர். ஆலம்கீரை சந்திக்க வயதான இஸ்லாமிய பெரியவர் ஒருவர் வந்திருப்பதாகக் கூற, அவர் கோட்லா ஃபதே ஷாவில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய பெரியவர் வேடத்தில் வந்தவன் ஆலம்கீர் சுதாரிப்பதற்குள் சரமாரியாக குத்திக் கொன்றான்.  அரண்மனையிலிருந்த அனைத்து ராஜகுடும்பத்தினரையும் கொலை செய்தார்கள். அருகிலிருந்த ஆலம்கீரின் மகன் டெல்லியை விட்டு தப்பி ஓடினார். அடுத்து மூன்றாம் ஷாஜஹான் என்பவரை ஒப்புக்காக ஆட்சியில் அமர்த்தினார்கள். சதாஷிவ்ராவ் பாவ் லஞ்சம் கொடுத்தோ, மிரட்டியோ இமாத் உல் முல்கை நீக்கி விட்டு விஷ்வஸ்ராவ் என்பவனை டெல்லியில் ஆட்சியில் அமர வைக்க தனி திட்டம் வைத்திருந்தான்.
இரண்டாம் ஆலம்கீர் குழந்தைப் பருவத்திலிருந்தே இஸ்லாத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தார். எந்த ஒரு தொழுகையும் தவறாமல் கடை பிடிப்பார். அரசு மசூதியான முத்து மசூதியில் (PEARL MASJID) தானே பயான் என்னும் இஸ்லாம் பற்றிய நல்லுரைகளை வழங்குவார். ஒரு பேரரசர் என்னும் எண்ணமில்லாமல், பாதுகாப்பும் இல்லாமல் டெல்லி சாலை களில் நடந்து செல்வார். வழியில் தென்படும் மசூதியில் மக்களுடன் சேர்ந்து தொழுவார். பேச்சிலும், பண்பிலும் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டார்.
இமாத் உல் முல்கின் ஆதரவில் சதாஷிவ்ராவ் பாவ் என்ற அந்த ஹிந்து மராட்டிய தீவிரவாத தலைவன் மொகலாய அரண்மனையில் இருந்த விலையுயர்ந்த தங்க, வைர நகைகள், செல்வங்களைக் கொள்ளையடித்தான். டெல்லி, ஆக்ராவிலிருந்த மசூதிகள், புனித சமாதிகள், கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்கினான். புகழ் பெற்ற மோதி மசூதியை இடித்து கண்கவர் பொன்னால் வடிவமைக்கப்பட்டிருந்த அலங்காரங்களைக் கொள்ளையடித்தான். இவைகளைக் கேள்விப்பட்ட அஹ்மது ஷா துர்ரானி பெரும் படையுடன் துரோகி இமாத் உல் முல்க், சதாஷிவ் பாவ் மற்றும் நஜீப் உத் தௌலா ஆகியோரை அழித்து மொகலாயப் பெருமையை நிலைநாட்ட வந்தார். டெல்லியைக் கைப்பற்றி இரண்டாம் ஷா ஆலமை ஆட்சியில் அமர்த்தினார். ஒருபுறம் தெற்கில் ஹைதர் அலியின் மைசூர் இராணுவம் மராட்டியர்களைத் தாக்கியது.  

  சரித்திர பெயராக இரண்டாம் ஷா ஆலம் என்று அறியப்பட்ட அலி கௌர் தந்தை இரண்டாம் ஆலம்கீருக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்தார். இவரது தாயார் நவாப் ஸீனத் மஹல் சாஹிபா ஆவார். 1728 ஜூனில் டெல்லியில் ஷாஜஹானாபாத் என்ற இடத்தில் பிறந்தார். இவர் பொறுப்பேற்ற நேரத்தில் மொகலாய ஆட்சி மிகவும் மோசமான நிலையில் வருவாய் இல்லாமல் இருந்தது. இவருக்கு பியாரி பேகம், தாஜ் மஹல் பேகம், ஜமீலுன்னிசா பேகம், குத்சியா பேகம் முபாரக் மஹல், முராத் பக்த் பேகம் என்று ஐந்து மனைவிகளும், 16 மகன்கள், 2 மகள்களும் இருந்தார்கள். இமாத் உல் முல்கும், மராட்டிய தலைவன் சதாஷிவ்ராவ் பாவ் என்பவனும் இரண்டாம் ஆலம்கீரைக் கொன்றுவிட்டு, மூன்றாம் ஷாஜஹானை பெயருக்கு மொகலாய மன்னராக ஆக்கி தாங்கள் ஆதாயம் பார்த்தார்கள். மொகலாயர்களின் உறவினர் அஹ்மது ஷா துர்ரானி என்பவர் படையெடுத்து அவர்களை விரட்டி, மூன்றாம் ஷாஜஹானை நீக்கி விட்டு முறைப்படி வாரிசான இரண்டாம் ஷா ஆலமை ஆட்சியில் அமர்த்தினார்.
 

மொகலாய வரலாறு 31


கூ.செ.செய்யது முஹமது
   மொகலாய பேரரசின் இறுதிக்கு முந்திய அரசராக இரண்டாம் ஷா ஆலமின் இரண்டாம் மகன் இரண்டாவது அக்பர் ஷா ஆட்சிக்கு வந்தார். வளர்ந்து வரும் பிரிட்டிஷாரின் அதிகாரத்திற்கு இடையில் பெயருக்கு மொகலாய மன்னராக அதிகாரத்திற்கு வந்தார். 1760 ல் முகுந்த்பூரில் பிறந்த இவர் 1781 ல் மூத்த சகோதரர் இறந்த பிறகு ‘வலி அஹ்த் பஹதூர்’ என்று பட்டம் சூட்டப்பட்டார். பைத்தியக்காரன் அரவாணி குலாம் காதிர் டெல்லியைப் பிடித்த போது, இரண்டாம் அக்பர் ஷாவை மற்ற மொகலாய இளவரசர், இளவரசிகளுடன் நடனமாட வைக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டார். தந்தை இரண்டாம் ஷா ஆலம் இருக்கும் போதே இவர் பெயருக்கு பேரரசராக இருந்தார். இவர் டெல்லியைக் கலாச்சாரமிக்கதாக ஆக்கினார். கிழக்கிந்திய கம்பெனியின் லார்ட் ஹேஸ்டிங்க்ஸ் சில முக்கிய தலைவர்கள் மரியாதை நிமித்தம் சந்திக்க மட்டும் அக்பர் ஷாவை அனுமதித்தார். மற்றபடி பொதுமக்களை சந்திப்பதை தடை செய்தார். அவரைப் பொறுத்தவரை மொகலாய மன்னர் வெறும் ஊக்கத் தொகை பெரும் ஒருவர் என்று கருதினார்.
       இவருக்கு இரண்டாம் பஹ்தூர் ஷா, மிர்சா ஜஹாங்கீர் ஷா, மிர்சா ஜஹான் ஷா, மிர்சா பாபர், மிர்சா சலீம் ஷா, மிர்சா நாஸிம் ஷா உட்பட 14 மகன்களும், 8 மகள்களும் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் இவரை ‘வெறும் டெல்லியின் ராஜா’ என்ற அளவில் கையாண்டார். கிழக்கிந்திய கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாக அரசுத்துறைகளிலும், நாணயங்களிலும் பெர்ஷிய மொழியை நீக்கி, ஆங்கிலத்தைப் புகுத்தனர். இறுதியில் பேரரசரின் பெயரையும் நாணயத்திலிருந்து நீக்கினார்கள். பிரிட்டிஷார் ஔதின் நவாபையும், ஹைதராபாத் நவாபையும் ராஜபரம்பரை போல் நடத்தினார்கள். 1783 ல் சிந்த் பகுதியின் நவாபாக இருந்த மீர் ஃபதே அலி கானால் அக்பர் ஷா நன்கு மரியாதை செய்யப்பட்டார். இவர் ராம் மோகன் ராயை பிரிட்டிஷாருக்கு தூதுவராக நியமித்தார். அவர் இங்கிலாந்துக்குப் பயணமாகி மொகலாயர்கள் சார்பாக வாதாடி தோல்வியுற்று திரும்பினார். 1835 ல் கிழக்கிந்திய கம்பெனி இவர் பெயரில் நாணயம் வெளியிடுவதை நிறுத்தியது. இவர் இறந்த பிறகு, மெஹ்ரௌலியில் உள்ள சூஃபி ஞானி குத்புதீன் பக்தியார் காகியின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டார். 
இவருக்குப் பிறகு, பெரிய கலவரம் நடக்க உறவினர் மிர்சா முகல், பஹதூர் ஷா ஸஃபரின் மகன், அக்பர் ஷாவின் மகன் ஆகியோர் பிரிட்டிஷாரின் பிடியில் மாட்டிக் கொள்ளாமல் தப்பியோடினர். இளவரசர் மிர்சா முகல் கலவரத்தில் கொல்லப்பட்டார். கேப்டன் ஹட்சன் என்னும் இராணுவ அதிகாரியால் ராஜகுடும்பத்தினர் காபூல் தர்வாஸா மற்றும் டெல்லியின் சாந்தினி சௌக்கில் கொத்வாலீ என்ற இடத்திலும் வரிசையாக நிற்க வைத்து சுட்டும், தூக்கிலிடப்பட்டும் கொல்லப் பட்டார்கள். மேலும் பல இளவரசர்களும், ராஜகுடும்பத்தினரும் பர்மா மற்றும் பெங்காலுக்கு தப்பியோடி அங்கேயே வாழ்ந்தார்கள். சிலர் அமெரிக்காவின் டெட்ராய்ட் மாகாணத்திலும் இருக்கிறார்கள். முக்கியமான பேரரசர் இரண்டாம் பஹதூர் ஷாவின் குடும்பத்தினர் பர்மாவில் அடைக்கலம் புகுந்தனர். அந்த சந்ததியினர் தான் குடி உரிமைக்காக நூற்றாண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டிருந்த வெள்ளை அட்டை பிடுங்கப்பட்டு இன்று பர்மாவின் ரோஹிங்கியா மாவட்டத்தில் கற்பழிப்பு, கொலை செய்யப்பட்டும், அகதிகளாக நாட்கணக்கில் நடுக்கடலில் அநாதையாக திரியும் 800 ஆண்டுகளாக மாபெரும் மொகலாய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜகுடும்பத்தினர். நிச்சயம் உயிரோடு இல்லை என்று தெரிந்தும் ஓராண்டுக்கும் மேலாக 300 பேர் கொண்ட மலேஷிய விமானத்தைத் பல நாடுகள் கூடி தேடினார்கள். ஆனால், உயிரைப் பிடித்துக் கொண்டு நாட்களில் கடலில் தத்தளித்த இவர்களை யாருமே கண்டுகொள்ளவில்லை இஸ்லாமிய நாடுகள் உள்பட. வலைப்பதிவாளர்களின் அழுத்தத்தினால் தான் இப்போது ஒவ்வொரு நாடாக கொஞ்சம் பேரை அகதிகளாக சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள். 
     73.60 காரட் அளவுள்ள பச்சை நிறம் கொண்ட வைர கிரீடம் புகழ் வாய்ந்த மொகலாய பொக்கிஷமாக இருந்தது. இருபுறமும் குடையப்பட்ட பகுதி மயிலின் கண்கள் போல் இருக்கும். இது 1739 ல் பெர்ஷிய நாதிர் ஷாவால் கொள்ளையடிக்கப்பட்ட இது, ஈரான் செல்லும் வழியில் குர்துக்களுடன் ஏற்பட்ட சண்டையில் தொலைந்து போனது. ஆனால், நீண்ட காலம் கழித்து துருக்கியில் ‘ஷெப்பர்ட்ஸ் ஸ்டோன்’ என்று வெளி உலகத்திற்கு வந்தது. 1866 ல் ஜார்ஜ் ப்ளாக் என்னும் லண்டன் வியாபாரி யால் இஸ்தான்புல்லில் வாங்கப்பட்டது. அவர் லெவி மோசஸ் அவ்ர்ஹான் நிறுவனத்தில் கொடுத்து மறு சீரமைப்பு செய்ய சொல்ல, அதனுள்ளே பொறிக்கப்பட்ட அரபு எழுத்துக்கள் சிதைந்து போயின. உண்மையான எடையான 120 காரட்டிலிருந்து 73.60 காரட்டானது. மீண்டும் இந்தியாவில் பரோடாவைச் சேர்ந்த மல்ஹார் ராவ் என்பவரால் 350,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. 1926 ல் பரோடாவின் ஆட்சியாளர் மூன்றாவது சாயாஜிராவ் கெய்க்வாடால் வாங்கப்பட்ட அந்த கிரீடம், பிளாட்டினம் மற்றும் சிறந்த கைவேலையுடன் புதுப்பொலிவைப் பெற்றது. உலகின் மற்ற சிறந்த வைரங்களில் ஒன்றாக இடம் பெற்று, 1988 மார்சில்  ஃபாதெஹ்சின் ராவ் கெய்க்வாட் வசம் வந்தது. தற்போது அவர் மனைவி வசம் இருக்கிறதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
         கடைசி மொகலாய மன்னரான பஹதூர் ஷா ஸாஃபரின் பேரர் இளவரசர் மிர்சா பிதார் பக்தை  மணந்த சுல்தானா பேகம் என்ற இளவரசி ஒருவர் 1980 ல் கணவர் இறந்த பிறகு, கல்கத்தாவின் சேரிப்பகுதியில் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகிறார். இவரைப்பற்றி ‘டெய்லி மெயில்’ பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அந்த புகைப்படங்களைப் பாருங்கள் 800 ஆண்டு ராஜபரம்பரையை கண்ணில் நீர் வடியும். ஹவுராவில் ஒரு குடிசையை இரண்டு பகுதியாகப் பிரித்து, அடுத்த வீட்டாருடன் சமையல் அறையை பங்கிட்டுக் கொண்டு, பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்து திருமணமாகாத மகள் மது பேகத்துடன் மேலும் ஐந்து மகள்களுடனும், ஒரு மகனுடனும் வாழ்ந்து வருகிறார். 19 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜகுடும்பத்தினருக்கு வழங்கப்படும் தொகையான ரூபாய் 6,000 மாதத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 
     இன்னொருவர் ஸியாவுத்தீன் டுசி என்பவர். இவரும் சன்சல்குடா என்ற பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வாழும் இவர். சொந்தமாக ஒரு இடம் வேண்டி மத்திய அரசை கேட்டுக் கொண்டிருக்கிறார். ராஜ சந்ததியினரின் 70 குடும்பம் கல்கத்தாவின் சேரிப்பகுதியிலும், 200 குடும்பங்கள் ஔரங்காபாதிலும் வாழ்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இன்னொருவர் மொகலாய பாட்டனார் அசதுல்லா ஆலம், மலிக் ஹுசேன், முஹம்மது ரேஸா, முஹம்மது ஹசன் வழியில் முஹம்மது ரேஸா தஸ்த்ஜெர்தி என்று ஒருவர் ஈரானில் வாழ்கிறார். மொகலாய கால கட்டிடங்களான தாஜ்மஹால், செங்கோட்டை, ஆக்ரா கோட்டை, லாகூர் ஷாலிமார் தோட்டம் ஆகியவை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுவரை சொல்லப்பட்ட மொகலாய வரலாறின் தொடரைச் சேராமல் பின்வருபவற்றை தனியான இறுதிப் பகுதியாக பொதுவாக எழுதுகிறேன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் சையத் அஹ்மத் பிரைலவி மற்றும் ஷா இஸ்மாயில் போன்றவர்கள் சீக்கியர்களையும், திப்பு சுல் தான் மற்றும் ஹைதர் அலியும் பிரிட்டிஷார்களையும் தீவிரமாக எதிர்த்தார்கள். ஆனால் அவர்களால் முஸ்லீம் ஆட்சியைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதியில் 1857 ல் மொகலாயர்கள் முற்றிலுமாக பிரிட்டிஷாரிடம் ஆட்சியை இழந்தார்கள்.  ஔரங்கஸேப்பின் ஆட்சியில் உச்சத்திலிருந்த மொகலாய ஆட்சி அடுத்த சில ஆண்டுகளில் வெகுவேகமாக பலமிழந்து கொண்டிருந்தது. இதற்கு ஔரங்கஸேப்பின் சட்டங்களே காரணம் என்று பலர் கூறினாலும், உண்மையில் சரியான ஆட்சியாளர் இல்லாததே காரணம். பின்னால் வந்த ஆட்சியாளர்கள் இராணுவத்தை நிர்வகிப்பதில் அக்கறை காட்டவில்லை. இது பரவலாக உள்ள இந்து, சீக்கிய, மராத்தியர்களுக்கு கலவரங்களை நடத்த சாதகமாக இருந்தது. மொகலாயர்களுக்கு கடற்படை இல்லை. சிறிய கப்பல்களையே கடல் பாதுகாப்புக்கு பயன்படுத்தி வந்தனர். அதே நேரத்தில் வெளிநாட்டு வியாபாரிகள் நவீன கப்பல்களை வைத்திருந்தனர். அது பிரான்சு மற்றும் பிரிட்டிஷ் வியாபாரிகளுக்கு சாதகமாக இருந்தது. மேலும், பெரிய நிலப்பரப்பைக் கொண்ட மொகலாயப் பேரரசை ஔரங்கஸேப் போல் திறமையாக ஆட்சிசெய்ய முடியாமல் பின்னால் வந்தவர்கள் திணறினார்கள். அதனால், டெக்கான், பெங்கால், பீஹார் மற்றும் ஒரிஸா ஆகிய மாகாணங்கள் சுதந்திரப்பிரதேசமாக ஆகின. பிரான்சு மற்றும் பிரிட்டிஷார்களும் தங்கள் பங்குக்கு நிலப்பரப்புகளை கையகப்படுத்த ஆரம்பித்தார்கள். 
பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பிரிவினைவாதம், குரானைப் புரிந்துகொள்ள போதிய அறிவின்மை, வெளிப்படையாக இஸ்லாத்தை நிராகரிக்கும் போக்கு ஆகியவை இஸ்லாமை பலவீனப்படுத்தியது. அப்போதைய ஆட்சியாளர் ஷா வலியுல்லாஹ் சிறந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார். அவரது தந்தை ஷா அப்துல் ரஹீம் மூலம் மதரஸா இ ரஹிமிய்யாஹ்வில் கல்வி பயின்ற பின் உயர்கல்விக்காகவும், புனித பயணத்திற்காகவும் சௌதி அரேபியா சென்றார். அந்த சமயத்தில் இந்தியாவில் முஸ்லீம்கள் ஹனஃபி, சூஃபி, ஷியா, சுன்னி மற்றும் முல்லாக்கள் என்று பலவாராக பிரிந்து இருந்தனர். ஷா வலியுல்லாஹ் மிகுந்த சிரமத்திற்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமை வலிமைப்படுத்தினார். திருக்குரானை எல்லோரும் விளங்கிடும் வண்ணம் பெர்ஷிய மொழியிலும் இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்தார். மதரஸாக்களிலும், கல்விக்கூடங்களிலும் இஸ்லாத்தின் நம்பிக்கை, மதிப்பு வெளிப்படும் வகையில் இஸ்லாமியக் கல்வியைக் கொண்டுவந்தார். அனைவருக்கும் பொதுவான நீதியும், ஏழை பணக்கார வேறுபாட்டையும் விலக்கினார். 1762 ல் ஷா வலியுல்லாஹ் இறந்த பின்னர் அவர் மகன்களும் தந்தை வழியில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டிட பாடுபட்டனர். இவரின் அணுகுமுறை பல இஸ்லாமிய தலைவர்களால் பாராட்டப்பட்டது.  
 பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஹாஜி ஷரீயத்துல்லாஹ் என்பவரால் ஃபைரைஸி அமைப்பு என்று ஒன்று கிழக்கு பெங்காலில் தொடங்கப்பட்டது. இவர் முஸ்லீம்களை இஸ்லாமிய கோட்பாடுகளின் படி வாழும்படி கேட்டுக்கொண்டார். முஹர்ரம் மற்றும் திருமண விசேஷங்களில் பாடுவது, நடனமாடுவதை தடைசெய்தார். இவரது அமைப்பு பெங்காலிய மக்களால் எதிர்க்கப்பட்டது. ஹாஜி ஷரீயத்துல்லாஹ் 1840 ல் மரணமடைந்தார். இவருக்குப்பின் இவர் மகன் தாது மியான் என்ற முஹம்மது மொஹ்சின் மிகவும் புகழடைந்து தந்தையின் அமைப்பை திறமையாக செயல்படுத்தினார். கலீஃபாக்களை நியமித்து நடவடிக்கைகளை கவனித்து வந்தார். நிலப்பிரபுக்களால் முஸ்லீம் மக்களிடம் வரி வசூலித்து தர்காக்களை அலங்கரித்து விழா நடத்தப்படுவதை தடை செய்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுவதாகக் கூறி ஃபரித்பூர் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். 1860 ல் தாது மியான் மரணமடைந்தார். இதன் பிறகு மீர் நசிர் அலி என்பவர் பெங்காலில் முஸ்லீம்களுக்கு ஆதரவாக வந்தார். கிருஷ்ணதேவ ராயரின் ஆதரவால் முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயல்பட்ட இந்து நிலப்பிரபுக்களை எதிர்த்தார். மீர் நசீரால் கிருஷ்ணதேவ ராயரை வெற்றி கொண்டிருக்க முடியும். ஆனால், பிரிட்டிஷார் கிருஷ்ணதேவ ராயருக்கு ஆதரவாக 100 ஆங்கில இராணுவத்தினரையும், 300 சிப்பாய்களையும் கல்கத்தாவுக்கருகில் நார்கல்பரியா என்ற இடத்திற்கு அனுப்பி சண்டையிட்டு மீர் நசீர் அலியைக் கொன்றனர். 
   பிரிட்டிஷார் பெங்காலிலிருந்து சிந்து வரை விரிவடைந்தனர். பஞ்சாபை சீக்கியர்கள் ஆண்டு வந்தனர். இரண்டாம் சீக்கிய போரில் பிரிட்டிஷார் பஞ்சாபை வென்றனர். அத்துடன் ரஞ்சித்சிங்கிடமிருந்து புகழ்பெற்ற கோஹிநூர் வைரத்தைக் கைப்பற்றினார்கள். 1857 மார்சில் பிரிட்டிஷாருக்கு எதிராக சுதந்திரப்போர் நடைபெற்றது. பிரிட்டிஷார் உள்நாட்டு இந்தியர்களை இராணுவத்திற்கு பயன்படுத்தினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களில் மிருகங்களின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால் வீரர்கள் பிரிட்டிஷாரை எதிர்த்தனர். இது நாடு முழுக்க எதிரொலித்தது. பிரிட்டிஷ் இராணுவத்தை டெல்லியின் வெளிப்பகுதி வரை துறத்தி இந்திய வீரர்கள் நகரத்தைக் கைப்பற்றினர். மொகலாயர்களின் கடைசி மன்னர் பஹதூர் ஷா ஜஃபர் என்பவர் விடுதலைப் படைகளுக்கு கட்டாயமாகத் தலைமை தாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார். இந்திய படை வீரர்கள் இவரை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் காக்க வந்தவராகவே கருதினார்கள். பஹதூர் ஷாவை மக்களும் ஆதரித்தார்கள். இவர் நாணயங்களை வெளியிட்டு தன் மகன்களையும் முக்கிய பதவிகளில் அமர்த்தி ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆரம்பத்தில் சுதந்திரப்போர் நல்ல முன்னேற்றத்தைத் தந்தது. இந்தியப்படைகள்  முக்கிய நகரமான ஹரியானா, பீஹார் மற்றும் மத்திய பிரதேசங்களை வென்றது. ஆனால், பிரிட்டிஷாரின் நவீன ஆயுதங்களாலும், ஆயுதங்களுக்கேற்ற போர் தந்திரங்களாலும் பஹதூர் ஷாவின் வீரர்களால் சமாளிக்க முடியாமல் விரைவி லேயே டெல்லியை இழந்தனர். பிரிட்டிஷார் பழிவாங்கும் விதமாக கொடூரமாக அப்பாவி மக்களைக் கொன்றனர். பஹதூர் ஷா தப்பிச்சென்று ஹுமாயூனின் கல்லறையில் மறைந்திருந்தார். அவரையும் சிறைப்பிடித்து அவர் மகன்களைக் கொன்று தலைகளை சிறையிலிருந்த பஹதூர் ஷாவிற்கு அனுப்பினார்கள்.  அதன் பிறகு அடுத்த 50 ஆண்டுகளில் பிரிட்டிஷார் இந்தியாவின் மொத்த நிலப்பரப்புகளையும், இந்தியாவிலிருந்தே துரோகத்தனம் செய்த சிறிய மராத்திய, ராஜபுத்திர, சீக்கிய மன்னர்களின் உதவியால் கைப்பற்றினார்கள். பிரிட்டிஷார் ஆட்சிக்கு வந்த காலம் இந்திய முஸ்லீம்களுக்கு மிகவும் சோதனையாக இருந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஏனென்றால், பிரிட்டிஷாரை இந்தியாவில் மிகவும் தீவிரமாக எதிர்த்தவர்கள் முஸ்லீம் ஆட்சியாளர்கள் தான். பஹதூர் ஷா, ஹைதர் அலி, திப்பு சுல்தான், பக்த் கான், பேகம் ஹஸ்ரத் மஹால், ஃபகீர் ஆஃப் ஐபி இன்னும் சில சிறிய இஸ்லாமிய சுல்தான்களும் இந்தியாவில் பிரிட்டிஷாரை தீவிரமாக எதிர்த்தார்கள். இஸ்லாமில் தனி மனித புகழ்ச்சியும், சிலைகளை வைத்தும், ஆண்டு நினவு விழாக்களை நடத்தியும் இறந்துபோனவர்களை சிறப்பிப்பது இல்லை. அதனால் சுதந்திரத்திற்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் அந்த சரித்திரங்களை சுலபமாக மறைத்து இன்று யாரெல்லாம் சுதந்திரத்தியாகியாக கூறப்படுகிறார்கள் என்று உங்களுக்கே தெரியும்.
  பிரிட்டிஷார் நிர்வாகம் செய்யும் பணிகளுக்கு முஸ்லீம்களை புறக்கணித்தனர். உயர்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முஸ்லீம் விண்ணப்பங்களை ஒதுக்கினர். கல்கத்தாவில் அதிகபட்சமாக முஸ்லீம்களை கூலிகளாகவும், எழுது கோல்களுக்கு மை நிரப்புபவர்களாகவும், கடிதங்களை கொண்டு செல்லும் தூதுவர்களாக மட்டுமே பயன்படுத்தினார்கள். பம்பாயில் மொகலாய ஆட்சியாளர்களால் ஒதுக்கப்பட்டிருந்த 20,000 பண்ணை நிலங்களை முஸ்லீம்களிடமிருந்து பிரிட்டிஷார் பறித்துக் கொண்டனர். முஸ்லீம்களிடமிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு வியாபார ஒப்பந்தங்களை நீக்கம் செய்தனர். முஸ்லீம்களின் பொருளாதாரத்தை அடியோடு அழித்தனர். இன்றுவரை முஸ்லீம்கள் இந்தியாவில் பின் தங்கியவர்களாக இருப்பதற்கு அன்று பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கையே காரணம். ஆங்கிலம் கட்டாய கல்வியாக இருந்ததாலும், அது வேற்றுமொழியாக இருந்த காரணத்தாலும் முஸ்லீம்கள் பெரும்பான்மையோர் கல்வியைப் புறக்கணித்தனர் அதுவும் இன்று பின் தங்கிய நிலைக்கு ஒரு முக்கிய காரணம். மொகலாய ஆட்சி இழந்த சில காலங்களி லேயே இந்திய முஸ்லீம்கள் பொருளாதாரம், கல்வி, பதவி அனைத்தையும் இழந்து மிகவும் பின் தங்கிய நிலையில் ஏழைவர்க்கமாக மாறினார்கள்.
இங்கிருந்து வெளியேறிப்போன ஆங்கிலேயர்களும், உலக அரசியலை உற்று நோக்கும் வல்லுனர்களும் இந்தியா மிகச் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை இழந்து விட்டது. இந்நேரம் அது மொகலாய ஆட்சியில் உலகின் முதல்தர நாடாக ஜொலித்திருக்கும் என்று எழுதுகிறார்கள். மொகலாயர்கள் இங்கேயே வாழ்ந்து இங்கேயே செத்தார்களே தவிர, இங்கிலாந்து, போர்ச்சுகீசியர்கள், ஃப்ரென்சுகள் போல் செல்வத்தைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகவில்லை. இந்திய மக்கள் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு இன்று சொந்த நாட்டினனே ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைத்திருப்பதை அது தன் பணம் என்ற உணர்வு கூட வராமல் பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வல்லரசாகிவிடும் என்று அரசியல்வாதி சொல்லும் பொய்யை நம்பிக் கொண்டிருக்கிறான். அட முட்டாள் இந்தியர்களே இந்தியா எப்போதுமே வல்லரசு நாடுதான். இந்திய அரசியல்வாதிகள் இந்த 67 ஆண்டுகளில் கொள்ளை அடித்து வெளிநாட்டில் சேர்த்து வைத்திருக்கும் 22 கோடி லட்சம் ரூபாய், இந்துக்கோவில்களில் எதற்குமே பயன்படுத்தப் படாமல் சிலைகளில் மாட்டியும், அறைகளில் பூட்டியும் வைக்கப்பட்டிருக்கும் சுமார் 30,000 டன் தங்கம், வெள்ளிகள், உரிமையாளர் யாரென்றே தெரியாத 40 லட்சம் கோடி சொத்து உள்ள ஒரு நாடு எப்படி வல்லரசாக இல்லாமல் இருக்கும்.  உருவப்பட்டுவிட்ட தன் இடுப்புத்துணியையே செய்தியாக படிக்கும் அளவுக்கு உலகமகா மடையன் தான் இந்தியன். இவனுக்கு கோபம், ரோஷம் வந்து பொங்கி எழும்போது ஒன்றும் இருக்காது. கோபத்தைத் தவிர..........ம்..........பெருமூச்சுடன் முடிகிறது.