புதன், 29 ஜூலை, 2015

ஈராக் வரலாறு 1

ஈராக் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
இப்போது இருக்கும் நவீன ஈராக் 1920 ல் வடிவமைக்கப்பட்டது. சரித்திர காலத்தில் பாபிலோனியாவாக இருந்தது. ஈராக் மத்தியில் மொசொபோடாமியாவின் கீழ் பகுதியும், குர்திஸ்தானில் மேல் மொசொபொடாமியாவையும், சிரிய மற்றும் அரேபிய பாலைவனப் பகுதியையும் கொண்டுள்ளது. 1957 ல் ரால்ஃப் சோலெச்கி என்பவர் கொலம்பியா பல்கலைக்கழக குழுவுடன் ஷனிடர் குகையில் நடத்திய ஆராய்ச்சியின் போது நியாண்டர்தால் மனித உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்தார். கீழ் மொசொபொடாமியாவின் உபைத் காலத்தில் சுமேரிய நாகரீகம் இங்கு இருந்திருக்கிறது. கி.மு. 1894 ல் அமோரிட் மன்னன் சுமுவாபும் பாபிலோனை தலைநகராக உருவாக்கி சுதந்திரமாக ஆண்டிருக்கிறார். மேல் மெசொபொடாமியாவை அஸ்ஸூரை தலைநகராக ஆக்கி அக்காடியன்கள் ஆண்டிருக்கிறார்கள். இந்த அஸ்ஸைரிய பேரரசு பாபிலோனியாவுக்கு மிகப்பெரிய வரலாறுகள் பக்கம் பக்கமாக இருக்கிறது. நாம் மேலோட்டமாகப் பார்ப்போம். 539 ல் மெசொபொடாமியா அக்காயிமெனிட் பெர்ஷியர்களால் சைப்ரஸ் தி கிரேட்டால் வெற்றி கொள்ளப்பட்டு இரண்டு நூற்றாண்டுகள் ஆளப்பட்டது. 331 ல் பெர்ஷியப் பேர்ரசு மாசிடோனியாவின் அலெக்ஸாண்டரால் வெற்றி கொள்ளப்பட்டு, செல்யூசிட் பேரரசாக ஆளப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் முதலாம் மித்ரிடேட்ஸ் என்பவரால் பார்த்தியன்கள் ஆட்சியாக ஆளப்பட்டது. இடையில் ரோம ட்ராஜனால் வெல்லப்பட்டு, உடனே பார்த்திய ஹத்ரியனால் வெல்லப்பட்டது. முதலாம் நூற்றாண்டில் ரோம சிரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு, மெசொபொடாமியா பகுதிகளில் கிறிஸ்துவம் வந்தது. ஆனாலும், நான்காம் நூற்றாண்டு வரை அஸ்ஸைரிய கடவுளான அஷூரின் கோவில்கள் அங்கிருந்தன. 7 ம் நூற்றாண்டில் இஸ்லாம் வரும் வரை சஸ்ஸானியர்கள் ஆண்டு வந்தார்கள். மேல் மெசொபொடாமியா டைக்ரீஸ், யூப்ரடீஸ் நதிகளால் சூழப்பட்டிருந்ததால் அல் ஜஸீரா (அரபியில் தீவு) என்று அழைக்கப்பட்டது. கீழ் மெசொபொடாமியா ஈராக் (அரபியில் செங்குத்தான பகுதி) என்று அழைக்கப்பட்டது. 602 ல் பெர்ஷிய பேரரசின் அரபு லக்மிட் மன்னராக அல் ஹிராஹ் ஆட்சி செய்தார். அவரிடமிருந்து பழங்குடியினர்களின் ஆக்கிரமிப்பு மூலம் ஷாஹென்ஷா இரண்டாம் கோஸ்ரூ ஆட்சி செய்தார். 634 ல் 5000 முஸ்லீம் வீரர்களுடன் போரிட்ட காலீத் பின் அல் வலீத் (ரலி) என்ற இஸ்லாமிய தளபதியின் மூலம் அரபு இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. மீண்டும் 636 ல் சாஃத் இப்ன் அபி வக்காஸ் (ரலி) என்னும் தளபதியால் பெர்ஷியர்களின் தலைநகர் செஸிபோனும் ‘கதீஸிய்யாஹ்’ போரில் வெல்லப்பட்டது. 638 ல் இஸ்லாமியர்கள் மேலும் மேற்கு சஸ்ஸானிய பகுதிகளை (தற்போதைய ஈராக் உட்பட) வென்று சஸ்ஸானிய பேரரசர் மூன்றாம் யஸ்திகெர்டை வடக்கு பெர்ஷியாவை நோக்கி விரட்டினார்கள். அவர் 651 ல் கொல்லப்பட்டார்.
புதிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பாதுகாப்பு நகரங்களாக புராதன பாபிலோனில் அல் குஃபாவையும், தெற்கில் பஸ்ராஹ்வையும் நிர்மாணித்தார்கள். வடக்கில் அஸ்ஸைரியன்களும், கிறிஸ்தவர்களும் பெருவாரியாக இருந்தார்கள். 8 ம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆட்சியாளராக இருந்த அப்பாஸிய கலீஃபாவால் பாக்தாத் நகரம் நிர்மாணிக்கப்பட்டது. இது உலகில் இஸ்லாமியர்களின் கலாச்சாரம், கலை, விஞ்ஞானம், கணிதம், பொது அறிவு, நுண்ணறிவு, மருத்துவம் ஆகியவற்றை எடுத்துச் செல்லும் முக்கிய நகரமாக விளங்கியது. 13 ம் நூற்றாண்டில் மங்கோலிய ஹுலகுகானால் சரணடையச் சொல்லி மறுத்ததால், ஆட்சியிலிருந்த கலீஃபா அல் முஸ்தஸீம் கொல்லப்பட்டு பாக்தாத் நகரம் பலத்த சேதமடைந்தது. இடையில் தைமூர் ஆட்சி செய்தார். 14 ம் நூற்றாண்டில் துருக்கி கருப்பின ஆடுகள் ஆட்சி செய்தார்கள். 1466 ல் அவர்களை துருக்கி வெள்ளையின ஆடுகள் வென்றார்கள். 16 ம் நூற்றாண்டில் மொத்த பகுதிகளும் ஓட்டோமானால் நியமிக்கப்பட்ட பாஷாக்களின் ஆட்சியின் கீழ் சென்றது. அன்றிலிருந்து இன்றுவரை பாக்தாத் நகரம் போர்களமாகவே இருந்து வருகிறது. உள்ளூர் போட்டி குழுக்களாலும், பழங்குடி இனத்தவர்களாலும், அருகாமை நாட்டு எதிரிகளாலும், சமீபத்தில் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பாலும் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒருகாலத்தில் அறிவை அள்ளி வழங்கிய பாக்தாத் போர்ப்பதட்டத்திலேயே இருக்கிறது. 15 மற்றும் 16 ம் நூற்றாண்டுகளின் இடையில் சஃபாவிட் ஆட்சிவம்சம் ஈராக் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்தது. 16 மற்றும் 17 ம் நூற்றாண்டுகளில் ஜியார்ஜிய மம்லுக்குகள் ஓட்டோமானுக்கு கப்பம் செலுத்தும் வகையில் ஈராக்கை ஆண்டுவந்தார்கள். இடையில் ஜானிஸ்ஸரீஸ் என்னும் படைகளாலும், பழங்குடியினர்களாலும் ஏற்பட்ட கலவரங்களால் ஓட்டோமான்கள் மம்லுக்குகளை நீக்கிவிட்டு ஈராக்கை நேரடியாக தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.
முதலாம் உலகப்போரில் ஓட்டோமான் ஜெர்மனியின் மத்திய அதிகாரத்தை ஆதரித்தது. குட் போரில் பிரிட்டிஷ் படைகள் ஓட்டோமானைத் தோற்கடித்து 1817 ல் பாக்தாதைப் பிடித்தது. பிரிட்டிஷ் அங்கிருக்கும் பழங்குடிகள், குர்துக்கள், கிறிஸ்தவர்களை அரசியல் ரீதியாக பொருட்படுத்தாமல் ஹாஷிமிட்களை ஆட்சியில் வைத்தார்கள். ஒருபுறம் குர்துக்களும், ஷியாக்களும் பிரிட்டிஷின் போக்கிலிருந்து விடுதலை வேண்டி சண்டையிட்டார்கள். பிரிட்டிஷார் அஸ்ஸைரியன்களைத் தூண்டிவிட்டு கலகம் செய்ய வைத்தார்கள். ஈராக் முழுதும் தன்னலக் குழுக்களாக ஆனது. 1932 ல் ஈராக் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் அடைந்தது. சுதந்திர ஈராக் அரபு சுன்னிப்பிரிவு முஸ்லீம்கள் வசமானது. இதனால் அஸ்ஸைரியன்கள், யஸிதி மற்றும் ஷியா பிரிவினர்கள் இடைவிடாமல் கலவரத்தில் இறங்கினார்கள். ஈராக் ஆட்சியாளர்கள் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார்கள். 1936 ல் பக்ர் சித்கி என்பவர் அரபு நாடுகளிலேயே முதல்முறையாகவும், ஈராக்கிலும் முதல்முறையாக இராணுவப்புரட்சியைச் செய்தார். ஹாஷிமிட்களின் மன்னராக யாசீன் அல் ஹாஷிமி ஈராக்கை ஆட்சி செய்தார். ஈராக்கின் இராணுவத் தளபதியாக பக்ர் சித்கி இருந்தார். 1936 ல் 11 ஈராக்கிய இராணுவ ஹெலிகாப்டர்கள் மன்னரை யாசீன் அல் ஹாஷிமை நீக்கிவிட்டு, பிரதம மந்திரி ஹிக்மத் சுலைமான் தலைமையில் மாற்று அரசு நிர்மாணிக்குமாறு நாடுமுழுதும் துண்டு பிரசுரங்களை வீசியது. மேலும், மக்களைத் தங்களுக்குக் கட்டுப்படாவிட்டால் இராணுவ நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என்றும் எச்சரித்து தேசிய மறுசீரமைப்புப்படை தளபதி என்று பக்ர் சித்கின் கையொப்பம் இடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக