வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 7

மூன்றாவது மற்றும் பிற சிலுவைப் போர்கள்- இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாதம்கூ.செ. செய்யது முஹமது
ஜெருசலம் முஸ்லீம்கள் போய்விட்டதை அறிந்த போப் எட்டாம் கிரிகோரி தன்னிலையை மறந்து போனான். உடனடியாக மூன்றாவது (1189-1192) சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தான். இம்முறை அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பலம் வாய்ந்தவர்களும் ஜெர்மனிய மன்னனும் ரோமப் பேரரசருமான  ஃப்ரெடெரிக் பார்பரொஸ்ஸா, இங்கிலாந்து மன்னனும், ‘லயன் ஹார்ட்’ என்ற பட்டப்பெயர் கொண்ட முதலாம் ரிச்சர்ட், ஃப்ரான்சின் மன்னன் பிலிப் இரண்டாம் அகஸ்டஸ் ஆகியோர் இணைந்தார்கள். இந்த மூன்றாவது சிலுவைப்போர் “மன்னர்களின் சிலுவைப்போர்” என்றும் அழைக்கப்பட்டது. இரண்டாம் சிலுவைப்போரில் கிறிஸ்தவ படைகளை தோல்வியடையச் செய்த பின், நூருத்தீன் ஸங்கி டமாஸ்கஸ் நகரைக் கட்டுப்படுத்தி சிரியாவை ஒன்று படுத்தினார். நம்பிக்கையான தளபதி ஷிர்குஹ் உடன் சலாவுத்தீனையும் எகிப்தை நோக்கி நைல் நதிக்கு ஒரு படையை அனுப்பினார். எகிப்தின் ஃபாத்திமிட் ஆட்சியாளர் சுல்தான் ஷவார், தன் உதவிக்கு ஜெருசலம் மன்னர் முதலாம் அமல்ரிக்கை அழைத்துக் கொண்டு, 1164 ல் பில்பெய்ஸ் என்ற இடத்தில் ஷிர்குஹ் படையை எதிர்கொண்டார். எகிப்திலிருந்து கிறிஸ்தவ சிலுவைப்படைகளின் கவனத்தை திசை திருப்ப நூருத்தீன் ஸங்கி தான் ஆண்டியாக்கைத் தாக்கினார். சிலுவைப்படைகளைத் தாக்கி பல தலைவர்களையும், ஆண்டியாக்கின் இளவரசர் மூன்றாம் பொஹிமாண்டையும் சிறைப்பிடித்தார். கொல்லப்பட்ட சிலுவைப்படை வீரர்களின் உடல்களை ஷிர்குஹ்ஹுக்கு அனுப்பி, பில்பெய்ஸில் அமல்ரிக் வீரர்களின் பார்வையில் படும்படி வைத்தார். இது அவருக்கு நல்ல பலனைத்தந்தது ஷவாரின் உதவிக்கு வந்த அமல்ரிக்கின் வீரர்கள் எகிப்தைவிட்டு ஓட்டம் பிடித்தார்கள்.
1167 ல் நூருத்தீன் ஸங்கி மீண்டும் ஷிர்குஹ்ஹை ஃபாத்திமிட்களின் எகிப்தைப் பிடிக்க அனுப்பினார். மீண்டும் ஷவார், ஜெருசலத்தின் அமல்ரிக்கின் உதவியை நாட ஷிர்குஹ் அலெக்ஸாண்டிரியாவை வென்றார். உதவவந்த அமல்ரிக் நன்றிகெட்டதனமாக எகிப்தின் பில்பெய்ஸ் நகரை பிடித்துக் கொண்டான். இம்முறை ஷவார், கிறிஸ்தவ அமல்ரிக்கை எதிர்க்க எதிரியான ஷிர்குஹ்ஹையே நாடினார். ஷிர்குஹ் ஷாவாருக்கு உதவிசெய்து அமல்ரிக்கை தோற்கடித்து, சிரியாவிலும், எகிப்திலும் வலுவான நிலையைப் பெற்றார். முஸ்லீம்கள் மீது மதவெறி கொண்டு வந்த சிலுவைப்படைகள் வந்த சமயத்தில் முஸ்லீம்களுக்கு துரோகம் செய்யும் விதமாக கிறிஸ்தவ அமல்ரிக்குடன் கூட்டு வைத்திருந்ததற்காக ஷவார் தூக்கிலிடப்பட்டார். 1169 ல் ஷிர்குஹ்கும் எதிர்பாராமல் மரணமடைந்தார். அவர் உறவினர் சலாவுத்தீன் அய்யூப் ஆட்சிக்கு வந்தார். நூருத்தீன் ஸங்கியும் மரணமடைந்து அவர் மகன் 11 வயது அஸ் ஸாலிஹ் ஆட்சியில் இருந்தார். முஸ்லீம் உலகம் வெறிபிடித்த கிறிஸ்தவ சிலுவைப்படைகளை எதிர்க்க சலாவூத்தீனையே நம்பினார்கள்.
ஜெருசலத்தின் அமல்ரிக்கும் 1174 ல் இறந்துபோக அவன் மகன் நான்காம் பால்ட்வின் ஆட்சியில் இருந்தான். வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டாலும், பால்ட்வின் சிறந்த தளபதியாய் இருந்து சாடில்லானைச் சேர்ந்த ரெய்னால்டுடன் இணைந்து சலாவுத்தீனை 1177 ல் மாண்ட்கிஸார்டு போரில் வென்றான். இவையெல்லாம் மூன்றாம் சிலுவைப்போருக்கு முன்பிருந்த நிலமைகள். 1189 ல் ரோமப்பேரரசர் ஃப்ரெட்ரிக் பார்பரொஸ்ஸாவுடன் 80,000 பேரும், 20,000 வீரர்களும் சேர்ந்தார்கள். மேலும், ஹங்கேரியின் மன்னன் மூன்றாம் பீலா 2,000 வீரர்களுடன் ஃப்ரெட்ரிக்குடன் இணைந்து கொண்டான். பைஸாந்திய பேரரசர் இசாக் இரண்டாம் ஆங்கிலஸ், ஃப்ரெட்ரிக்கிடமிருந்து தன் பிரதேசத்தைக் காப்பாற்றிக் கொள்ள முன் கூட்டியே சலாவுத்தீனிடம் ரகசிய உடன்பாடு செய்து கொண்டான். ரோம சுல்தான் ஃப்ரெட்ரிக்கின் படைகள் பாதுகாப்பாக அனடோலியாவைக் கடக்க உதவுவதாக வாக்களித்தான். ஆனால், பொறுமைகாக்காத ஃப்ரெட்ரிக் 1190 ல் சுல்தானிய தலைநகர் ஐகோனியத்தை நாசம் செய்தான். அங்கிருந்து சலீஃப் ஆற்றைக் கடக்கையில் ஆற்றின் உச்சியில் குதிரையிலிருந்து தவறி ஆற்றின் பாறையில் அடிபட்டு ஃப்ரெட்ரிக் இறந்து போனான். அவனின் படைகள் பெரும்பாலானவை அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஜெர்மனி திரும்பியது. ஃப்ரெட்ரிக்கின் மகன் ஸ்வாபியாவைச் சேர்ந்த ஃப்ரெட்ரிக் என்பவன் எஞ்சிய 5,000 வீரர்களுடன் ஆண்டியாக் வந்தான். வரும்போது தந்தையின் உடலை சுடுநீரில் வேகவைத்து சதைகளையெல்லாம் பிய்த்து எறிந்துவிட்டு, எலும்புகளை ஒரு பையில் போட்டுக்கொண்டு வந்தான். ஆண்டியாக் வந்த அவன் படையில் சிலர் உடல்நலமில்லாமல் இறந்துபோய் எண்ணிக்கைக் குறைந்தது. ஃப்ரெட்ரிக் கூட்டாளி மாண்ட்ஃபெர்ரட்டைச் சேர்ந்த கான்ராடை பாதுகாப்பாக அக்ரியைக் கடக்க உதவுமாறு வேண்டினான். வரும்வழியில் தந்தையின் எலும்புகளைப் புதைத்தான். ரிச்சர்டும், இரண்டாம் பிலிப்பும் மார்செல்லியில் சந்திப்பதாக திட்டமிட்டிருந்தார்கள். அதன்படி மார்செல்லி வந்த ரிச்சர்ட் பிலிப் வராததால் காத்திருக்க விருப்பமின்றி படகுகளைப் பிடித்து இத்தாலியின் பல இடங்களைச் சுற்றிக் கொண்டு மெஸ்ஸினா வந்து சேர்ந்தான். இதற்கிடையில் மார்செல்லி வந்து சேர்ந்த பிலிப், ரிச்சர்டு சென்றுவிட்டதை அறிந்து ஜினோயிஸ்களின் படகுகளை அமர்த்தி 1,300 பேர்கள், 650 வீரர்கள், 1,300 குதிரைகள் என்று மெஸ்ஸினா கிளம்பினான்.
முன்னதாகவே மெஸ்ஸினா வந்த மன்னன் ரிச்சர்ட் அதைக் கைப்பற்றி அங்கு சிறையிலிருந்த ஜோன் என்பவனை விடுவித்தான். ரிச்சர்டின் திருமண விஷயமாக அவனுக்கும், பிலிப்புக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அதாவடு பிலிப்பின் ஒன்றுவிட்ட சகோதரி அலிஸை ரிச்சர்டு மணப்பதாக இருந்தது. ஆனால் அவன் நவர்ரியின் பெரிங்காரியா என்பவளை மணக்க முடிவு செய்திருந்தான். பிலிப் நேரடியாக டைர் நகரம் வந்து அக்ரியை வெற்றி கொள்ள இணைந்து கொண்டான். சிஸிலியை விட்டுக் 180 கப்பல்கள், 39 படகுகளுடன் கிளம்பிய ரிச்சர்ட் கடுமையான புயல்காற்றில் சிக்கிக் கொண்டான். அவனின் கப்பல்கள் சில மூழ்கின. அதில் அவன் உறவினன் ஜோனும், காதலி பெரிங்காரியாவும் இருந்த கப்பல் பெரும் செல்வத்துடன் மூழ்கியது. ஆனால் பின்னால் அக்கப்பல் சைப்ரஸின் இசாக் டுகாஸால் கைப்பற்றப்பட்டிருப்பது அறியப்பட்டது. அவன் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து சிலுவைப்போருக்கு 500 வீரர்களையும் கொடுத்தான். ரிச்சர்ட் லிமஸ்ஸோலில் தங்கி பெரிங்காரியாவை மணந்து கொண்டான். 1191 ல் ரிச்சர்ட் அக்ரியை இரண்டாண்டு காலமாகப் போராடி கைப்பற்றினான். இதில் 24,000 முஸ்லீம் வீரர்கள் கொல்லப்பட்டு, 6,000 வீரர்கள் காயமடைந்தார்கள். அக்ரி நகரத்தின் பெரும் செல்வங்களைக் கொள்ளையடித்தான். 2,700 முஸ்லீம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் சங்கிலியால் கட்டி, சவுக்கால் அடித்த வண்ணம் அய்யாதெய் மலைக்கு இழுத்துச் சென்றான். அங்கு சிலுவைப்படைகள் அனைவரையும் ஈவுஇரக்கமின்றி கொன்றார்கள். இச் செய்தி சலாவுத்தீனின் பேரரசு முழுதும் உலுக்கியது.
ஜாஃப்ஃபா நகருக்கருகில் அர்சூஃப் என்ற இடத்தில் சலாவுத்தீனின் படையை தோற்கடித்த ரிச்சர்ட், ‘லயன் ஹார்ட்’ என்று பட்டம் சூட்டிக்கொண்டான். முஸ்லீம்களைப் பொறுத்தவரை இவர் போர் வரம்புகளை மீறிய ஒரு இரக்கமற்ற கொலைகாரன். ஏற்கனவே ஆங்கிலமன்னன் சலாவுத்தீனிடம் போட்டிருந்த ஒப்பந்தம் பிரகாரம் அவர்களால் டைர் நகரம் தாண்டி ஜெருசலம் செல்ல முடியவில்லை. அக்ரி நகரத்தில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருந்த கொடூரத்தைக் கேட்டு சலாவுத்தீன் வாய்விட்டு அழுது கண்ணீர் சிந்தினாராம். அந்த துயரத்திலேயே அவர் இறந்தும் போனார். மூன்றாவது சிலுவைப்போரில் ஜெருசலத்தை மீட்க முடியாமல் போனதால், போப் மூன்றாம் இன்னோசெண்ட் நான்காவது சிலுவைப்போருக்கு அழைப்புவிடுத்தான். நேரடியாக எகிப்தை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தான். ஆனால், அது மூன்றாவது சிலுவைப்போரை விட படுதோல்வி அடைந்தது. நான்காவது சிலுவைப்போருக்கு வெனிஷிய வணிகர்கள் பொருளுதவி செய்தார்கள். சிலுவைப்படைகள் கிறிஸ்தவ டால்மேஷியன் துறைமுக நகரமான ஸராவை கொள்ளையடித்து அழித்து நாசம் செய்தது. ஆரம்ப சிலுவைப்போருக்கு அழைப்புவிடுத்த முதலாம் அலெக்சியஸின் காண்ஸ்டாண்டிநோபிளையே 1204 ல் சிலுவைப்படைகள் நாசம் செய்தன. வெனீஷியர்களும், சிலுவைப்படைகளும் கான்ஸ்டாண்டிநோபிளை லத்தீன் பேரரசாக 1261 வரை வைத்துக்கொண்டன. நகரின் முக்கிய தேவாலயத்தை நாசப்படுத்தி கொள்ளைகளும் நடத்தினர். கன்னியாஸ்திரிகளை கற்பழித்து அசிங்கமான ஃப்ரென்ச் பாடல்களுக்கு நடனமாட வைத்து, பாட்ரியார்ச்சிகளின் அரண்மனையில் விபச்சாரிகளாகவும் ஆக்கினார்கள். புனித பைபிள் புத்தகங்களை கால்களில் போட்டு மிதித்தனர். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவையல்ல. சரித்திரம் பதிவுசெய்து வைத்ததையே இங்கு குறிப்பிடுகிறோம். அடுத்து 1212 ல் குழந்தைகள் சிலுவைப்போர் என்று ஐரோப்பாவின் 100,000 குழந்தைகளை அழைத்து வந்தார்கள். இப்படி அழைத்து வரப்பட்ட ஃப்ரென்ச் மற்றும் ஜெர்மனிய வெள்ளை நிற குழந்தைகளை அழைத்துவந்த கிறிஸ்தவர்களே அடிமைச் சந்தையில் விற்றார்கள். 12 வயதான க்லோயசைச் சேர்ந்த ஸ்டீபன் என்னும் சிறுவன் பின்னாளில் சொன்னதாவது, புனித ஜெருசலத்தை மீட்க இவன் தலைமையில் மற்ற குழந்தைகளைத் திரட்டி பசியுடனும், நோயுடனும் ஃப்ரான்சின் மார்செய்லி துறைமுகத்திற்கு வரச்சொல்லி ஃப்ரென்ச் அடிமை வியாபாரி ஒருவனால் மெடிட்டரேனிய அடிமைச்சந்தையில் விற்கப்பட்டார்கள். இன்னொரு அபத்தமாக ஜெர்மனிய நிக்கோலஸ் என்பவனால் ஆயிரக்கணக்கான ஜெர்மனிய பெண்குழந்தைகள் ரோமப்பேரரசில் விபச்சாரத்திற்காக விற்கப்பட்டார்கள். உபயோகமில்லாத இந்த நான்காவது சிலுவைப்போர் எகிப்தைத் தாக்குவதற்கு பதில் கிறிஸ்தவ பைஸாந்திய பேரரசை தாக்கியது. மீண்டும் போப் மூன்றாவது இன்னொசெண்ட் (1217-1221) எகிப்தைத் தாக்குவதற்கு ஐந்தாவது சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தான். ஃப்ரான்ஸ், ஜெர்மன் தலைமையில் அமைந்த இந்த படையும் எகிப்தை வெற்றி கொள்ள தவறியது. 1218 ல் நைல் நதியில் டமெய்டாவை வென்றது. 1,500 அரபு முஸ்லீம்களை படகில் நதியில் மூழ்கடித்துக் கொன்றார்கள். எகிப்தின் ஆட்சியாளராக இருந்த சலாவுத்தீனின் உறவினர் அல் மாலிக் அல் காமில் ஐந்தாம் சிலுவைப் படை வீரர்களை 1221 ல் போரிட்டு விரட்டினார். ஏழு ஆண்டுகள் கழித்து 1228 ல் மீண்டும் போப் கிரிகோரியால் ஆறாவது சிலுவைப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இம்முறை ஜெர்மனியின் சக்திவாய்ந்த இரண்டாம் ஃப்ரெடெரிக் தலைமை வகித்தான். இரண்டாம் ஃப்ரெடெரிக் மற்றும் அல் காமிலுக்கும் இடையில் இரத்தமின்றி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜெருசலம், பெத்லஹேம் மற்றும் நாசரெத் நகரங்களை கிறிஸ்தவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதற்கு முஸ்லீம்களிடத்தில் அல் காமிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். 1239 ல் ஒப்பந்தம் முடிந்து அந்நகரங்கள் மீண்டும் அல் காமில் வசம் வந்தது. 1248 ல் ஃப்ரான்சின் ஒன்பதாம் லூயிஸ் எகிப்தை எதிர்த்து ஏழாம் சிலுவைபோரைத் துவக்கினான். விரைவில் டமெய்டாவைக் கைப்பற்றி எகிப்தை நோக்கி முன்னேறிய லூயிஸை எகிப்து சுல்தான் தோற்கடித்தார். மன்னன் லூயிஸும் கைது செய்யப்பட்டான். பெரும் பணயத்தொகை பெற்றபின்னரே இவன் விடுவிக்கப்பட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக