வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தின் வரலாறு 10



பாகம் : 19
இன்றளவும் உலகின் மிகமோசமான தீவிரவாத உரையாக கருதப்படும் போப் இரண்டாம் அர்பன் பிரான்சின் கிளர்மாண்ட் சபையில் நிகழ்த்திய குரோதம் நிறைந்த உரையாகும். “இந்த போர் ஏதோ ஒரு நகரத்தை வெற்றி கொள்வதல்ல, மொத்த ஆசியாவையும் வெற்றி கொண்டு அதன் எண்ணற்ற வளங்களை கைப்பற்றுவதாகும். நீங்கள் புனித பயணம் போகும் ஜெருசலத்தை வஞ்சகர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நபி மூசாவின் தோராஹ் வேதத்தில் தேனும், பாலும் ஊர்வதாக சொல்லப்பட்ட அந்த மண்ணை வெல்ல வேண்டியது நமது கடமையாகும்” என்று வெறி ஏற்றும் வண்ணம் கூறினார். 488 A.H. ல் (1095 C.E.) உலகின் இறுதி நாள் வரை நல்ல உள்ளம் படைத்த எவருமே மறக்க முடியாத மிகைப்படுத்தி நடந்த கொடுமைகள் நிறைந்த அந்த சிலுவைப்போர் துவங்கியது.
ஒழுக்கமற்ற கலவையான முதல் சிலுவைப் போராளிகள் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து மைனர் ஆசியாவைக் கடந்தனர். செல்ஜுக் ஆட்சியாளர் கலிஜ் அர்சலன் என்பவர் பெரிய போரின் மூலம் கான்ஸ்டாண்டிநோபிளை ஒட்டிய நிகாயீ என்ற இடத்தில் அவர்களைத் தோற்கடித்தார். இரண்டாவது இராணுவம் இளவரசர்களாலும், கட்சித் தலைவர்களாலும் வட, தென் பிரான்சிலிருந்தும் (இதனாலேயே இவர்கள் ஃப்ராங்க்ஸ் என அழைக்கப் பட்டனர்.), தென் இத்தாலியிலிருத்தும் அமைக்கப்பட்டது. இவர்கள் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து மைனர் ஆசியாவை கடந்தனர். மீண்டும் கலிஜ் அர்சலன் குறுக்கிட போர் நடந்தது. எட்டு மாதங்கள் நடந்த போரில் இந்த முறை சிலுவைப் போராளிகள் வெற்றி பெற்று ஆண்டியாக் நகரை கைப்பற்றினர். பின் முன்னேறிச் சென்று ஒரு மாதத்திற்க்குப் பிறகு 492 A.H. ல் ( 1099 C.E. ) ஜெருசலத்தைக் கைப்பற்றினர். அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிரான எல்லாவிதமான மனித உரிமை மீறல்கள், கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டனர். ஏறக்குறைய 70,000 ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். எதிரிகள் முழங்கால் அளவு இரத்தத்தில் நடமாடியதாக ஐரோப்பிய சரித்திர ஆசிரியர் களே பதிவு செய்திருக்கின்றனர். சிலுவைப் போராளிகள் முழங்கால் அளவு இரத்தத்தில் நடந்ததாக மாற்று மத சரித்திர ஆசியர்களும் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். முஸ்லீம்களின் இரத்தக்கறை அல் அக்ஸா மஸ்ஜிதிலும், குடியிறுப்பு காலனிகளிலும் நீண்ட நாட்கள் படிந்திருந்ததாக வரலாறு கூறுகிறது.
இப்னு அல் அதிர் அவர்கள் முஸ்லீம்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் விதமாக :
புனித ரமலான் மாதத்தில் மக்கள் அல் கதி அபு ஸா இத் அல் ஹர்வியின் தலைமையில் சிரியாவிலிருந்து பாக்தாதுக்கு ஓடி வந்தனர். சிலுவைப் போராளிகளின் நடுங்க வைக்கும் தாக்குதலையும், சட்டத்திற்கு புறம்பான அதிபயங்கர குற்றங்களையும் கண்டு கண்ணீர் சிந்தி, இதயம் நொருங்கியதாக கூறுகிறார். ஒரு வெள்ளிக்கிழமை தொழுகையில் அவர்கள் நோன்பை விட்டு விட்டு இறந்து போன முஸ்லீம்களுக்காகவும், சிறைப்பிடித்து செல்லப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகளுக்காகவும், சூரையாடப்பட்ட தங்கள் பணத்திற்காகவும் இறைவனிடம் கண்ணீர் சிந்த பிரார்த்தித்ததாக கூறுகிறார்.
492 A.H. (1099 C.E. ) ல் எதிரிகள் முஸ்லீம்கள் மீது தொடுத்த சிலுவைப்போரின் விளைவுகளை சரித்திரம் மதவேறுபாடற்று பதிவு செய்து வைத்திருக்கிறது. பிரிட்டிஷ் சரித்திரவாளர் மில், மிஷுத் விவரத்தில் குறிப்பிட்டிருப்பதாக இளவரசர் அலி சொல்வது:                                                         எதிரிகள் ஜெருசலத்தில் நுழைந்த போது, முஸ்லீம்கள் வீதியிலும், வீடுகளிலும் கேள்வி முறையற்று கொல்லப்பட்டனர். இதை கண்ணுற்ற பலர் அந்த படுகொலையில் இருந்து தப்பிக்க உயரமான சுவர்களிலிருந்து குதித்து இறந்தனர். சிலர் கோபுரங் களிலும், அரண்மனைகளிலும், மசூதிகளிலும் ஓடி ஒளிந்து கொண்டனர். எப்படி இருந்தாலும் கிறிஸ்தவ பீரங்கிகளும், வீரர்களும் முஸ்லீம்களின் பிணங்கள் மீது கடந்து சென்று தப்பி ஓடியவர்களை விரட்டி கொன்றனர். ஆம், வெறி வெறி மதபோதகர்களால் ஏற்றப்பட்ட வெறி. வசதி படைத்த முஸ்லீம்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு பின் வெட்டி கொல்லப்பட்டனர். சிலரை உயிரோடு எரித்துக் கொல்வதைக் காணச்செய்து, பலரை கட்டிடங்களிலிருந்து தாங்களாகவே விழுந்து சாகச் செய்தனர். ஒளிந்திருந்தவர்களை பிடித்து வந்து இறந்த பிணங்களின் மீதே வைத்து கொன்றனர். முஸ்லீம் பெண்கள் கதறினர், குழந்தைகள் அழுதனர். அந்த இடத்தின் சூழ்நிலை ஏதோ ஏசு நாதர் ( ஈஸா நபி ) இதைப்போல் கொலைகள் மூலம் தான் எதிரிகளை மன்னித்தார் என்பது போல் இருந்தது. கொன்றவர்கள் கொஞ்சம் கூட அனுதாபமோ, வருத்தமோ படவில்லை. ஏதோ தொழிற்சாலைப் பணி செய்வது போல் செய்தார்கள்.
சிலுவைப் போராளிகள் சிரியாவின் பகுதியில் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டனர். அலெக்ஸாண்டிர்யா முதல் வட அர்ருஹா( தற்போதைய உருஃபா) வரை தலைமையகங்களை உண்டாக்கிக் கொண்டனர். அந்த காலகட்டத்தில் சிலுவைப் போராளிகள் ஜெருசலத்தை ஆக்கிரமித்துக் கொள்ள காரணமாய் அமைந்தது. இந்த அவல நிலைக்கு முஸ்லீம் நாடுகளிடையே ஆன குழப்பங்களும், ஒப்பந்த மீறல்களும், ஒற்றுமையின்மையுமே ஆகும். எதிரிகள் இந்த பலவீனங்களை அறிந்திராவிட்டால் நிச்சயமாக ஜெருசலத்திற்குள் ( முஹம்மது நபிகள் (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) மிஹ்ராஜ் என்னும் சிறப்பு பயணம் முடிந்து இறங்கிய) ஊடுருவி இருக்க முடியாது.
அந்த சூழ்நிலையில் முஸ்லீம் சமுதாயத்தில் நிலவிய போக்கை  சரித்திர ஆசிரியர்கள் கீழ் வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்:
·       சிலுவைப் போராளிகள் ஜெருசலத்தை ஆக்கிரமிக்கும் போது,  முஹம்மது இப்னு மலிக் ஷா என்பவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் பர்கியாருக்குடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
·       சிரியாவின் மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள சத்தமில்லாமல் ஃப்ராங்க்ஸ் அக்ரா நகரை அபகரித்துக் கொண்டது.
·       முஸ்லீம் நாடுகள் பிரிந்து ஒருவரை ஒருவர் அழிக்க திட்டம் தீட்டினர். அதிலும் உச்ச கொடுமை முஸ்லீம்களை கருவருக்க வந்த ஃப்ராங்க்ஸிடமே அடுத்தவரை அழிக்க உதவி கோரினர்.
இறைவன் திருமறை குர் ஆனிலே சொன்னது போல் அவர்கள் தங்கள் கைகளாலேயே அழிவை தேடிக் கொண்டனர்.
பாகம் : 20  
ஹத்தீன் வெற்றியின் முகவுரை
ஒரு பரந்த மறுமலர்ச்சிக்கான சூழ்நிலையை எதிரிகள் எதிர் பார்த்திருந்தனர். ஆனால், நாம் ஏற்கனவே ஆரம்பத்தில் அறிந்த இமாத் அத்தீன் ஸங்கியின் பரம்பரையிலிருந்து வேறு விதமாக துவங்கியது. 521 A.H. ல் இமாத் அத்தீன் ஸங்கி பலமான ஒரு மாநிலத்தை மோஸூலிலிருந்து மா அர்ரத் அந் நுமான் நகரம் வரை நிறுவினார். ஏற்கனவே பலமுறை இமாத் அத்தீன் சிலுவைப் போராளிகளுடன் மோதி இருக்கிறார். அதில் மிகவும் பெயர் பெற்றது அர் ரஹாவில் அவர்களின் தலைமையகத்தை அகற்றியது. இமாத் அத்தீன் ஸ்ங்கிக்கு பல மகன்கள் உண்டு. அதில் இரு மூத்த மகன்கள் ஸைஃப் அத்தீன், நூருத்தீன் மஹமூத். இமாத் அத்தீன் இறப்பிற்கு பின் இரு சகோதரர்களும் முறையே ஸைஃப் அத்தீன் மோஸூலை தலைநகரமாக கொண்ட கிழக்குப் பகுதியையும், அலிப்போவை தலைநகராக கொண்ட மேற்குப்பகுதியை நூருத்தீன் மஹ்மூதும் ஆண்டு வந்தனர். நூருத்தீனின் ஆட்சிப் பகுதி எதிரிகளின் பகுதியைத் தொட்டடுத்து இருந்தது. இமாத் அத்தீனிடம் கண்ட அந்த தோல்வி இப்போது இரண்டாவது சிலுவைப் போருக்கு பிரான்சின் ஐந்தாம் லூயிஸ் மற்றும் ஜெர்மனியின் சக்கரவர்த்தி மூன்றாம் கான்ராட் பங்கேற்று வந்தது போராளிகளுக்கு புத்துயிர் அளித்தது. இப்போது அவரின் மகன் இமாத் அத்தீன் மஹ்மூத் என்பவர் மேற்குப் பகுதியின் கவர்னராக இருந்தார். எதிர்கள் அவரைக் கொல்ல திட்டமிட்டனர். என்றைக்குமே இமாத் அத்தீன் அவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தார். 543 A.H. ல் எதிரிகள் சில காலம் டமாஸ்கஸை ஆக்கிரமித்துவிட்டு பின் வாங்கினர். இந்த பின் வாங்கலால் எதிரிகளின் இரண்டாவது படையெடுப்பு தோல்வியடைந்தது. அந்த தோல்வி முஸ்லீம்களுக்கு உற்சாகத்தைத் கொடுத்து ஹத்தீன் மீது படையெடுத்து வெற்றி கொள்ளும் வேகத்தை தந்தது.
ஸலாவுத்தீனின் ஹத்தீன் வெற்றி
உலகில் ஒற்றுமையான பரந்து விரிந்த ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டுமென்ற ஸலாவுத்தீனின் எண்ணத்திற்கு இடையூராக இருந்தது. ஃப்ராங்க்ஸும், ஜெருசலமும். ஸலாவுத்தீன் ஃப்ராங்க்ஸைத் தாக்குவதற்கும், முஸ்லீம்கள் இழந்த ஜெருசலத்தையும், மற்ற பகுதிகளை மீட்கவும் ஒரு படையை தயார் செய்தார். எதிரிகள் ஜெருசலத்திலும், அல் அக்ஸா மஸ்ஜிதிலும் முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்திய கொடுமைகளுக்கு அவர்கள் எந்த காலத்திலும் மறக்க முடியாதபடி பழி வாங்கவும் காத்திருந்தார். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. 582 A. H. (1187 C.E. ) கிராக் பகுதியின் பிரபு கிடில்லான் ரெஜினால்ட் ( அரபியில்: அர்னாட் ) ஸலாவுத்தீனின் வியாபாரக் கூட்டத்தின் வாகனத்தைத் தாக்கினான். கிராக்கின் தலைமையகம் எகிப்துக்கும், சிரியாவுக்கும் இடையே இருந்தது. கிராக்குக்கும், ஸலாவுத்தீனுக்கும் இடையில் முஸ்லீம்களின் பிரயாண மற்றும் வியாபார வாகனங்கள் எகிப்துக்கும், சிரியாவுக்கும் இடையே பாதுகாப்பாகவும் அமைதியான முறையிலும் கடந்து செல்ல ஒத்துழைப்பதாக ஒரு ஒப்பந்தம் இருந்தது. சரித்திர ஆசிரியர்கள் பதிவின் படி ரெஜினால்ட் வாகனத்தின் பொருட்களை கொள்ளை அடித்து, வியாபாரிகளையும் பிடித்து வைத்துக்கொண்டு இஸ்லாமை இழிவு படுத்தியபடி மமதையுடன், “ நீங்கள் முஹம்மதை நம்பினால், அவரை கூக்குரலிட்டு அழைத்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறினான். இதை ஸலாவுத்தீன் கேள்விப்பட்டவுடன் மிகவும் கோபப்பட்டு அவனைத் தன் கைகளாலேயே கொன்றுவிட உறுதி பூண்டார். ரெஜினால்டின் தாக்குதல் போர்த்தீயை ஸலாவுத்தீனுக்கும், ஃப்ராங்க்ஸுக்கும் இடையே மூட்டியது. அவர்கள் மீது ஸலாவுத்தீன் போர் தொடுத்துக்கடுமையான இழப்புகளையும், வேதனைகளையும் சுவைக்கச் செய்தார். ஸலாவுத்தீனின் பெயர் ஐரோப்பாவில் பலமாக ஒலித்தது. ஐரோப்பிய தாய்மார்கள் போருக்கு அனுப்பிய பிள்ளைகளை நினைத்து கவலை அடைந்தார்கள், அந்த அளவுக்கு ஸலாவுத்தீனின் போரின் தாக்கம் எதிரொலித்தது. ஆனால், ஸலாவுத்தீன் போரில் பிடிபட்டவர்களையும், பெண்கள், குழந்தைகளை நல்ல விதமாக நடத்தினார்.
ஜெருசலம், ஹத்தீனின் வெற்றி
அந்த வணிகக்கூட்ட தாக்குதலுக்குப் பிறகு, ஸலாவுத்தீன் எதிரிகளுக்கு மிகச்சரியான பாடம் கற்பித்து நபிகள் நாயகம் விண்ணுலகப்பயணம் சென்று இறங்கிய பூமியும், பல நபிமார்களின் பிறப்பிடமான ஜெருசலத்தை மீட்டார். பதிலுக்கு கிராக்கின் ஆட்சியாளர் புனித ஹஜ் பயணம் சென்று திரும்பும் முஸ்லீம்களைத் தாக்கினான். ஸலாவுத்தீன் யாத்ரீகர்களை காக்க மக்களை புனித ஜிஹாத் வழியில் போரிட அழைத்தார். அவர் பஸ்ரா நகர் அருகில் அஸ் ஸலாமாஹ் என்ற இடத்தில் முகாமிட்டு யாத்ரீகர்கள் பாதுகாப்பாக திரும்பி வரும் வரைக் காத்திருந்தார். ஹஜ் யாத்ரீகர்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒப்பந்தத்தை மீறும் எதிரிகளை வெல்லும் ஆற்றலை ஸலாவுத்தீனுக்கு வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர். ஃப்ராங்க்ஸ் அமைதிக்கு வழிகாணாமல் மென்மேலும் ஆத்திரத்துடனும், மதவெறியுடனும் இருந்தனர்.
ஸலாவுத்தீன் அவர்கள் மீது மிகப்பெரிய போர் தொடுத்து விரட்டிட தன் ஆலோசகர்களை கலந்து பேசினார். அனைவரும் 583 A.H.ல் இஸ்லாமிய மாதம் ரபியுல் ஆகிர் 17 ல் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு
நேரத்தை தேர்ந்து எடுத்தனர். வானத்தை எட்டும் வண்ணம் அவர்களின் “அல்லாஹு அக்பர்” என்ற கோஷம் இருந்தது. முஸ்லீம்கள் போரையும், அதன் வெற்றியையும் பிரார்தனை மற்றும் அல்லாஹ்வின் உதவி அன்றி பெற முடியாது என்று நம்பினர். போருக்கான பொருளுதவியும், வெற்றியையும் வேண்டி அல்லாஹ்விடம் பிரார்தித்தனர். ஸலாவுத்தீனும், கலீஃபாக்களும் நபிகள் நாயகம் பத்ர், ஹுனைன், அல் அஹ்ஸாப் மற்றும் உஹத் போர்களின் போது இறைவனிடம் பிரார்தித்தது போல், “அல்லாஹ் நீ எங்களுக்கு வாக்களித்த வெற்றியைத்தந்தருள வேண்டும். ஒரு வேளை எதிரிகள் இந்த போரில் வென்றால், உன்னை இந்த பூமியில் வழிபட யாருமற்று போய்விடுவர்” என்று மனமுருகி வேண்டினர். ஆம், அவர்களுக்கு பல வழிகளிலிருந்தும் பொருளுதவி குவிந்தது.
ஸலாவுத்தீன் டமாஸ்கஸை விட்டு ராஸ் அல் மா என்ற இடத்திற்கு சென்றார் அது இராணுவ வீரர்களை ஒன்றுகூட்டும் மையமாக விளங்கியது. அவரின் மகன் அல் மாலிக் அல் அஃப்தலை ராஸ் அல் மா வில் தங்க வைத்துவிட்டு, தான் பஸ்ரா சென்றார். முஸஃபர் அத்தீன் என்பவரை அக்ராவிற்கு அனுப்பினார். பஸ்ராவிலிருந்து கிராக்கின் கோட்டை, அஷ் ஷுப்க் சென்று டைபீரியஸ் திரும்பினார். அல்லாஹ்வின் ஆற்றலுடன் போரிட வந்திருக்கும் முஸ்லீம் வீரர்களின் அந்த வேகம் குறையாமல் இருக்க அங்குமிங்கும் கனத்த இதயத்து டனும், துயரத்துடனும் அலைந்தார். இவரின் இந்த காலகட்டம், சூழ்நிலை, இஸ்லாம் வென்றே ஆகவேண்டும் என்ற விடாப்பிடி  இதுவே சரித்திரத்தில் இவருக்கு நிலையான இடத்தைப் பெற்றுத்தந்தது. கொஞ்சமாக உண்டு வெற்றிக்காக நிறைய உழைத்தார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ‘நமது ஜெருசலம் நகரம் எதிரிகள் வசம் இருக்கும் போது சரளமாக உணவும், உறக்கமும், உல்லாசமும் எப்படி வரும்’ என்று கேட்டார்.
மேலும், ஸலாவுத்தீனின் நண்பரும், போரில் ஈடுபட்டிருந்த வருமான அல் கதி பஹா அத்தீன் இப்னு ஷத்தாத் என்பவர், “ஜெருசலத்தை வென்ற செய்தியை கூறினால் மலையளவு கூட போறாது. ஒரு தாய் குழந்தையைப் பறிப்பது போல் ஆவலுடன் சுல்தான் இருந்தார். நாட்டின் அதிபதி என்பதற்கும் மேலாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு சுறுசுறுப்பாக சென்று கண்ணீர் மல்க “என் அருமை முஸ்லீம் மக்களே ஜிஹாதின் பால் போரிட வாருங்கள்” என அழைப்பு விடுத்தார். அந்த நேரங்களில் அவர் உணவு கூட உண்ணவில்லை. மருத்துவர்கள் தந்த மருந்துகளையே அருந்தினார். நான் மருத்துவர்களிடம் ‘அவர் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மிக அற்பமான உணவையே சாப்பிட்டார்’ என கூறினேன். அந்த அளவுக்கு அவர் போரில் ஆர்வம் காட்டினார்.” என்று கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக