புதன், 13 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 9



பாகம் :17
இந்த காலகட்டத்தில் ஸலாவுத்தீன் தனக்கெதிரான மூன்று விரோதிகளை சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தார். அவர்கள் ஃப்ராங்க்ஸின் சிலுவைப் போராளிகள், நூருத்தீனின் இளவரசர்கள் மற்றும் இஸ்மாயிலீஸ் பிரிவினர்கள். இவர்கள் மூவரும் கூட்டாக இணைந்து இராக், சிரியா மற்றும் எகிப்தில் இஸ்லாமின் ஒற்றுமையைக் குலைக்க திட்டம் தீட்டினர். ஸலாவுத்தீன் இறைவன் அவருக்களித்த விவேகம், அதிகாரம், திட்டமிடும் தகுதி போன்றவற்றை பயன்படுத்தி அவர்களை வென்றெடுத்தார்.
ஸலாவுத்தீனின் தலைமையின் கீழ் இணைந்த நாடுகள்
நூருத்தீனின் இறப்பிற்குப் பிறகு ஸலாவுத்தீன் மாபெரும் இஸ்லாமிய ஆட்சியை உலகில் தன் கொடிக்கு கீழ் கொண்டு வரும் அனைத்து வாய்ப்பு களையும் பெற்றார். தனது இராணுவ, போர் மற்றும் அரசியல் அநுபவத்தால் அவர் ஒவ்வொரு நாடாக இணைக்க முயற்சித்தார். அவர் காலத்தில் ஏமன் நாட்டில் பல கட்சிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. ஏமன் பல துண்டுகளாக சிதறியது. ஹமதானிக்கள் சனா நகரிலும், நஜாஹிகள் ஸுபைதிலும் ஒருவருக்கொருவர் பதவிக்கு அடித்துக் கொண்டனர். மேலும், இஸ்லாம் கூறும் இறுதிக் கால “அல் மெஹதி” தாம் தான் என்று ஒருவர் கிளம்பி பிரசாரம் செய்தார். இவரால் சமூக ஒற்றுமை சிதைந்து ஏமனில் படுகொலைகளும், அராஜகங்களும் நிறைந்தது. முஸ்லீம்கள் அநியாயமாக கொல்லப்படுவதை எண்ணி வேதனை அடைந்த ஸ்லாவுத்தீன் தன் சகோதரர் துரன்ஷாஹ் என்பவரை அனுப்பி ஏமனின் சச்சரவுகளை நீக்க உத்தரவிட்டார். அந்த காரியத்தில் துரன்ஷாஹ் வெற்றி பெற்று ஏமனை எகிப்து மற்றும் சிரியாவுடன் இணைக்கச் செய்தார்.
துரன்ஷாஹ் தனது இராணுவத்துடன் நைல் நதியின் வழியாக குஸ் நகர் வரை சென்று, பின் தரை மார்க்கமாக செங்கடல் அடைந்து கப்பல் மூலம் ஜித்தா நகர் சென்று அங்கிருந்து ஏமன் அடைந்தார். அவர் ஸுபைத் பகுதியையும் மற்ற கோட்டைகளையும் கைப்பற்றினார். சில சரித்திர ஆசிரியர்கள் அவர் ஏறக்குறைய 80 நகரங்களையும், கோட்டைகளையும் வெற்றி கொண்டார் என கூறுகிறார்கள். ஏமன் மக்கள் சீர்குலைந்து போன நிர்வாகத்தின் கீழ் இருந்தபடியால் துரன்ஷாவின் வருகையை பெரிதும் விரும்பினார்கள். சில அரண்மனை, கோட்டைக் காவலர்கள் இரத்தம் சிந்துவதை தவிர்த்து தாங்களாகவே முன் வந்து சாவிகளை ஒப்படைத்தனர். ஏமன் மக்கள் நாட்டில் நிலையான தன்மையை நாடினர். துரன்ஷா வெற்றிக்குப் பிறகு தோழர்களுடன் கூட்டம் நடத்தி சரியான தலைமைச் செயலகம் ஏற்படுத்த எண்ணி தாஸ் நகரை அதற்காக தேர்ந்தெடுத்தார்.
ஸலாவுத்தீன் துரன்ஷாவையே ஏமனுக்கு ஆட்சியாளராக்கினார். துரன்ஷாவிற்க்குப் பிறகு இன்னொரு சகோதரர் டக்டகின் இப்னு அய்யூப் 593 A.H. ல் அவர் மரணிக்கும் வரை ஏமனின் ஆட்சியாளராக இருந்தார். அய்யூபிட்கள் ஆட்சி ஏமனில் ஏறக்குறைய 80 ஆண்டுகள் (569 A.H. லிருந்து 652 A.H. வரை ) இருந்தன. சகோதரர் ஏமனை வெற்றி கொண்ட அதே ஆண்டு ஸலாவுத்தீன் பர்காஹ், திரிபோலி மற்றும் கிழக்கு துனிஸியாவிலிருந்து கபிஸ் வரை வென்றார்.
பாகம் : 18
579 A.H. ல் இஸ்லாமிய உலகில் இளவரசர்களின் தூதுவர்களால் டமாஸ்கஸ் நகரில் நடத்தப்படும் இஸ்லாமிய மாநாட்டுக்கு ஸலாவுத்தீன் தனது சகோதரர் அல் மாலிக் அல் ஆதிலை கலந்து கொள்ள அழைத்தார். அந்த மாநாட்டில் பிரபலமான ஷெய்க் ஸாதர் அத்தீன், ஷிஹாப் அத்தீன் பஷ்ர், அப்பாஸிய கலீஃபாவின் அரசுப் பிரதிநிதி அந் நாஸர் லிதினில்லாஹி, அல் கதி மொஹி அத்தீன் அஷ் ஷஹ்ரஸுரி, மோஸூலின் தூதுவர் பாஹா அத்தீன் இப்னு ஷத்தாத், அல் ஜஸீராஹ்வின் ஆட்சியாளரின் தூதுவர் மொ இஸ் அத்தீன் ஸின்ஜர் போன்ற மேதைகளும், பெரியவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். ஸலாவுத்தீன் இஸ்லாமிய இளவரசர் களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும், தேவையற்ற ஒப்பந்தங்களையும், குழப்பங்களையும் விலக்கி சகோதரத்துவம் காக்க முயற்சி செய்து பேசினார். அனைத்து தூதுவர்களும் ஸலாவுத்தீனின் கருத்துக்கு ஆதரவளித்தனர். ஆனால் மோஸூலின் தூதுவர் மட்டும் ஸலாவுத்தீனின் கருத்துக்கு பலமான எதிர்ப்பு தெரிவித்தார்.
மோஸூலின் தூதுவர் ஒன்றுபட்ட இஸ்லாமிய உலகுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், ஸலாவுத்தீன் அவர்களுடன் போரிட்டு அவர்களை மாற்றி நேர்வழியில் கொண்டுவர கடமைப்பட்டார். 581 A.H. ல் ஸலாவுத்தீன் மோஸூலை முற்றுகையிட்ட போது, இஸ் அத்தீன் சமாதனமாகி ஹர்ரான் உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டார். இஸ் அத்தீன் ஷஹர் ஸூர், அல் கரபிலி, டஃப்ஜக் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளை ஸலாவுத்தீனிடம் ஒப்படைக்க வேண்டும். மாற்றாக மோஸூலை இஸ் அத்தீனிடம் ஒப்படைக்க வேண்டும். நாணயங்களிலும், வெள்ளிக் கிழமை தொழுகை போதனையில் ஸலாவுத்தீனின் பெயரே தொடரப்படும். மேலும், இஸ் அத்தீன் ஸலாவுத்தீனின் திட்டங்களையே தொடர்வார். இதுவே ஹர்ரான் உடன்படிக்கையின் தீர்மானமாகும். நாட்டில் ஏதோ கலகக்காரர்கள் போல் தனித்தனியாக மோஸூல், சன்ஜார், அல் ஜஸிராஹ், அர்பில், ஹர்ரான், டயர் பக்ர் மற்றும் பல இடங்களில் சிதறிக்கிடந்த இராணுவத்தினரை ஒரே குழுவாக ஆக்கினார்.
ஸலாவுத்தீன் பாக்தாதில் உள்ள அப்பாஸிட் கலீஃபா அல் முஸ்ததிக்கு ஒரு செய்தி அனுப்பினார். ஸலாவுத்தீனின் மந்திரி அல் கதி அல் ஃபத்ல் மூலம் அனுப்பப்பட்ட செய்தியில், ஸலாவுத்தீன் ஜிஹாதின் வழியில் சாதித்தவைகளையும், எதிரிகளை முறியடித்ததையும், எகிப்து, ஏமன், வட ஆப்ரிக்கா நாடுகளை வென்றதையும், வெள்ளிக்கிழமை தொழுகை போதனைகளை அப்பாஸிட் கலீஃபாவின் பெயரில் நிகழ்த்துவதையும் தெரியப்படுத்தினார். மேலும், கலீஃபாவை ஸலாவுத்தீனை எகிப்து, மொரோக்கோ, ஏமன், சிரியா மற்றும் வெற்றி கொண்ட சில பகுதிகளுக்கு ஆட்சியாளராக நியமிக்க வேண்டுமென்றும், அவருக்குப் பிறகு அவரின் சகோதரரையோ, மகனையோ வாரிசாக அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார். கலீஃபா அல் முஸ்ததி ஸலாவுத்தீனின் வேண்டுதல் செய்திக்கு முக்கியத்துவம் அளித்து தனது பிரதிநிதிகளை பரிசுகளுடனும், இராஜ அலங்கார அங்கியை அனுப்பியும் தன் ஒப்புதலை அளித்தார்.
ஸலாவுத்தீன் தன் இஸ்லாமிய ஆட்சியின் கொடியின் கீழ் ரம்லாவிலிருந்து நைல் நதி வரையும், வட ஆப்ரிக்காவிலிருந்து திரிபோலி வரையிலும் எண்ணற்ற ஊர்களையும், நகரங்களையும் ஆண்டார். ஏமன். ஏதென், திரிபோலியின் கடலோர பகுதிகள், துனிஷியாவின் ஒரு பகுதி, கபிஸ் மற்றும் எகிப்து, சிரியா, வட இராக் (குர்திஸ்தான்), மொரோக்கோ, வட ஆப்ரிக்கா பகுதிகளை போரிட்டு வென்றார். தனக்குட்பட்ட நாடுகளில் உள்ள ஊர்களில் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகை போதனைகளை தனது பெயர்களில் நடத்த உத்தரவிட்டார்.
சந்தேகமில்லாமல் ஒன்றினைந்த இஸ்லாமிய தேசம் மாபெரும் நம்பிக்கையுடன் இணைவது நல்ல சகுனமாகவும், தங்கள் குறிக்கோளை முஸ்லீம்கள் அடைவார்கள் என ஸலாவுத்தீனுக்குப் பட்டது. இப்னு சனன் என்ற கவிஞர், ‘முஸ்லிம் உம்மாக்கள் ஆளத் தெரியாத ஆட்சியாளர்களால் அலைக்கழிக்கப்பட்டார்கள். ஸலாவுத்தீனின் மூலம் நன்மையின் பால் வாழ்ந்தார்கள்’ என்று கவிதை எழுதினார். இந்த பலமான ஒருங்கினைப்புக்கு பின் சிலுவைப் போராளிகளைத் தாக்கி இஸ்லாமிய மண்ணை (ஜெருசலத்தை) விட்டு விரட்டியது காலத்தால் மறக்க முடியாத வண்ணம் சரித்திரம் பதிவு செய்து வைத்திருக்கிறது. இஸ்லாமியர்களை தலைமுறை, தலைமுறையாக பெருமையடைய செய்கிறது.
அனைவரும் முஸ்லீம்களின் ஒற்றுமையானது, துன்புறுத்தும் இழிவான சிலுவைப் போராளிகளிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்று இஸ்லாமியம் வீறுநடை போடுவதற்கான ஆரம்பம் என்பதை உணர்ந்தார்கள். ஜெருசலத்தின் வெற்றி என்னும் முதல் நடவடிக்கை அடுத்த வெற்றிகளுக்கான குறிக்கோளுடன் மேலும், பாலஸ்தீனை முழுதுமாக நிர்வகிக்கும் வாய்ப்பு அமையும்.
சூழ்ச்சிகளும், சிலுவைப் போரும்
சிலுவைப் போர் என்பது ஐரோப்பிய நாடுகளால் முஸ்லீம்களிடம் இருந்து ஜெருசலத்தை கைப்பற்ற எடுக்கப்பட்ட மதவெறி கொண்ட  ஒரு இராணுவ நடவடிக்கை. மேலும் இஸ்லாம் உலகில் பரவாமல் இருக்கவும் நடத்தப்பட்ட போர்.
மேலும், சில காரணங்களானது :
·       இஸ்லாம் பரவ ஆரம்பித்தவுடன் கிறிஸ்துவர்கள் வசம் இருந்த ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகளை முஸ்லிம் ஆட்சியாளர்கள் வென்றனர். இதனால் இஸ்லாமை சிலுவைப் போராளிகள் வெறுத்தனர்.
·       முஸ்லிம் செல்ஜுக்குகள் கான்ஸ்டாண்டிநோபிலைச் சுற்றி பரவி விட்டிருந்தனர். இதனால் கான்ஸ்டாண்டிநோபில் கை நழுவி போய் விடுமோ என்று அஞ்சினர். பைஸாந்திய சக்கரவர்த்தி அலெக்ஸியஸ் கம்னினுஸ் கிறிஸ்துவ நாடுகளுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக போரிட வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
·       ஜெருசலத்திற்கு புனித பயணம் வந்த கிறிஸ்துவர்கள் முஸ்லீம்கள் தங்களை புண்படுத்துவதாகவும் ( மாற்று மதத்தினரைப் இழிவு படுத்துவது இஸ்லாத்தில் இறைவனால் தடை செய்யப்பட்டது) தாங்கள் அநீதி இழைக்கப்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் மனம் வெறுத்திருப்பதாகவும் ஐரோப்பா திரும்பி முறையிட்டனர். அதில் மிகவும் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை வளரும் வண்ணம் செய்தவர் பிரான்சின் கிறிஸ்தவ துறவர் ஹெர்மிட்.
·       இதைத் தொடர்ந்து யார் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளவும், ஜெருசலத்தை மீட்டெடுக்கும் ஆவலும், மதவெறி ஆர்வமும் கொண்டுள்ளனரோ அவர்கள் உடனே முஸ்லீம்களுக்கு எதிரான சிலுவைப் போரில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடப்பட்டது. இந்த ஆர்வம் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள், பிஷப்புகள், போப் மூலம் தீவிரமாக வளர்க்கப்பட்டது.
ஷியா பிரிவு ஃபாத்திமிட்கள் மனம் மாறி பைஸாந்தியர்களுக்கு உதவி செய்து செல்ஜுக் முஸ்லீம்களிடமிருந்து எகிப்தை விடுதலை செய்வதாக கூறினர்.
486 A.H. ல் ஜெருசலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரான்சின் கிறிஸ்தவ துறவர் ஹெர்மிட் நாடு திரும்பியவுடன் போப்பை சந்தித்து சிலுவைப் போரைத் துவங்கக் கேட்டுக் கொண்டார். போப் வட இத்தாலியில் பியாசென்ஸா என்ற இடத்தில் ஒரு சபையைக் கூட்டி பேச்சு நடத்தினார். அந்த சபை பிரான்சின் கிளர்மெண்ட் சபைக்கு பரிந்துரை செய்ய அவர்கள் சிலுவைப் போருக்கான ஏற்பாடுகளை கவனித்தார்கள்.

ஸலாவுத்தீன் வரலாறு 8



பாகம் :15
ஸா அத்தீன் கமஷ்தகின் என்பவன் அலிப்போவின் உண்மையான ஆட்சி யாளர் ஷம்ஸ் அத்தீன் இப்னு அத் தயாஹ் மற்றும் அவர் சகோதரர்கள், இளவரசர்களை சிறையில் அடைத்து அலிப்போவை அபகரித்துக் கொண்டு பாதுகாப்புக்கு சிலுவைப் போராளிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டான். ஸலாவுத்தீன் தூதுவர் ஜுர்துக்கை ஸா அத்தீனிடம் அனுப்பி இப்னு அத் தயாஹ்வையும் மற்ற கைதிகளையும் விடுதலை செய்ய சிபாரிசு செய்தார். அவன் பொறுப்பற்றத்தனமாக தூதுவர் ஜுர்துக்கையே கைது செய்து அத் தயாஹ்வுடன் சிறையில் அடைத்தான். அந்த அநீதிக்கு ஸா அத்தீன் பதில் சொல்ல வேண்டிய காலத்திற்காக ஸலாவுத்தீன் காத்திருந்தார். ஸா அத்தீன் மேலும் விடாமல் மிஸ்யஃப் என்னும் பகுதியில் வாழ்ந்த “இஸ்மாலியாஹ்” என்னும் பிரிவினரின் தலைவர் ராஷித் அத்தின் ஸினான் என்பவரிடம் ஒரு தூதுவரை அனுப்பி தனக்கு ஆதரவளித்து உதவுமாறு வேண்டினான்.
(இமாம் அல் கஸ்ஸாலி தனது “ ஃபதா இஹ் அல் பதானியாஹ் அன் மபதி அல் இஸ்லாமியாஹ்” என்னும் கிரந்தத்தில் இஸ்மாயிலியாக்கள் வெளித்தோற்றத்திற்க்கு ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் போல் தோன்றுவார்கள். ஆனால், உள் தோற்றத்தில் அவர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள். பெண்கள் தங்கள் ஹிஜாபுகளை நீக்கிக் கொண்டு விபசாரம் செய்வதை நியாயம் என்று நம்புபவர்கள். மற்ற மதங்களை தடுத்தும், மறைத்தும் வந்தார்கள். தங்கள் நம்பிக்கையை யாராவது மறுத்தால் அவர்களை அவர்கள் மறுத்தார்கள். இஸ்மாயில் ஜாஃபர் அஸ் ஸித்திக்கிடமும் தங்களை மறுத்தார்கள். என்று குறிப்பிட்டுள்ளார் கள்)
ராஷித் அத்தீன் ஒரு குழுவினரை அனுப்பி ஸலாவுத்தீனை கொல்ல உத்தரவிட்டார். ஸலாவுத்தீன் அலிப்போ நகரின் மேற்கில் ஜுஷான் என்னும் விடுமுறை தலத்தில் இருந்த போது அவரின் கூடாரத்திற்குள் ஒருவனை அனுப்பி அவரைக் கொல்ல முயன்றார். ஸலாவுத்தீனின் பாதுகாவலர்கள் சண்டையிட்டு காப்பாற்றினார்கள்.
மீண்டும் 571 A.H. ல் அலிப்போ நகரில் அஸாஸ் என்ற கிராமத்தில் இருந்த போது சில இஸ்மாலிய ஃபிதாயீன்கள் ஸலாவுத்தீன் பாதுகாவலர்கள் போல் உடையணிந்து கூடாரத்துக்குள் நுழைந்து அவரை தலையில் காயப்படுத்தினர். ஏறக்குறைய ஸலாவுத்தீன் மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டார். அவர் அந்த சமயத்தில் இராணுவக்கவசம் அணிந்திருந்ததனால் தலைக் காயத்துடன் தப்பினார். விரைந்து வந்த ஸலாவுத்தீனின் பாதுகாவர்கள் சண்டையில் இணைந்து கொள்ள சில ஃபிதாயீன்கள் கொல்லப்பட சிலர் தப்பிச் சென்றனர்.
ஸலாவுத்தீன் அந்த துரோகிகளை பழி வாங்க துடித்தார். அவர் அலிப்போவிலிருந்து திரும்பியதும், மோஸூலின் மேற்குப்புறத்தில் இருந்த அவர்களின் மிஸ்யஃப் நகரின் கோட்டையைத் தாக்கினார். அவர்களில் பெரும்பான்மையானவர்களை கொன்று, அவர்களின் செல்வங்களைப் பறித்து, வீடுகளை அழித்து, என்றுமே அவர் மீது அச்சம் ஏற்படும் வண்ணம் கடுமையான பாடம் புகட்டினார்.
பாகம் : 16
இதனால் ஏமாற்றமடைந்த ஸா அத்தீன் கமஷ்தகின் சிலுவைப் போராளிகளின் உதவியை நாடினான். அவர்கள் மூன்றாம் ரெய்மண்ட் தலைமையில் ஒரு படையை அனுப்பினர். ஸலாவுத்தீன் அலிப்போ நகருக்கு சுதந்திரம் வழங்கி ஹாம்ஸ் நகர் திரும்பி சிலுவைப் போராளிகளை எதிர்க்க வந்தார். ஸலாவுத்தீன் வருகையை அறிந்த சிலுவைப் போராளிகள் போரிடாமல் ஓடி விட்டனர். பின் ஸலாவுத்தீன் டமாஸ்கஸ் திரும்பி “பா அல்பக்” நகரைக் கைப்பற்றினார். இதனிடையே ஸலாவுத்தீன் நூருத்தீனின் இளவரசர்களாலெயே தன்னைக் கொல்ல திட்டமிட்ட சதிகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. ஸலாவுத்தீன் மேலும், மேலும் சிரியாவின் நகரங்களை வெற்றி கொள்வதை கண்டு மற்ற நகரங்களின் ஆட்சியாளர்கள் மோஸூலின் ஆட்சியாளர் ஸைஃப் அத்தீன் காஸியிடம், அல் மாலிக் அஸ் ஸாலிஹிக்கு உதவி செய்து ஸலாவுத்தீனை தடுக்கு மாறு கூறினர். அவர் போர் வீரர்கள், ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் என பெரும் படையை தயார் படுத்தினார். ஸைஃப் அத்தீன் காஸி பெரும் படையுடன் ஸலாவுத்தீனை நோக்கி வந்தார்.  ஸலாவுத்தீன் போரைத் தவிர்க்க அவரிடம், அவரை சிரியாவின் துணை ஆட்சியாளராக்குவதாகவும் அல் மாலிக்கிடம் இருந்து சிரியாவைப் பார்த்துக் கொள்ளவும் கூறினார். மேலும் தங்களிடையே உண்டாகும் போர் நிறைய உயிர் சேதங்களை விளைவித்தும், ஃப்ராங்க்ஸுக்கு ஆதாயமாகவும் ஆகிவிடும் என்று கூறினார். ஆனால், ஸா அத்தீன், ஸலாவுத்தீனை வெற்றி பெற்ற நகரங்களைத் தங்களிடம்  ஒப்படைத்து விட்டு அவரை வந்த வழியே எகிப்து திரும்பிச் செல்லுமாறு கூறினார். போர் புரிவதைத் தவிர ஸலாவுத்தீனுக்கு வேறு வழியில்லாமல் போனது. அவர் போருக்கு தயாராகி ஹாமாஹ் என்னுமிடத்தில் 570 A.H. ல் ஒரு போர்வீரன் காயம்பட்ட மற்ற போர்வீரனுக்கு உதவக்கூட முடியாத வண்ணம் மிகக் கடுமையாக அவர்களுடன் போரிட்டு வென்றார். ஸா அத்தீன் காஸியின் எஞ்சிய படைகள் தப்பித்து அலிப்போ நகருக்கு ஓடியது. ஸலாவுத்தீன் அவர்களைத் தொடர்ந்து வேட்டை ஆடிய வண்ணம் அலிப்போவில் அவர்களைச் சுற்றி வளைத்து அவர்களின் உடமைகளைக் கைப்பற்றினார். விடாமல் மோஸூல் வரை சென்று சுல்தான் மலைப் பகுதியில் எஞ்சியவர்களை வளைத்தார். அதன் பிறகு, வரிசையாக சிரியாவின் நகரங்கள், கோட்டைகளான பஸாஹ், மன்பஜ், அஸாஸ் ஆகியவைகளைக் கைப்பற்றினார்.
அவர் திரும்பி அலிப்போ வந்த போது, நூருத்தீனின் இளைய மகளும், அல் மாலிக் அஸ் ஸாலிஹின் சகோதரி அவரை சந்திக்க வந்தாள். அவளை நல்ல முறையில் மரியாதையாக வரவேற்று விலையுயர்ந்த பரிசுகளை அளித்தார். அந்த இளவரசி தங்களுக்கு அஸாஸ் நகரை திரும்ப தருமாறு வேண்ட உடனே அதை திருப்பி அவர்களுக்கே அளித்து, அவர்களின் தந்தை நூருத்தீனின் பேரில் தான் கொண்ட நன்றி விசுவாசத்தின் காரணமாக அலிப்போ நகரின் எல்லை வரை வந்து இளவரசியை வழியனுப்பினார்,
தடைகள் நீங்கி சமாதானம் ஏற்பட்ட பின், உண்டான உடன்படிக்கைக்கு அல் மாலிக் அஸ் ஸாலிஹ் உடன்பட்டார். ஸலாவுத்தீனால் வெற்றி கொள்ளப்பட்ட இடங்களின் ஆட்சி உரிமை அவருக்கென்றும். அதாவது, டமாஸ்கஸ், ஹாம்ஸ், ஹமாஹ், அல் ம அர்ராஹ் நகரங்கள் மற்றும் சில சிறிய நகரங்கள், கோட்டை களின் ஆட்சி உரிமை ஸலாவுத்தீனுக்கும், அலிப்போ நகரமும் அதைச் சுற்றி உள்ள நகரங்களின் ஆட்சி உரிமை அல் மாலிக் அஸ் ஸாலிஹுக்கு என்றும் முடிவானது.
இந்த மாற்றங்களுக்குப் பிறகு, 576 A.H. ல் ஸலாவுத்தீன் தனது விடுபட்ட அரசு பணிகளை கவனிக்க எகிப்து திரும்பி வந்தார். எகிப்து வந்த அதே வேகத்தில், தனது 19 வயதில் அல் மாலிக் அஸ் ஸாலிஹ் மரணமடைந்த செய்தியும், அவரின் கட்டளைப் படி அவரின் நெருங்கிய உறவினரும், மோஸூலின் ஆளுநருமான இஸ் அத்தின் மஸ் வூத் ஆட்சிப் பொறுப்பேற்றார் என்ற செய்தியும் கிடைத்தது.
இஸ் அத்தீன் மஸ் வூத் தனக்கு அலிப்போவின் ஆட்சி உரிமை கிட்டி இருப்பது அறிந்து உடனே மோஸூலை விட்டு அலிப்போ விரைந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சன்ஜார் நகரின் ஆட்சியாளராக இருந்த அவரின் சகோதரர் இமாத் அத்தீன், இஸ் அத்தீன் மஸ் வூதிடம் தனக்கு அலிப்போ ஆட்சியைத் தந்து விட்டு அவரை சன்ஜாரின் ஆட்சியை எடுத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார். அதன் படி 578 A.H. முஹர்ரம் 13 ல் இமாத் அத்தீன் அலிப்போவின் ஆட்சியாளரானார். இவரின் ஆட்சியை அலிப்போ மக்கள் விரும்பவில்லை. 570 A.H. ல் இமாத் அத்தீனை அடக்கி ஸலாவுத்தீன் அலிப்போவைக் கைப்பற்றிய போது அம் மக்கள் பெரு மகிழ்ச்சியுடன் ஸலாவுத்தீனை வரவேற்றனர். கவிஞர்களும் நேர்மையாளர்களும் அவரைப் பாராட்டினர். அதில் டமாஸ்கஸின் உச்ச நீதிபதி மொஹி அத்தீன் இப்னு அஸ் ஸகியின் கவிதை மிகவும் புகழ் பெற்றது. ஏனென்றால், அவர் சபர் மாதத்தில் அலிப்போவை வென்ற நீங்கள் ரஜப் மாதத்தில் ஜெருசலத்தை வெல்ல வேண்டும் என புகழ் பாடி இருந்தார். ஆம் நான்கு வருடங்களுக்குப் பிறகு சரித்திரத்தில் ரஜப் மாதம் அது நடந்தது. மேலும், யூஸுஃப் அல் பரா இ, அபு தை அந் நஜ்ஜார் ஆகியவர்களும் கவிதை எழுதியிருந்தனர்.

ஸலாவுத்தீன் வரலாறு 7



பாகம் : 13
ஸலாவுத்தீன் தனக்கெதிரான ஒவ்வொரு தடைகளையும் கவன மாக நீக்கினார். மிக குறுகிய இடைவெளியில் கிழக்கு பகுதியில் முஸ்லீம்களின் சிறந்த தலைவராக விளங்கினார். தலையாய விதி அவரை தேர்ந்தெடுத்து அவ்வப்போது சிலுவைப் போராளிகளிட மிருந்து முஸ்லீம்களை காப்பாற்றச் செய்தது.
நூருத்தீனுக்கு பிறகு சிரியா
“ அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான் அவன் அவர்களை நேசிப்பான். அவனை அவர்களும் நேசிப்பார்கள். அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள். இது அல்லாஹ்வின் அருட் கொடையாகும்.” (அல் மாயிதா 5:54)
நூருத்தீன் இறப்பிற்குப் பிறகு, பரம்பரை வாரிசாக அவர் மகன் அல் மாலிக் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் பதவிக்கு வந்தார். வெறும் 11 வயதே ஆனவரானதால் அவருக்கு ஆதரவு இல்லை. ஷம்ஸ் அத்தீன் இப்னு அல் முகத்திம் என்பவர் அவருக்கு காப்பாளராகவும், நிர்வாகஸ்தராகவும் இருந்தார். சிரியாவின் இளவரசர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டும், அவதூறு கூறியும், மற்றவரை பலவீனப் படுத்தியும், வீழ்த்துவதிலும் குறியாய் இருந்தனர். சிறு வயது அல் மாலிக் நாட்டின் நடப்பு தெரியாமல் இருந்தார். மற்ற இளவரசர்கள் ஆட்சியை ஆக்கிரமித்து கொண்டு அவரை கைப் பொம்மையாக வைத்திருந்தனர். மோஸூலின் ஆட்சியாளராக இருந்த அல் மாலிக்கின் உறவினன் ஸைஃப் அத்தீன் என்பவன் நூருத்தீனின் நகரான அல் ஜஸீராஹ்வை (டிக்ரிஸ் மற்றும் யூப்ரடிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி) கைப்பற்றி மற்ற இளவர சர்களை ஆள்வதற்கு அனுமதி அளித்தார். சில இளவரசர்கள் சிலுவைப் போராளிகளின் உதவியை நாடி அடுத்தவரை வீழ்த்த திட்டம் தீட்டினர். அரசு நிர்வாகத்தில் பிரிவுகளும், குழப்பங்களும் தோன்றி நாட்டை பலவீனப் படுத்தின. விதி ஸலாவுத்தீனை சிரியாவில் தலையிடச் செய்து வெட்கக்கேடான செயல்களில் இருந்தும், வெறுக்கத்தக்க பிரிவினைகளில் இருந்தும் நாட்டைக் காக்கச் செய்தது.
டமாஸ்கஸில் ஸலாவுத்தீன்
ஸலாவுத்தீன் சிரியாவின் ஒழுங்கின்மையையும், தடைகளையும் நன்கு அறிவார். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். தவறான நேரத்தில் தான் தலையிடுவதால் சிரியா மக்களின் கோபத்திற்கும், எதிர்ப்புக்கும் ஆளாக நேருமோ என்று அஞ்சினார். நூருத்தீனிடம் காட்டிய அதே நேசத்தை சிறியவர் மகன் அல் மாலிக்கிடமும் காட்டினார். நூருத்தீனுக்குப் பிறகு, வெள்ளிக் கிழமை தொழுகை போதனைகளை அவர் பெயரில் துவங்கியும், அவர் பெயரில் நாணயங்கள் வெளியிட்டும் அவர் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பது போல் காட்டிக் கொண்டார்.
டமாஸ்கஸ் மக்கள் ஸைஃப் அத்தீன் அல் ஜஸீராஹ்வை கைப்பற்றிக் கொண்டதும், சிறுவர் அல் மாலிக்கின் பாதுகாவலர் ஷம்ஸ் அத்தீன் கள்ளத்தனமாக ஜெருசலத்தின் சிலுவைப் போராளிகளுடன் உறவு வைத்திருப்பதும், நூருத்தீனின் மற்ற இளவரசர்கள் ஆட்சியில் தலையிட்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதையும் நன்கு அறிந்திருந்தனர். வேறு வழி யோசிக்காமல் அம் மக்கள் ஸலாவுத்தீனுக்கு செய்தி அனுப்பி தங்கள் நாட்டைக் கைப்பற்றி  குழப்பங்களுக்கு முடிவு கட்டி, தீயவர்களின் கைகளிலிருந்து விடுவித்து அவரையே ஆளும்படி வேண்டினர். தனது வலிமையின் வாயிலாக செய்ய வேண்டியதை அவர் நினைத்தபடி சிரிய மக்களின் வேண்டுதல் வாயிலாக செய்ய வேண்டிய நேரம் வந்தது. அவரின் பொறுமைக்கு முற்றுப் புள்ளி விழுந்தது.
பாகம் : 14
சிரிய மக்களே கை நீட்டி தன்னிடம் உதவி கோருவதை கண்டு ஸலாவுத்தீன் பெரு மகிழ்ச்சி அடைந்தார். சிரிய மக்களே சரியான தீர்ப்பு தந்தபின் அவர் அல்லாஹ்வின் நம்பிக்கையுடனும், தன் படைபல உதவியுடனும், தன்னம்பிக்கையுடனும் ஃப்ராங்க்ஸுக்கு சிறிதும் பயப்படாமல் டமாஸ்கஸ் புறப்பட்டார். முதலில் அவர் பஸ்ரா நகருக்கு பயணித்தார். அதன் இளவரசர் நல்ல முறையில் ஸலாவுத்தீனை வரவேற்றார். பின் ரபி அல் அவால் 570 A.H. ல் (1174 C.E. ) டமாஸ்கஸ் வந்தடைந்தார். அங்கு கோட்டை சரணடையும் வரை அவர் தன் தந்தையின் பழைய முந்நாள் வீட்டில் தங்கினார். பின் அரசுக் கருவூலங்களைக் கைப்பற்றினார். சுயநலத்திற் காகவோ, தவறான ஆடம்பர வழிமுறைக்காகவோ அவர் அப்படிச் செய்யவில்லை. இன்றைய முஸ்லீம் ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு விளக்கு சுழளும் ஆடம்பர வாகனத்தில் பயணித்துக் கொண்டும், மேலும் எண்ணிலடங்கா பல விலை மதிப்பில்லா ஆடம்பர வாகனங்களை பெருமைக்காக அரண்மனையில் அடுக்கி நிற்க வைத்து விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் போலில்லாமல், அவரின் அன்றாட வாழ்க்கை சாதாரண குடி மக்களின் வாழ்வு போலவே இருந்தது.
அரசுப் பணத்தை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கேற்ப வறுமையை போக்குவதற்கும், நோய்களைத் தடுப்பதற்க்கும், இல்லை என்று வருபவர்களுக்கும் தாராளமாக வழங்கினார். ஸலாவுத்தீன் டமாஸ்கஸ் வந்ததை மக்கள் டமாஸ்கஸ் நகரில் பெரும் திரளாக கூடி ஊர்வலமாக்கி தங்கள் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினர். ஒரு நாள் இவர் ஜெருசலத்தை மீட்டி, நாட்டை ஒன்று படுத்தி உலகில் இஸ்லாமிய ஒளியை பரவச் செய்வார் என்று நம்பினர். கவிஞர்கள் ஸலாவுத்தீனை ஜிஹாத் வழியில் போராடி வெற்றி கொள்ள வந்த வீரர் என கவிதைகள் புனைந்தனர். இன்றும் அரபு நாட்டு நூலகங் களில் இவர் மீது வாஜிஷ் அல் அஸாதி, நஷூ அத் தௌலாஹ் அபுல் ஃபத்ல், ஸா அதாஹ் இப்னு அப்துல்லாஹ் ஆகிய கவிஞர்கள் இயற்றிய பாடல்கள் இருக்கின்றன. ஸாலாவுத்தீன் டமாஸ்கஸ் நீதித்துறையில் இருந்து மக்களுக்கு நியாமும், அவர்களின் உரிமைகளையும் கிடைக்கச் செய்து முன் ஆட்சியாளர்கள் விதித்த அநியாய வரிகளை நீக்கினார். டமாஸ்கஸில் ஆட்சியை நிலைப்படுத்திய பின், அலிப்போ நகரின் நடுநிலையாளருக்கு, ‘நான் இந்த நாட்டுக்கு வருகை தந்தது அல் மாலிக் அஸ் ஸாலிஹிக்கு எனது ஆதரவை தெரிவிக்கவும். இஸ்லாமிய கோட்பாடுகளை ஒருமைப் படுத்துவதற்க்கும், எதிரிகளைத் தடுத்து, மக்களை நேர்வழிப்படுத்தவும், அல் மாலிக்குக்கு ஆட்சி முறையை கற்றுக்கொடுக்கவே அன்றி வேறு காரணமில்லை’ என்று கூறினார்.
ஹாம்ஸ், ஹமாஹ் மற்றும் அலிப்போ
டமாஸ்கஸை அடக்கி சிறிது நாள் அங்கு தங்கி அதன் அரசு காரியங்களை சரிப்படுத்தினார். பின் தனது சகோதரர் ஸைஃப் அத்தீன் டக்டகின் என்பவரை அதன் ஆட்சியாளராக்கி விட்டு ஹாம்ஸ் என்னும் நகரை நோக்கிச் சென்றார். அதை வெற்றி கொண்டு தன் தளபதிகளை கோட்டையை முற்றுகை இடச்செய்து ஹாம்ஸ் நகரை பாதுகாப்பாக்கி விட்டு ஹமாஹ் நகரம் நோக்கி நகர்ந்தார். ஸலாவுத்தீன் எகிப்தில் மூன்றாம் முறை போர் செய்யும் போது தளபதிக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்ஸத் தின் ஜுர்திக் என்பவன் ஹமாஹின் ஆட்சியாளராக இருந்தான். அவன் இப்போது ஸலாவுத்தீனுக்கு அடி பணியாமல் முரண்டு பிடித்தான். ஸலாவுத்தீன் அவனிடம், தான் ஃப்ராங்க்ஸிடமிருந்து ஹமாஹை பாதுகாக்கவும், மோஸூலின் ஆட்சியாளர் ஸைஃப் அத்தீன் பிடியில் இருந்து அல் ஜஸீராஹ் நகரைக் கைப்பற்றவே வந்திருப்பதாகவும், தான் என்றுமே இளவரசர் அல் மாலிக் அஸ் ஸாலிஹ் இஸ்மாயில் அவர்களை ஆதரிக்கிறேன் என கூற அதை ஒப்புக் கொண்டு இஸ்ஸத் தின் ஜுர்திக் ஸலாவுத்தீனிடம் சரணடைந்தான். மேலும், ஸலாவுத்தீனுக்கும் அலிப்போ நகரின் ஆட்சியாளர் ஸா அத்தீன் கமஷ்தகினுக்கும் இடையே தூதுவராக சேவை செய்வதாகவும் கூறினான்.