வெள்ளி, 17 ஜூலை, 2015

அலாஒயிட்டுகள் வரலாறு 3

அடுத்து விட்டு விட்டு ஆறுமுறை ஆண்ட அப்பாஸின் மகன் முதலாம் ஹஸன் ஆட்சிக்கு 1873 ல் வந்தார். இவர் மொரோக்கோவின் வெற்றிகரமான சுல்தானாக இருந்தார். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் ஐரோப்பிய வெளிநாட்டு சக்திகளின் கையில் வீழ்ந்து கொண்டிருக்கும் போது, மொரோக்கோவில் அலவிட்டுகளின் அரண்மனை ஆட்சியின் பலத்தை முதலாம் ஹஸன் நிரூபித்தார். இராணுவம், அரசு நிர்வாகம் இரண்டையும் மாற்றி முன்னேற்றத்திற்கு வித்திட்டார். நான்காம் முஹம்மது இறந்த போது, அவர் மகன் மௌலாய் ஹஸன் என்பவர் ஆட்சிக்கு உரிமை கோரி இருந்தார். இவர் அவரை அடக்கினார். 1893 ல் ஃபெஸ் நகரத்திலிருந்து மர்ரகெஷ், மணற்பாங்கான எர்ஜ் செப்பி டேட்ஸ் பள்ளத்தாக்கு, ஓவர்ஸஸேட்ஸ், அய்த் பென்ஹத்தூ, உயர்ந்த பகுதியான கடல் மட்டத்திலிருந்து 2260 மீட்டர் உயரத்திலுள்ள டெலோயூட், துறைமுக நகரமான கூயல்மிம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அனைத்து பழங்குடி புரட்சியாளர்களையும் நேரடியாக சந்தித்து ஒன்றுபடுத்தினார். ஆறு மாதகாலம் இவர் மேற்கொண்ட கடும் பயணம் நல்ல பலனைத் தந்தது. க்லாஓவா குடும்பத்தினருக்கு இவர் டெலோயெட் நகரத்தில் வழங்கிய குருப் பீரங்கி இப்போதும் ஓவர்ஸஸேட் நகரத்தின் மையத்தில் உள்ளது. முதலாம் ஹஸன் 1877 ல் கீனிஃப்ராவின் ஸயனிஸ் பழங்குடியின தலைவர் மௌஹா ஓ ஹம்மௌ ஸயானி என்பவரை கைட்ஸ் தலைவராக நியமித்தார். கொஞ்சம் இவரைப் பற்றிப் பார்ப்போம். இவரை அமஹ் ஸோயூனி பென் மௌஸா என்றும் அழைப்பார்கள். கீனிஃப்ரா மாகாணத்தில் ஸயானிஸ் மக்களின் தலைவராக இருந்தார். ஃப்ரான்சுக்கு எதிராக புகழ்பெற்ற ஸையான் போரை கொரில்லா முறையில் நடத்தினார். எல்லா பழங்குடி மக்களையும் இணைத்து சில சிறிய போர்களையும் நடத்தினார். 1914 ஜூனில் ஃப்ரென்சின் முன்ணனிப்படையினரால் கீனிஃப்ரா நகரம் கைப்பற்றப்பட்டு, உடனே நவம்பரில் மௌஹா ஓ ஹம்மௌ ஸயானியால் எல்ஹ்ரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது. இதனால் ஃப்ரான்சுக்கு 600 பேர் இறந்து பெரும் சேதமும் ஏற்பட்டது. வெற்றி பெற்றாலும் கீனிஃப்ரா நகரை விட்டு மலைப்பகுதிக்கு சென்று விட்டார். 1920 ல் இவர் மகன் ஹஸன் என்பவர் ஃப்ரென்ச் ஜெனரல் போயீமிராவ் என்பவரிடம் சரணடைந்தார். இதனால் மொரோக்கோவிற்கு பெரும் பலம் போனது. இவர் பெயரில் அய்த் ஹம்மோவ் ஓ சைத் என்ற கிராமமும், ஒரு கல்லூரியும் உள்ளது. இவரின் சமாதி பென் செர்ரோவில் உள்ளது. 20 ம் நூற்றாண்டில் ஃப்ரான்சை எதிர்த்து முக்கிய நபராக மாறி புகழ் பெற்றார். அதே போன்று 1887 ல் மேற்கு சஹாராவில் மா அல் அய்னைய்ன் என்பவரை கைட்ஸ் தலைவராக நியமித்தார். இவரும் மொரோக்கோவின் சுதந்திரத்திற்கு பாடுபட்டு புகழ் பெற்றார். 1894 ல் முதலாம் ஹஸன் மரணமடைய ரபாத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
மா அல் அய்னைய்ன் என்பவரைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். சஹாரன் மூரிஷ் இனத்தைச் சேர்ந்த இவர் காதிரிய்யா சூஃபி பிரிவின் சகோதர அமைப்பான ஃபத்லிய்யா என்ற அமைப்பைத் துவக்கிய முஹம்மது ஃபாதில் மாமின் என்பவரின் மகனாவார். மாரிடானியாவில் மதத்தலைவராக இருந்த ஷெய்க் சாத் பூஹ் என்பவர் இவரின் மூத்த சகோதரர். மா அல் அய்னைய்ன் என்ற இவர் பெயருக்கு நீர் நிரம்பிய இரு கண்கள் என்று பொருள். இவர் தகப்பனாரின் வழிமுறையில் பார்த்தால் சில நூற்றாண்டுகளுக்கு முன் காதிரிய்யா ஷெய்க் சிடி அஹ்மத் எல் பெக்காய் தற்போதைய அல்ஜீரியாவாகிய டின்டூஃப் பள்ளத்தாக்கில் ஓவலடா என்ற பகுதிக்கு வந்து குடியேறினார். அந்த் காதிரிய்யா இயக்கத்தின் மதகுருவாக மா அல் அய்னைய்னின் தந்தை இருந்ததால் இவரும் விரைவில் புகழுக்கு வந்தார். பழங்குடியின மாணவர்கள் பலர் இவரிடம் இஸ்லாமிய சட்டம் பயின்றார்கள். 1898 ல் ஸ்மாராவில் ரிபாத் என்னும் விடுதி ஒன்றைக் கட்டினார். ஆரம்பத்தில் இது பயணிக்கும் மலைப்பகுதி மக்கள் சற்று ஓய்வெடுத்து தண்ணீர் அருந்திவிட்டுச் செல்லும் இடமாக இருந்தது. பின்னர் ஐரோப்பிய காலனிப்படைகளையும், ஃப்ரென்ச் படைகளையும் எதிர்ப்பதற்கு இந்த இடம் பயன்பட்டது. முந்தைய ஆட்சியாளர் அப்தெல் அஜீஸ் ரிபாத்தைக் கட்ட பொருட்களையும், பணி ஆட்களையும் தந்து உதவினார். பின்னர் மா அல் அய்னைய்ன் அங்கு ஒரு இஸ்லாமிய நூலகத்தையும் அமைத்தார். நாளடைவில் மொரோக்கோவில் கிறிஸ்தவ ஐரோப்பியபடைகள் ஆக்கிரமிப்பு செய்ததால் அவர்களை மா அல் அய்னைய்ன் எதிர்த்தார். அவர்களை தற்போதைய மாரிடானியா, தென் மொரோக்கோ, மேற்கு சஹாரா, தெற்கு மேற்கு அல்ஜீரியா ஆகிய பகுதிகளில் நுழைய விடாமல் தடை செய்தார். சுல்தான் இவரை அதிகாரம் செய்யாமல் அவர் போக்கில் சுதந்திரமாக போராட விட்டு விட்டார். ஐரோப்பியர்களுக்கு எதிராக ஜிஹாத் என்று அறிவித்த இவர் ஆயுதங்களை ஆட்சியாளரிடம் பெற்று பகிரங்க தாக்குதல் நடத்தினார். நேரடியாக ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரத்தில் பலம் வாய்ந்த ஒரு சிறிய படையைத் தயார் செய்தார்.
1906 ல் சுல்தான் அப்துல் அஜீஸ் அல்ஜிசிராஸ் கூட்டத்தில் ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்திற்கு ஒப்புக்கொண்டதால் கோபமுற்ற மா அல் அய்னைய்ன் சுல்தான் சகோதரர் அப்தெல் ஹஃபீதுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் சுல்தானிடமிருந்து ஆயுதம் வருவது நின்று போனது. ஆனாலும் விடாமல் அப்துல் அஜீஸை எதிர்த்து அப்தெல் ஹஃபீதை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார். 1909 ல் டிஸ்நிட் பகுதியில் தானொரு மெஹ்தி என்று அறிவித்தார். புதிய சுல்தானும் நாளடைவில் ஐரோப்பிய சக்திகளுக்கு ஆதரவாகப் போனதால் 6000 பேர் கொண்ட படையைத் தயார் செய்து அவரை ஆட்சியை விட்டுத் தூக்கினார். 1910 ல் ஃப்ரென்ச் ஜெனரல் மொய்னியரிடம் தோற்றுப் போய் சில மாதங்கள் கழித்து டிஸ்நிட்டில் இறந்து போனார். இவர் மகன் எல் ஹிபா என்பவர் (நீல சுல்தான் என்று அறியப்பட்டவர்) ஃப்ரான்சை எதிர்த்துத் தோற்றுப் போனார். புரட்சியினால் மா அல் அய்னைய்ன் மொரோக்கோவில் மிகவும் புகழப்பட்டார். இவரின் சந்ததியினர் இப்போதும் மொரோக்கோவின் பலதுறைகளில் அதிகாரிகளாக இருக்கிறார்கள். டிஸ்நிடில் இவர் அடக்கவிடம் புனிதஸ்தலமாக இருக்கிறது.
அடுத்து முதலாம் ஹஸனின் மகன் அப்தெல் அஜீஸ் 16 வயதில் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு ஆட்சியின் பின் பலமாக பா அஹ்மத் பின் மூசா என்பவர் இருந்தார். ஆறு ஆண்டுகள் அப்தெல் அஜீஸுக்கு துணையாக இருந்த இவர் 1900ல் விஷமிட்டு படுகொலை செய்யப்பட்டார். பின் தானே ஆட்சி செய்ய ஆரம்பித்த அப்தெல் அஜீஸ் தென்பகுதி அரபி ஒருவரான எல் மெனிபி என்பவரை நிர்வாகத்திற்கு தலைமை அறிவுரையாளராக வைத்துக் கொண்டார். இவரின் தாயார் ஜியார்ஜியாவைச் சேர்ந்தவராக இருந்ததால் ஐரோப்பாவிலிருந்தும் இவருக்கு ஆலோசனைக் கிடைத்தது. ஆனால் மொரோக்கோவின் உள்நாட்டு அரசியலுக்குப் பொருந்தவில்லை. மேலும் வெளிநாட்டுத் தொடர்புகளால் வெறுக்க ஆரம்பித்தார்கள். அப்தெல் அஜீஸ் புதிய வரிகளின் மூலம் வருமானம் ஈட்ட முயற்சித்தார். ஆனால், அது ஊதியம் கொடுக்கவும், ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும் கூட போதவில்லை. ஐரோப்பியர்கள் கூட இவரை நாட்டைக் கெடுக்கிறார் என்று கருத்து வெளியிட்டார்கள். வணிகத்திற்கு பெரிதும் உதவி வருவாய் அதிகரிக்க ஏதுவாய் இருக்கும் என்று கருதப்பட்டு பிரிட்டிஷ் பொறியாளர்களை வைத்து ஃபெஸ் நகரத்திற்கும் மெக்னெஸ் நகரத்திற்கும் இடையே இர யில் போக்குவரத்தைக் கொண்டுவர இருந்தார். இதற்கு அல்ஜீரியன் முன்ணனி எதிர்ப்பு தெரிவித்து கலகம் செய்தது. ஜெர்மனி அப்தெல் அஜீஸுக்கு ஆலோசனை தந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு சர்வதேச நாடுகளை அழைத்து ஒரு மாநாடு நடத்தச் சொன்னது. இது அன்னியர்களை நமது நாட்டின் ஆக்கிரமிப்பிலிருந்து விரட்ட ஏதுவாய் இருக்கும் என்று கருதி 1906 ல் சர்வதேச மாநாடு நடத்தினார். அது ஒன்றும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. 1907 ல் மொரோக்கோவின் தென்பகுதி க்லாஓவா பழங்குடித்தலைவர் சி எல்மதனி எல் க்லாஓவா அப்துல் அஜீஸின் மூத்த சகோதரர் அப்தெல் ஹஃபித் என்பவரை வர வழைத்து கலகம் செய்து மர்ரகெஷ்ஷைப் பிடித்தார். இதற்கிடையில் காஸாப் ளாங்காவில் ஐரோப்பியர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அதன் தொடர்பில் மர்ரகெஷ் ஃப்ரான்சின் பிடியில் சென்றது. அப்தெல் அஜீஸ் ஃபெஸ் ஸுக்கு வருகை தந்து ஐரோப்பியர்களிடம் தன் சகோதரர்களுக்கு எதிராக உதவி கோரினார். ஃப்ரான்சை நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த தனக்கு பணம் தந்து உதவுமாறு கோரினார். ஐரோப்பாவின் தோழமையை விரும்பாத ஃபெஸ்ஸின் உலமா சபை தலைவர் மா அல் அய்னைய்ன் 1908 ல் இவரை நீக்கிவிட்டு இவருக்கு பதில் சகோதரர் அப்தெல் ஹஃபித்தை சுல்தானாக அங்கீகரிப்பதாக அறிவித்தது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள படையுடன் மர் ரகெஷ் சென்றார். ஆனால் முழுமையாக ஆட்சி நீக்கப்பட்ட இவர் ஃப்ரான்சின் காஸாப்ளாங்கா அருகி லுள்ள செட்டட் பகுதிக்குத் தப்பிச் சென்றார். பின்னர் சகோதரர் அப்தெல் ஹஃபீதிடம் சமாதானம் செய்து கொண்டு டான்ஜீயரில் தங்கி ஓய்வூதியம் பெற்றார். அப்தெல் ஹஃபீதாலும் நிம்மதியாக ஆள முடியவில்லை. 1943 ல் டான்ஜியரில் அப்தெல் அஜீஸ் மரணமடைந்தார். இவருடைய கதாபாத்திரம் கற்பனை கலந்து ‘அயோன் பெர்டிகாரிஸ்’ என்ற பாத்திரத்தில் 1975 ல் எடுக்கப்பட்ட ‘தி விண்ட் அண்ட் தி லயன்’ என்ற ஆங்கிலப்படத்தில் காட்டப்பட்டது.
1908 ல் ஃபெஸ் நகரத்தலைவர் மா அல் அய்னைய்ன் ஆட்சியில் அமர்த்திய அப்தெல் ஹாஃபித் சகோதரர் அப்தெல் அஜீஸ் ஐரோப்பியர்களுக்கு கொடுத்த பல சலுகைகளை எதிர்த்தார். ஆனால் இவரால் ஆட்சியை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க முடியாமல் ஃப்ரான்சின் பின்ணனியில் ஆட்சி செய்தார். அப்தெல் ஹஃபீதின் இராணுவத்திற்கு ஆன்றூ பெல்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி பயிற்சி அளித்தார். 1912 ல் ஃப்ரான்சுக்கு சென்ற இவர் திரும்பி வந்த போது தார் எல் மக்ஸின் என்ற சுல்தானிய அரண்மனை இவரை டான்ஜியருக்கு விரட்டியது. சில மாதங்கள் கழித்து ஃப்ரான்ஸ் அப்தெல் ஹஃபீதின் இன்னொரு சகோதரர் யூசுஃப் பென் ஹஸன் என்பவரை ஆட்சியாளராக அறிவுறுத்தியது. யூசுஃப் பென் ஹஸன் சுல்தான் முதலாம் ஹஸனின் ஐந்தாவது மனைவி ருக்கியாவுக்குப் பிறந்தவர். மெக்னெஸ் நகரத்தில் பிறந்த இவர் இளைய மகனாவார். இவர் பாதுகாப்பைக் கருதி ரபாத்தைத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டார். அமைதியற்று குழப்பமாக இருந்த யூசுஃப் பென் ஹஸனின் ஆட்சி ஸ்பெயின், ஃப்ரான்சிடமிருந்து சற்று உயர்வு பெற்றது. மா அல் அய்னைய்னின் மகன் அஹ்மத் அல் ஹிபாவின் ஆதரவில் பெர்பெர் சஹ்ரஊய் பழங்குடியினரின் தலைவர் அப்த் எல் க்ரிம் என்பவர் தலைமையில் ரிஃப் மலைப் பகுதியில் வெகு வேகமாக அதிகாரமெடுத்து தொந்திரவாக இருந்தார்கள். முதலில் ஸ்பெயின் அதிகாரத்திலிருந்த இந்தப் பகுதி பின்னர் ஃப்ரென்ச் அதிகாரத்திற்கு மாறியது. ஃப்ரான்சும், ஸ்பெயினும் இணைந்த பிறகு, ஸ்பெயின் 1925 ல் சஹ்ரஊய் பழங்குடியினரின் புரட்சியை அடக்கினார்கள். யூசுஃப் பென் ஹஸனின் ஆட்சி திடீரென்று கவிழ்ந்தது. 1927 ல் உரிமியா என்ற நோயால் மரணமடைந்தார்.
இவருக்குப் பின் இவர் மகன் ஐந்தாம் முஹம்மது அலவிட்டுகளின் மொரோக்கோ சுல்தானாக ஆனார். இவர் இரண்டு முறை ஆட்சி செய்தார். முதல் முறையாக 1927-1953 வரையிலும், 1957 லிருந்து 1961 வரையிலும் ஆட்சி செய்தார். முதல் ஆட்சியில் சுல்தானாகவும், இரண்டாவது ஆட்சியில் மன்னராகவும் இருந்தார். இவருக்கு முதல் மனைவியாக லல்லா ஹனிலா பிந்த் மாமூன் என்பவர் மூலம் லல்லா ஃபாத்திமா ஸொஹ்ரா என்ற மகள் இருந்தார். இரண்டாவது மனைவியாக அரபு இன தஹார் பின் ஹஸன் என்பவரின் மகள் லல்லா அப்லா பிந்த் தஹார் இருந்தார். இவர் மூலம் ஐந்து குழந்தைகளாக மன்னர் இரண்டாம் ஹஸன், லல்லா அய்ச்சா, லல்லா மலிகா, மௌலாய் அப்துல்லாஹ், லல்லா நுஸா ஆகியோர் இருந்தார்கள். மூன்றாவது மனைவியாக லல்லா பஹியா பிந்த் அன்தர் மூலம் லல்லா ஆமினா என்ற மகளும் இருந்தார். மேலும் லல்லா யகுத் என்ற துருக்கிய மனைவியும் இருந்தார். இதில் 1929 ல் திருமணம் செய்து கொண்ட மனைவி லல்லா அப்லா பிந்த் தஹார் 100 வயதுக்கு ஆறு மாதம் குறைவாக 1992 ல் மரணமடைந்தார். இவரது பெயரில் தான் மொரோக்கோ விமான நிலையம் உள்ளது. மேலும் மொரோக்கோவின் ஒவ்வொரு நகரத்திலும் பல்க லைக்கழகம், அரசு மற்றும் பொது நிறுவனம், குடியிருப்பு பகுதி, தெருப்பெயர்கள் என்று இவரின் பெயர் இருக்கும். துனீஷியா நாட்டின் தலைநகர் துனீசில் ஒரு குடியிருப்பு பகுதிக்கு இவரின் பெயர் சூட்டப்பட் டுள்ளது. யூசுஃப் பென் ஹஸனுக்கு துனீஷியா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், லிபியா, ஈராக், லெபனான், சிரியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகள் போட்டி போட்டு பல பட்டங்களை வழங்கியது. ஐந்தாம் முஹம்மதை ஃப்ரான்ஸ் ஆட்சியை விட்டு நீக்கி மடகாஸ்கருக்கு துரத்தி யது. ஐந்தாம் முஹம்மது தான் சுல்தான் என்பதை மாற்றி மன்னர் என்று பெயர் சூட்டிக் கொண்டார். யூசுஃப் பென் ஹஸன் ஒரு நுணுக்கமான அறுவை சிகிச்சையின் போது 1961ல் மரணமடைந்தார். சிலர் இவரது மரணத்திற்கு மகன் இரண்டாம் ஹஸன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்கள்.
ஐந்தாம் முஹம்மதை வெளியேற்றிய பின் ஃப்ரான்ஸ் அவரின் தூரத்து உறவினரான முஹம்மது பென் ஆரஃபா என்பவரை 1953 ல் ஆட்சியில் அமர்த்தியது. ஏற்கனவே ஐந்தாம் முஹம்மதை ஃப்ரான்ஸ் ஆட்சியில் அமர்த்தியபோது மொரோக்கோவின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருந்த ஸ்பெயின் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஐந்தாம் முஹம்மது மொரோக்கோவை சுத ந்திரமாக்க வேண்டும் என்று கேட்டதால் தான் ஃப்ரான்ஸ் மடகாஸ்கருக்கு விரட்டியது. மேலும் அப்போது ஃப்ரான்ஸ் சுதந்திரத்திற்கு ஒப்புக் கொண்டது போல் நடித்தது. இப்போது முஹம்மது பென் ஆரஃபாவை ஆட்சியில் வைத்ததால் மொரோக்கோ மக்களின் கோபம் சுதந்திரத்தை நோக்கி திரும்பியது. இந்த ஃப்ரான்சின் பொம்மை மன்னர் முஹம்மது பென் ஆரஃபா 1976 ல் ஃப்ரான்சிலேயே மரணமடைந்தார். நான்காண்டு மட்டுமே ஆட்சி செய்த முஹம்மது பென் ஆரஃபாவிற்குப் பிறகு, ஐந்தாம் முஹம்மதுவுக்கும், இரண்டாவது மனைவி லல்லா அப்லா பிந்த் தஹார் என்பருக்கும் பிறந்த மகன் இரண்டாம் ஹஸன் அலவிட்டுகளின் மொரோக்கோ மன்னராக ஆட்சிக்கு 1961 ல் வந்தார்.
இரண்டாம் ஹஸன் ரபாத்தில் இம்பீரியல் கல்லூரியில் படித்தார். பின் ஃப்ரான்சின் போர்டூவக்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். தந்தையை நாட்டை விட்டு ஃப்ரான்ஸ் வெளியேற்றும் போதே இரண்டாம் ஹஸனையும் உடன் வெளியேற்றியது. அக்காலங்களில் தந்தைக்கு அரசியல் ஆலோசகராக இரண்டாம் ஹஸன் இருந்தார். தந்தை, மகன் இருவரும் 1955 நவம்பரில் மொரோக்கோ திரும்பினார்கள். 1966 பிப்ரவரியில் ஃப்ரான்சுடன் மொரோக்கோவின் சுதந்திரத்திற்கான பேச்சு வார்த்தையில் தந்தையுடன் கலந்து கொண்டார். தந்தை இவரை தான் ஆரம்பித்திருந்த ‘ராயல் ஆர்ம்ட் ஃபோர்ஸெஸ்’ என்ற அமைப்புக்கு 1956 ஏப்ரலில் இரண்டாம் ஹஸனை தலைவராக்கினார். பழங்குடி போராளிகள் இருந்த ரிஃப் மலைப்பகுதிக்குச் சென்றார். 1957 ல் ஐந்தாம் முஹம்மது இவரை பட்டத்து இளவரசராக அறிவித்தார். தந்தை இறந்த பிறகும், முஹம்மது பின் ஆரஃபாவிற்குப் பிறகும் இரண்டாம் ஹஸன் 1961 பிப்ரவரியில் அலவிட்டுகளின் மொரோக்கோ மன்னரானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக