சனி, 11 ஜூலை, 2015

குறிப்பு

வளைகுடா (கல்ஃப்) நாடுகள் எனப்படும் ஐக்கிய அரபு அமீரகம், கதார், குவைத், சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற நாடுகளில் பணியிலுள்ள நமது எண்ணற்ற தமிழ் ஆட்கள் அந்நாடுகளின் வரலாற்றை வெளியிடும் படி பலமுறை மெயிலில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த இஸ்லாமிய ஆட்சி வரலாற்றிலேயே அப்பகுதிகளும் வருகிறது. இவைகளை பெர்ஷிய தீபகற்பத்தின் பகுதிகள் என்று குறிக்கின்றன. இருந்தாலும் விரைவில்  மேற்சொன்ன (கல்ஃப்) வளைகுடா நாடுகளின் வரலாறை இன்ஷா அல்லாஹ்  தனியாகத் திரட்டித் தர முயற்சிக்கிறேன்.
தங்கள் அன்பு  கூ.செ. செய்யது முஹமது

மொகலாய வரலாறு 28


கூ. செ. செய்யது முஹமது
ஔரங்கஸேபின் மறைவிற்குப் பிறகு, மனைவி நவாப் பாய் மூலம் பிறந்த மகன் குத்ப் உத் தின் முஹம்மது முஃஅஸ்ஸிம் என்ற முதலாம் பஹதூர் ஷா ஆட்சிக்கு வந்தார். ஐந்தாண்டுகள் ஆண்ட இவர் தந்தையால் ஷா ஆலம் என்றும் அழைக்கப்பட்டார். துருக்கிய மொழியில் பஹதூர் என்றால், தைரியமானவர் என்று பொருள். பஹதூர் ஷா என்ற பெயரிலேயே    1707 ல் அறுபத்தி மூன்று வயதில் பொறுப்பேற்றார். இவருக்கு நூருன்னிசா பேகம், மெஹருன்னிசா பேகம், அமத் உல் ஹபீப் பேகம், பேகம் நிசாம் பாய் மற்றும் பேகம் அம்ரிதா பாய் என்று ஆறு மனைவிகள். ஜஹந்தர் ஷா, அஸீமுஷ் ஷான், ரஃபீ உஷ் ஷான், குஜிஸ்தா அக்தர் ஜஹான் ஷா, புலந்தர் ஷா உட்பட எட்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். 1643 அக்டோபரில் பிறந்த இவர் டெக்கானின் கவர்னராக இருந்தார். பூனாவின் மீது படையெடுத்த போது தோல்வியுற்று எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். 
1670 ல் தந்தைக்கு எதிராக புரட்சியில் இடுபட்டு தன்னை மொகலாய மன்னராக அறிவித்துக் கொண்டார். ஔரங்கஸேப், தாயாரான நவாப் பாயை அனுப்பி பஹதூர் ஷாவிடம் பேசி அமைதி பெற வைத்தார். மீண்டும் 1680 ல் ஔரங்கஸேப் அவருக்கு பிடித்தமான ராஜபுத்திர தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்த போது புரட்சி செய்தார். ஔரங்கஸேப் அதேபோல் தாயாரை அனுப்பி அடக்கி வைத்தார். 1681 ல் ஔரங்கஸேபுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட சகோதரர் சுல்தான் முஹம்மது அக்பரை அடக்கவும், 1683 ல் கொங்கன் பகுதியில் முற்றுகை இடவும் அனுப்பப்பட்ட பஹாதூர் ஷா வேண்டுமென்றே இரண்டிலும் தோல்வியுற்றதாகக் கருதப்பட்டது. 1687 ல் ஔரங்கஸேப் இவரை கோல்கொண்டா மீது படையெடுக்கச் சொன்னார். பஹதூர் ஷாவுக்கும், மன்னர் அபுல் ஹசனுக்கும் இடையே இருந்த ரகசியத் தொடர்பை ஔரங்கஸேபின் ஒற்றன் ஒருவன் அறிந்து வந்து சொல்ல, டெல்லியை விட்டு வெகுதொலைவில் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அவரின் பணியாட்களும் நீக்கப்பட்டனர். பஹதூர் ஷாவின் ராஜதுரோகம் ஔரங்கஸேபை பெரும் கோபம் கொள்ள வைத்தது. ஆறு மாதங்களுக்கு நகம் மற்றும் தலைமுடி வெட்டிக் கொள்ளவும், நல்ல உணவும், குளிர்ந்த நீரும் கொடுக்கக் கூடாது என்றும், தன் அனுமதியின்றி யாரும் சந்திக்கக் கூடாது என்றும் கடும் உத்தரவு பிறப்பித்தார். 1694 ல் அவரை ஔரங்கஸேப் வீட்டுக்காவலிலிருந்து விடுவித்து, ஒற்றர்களை வைத்து கண்காணித்தார். பஹதூர் ஷாவின் மகன்களை டெக்கானை விட்டு வட பகுதியில் சில இடங்களில் மாற்றி தான் இறக்கும் வரை அவர்களை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்தார். 
1695 ல் பஞ்சாப் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னபோதும் மறுத்து விட்டார். அதே ஆண்டு லாகூருக்கு மாற்றப்படும் வரை, அக்பராபாதில் கவர்னராக நியமிக்கப்பட்டார். காபூலின் சுபேதார் அமின் கான் இறந்த பிறகு 1696 லிருந்து ஔரங்கஸேப் மரணமடைந்த 17007  வரை அங்கேயே கவர்னராக இருந்தார். இறக்கும் தருவாயில் அடுத்த மன்னர் யாரென்று ஔரங்கஸேப் குறிப்பிடவில்லை. பஹதூர் ஷாவின் மாற்று சகோதரர் கள் கம் பக் ஷ் டெக்கானிலும், முஹம்மது ஆஸம் ஷா குஜராத்திலும் கவர்னர்களாக இருந்தனர். கம் பக் ஷ் தன் பெயரில் நாணயம் வெளியிட்டுக் கொண்டார். ஆசம் தன்னை மன்னராக அறிவித்துக் கொள்ள ஆக்ரா விரைந்தார். பஹதூர் ஷாவால் ஜஜாவ் போரில் தோற்கடிக்கப்பட்டார். அவரும் அவர் மகன் அலி தாபரும் போரில் கொல்லப்பட்டனர். கம் பக் ஷையும் டெக்கானில் கவர்னராக தொடரும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் மறுக்கவே ஒரு போரில் கொலை செய்யப்பட்டார். 1707 ஜூனில் 63 வயதில் முதலாம் பஹதூர் ஷாவாக ஆட்சிக்கு வந்தார்.
ஔரங்கஸேப், தாரா ஷிகோவின் பதவிச் சண்டையின் போது, ஜோத்பூர் ராத்தோர்களின் மன்னன் அஜீத் சிங் தாராவை ஆதரித்தார். இதனால் ஔரங்கஸேப் ஒரு போரின் போது அவரைக் கொன்றார். அவரது மகன் இளைய அஜீத் சிங்கை மன்னித்து டெக்கானில் கவர்னராக இருக்க வைத்தார். ஔரங்கஸேப் இறந்த பிறகு, இளைய அஜீத் சிங் மீண்டும் ஜோத்பூரை மொகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார். உதைபூரின் மன்னர் இரண்டாம் அமர் சிங் சகோதரர் பக்த் சிங் மூலம் நூறு தங்க நாணயங்களையும், இரண்டு குதிரை, யானையையும் பஹதூர் ஷாவுக்கு பரிசாக அனுப்பினார். இப்போது பஹதூர் ஷா ஜோத்பூரையும், ஏற்கனவே மொகலாயர்கள் இழந்திருந்த ராஜபுத்திர நகரங்களையும் வெல்ல படையெடுத்தார். பதவியேற்ற அதேவருடம் நவம்பரில் அம்பர் நோக்கி செல்லும் வழியில் ஃபதேபூர் சிக்ரியில் சலீம் சிஷ்டி கல்லறைக்கு விஜயம் செய்தார். மிஹ்ரப் கானை அனுப்பி ஜோத்பூரைக் கைப்பற்றினார். 
1708 ஜனவரியில் பஹதூர் ஷா அம்பரை அடைந்த போது, அங்கு சகோதரர்கள் ஜெய் சிங்கும், பிஜாய் சிங்கும் பதவிக்கு அடித்துக் கொண்டிருந்தார்கள். பஹதூர் ஷா ஜெய்சிங்கின் சொத்துக்களை பறிமுதல் செய்து அம்பரை ‘இஸ்லாமாபாத்’ என்று பெயரிட்டு மொகலாய பிரதேசத்தில் இணைத்துக் கொண்டார். பிஜாய் சிங்கை பெயருக்கு இஸ்லாமாபாதின் மன்னராக ஆக்கி மிர்சா ராஜா என்று பெயரிட்டு, லட்ச ரூபாய் வரை பரிசளித்தார். போர் செய்யாமலே அம்பர் மொகலாயர்கள் வசம் வந்தது. பின்னர் ஜோத்பூர் சென்ற பஹதூர் ஷா, கான் ஸமானின் உதவியுடன் அதையும் போரின்று வென்றார். 1707 மார்சில் நாடெங்கும் ஔரங்கஸேப் இறந்த செய்தி பரவி இருந்தது. மாற்று சகோதரர் முஹம்மது கம் பக் ஷ் பிஜப்பூர் சென்ற போது அப்போதைய அதன் மன்னர் சய்யித் நியாஸ் கான் எதிர்ப்பின்றி சரணடைய கம் பக் ஷ் ‘பாதுஷா கம் பக் ஷ் இ தின்பனா’ என்று பெயரிட்டுக் கொண்டு மன்னரானார். அங்கிருந்து குல்பர்கா, வகின்கேராவை வெல்ல கிளம்பினார். பிஜப்பூரில் தகர்ரப் கான் மேலும் சிலரின் கூட்டுடன் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பெரிய மசூதிக்கு வரும் கம் பக் ஷைக் கொல்லத் திட்டமிட்டார். கம் பக் ஷ் அவரை விருந்துக்கு அழைத்து கொன்றார்.
1708 டிசம்பரில் பஹதூர் ஷாவை எதிர்க்க, கம் பக் ஷ் பெரும் படையுடன் ஹைதராபாதுக்கு அருகில் வந்தான். பஹதூர் ஷா கான் ஸமானை தளபதி ஆக்கி இருந்தார். ராஜஜோதிடர் நிச்சயமாக கம் பக் ஷ் வெல்வார் என்று கணித்துச் சொல்லி இருந்தார். ஆனால் மொகலாய தளபதிகளால் கம் பக் ஷ் கொல்லப்பட்டார். பஹதூர் ஷா குத்பாக்களில் அலி (ரலி) அவர்களின் பெயரை வசியாக முன்மொழியச் செய்தார். இது பெரும் பிரச்சினையாக வெடித்து பாதுஷா மசூதியின் தலைவரை பஹதூர் ஷா கைது செய்தார். அடுத்த வெள்ளிக்கிழமை தொழுகை அலி (ரலி) யின் பெயர் கூறப்படவில்லை. பஹதூர் ஷாவின் காலத்தில் வெளியிடப் பட்டிருந்த நாணயங்கள் மிகவும் எடை கொண்டதாக இருந்தது.
1712 ல் பஹதூர் ஷா லாகூரில் ஷாலிமார் தோட்டத்தை புணரமைத்துக் கொண்டிருந்த போது மரணமடைந்தார். அடுத்த மன்னர் யாரென்று அறிவிக்கப்படாததால் மனைவி மெஹ்ருன்னிசாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. மெஹ்ரௌலியில் சூஃபி ஞானி குத்புதீன் பக்தியார் காய் என்பவரின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்குப் பிறகு, மகன் ஜஹந்தர் ஷா ஆட்சிக்கு வந்தார். 

மொகலாய வரலாறு 29


கூ.செ.செய்யது முஹமது
பஹதூர் ஷாவின் நான்காவது மகன் குஜிஸ்தா அக்தரின் மகன் நசீருத்தீன் முஹம்மது ஷா என்றும், அபு அல் ஃபதா நசீருத்தீன் ரோஷன் அக்தர் முஹம்மது ஷா என்றும் அழைக்கப்பட்ட முஹம்மது ஷா ஆட்சிக்கு வந்தார். இவரின் தாயார் குத்சியா பேகம் ஆவார். 1702 ல் பிறந்த இவருக்கு சாஹிப் மஹல், சஃபியா சுல்தான் பேகம் மற்றும் குத்சியா பேகம் என்று மூன்று மனைவிகளும், ஷஹ்ரியார் ஷா பஹதூர், அஹ்மத் ஷா பஹதூர், தாஜ் முஹம்மது, அன்வர் அலி என்று நான்கு மகன்களும், பாதுஷா பேகம், ஜஹான் அஃப்ருஸ் பேகம், ஹஸ்ரத் பேகம் சாஹிபா உஸ் ஸமானி என்று நான்கு மகள்களும் இருந்தார்கள்.
முஹம்மது ஷாவும் சையத் சகோதரர்களின் உதவியுடன் தான் ஆட்சிக்கு வந்தார். பிறகு, முதலாம் அசஃப் ஜாவின் உதவியுடன் அவர்களின் பிடியிலிருந்து விலகிக் கொண்டார். சையத் சகோதரர்களில் சையத் ஹுசைன் அலி கான் 1720 ல் ஃபதேபூர் சிக்ரியில் கொல்லப்பட்டார். இன்னொருவர் ஹசன் அலி கான் பர்ஹா 1722 ல் கடும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சையத் சகோதரர்களின் முடிவுக்குப் பிறகுதான் டெக்கானில் மொகலாயர்களின் நேரடி ஆட்சி அமைந்தது. முஹம்மது ஷா கலைகளை மிகவும் விரும்பினார். இசை, ஓவியம், கலாச்சாரம், நிர்வாகத் திறமை என்று பன்முகம் கொண்டவராக இருந்தார். தானும் ‘சதா ரங்கீலா’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் படைத்தார். ஏற்கனவே அழிவை நோக்கி சென்று கொண்டிருந்த மொகலாய ஆட்சி இவரின் கீழ் மேலும் சரிவைக் கண்டது. பெர்ஷியாவிலிருந்து நாதர் ஷா தலைநகரில் புகுந்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார். மறுபுறம் பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பு.
காஸ்னா (ஆஃப்கானிஸ்தான்) என்ற இடத்தில் பிறந்த இவர், பாட்டனார் பஹதூர் ஷா இறந்த பிறகு, ஆட்சியைப் பிடிக்க ஜஹந்தர் ஷா, சகோதர ரான முஹம்மது ஷாவின் தந்தை குஜிஸ்தா அக்தரைக் கொன்றார். முஹம்மது ஷாவையும், தாயாரையும் கொல்லாமல் சிறையிலடைத்தார். அவரின் தாயார் நல்ல முறயில் கல்வி கற்க வைத்து முஹம்மது ஷாவின் திறமைகளை வளர்த்தார். ஃபரூக் ஷியார் இறந்த பிறகு, எத்தனையோ இளவரசர்கள் ஆட்சிக்கு விருப்பப்பட்டாலும் சையத் சகோதரர்கள் பதினேழு வயதில் அழகும், கம்பீரமும் நிறைந்த முஹம்மது ஷாவையே ஆட்சிக்கு தேர்ந்தெடுத்தார்கள். ஆரம்பத்தில் முதலாம் அசஃப் ஜா மற்றும் அவரின் கூட்டாளிகள் கமருத்தீன் கான், ஸைனுத்தீன் அஹ்மத் கான் ஆகியோரின் எண்ணங்களை முறியடிக்க அவசர அவசரமாக இளவரசர் முஹம்மது இப்ராஹீமை சில நாட்கள் மொகலாய மன்னராக ஆக்கினார் கள். பின்னர் தான் அவரை நீக்கி விட்டு முஹம்மது ஷாவை ஆட்சியில் அமர்த்தினார்கள்.
முஹம்மது ஷா 1721 ல் ஃபரூக் ஷியாரின் மகளையே திருமணம் செய்து கொண்டார். சையத் சகோதரர்களை அழிக்க தனக்கு உதவி புரிந்த முதலாம் அசஃப் ஜாவையே 1722 ல் தலைமை மொகலாய வைஸ்ராயராக நியமித்தார். அவர் முஹம்மது ஷாவுக்கு, அக்பரைப் போல் எச்சரிக்கை யும், ஔரங்கஸேபைப் போல் வீரத்துடனும் இருக்க வேண்டுமென்று அறிவுரைக் கூறினார். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு முப்பாட்டனார் ஹுமாயுனுக்கு பெர்ஷியாவின் முதலாம் ஷா தஹ்மஸ்ப் உதவியதாக வும், அதைக் கருத்தில் கொண்டு தற்போது இரண்டாம் தஹ்மஸ்புக்கு உதவுமாறும் கூறினார். இடையில் அசஃப் ஜாவின் நிர்வாகத்தில் முஹம்மது ஷாவுக்கு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அசஃப் ஜா வைஸ்ராய் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் 1725 ல் ஹைதராபாதை நிஜாமாக நிறுவினார். தொடர்ந்து நடந்த மொகலாய, மராட்டியப் போர்களின் விளைவாக மொகலாயர்களின் நிர்வாக சீர்கேட்டால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதனால் நாடெங்கும் பல புரட்சிகள் நடந்தன. பெங்களூரின் மொகலாய சுபேதாராக இருந்த நவாப் அவாத் சாதத் அலி கான், மலபார் கரையிலிருந்து திலாவர் கான், ரங்க்பூரின் மொகலாய ஃபவுஜுதார் முஹம்மது அலி கான், கோச் பீகாரிலிருந்து உபேந்திர நாராயண், பூடானிலிருந்து மிபாம் வாங்க்போ, போபாலிலிருந்து யார் முஹம்மது கான் பஹதூர் ஆகியோர் புரட்சியில் ஈடுபட்டனர். பஞ்சாபில் சீக்கியர்களும் தாக்கி விட்டு மறைந்து கொள்வது என்ற பாணியில் மொகலாய சுபேதார்களைத் தாக்கினார்கள். மராட்டியர்களுடன் சேர்ந்து கொண்டு அஜ்மீரில் அஜீத் சிங் ஒருபுறம் தாக்கினார். டெக்கானிலும் மராட்டியர்கள் பெரிய அளவில் போருக்கு தயாராகிக் கொண்டிருந்தார் கள். மேற்படி விவகாரங்களினால் மொகலாயப் பேரரசு பலவீனமாகிக் கொண்டிருந்தது. முஹம்மது ஷா திறமையாக கோகி ஜீ, ரோஷனுத் தௌலா மற்றும் சூஃபி அப்துல் கஃபூர் ஆகிய வைஸ்ராயர்களை நீக்கினார்.
1737 ல் மராட்டியர்கள் பாஜிராவின் உதவியுடன் குஜராத், மால்வா மற்றும் புந்தல்கண்டைப் பிடித்து டெல்லியை நோக்கி நகர்ந்தார்கள். முதலாம் அசஃப் ஜா டெல்லியை விட்டு போன பிறகு, நர்மதா நதியை நெருங்கி இருந்த மராட்டியர்கள் வளமான மால்வா பகுதியை ஆக்கிரமித்தார்கள். அங்கிருந்து சென்று மால்வாவின் தலைநகர் உஜ்ஜைனியையும் வென்றார்கள்.1735 ல் சர்பூலந்த் கானை வீழ்த்தி குஜராத்தையும் கைப்பற்றி னார்கள். அப்போது திண்டுக்கல் கோட்டையிலிருந்த மதுரை நாயக்கர் களின் ராணி மீனாட்சி மராட்டியர்களை எதிர்க்க மொகலாயர்களுக்கு உதவினார். 1739 ல் கந்தஹாரின் கிழக்குப் பகுதி எல்லைகளில் நடந்த புரட்சியின் மூலம் மொகலாயர்களின் பலவீனத்தைப் புரிந்து கொண்ட நாதீர் ஷா படையெடுத்து வந்து காஸ்னி, காபூல், லாகூர், சிந்த் மற்றும் காஷ்மீரைக் கைப்பற்றினார்கள். முஹம்மது ஷாவை கர்னலிலும் வெற்றி கொண்டு தலைநகர் டெல்லியில் நுழைந்து விலைமதிப்பற்ற பல செல்வங்களை அள்ளிக் கொண்டு பெர்ஷியா திரும்பினார். அதில் புகழ் பெற்ற மயில் நிறமுடைய “தரியா இ நூர்” என்னும் கிரீடமும், உலகப் புகழ் பெற்ற “கோஹிநூர்” வைரமும் அடங்கும். சஃபாவித் பேரரசில் தளபதியாக இருந்து ஓட்டோமான்களை பல போர்களில் தோற்கடித்த தளபதி அஃப்ஷரிதின் தலைமையில் நாதிர் ஷா மொகலாயர்கள் மீது படையெடுத்தார். நாதிர் ஷா டெல்லியில் ஏறக்குறைய 30,000 பேரைக் கொன்றார். முதலாம் அஸஃப் ஜா மற்றும் தலைமை தளபதி கமருத்தீன் ஆகியோர் கெஞ்சி கேட்டுக் கொண்டதற்குப் பிறகே டெல்லியில் கொலைகளை நிறுத்தினார். நாதிர் ஷாவின் பேயாட்டத்தை நிறுத்த, முஹம்மது ஷா தனது மகளை நாதிர் ஷாவின் மகனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். போதாதற்கு பிரிட்டிஷார் ஒருபுறம் நுழைந்து தாக்கினார்கள். மொகலாயப் பேரரசு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
 1748 ல் ஆஃப்கானிஸ்தானின் அஹ்மது ஷா துர்ரானி மொகலாயர்கள் மீது படையெடுத்த போது மணிப்பூரில் தோற்கடிக்கப்பட்டார். நாதிர் ஷாவின் பரம எதிரியான ஓட்டோமானின் பேரரசர் மொகலாயர்களுடன் நல்லுறவைப் பேணினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெற்ற இந்த வெற்றி மொகலாயப் பேரரசில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. உருது மொழி ஏற்கனவே இருந்தாலும், முஹம்மது ஷாவின் ஆட்சியில் பொது மொழியாகவும், அரசு மொழியாகவும் ஆக்கப்பட்டது. கவ்வாலி என்ற ஒருவகை பாடல்முறை முஹம்மது ஷாவின் ஆட்சியில் மீண்டும் எழுச்சி பெற்று, சரோட், சூர்பஹார், சிதார், சூர் சிங்கார், தம்பூரா, வீனா மற்றும் தபேலா போன்ற வாத்தியங்களுடன் பாடப்பட்டு தென் ஆசியா முழுவதும் பெரும் புகழடைந்தது. மக்தப் என்னும் மதக் கல்விக்கூடங்களை ஏற்படுத்தினார். முஹம்மது ஷா முதல்முறையாக திருக்குரானை உருது மற்றும் பெர்ஷிய மொழியில் மொழிபெயர்க்க வைத்தார். துருக்கிய உடைகளையே அணிந்து வந்து கொண்டிருந்த மொகலாய ராஜ குடும்பத்தினரின் பழக்கம் மாற்றி ‘ ஷேர்வானி’ என்னும் உடை பழக்கத்தை நடைமுறைப்படுத்தினார். மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு நெருங்கி வரும் ஆபத்தை உணராமல் கலைகளுக்கு பெரும் பணம் செலவு செய்வதாக இவர் மீது புகார் இருந்தது.
நிதாமல், சிதார்மன் போன்ற புகழ் பெற்ற ஓவியர்கள் இவர் காலத்தில் ஹோலி பண்டிகை விழாக்களையும், வேட்டையாடுவது போலவும் சித்திரங்கள் வரைந்தனர். புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் சதாரங்க் (நியாமத் கான்), அவர் உறவினர் அதாரங்க் (ஃபிரோஸ் கான்) ஆகியோர் கயால் மற்றும் தப்பா பாணி இசைகளை இசைத்தார்கள். முஹம்மது ஷாவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட 400 பக்கங்கள் கொண்ட ‘ஸிஜ் இ முஹம்மது ஷாஹி’ என்ற விஞ்ஞான சம்பந்தமான பணி அம்பரின் இரண்டாம் ஜெய்சிங்கால் முடிக்கப்பட்டது. நாதிர் ஷாவின் தாக்குதலுக்குள்ளான மொகலாய சாம்ராஜ்ஜியம் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது. மணிப்பூரில் மொகலாயர்கள் வெற்றி பெற்ற போது, தவறுதலாக வெடிக்காத குண்டு ஒன்று நேரம் தவறி வெடித்ததால் அதில் தளபதி கமருத்தீன் மரணமடைந்தார். இதை சில நாட்களுக்கு முஹம்மது ஷாவுக்கு தெரியப்படுத்தாமல் அதிகாரிகள் மறைத்து வைத்தாலும், தெரிய வந்த போது மிகவும் அதிர்ச்சியுற்றார். மூன்று நாட்களுக்கு வெளியே வராமல் நோன்பு நோற்றிருந்தார். தற்செயலாக காவலாளி காணும் போது, ‘கமருத்தீனைப் போல் ஒருவரை நான் எங்கிருந்து கொண்டு வருவேன்’ என்று வாய் விட்டு அழுதாராம். அந்த கவலையிலேயே 1748 ஏப்ரலில் முஹம்மது ஷா மரணமடைந்தார். இவரது உடல் அடக்கத்திற்கு மக்காவிலிருந்து இமாம்கள் வந்தார்களாம்.