செவ்வாய், 16 ஜூன், 2015

மன்னரும், போரும் 2



 மனிதன் முதல் முதலில் போரிட்டது நீருக்காகத்தான். அந்தகாலத்தில் மனித கூட்டம் ஒரு சமுதாயமாக கால்போன போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும். நீர்வளத்தைப் பிடிப்பதற்கு இரு கூட்டங்களும் அடித்துக் கொள்ளும். அப்போது அவர்களுக்குண்டான அறிவு அடிப்படையில் ஒரு உயிரின் மதிப்பு தெரியாது. (இப்போது மட்டும் என்ன இஸ்ரேலும், அமெரிக்காவும் உயிரின் மதிப்பையா தெரிந்து வைத்திருக்கிறார்கள்). நீர்வளம் கிடைத்தவுடன் கால்நடைகளுடன் கூடிய ஒரு நிரந்தர வாழ்க்கைச் சூழலை உருவாக்குவார்கள். பின் இன்னொரு கூட்டம் வரும் அவர்கள் இவர்களை அழிப்பார்கள் இப்படித்தான் அக்கால போர் இருந்தது. சட்டங்கள், எல்லைகள் கிடையாது. உங்களுக்கொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் உலகிலுள்ள எல்லா நாகரீகங்களும் நதியின் விலாசமிட்டு தான் தோன்றியது. சிந்து சமவெளி நாகரீகம், யூப்ரடீஸ், டைக்ரீஸ் நாகரீகம், வோல்கா நதி நாகரீகம் என்று. பின் நாகரீகங்கள் போரிட்டன. ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இறைவனால் பல கூட்டங்களுக்கு பல இறை தூதர்கள் வந்தார்கள் அவர்கள் மூலம் வேதங்கள் வந்தன. மறுத்தே பழகிப்போன மனிதர்களால் மதமும் சேர்ந்து கொண்டது.
                                போருக்கு பல காரணங்கள் உண்டு. பெண்களுக்காக, குலப் பெருமைக்காக, சுய கௌரவத்திற்காக, அடுத்தவரின் வளத்தையும், நிலப்பரப்பையும் கைப்பற்றுவதற்காக இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தாவூத் (அலை) நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட சபூர் வேதம் நீங்க, முதலில் நிலையான வேதத்துடன் வந்த மூஸா(அலை) நபியவர்களின் வழி வந்த யூதர்களும், இரண்டாவதாக வந்த ஈஸா(அலை) நபியவர்களின் வழி வந்த கிறிஸ்தவர்களும் கூட போரிட்டிருக்கிறார்கள். எப்படியும் யாரையும் அடித்துக் கொள்ளலாம். நீங்கள் நினைக்கலாம் ஈஸா(அலை) நபியவர்களுக்கு சட்டப்படி விசாரித்து தானே சிலுவைத் தண்டனை கொடுத்தார்கள் என்று அதுவேறு அது மதகுருமார்களால் கொடுக்கப்பட்டது. போர் சட்டம் என்பது வேறு. போருக்கென்று எந்த சட்டமும் இல்லை. அன்றும், இன்றும் ஒரு நாட்டில் போர் வீரர்கள் நுழைந்தால் முதலில் செய்வது கற்பழிப்பு. அடுத்து கொள்ளை, அடுத்து அடையாளங்களை அழிப்பது.
                                    உலகில் முதல்முதலில் வாயால் போர் சட்டம் போட்டவர்கள் நபி (ஸல்) அவர்களின் அன்புத்தோழர் அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் தான். போருக்கு புறப்படும் முன் வீரர்களிடம் சட்டம் போட்டார்கள். இதுவே அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. “ நில்லுங்கள் மக்களே நான் உங்களுக்கு போர்களத்தில் கையாள்வதற்கான பத்து சட்டங்கள் போடுகிறேன். எக்காரணத்தை முன்னிட்டும் நேர்பாதையை விட்டு ராஜதுரோகம் செய்தோ அல்லது விலகவோ கூடாது. இறந்த உடல்களை சித்திரவதை செய்யக்கூடாது. எந்நிலையிலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களைக் கொல்லக்கூடாது. எதற்காகவும் மரங்களைச் சேதப்படுத்துவதோ, எரிப்பதோ (குறிப்பாக கனிதரும் மரங்களை) கூடாது. எதிரியை தீயிட்டு கொல்லக்கூடாது. மதகுருமார்களையும் கொல்லக்கூடாது” என்று சொன்னார்கள். அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்கு முன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போர் உரை தான் நிகழ்த்தினார்கள்.
                                மேலும், குர்ஆன் மட்டுமே மனித குலத்திற்கு முதல் முறையாக போர் சட்டத்தைச் சொன்னது. அல்-பகரா: 2:190-193 ல் உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். போரின்போது அவர்களை எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள். மேலும், எங்கிருந்து உங்களை வெளியேற்றினார்களோ, அங்கிருந்து நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். போர் கொடியதுதான் என்றாலும், அதைவிட அராஜகத்தை தோற்றுவிப்பது கொலையைக்காட்டிலும் கொடியது என்று கூறுகிறது. கோடிட்ட இடங்களை கவனமாகப் படியுங்கள் படைத்தவன் மனிதர்களுக்கு எந்த மாதிரி அறிவுரை கூறுகிறான் என்று விளங்கும்.
                           சர்வதேச அளவில் முதல்முறை ஜினீவா போர் ஒப்பந்தம் என்று 1864 ல் ஐரோப்பிய சக்திகள் இயற்றின. இன்றளவிலும் அதை ஐரோப்பிய, அமெரிக்க, இஸ்ரேலிய நாடுகள் மதிப்பதில்லை. நூரெம்பர்க் போருக்குப் பிறகு, 1907 ல் நூரெம்பர்க் பிரின்ஸிபிள்ஸ் என்று இயற்றினார்கள். நிறைய போட ஆரம்பித்தார்கள், போட்டார்கள், போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  
                               சர்வதேச சட்டப்படி, போருக்கான காரணம் ஒரு நாடு இன்னொரு நாட்டை அரசியல் ஆதாயத்திற்காக நிலப்பரப்பைப் பிடிப்பதற்கு போரிடலாம். ஆனால் தேவையில்லாமல் சேதாரங்களை ஏற்படுத்தக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போரை முடித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டு மக்களோ அல்லது சொத்துக்களுக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது. போர் புரியும் நாடும், போர் தொடுக்கப்பட்ட நாடும் தேவையில்லாத கஷ்டங்களைத் தவிர்க்க வேண்டும். மனித உரிமைச் சட்டப்படி கைதியாக பிடிபட்டவர்களையும், காயங்களுடன், நோய்வாய் பட்டுள்ளவர்களையும் மற்றும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். கூடுமானவரை அமைதிக்கு முயற்சிக்க வேண்டும். ஒரு இராணுவம் இன்னொரு இராணுவத்தினரையோ அல்லது இராணுவ நிலைகளையோ மட்டும் தான் தாக்க வேண்டும். போர் வீரர்கள் பொது மக்களிடமிருந்து தனித்துத்தெரிய அந்தந்த நாட்டின் சீருடை அணிந்திருக்க வேண்டும். நாட்டுக்குச் சொந்தமான பாராளுமன்றம், இராணுவ நிலைகள், தபால் நிலையங்கள், இரயில் நிலையங்கள், பாலங்கள், தொலைகாட்சி மற்றும் ரேடியோ நிலையங்கள் என்று குண்டு வீசித் தாக்கிக்கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் கல்விக்கூடம், மருத்துவமனை போன்ற நிலைகளில் வீசக்கூடாது. வெள்ளைக்கொடி அல்லது துணி ஏந்தி வந்தால் கொல்லக்கூடாது.
                                      பெயரளவில் உள்ள சர்வதேச போர் சட்டத்தை யாரும் மதிப்பதில்லை. கொசோவா, போஸ்னியா, இலங்கை, ஈராக், ஈரான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், சூடான், கொரியா இப்படி வரிசையாக நடந்த போர்களில் யாரும் மதித்ததில்லை. போர் சட்டம் என்பது வான்வழிப்போர், கடற்படைப்போர், தரை இராணுவம், போர் கைதிகளைக் கையாள்வது, காயம் நோய்வாய்ப்பட்டவர்கள், சரணடைந்தவர்களைக் கையாள்வது, எந்த வகையான குண்டுகளைப் (சிரிப்பாய் இருக்கும் 400 கிராம் வெடி மருந்து கொண்ட குண்டைதான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு சட்டம்/ இன்று 2000 கிலோ வெடி மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்) பயன்படுத்துவது என்று இன்னும் பல பிரிவுகளில் உள்ளது.
                                கடல் சட்டம் ஒவ்வொரு நாட்டின் கரைப்பகுதியில் இருந்து 3 நாட்டிகல் மைல்களாகும். இது பீரங்கித் தாக்குதலின் அளவை வைத்து டச்சுக்காரர் கார்னலியஸ் வான் பின்கர்ஷூக் என்பவர் நிர்ணயித்தது. இந்த எல்லையைத் தாண்டிய கடல்பகுதி சர்வதேசத்திற்கும் சொந்தமானதாகும். அதில் எந்த குற்றம் நடந்தாலும் எந்த நாடும் விசாரிக்கவோ, கேள்வி கேட்கவோ கூடாது. அப்போது யாரையாவது கொல்ல வேண்டுமென்றால் கை, கால் கட்டி நடுக்கடலுக்கு கூட்டி போய் கொன்றுவிடுவார்கள். 20 ம் நூற்றாண்டில் எல்லா நாடுகளும் தங்கள் கடல் எல்லையை இயற்கை வளங்களுக்காகவும், மீன்பிடி உரிமையை மேலும் விரிப்படுத்தவும், தன் நாட்டு கடல்பகுதி சுற்றுச்சூழலை கவனிப்பதற்கும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டின. 1930 ல் அப்போதிருந்த லீக் ஆஃப் நேஷன்ஸ் அதை அங்கீகரிக்கவில்லை. ஆனால், 1945 ல் அமெரிக்க அதிபர் ட்ரூமன் மேற்சொன்ன காரணங்களுக்காக கடல் எல்லையை விரிவு படுத்திக் கொள்வது அந்த அந்த நாட்டின் சொந்த விஷயம் என்று சட்டத்தை மீறிக்கொண்டது. 1946 லிருந்து 1950 வரை சிலி, பெரு, ஈக்வடார் போன்ற நாடுகள் மீன்வளம் சார்ந்ததாகச் சொல்லி 200 நாட்டிகல் வரை எல்லையை வகுத்துக் கொண்டார்கள். சில நாடுகள் 12 நாட்டிகல் வரை வகுத்துக் கொண்டார்கள்.
                                      1967 கணக்குப்படி, 25 நாடுகள் 3 நாட்டிகள், 66 நாடுகள் 12 நாட்டிகல், 8 நாடுகள் 200 நாட்டிகல் என்று கடல் எல்லையிட்டுக் கொண்டார்கள். பின் 1973 ல் 160 நாடுகள் கூடி பேசினார்கள். 12 நாட்டிகல்கள் எல்லாநாடுகளுக்கும் பொதுவானது என்று அமைத்துக் கொண்டார்கள். மேலும் அதிலிருந்து 12 நாட்டிகல்கள் தொட்டுள்ள எல்லை என்றும், 200 நாட்டிகல்கள் மீன்பிடிப்பு, எண்ணெய் வளம், வாணிபத்திற்கென வகுத்துக் கொண்டார்கள். அதன்படி எந்த நாட்டின் கடலோர எல்லைப்பகுதியிலும் வெளிநாட்டு கப்பல்கள் கடக்க அனுமதியில்லை.
                                   இன்று சர்வதேச கடலில் எல்லா கண்டத்திலும் அமெரிக்கா தனது 13 க்கும் மேற்பட்ட பெரிய விமானம் தாங்கி கப்பல்களை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. கடற்கொள்ளையையும் முடிந்தால் எந்த நாடும் தடுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் ஆப்பிரிக்காவின் தீவுகளில் கடலோரத்தில் நியூக்ளியர் கழிவுகள், மருத்துவ கழிகள், இரசாயன கழிவுகள் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தன. இதனால் ஆத்திரமுற்று தான் சோமாலியா போன்ற நாடுகளின் தீவிரவாத குழுக்கள் அவர்களின் கப்பல்களை சிறை பிடித்துவருகிறார்கள். மேலைநாடுகள் அவர்களை கடற்கொள்ளையர்களாக சித்தரிக்கிறார்கள்.
                             முதல்முறையாக 1474 ல் ரோமப் பேரரசில் பீட்டர் வான் ஹாகன்பாக் என்பவர் போர்குற்றம் புரிந்தார் என்று தலைத் துண்டித்துக் கொல்லப்பட்டார். மேஜர் கன்னாட் என்பவரை 1643 ல் செஷையர் என்ற இடத்தில் ஒரு தேவாலயத்தில் வைத்து மொத்த கிராம மக்களையும் கொன்றார் என்று 1654 ல் தூக்கிலிடப்பட்டார். 1865 ல் அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆண்டர்சன் சிறைச்சாலையிலிருந்த போர் கைதிகளைக் கொன்றதற்காக ஹென்றி விர்ஸ் என்பவரை தூக்கிலிட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக