வியாழன், 9 ஜூலை, 2015

மொகலாய வரலாறு 19

ஷஹாப் உத் தின் முஹம்மது ஷாஹ்ஜஹான்  
கூ.செ.செய்யது முஹமது
                            ஷாஜஹான் டெக்கானிலிருந்து திரும்பியதும் அதுவரை தற்காலிக ஆட்சியிலிருந்த குஸ்ருவின் மகன் தாவர் பக் ஷ் பெர்ஷியா வுக்கு தப்பிச் சென்றார். அவரின் ஆதரவாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டும், கொலையும் செய்யப்பட்டனர். 1628 பிப்ரவரியில் ஆக்ராவில் ஷாஜஹான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ‘அபுல் மஸஃப்ஃபர் ஷஹாப் உத் தின் முஹம்மத் சாஹிப் கிரானி இ சானீ ஷாஹ்ஜஹான் பாதுஷா காஸி’ என்ற சிறப்புப் பெயரை பெற்றார். இவர் பெயரில் புதிய நாணயங்கள் வெளியிடப் பட்டு, வெள்ளிக்கிழமை தொழுகையில் பெயரும் மொழியப்பட்டது. புதிய சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இஸ்லாமிய சட்டங்களை தீவிரமாக பின்பற்றினார். ஆக்ரா நகரை அக்பராபாத் என்று பெயர் மாற்றி னார். நன்றாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வையும், தரத்தை யும் அதிகப்படுத்தினார். தன் சகோதரி நூர்ஜஹானின் அனைத்து சூழ்ச்சி களையும் முறியடித்து தான் ஆட்சிக்கு வர முழு காரணமான அசஃப் கான் மீது ஷாஜஹான் பெரும் மதிப்பை வைத்திருந்தார்.
   பந்தேளா என்ற ஒரு கூட்டத்தினரின் தலைவன் பீர் சிங் என்பவர் தான் அல்லாமா அபுல் ஃபஸ்ல் என்பவரைக் கொன்றார். இந்த கூட்டத்தினர் அருகாமையில் வசிப்போர்களை மிரட்டி அதிகாரம் செய்து வந்தனர். ஜஹாங்கீரின் ஆட்சி இறுதியில் சற்று பலம் குறைந்த வேளையில் இவர்களின் அதிகாரம் மேலோங்கியது. 1628 ல் பீர்சிங் இறந்த பிறகு அவர் மகன் ஜோஹர்சிங் பிரச்சினை உண்டு பண்ணினார். இதற்காக அரசவை க்கு வந்து விளக்கம் சொல்ல அழைக்கப்பட்டார். தன் மக்களிடம் தனக்கிருக்கும் செல்வாக்கினாலும், மலை சார்ந்த தங்கள் பகுதியில் யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற மமதையாலும் அரசவையில் மன்னரிடம் பகையை வளர்த்துக் கொண்டார். தனது இடம் ஓர்ச்சா (உண்ட்சா) வந்த ஜோஹர்சிங் படைகளை கூட்டி, சாலைகளை அடைத்து புரட்சியில் ஈடுபட்டார். ஷாஜஹானும் அதிகாரிகளுக்கு புரட்சியை அடக்க உத்தரவிட்டார். இஸ்லாம்கான், ஃபிரோஸ்கான் மற்றும் மஹபத்கான் ஆகியோர் மூன்று திசைகளில் பந்தேளா கோட்டையைத் தாக்கினார்கள். மூவாயிரம் பேர் மரணமடைய கடும் போருக்கு பிறகு, ஜோஹர்சிங் கைது செய்யப்பட்டார்.
    ஷாஜஹான் ஆட்சிக்கு வந்த முதல் நௌரோஸ் பண்டிகை வெகு சிறப்பாக அரச குடும்பத்தினர், அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடும்ப உறவினர்களின் பரிசுகளுக் கென ஒரு கோடியே அறுபது லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டது. மொக லாய இராணுவத்தில் கான் ஜஹான் லோதி (சலாபத் கான்) என்பவர் இருந்தார். ஜஹாங்கீர் இறந்த போது இவரும் இராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தார். ஷாஜஹான் ஆட்சிக்கு வந்த பின் பணிவாக நடந்ததால் மன்னிக்கப்பட்டார். டெக்கான் பகுதிக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். பின் இவர் அரசவை பணிக்கு அழைக்கபட்டு எட்டு மாதங்கள் இருந்தார். ஆனால் சில சமயம் மறுத்தும், வெறுப்பாகவே பணியைச் செய்தார். இது உளவாளிகள் மூலம் தெரியவர கான்ஜஹானும் அவர் மகனும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இராணுவ பின்புலம் இருந்ததால் பாதுகாப்பைக் கருதி, ஷாஜஹானும், அஸ்ஃப்கானும் அவரை தோல்பூரில் சிறை வைக்க அனுப்பினார்கள். 1630-32 ல் குஜராத், காந்தேஷ், டெக்கான் பகுதியில் கடும் பஞ்சம் நிலவியது. இதனால் பலர் உயிரிழந்த னர். எலும்புத் துகள்களை மாவில் கலந்தும், நாய் கறியை மாமிசத்தில் கலந்தும் சிலர் விற்று வந்தார்கள். பெருமளவு மக்களும் வேறு இடங்களு க்கு குடி பெயர்ந்தார்கள். ஷாஜஹான் எழுபது லட்ச ரூபாய் அளவுக்கு மூன்றிலொரு பங்கு நிலங்களுக்கு வரியை தள்ளுபடி செய்தார். பாதிக்கப்பட்ட இடங்களில் அரசு உணவகங்களைத் திறந்து இலவசமாக சமைக்கப்பட்ட உணவுகளை வழங்கச் செய்தார். அதிகம் பாதிக்கப்பட்ட குஜராத்தின் அஹமதாபாதுக்கு நிறைய செலவிடப்பட்டது. அக்கால கட்டத்தில் இது போன்ற பெரும் பஞ்சத்தை திறமையாக சமாளித்தது ஷாஜஹானின் ஆட்சியில் தான். இதை ஆங்கிலேய சரித்திர ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
    அக்பர் மற்றும் ஜஹாங்கீரால் அனுமதிக்கப்பட்டிருந்த போர்ச்சுகீசியர்கள் ஹூக்ளியின் இருபுறமும் பல தொழிற்சாலைகளை கட்டி இருந்தார்கள். லஞ்சத்தின் மூலம் சுங்கவரி ஏய்பு செய்து வந்தார்கள். மேலும், ஹுப்ளியின் பகுதிகளில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஏழை களை ஏமாற்றி வந்தார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் அளித்திருந்த சலுகைகளை தவறாக பயன்படுத்தி அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பைச் செய்தார்கள். கொடூரமான முறையில் முஸ்லீம், ஹிந்து மக்களை கப்பலில் மேல்நாடுகளுக்கு கடத்தி அடிமை வியாபாரம் செய் தார்கள். கிறிஸ்தவ மதபோதகர்கள் கடுமையான முறையில் பலரை மதமாற்றம் செய்ய முயன்றார்கள். மும்தாஜின் இரண்டு பணிப்பெண்கள் காணாமல் போனதைப்பற்றி விசாரிக்கும் போது மேற்படி அடிமை கடத்தல் வியாபாரம் தெரியவந்தது. 1631 ல் ஷாஜஹான் காசிம்கான் என்பவரை பெங்காலுக்கு கவர்னராக்கி, அவர்களை மேற்படி போர்ச்சுகீசியர்களின் விசாரித்து நடவடிக்கை எடுக்கச் செய்தார். மேற் கூறியவைகளை கண்டறிந்து மூன்று மாதகாலம் காசிம்கான் அவர்களின் கோட்டயைத் தாக்கினார். இதுவரை நடந்த இழப்புகளுக்கு ஈடாக ஒரு லட்ச ரூபாய் தருவதாகக் கூறி, பேரரசருக்கு சமாதானம் அனுப்பினார்கள். ஆனால் மறைமுகமாக பெரிய தாக்குதலுக்குத் தயாரானார்கள். ஏழாயிரம் துப்பாக்கி ஏந்திய வீரர்களை மொகலாயப்படைகளுக்கு எதிராக தயார் செய்தார்கள். வாணிபத்திற்கென வந்தவர்களின் இந்த செயலினால் பெரும் கோபம் கொண்ட மொகலாயர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். போர்ச்சுகீசியர்களின் தொழிற்சாலைகள், கோட்டைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மன்னிப்பு கேட்டு தாங்கள் இஸ்லாமிய ராக (எந்த கொடுஞ்செயலுக்குப் பிறகு ஒருவர் இஸ்லாமியராக மதம் மாற ஒப்புக்கொண்டால் மன்னித்து விடும் பழக்கம் உலகமெங்கும் அனைத்து ஆட்சியாளர்களிடமும் இருந்தது.) மதம் மாற ஒப்புக் கொண்டவர்களை மன்னித்தனர்.  மொகலாயப் படையில் ஆயிரம் வீரர்கள் வரை இறந்தார்கள். பத்தாயிரம் பேர் வரை போர்ச்சுகீசியர்கள் சிறை பிடிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். இதனால் போர்ச்சுகீசியர்களின் வாணிபம் முடிவுக்கு வந்தது.
           அர்ஜுமண்ட் பானு பேகம் என்ற மும்தாஜ் மஹல் மிகவும் பேரழகும், புத்திகூர்மை வாய்ந்தவராக இருந்தார். அசஃப்கானின் மகளாக இருந்த இவர் மொகலாயப் பேரரசில் புகழ் வாய்ந்த பெண்மனியாக இருந்தார். 1594 ல் பிறந்த மும்தாஜ் மஹல் 1612 ல் ஷாஜஹானை மணந்தார். மும்தாஜ் மஹலின் பேரழகாலும், புத்திசாலித் தனத்திற்காகவும் ஷாஜஹான் இவரை பெரிதும் விரும்பினார். தந்தையிடம் பகையாகி ஊர்ஊராக சுற்றிக் கொண்டிருந்த போது ஷாஜானுக்கு சிறந்த நண்பன் போலவும், ஆலோசனை கூறியவராகவும் இருந்தார். ஷாஜஹான் பதவியேற்றவுடன் ‘மலிகா இ ஸமான்’ என்ற சிறப்புப் பட்டமளிக்கப்பட்டார். எந்த ஒரு விஷயமானாலும் ஷாஜஹான் இவரிடம் கலந்தாலோசனை செய்யாமல் இருந்ததில்லை. அரசின் ராஜமுத்திரையே இவரிடம் பொறுப்பாக கொடுத்து வைக்கப்பட்டிருந்தது. மிகவும் கருணை உள்ளம் கொண்ட இவரால் நம்பிக்கை இழந்த எத்தனையோ குற்றவாளிகளை மொகலாய சிறையிலிருந்து மன்னித்து விடச் செய்தார். சமூக சேவையில் ஆர்வம் கொண்டிருந்த மும்தாஜ் மஹலிடம் உதவி என்று வந்தவர்கள் யாரும் பெறாமல் திரும்பியதில்லை. தனக்கு அரசு அளித்த மாத வருமானத் திலிருந்து பல அநாதை, விதவைகளுக்கு உதவி இருக்கிறார். வசதியற்ற பல பெண்களுக்கு திருமணம் செய்ய உதவினார். 
   இவர் காலத்தில் அந்தப்புர பணிப்பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.  பதினான்கு குழந்தைகளைப் பெற்ற மும்தாஜ் மஹல், ஷாஜஹானின் உறவு மிகவும் புகழ் வாய்ந்தது. கான் ஜஹான் லோதியுடன் புர்ஹான்பூர் என்ற இடத்தில் ஷாஜஹான் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, கடுமையான ஒரு பிரசவத்தின் காரணமாக மும்தாஜ் மஹல் மரண மடைந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு அக்பராபாத்தில் (ஆக்ரா) யமுனா நதிக்கரையில் ‘தாஜ்’ (தாஜ்மஹல்) என்ற நினைவு மண்டபம் கட்டப்பட்டு, இவரின் உடல் அங்கு மாற்றப்பட்டது. உலகிலேயே மனைவியின் அன்பை மற்றவர்களுக்கு பறைசாற்ற பிரமாண்டமான பெரும் நினைவு மண்டபம் கட்டியவர் ஷாஜஹான் ஒருவர் தான். புகழ் பெற்ற காதல் காவியங்களான ரோமியோ ஜூலியட், சலீம் அனார்கலி, லைலா மஜ்னு மற்றும் இன்னபிற காதல் கதைகள் தோல்வியில் தான் முடிந்து புகழடைந்தன. ஆனால், மணமுடித்து பல்லாண்டு வாழ்ந்து காதலித்தவர்கள் ஷாஜஹான், மும்தாஜ். அந்த காதலின் நினைவுச் சின்னம் உலகப்புகழ் வாய்ந்து இன்றும் பறைசாற்றுகிறது. 
                1600 லிருந்து 1605 வரை அக்பர் டெக்கான் பகுதியைக் கைப்பற்றியதி லிருந்து அங்கிருந்த ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கு மொகலாயர்கள் மீது எரிச்சலாக இருந்தது. அக்பர் காந்தேஷ், அஹ்மத் நகர் மற்றும் பிராரை இணைத்து பெரிய மொகலாயப் பேரரசை நிறுவ ஆசைப்பட்டார். அவரின் மரணத்தால் அது முடியாமல் போனது. பிறகு வந்த அவர் மகன் ஜஹாங்கீரால் மலிக் அம்பரின் இடைவிடாத தொந்தரவால் முடியாமல் போனது. இவைகளை ஷாஜஹான் திறமையாக கையாண்டார். கான் ஜஹான் லோதியின் புரட்சியை வெற்றிகரமாக அடக்கிய ஷாஜஹான் அஹ்மத்நகர் மீது போர் தொடுத்தார். புரட்சியாளர் கான் ஜஹான் லோதிக்கு நிஜாம் ஷாஹி கிங்கின் உதவியும் இருந்தது. 1630 ல் மொகலாயப் படைகள் பரெண்டா கோட்டையின் மீது முற்றுகையிட, எதிரிகளின் பதில் தாக்குதலால் கைவிடப்பட்டது. சுல்தான் முர்தஸா நிஜாமால் போர் திறமையற்ற காரணத்தால் மலிக் அம்பரின் மகன் ஃபத் கான் மலிக் சிறையிலடைக்கப்பட்டார். இவர் விடுவிக்கப்பட்டு சுதந்திரமானவுடன் அஹ்மத்நகரை அழிக்க எண்ணினார். இவர் ஷாஜஹானின் தொடர்பின் மூலம் அறிவுறுத்தப்பட்டு, சுல்தான் முர்தஸா நிஜாமின் முக்கிய நபரை சிறை பிடித்து கொலை செய்தார். பிறகு இளவயது ஹுசைன் ஷா ஆட்சியில் அமர்த்தப்பட்டு, ஃபத் கான் மலிக் தானும் சிறந்த பொறுப்புக்கு வந்தார். ஆனால், வெகு விரைவில் ஃபத் கான் மலிக் ஷாஜஹானுக்கு துரோகம் செய்தார். மஹபத் கானின் தலைமையில் தௌலதாபாத் கோட்டையில் மொகலாயப் படைகளை எதிர்த்தார். கடுமையான எதிர்ப்பாலும், சாதகமான சமரசத்தாலும் மொகலாயப் படைகளிடம் சரணடைந்தார். இதன் பிறகு அஹமத்நகர் கைப்பற்றப்பட்டு, சுல்தான் ஹுசைன் ஷா நிஜாம் கைது செய்து க்வாலியர் சிறையில் பார்வை பறிக்கப்பட்டு அடைக்கப்பட்டார். கௌரவ ஊதியம் வழங்கப்பட்டு மரியாதையாக நட்த்தப்பட்டார். நிஜாம் ஷாஹியின் இருளில் மூழ்கியிருந்த தௌலதாபாத் கோட்டையில் ஒளிமயமாக மொகலாய கொடி பறக்கவிடப்பட்டது. அப்போதைய மொகலாய ஆட்சியாளர்களை எதிர்த்த சிவாஜியின் தந்தையும், தீவிரவாதியுமான ஷாஜி என்பவர் ராஜகுடும்பத்தின் ஆதரவுடன் அஹ்மத்நகரைக் கைப்பற்ற ஒர் முயற்சி எடுக்கப்பட்டு, மொகலாயர்களால் முறியடிக்கப்பட்டது. சுதந்திரபிரதேசமாக இருந்த அஹ்மத்நகர் 1636 ல் ஆதில் ஷா மற்றும் ஷாஜஹானுக்கும் இடையே பிறிக்கப்பட்டது. டெக்கானைச் சேர்ந்தவர் களால் பலமுறை வெல்லப்பட்ட அஹ்மத்நகர் ஔரங்கஸேபுக்கும் தென் பகுதி இந்துக்களால் குழப்பமான இடமாக இருந்தது. மொகலாயர்களின் மானியத்தில் மராட்டியர்களாலும் சில காலம் மூன்றாவது சக்தியாக இது ஆளப்பட்டது.        
  ஐந்து கிளைகளாக இருந்த பாமினி பேரரசின் இரு இடங்கள் மொகலாயப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவைகள் அக்பரால் இணைக்கப் பட்ட இமாத் ஷாஹியின் பிரார் மற்றும் ஷாஜஹானால் இணைக்கப்பட்ட அஹ்மத்நகராகும். இன்னொரு பிரதேசம் மேற்கூறியவைகளால் தானா கவே சிறியதான, பிதார் என்ற இடம் பரித் ஷாஹியின் வசம் இருந்தது. மீதமுள்ள இரண்டு பிரதேசங்கள் பிஜப்பூர் ஆதில் ஷாஹி வசமும், கோல் கொண்டா குத்ப் ஷாஹியின் வசமும் இருந்தது. வளமான இடங்களாக இருந்த பிஜப்பூர், கோல்கொண்டா இரண்டும் அஹ்மத்நகர் கைப்பற்றப்       பட்ட பின் மொகலாயர்கள் கவனத்துக்கு வந்தது. அஹ்மத்நகர் வீழ்ந்த தற்குப் பிறகு, பிஜப்பூரின் ஆதில் ஷா மொகலாயர்களுக்கு சரணடைய மறுத்து, அருகிலுள்ள முர்தஸா நிஜாமுடன் கூட்டு சேர்ந்து கொண்டார். ஷாஜஹான் அசஃப் கான் மூலம் பிஜப்பூரின் மீது படையெடுக்கச் சொன்னார். மொகலாயர்கள் பிஜப்பூரைக் கைப்பற்றினார்கள். ஆனால் நகரவாசிகள் மராட்டியர்களின் சிறிய குதிரைப்படை உதவியுடன் பலமாக எதிர்த்து மொகலாயர்களுக்குச் செல்லும் தளவாடம், உணவுப் பொருள் களை தடை செய்து அவர்களைத் தோற்கடித்தனர். பெரும் பொருளுதவி விரயமான பின் மனைவி மும்தாஜ் மஹலின் மறைவும், நினவுக் கட்டிடம் கட்டுவதிலும் கவனம் செலுத்திய ஷாஜஹான் பிஜப்பூரைப் பற்றி சிலகாலம் சிந்திக்கவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக