புதன், 22 ஜூலை, 2015

ஐக்கிய அரபு அமீரக வரலாறு 3

அபுதாபி அமீரக வரலாறு

பெர்ஷிய வளைகுடாவின் நடமாட்டமில்லாத ஒருபகுதியாக இருந்த அபுதாபி தீவில் 1761 ல் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் குடியிருக்க ஆரம்பித்தார்கள். 1790 ல் பனி யாஸ் என்னும் அரபு பழங்குடி இனக் கூட்டத்திற்கு அபுதாபி தலைமை இடமாக இருந்தது. இந்த பனி யாஸ் பழங்குடியினருக்கு தியாப் பின் இசா பின் நஹ்யான் என்பவர் தலைவராக இருந்தார். ஷெய்க் என அழைக்கப்பட்ட இவர் ‘மான்களின் தந்தை’ என்றும் அழைக்கப்பட்டார். தியாப் லிவா என்னும் தீவில் இருந்தார். தங்கள் பழங்குடியினரின் வளமான வாழ்வுக்காக தன் மகன் ஷக்புத் என்பவரை அப்போது தீவுபோல் இருந்த அபுதாபியைப் போல் பார்க்கச் சொன்னார். 1793 ல் ஷக்புத் பின் தியாப் அல் நஹ்யான் அங்கு சென்று ஒரு கிராமத்தையும், ‘கஸ்ர் அல் ஹுஸ்ன்’ என்ற கோட்டையையும் கட்டினார். அதன்பின் அதுவே அபுதாபி ஷெய்குகளின் இருப்பிடமாக இருந்து இன்று அபுதாபியின் அருங்காட்சியகமாக இருக்கிறது. இவருக்குப் பின் இவரது மகன் முஹம்மது பின் ஷக்புத் என்பவர் 1816 ல் ஆட்சி செய்தார். அடுத்து இன்னொரு மகன் தஹ்னூன் பின் ஷக்புத் என்பவர் 1818 ல் ஆட்சி செய்தார். அடுத்து இன்னொரு மகன் கலீஃபா பின் ஷக்புத் என்பவர் 1833 ல் ஆட்சி செய்தார். இவர்கள் ஆட்சிக்கு வந்த காலம் தனித்தனியாக இருந்தாலும் கூடித்தான் ஆட்சி செய்தார்கள். இவர்களைப் பற்றிய தனிப்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்படவில்லை.
இவர்களுக்குப்பின் ஸாயெத் பின் கலீஃபா அல் நஹ்யான் என்பவர் 1855 ல் ஆட்சிக்கு வந்தார். ஸைத் பின் தஹ்னூன் என்னும் உறவினரை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு, வந்த இவர் 54 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர்தான் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யானின் பாட்டனார் ஆவார். அப்போது இது ஒமானைச் சேர்ந்த பகுதியாக இருந்தது. ஸாயெத் பின் கலீஃபாவின் ஆட்சியின் போது அடிக்கடி ஷார்ஜா அமீரக ஆட்சியாளர்களுடன் சண்டை இருந்தது. 1868 ல் நேருக்கு நேர் மோதி ஷார்ஜா ஆட்சியாளர் ஷெய்க் காலித் பின் சுல்தானைக் கொன்றார். அதனால் ஷார்ஜாவுடன் இருந்த குழப்பங்கள் தீர்ந்து அனைத்து பழங்குடியினரும் அபுதாபிதான் அப்பகுதியின் பலம் வாய்ந்த அமீரகம் என்று போற்ற ஆரம்பித்தார்கள். ஸாயெத் பின் கலீஃபா 1880 ல் கதாருடன் போரிட்டு தனது மேற்கத்திய எல்லையை வகுத்துக் கொண்டார். 1870 ல் ஒமானிப்படைகளுடன் இணைந்து புரைய்மி பகுதியிலிருந்த சௌதி படைகளை விரட்டினார். இதனால் புரைய்மி பகுதி அபுதாபிக்கு நிரந்தரமாகி சௌதியை ஒரேயடியாக ஒமானிலிருந்து விரட்டப்பட்டது. அதன் பிறகு அபுதாபியின் கட்டுப்பாடு அப்பகுதிகளில் வளர்ந்தது. பலம் வாய்ந்த ஆட்சியாளராக இருந்த இவரை அனைத்துப் பழங்குடியினரும் மரியாதையாக நடத்தினார்கள். அபுதாபியின் மேற்குப்பகுதியை மூன்று முறை கதார் மீதான படையெடுப்பின் மூலம் விரிவாக்கினார். தெற்கில் ‘ருப் அல் காலி’ வரை எல்லையை வகுத்தார். முத்துக்குளிப்பு வாணிபத்தின் சொந்தக்காரராய் இருந்த அருகிலிருந்த அமீரகங்களுக்கும் உதவி புரிந்தார். 1892 ல் பிரிட்டிஷ் உடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு அபுதாபி பிரிட்டிஷாரின் சர்வதேச வாணிபத்தில் இணைக்கப்பட்டது. ஸாயெத் பின் கலீஃபா 1909 ல் இறந்து போக அவர் சகோதரர் முதலாம் சக்ர் பின் ஸாயெத் அல் நஹ்யான் ஆட்சிக்கு வந்தார்.
இவருக்குப்பின் ஷக்புத் பின் சுல்தான் அல் நஹ்யான் 1928 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் இரண்டாம் சுல்தான் பின் ஸாயெதின் மகனாவார். இவரது தாயாரின் பெயர் ஷெய்கா சல்மா பிந்த் புட்டி ஆவார். ஷக்புத் பின் சுல்தான் வாணிபத்தில் கவனம் செலுத்தி தங்கத்தைச் சேமித்தார். 1958 ல் அபுதாபியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1948 ல் துபாயுடனான எல்லைப் பிரச்சினையை அபுதாபி தீர்த்துக் கொண்டது. 1952 ல் அபுதாபியின் மக்கள்தொகை 4,000 தான் இருந்தது. 1962 ல் முதல் எண்ணெய் வளம் ஏற்றுமதி தொடங்கியது. 1966 ல் இவரது சகோதரர் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் ஆட்சிக்கு வர பிரிட்டிஷார் ஒமான் படைகளுடன் இணைந்து இவரை நீக்கினார்கள். ஷக்புத் பின் சுல்தானை ரகசியமாக ஏற்றிச் சென்ற பிரிட்டிஷ் படைகள் லெபனானில் விட்டு விட்டனர். 1971 ல் ஸாயெத் பின் சுல்தான் அபுதாபியின் அதிபரான பின் அவர் அபுதாபிக்கு அழைத்துக் கொள்ளப்பட்டார். ஷக்புத் பின் சுல்தானுக்குப்பின் ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் அல் நஹ்யான் அபுதாபியின் ஆட்சிக்கு வந்தார்.
ஷெய்க் ஸாயெத் பின் சுல்தானின் பிறந்த வருடம் தோராயமாக 1916 அல்லது 1918 என்று குறிப்பிடப்படுகிறது. இவர் அல் அய்ன் என்ற இடத்தில் பிறந்தார். ஷெய்க் சுல்தான் பின் ஸாயெத் என்ற ஆட்சியாளரின் இளைய மகனாவார். இவர் தந்தை அபுதாபியின் ஆட்சியாளராக 1922 லிருந்து 1926 வரை இருந்தார். பின்னர் படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். இவரது பாட்டனார் ஷெய்க் ஸாயெத் பின் கலீஃபாவால் அடுத்த ஆட்சிக்கு உரியவர் இவர்தான் என்று அடையாளம் காட்டப்பட்டார். ஷெய்க் ஸாயெத் பின் சுல்தான் ஆட்சிக்கு வந்தபோது அபுதாபி ஏழு ஒப்பந்த மாகாணத்தில் இருந்தது. (நாம் ஐக்கிய அரபு வரலாறில் பார்த்தது.) முதல் 15 ஆண்டுகள் அல் அய்னிலேயே இருந்தார். அங்கு நவீன பள்ளிக்கூடங்கள் இல்லாததால் அடிப்படை மதக்கல்வியைப் பயின்றார். பாரம்பரிய அரபு கலைகளைக் கற்று கடுமையான இயற்கைப் பருவங்களில் பிதோயின் பழங்குடியினரின் அன்பினில் வளர்ந்தார். இவரது தந்தையைப் போலவே சில மாதம் ஆட்சியிலிருந்த ஷெய்க் ஸாயெத் பின் சுல்தானின் மூத்த சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். அதனால் அவர் தாயார் ஷெய்கா சல்மா பிந்த் புட்டி இனி சகோதரர்கள் ஆட்சிக்காக ஒருவருகொருவர் கொலை செய்து கொள்ளக்கூடாது என்று உறுதிமொழி பெற்றார். 1946 ல் அபுதாபியின் கிழக்குப்பகுதிக்கு கவர்னராக இருந்து அல் அய்னின் முவைஜி கோட்டையிலிருந்து ஆண்டார். அப்போது கடும் ஏழைகளாக இருந்த இப்பகுதி மக்கள் நோயினாலும் பாதிக்கப்பட்டார்கள். எண்ணெய் வளத்திற்காக தோண்ட ஆரம்பித்த போது உதவிகள் புரிந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக