திங்கள், 20 ஜூலை, 2015

சௌதி அரேபியா வரலாறு 3

இப்ன் சௌதுக்குப் பிறகு, மகன் சௌத் பின் அப்துல் அஜீஸ் 1953 ல் ஆட்சிக்கு வந்தார். முன்னவர் இப்ன் சௌத் என்றால், இவரை மன்னர் சௌத் என்றும் இளவரசர் சௌத் என்றும் அழைத்தார்கள். இவர் இப்ன் சௌதின் இரண்டாவது மகனாவார். 1902 ல் குவைத்தில் பிறந்தார். இவருடைய தாயார் இப்ன் சௌதின் இரண்டாவது மனைவியாவார். அவர் கஹ்தான் என்னும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வதாஹ் பின்த் முஹம்மது பின் அகப் ஆவார். இளவரசர் சௌதுக்கு ஐந்து வயதான போதே தந்தையார் இவரை ஷெய்க் அப்துல் ரஹ்மான் முஃபைரீஜ் அவர்களிடம் இஸ்லாமிய ஷரீயாவைவும், திருக்குரானையும் பயில வைத்தார். பழங்குடியினருக்கே உண்டான குதிரைச்சவாரி, அம்பெறிதல், போர்க்கலை, ஓப்பந்தங்கள் போடும்முறை, அரசியல், நிர்வாகம், தூதரக உறவு போன்றவற்றை தந்தையிடமிருந்து பயின்றார். தந்தை இப்ன் சௌதுடன் பல பாலைவனப்போர்களில் பங்கு பெற்று அனுபவம் பெற்றார். நகைச்சுவை உணர்வு, அழகிய தோற்றம், உண்மைத்தன்மை, அன்பு, திறமையான அணுகுமுறை என்று பல தோற்றங்களை இளவரசர் சௌத் அவர்கள் தன்னகத்தே கொண்டவர்கள். ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய நெறிமுறைகளை என்ன விலைகொடுத்தேனும் காப்பாற்ற வேண்டும் என்று தந்தையால் அறிவுறுத்தப்பட்டார். 13 வயதிலேயே அரசியல் குழுவுக்கு தலைமை தாங்கி கதார் நாடு சென்றார். 1921 ல் முதல்முறையாக ஏமனின் ‘ஹாஃஇல் போரில்’ கலந்து கொண்டு சௌதி அரேபியாவின் படைகளுக்கு தலைமை தாங்கினார். தான் மன்னராக ஆட்சிக்கு வரும் முன்பே க்ராப் போர், யாபெத் போர், த்ருபா போர், அல்குரஸ் போர், ஹாஃஇல் போர், அல் ஹிஜாஸ் போர், அல் மஹ்மல் போர் மற்றும் இக்வான் கலவரம் என்று எட்டு போர்களில் கலந்து கொண்டுள்ளார். 1933ல் தந்தையால் பட்டத்து இளவரசராக அறிமுகப்படுத்தப்பட்டார். 1937 ல் தந்தையுடனும், இளவரசர் முஹம்மதுவுடனும் லண்டனில் மன்னர் ஆறாம் ஜார்ஜின் முடிசூட்டுவிழாவில் கலந்து கொண்டார். தந்தையுடன் நெருங்கி இருந்த இளவரசர் சௌத் 1953 ல் பிரதம மந்திரியாகவும் இருந்தார். தந்தை இறந்தபோது, ‘நான் எனது தந்தையையும், நல்ல நண்பரையும் இழந்தேன்’ என்றார்.
இளவரசர் சௌதும் சௌதி அரேபியாவின் பல முன்னேற்றங்களுக்கு பாடுபட்டார். 1957 ல் இண்டர்நேஷனல் மானிடரி ஃபண்ட் அமைப்பில் நாட்டை உறுப்பினராக்கினார். அதே ஆண்டு ரியாதில் கிங் சௌத் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். 1953 லிருந்து 1964 வரை அரசகுடும்பத்தினர்களை முக்கிய மந்திரிப்பதவிகளில் வைத்தார்.  1957 ல் தன் மகன் ஃபஹ்தை இராணுவ மந்திரியாக ஆக்கினார். அனைத்து மகன்களையும் மந்திரிகளாகவும், மற்ற பிராந்தியங்களின் கவர்னர்களாகவும் ஆக்கினார். ஆட்சி கைமாறிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக சகோதரரின் மகன்களுக்கு பொறுப்பு கொடுப்பதைத் தவிர்த்து, அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்லிவிட்டார். 1962 ல் சௌதி அரேபியாவில் தொலைக்காட்சி நிலையத்தை அமைத்தார். அதிகப்படியான பொருளாதாரத்தை அரண்மனை மற்றும் தன் ஆடம்பர வாழ்க்கைக்கு செலவு செய்ததால் பொருளாதார வீழ்ச்சி கண்டார். நாட்டின் அரபு தேசியவாதிகளையும், மதவாதிகளையும் சர்வதேச அரசியலில் தலையிடுவதை தடை செய்து தானே முடிவுகள் எடுத்தார். அராம்கோ என்னும் நிறுவனம் இருமுறை அரசை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்து சங்கடத்தை ஏற்படுத்தியது. 1953 ல் நல்ல பணிச்சூழல் வேண்டுமென்றும், 1956 ல் அரசு ‘தஹ்ரான் வான்துறை’ யை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராகவும் இவ் வேலை நிறுத்தங்கள் நடந்தன. எகிப்தை எதிர்ப்பதற்கு பல இஸ்லாமிய நாடுகளை அழைத்தார். ஈராக் இராணுவத்திற்கு வெளிநாட்டு ஆதரவைக் கொண்டுவந்ததற்காக எதிர்ப்பு தெரிவித்த எகிப்து மற்றும் சிரியா நாடுகளின் கூட்டுக்கு தலைமை வகித்தார். கமால் அப்தெல் நாசர் சூயஸ் கால்வாயைக் கைப்பற்றிபோது அவருக்கு ஆதர்வு தெரிவித்தார். ஃப்ரான்சிடமும், பிரிட்டனுடனும் தூதரக உறவை முறித்து அவர்களுக்கு எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்தார். சூயஸ் கால்வாய் விவகாரத்தில் இளவரசர் சௌத் பெரும் அரசியல் சிக்கலில் மூழ்கி எழுந்தார். இன்ஷா அல்லாஹ் அதை வேறொரு கட்டுரையில் வெளியிடுகிறேன்.
நாட்டின் கடன் சுமை 250 மில்லியன் டாலர்களிலிருந்து 450 மில்லியன் டாலராக உயர்ந்தது. அராம்கோவும், சர்வதேச வங்கிகளும் கடன் தர மறுத்தன. இதனால் இளவரசர் சௌத் பல அரசு திட்டங்களை நிறுத்தினார். ஆனால் தனது ஆடம்பர வாழ்க்கையை மட்டும் தொடர்ந்தார். ஏற்கனவே மூத்த சகோதரர் ஃபைசல் ஆட்சிக்காக பகைத்துக் கொண்டிருந்தார். இவரின் ஆடம்பரப் போக்குக்கு எதிராக ஃபைசல் இறையச்சம் உடையவராக இருந்தார். இவர்களின் பனிப்போர் சில அரசியல் கூட்டங்களிலும் வெளிப்பட்டது. அரச அதிகாரத்தை பிரதம மந்திரியைக் கலைத்து தானே பிரதம மந்திரியாகவும், மன்னராகவும் இருந்து ஃபைசலின் அதிகாரத்தைக் குறைத்தார். சௌதி அரேபியாவில் ஊழல் தலையெடுத்தது. எகிப்தில் ரேடியோ கெய்ரோ இளவரசர் சௌதுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது. இளவரசர் சௌத் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த சமயம் இளவரசர் ஃபைசல், இளவரசர் ஃபஹ்த் மற்றும் இளவரசர் சுல்தானுடனும் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தார். அதில் பத்து புதிய மறுசீரமைப்பு சட்டங்களைச் சேர்த்தார். அதில் அடிமைகளை ஒழிப்பதும், நீதிக்கென தனி துறை அமைப்பதும் அடங்கும். இந்த புதிய ஆட்சியை இளவரசர் சௌத் மறுத்து ஃபைசல் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஃபைசல் உலமா சபை மூலமாகவும், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மூலமாகவும் இளவரசர் சௌதுக்கு அழுத்தம் கொடுக்க      1964 ல் பணிந்தார். அதன்பிறகு, இளவரசர் சௌத் ஜினீவாவிலும், ஐரோப்பிய நகரங்களிலுமே இருந்தார். 1966 ல் எகிப்து அதிபர் நாசர் அழைத்தார் என்றும், இல்லை இவரே புகலிடம் கேட்டார் என்றும் சொல்லப்பட்டது. எது எப்படியோ எகிப்தில் இருந்தபடி, மகன்கள் இளவரசர் காலித், இளவரசர் பத்ர், இளவரசர் சுல்தான் மற்றும் இளவரசர் மன்சூர் ஆகியோருடன் இணைந்து ரேடியோ கெய்ரோவில் இழந்த தங்கள் ஆட்சிக்காக ஆதரவு திரட்டினார். இதற்கிடையே 1967 ல் அராப் இஸ்ரேல் போர் வர எகிப்தின் ஆதரவை இழந்த இளவரசர் சௌத் 1969 வரை க்ரீஸில் இருந்தார். எண்ணற்ற மனைவிகளும், 115 குழந்தைகளும் இவருக்கு இருந்தார்கள். அதில் சில மகன்கள் சௌதி அரேபியாவின் மந்திரிகளாகவும், கவர்னர்களாகவும் இருந்தார்கள். இவர் மகள் ஹெஸ்ஸா சௌதியின் பள்ளிக்கூடத்தில் முதல் பிரின்சிபாலாக ஆனார். இன்னொரு மகள் புனையாஹ் என்பவர் உலகம் முழுவதும் 2001 ல் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கான, பணிப்பெண்ணைத் தாக்கிய வழக்கில் அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் கைது செய்யப்பட்டு ஒருநாள் காவலில் வைக்கப்பட்டு, பாஸ்போர்ட் ஒப்படைத்து 5,000 டாலர் ஜாமீனுக்கு மறுநாள் விடுதலை செய்யப்பட்டு வழக்காடினார். இளவரசர் சௌத் தனது மூத்த சகோதரர் துர்கி இறந்தபின், அவரது மனைவி முனீரா பின்த் ஒபைதை திருமணம் செய்து கொண்டார். இளவரசர் சௌத் கிரீஸில் ஹோட்டல் கவூரியில் தன் மகள் நோஸாஹ்வுடன் இருந்த போது 1969 பிப்ரவரியில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது உடல் மக்கா ஹரம் ஷரீபுக்கு கொண்டு வரப்பட்டு இறுதித்தொழுகைக்குப் பின் ரியாதில் அல் அவ்த் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
அடுத்து சகோதரர் இளவரசர் சௌதின் ஆடம்பரத்தால் வீழ்ந்து கிடந்த சௌதி அரேபியாவின் பொருளாதாரத்தை உயர்த்திட ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அல் சௌத் 1964 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் 1906 ல் ரியாத் நகரத்தில் பிறந்தவர். இவரது தாயார் இமாம் அப்துல் வஹ்ஹாபின் அல் அஷ் ஷெய்க் குடும்பத்தைச் சேர்ந்த தர்ஃபா பின்த் அப்துல்லாஹ் பின் அப்துல்லதீஃப் அல் ஷெய்க் ஆவார். ஃபைசல் பின் அப்துல் அஜீஸின் தாயார் இளவயதிலேயே மரணமடைய தாய்வழிப்பாட்டனார் அப்துல்லதீஃபிடம் வளர்ந்து திருக்குரான் மற்றும் அனைத்து மத சம்பந்தமான கல்வியையும் கற்றார். இவருக்கு நூராஹ் என்று ஒரு சகோதரி உண்டு. பழங்குடியின தலைவர்களை அரவணைத்துச் செல்பவராக இருந்தார். 1919 ல் லண்டன் அரசு மன்னர் அப்துல் அஜீஸை அழைத்த போது, மன்னர் 14 வயதான இவரை அனுப்பினார். சௌதியின் அரச குடும்பத்தில் முதல்முறையாக வெளிநாடு சென்றவர் ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தான். ஐந்துமாத காலம் பயணம் மேற்கொண்ட அவர் அரசுப்பயணமாக ஃப்ரான்சுக்கும் சென்றார். 1922 ல் அசீரைக் கைப்பற்றியபின், அசீருக்கும், முன்னர் கைப்பற்றிய ஹாஃஇல்லுக்கும் 6,000 வீரர்களுடன் சென்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 1925 ல் சௌதிப்படைகளுக்கு தளபதியாக இருந்து ஹிஜாஸை வெல்ல துணைபுரிந்தார். இவரும், இளவரசர் முஹம்மதும் இக்வான் படைகளுக்கு பொறுப்பாக இருந்தார்கள். 1926 ல் ஹிஜாஸ் பகுதிக்கு வைஸ்ராயராக இருந்தார். 1930 ல் சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்து 1932 ல் போலந்துக்கும், 1933 ல் ரஷ்யாவுக்கும், மேலும் பல ஐரோபிய நாடுகளுக்கும் சென்றார். 1963 ல் சௌதிக்கு தொலைக்காட்சி நிலையம் அமைத்ததில் இவருக்கும் பங்குண்டு. ஆரம்பத்தில் இதற்கு மதவாதிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பினாலும், ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாமிய கோட்பாடை விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அணுவும் அகலாது என்று உறுதி கூறி இரண்டாண்டுகளுக்குப் பிறகு தான் நிகழ்ச்சிகள் தொடங்கின. 1961 ல் மதீனாவில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் கொண்டுவரவும் பாடுபட்டார். 1962 ல் முஸ்லீம் வேர்ல்ட் லீக் என்ற நிதி அமைப்பை ஏற்படுத்தி பின்னாளில் பில்லியன் டாலர்களுக்கு மேல் அரச குடும்பத்திலிருந்து நிதி அளித்தார். மன்னர் சௌதிடமிருந்து ஆட்சியைப் பிடித்தபின், எல்லாத்துறைகளிலிருந்தும் அனைவரையும் நீக்கிவிட்டு, ஆர்வத்துடன் பணிபுரியும் இளவரசர்களைக் கொண்டுவந்தார். இளவரசர் அப்துல்லாஹ்வை தேசிய பாதுகாப்புப்படைக்கு தளபதி ஆக்கினார்.
ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் தான் ஆட்சிக்கு வந்தவுடன் மிகவும் உருக்கமாக, ‘என்னை உங்கள் சகோதரனாகவும், சேவகனாகவும் பார்க்க வேண்டி உங்களிடம் விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். ஆட்சி என்பது பூமியிலும், சொர்க்கத்திலும் அல்லாஹ் ஒருவனிடத்தில் தான் உள்ளது. மன்னர் அப்துல் அஜீஸ் குடும்பத்திற்கு பயன்படுத்திய அதே சொல்லே இந்த மன்னர் ஃபைசல் பின் அப்துல் அஜீஸும் தொடர்கிறார். இது கீழ்வரும் சந்ததியினருக்கான ஒரு அடையாளம் தான். அதனால் மன்னரை “ஹிஸ் ராயல் ஹைனெஸ்” என்றும், அவர் சகோதரர்கள், தந்தை வழி சகோதரர்கள் “ஹிஸ் ஹைனெஸ்” என்றும், அவர்களிலிருந்து பிரிந்து செல்லும் வம்ச வழியினரை “ஹிஸ் எக்ஸலன்சி” என்றும் அழைக்கப்படுவார்கள்’ என்றார். 1967 ல் ஃபைசல் பின் அப்துல் அஜீஸ் இளவரசர் ஃபஹ்தை இரண்டாவது பிரதம மந்திரியாக அறிவித்தார். முதல் வேலையாக தலைகீழாகிப் போயிருந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தினார். முதல் இரண்டாண்டுகளுக்கு பழைமைவாத பொருளாதாரத்தைக் கடைபிடித்து வெற்றிகண்டார். எண்ணெய் வள உற்பத்தியை மேலும் அபிவிருத்தி செய்தார். அரசாணை வெளியிட்டு அனைத்து சௌதி அரச இளவரசர்களின் பிள்ளைகள் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்லாமல் உள்ளூர் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை முன்னுதாரனமாகக் கொண்டு சௌதியின் பணக்காரர்களும் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளிலிருந்து திரும்பி அழைத்துவந்து உள்ளூர் பள்ளிகளில் சேர்த்தார்கள். மாகாணங்களை தனி நிர்வாகப் பகுதிகளாக ஆக்கி நவீன நலத்துறைகளை அறிமுகப்படுத்தினார். 1970 ல் பொருளாதாரத்திற்கென ஐந்தாண்டுத் திட்டத்தை கொண்டுவந்து நீதித்துறைக்கென அமைச்சகம் ஏற்படுத்தினார். 1965 ல் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட, 1966 ல் ஃபைசல் பின் அப்துல் அஜீஸின் உறவினர் ஒருவர் நிலையத்தைத் தாக்கினார். பாதுகாப்புப்படையினர் அவரை சுட்டுக் கொன்றார்கள். நாட்டின் மீதான இவரது மறுசீரமைப்பை சௌதியின் பழைமைவாதிகள் எதிர்த்த போதிலும், அனைத்தையும் இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையிலேயே வைத்துக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக