புதன், 22 ஜூலை, 2015

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 4

1952 ல் சௌதி அரேபியா, அராம்கோ (ARAMCO) என்ற நிறுவனத்தை எண்ணெய் வளத்திற்காக எல்லைப் பிரச்சினையில் இருந்த புரைய்மி என்ற பாலைவனப் பகுதியில் ஹமஸா என்ற கிராமத்தை ஆக்கிரமிக்க ஷெய்க் ஸாயெத் பின் சுல்தானுக்கு 30 மில்லியன் பவுண்டு கையூட்டுத் தர சம்மதித்தது. ஆனால் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அதை மறுக்க, சௌதி அரேபியா துர்கி பின் அப்துல்லாஹ் அல் ஒதைஷான் என்பவர் தலைமையில் போருக்கு இறங்கியது. அதை ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் எதிர்கொண்டார். பின்னர் புரைய்மி பிரச்சினைக்காக 1955 ல் ஜெனீவாவில் நடந்த பேச்சு வார்த்தையில் சகோதரர் ஹஸ்ஸாவுடன் கலந்து கொண்ட ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அப்பகுதியில் தங்களுக்குண்டான ஆதாரங்களை வெளியிட்டார். பின்னர் அப்பகுதியில் நீருக்கான ஆதாரத்தைக் கண்டறிந்து அல் அய்ன், புரைய்மி ஆகியவற்றை வளப்படுத்தினார். 1960 ஜப்பானிய கலைஞரான டாக்டர். கட்சுஹிகோ டகாஹஷியை வரவழைத்து நகரை திட்டமிட்டு உருவாக்கினார். திடீரென்று 1968 ல் பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி கோரோன்வி ராபர்ட் அப்பகுதிக்கு வந்து இந்த விரிவாக்கம் ஒப்பந்தத்திற்கு மாறானது என்று உடனே வெளியேற உத்தரவிட்டார். உடனடியாக அதே ஆண்டு அனைத்து ஏழு அமீரகங்களையும் துபாயின் ஆட்சியாளர் ஷெய்க் ராஷித் அவர்கள் தலைமையில் கூட்டி பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற நாடினார். பின்னர் மற்ற ஒப்பந்த நாடுகள் போக, ஏழு மாகாணங்கள் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் உருவானது. பின் சௌதி அரசுடன் ஜெத்தா ஒப்பந்தம் மூலம் எல்லைப் பிரச்சினையைத் தீர்த்தார். அனைத்துத் தரப்பிலும் நல்ல ஆட்சியாளர் என்று பெயரெடுத்தார். அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்ய அனுமதித்தார். பரந்த அரபுகளின் ஆட்சியையே கனவு கண்டார். ஈராக்கின் மீது அமெரிக்கா விதித்திருந்த தடையை நீக்கச் சொன்னார். ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்கள் $20 பில்லியனுக்கு சொந்தக்காரரான மிகப் பெரிய பணக்காரராக “ஃபோர்ப்ஸ்” பத்திரிக்கை அறிவித்தது. 1988 ல் 5 மில்லியன் பவுண்டுகளுக்கு இங்கிலாந்தின் பெர்க் ஷைரில் டிட்டன் ஹூஸ்ட் பார்க் என்ற இடத்தை வாங்கினார்.
1997 ல் ஏன் ஜன்நாயக முறை ஆட்சியைக் கொண்டுவரக்கூடாது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பேட்டியில் கேட்டபோது, “எங்கள் மக்கள் எங்கள் ஆட்சி வழிமுறையில் தவறிருக்கிறது என்று சொன்னார்களா? அவர்கள் எப்போதுமே இஸ்லாமிய மதம் சார்ந்த எங்கள் ஆட்சி வழிமுறையையே விரும்புவார்கள்” என்றார். அபுதாபி மக்கள் அனைவருக்கு சொந்த இடமும் கட்டப்பட்ட வீடும் இலவசமாகக் கொடுத்தார். மஜ்லிஸ் என்னும் இவரின் பொது அறை எந்நேரமும் திறந்தே இருக்கும். தேவாலயமும், கோவிலும் கட்டிக் கொள்ள அனுமதித்தார். பெண்களின் குறிப்பிட்டளவு சுதந்திரத்தை வரவேற்றார். 2000 ல் ஸாயெத் செண்டர் என்ற அமைப்பின் மூலம் இவர் நன்கொடையாகக் கொடுத்த $2.5 மில்லியன்களை ஹார்வர்ட் டிவைனிடி ஸ்கூல் கறைபடிந்த பணம் என்று திருப்பிக் கொடுத்து விட்டது. 2001 ல் சுற்றுப்புர சூழலுக்கான ஸாயெத் சர்வதேச பரிசாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டருக்கு $500,000 கொடுத்த போது, இப்பரிசு எனது நண்பரின் பெயரில் உள்ளதால் இதைப்பெருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 1999 ல் பல மருத்துவ சோதனைகள் மேற்கொண்டார். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் அவருக்கு பல கடிதங்களை எழுதினார்கள். 2004 நவம்பர் 2 ல் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்கள் காலமானார். அபுதாபியில் புதியதாகக் கட்டப்பட்ட மிகப்பெரிய ஷெய்க் ஸாயெத் பெரிய மசூதியின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தானின் ரஹீம் யார்கான் பகுதி விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாண்டிநீக்ரோ நகரத்தில் ஒரு சாலைக்கும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானமியின் பயிற்று விக்கும் அறைக்கும், அல்பேனியாவின் வடக்குபகுதியான குகீஸ் நகர விமான நிலையத்திற்கும், ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் பல்கலைக்கழகத்திற்கும் செச்சினியாவின் பள்ளிக்கூடம் ஒன்றிற்கும் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பஹ்ரைனில் ‘ஸாயெத் டவுன்’ என்ற பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் லர்கானா சிந்த் மருத்துவமனை, லாகூர் பஞ்சாப் மருத்துவமனை, ரஹிம் யார்கானில் கல்லூரி மற்றும் மருத்துவமனை, குவைத் நகரின் ஐமுனைப் பாதை, ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் கோபுரம். துனீஷியாவின் ஒரு குடியிருப்புப்பகுதி ஆகியவற்றிற்கும் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது. 
ஆறு முறை திருமணமான ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அவர்களுக்கு, கலீஃபா பின் ஸாயெத், சுல்தான் பின் ஸாயெத், முஹம்மது பின் ஸாயெத், ஹம்தான் பின் ஸாயெத், ஹஸ்ஸா பின் ஸாயெத், தஹ்னூன் பின் ஸாயெத், மன்சூர் பின் ஸாயெத், அப்துல்லாஹ் பின் ஸாயெத், அல்யஸியா பின் ஸாயெத், ஷம்மா பின் ஸாயெத், சைஃப் பின் ஸாயெத், தனா பின் ஸாயெத், அஹ்மெத் பின் ஸாயெத், ஹமீத் பின் ஸாயெத், உமர் பின் ஸாயெத், காலித் பின் ஸாயெத், சயீத் பின் ஸாயெத், ஃபலாஹ் பின் ஸாயெத், நஹ்யான் பின் ஸாயெத், தைய்ப் பின் ஸாயெத், இஸ்ஸா பின் ஸாயெத் நாசர் பின் ஸாயெத், ஆகிய 22 மகன்களும், ஷம்ஸா பின்த் ஸாயெத், அஃப்ரா பின்த் ஸாயெத், மௌசா பின்த் ஸாயெத், வதீமா பின்த் ஸாயெத், ஷெய்கா பின்த் ஸாயெத், ரோதா பின்த் ஸாயெத் என்று ஏழு மகள்களும் உள்ளனர். இவருக்குப்பின் இவர் மூத்த மகன் கலீஃபா பின் ஸாயெத் அல் நஹ்யான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்.
இவர் ராயல் மிலிட்டரி அகாடமி சன்துர்ஸ்டில் இராணுவத்திற்கான பட்டம் பெற்றவர். அபுதாபியின் கிழக்குப்பகுதிக்கு மேயராகவும், அல் அய்ன் பகுதி நீதித்துறைக்குத் தலைவராகவும் இருந்தார். 1969 ல் அபுதாபியின் பட்டத்து இளவரசராகவும், இராணுவ மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார். கலீஃபா பின் ஸாயெதுக்கு, முஹம்மது அல் நஹ்யான், சுல்தான் அல் நஹ்யான் என்று இரு மகன்கள் உண்டு. அபுதாபியில் பல துறைகளில் மந்திரியாகப் பணியாற்றி இருக்கிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தந்தை நோய்வாய்ப்பட்டிருந்த போது தற்காலிகமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகச் செயலாற்றி இருக்கிறார். துபாயிலிருக்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் துபாய் இவரைக் கௌரவிக்கும் விதமாக ‘புர்ஜ் கலீஃபா’ என்று பெயர் மாற்றப்பட்டது. 2005 ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 100% ஊதிய உயர்வு கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இவர் மேற்கத்திய கலாச்சாரத்தில் கொஞ்சம் ஈடுபாடு கொண்டவர். குதிரை மற்றும் ஒட்டகப்பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். 2010 ல் அமெரிக்கா கலீஃபா பின் ஸாயெதை தூரத்திலிருக்கும் கவர்ச்சி இல்லாத மனிதர் என்று கூறியதாக ‘விக்கி லீக்ஸ்’ இணைய தளம் வெளியிட்டிருந்தது. லிபியாவில் மாம்மர் கட்டாஃபிக்கு எதிராக அமைத்த நேட்டோ படைக்கு இராணுவத்தை அனுப்பினார். சீசெல்ஷின் முக்கிய தீவான மாஹீயில் 66 ஏக்கரில், 2 மில்லியன் டாலரில் பிரமாண்டமான அரண்மனை கட்டியுள்ளார் என்று சீசெல்ஷ் அரசு அறிவித்தது. இந்த அரண்மனை கட்டுவதால் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று சீசெல்ஷ் அரசு பொது நிறுவனம் கூறியது. அதற்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி அதுபோல் ஆகாமல் கலீஃபா அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என உறுதி அளித்தது. துபாயின் அஸ்கான் என்னும் கட்டுமான நிறுவனம் இந்த அரண்மனையைக் கட்டும் பணியை 2010 ல் மேற்கொண்டது. அதில் பிழை ஏற்பட்டு ஆறு போல் தண்ணீர் ஏறக்குறைய 8000 குடும்பங்களுக்கான தண்ணீர் அப்பகுதி முழுதும் ஓடியது. உடனடியாக செல்சிஷின் அரசு நிர்வாகமும், கலீஃபாவால் அனுப்பப்பட்ட பொறியாளர்களும் விரைந்தனர். விசாரணையில் துபாயின் அஸ்கான் கட்டுமான நிறுவனத்தின் தவறினால் தான் இதுபோல் ஆனது என்றும் கண்டறிந்து 81,000 டாலர் சீசெல்ஷுக்கு அபராதம் செலுத்தச் சொன்னது. அஸ்கான் இத் தவறு எதிர்பாராத சீதோஷ்ண நிலையால் ஆகியது என்று வாதாடியது. கலீஃபா பின் ஸாயெத் அவர்கள் உடனடியாக 15 மில்லியன் டாலர்கள் கொடுத்து மலைப்பாதையில் செல்லும் ஒட்டுமொத்த தண்ணீர் குழாய்களையும் நீக்கி புதிய குழாய் அமைத்துக் கொள்ளச் செய்தார். சீசெல்ஷ் அரசாங்கம் அஸ்கான் நிறுவனத்தை பாதிக்கப்பட்ட 360 குடும்பங்களுக்கு தலா 8,000 டாலர் கொடுக்கச் சொன்னது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக