புதன், 22 ஜூலை, 2015

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 6

ஷெய்க் ராஷித் அவர்களால் 1972 ல் துவக்கப்பட்ட ராஷித் துறைமுகம் (PORT RASHID-MINA PORT) துபாயின் பொருளாதாரத் துறைமுகமாக விளங்கியது. அப்போது சரக்குகளை கப்பலிலிருந்து இறக்க இரண்டு பளுதூக்கும் இயந்திரங்களும் (CRANE) 100,000 குறைவான எடையைக் கையாளும் வசதியுடன் தான் இருந்தன. 1978 ல் கப்பல் நிறுத்தும் இடம் (BERTH) 32 ஆக விரிவு படுத்தப்பட்டு, அதில் ஐந்து கப்பல் நிறுத்தும் இடங்கள் மிகப்பெரிய கப்பல்கள் நிறுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டது. தற்போது ஆழம் 13 மீட்டராக்கப்பட்டு 9 பளுதூக்கும் இயந்திரங்களுடன் 1,500,000 எடை கையாளும் வண்ணம் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது. ஷெய்க் ராஷித் அவர்களால் 1975 ல் பர் துபாய் என்னும் பகுதியிலிருந்து துபாய் க்ரீக்கின் கீழே கடலுக்கடியில் கடந்து மறுமுனை அல் ராஸ் (DEIRA) என்னும் பகுதியை அடைய “அல் ஷிண்டகா” என்னும் நீர்அடி சாலைப்பாதை அமைக்கப்பட்டது. இது இரண்டிரண்டாக நால்வழிப் பாதையும், ஐந்து மீட்டர் உயரமும், 60 கி.மீ வேகத்தில் செல்லும் வகையிலும் கட்டப்பட்டது. துபாய் நகரின் தென்மேற்குப் பகுதியில் 45 கி.மீ தொலைவில் போர்ட் ராஷிதுக்கு இணையாக போர்ட் ஜெபெல் அலி என்ற துறைமுகம் 1979 ல் கட்டப்பட்டது. 1978 ல் ஷெய்க் ராஷித் அவர்கள் துபாய் உலக வாணிப மையம் (DUBAI WORLD TRADE CENTRE) கட்டினார். 149 மீட்டர் உயரத்தில் 39 அடுக்குகளைக் கொண்டது இது. 1978 ல் இதுதான் அந்தப்பகுதியில் மிக உயர்ந்த கட்டிடம். பல பிரபலமான வெளிநாட்டு அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் 100 திர்ஹம் மதிப்புள்ள பணத்தில் அச்சடிக்கப் பட்டிருக்கிறது. 1970 க்கு முன்பு இயற்கையாக இருந்த துபாய் க்ரீக் எனப்படும் கடல்நீர் கால்வாய் துபாயின் ராஸ் அல் கோர் பறவைகள் சரணாலயம் வரை நீண்டிருக்கும். இது துபாயை பர் துபாய் மற்றும் தேரா துபாய் என்று இரண்டாகப் பிரிக்கும். பர் துபாய் பகுதியில் அமைந்துள்ள க்ரீக்கின் கரையில் 19 ம் நூற்றாண்டுகளில் அல் மக்தூம் குடும்பத்தினர் குடியிருந்தார்கள். ஷெய்க் ராஷித் ஆட்சி காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பகுதிகளிலிருந்து வரும் சிறிய கப்பல்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. நகருக்குள் துறைமுகம் அமைந்த ஒரே இடம் துபாய் தான். ஒரு காலத்தில் மீன்பிடியும், முத்துக்குளிப்பும் பிரதானமாக இருந்த துபாய் க்ரீக் காலப்போக்கில் சிறிய படகுகளுக்கான நவீன துறைமுகமானது. இப்பகுதியில் கப்பல்களைப் பழுதுபார்க்க 1971 ல் துபாய் ட்ரைடாக் என்று ஒரு உலர் துறைமுகம் துவக்கப்பட்டு 1983 ல் முடிவு பெற்றது. இதுவும் ஷெய்க் ராஷித் அவர்களின் காலத்தில் தான் கட்டப்பட்டது. பெர்ஷிய வளைகுடாவில் மிகப்பெரிய கப்பல் பழுதுபார்க்கும் உலர்துறை இதுதான். இதுவரை 6000 கப்பல்கள் வரை பழுதுபார்த்து சாதனை செய்திருக்கிறது. 1994 லிருந்து துபாய் ட்ரைடாக்கில் புதிய கப்பல்களும் தயாரிக்கத் துவங்கின. இதுவரை 70 கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
1946 லிருந்து துபாய், அபுதாபிக்கு இடையிலிருந்த ஆயுதம் ஏந்திய எல்லைப்பிரச்சினையை ஷெய்க் ராஷித் அவர்கள் தீர்த்துவைத்து, அபுதாபியின் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யானுடன் நல்லுறவை வளர்த்தார். மேலும் கதார் நாட்டுடனும் நட்புடன் இருந்து தன் மகளை 1961 ல் கதார் எமிருக்கு மணமுடித்துக் கொடுத்தார். 1966 ல் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தபோது, ஷெய்க் ராஷித் அவர்கள் கதார் நாட்டுடன் சேர்ந்து கல்ஃப் ருபீ என்ற பணத்தை புழக்கத்தில் வைத்துக் கொண்டார். அதேகாலகட்டத்தில் அபுதாபி பஹ்ரைனுடன் சேர்ந்து பஹ்ரைன் தினார் என்பதை புழக்கத்தில் வைத்துக் கொண்டது. துபாய் க்ரீக்கை தோண்டுவதற்கு அப்போது குவைத் நாட்டு எமிர் “க்ரீக் ஒப்பந்தம்” ஒன்றை ஏற்படுத்தி பொருளுதவி செய்தார். ஐக்கிய அரபில் இருந்த மற்ற அமீரகங்களை ஒன்றிணைக்கப் பாடுபட்டார். ஐக்கிய அரபு அமீரகங்களுக்கென தனி நாணயம் கொண்டுவருவதிலும் துணை நின்றார். 1979 ல் துபாய் நகரத்தை விட்டு தள்ளி தனியாக ஜெபெல் அலி என்ற துறைமுகத்தைக் கட்டினார். இதுதான் உலகிலேயே முழுக்க மனித கரங்களால் (MANMADE HARBOUR) ஆன துறைமுகம். 1985 ல் இத்துறைமுகத்தின் உள்ளேயே ‘ஜெலெல் அலி ஃப்ரீ ஸோன்’ என்று சர்வதேச நிறுவனங்களுக்காக வரி இல்லாத சட்டத்துடன் அலுவலகம், சரக்கு கையாளும் கூடங்கள், தொழிலாளர்கள் குடியிருப்புகள், மருத்துவமனை என்று எல்லாம் அமைத்தார்.
ஷெய்க் ராஷித் அல் மக்தூம், ஷெய்க் ஹம்தான் பின் ஸாயெத் அல் நஹ்யான் என்பவரின் மகள் ஷெய்கா லதிஃபா பிந்த் ஹம்தான் என்பவரை மணந்திருந்தார். இவருக்கு மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம், ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம், முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம், அஹ்மது பின் ராஷித் அல் மக்தூம் என்று நான்கு மகன்களும், லதீஃபா பிந்த் ராஷித் அல் மக்தூம், ஃபாதிமா பிந்த் ராஷித் அல் மக்தூம் என்று இரண்டு மகள்களும் இருந்தார்கள். ஷெய்க் ராஷித் அவர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் துபாயின் சாலைகளிலும், சந்தைகளிலும் காரிலும், நடந்தும் மக்களோடு மக்களாய் புழங்கினார். இதற்கு துபாயில் வசித்த நமது முன் சந்ததி சாட்சியாக இருக்கிறது. 1990 அக்டோபரில் ஷெய்க் ராஷித் அவர்கள் மரணமடைந்தார்.
அதன்பிறகு, அவர் மூத்த மகன் மக்தூம் பின் ராஷித் அல் மக்தூம் துபாயின் ஆட்சியாளராக வந்தார். இவரை மூன்றாம் மக்தூம் என்றும் அழைப்பார்கள். அல் ஃபலாசி ஆட்சிவம்ச குடும்பத்தினரின் இருப்பிடமான அல் ஷிண்டகாவில் 1943 ஜனவரியில் பிறந்தார். 1971 ல் ஐக்கிய அரபு அமீரகங்கள் தோன்றிய பின் முதல் பிரதம மந்திரியாக எட்டு ஆண்டுகள் இருந்தார். அதன் பிறகு தந்தையார் ஷெய்க் ராஷிதே பிரதம மந்திரி பதவியில் இறக்கும் வரை இருந்தார். அவர் இறந்த பிறகு, மீண்டும் பிரதம மந்திரியானார். ஐக்கிய அரபு ஆமீரகங்களின் அதிபர் ஷெய்க் ஸாயெத் அவர்கள் இறந்த போது தற்காலிகமாக இரண்டு நாட்களுக்கு அதிபர் பதவியிலும் இருந்தார். துபாயை மற்ற சகோதரர்கள் ஷெய்க் ஹம்தான் (ஐக்கிய அரபு அமீரகங்களின் பொருளாதார மந்திரி) மற்றும் ஷெய்க் முஹம்மது (ஐக்கிய அரபு அமீரகங்களின் இராணுவ மந்திரி) ஆகியோருடன் இணைந்து ஆட்சி செய்தார். இந்த மூன்று சகோதரர்களும் சேர்ந்து உலகப் புகழ்பெற்ற “கோடோல்ஃபின் ஸ்டாபிள்ஸ்” என்னும் சர்வதேச குதிரைப் பந்தய நிறுவனத்தை நடத்தினார்கள். 2006 ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் குயிஸ்லாந்து மாகாணத்தில் கோல்ட் கோஸ்ட் என்ற தீவில் ப்ளாஸோ வெர்சாஸ் என்ற விடுதியில் ஓய்வில் இருந்த போது மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்குப் பின் இளைய சகோதரர் ஷெய்க் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆட்சிக்கு வந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக