ஞாயிறு, 19 ஜூலை, 2015

மங்கோலியர்கள் வரலாறு 1

மங்கோலியர்கள் வரலாறு 
கூ.செ.செய்யது முஹமது
அமைதியாக இருக்கும் அருகாமை மக்களைக் கொள்ளையடித்து, தங்கள் உணவை தேடிக்கொண்டிருந்த பழங்குடியினர் மீது போர் தொடுத்து ஸ்காண்டிநேவியன்கள் கைப்பற்றிய பூமி. மங்கோலியப் பீடபூமி. இதை ஸ்காண்டிநேவியன்கள் கடற்கொள்ளைக்கும், அடிமை வாணிபத்திற்கும் பயன்படுத்தி வந்தார்கள் அது தனி கதை. இந்த மங்கோலியா தான் துருக்கிகளுக்கும், மங்கோலியர்களுக்கும் உண்மையான தாய் பிரதேசம். ஆண்டாண்டாக பழங்குடியினராக இங்கு வாழ்ந்த இந்த இரு சமூகமும் உலக சரித்திரத்தில் மகத்தான இடம் பிடித்தனர். இவர்களின் மொழி ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். ஆளுயரத்திற்கு வளர்ந்திருக்கும் காட்டுப்புல், கரடுமுரடான மலைகள் எல்லாம் தாண்டி அமைந்த பிரதேசம். இவைகளைக் கடந்தால் நேராக கொண்டு போய் ஐரோப்பாவில் விடும். குதிரைகளில் பயணித்தால் விரைவில் எட்டலாம். தென் பகுதியில் உயர்குடி வகுப்பினர் வசித்து வந்தார்கள். அமெரிக்க இந்தியர்கள், சைபீரிய பழங்குடியினர்கள் மற்றும் வடக்கு மங்கோலியர்கள் அனைவரும் ஒரே வழிமுறையில் வந்தவர்கள் என்று இறுதியான மனித ஆய்வு சமீபத்தில் தெரிவிக்கிறது.
இந்த மங்கோலிய பீடபூமியைப் பற்றி கொஞ்சம் ஆதியிலிருந்து பார்ப்போம். காட்டு மிராண்டி கூட்டங்களாய் 100 ஆம் ஆண்டுகளில் பல பிரிவு மக்கள் சேர்ந்த இனம் மங்கோலிய இனம். பின்னாளில் ஸோன்ங்க்யூ, ஸியான்பி, ரூரன், கூக்துர்க் அல்லது ஹூன் மாகாணம் என்று அடையாளம் காணப்பட்டது. இன்றும் சரித்திர ஆசிரியர்கள் இவர்கள் மங்கோலிய பழங்குடியினரா அல்லது துருக்கி பழங்குடியினரா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஹூன் மாகாணம் மத்திய ஆசியாவில் “ஷன்யூ” என்ற பேரரசாக மாறியது. ஷன்யூ மோடுன் என்பவர் இதை விரிவுபடுத்தினார். ஷன்யூ பேரரசு சீனாவின் ஹான் பேரரசுடன் போட்டியிட்டது. ஷன்யூவின் பிரமாண்ட படை முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் ஹான் பேரரசின் சீனா மன்னர் ஷன்யூவை தனிப்பேரரசாக ஒத்துக்கொண்டார். ஷன்யூவுடன் திருமண உறவுகளை வளர்த்துக்கொண்டு ஆண்டு கப்பம் செலுத்தவும் ஒப்புக் கொண்டார். மோடுன் ஆட்சியில் ஷன்யூ பேரரசு நிர்வாகத்திறமையிலும், இராணுவத்திலும் பலமாகஇருந்து “ஷாமானிஸம்” என்ற மதக்கொள்கையை கடைபிடித்து வந்தது. (இங்கு நிறைய குறிப்பிடவரலாறு உள்ளது. தேவையில்லை என்ற கார ணம் கருதி தவிர்த்து விடுகிறேன்.) நாளடைவில் சரித்திரம் ஸியன்பிஸ்கள் என்பவர்கள் தான் மங்கோலியர்கள் என்று முடிவுக்கு வந்தது. 2006 ல் நடந்த அகழ் ஆராய்ச்சியில் மங்கோலியாவின் அல்டாய் மலைப் பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஸைத்திய போர்வீரன் உடல் கண்டு பிடிக் கப்பட்டது. மங்கோலியர்களின் புராதனம் கொய்ட் செங்கெரீன் அகூய் பகுதியில் வட நீலவண்ண குகை ஓவியங்கள், பயன் கோங்கார் பகுதியில் ஸகான் அகூய் வெள்ளை குகை ஓவியங்கள் மூலமும் கண்டறியப்பட்டுள்ளன. ஸியன்பிஸ்களின் இளம்தலைவர் தன்ஷி ஹுயூ சிறு நாடோடிக் குழுக்களை ஒருங்கிணைத்து ஹூன் மற்றும் சீன அரசுடன் அவ்வப்போது மோதிக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக ஸியான்பி மாகாணத்தை உருவாக்கினார். அதுவும் சிறிது நாளில் சிதறுண்டு போனது. பல சிறு அரசர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதிக் கொண்டார்கள். ஸியான்பி மாகாணம் தன் தலைமையை ‘கான்’ என்று அழைத்தது. இவர்கள் துருக்கி நாடோடிகளாகவும் அறியப்பட்டனர். ஆனால், நவீன துருக்கிகள் இதிலிருந்து மரபு ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் மாறுபட்டவர்கள். சரித்திரத்தில் முதல் கானாக காபுல்கான் என்றவர் கியாத் பழங்குடியினரிலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறார். காபுல்கானின் மகன் ஹோடுலாகான் எதிரிக் கூட்டத் தலைவனான அம்பகைகானுடன் பலமுறை போரிட்டார். ஹோடுலாகான் இறந்தவுடன் கூட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க திணறினார்கள். இறுதியில் காபுல் கானின் பேரர் ஒருவரான யெஸுகெய் பகாதூர் என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
மங்கோலியாவின் கிழக்கில் அல்டாய் மலைப்பகுதி. அந்த தாய், தகப்பனில்லாத தன் குழந்தைகளுக்கு உணவளிக்க மிகவும் சிரமப்பட்டாள். சில சமயம் காட்டுத் தாவரங்களையும், சிறிய மிருகங்களையும், சுண்டெலிகளையும், அவர்கள் கூட்டத்துக் குள்ளேயே திருடியும் உணவளித்து வந்தாள். அவர்களின் சிறிய கூட்டத்தின் தலைவராக இருந்த அந்த குழந்தையின் தந்தையை அந்தக் கூட்டத்தார்கள் தலைமைப் போட்டியில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார்கள். அவர் தான் யெசுகெய் பகாதூர். ஆறு குழந்தைகளின் தந்தை ஆவார். அந்த குழந்தைகளில் ஒரு சிறுவனுக்கு தந்தை இறந்தபோது எட்டு வயது. அந்த சிறுவனின் பெயர் தெமுஜின். வழக்கமாக தந்தைக்குப் பின் தலைமைக்கு வர வேண்டிய தெமுஜின்னை அவர்களின் கூட்டத்திலேயே யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் ஒருகுழு சேர்த்து முரண்டுபிடித்த அந்த சிறுவன் தெமுஜின்னை மரக்கூண்டுக்குள் பலநாட்களாக சிறைவைத்தனர். ஒருநாள் இரவில் தெமுஜின் தப்பித்து தன் தாய் தம்பிகளுடன் வெளியேறி நீண்ட தூரம் பயணித்து வேறு ஒரு நாடோடிக்குழுவுடன் சேர்ந்து கொண்டார். தன் தந்தையின் சகோதரர் தூரில் கானுடனும், தனது இன்னொரு சகோதரர் ஜமுகாவுடனும் சேர்ந்து சிறிய கூட்டங்களை வெற்றி கொண்டார். அந்த கூட்டங்களில் ஒன்றான மெர்ஜித் பழங்குடியினர் தெமுஜினின் வீட்டை அழித்து அவர் மனைவி பூர்டேயை சிறைப்பிடித்துச் சென்றனர். இது ஏற்கனவே முன்பு தெமுஜினின் தந்தை யெஷுகெய் மெர்ஜித் தலைவனின் மனைவி ஹூலுனை சிறைப்பிடித்து சென்றதற்கு பழிவாங்குவதாக இருந்தது. தந்தையால் சிறைபிடித்து வரப்பட்ட ஹூலுன் தான் தெமுஜின் தாயார். மனைவியை மீட்க மெர்ஜித் கூட்டத்தின் மீது தெமுஜின் படையெடுத்து வென்றார். இந்த சிறுவன் தெமுஜினின் கதை உலகின் அனைத்து மொழிகளிலும் சினிமாப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவரின் கதை என்று சொல்லப்படுவதில்லை. அந்த சிறுவன் தந்தையைக் கொன்ற தன் கூட்டத்துக்குள்ளேயே அதிகாரத்திற்கு வர இருபத்தைந்து ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. தனது நாற்பதாவது வயதில் தங்கள் பழங்குடியின குழுவுக்குத் தலைவனாகி, இன்றளவும் உலகம் வியக்கும் “ஜெங்கிஸ்கான்’ என்று பெயர் பெற்றார். ஜெங்கிஷ் என்றால் ‘எல்லோரும் சூழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்’ என்று பொருள். இவர் தனி மனித இராணுவம் (ONE MAN ARMY) என்று புகழப்பட்டார்.

மங்கோலியர்கள் வரலாறு 2

ஜெங்கிஸ்கானுக்கு ஹசர், ஹசியுன், தெமூஜி என்ற சகோதரர்களும், தெமூலீன் என்ற ஒரு சகோதரியும், பெக்தர், பெல்குதெய் என்று ஒன்றுவிட்ட சகோதரர்களும் இருந்தார்கள். இவரின் இளவயது மிகவும் கஷ்டமாக இருந்தது. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த இவர் தந்தை சிறுவயதிலேயே மணப்பெண் இருக்கும் கோங்கிரட் பழங்குடியினரிடம் வழக்கப்படி விட்டுவிடுகிறார். ஜெங்கிஸ்கான் அக்குழுத்தலைவர் டை செட்சென் என்பவருக்கு பணிவிடை செய்தார். இவர் மனைவி பெயர் போர்டி. இவர் தந்தை பழைய டடார் இனத்தவரின் பகையால் விஷம் வைத்து கொல்லப்பட்டார். அதனால் முறைப்படி தன் கூட்டத்திற்கு தானே தலைவன் என்று உரிமை கொண்டாடிய ஜெங்கிஸ்கானையும், அவர் தாயாரையும் கொடுமைகள் செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். தாயார் ஹொய்லூனுடன் மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஜெங்கிஸ்கானின் ஒன்று விட்ட வயதுக்கு வந்த மூத்த சகோதரர் (இவர்தான் குடும்பத்திற்கு உணவளிக்கும் பொறுப்பில் இருந்தார். இவர் ஹொய் லூனுக்கு பிறந்தவர் அல்ல) பெக்டருடன் தாயாருக்கு கணவர் போல் உறவாகி விடுகிறது. ஒரு வேட்டையின் போது ஜெங்கிஸ்கானும், சகோதரர் கசரும் சேர்ந்து பெக்டரைக் கொன்று விடுகிறார்கள். இடையில் தந்தையின் எதிரி தயிசியுத் என்பவன் ஜெங்கிஸ்கானை சிறைப்பிடித்து அடிமையாக விற்க ஏற்பாடு செய்கிறார். இவர் மீது இரக்கம் கொண்ட சிலாவுன் என்ற (இவர்தான் பின்னாளில் ஜெங்கிஸ்கானின் படையில் ஜெனரலாக இருந்தார்.) காவலன் இரவில் தப்பிக்க வைத்தார். அந்த தப்பித்தலுக்குப் பிறகு ஜெங்கிஸ்கானின் வாழ்க்கை வேகம் பிடித்தது. அவருடன் பின்னாளில் ஜெனரலாக இருந்த ஜெல்மி, போ ஒர்சு என்ற இருவர் கூட்டு சேர்ந்தனர். ஜெங்கிஸ்கான், எதிரி பழங்குடி இனத்தவருடன் சண்டை, அரசியல், கொள்ளை, கலவரம், ஊழல், பழிவாங்குதல் என்று பம்பரமாக சுழன்றார். இவர் தாயார் பழங்குடி இனக் கூட்டங்களின் அரசியல் கதைகளை அவ்வப் போது பாடம் போல் சொல்வார். ஜெங்கிஸ்கான் பெயரைக் கேட்டாலே சுற்று வட்டாரத்தில் அலர வைத்தார். இரக்கம் என்பதை குளியலுக்கு முன் உடை கழட்டுவது போல் கழட்டி விடுவார். ஒரு கூட்டத்தில் நுழைந்தால் கண்ணில் தென்படுபவர்கள் ஆண், பெண், குழந்தை என்று சரமாரியாக காரணமில்லாமல் வெட்டுவார். இந்த அதிர்ச்சியில் எதிரி திக்குமுக்காகி சரணடைந்து விடுவான். அதுவே அவர் ஆரம்ப பலமாக இருந்தது. ஜெங்கிஸ்கானுக்கு மனைவி போர்டேயின் மூலம் ஜோச்சி,சகடாய், ஓகிடாய், தோலூயி என்ற மகன்கள் பிறந்தார்கள்.
சரித்திரத்தில் எவருடைய ஆரம்பமும், முடிவும் ஜெங்கிஸ்கானுடையது போல் அல்ல. இவர் தோராயமாக 1167 ல் பிறந்தார். இவர் தங்களுடைய மூதாதையர்கள் போல் அதே இடத்தில் பிறந்தோம் வளர்ந்தோம் மரணித்தோம் என்று வாழ விரும்பவில்லை. வேற்றுமனிதர்கள் அறியாவண்ணம் நூற்றுக்கணக்கான மலைகளுக்கு பின் வாழ்ந்து கொண்டிருக்கும் தமது கூட்டம் உலகம் அறியப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் நாடோடி கூட்ட மக்களை தன் தலைமையின் கீழ் திரட்டி இரத்தம் இரத்தமாக போகுமிட மெல்லாம் சிதறடித்து முன்னேறினார். மங்கோலிய இனத்தில் குழந்தைப் பருவத்திலேயே மலையேறுவது, குதிரை விளையாட்டு போன்றவை கட்டாயமாகிப் போனது. பயம் என்றால் என்ன என்றே அறியாத ஒரு கூட்டம். கம்யூனிஸ சீனா மங்கோலிய சரித்திரத்தை காட்டுமிராண்டிகள் என்று வருணிக்கின்றன. இரத்தத்தாலேயே பசிபிக்கடலின் வழியைத் திறந்து ஐரோப்பாவில் நுழைந்தார். முதல் முதலில் ஸி ஸியா என்ற வட சீனப் பகுதியைக் கைப்பற்றினார். பின் சக்திவாய்ந்த கின் பேரரசைத் தாக்கினார். 1209 ல் வடக்கில் சீனா நோக்கி நகர்ந்து 1215 ல் பெய்ஜிங்க் நகரத்தைப் கைப்பற்றினார். 1219 ல் இவரின் வாழ்வின் அதிமுக்கிய திட்டமாகிய மேற்கை நோக்கி நகர்ந்தார். க்வாரஸெம் என்ற மாகாணத்தின் துருக்கி ஆட்சியாளர் இரண்டாம் முஹமது ஷா என்பவரை சரணடையச் சொல்லி தூது அனுப்பினார். சாதாரண பழங்குடிப் படையினர் மன்னரை சரணடையச் சொல்வதா? முஹமது ஷாவின் ஆட்கள் வந்த தூதுவரைக் கொன்று, மீதி ஆட்களை தலை மழித்து அவமானப்படுத்தி அனுப்பினர். வெகுண்டெழுந்த ஜெங்கிஸ்கான் போரில் குதித்தார். பலமான கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு, ஜெங்கிஸ்கான் வெற்றிபெற்றார். 1220 ல் சமர்கண்ட் மற்றும் புகாரா நகரங்களை கைப்பற்றினார். முஹமது ஷா கஸ்பியன் கடலின் ஏதோ ஒரு தீவில் மறைந்து இறந்து போனார். முஹமது ஷாவின் இராணுவத்திலிருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான குதிரைப் படை வீரர்கள் மங்கோலியப் படையில் சேர்ந்தனர். அங்கிருந்து தெற்காக திசை திரும்பி இந்தியாவை நோக்கி வந்தார். ஆனால், இந்துஸ் ஆறுவரை வந்தவர் அறியப்படாத காரணத்தால் திரும்பி விட்டார். பின்னர் 1223 ல் கஸ்பியன் கடல் மற்றும் காகசஸ் மலைகளின் வாயிலாக படைகளுடன் பயணித்து க்ரீமியா மற்றும் தென் ரஷ்யா பகுதிகளில் கொள்ளையடித்தார். அலெக்ஸாண்டரின் மனோ தத்துவ ரீதியான போருக்கு முன்வரை ஜெங்கிஸ்கானின் வேகத்திற்கும், வெற்றிக்கும் இணையான வீரர் எவரும் இல்லை.
ஜெங்கிஸ்கானின் வெற்றிகள் இவரை உலகத்தின் முதல் மாவீரனாக சித்தரிப்பதில் அழுத்தமான உண்மைகள் பலவுள்ளன. நெப்போலியன், அலெக்ஸாண்டர் எல்லாம் வழக்கம் போல் மேற்கத்தியர்களால் மிக அளவுக்கதிமாக புகழப்பட்டவர்கள். அவர்களும் வீரர்கள்தான் சந்தேகமில்லை. ஆனால், ஜெங்கிஸ்கான் அளவுக்கு இல்லை. இவரது பலம் எந்த நகரத்தில் நுழைந்தாலும் நல்லது, கெட்டது என்று பாராமல் கண்மூடித்தனமாக கொன்று குவிப்பது, எரிப்பது என்று எதிரியை கதி கலங்க வைப்பார். முறையாக ஆட்சி செய்யும் மன்னர்களை இது நிலைகுலையச் செய்தது. ஜெங்கிஸ்கான் எந்த நவீன ஆயுதங்களும் பயன்படுத்தியதில்லை. இயற்கையான அப்பழுக்கற்ற வீரம் அது. பழங்குடியினராதலால் மலைகளில் சர்வ சாதாரணமாக குதிரை விளையாட்டு, ஒப்பற்ற வேகம், தப்பாத குறி இவையெல்லாம் தான் அவருக்கு வெற்றிகளைத் தேடித்தந்தன. இவருக்கு அமைந்த வீரர்களும் தனி சிறப்பு வாய்ந்தவர்கள். குதிரைவீரர்கள் சர்வசாதாரணமாக எந்தவிதமான பயணப் பாதையிலும் பயணித்து ஒரு நாளைக்கு 200 மைல் தூரத்துக்கு செய்தி கொண்டு செல்வார்கள். பருந்துகளும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டன. இவருக்கு அமைந்த வீரர்கள் இராஜவிசுவாசத்திற்கும், பயத்திற்கும் பணிந்தவர்கள். மிகவும் தந்திரமாகவும், உயர்தரத்திலும் தமது பழங்குடி மக்களுக்கு நகரங் களில் இருப்பிடம் அமைத்துக்கொடுத்தார். வீரர்கள் குதிரைகளில் விரைந்த வண்ணம் எறி ஈட்டிகளை எரிவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அந்தகால கட்டத்தில் ஆங்கில படைகள் 250 யார்டு தூரத்தில் எரிவதை மங்கோலிய வீரர்கள் 400 யார்டு தூரத்திற்கு குறி தப்பாமல் எரிவார்கள். உலகில் இந்த மங்கோலிய வீரர்களுக்கு இணையான வீரம் அப்போது எங்கும் காணப்படவில்லை என சரித்திரம் சொல்கிறது. முதலில் தோல்வியுற்றது போல் மலைகளுக்குப் பின்னால் திரும்பி ஓடுபவர்கள் மீண்டும் புயலைப்போல் பன்மடங்காக அம்பெய்த வண்ணம் வருவார்கள். அவர்கள் வந்தால் எதிரிப்படை இருந்த இடம் துடைத்தெறியப்பட்டது போல் இருக்குமாம். போர் புரிவதை காதலித்துச் செய்தார்களாம்.
இவர்கள் பெரும்பாலும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்ய செல்வதால் போகுமிடமெல்லாம் உணவுக்கும், உடமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள். வெற்றி இல்லை என்றால் உணவில்லை அதனாலேயே மிகவும் கொடூரமாக போரிடுவார்கள். இவர்களின் காட்டுமிராண்டித் தனமான பழங்குடி பழக்கவழக்க போர்முறை, முரட்டுத்தனம், உளவுபார்க்கும் நூதனம் இவையெல்லாம் மிகவும் புதுமையாக இருந்தது அப்போது. இவரிடம் இருந்த ‘ஜெபி’ என்ற இராணுவ கமாண்டர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரை “தி ஏரோ” என்றும் புகழுரைத்தார்கள். ஜெங்கிஸ்கான் தன்னுடன் தைரியமாக போரிட்டு தோற்கும் எதிரியை மன்னித்து மங்கோலியப் படையில் சேர்த்துக் கொள்வார். ஆனால், தங்கள் பழங்குடியினரை அவமதிப்பவர்களையும், துரோகிகளையும் மன்னிக்காமல் உடனே தண்டனை கொடுப்பார். தான் செல்லும் நகரங்களை முன்னா லேயே உளவாளிகளை வைத்துக் கண்காணிப்பார். அவர்களுக்கு தேவைப்பட்ட பொருள்களை லஞ்சமாகக் கொடுப்பார். மங்கோலியர்கள் ஒரு இடத்தில் கால் வைத்தால் அது 100% வெற்றியாக வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். எதிரி க்கு நேரடியாக இரண்டே வாய்ப்புதான் கொடுப்பார். ஒன்று தன்னுடன் போரிட வேண்டும் அல்லது சரணடைந்து விடவேண்டும்

மங்கோலியர்கள் வரலாறு 3

இவர் ஒரு பகுதியை வெற்றி கொண்டால் அந்த செய்தி உடனே அடுத்துள்ள பகுதிகளுக்கு விரைவில் தெரியப்படுத்தி விடுவதில் குறியாக இருப்பார். ஒருவேளை ஏதாவது ஒரு எதிரி தன்னுடன் தைரியமாகப் போரிட்டால், இறுதியில் அவர்களை பொது மக்களின் முன்னிலையில் வைத்து கடுமையான முறையில் தண்டித்து பார்ப்பவருக்கு பயத்தை ஏற்படுத்துவார். நூற்றாண்டுகளுக்கும் மேலாக மலை சூழ்ந்த பகுதிகளுக்குள்ளேயே வாழ்ந்த ஒரு கூட்டத்தின் மனிதனிடத்திலிருந்து வந்த வீரம் கண்டு உலகம் இன்றளவும் வியக்கிறது. ஆனால், அது சிறு வயதிலிருந்து ஆத்திரத்தாலும், அவமானத்தினாலும் சமுதாயத்தின் மீது வந்த கோபம். நாடோடிக் கூட்டத்தின் தலைவனான தன் தந்தையைக் கொன்று, இளவயதிலேயே தன்னை அனாதையாக்கிய வேதனையின் வெளிப்பாடு. அந்த கோபத்தையும், வேதனையும் இறக்கி வைக்க அவர் தேர்ந்தெடுத்த இடம் அந்த மலைசூழ்ந்த பகுதியின் வெளிப்புறத்தில் பூமி எங்கும் பரவியிருந்தது.
மற்ற இராணுவங்கள் இரும்பாலான பீரங்கியை பயன்படுத்தி வந்த நேரத்தில் ஜெங்கிஸ்கான் பித்தளையாலான பீரங்கியை எந்த விதமான தட்பவெப்ப சூழ் நிலையிலும் பயன்படுத்தச்செய்தார். மங்கோலியர்கள் எந்த ஒரு நகரத்தில் நுழையும் முன் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் போல் நுழைவார்கள். நகரத்தின் உள்ளே இருக்கும் உளவாளிகளால் சரணடைந்து விடுவது நல்லது என்பதுபோல் ஆட்சியாளருக்கு அறிவுரை சொல்லப்படும். பெரும்பாலும் ஐரோப்பிய வைக்கிங்குகள் போல் கொள்ளையடித்து விட்டுத் திரும்பி விடுவார்கள். தன் ஆட்சியின் போது ஒன்றரை மில்லியன் பழங்குடியின மக்களுக்கும், தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டு மில்லியன் மற்ற நாடோடிக் கூட்ட மக்களுக்கும் ஆட்சியாளராக இருந்தார். நீண்ட மேற்கத்திய தாக்குதலுக்குப் பிறகு, 1225 ல் மங்கோலியா திரும்பினார். பின் தனது கவனத்தை மீண்டும் வட சீனாவின் மீது திருப்பினார். ஏற்கனவே ஸி ஸியா மாகாணம் வெற்றி கொள்ளப்பட்ட போது ஒப்புக்கொண்ட ஆண்டு கப்பத் தொகையை ஸி ஸியா மன்னன் கட்ட மறுத்தான். மேலும் இம்முறைப் போரிட்டால் மங்கோலியர்கள் வெல்லமுடியாது என்ற கருத்தில் இருந்தான். ஜெங்கிஸ்கான் இந்த முறை எப்படியாவது ஸி ஸியாவை குறையில்லாமல் வெற்றி கொள்ள எண்ணினார். 180,000 வீரர்களுடன் கடுமையான குளிரில் உறைந்து போயிருந்த மஞ்சள் ஆற்றில் போரிட்டார். மிகுந்த உயிர் சேதம் ஏற்படுத்தி, பல நகரங்களை அழித்து வெற்றி பெற்றார். 1227 ல் ஒரு வேட்டையின் போது குதிரையிலிருந்து முறையில்லாமல் விழுந்ததில் பலத்த காயமுற்று சில நாட்களில் இறந்து போனார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறந்த இடத்திலல்லாமல் வேறு இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
தான் இறப்பதற்கு முன்பே தன் மகன்கள் குறிப்பாக சகடாய், ஜோச்சி இருவரும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்று எண்ணினார். இளைய மகன் தோல்யூ மிகச் சிறிய வயது அதனால் அவர் ஆட்சிக்கு உகந்தவர் அல்ல. பேரரசை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் கொடுத்து விடலாமா என்று கூட யோசித்தார். ஆரம்பத்திலேயே மிகவும் முரட்டுத்தனமுள்ள சகடாய் தான் எக்காரணம் கொண்டும் ஜோச்சிக்குக் கட்டுப்பட மாட்டேன் என்று கூறிவிட்டார். இறுதியில் தனக்குப் பின் சகடாய் தான் ஆள் வேண்டும் என்று முடிவெடுத்தார். ஜெங்கிஸ்கான் உயிரோடு இருக்கும் போதே ஜோச்சி இறந்து போனார். ஜெங்கிஸ்கான் தான் விஷம் வைத்துக் கொன்றார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜெங்கிஸ்கானின் இறப்பிற்குப் பிறகு, மங்கோலியர்கள் கூடி அடுத்த தலைவராக ஜெங்கிஸ்கானின் இரண்டாவது மகன் சகடாய் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர்.
சகடாய் புகாரா பகுதியில் சிலரின் ராஜதுரோகத்தைத் திறமையாக சமாளித்தார். ட்ரான்ஸாக்சியானாவில் ஜுமிலத் உல் முல்க் என்னும் முஸ்லீம் மந்திரியைத் தான் அமர்த்தி இருந்தார். இவர் காலத்தில் மசூதிகளையும், கல்லூரிகளையும் கட்டினார். தனித்திருந்த அல் மலிக் என்ற இடத்தை தலைநகரமாக ஆக்கி இருந்தார். 14 ஆண்டுகள் ஆட்சி செய்த இவர் கரகோரத்தில் இறந்து போன பிறகு, உடனடியாக இவர் மனைவி துராகினா ஆட்சிக்கு சில காலம் பொறுப்பேற்றார். சகடாயின் மகன் முடுகன், பமியன் படையெடுப்பின் போது இறந்து போனார். இன்னொரு மகன் பைதர், உறவினர் பூரியுடன் ஐரோப்பிய படையெடுப்பில் ஈடுபட்டார். மொகலாய மன்னர் பாபர் சகடாயின் வழிமுறையில் வந்தவரென்று ‘பாபர் நாமா’ வில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அதாவது சகடாய் மகன் முடுகன், முடுகன் மகன் யெ சுந்தவா கான், யெசுந்தவா கான் மகன் பரக்கான், பரக்கான் மகன் தவாகான், தவாகான் மகன் ஐசன்புகா கான், ஐசன்புகா கான் மகன் துக்ளக் திமீர் கான், துக் ளக் திமூர் கான் மகன் கிஸ்ர் க்வாஜாஹ் கான், கிஸ்ர் க்வாஜாஹ் கான் மகன் முஹம்மது கான், முஹம்மது கான் மகன் ஷேர்அலி ஆகுல்தீன், ஷேர் அலி ஆகு ல்தீனின் மகன் வயிஸ் கான், வயிஸ்கான் மகன் யூனுஸ் கான், யூனுஸ் கானின் மகன் பாபர் என்று)
வட சீனாவும், பெர்ஷியாவின் பகுதிகளும் மங்கோலிய ஆட்சியாளர்களின் குடும்ப பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இன்னொரு சகோதரர் ஒகிடாய் கரகோரத்தை மங்கோலியர்களின் நவீன தலைநகரமாக்கினார். ஜெங்கிஸ்கானின் மூன்றாவது மகனான இவர் தந்தையுடன் பல படையெடுப்புகளில் கலந்து கொண்டார். 17 வயதில் ஜமுகா இராணுவத்திற்கு எதிராக தோல்வியுற்று படுகாயம் அடைந்த இவரை தந்தையின் சகோதரமுறை உறவினர் போரோகுலா காப்பாற்றினார். ஜெங்கிஸ்கான் இவருக்கு ஜலயிர், பெசுட், சுல்டுஸ், கோங்க்கடன் ஆகிய பழங்குடிப் பகுதியை நிர்வகிக்கக் கொடுத்தார். ஜெங்கிஸ்கானின் விருப்பப்படி ஜலயிரின் தலைவர் இல்லுகெய் ஓகிடாயின் ஆசிரியராக இருந்தார். ஓகிடாய் சகோதரர்களு டன் முதல்முறையாக ஜின் பேரரசை எதிர்த்து தனியாகப் போரிட்டார். ஓகிடாயும், சகடாயும் கிழக்கு பெர்ஷியாவில் ஒத்ரர் என்ற நகரத்தை ஐந்து மாதமாக முற்று கையிட்டார்கள். க்வாரிஸ்மிட் பேரரசுக்கு பொறுத்தமான ஒருவரை பொறுப்பாக்க இருந்த போது, சகடாயும்,ஜோச்சியும் அதற்கு கை கலப்பில் மோதிக் கொண்டார்கள். ஜெங்கிஸ்கான் ஓகிடாயை அதற்குப் பொறுப்பாக்கினார். ஓகிடாயும் தந்தையைப் போலவே இராணுவத்திலும், நிர்வாகத்திலும் திறமையாக இருந்தார். இளைய சகோதரர் தோல்யூ இறந்த போது மிகவும் துயரமடைந்தார். ஓகிடாய் நோய்வாய்ப்பட்ட போது ஷாமானிய வழக்கப்படி அவர் உயிரைக்காக்க தோல்யூ விஷம் அருந்தி மரணமடைந்தார். பின்னாளில் ஓகிடாய் மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆனார். ஓகிடாய்க்கு போரக்சின், டூரிஜின், முகா, ஜச்சின் என்ற மனைவிகளும், எண்ணற்ற சட்டபூர்வமில்லாத (வைப்பாட்டிகள்) மனைவிகளும், ஏழு மகன்களும் இருந்தார்கள்.
கரகோரம் நகரம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. 1253 ல் அங்கு வருகைதந்த ஒரு கிறிஸ்தவ துறவி (அவர் வில்லியமாகவோ அல்லது ருப்ருகிஸ் ஆகவோ இருக்கலாம்) கரகோரத்தில் நகரத்தின் சுவர்கள் பலமாக உயர்வாக அமைந்திருந்ததாகவும், செவ்வக வடிவத்தில் பெரிய அரண்மனையும், செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், அழகாக அமைக்கப்பட்ட தெருக்கள், பனிரெண்டு ஷாமானிஸ்ட் புனித ஸ்தலங்கள், இரண்டு மசூதிகள் மற்றும் நெஸ்டோரியன் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் இருந்ததாகக் கூறுகிறார் ஜெங்கிஸ்கான் கொள்ளையடிப்பதிலும், நகரங்களைத் தாக்கி தனது வீரத்தை பரப்புவதிலுமே வாழ்நாளை செலவழித்தார். ஆனால், ஒக்டாய் தலைநகரத்தை மையமாக்கி ஆட்சி அதிகாரத்தில் கவனம் செலுத்தினார். மேலும் சீனாவின் பகுதிகளையும் கொரியாவையும் வென்றார். ஜெங்கிஸ்கான் உயிரோடிருக்கும் போது மூத்த மகன் ஜோச்சியை ஐரோப்பாவை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், ஜுச்சி ஜெங்கிஸ்கானுக்கு முன்பே மரணமடைந்து விட்டார். ஒகிடாய் தந்தையின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக ஜோச்சியின் மகன் படுவை மேற்கு நோக்கி சென்று ஐரோப்பாவை வெல்ல கேட்டுக் கொண்டார். படு 1236ல் வடக்காகச்சென்று ரஷ்யாவில் வோல்கா என்ற இடத்தை வென்றார்.

மங்கோலியர்கள் வரலாறு 4

1237 ல் சென்ற மங்கோலியப் படைகள் ரஷ்யாவில் 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தின. ரஷ்யர்கள் மங்கோலியர்களை தங்க நாடோடிகள் (ZOLOTAYA ORDA-GOLDEN HORDE) என்று அழைத்தனர். ஏனென்றால், படு தங்குவதற்கு தங்க கூடாரத்தைத் தான் பயன்படுத்துவார். பெரும்பாலான ரஷ்ய நகரங்களைக் கொள்ளை அடித்தார்கள். இந்த தோல்வியை ரஷ்யா சரித்திரம், ‘இறந்தவர்களுக்காக அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அளிக்கவில்லை’ என்று கூறுகிறது. மங்கோலியர்கள் சேற்றில் குதிரையில் சண்டையிட மிகவும் சிரமப்பட்டார்கள். அதனால் வலுக்கட்டாயமாக பின்வாங்கினர். மீண்டும் குளிர் காலத்தில் போரிட வந்தார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்த கீவ் நகரின் சுவர்கள் மங்கோலியர்களால் இடித்து நொறுக்கப்பட்டது. இரக்கமில்லாமல் மக்கள் கொல்லப்பட்டனர். 1238 ல் மாஸ்கோவையும், 1240 ல் கீவ் நகரத்தையும் கைப்பற்றினார்கள். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் மங்கோலியர்கள் ரஷ்யாவை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, தென்பகுதி நோக்கி சென்றனர். இதற்கிடையில் மங்கோலியர்கள் என்னும் இஸ்லாமிய இராணுவம் கிறிஸ்தவ ரஷ்யாவை வென்று விட்டது என்று ஐரோப்பியர்களுக்கு செய்தி எட்டியது. ஐரோப்பிய ஆட்சியாளர்கள் வரும் ஆபத்தை எதிர்கொள்ள தயாராகினார்கள். மங்கோலியர்கள் ஒரு ஆங்கில தூதுவரை ஹங்கேரியின் மன்னர் பேலாவிடம் அனுப்பி சரணடைய வேண்டினார்கள். அவர் தான் ஒரு நாட்டின் மன்னர் சாதாரணமாக எங்கிருந்தோ வரும் நாடோடிக் கொள்ளைக் கூட்டத்துடன் சரணடைவதா முடியாது என்று மறுத்து விடுகிறார். ஒரு நாடோடி இராணுவப்படை 1241 ல் போலந்தை நோக்கி முன்னேறியது. போலந்தும் ஜெர்மனியும் கூட்டு சேர்ந்து லெக்னிகா என்ற இடத்தில் மங்கோலியர்களை எதிர்த்து போரிட்டுத் தோற்றனர். அதே நேரத்தில் இன்னொரு நாடோடி இராணுவம் மொஹ்லி என்ற இடத்தில் ஹங்கேரியை வெற்றி கொண்டது. முதலில் 70,000 கிறி ஸ்தவ வீரர்களும், அடுத்து 40,000 வீரர்களும் ஐரோப்பிய தரப்பில் கொல்லப்பட்டனர். அந்த கோடை காலத்தை மங்கோலியப் படைகள் ஹங்கேரியின் திறந்த வெளிகளில் கழித்தது. அவர்களின் புல் நிறைந்த பூமியின் வாழ்க்கைச் சூழலுக்கு அது ஒத்துவரவில்லை என்றாலும், வெற்றி அவர்களை ஏற்றுக்கொள்ள வைத் தது. அந்த வெற்றி மேலும் ஐரோப்பிய நகரங்களை வெல்ல ஏதுவாக இருந்தது. மங்கோலிய நாடோடிகளின் படை அப்போது ஐரோப்பாவை பயத்தில் ஆழ்த்தியது. அந்த வருட டிசம்பரில் மாவீரன் ஒகிடாய் மரணமடைந்து விட்டதாகவும், உடனே வேறு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி திரும்பிவர செய்திவந்தது. படுவும் அடுத்த நிலை பெரிய மனிதர்களும் கலந்து கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஹங்கேரியை விட்டு பழங்குடி இடமான வோல்காவுக்கு திரும்பினார்கள்.
ரஷ்யாவில் நிறைய சிறிய மன்னர்கள் சிறிய பிரதேசங்களை ஆண்டுவந்தவர்கள் தங்ககூடார மாவீரன் ஒக்டாயிக்கு மிகுந்த மரியாதையும், ஆண்டு கப்பமும் செலுத்தி வந்தார்கள். பின் படு ஆட்சிக்கு வந்து வோல்காவிலேயே ஒரு பகுதியை தலைநகராக்கி தன் பெயர் வருமாறு சராய்படு என்று மாற்றி ஆட்சி செய்து வந்தார். இவருக்குப் பிறகு, இவரின் சகோதரர் பெர்கி 1255 ல் ஆட்சிக்கு வந்தார். பெர் கி தன் பழங்குடியின மக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைத் தழுவச் செய் தார். நவீன வோல்காக்ராடுக்கு கிழக்கில் சராய் பெர்கி என்ற நகரத்தை உருவாக்கி தலைநகராக்கிக் கொண்டார். அங்கு நகர் முழுதும் மசூதிகளையும், பொதுக் கழிப்பிடங்கள் போன்றவற்றைக் கட்டினார். 600,000 மக்கள் அங்கு வசித்தனர். 1395 ல் தைமூரியர்கள் அழிக்கும் வரை அந்நகர் மிகவும் சிறப்பாக இருந்தது. இடையில் படுவிடமிருந்து ஆட்சி வாரிசு பிரச்சினையால் இறந்துபோன ஓகிடாயின் விதவை மனைவி டோரிகினி கதுனிடம் வந்து நான்கு ஆண்டுகள் அவர் ஆண்டார். ஜெங்கிஸ்கான் மெர்கிட் பழங்குடியை வென்றபோது, அதன் தலைவர் குடுவின் மனைவி தான் டோரிகினி ஹதுன். ஓகிடாய்க்கு முதல் மனைவி மூலம் குழந்தை இல்லாததால் ஜெங்கிஸ்கான் டோரிஜினி ஹதுனை ஓகிடாய்க்கு வழங்கினார். ஓகிடாய் மூலம் டோரிகினி ஐந்து மகன்கள் பெற்றார். விரைவில் ஓகிடாயின் மற்ற மனைவிகளை பின் தள்ளி முன்னுக்கு வந்தார். வட சீனாவில் வரி வசூலிக்க அப்த் உர் ரஹ்மானை கணவரிடம் பரிந்துரைத்தார். ஓகிடாயின் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்தும், நீக்கியும் நடவடிக்கை எடுத்தார். பெர்ஷி யாவைச் சேர்ந்த ஷியா பிரிவு ஃபாத்திமா என்பவரை அரண்மனை அதிகாரத்தில் வைத்தார். அவர் அடுத்து தன் மகன் கூயூக்குக்கு பதவி கிடைக்கும் வண்ணம் திட்டமிட்டு செயல்பட்டார். டோரிகினி ஆண்ட காலத்தில் பல வெளிநாட்டு மன்னர்கள் தலைநகர் கரகோரத்திற்கு வருகை தந்தார்கள். அதில் துருக்கியிலிருந்து செல்ஜுக் சுல்தான், பாக்தாதிலிருந்து அப்பாஸிட் கலீஃபா, டெல்லி சுல்தான் அலாவுதீன் மசூத், ஜார்ஜியாவிலிருந்து டேவிட் உலு, டேவிட் நரின், மிக உயரிய விருந்தினராக அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கியின் தந்தை விளாடிமீரின் இளவரசர் யரோஸ்லவ் விவோலோடோவிச் போன்றோர் ஆவார்கள். இளவரசர் டோரிகினியுடன் மது அருந்திய பிறகு மர்மமான முறையில் இறந்து போனார். இடையில் டோரிகினியிடமிருந்து ஆட்சியை மீட்க ஜெங்கிஸ்கானின் சகோதரர் தெமூஜி தன் ஆதரவாளர்களுடன் திரண்டு வர அவர்களை கூயுக் சந்தித்து சமாதானப் படுத்தினார். ஐரோப்பிய தாக்குதலில் இருந்த படுவும் வர தாமதமாகியது. இறுதியாக டோரிகினி மகன் கூயூக்கை ஆட்சியில் அமர்த்தினார். கூயூக் இளமையில் ஜெங் கிஸ்கான், ஓகிடாயுடன் இராணுவ அனுபவம் பெற்றிருக்கிறார். மங்கோலிய ஜெனரல் டங்குட்டுடன் புக்சியன் வன்னாவில் போரிட்டிருக்கிறார். தோல்யூ இறந்த பிறகு, அவர் மனைவி சொர்கக்டனியை கூயூக்கை மணந்து கொள்ள ஓகிடாய் வேண்டினார். ஆனால், தோல்யூவின் மனைவி மறுத்து விட்டார். ரய்ஸான் என்ற இடத்தின் படையெடுப்பின் போது, உறவினர் படுவை தரக்குறைவாக ‘அம்பராத்தூளியில் கட்டப்பட்ட வயதான பெண்மணி’ என்று கூறினார். இச்செய்தி ஓகிடாய்க்கு எட்ட அவர் கடுங்கோபத்துடன் ‘நீ இன்னும் ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட  பிடிக்கவில்லை. படுவை சாடுவதா?’ என்று கடிந்து கொண்டார். கூயூக் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தாய்க்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. அதிகாரத்திலிருந்த ஃபாத்திமா அதிகமான சொத்தை கொள்ளை அடித்து விட்டதாக கூயூக்கின் சகோதரர் கோடன் புகார் எழுப்பினார். சில நாட்களில் கோடன் இறந்து விட கூயூக் ஃபாத்திமாவை தூக்கிலிட உத்தரவிட்டார். தாயார் டோரிகினி, ஃபாத்திமாவைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றார். இறுதியில் உடலின் அனைத்து துவாரங்களும் தைக்கப்பட்டு, நீரில் மூழ்கச் செய்து ஃபாத்திமா சாகடிக்கப்பட்டார். வரி வசூலித்த அப்த் உர் ரஹ்மானும் தூக்கிலிடப்பட்டார். அடுத்த சில மாதங்களில் டோரிகினி ஹதுன் விளங்கமுடியாத காரணத்தால் மரணமடைந்தார். கூயூக்கின் தலைமையை படு ஏற்கவில்லை. அவரைத் தன்னை வந்து சந்திக்கும்படி கூயூக் கேட்க, பெரும் படையுடன் படு சந்திக்க வந்தார். கூயூக்குக்கு பெரும் உறவினர் கூட்டம் இருந்தது. பெரும்பாலும் அனைவரும் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். கூயூக் திறமையாகவும், நேர்மை விரும்பியாகவும் இருந்தார். கூயூக் சீனாவின் சின்ஜியாங்க் பிராந்தியத்திலிருந்து திரும்பும் வழியில் இறந்து போனார். ஆட்சிசெய்த இரண்டே ஆண்டுகளில் 1246ல் இறந்து போனார்.
மீண்டும் ஆட்சி கூயூக்கின் விதவை மனைவி ஓகுல் கைமிஷ் வசம் போனது. ஓகுல் மெர்கிட் என்னும் பழங்குடியைச் சேர்ந்தவள். மெர்கிட் புரட்சியை ஜெங்கிஸ்கான் அடக்கிய போது, அவளை கூயூக்குக்கு கொடுத்தார். கூயூக்குடன் அவளுக்கு கோஜா, நகூ என்று இரண்டு மகன்கள். கூயூக்கின் தலைமை அதிகாரிகள் சின்கை, கடக், பல ஆகியோர் ஓகுல் ஆள்வதற்கு ஆதரவளித்தார்கள். ஆனால் உயர் பதவியில் இருந்தவர்கள் முறையாக ஆட்சிக்கு அதிகாரம் உள்ளவர் ஜெங்கிஸ்கானின் பேரர் அதாவது மூன்றாவது மகன் துல்யூவின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த மூங்கீ தான் என்றார்கள். ஓகுல் தனக்கு முதல் கணவன் மூலம் பிறந்த ஷிரீமூன் அல்லது கூயூக்குக்குப் பிறந்த கோஜா தான் ஆள் வேண்டும் என்றார். ஆனால் ஒருபுறம் மூங்கி தேர்ந்தெடுக்கப்பட, ஓகுல் கைமிஷ் கைது செய்யப்பட்டு அரண்மனையில் நிர்வாணப்படுத்தப்பட்டார். பின் தடித்த கம்பளித்துணியால் சுருட்டப்பட்டு ஆற்றில் வீசிக் கொல்லப்பட்டார். மூங்கிக்கு குடுக்யூ என்ற மனைவி மூலம் பல்டு, உரெண்டஷ் என்ற மகன்களும், பைய்லூன் என்ற மகளும் இருந்தார்கள். ஓகுல் கோயிமிஷ் என்ற மனைவி மூலம் ஷிரின், பிச்சிகே என்ற மகள்களும், சுபெய் என்ற இளம் மனைவியும், வைப்பாட்டிகளாக ஷிரேகி, அசுடை ஆகியோர் இருந்தனர்.

மங்கோலியர்கள் வரலாறு 5

மூங்கி (மோங்கே என்றும் அழைக்கப்பட்டார்) தன் இரு சகோதரர்கள் உதவியுடன் கிழக்கிலும், மேற்கிலும் வடசீனாவின் பகுதிகள், ரஷ்யா, பெர்ஷியா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளை வென்றார். ஜெங்கிஸ்கானின் மூத்த மகன் தோல்யூவுக்குப் பிறந்தவர். ஓகிடாயின் குழந்தை இல்லாத மனைவியான அங்க்யூ இவரை வளர்த்தார். ஓகிடாய் பெர்ஷிய போதகர் இதி தன் முஹம்மதை மூங்கிக்கு ஆசிரியராக அமர்த்தினார். ஜின் பேரரசை எதிர்த்து போரிட்ட போது முதல்முறை யாக ஓகிடாய் மற்றும் தந்தை தோல்யூவுடன் கலந்து கொண்டார். மூங்கி        1252 ல் மூங்கி கிழக்கில் வென்ற சில பகுதிகளுக்கு தன் சகோதரர் குப்ளாய்கானை ஆட்சியாளராக்கினார். பின் 1255 ல் இன்னொரு சகோதரர் ஹுலகுகானை மத்திய ஆசியாவின் இஸ்லாமிய நாடுகளை வெல்லச் சொன்னார். குப்ளாய்கான் மேற்கு சீனாவில் ஷெஸ்வான் மற்றும் யூன்னன் பகுதிகளை வென்று முன்னேறிக் கொண்டிருக்கும் போது, மூங்கி இறந்து விட்டதாக தகவல் வர திரும்பிவிடுகிறார். இடைவிடாத வயிற்றுப் போக்கால் மூங்கி 1259 ல் இறந்து போனார். அனைவரும் கூடி குப்ளாய்கானையே மன்னராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், கரகோரத்தில் கடைசி சகோதரர் அரிக் போகி தான் மன்னராக வேண்டும் என்று உரிமை கோருகிறார்.
ஒரு வழியாக 1264 ல் குப்ளாய்கான் சகோதரரை வென்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். குப்ளாய்கான் தோல்யூவின் நான்காவது மகனாவார். இவரது தர்பாரில் உயர் அதிகாரிகளாக 30 க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இருந்தார்கள். பனிரெண்டு மாகாணமாக இருந்த குப்ளாய்கானின் பேரரசில் எட்டு மாகாணங்களில் முஸ்லீம் கவர்னர்கள் இருந்தார்கள். இஸ்லாமிய மதபோதகர்களையும், விஞ்ஞானிகளையும் பெரிதும் மதித்தார். ஜமால் அத் தீன் என்பவர் வானாராய்ச்சிக்காக ஏழு கருவிகளைக் கண்டு பிடித்தார். இஸ்லாமிய மருத்துவர்களைக் கொண்டு சீனாவில் உயர்தர மருத்துவமனைகள் அமைத்தார். ஆராய்ச்சியாளர் இப்ன் சினாவின் படைப்புகளை சீன மொழியில் மொழி பெயர்த்தார். இஸ்லாமிய கணிதவியலாளர்கள் ஈக்லூடியன் ஜியாமெட்ரி, ஸ்பெரிகல் ட்ரைகோனோமெட்ரி, அரபிய எண்களை சீனாவில் அறிமுகப்படுத்தினார். குப்ளாய்கான் மேலும் இஸ்லாமிய பொறியாளர்கள் இஸ்மாயில், அல் அல் தீன் ஆகியோரைக் கொண்டு கல்லெறிந்து கோட்டைச் சுவர்களை சிதைக்கும் இயந்திரத்தையும் செய்யச் சொன்னார். தற்போது முழுகவனத்தையும் சீனாவின் மீது திருப்பினார். தலைநகர் கரகோரத்திலிருந்து தன் பாட்டனார் 1215 ல் சீரழிக்கப்பட்டிருந்த பெய்ஜிங்க் நகரத்தை வென்றார். தானே கவனம் செலுத்தி பெய்ஜிங்க் நகரத்தை சீரமைத்தார். 24 மைல் நீளத்திலும், 50 அடி உயரத்திலும் நகரைச்சுற்றி பிரமாண்டமான சுவர் எழுப்பினார். அந் நகரத்திற்கு “கான் பாலிக்” (கான்களின் நகரம்) என்று பெயரிட்டார். அந் நகரம் ஐரோப்பியர்கள் மத்தியிலும் மிகவும் புகழப்பட்டது. அவர்கள் சற்று பெயர் மாற்றி கம்பலூக் (CAMB ALUC) என்று அழைத்தனர்.
குப்ளாய்கான் இந்த நகரத்தை மையமாக வைத்து தான் ஸங்க் பேரரசை வெற்றி கொண்டார். 1271 ல் தாங்கள் கொள்ளையர்களாக அங்கு பிரவேசித்தவர்கள் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் உண்மையாக அங்கு ஒரு சீனப்பேரரசை நிறுவினார் அதே ஆண்டு அந்த பேரரசுக்கு “தா யூவன்” (YUAN DYNASTY) என்று பெயர் சூட்டினார். சீனாவில் மூதாதையர்கள் சந்ததியினரை பெரிதும் மதிப்பார்கள் அதை மனதில் கொண்டு தனது பாட்டனார் ஜெங்கிஸ்கானுக்கு மரியாதை செய்யும் விதத்தில் “ட் ஆய் ட்சூ” (GRAND PROGENITOR- மதிப்புமிக்க மூத்த சந்ததியினர்) என்று அழைத்தார். குப்ளாய்கான் 1276 ல் ஹாங்க்ஸூவில் ஸங்க் பேரரசைக் கைப்பற்றி அதன் இளம் பேரரசரையும், அவர் தாயாரையும் மரியாதையுடன் நடத்தினார். 1279 ல் மங்கோலியர்களுக்கு சீனாவில் எதிர்ப்பில்லாமல் போனது. சீனச் சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி முதல்முதலாக வெளியில் இருந்து சீனா வந்து ஆட்சி செய்தவர்கள் யூவன் பேரரசு மட்டுமே என்று கூறுகிறார்கள். ஆனால், குப்ளாய்கான் தான் என்றுமே வெளியிலிருந்து வந்து ஆட்சிசெய்பவர் என தோன்றாமல் இருந்தார். சீனாவின் நிர்வாகத்தையே தன் ஆட்சியிலும் கடைபிடித்தார். ஒரே ஒரு வேற்றுமை பணியாளர்களாக வெளிநாட்டினரை நியமித்தார். இடையில் மின்னல்போல் பிரகாசமாக வந்துசென்றவர் மார்கோபோலோ ஆகும்.
குப்ளாய்கான் இதற்கு முன்னிருந்த சீன ஆட்சியாளர்களை விட சிறப்பான முறையில் சீனப் பிரதேசங்களை ஆட்சி செய்தார். மங்கோலியா, திபெத், மன்சூரியா, கொரியா மற்றும் தென் சீனக் கடல் பகுதிகள் அனைத்தையும் தன் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். இவரின் ஆளுமையிலிருந்து தப்பியது ஜப்பான் மட்டும்தான். அதுகூட 1274 ல் மாபெரும் அழிவிற்குண்டானது, பின்பு மீண்டும் 1281 ல் மார்கோபோலோவால் மீண்டும் அழிவிற்குண்டானது. குப்ளாய்கானை ஜெங்கிஸ்கான் போல் கொள்ளையடிக்க சென்ற நாடோடிக் கூட்டத்தலைவன் போலல்லாமல் சரித்திரம் “தி க்ரேட் கான்” என்று புகழுரைக்கிறது. இவர் தன் பழங்குடியின மக்களை வென்ற இடத்தில் குடியமர்த்தினார். வென்ற இடங்களை சுதந்திரப் பிரதேசமாக அறிவித்தார். குப்ளாய்கானின் பேரரசு மிகப் பெரியது. சகோதரர் மகன்கள் படு மற்றும் பெர்கேவை ரஷ்யாவின் தங்கநாடோடிகள் நகரத்தின் அட்சியாளர்களாக்கி, தன் சொந்த சகோதரர் ஹுலகுவை பெர்ஷியாவிலும், மெஸோபொடாமியாவில் மங்கோலியர் பேரரசை நிறுவி ஆட்சியாளராக்கினார். மங்கோலியர்கள் ஏறக்குறைய பூமியின் 20% பகுதியையும், 100 மில்லியன்கள் மக்களையும் அப்போது ஆண்டார்கள்.
குப்ளாய்கான் முதல் மனைவி டெகுலென் சில நாட்களிலேயே இறந்து போனார். அடுத்து சபி என்பவரை மணந்தார். சபியும் இறந்து போக அவர் முன் மொழிந்து விட்டு போன அவர் உறவினப் பெண் நம்பூய்யை மணந்து கொண்டார். குப்ளாய் கானுக்கு டோர்ஜி, ஸென்ஜின், மங்கலா, நொமுகான், குங்குஜில், அய்ச்சி, சகுல் கச்சி, குகுச்சு, டோகன், குலன் தெமுர், சேவர், குதுக் பெகி ஆகிய பிள்ளைகள் இருந்தார்கள்.
குப்ளாய்கானுக்கு அடுத்ததாக ஹுலகுகான் ஆட்சிக்கு வந்தார். இவரும் தோல்யூ, சொர்கக்டனி பெகி தம்பதிகளின் மகனாவார். சொர்கக்டனி பெகிக்குப் பிறந்த அனைத்து மகன்களும் நாடாண்டார்கள். இவர் நொஸ்டோரியன் கிறிஸ்தவ நெறி முறையைச் சேர்ந்தவள். ஹுலகுகானும் கிறிஸ்தவர்களிடத்தில் நட்பாக இருந்தார். ஹுலகுகானின் விருப்பமான மனைவி டோகுஸ் கதுனும் கிறிஸ்தவராக இருந்தார். இறப்பதற்கு முன் மனைவியின் விருப்படி ஹுலகுகான் புத்தமதத்திற்கு மாறியதாகச் சொல்லப்படுகிறது. ஹுலகுவுக்கு அபகா கான், டெகுடெர் அஹ்மத், டரகாய் என்று மூன்று மகன்கள் இருந்தார்கள். மூங்கி இவரை தென்மேற்கு ஆசியாவின் முஸ்லீம் பகுதிகளை வெல்ல அனுப்பினார்.
ஹுலகு 1256 ல் அமுதர்யா ஆற்றைக்கடந்து இஸ்லாமிய பெர்ஷியாவில் மங்கோலிய பேரரசை நிறுவ தொடங்கினார். அப்போது அந்த பகுதி பல அரசியல் கொலைகளுக்கு ஆளாகி இருந்தது. அதற்கு காரணமாய் இருந்த ‘இஸ்மாயிலி’ என்ற அமைப்பு ஏறக்குறைய மங்கோலியர்களின் நடைமுறை முறைக்கு ஒத்து போனதாய் இருந்தது. ஹுலகுவும் ஒவ்வொரு கோட்டைகளாக கொலைகளின் மூலம் கைப்பற்றத் தொடங்கினார். 1257 ல் மேலும், மேற்கு நோக்கி வளமான பகுதியை நோக்கி முன்னேறினார். ஹுலகுவும், அவரின் நாடோடிப் படையும் வெளிப்படையில் மட்டும் இஸ்லாமின் மையமாகத் தோன்றிய கலீஃபாவின் ஆட்சிக்கு கீழுள்ள மேஸோபொடாமியாவை நோக்கி நகர்ந்தன. அப்போதைய பாக்தாதின் கலீஃபா அல் முஸ்தாஸிம் 1258 ல் மங்கோலியர்களுக்கு எதிராக படையை அனுப்பினார். ஹுலகுவால் முஸ்லீம்படை அடக்கப்பட்டு, கலீஃபாவை தன் முன்னே வந்து சரணடைந்து நகரத்தின் சுவர்களை இடிக்கச்சொன்னார். கலீஃபா அல் முஸ்தாஸிம் மறுத்துவிட, ஹுலகு பாக்தாதை வெற்றிகொண்டு, நகரை சின்னாபின்னப்படுத்தினார். ஏறக்குறைய 800,000 மக்களைக் கொன்றார். இது சுன்னி பிரிவு முஸ்லீம்களிடத்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக மிகவும் பயத்தை விளைவித்தது. மங்கோலியப் படைகள் பல கோட்டைகளை நகரங்களை அழித்தனர். கலீஃபாவையும் அவர் குடும்பவாரிசுகளையும் கொன்றனர். இஸ்லாமிய வரலாற்றில் மறக்கமுடியாத அழிவு. பல கலை ஆவணங்கள், அறிவுக் களஞ்சியங்களின் மதிப்பறியாமல் தீக்கிரையாக்கப்பட்டன. வரலாறு இஸ்லாமியர்கள் மீதான மங்கோலியர்களின் தாக்குதலை பதிவு செய்து வைத்திருக்கிறது. நாற்பது நாட்கள் இடைவெளியே விடாமல் மக்களைக் கொன்றும், மசூதிகள், கட்டிடங்களை இடித்தும் எரித்தும் நாசப்படுத்தினார்கள். இந்த பாக்தாதின் தாக்குதல் பற்றி இமாம் இப்ன் கதீர் அவர்கள் விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். ஷியா பிரிவைச் சேர்ந்த இப்ன் அல் கமி என்பவன் கலீஃபா அல் முஸ்தகீமுக்கு சமாதானமாகப் போவதாக எண்ணும் வகையில் பரிசுப் பொருள்களை அனுப்புமாறு தந்திரமான தகவலுடன் ஹுலகுவுக்கு அறிவுரை சொன்னான். பின்பு கலீஃபா தன் முன்னே கொண்டு வரப்பட்ட போது மண்டியிட்டு தலை குனிந்து போகும்படி ஹுலகு செய்தார். செழிப்பான பாக்தாத் நகரம் சின்னாபின்னமாகியது. அந்தகால கட்டத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் இப்ன் அல் அதிர் என்பவர், “ பாக்தாதின் கொடுமைகளால் நான் பல நாட்கள் மன்நிலை பாதிக்கப்பட்டிருந்தேன். இந்தக் கொடுமைகளுக்கு முன்பே என் தாய் என்னைப் பெற்று நான் மரணித்திருக்கக்கூடாதா என்று நினைத்தேன். இதற்கு முன் ஆதமின் சந்ததிகள் இது மாதிரி ஒரு மனித வேதனையைக் கண்டதில்லை என்றால் அது உண்மை. பின்னால் வரப்போகும் தஜ்ஜால் கூட தன்னைப் பின்பற்றுபவர்களை விட்டுவிடுவான். வெறும் ஒரு ஆண்டுகாலத்தில் எவ்வளவு பேரழிவு ஏற்படுத்த முடியுமோ, எப்படியெல்லாம் அழகைச் சிதைக்க முடியுமோ, குணத்தாலும், நாகரீகத்தாலும் சிறந்திருந்த பெருவாரியான மக்களை எப்படியெல்லாம் கொல்ல முடியுமோ அத்தனையையும் செய்தார்கள். அவர்கள் அங்கிருந்த இரவுகளை இனி யாரும் இந்த உலகில் சந்தித்திருக்க மாட்டார்கள். முஸ்லீம்களும், இஸ்லாமும் சற்று இயங்காமல் போனது” என்று குறிப்பிட்டிருக்கிறார். பாக்தாதின் புகழ்பெற்ற மத்திய நூலகத்தில் இருந்த பௌதீகம், விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், தத்து வம் சம்பந்தமான ஒப்பற்ற களஞ்சியங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. டைக்ரீஸ் நதியின் நீர் பல நாட்களுக்கு கருநிறத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தப்பிக்க முயன்ற பொது மக்களைக் கூட விடாமல் கொன்று குவித்தார்கள் ஹுலகு வின் இராணுவத்தினர். எப்படி அழைப்பது என்று சொல்லிக் கொடுப்பதற்காகவே ஆயிரக்கணக்கான வட சீனா பொறியாளர்கள் ஹுலகுவுடன் மத்திய ஆசியா போருக்குச் சென்றார்களாம்.

மங்கோலியர்கள் வரலாறு 6

ஒட்டு மொத்த உலகுக்கும் மங்கோலியர்கள் என்றாலே கொடுமையாளர்கள் என்ற எண்ணம் தான் வரும். சிலைகளையும், நட்சத்திரங்களையும் வணங்கியவர்கள். மஞ்சள் நிறத்தவராக அறியப்பட்ட இவர்கள் மிருகங்களுக்கு காணிக்கை செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால் வியப்பு அல்லாஹ் இந்த சந்ததியினருக்கு இஸ்லாமில் நுழையும் வாய்ப்பை அருளினான். அடுத்த ஐம்பது ஆண்டுகளில் பெரும்பாலான மங்கோலியர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாத்திற்காக பல நன்மைகளைச் செய்தார்கள். இவர்களால் அழிக்கப்பட்ட கலாச்சாரம், பண்பாடுகள் முஸ்லீம் பிரதேசம் மட்டும் அல்லாது மங்கோலியா வரை வளர்க்கப்பட்டது. தங்கள் கரங்களால் சேதப்படுத்தியதை தாங்களே புணரமைத்தார்கள்.
1259 ல் ஹுலகுவால் அலிப்போ மற்றும் டமாஸ்கஸ் நகரம் கைப்பற்றப்பட்டது. இதனால் தென்கடற்கரைப் பகுதியில் எகிப்தின் வழி அவர்களுக்கு திறக்கப்பட்டது. 1260 ல் எகிப்தின் மம்லுக் சுல்தானின் ஜெனரல் ஒருவரால் பைபர்களால் நாஸரெத் நகரத்திற்கருகில் அய்ன் ஜாலூத் என்ற இடத்தில் எதிர்கொள்ளப்பட்டது. மிகக்கடுமையான உலகப்போர்களில் ஒன்றான இதில் பைபர்கள் மங்கோலியர்களை வென்றார்கள். மங்கோலியர்கள் அய்ன் ஜாலூத்தில் மம்லூக் என்னும் சாதாரண அடிமைப்படைகளிடம் தோற்றார்கள். பைபர் என்னும் எகிப்தின் இரா ணுவக் கமாண்டரை சில ஆண்டுகளுக்கு முன் தான் மங்கோலியர்கள் கைது செய்து அடிமைச் சந்தையில் விற்றிருந்தார்கள். அவர் தன் திறமையால் எகிப்து இராணுவத்தில் உயர்பதவியில் இருந்து இன்று அதே மங்கோலியர்களை எதிர்த்தார். 50 ஆண்டுகளான போர்களில் முதல் முறையாக ஜெங்கிஸ்கானின் வம்சம் தோல்வியுற்றது. அய்ன் ஜாலூத் தோல்வி மங்கோலியர்களின் அதிகாரத்தை மேலும் வளரவிடாமல் தடுத்தது. பாலஸ்தீனமும், சிரியாவும் எகிப்தின் மம்லூக்குக ளின் பேரரசுடனே இருக்கவும், மெஸோபோடாமியாவும், பெர்ஷியாவும் மங்கோலிய பேரரசுடன் இருந்தது.
அய்ன் ஜாலூத் தோல்விக்குப் பிறகு, ஹுலகுவும், அவர் சந்ததியினரும் கருங்கடலின் கிழக்கே வாணிப வழியான தப்ரிஸ் என்ற இடத்தை தலைநகராக்கிக் கொண்டார்கள். ஹுலகு மம்லூக்குகளிடமிருந்து சிரியாவையும், பாலஸ்தீனத்தையும் கைப்பற்ற எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், பேரரசின் மேற்கு எல்லையாக யூப்ரடிஸ் நதிக்கு மேல் முன்னேற முடியவில்லை. மேலும் தீவிர இஸ்லாமியராக இருந்த படுகானின் சகோதரர் பெர்கிகான், ஹுலகு பாக்தாதின் மீது காட்டிய கொடுமை பொறுக்க முடியாமல் மம்லூக்குகளுடன் இணைந்து ஹுலகுவின் பகுதிகளில் கலவரம் செய்தார். கிழக்கில் இந்துஸும், அமுதர்யா விலிருந்து கீழ் வடக்கில் இந்தியப் பெருங்கடல் வரை கான்களின் பேரரசு இருந்தது. ஹுலகுகான் மரணமடைந்து ஷஹி தீவில் அடக்கம் செய்யப்பட்டார். தார். பெர்ஷியாவில் சிறிய ஆட்சியாளர்களின் வெற்றியாலும், மத்திய ஆசியாவின் மலைப்பகுதியிலிருந்து கிளம்பிய இன்னொரு கூட்டத்தினரின் வருகையாலும், ஜெங்கிஸ்கான் என்னும் தனி மனிதனின் சந்ததி முடிவுக்கு வந்தது. சீனாவிலும் 1368 ல் யூவன் பேரரசு முடிவுக்கு வந்து மிங்க் ஆட்சி துவங்கியது. 1383 ல் தைமூரியர்கள் வடக்கு பெர்ஷியாவில் நுழைந்தனர். ரஷ்யாவிலும் அடுத்த கால்நூற்றாண்டுகளில் தங்க நாடோடிகளின் ஆட்சி சரிவை நோக்கி நகர்ந்தது. 1380 ல் மாஸ்கோவின் இளவரசர் குலிகோவோ என்ற இடத்தில் தோற்கடித்தனர். 1395 ல் தைமூரியர்கள் சராய் பெர்கே நகரை அழித்தனர். ரஷ்ய சரித்திரத்தில் டடார்கள் என மங்கோலியர்கள் அழைக்கப்பட்டனர். ரஷ்யாவின் அதிகாரத்தில் போட்டியிட்ட ஒரே இனம் மங்கோலிய இனம் மட்டுமே. மங்கோலியாவின் உலான்பாடர் நகரில் உள்ள ஜெங்கிஸ்கானின் குதிரையில் வீற்றிருப்பது போன்ற சிலை மிகவும் உயரமானது. கீழிருந்து இயந்திரத்தில் (லிப்ட்) சென்று பின்பு கழுத்துப் பகுதியிலிருந்து ஏணியில் செல்ல வேண்டும்.
சரித்திரத்தில் மிக குறுகிய காலத்தில் பிரமாண்ட வெற்றி பெற்று வெகு விரைவில் அதிகாரம் இழந்தது மங்கோலியர்கள் தான். மங்கோலியர்களின் வெற்றி இணையற்ற திறமையால் பெற்றது. ஜெங்கிஸ்கானின் கல்வியறிவில்லாத காலத்திலிருந்து வந்த இவர்கள் பின்னாளில் துருக்கியர்களின் எழுத்தை பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பழக்கப்படுத்திக் கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட மதமும் ஷாமானிஸம் (ஷாமானிஸக் கொள்கையானது இயற்கையை வணங்குவதாகும்) என்ற கொள்கையைக் கொண்டது. மங்கோலியர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதுவது அவர்கள் ஒரு தொடர்ச்சியாக இல்லாமல் க்ரேட் கானால் மூன்று பகுதிகளுக்கு திசை மாறி வெற்றி கொண்டதே என்பதாகும். சீனாவில் அவர்கள் திபெத்துடன் பலமான உறவு வைத்திருந்த காரணத்தால் புத்தமதத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்குஆசியாவில் அவர்கள் வெற்றி கொண்ட பகுதிகள் முஸ்லீம் கலீஃபாக்கள், லத்தீன் ஜெருசலம் மற்றும் பைஸாந்திய பேரரசின் எல்லைகளை ஒட்டி இருந்ததால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்திருக்க வேண்டியதாகி இருந்தது. 1255 ல் பெர்கே தான் முதலில் இஸ்லாத்தைத் தழுவினார். அடுத்த மூன்று ஆண்டுகளில் 1258 ல் ஹுலகு (இவர் மனைவி நெஸ்டோரியன் கிறிஸ்தவர்) பாக்தாதை அழித்து (இஸ்லாமிய உலகுக்கு இன்றுவரை ஈடு செய்யவே முடியாத ஒரு இழப்பு) இஸ்லாமிய கலீஃபாவைக் கொன்றார்.
இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் ஜெங்கிஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டு வந்தனர். நாளடைவில் அவர்களுக்குள்ளேயே மாகாணங்களை ஆள்வதில் சண்டையிட்டுக் கொண்டார்கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்து கொண்டார்கள். இவர்களை சகாடைய் துருக்கி என்றே அழைத்தார்கள். குப்ளாய்கான் சீனாவிலிருந்து திரும்பிய பிறகு, சீனாவில் மிங்க் பேரரசு ஆட்சி செய்து வந்தது. யூவான் பேரரசு சீனாவில் தூக்கி எறியப்பட்ட பிறகு, குப்ளாய்கான் மிங்க் பேரரசுடன் போரிட்டார். 1380 ல் மிங்க் இராணுவம் மங்கோலியர்களின் கரகோரம் நகரை சேதப்படுத்தியது. ஆனால், மங்கோலியர்கள் விடாமல் தங்களின் பிறப்பிலேயே அமைந்த புராதன தாக்குதல் முறையில் தொடர்ந்து சீனாவின் எல்லைகளை தாக்கிக் கொண்டிருந்தார்கள். குப்ளாய்கான் சீன பாரம் பரியத்திலான அரண்மனையிலேயே தங்கி இருப்பதை விரும்பினார். இதனூடே சீனாவில் திபெத்தியர்களுடனும், மன்சூஸ்களுடனும் மங்கோலியர்கள் நல்ல உறவைப் பேணி வந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் தலாய்லாமாவுடன் இருந்த நெருக்கமான உறவால் மங்கோலிய பழங்குடிகள் புத்தமதத்தை தழுவினார்கள். குப்ளாய்கான் ஜெங்கிஸ்கான் பரம்பரையிலேயே சற்று வித்தியாசமாக இருந்தார். கலை ரசிகராகவும், நிர்வாகத் திறமை வாய்ந்தவராகவும் இருந்தார். நிறைய சீன கலாச்சாரமுள்ள கட்டிடங்களை நிர்மாணித்தார். சீன நாட்காட்டியை பயன்படுத்தினார். முஸ்லீம், கிறிஸ்தவ, சீன, லத்தீன் போன்ற பல மத தலைவர்களை அரண்மனைக்கு வரவழைத்தார்.
90 ஆண்டுகால மங்கோலிய சீன ஆட்சியில் பல நன்மைகள் விளைந்தாலும், நாட் டுக்குள்ளேயே உள்நாட்டு குழப்பங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. புத்த மதக் கோட்பாடு இரத்தம் சிந்துவதற்கு எதிராக இருந்ததால் மங்கோலியர்களுக்கு போரிடுவதில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது. இராணுவத்திலும் முறை கேடுகள் நடந்தன. ஜப்பான், வியட்நாம் மற்றும் ஜாவா தீவுகளுக்கு அனுப்பப்பட்ட மங்கோலிய இராணுவம் தோல்விகண்டு திரும்பின. குப்ளாய்கானின் மனைவி சாபியின் மரணமும், அடுத்த ஐந்தாம் ஆண்டில் அவர் மகன் மரணமும் அவரை நிலை குலைய செய்தன. தன் ராஜகம்பீரமான வாழ்க்கை தரத்தை வெறுக்க ஆரம்பித்தார். நாட்டில் ஊழல் தலை தூக்க ஆரம்பித்தது. நாட்டின் நடைமுறை செலவுகளுக்கு வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயமாகியது. மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. சமாளிக்க முடியாமல் மங்கோலிய குடும்பங்கள் மத்திய ஆசியாவை நோக்கி சென்றன. நாட்டில் அமைதி ஏற்படவேண்டி மக்களிடையே மிகவும் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த ஜு யூவான்ஸ்ங்க் என்பவர் தலைமையேற்று மிங்க் பேரரசை நிறுவி மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டார்.
பதினாறாம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் கிழக்குப்பகுதி மன்சூஸ்கள் சற்று பலம் பெற்றார்கள். இதனால் அந்த பகுதி மங்கோலியர்கள் மன்சூஸ்களின் பிரதேச மக்களாகிப் போனார்கள். அவர்கள் இரு பிரிவுகளுக்குள்ளும் திருமண உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு நட்பாகிப் போயினர். 1644 ல் மன்சூஸ்கள் மிங்க் பேரரசை எதிர்த்து போரிட்டு கிங்க் பேரரசு என்ற ஒன்றை புதியதாக உருவாக்கினார்கள். அந்த பகுதி மங்கோலிய மக்கள் சீனாவாசிகளாகவே ஆகிப்போனார்கள். 1691 வரை வெகு தொலைவில் இருந்த சில மங்கோலியர்கள் மட்டும் சீனப் பேரரசிலேயே வெளி மங்கோலியர்களாய் இருந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டுகளில் மன்சூஸ் பேரரசுடன் இருந்த மங்கோலியர்கள் 1912 ல் மன்சூஸ் பேரரசு வீழ்ந்து சீனா விடுதலை (ரிபப்ளிக் ஆஃப் சீனா) அடைந்ததில் சீன மக்கள் ஆகினார்கள்.
சீனாவின் வெளிப்புறத்தில் இருந்த மங்கோலியர்கள் சீனாவால் முற்றிலும் கை விடப்பட்டு தனியாகிப் போனார்கள். 1912 ல் ரஷ்யாவின் உதவியால் வெளி மங்கோலியர்கள் சீனா, ரஷ்யா என்ற இரு சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையில் தனியாக செயல்பட்டு வந்தது. இது அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. இறுதியில் 1946 ல் மங்கோலியா சுதந்திர நாடாக அங்கீகாரம் பெற்றது. (மங்கோலியன் பீப்பிள்ஸ் ரிபப்ளிக்) சர்வதேச நாடுகளின் ஐக்கிய நாட்டு சபை 1961 ல் அங்கீகாரம் அளித்தது.

வெள்ளி, 17 ஜூலை, 2015

அலாஒயிட்டுகள் வரலாறு 1

அலாஓயிட் ஆட்சிவம்சம் 

கூ.செ. செய்யது முஹமது
சாதியன் பேரரசில் இறுதி சுல்தானாக மொரோக்கோவில் அஹ்மத் அல் மன்சூர் என்பவர் இருந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு, அரச குடும்பத்தினரின் குழப்பத்தினால் அலாஓயிட் ஆட்சிவம்சம் என்ற புதிய பெயரில் ஸாவியா போரில் வெற்றி பெற்று முலாய் அல் ராஷித் என்பவரின் ஆட்சி மொரோக்கோவில் ஏற்பட்டது. இந்த ஆட்சியை அலவிட் ஆட்சிவம்சம் என்றும் அழைக்கலாம். இவர்கள் அலி இப்ன் அல்தாலிப்(ரலி), ஃபாத்திமா அஸ் ஸஹரா(ரலி) அவர்களின் வாரிசு முஹம்மது என்பவரின் வழிமுறையில் வந்தவர்கள். 13 ம் நூற்றாண்டில் ஹிஜாஸ் மாகாணத்தில் யான்பு நகரத்திலிருந்து அல் ஹஸ்ஸன் அத்தாகில் என்பவரை மொரோக்கோவைச் சேர்ந்த ஒரு இமாம் (மதகுரு) தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வதால் அவரின் துவா (பிரார்தனை) வினினால் தங்கள் பேரீச்சைத் தோட்டத்திற்கு பரக்கத் (வளமை) வரலாம் என்று அழைத்து வந்தார். அத்தாகிலின் சந்ததி படிப்படியாகப் பெருகி 16 ம் நூற்றாண்டில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஷரீஃப் இப்ன் அலி என்பவர் சாதியன் பேரரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி ‘டஃபிலல்ட்’ பகுதியில் இளவரசரானார். இவர் தான் அலவிட் ஆட்சிவம்சம் அமைய தூண்டுகோலாக இருந்தார். இவரின் 15 மகன்களில் மூத்த மகனான முஹம்மது இப்ன் ஷரீஃபை 1536 ல் டஃபிலல்டுக்கு ஆட்சியாளராக்கினார். முஹம்மது இப்ன் ஷரீஃபிற்கு பிறகு அவர் சகோதரர் முலாய் அல் ராஷித் 1664 ல் ஆட்சிக்கு வந்து சிறிய இராணுவத்தின் மூலம் கிழக்கு மொரோக்கோவில் ஆதிக்கம் பெற்றார். அடுத்து டஸா என்ற பகுதியையும் வென்றார். 1666 ல் ஃபெஸ் மாகாணத்தை ஆட்சி செய்த பெர்பெர்களின் வழிவந்த ஸ்வோய்யா என்பவரை மொரோஸாவியா போரில் வெற்றி பெற்று வட மொரோக்கோவின் மொத்த அதிகாரத்தையும் பெற்றார். இவர் தனது குதிரையில் இருந்து தவறி விழுந்து மர்ராகெச்சில் 1672 ல் 26 வயதில் இறந்து போனார். இவருக்குப் பிறகு இவரின் ஒன்று விட்ட சகோதரர் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஆட்சிக்கு வந்தார்.
இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஆட்சிக்கு வந்தவுடன் உள்நாட்டு பழங்குடியினரால் அடிக்கடி சண்டை நடந்தது. மர்ராகெஷிலிருந்து மாற்றி மெக்னஸ் என்ற நகரத்தை தலைநகராக உருவாக்கினார். இது மொரோக்கோவின் மூன்றாவது பெரிய நகரமாகும். ஏறக்குறைய ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள் 9 ம் நூற்றாண்டில் தென் துனீஷியாவில் வாழ்ந்த மிக்னஸா என்ற பெர்பெர் பழங்குடியினரின் நினைவாக மெக்னஸ் என்று பெயர் வைத்தார். 11 ம் நூற்றாண்டில் அல்மொராவிட்கள் ஆட்சியின்போது இங்கொரு கோட்டை இருந்தது. பின் அல்மொஹத் என்பவர்களால் ஒரு பெரிய மஸ்ஜித் கட்டுவதற்காக அது இடிக்கப்பட்டது. பின்னால் வந்த மெரினித்கள் ஒரு மதரஸாவையும் கட்டினார்கள். இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் கடலில் பிடிக்கப்படும் கிறிஸ்தவ மாலுமிகளை அடைத்து வைக்க இங்கு பெரிய சிறைச்சாலையும், மாளிகைகளும், தோட்டங்களும், நினைவு கதவுகளையும், மஸ்ஜித்களையும் கட்டினார். இந்நகரம் “சிட்டி ஆஃப் ஹன்ரட் மினாரட்ஸ்” என்று அழைக்கப்பட்டது. 40 கி.மீ நீளத்தில் மிகப்பெரிய சுவரையும் நகரைச் சுற்றிக் கட்டினார். இச்சுவரால் 2000 ஆம் ஆண்டு மெக்னஸ் நகரில் மழை பெய்தால் வெளியேறாமல், வடிவு நீர்க்குழாய்கள் அமைப்பதும் சிரமமாக இருந்தது.
இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் கொடூரத்தன்மையால் ‘இரத்த தாகம் எடுத்தவர் என்று சொல்லப்பட்டார். இவர் மெக்னஸில் கட்டிய சுவரில் எதிரிகளின் 10,000 தலையால் அழகுபடுத்தப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. இவரது ஆட்சியில் சரியாக வேலை செய்யாத பணியாட்கள், அரண்மனை வேலையாட்கள், எதிரிகள் என்று தோராயமாக 30,000 பேர் வரை கொன்றார் என்று சொல்கிறார்கள். 1682 ல் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஃப்ரான்ஸின் மன்னரான 18 ம் லூயிஸிடம் முஹம்மது டெனிம் என்பவரை தூதுவராக அனுப்பினார். ஃப்ரான்சுடன் நல்லுறவைப் பேண லூயிஸின் அழகான மகள் மேரி அன்னி டி போர்டனை மணந்து கொள்ளவும் விரும்பினார். ஆனால், போர்டன் அதை மறுத்துவிட்டாள். 1679, 1682, 1695,1695 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து ஓட்டோமான்களுடன் போரி ட்டு மொரோக்கோவின் சுதந்திரத்தை அலாவிட்டுகளுக்கு உறுதி செய்தார். இதனால் இன்றும் மொரோ க்கோவின் சரித்திரத்தில் இவருக்கொரு பெயருண்டு.  ஐரோப்பியர்கள் நிறைய துறைமுகங்களை ஆக் கிரமித்து வைத்திருந்தார்கள். 1681 ல் ஸ்பெயினிடமிருந்து அல் மமூராஹ், 1684 ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து டான்ஜியர், 1689 ல் மீண்டும் ஸ்பெயினிடமிருந்து லராச்சி ஆகிய துறைமுகங்களை மீட்டார். ஸ்பெயினின் எதிரியாய் இருந்த ஃப்ரான்சின் 
18 ம் லூயிசின் நட்புறவால் பல உதவிகள் பெற்றார். ஃப்ரான்ஸ் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் இராணுவத்திற்கு பயிற்சியும் கொடுத்து, அரசு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று ஒழுங்குமுறைகளையும் சொல்லிக் கொடுத்தது. பல ஐரோப்பிய கடல் கொள்ளையர்களையும், அடிமைகளையும் பிடித்து வைத்திருந்த இவர் தலைநகர் மெக்னஸை உருவாக்க அவர்களைப் பயன்படுத்திக் கொண்டும், ஐரோப்பியர்களுடனான போர்களில் அவர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தியும், அவர்களை விடுதலை செய்ய பெரிய பணயத் தொகைகளையும் பெற்றார். ஏறக்குறைய 150,000 துணை சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் இவரின் ‘கரும் பாதுகாப்புப்படை’ யில் இருந்தார்கள். இவர் இறக்கும் போது அப்படை பலமடங்கு பெரியதாக மாறி மொரோக்கோவின் சரித்திரத்தில் இடம் பெற்றது.
நம்பித்தான் ஆகவேண்டும் இவருக்கு 867 குழந்தைகள் பிறந்தனர். அதில் 525 ஆண் குழந்தைகளும், 342 பெண் குழந்தைகளும் ஆவார்கள். 1721 ல் இவரது 700 வது குழந்தை பிறந்தது. இப்பிறப்புகள் எந்த ஒரு தனி மனிதனுக்கும் இல்லாமல் ஆதாரத்துடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1727 ல் தனது 80 வது வயதில் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் இறந்து போனார். இவர் இறப்பிற்கு பிறகு எண்ணற்ற மகன்களால் ஆட்சிக்கு பெரும் குழப்பம் நிலவியது. மேலும் நல்ல உறவு இல்லாத பெர்பெர் மற்றும் அரபு பிதோயின் பழங்குடியினர்களாலும் பல புரட்சிகளும், சண்டைகளும் நடந்தது. 1755 ல் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தில் மெக்னஸ் நகரின் அரண்மனை சுவர் பெரிதும் பாதிக்கப்பட்டது. இஸ்மாயில் இப்ன் ஷரீஃபுக்குப் பிறகு, சில மாதங்களே ஒன்று விட்ட சகோதரர் அஹ்மெத் எத் தெஹிபி 1727 ல் ஆண்டார். மதுப்பழக்கம் இருந்ததாலும், ஆட்சியாளும் சரியான தகுதி இல்லாததாலும் இவரின் சொந்த மனைவியே புரட்சிக்குத் தூண்டி இவரை ஆட்சியை விட்டு துரத்தினார். உடனே பல பிரச்சினைகளின் பின்ணனியில் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் மகன் அபுல் அப்பாஸ் அஹமத் ஆட்சிக்கு வந்தார். ஒரே ஒரு ஆண்டு மட்டும் ஆட்சி செய்தார். உடனே இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் பிரபலமான மகன் அப்தல் மாலிக் என்பவர் ஆட்சியைப் பிடித்தார். இவரை வாய்மொழியாக தந்தை ஆட்சிக்குப் பரிந்துரைத்திருந்தார். இவர் செய்த தவறு சகோதரரைத் தப்பிக்க விட்டது. அதற்குக் காரணமாக கரும்பாதுகாப்புப்படையை குற்றம் சாட்டினார்.
இதனால் கரும்பாதுகாப்புப்படை கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அப்தல் மாலிக்குக்கு ஒத்துழைக்காமல் அஹ்மெத் எத் தெஹிபுக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனால் மீண்டும் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்தது. அதிகமான ரத்தம் சிந்தப்பட்ட பிறகு, சகோதரர்கள் இருவருக்கும் இடையில் சமாதானத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். மொரோக்கோவை இரண்டாகப் பிரித்து அஹ்மெத் எத் தெஹிபி மெக்னெஸ் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு ஆட்சியும், ஃபெஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு அப்தல் மாலிக் ஒரு ஆட்சியும் ஆள்வதாக ஒப்புக் கொண்டார்கள். இதன் சாராம்சம் சரியாக இல்லாததால், சகோதரருடன் நேரில் சந்தித்துப் பேச அழைத்தார். ஆனால் பின்ணனியில் அவரைக் கொல்ல அப்தல் மாலிக் திட்டமிட்டிருந்தார். ஆனால் திட்டம் தோல்வி அடைந்ததால் ரகசிய படையால் பிடிக்கப்பட்டு தனிச் சிறையில் அடைக்கப்பட்டு, பல வாரங்கள் கழித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த தருணத்தைப் பயன்படுத்தி தப்பிப்போன அபுல் அப்பாஸ் அஹமது மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். முன்பு போலவே சில மாதங்களே ஆண்ட இவரை புரட்சியின் மூலம் சுல்தான் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் இன்னொரு மகன் அபு அப்பாஸ் அப்துல்லாஹ் ஆட்சிக்கு வந்தார். இவரை ஒரே முறையாக ஆட்சி செய்யவிடாமல் அவரது சகோதரர்கள் புரட்சியின் மூலம் கவிழ்த்தார்கள். இவர் 1729-1734, 1736, 1740-1741, 1741-1742, 1743-1747 மற்றும் 1748-1757 வரை விட்டு விட்டு ஆண்டார். தார் இட்டிபிபாக் என்ற இடத்தில் நவம்பர் 1757 ல் இறந்து போனார். இடைப் பட்ட காலங்களில் 1734-1736 ல் அலி என்பவரும், 1736-1738 வரை இரண்டாம் முஹம்மதுவும், 1738-1740, 1742-1743, 1747-1748 வரை மூன்று முறை அல் மொஸ்தாடியும், 1741 ல் சில மாதம் ஸின் அல் அபிதினும் நிலையற்று ஆட்சி செய்தார்கள். அந்தளவுக்கு சகோதரர்கள் புரட்சியின் மூலம் அடித்துக் கொண்டார்கள்.
1757 ல் அபு அப்பாஸ் அப்துல்லாஹ் இறந்த பிறகு, 1745 லிருந்து 1748 வரை ஆண்ட நான்காம் அப்துல்லாஹ் என்பவரின் மகன் முஹம்மது பென் அப்துல்லாஹ் ஆட்சிக்கு வந்தார். இவரை மூன்றாம் முஹம்மது என்றும் அழைப்பார்கள். இவர் வந்த பிறகு, இராணுவம், நிர்வாகம் அனைத்தையும் உடனடியாக மாற்றினார். மத்தியிலிருந்து அனைத்துப்பகுதியிலும் ஆள்வதற்கு பதில் அங்கங்குள்ள பழங்குடி மக்களை அவர்களையே நிர்வகிக்கச் செய்தார். இவர் இதற்கு முன்பு மர்ரகெஷில் கவர்னராக இருந்தார். பலருடன் அதிகமாக அமைதி ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். ஐரோப்பியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, கடற்கொள்ளையர்களைத் தடுத்தார். மூன்றாம் முஹம்மது கவனிக்கப் படாமல் இருந்த எஸ்ஸஓயிரா நகரத்திற்கு புத்துயிர் அளித்தார். இந் நகரம் மேற்கு மொரோக்கோவில் அட்லாண்டிக் கடலின் கரையில் இருந்தது. மர்ரகெஷுக்கும், டென்சி ஃப்ட் அல் ஹஊஸ் நகரங்களுக்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டித்தந்தது. மொரோக்கோவின் சிறந்த துறைமுகமாக வேகமாக வீசும் கடல் காற்றைத் தடுக்கும் வண்ணம் அமைதியாக இருந்தது. எஸ்ஸா ஓயிரா நகரம் சரித்திரகாலத்திற்கு முற்பட்ட புராதன நகரம். புராதன பொருட்கள் பல ஆராய்ச்சியாளர்களால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிடி மொக்தூல் என்ற ஒரு இஸ்லாமிய ஞானியின் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டதால் மொகடார் என்றும் இந்நகரம் அழைக்கப்பட்டது.

அலாஒயிட்டுகள் வரலாறு 2

சுல்தான் மூன்றாம் முஹம்மது இந்நகரை சீரமைத்ததால்  அவர் எதிரிகளுக்கு வாணிபத்திற்குப் பயன்பட்ட அக்தீர் பகுதி தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கட்டாயமாக எஸ்ஸஓயிரா நகரத்திற்கு குடியேறினார்கள். 12 ஆண்டுகள் மூன்றாம் முஹம்மது ஃப்ரான்சின் தலைமை பொறியாளர் தியோடர் கோர்னட் தலைமையில் ஐரோப்பிய பணியாட்களை வைத்து நவீன நகரமாக கோட்டையுடன் இதை வடிவமைத்தார். மிகவும் அழகாகத் தோன்றிய இந்நகரம் மொகடார் என்பதிலிருந்து மாறி “எஸ்-ஸஓயிரா” (அழகாக வடிவமைக்கப்பட்டது.) இந்நகரின் கஸ்பாஹ் பகுதியில் சுல்தான் குடும்பத்தினர் தங்க இருப்பிடம். ஐரோப்பியர்கள் தங்க தனி இடம், கிறிஸ்தவ மற்றும் கடல் வணிகர்கள் தங்க தனி இடங்களைக் கட்டினார். துறைமுகத்தின் அழகிய நுழைவாயில் அஹ்மத் எல் இங்கிலீஸி என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கச் செய்தார். 19 ம் நூற்றாண்டு வரை மொரோக்கோவின் முக்கிய துறைமுகமாக விளங்கி, இங்கிருந்து வாகனங்களில் பல நகரங்களுக்கு தினசரி பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. மொரோக்கோவின் பல பகுதிகளில் வசித்த யூதர்களை மூன்றாம் முஹம்மது இந்நகரத்திற்கு வந்து தங்கி ஐரோப்பியர்களுடன் வாணிபம் செய்ய வேண்டினார் அதனால் அங்கு பல யூத மடங்களும், கல்லறைகளும் உள்ளன. மூன்றாம் முஹம்மது ஃப்ரான்சுகளிடமிருந்து லராச்சி, போர்ச்சுகீசியர்களிடமிருந்து மஸகன் ஆகியவற்றைக் கைப்பற்றினார். இவரது ஆட்சியில் அமெரிக்காவால் முதல் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. 1789 ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தங்கள் கப்பல்களை மொரோக்கோ துறைமுகங்களில் நிறுத்த அனுமதி கோரினார்.
மூன்றாம் முஹம்மதுவுக்குப் பின் அவர் மகன் யஸீத் 1790-1792 வரை ஆட்சி செய்தார். அதிக லாபம் ஈட்டி வந்த யூதர்கள் தனக்கு பொருளாதார உதவிகள் செய்யாததால் அவர்கள் அதிகமாக வாணிபம் செய்து வந்த டீடோவன் நகரத்தில் பல தொந்திரவுகள் செய்தார். தனது கரும்பாதுகாப்புபடைகளைப் பயன்படுத்தி அடிக்கடி அந்நகரை கொள்ளை அடிக்கச் செய்தார். இவருக்குப் பிறகு, மூன்றாம் முஹம்மதுவின் ஐந்து மகன்களில் இன்னொருவரான முலாய் ஸ்லிமானி என்பவர் 1792 ல் அலவுட்களின் மொரோக்கோ சுல்தான் ஆனார். நிறைய உள்நாட்டுப் புரட்சிகளை எதிர் கொண்டு மொரோக்கோவை நிலைப்படுத்தினார். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த இவரது காலத்தில் மொரோக்கோ பெரும் வளர்ச்சியை எட்டியது. வெகுகாலமாக மொரோக்கோவின் கடற்பகுதிகளில் நடமாடிக் கொண்டிருந்த கடற்கொள்ளையர்களை முற்றிலும் கட்டுப்படுத்தினார். நீண்ட காலமாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் பல குழப்பங்கள் நிலவியதால் ஐரோப்பிய வணிகத்தை நிறுத்தி வைத்தார். ஆனாலும் சுல்தான் முலாய் ஸ்லிமானி அமெரிக்காவுடன் நட்புறவில் இருந்தார். நல்ல எழுத்தாளராகவும் இருந்த முலாய் ஸ்லிமானி இனாயத் உலா லி அல் மஜ்த், ஹவாஷி அலா ஷர் அல் கர்ஷி, தகயித் ஃபீ ஹுக்ம் அல் கினா மற்றும் ரிசாலா ஃபீ ஹுக்ம் அல் கினா ஆகிய புத்தகங்களையும், எண்ணற்ற கடிதங்களையும் எழுதி உள்ளார்.
முலாய் ஸ்லிமானிக்குப் பிறகு, ஹிஷாம் என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் 1822 நவம்பரில் ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிக்கு வந்த சமயத்தில் பல உள்ளூர் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அதிகாரம் வேண்டி புரட்சி செய்தார்கள். ஆரம்பத்தில் அவர்களை கடுமையான முறையில் அடக்கினார். மொரோக்கோ நாட்டின் பொருளாதாரம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. இதனால் முந்தைய ஆட்சியாளர் நிறுத்தி வைத்திருந்த ஐரோப்பிய வாணிபத்தை துவங்க நினைத்தார். அவர்கள் பல சட்டதிட்டங்களுடன் வாணிப ஒப்பந்தம் போடச் சொன்னார்கள். இதனால் துவண்டு போன அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் கடற்கொள்ளையர்களுடன் கப்பல்களை துறைமுகங்களில் நிறுத்திக் கொள்ள அனுமதித்து வருவாய் ஈட்டத் தொடங்கினார். இதனால் தங்கள் கப்பல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஐரோப்பியர்கள் கோபமடைந்தார்கள். பிரிட்டிஷ் டான்ஜியர் துறைமுகத்தை தடை செய்து வைத்துக் கொண்டது. ஆஸ்ட்ரியன்கள் லராச்சி, அசிலாஹ் மற்றும் டெடோவான் துறைமுகங்களை குண்டு வெடித்து தகர்த்தது. இறுதியாக 1851 ல் சாலியில் குண்டு எறியப்பட்டு கடற்கொள்ளை நின்று போனது. நல்ல நிவாகியாக இருந்த அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் பல பொதுக் கட்டிடங்களையும் அடிப்படை கட்டமைப்பை சரி செய்தார். 1824,1828, 1831, 1843, 1849, 1853 ஆகிய ஆண்டுகளில் நடந்த உள்நாட்டு சண்டைகளை சமாளித்தார். இவருக்கு பெரிய வெளிநாட்டு எதிரியாக இருந்தது ஃப்ரான்ஸ் தான். மிக அருகில் 1830 ல் ஃப்ரான்ஸ் அல்ஜீரியாவை ஆக்கிரமிப்புச் செய்து வைத்திருந்ததால் எப்போதும் மொரோக்கோவிற்கு மிரட்டலாகவே இருந்தது.
அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் இராணுவத்தை அனுப்பி செம்சென் நகரை பாதுகாக்க செய்தார். உடனே ஃப்ரான்ஸ் சண்டையிட்டு இராணுவத்தைத் துரத்தி விட்டு 1832 ல் லெம்சென்னைக் கைப்பற்றியது. ஃப்ரான்சை எதிர்த்து அல்ஜீரியாவின் அப்த் அல் காதி அல் ஜஸா இரி நடத்திய கொரில்லா முறை தாக்குதல்களுக்கு அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் ஆதரவு கொடுத்தார். இவரை விட கடற்கொள்ளையர்கள் அல் ஜஸா இரிக்கு பெரும் ஆதரவு கொடுத்தார்கள். இதனால் எல் லையில் எந்நேரமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஃப்ரான்ஸ் அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாமை அல் ஜஸா இரிக்கு கொடுத்து வரும் கொரில்லா ஆதரவை நிறுத்திக் கொள்ளச் சொன்னது. மொரோக் கோவின் கிழக்குப் பகுதியை ஃப்ரான்ஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. 1844 ல் ஃப்ரான்கோ மொரோக்கோ போரைத் துவக்கியது. இது அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாமுக்கு சாதகமாக இல்லை. அப்போரின் தளபதியாக இருந்த அவர் மகன் முலாய் முஹம்மது எஸ்ஸஓரியா, டான்ஜியர் ஆகிய நகரங்களை ஃப்ரான்சிடம் இழந்தார். இதனால் ஃப்ரான்சுடன் டான்ஜியர் ஒப்பந்தம் போடப்பட்டு, அவர் அல் ஜஸா இரிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு மொரோக்கோ அல்ஜீரியா எல்லையை மாற்றி அமைக்க ஒத்துக் கொண்டார்.  அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம்  ஃப்ரான்சின் எல்லா ஒப்பந்தங்களுக்கும் ஒத்துப் போவதாகக் கருதிய மொரோக்கோ மக்கள் உள்நாட்டுக் கலவரத்தில் ஈடு பட்டனர்.
அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் 12 ம் நூற்றாண்டில் அல்மொராவிட் களால் நிர்மாணிக்கப்பட்டு, சாதியன்களால் விரிவாக்கப்பட்டிருந்த அக்டல் தோட்டத்தை மறுசீரமைத்தார். 1859 ஆகஸ்டில் அப்துல்ரஹ்மான் இப்ன் ஹிஷாம் மரணமடைந்தார். இவருக்குப் பிறகு இவர் மகன் நான்காம் முலாய் முஹம்மது மொரோக்கோவின் அலவிட்களின் சுல்தானாக ஆனார். மொரோக்கோவின் ஃபெஸ் நகரத்தில் பிறந்த இவர் தந்தையின் ஆட்சியின் போது இராணுவ தளபதியாக இருந்தார். இவரது தலைமையில் ஃப்ரன்சுகளுடன் நடந்த ஐஸ்லி போரில் தோல்வி அடைந்தார். பின்னர் தந்தையின் அனுமதியுடன் மொரோக்கோ இராணுவத்தின் தலைமைத் தளபதியானார். 1845 ல் இராணுவ நிர்வாகத்தை மாற்றி அமைத்தார். நான்காம் முலாய் முஹம்மது ஓட்டோமான்களுக்கு ஐரோப்பிய முறை போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த துனீஷியா இராணுவ அதிகாரிகளை அழைத்து வந்து நவீன போர்திறமைகளை தன் வீரர்களுக்குக் கற்றுக் கொடுக்க வைத்தார். அவைகள் அஸ்கரி, அபிட் (அரண்மனை பாதுகாப்பு), கிஷ் மற்றும் நுஃஅய்ப் (பழங்குடியினர் இராணுவம்) என்று துணை இராணுவப்பிரிவுகளாக ஆக்கினார். இதற்காக ஃபெஸ்ஸில் இராணுவ பொறியியல் பள்ளியை அமைத் தார். அப்பள்ளிக்கு ஃப்ரென்சிலிருந்து ஜோசப் டி சால்டி என்ற பெயரிலிருந்து, அப்த் அல் ரஹ்மான் அல் அலி என்று இஸ்லாமுக்கு மாறிய பீரங்கியில் அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரியை மேற்பார்வை யாளராக ஆக்கினார்.
நான்காம் முலாய் முஹம்மது மொழிபெயர்ப்பாளர்களை வைத்து பல ஐரோப்பிய பொறியியல், விஞ்ஞானம், கல்வி புத்தகங்களை மொழி பெயர்த்தார். தொடர்ந் து பிரிட்டிஷ், எகிப்து இராணுவ பீரங்கி அனுபவசாலிகளை வரவழைத்து மொரோக்கோ இராணுவத்திற்கு பயிற்சி அளித்தார். இவர் முதல் போராக ஸ்பானிஷ் மொரோக்கன் போரைச் சந்தித்தார். ஸ்பெயினின் ஆளுகைக்கு உட்பட்ட சியோட்டா, மெல்லிலா பகுதிகளில் சுற்றியுள்ள பழங்குடியினர் அடிக்கடி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஸ்பெயின் நான்காம் முலாய் முஹம்மதுவிடம் தங்கள் சியோட்டா பகுதியை சற்று விரிவாக்கம் செய்து கொள்ள கேட்டார்கள். அதற்கு சுல்தான் மறுத்தார். இதனால் இரண்டாம் இஸபெல்லா என்பவரின் தலைமையில் ஸ்பெயின் போர் தொடுத்தது. பெரும் படையுடன் வந்து டான்ஜியர், அசிலாஹ், டெடோவான் பகுதிகளைத் தாக்கி போரில் மொரோக்கோவை ஸ்பெயின் வென்றது. இதனால் 1860 ல் வத்ராஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி தென்மேற்குப் பகுதியின் சிடி இஃப்னி என்ற இடத்தை ஸ்பெயின் எடுத்துக் கொள்ளும், சியோட்டா பகுதியில் எல்லையை நீட்டிக் கொள்ளவும், போரின் நஷ்ட ஈடாக பெருந்தொகை 100 மில்லியன் மொரோக்கோ ஃப்ராங்க்ஸ் கொடுக்க வேண்டும். (இது மொரோக்கோவின் இருபது ஆண்டு பட்ஜெட் தொகை). இத்தொகை செலுத்தும் வரை டெடோவான் நகரத்தை ஸ்பெயின் வைத்துக் கொள்ளும் என்று முடிவானது.
இந்த தோல்வியாலும், நொறுங்கிப் போன பொருளாதாரத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு போன நான்காம் முலாய் முஹம்மது மனமுடைந்து போய், தனது கவனங்களை கணிதம், வாண சாஸ்திரம், கவிதை, இசை போன்ற துறைகளில் திருப்பி நாட்டுப் பொருளாதாரத்தை திறமையான அரண்மனை அடிமை மற்றும் வைசிராயராக இருந்த சி மௌஸாவிடம் ஒப்படைத்தார். மொத்த மொரோக்கோ துறைகளின் பாதி வருமானத்தை ஸ்பெயின் எடுத்துக் கொண்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வெகுவாக பாதிக்கப்பட்டது. நான்காம் முலாய் முஹம்மது அந்தந்த பகுதிகளை நிர்வகித்து வந்த பழங்குடி தலைவர்களிடம் அரசுக்கு பணம் கொடுத்து உதவும்படி சொன்னார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் தானே கைட்ஸ் என்னும் தலைவர்களை தேர்ந்தெடுத்து அந்த பகுதிகளுக்கு அனுப்பினார். இப்படி அனுப்பப்பட்ட கைட்ஸ்கள் அந்தந்த பழங்குடியினத்தவர்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்ததால், இது அரசுக்கு எதிர்விளைவையே ஏற்படுத்தியது. இதனால் சமாளிக்க முடியாமல் போன நிலையில் நான்காம் முலாய் முஹம்மது 1873 ல் காலமானார்.

அலாஒயிட்டுகள் வரலாறு 3

அடுத்து விட்டு விட்டு ஆறுமுறை ஆண்ட அப்பாஸின் மகன் முதலாம் ஹஸன் ஆட்சிக்கு 1873 ல் வந்தார். இவர் மொரோக்கோவின் வெற்றிகரமான சுல்தானாக இருந்தார். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் ஐரோப்பிய வெளிநாட்டு சக்திகளின் கையில் வீழ்ந்து கொண்டிருக்கும் போது, மொரோக்கோவில் அலவிட்டுகளின் அரண்மனை ஆட்சியின் பலத்தை முதலாம் ஹஸன் நிரூபித்தார். இராணுவம், அரசு நிர்வாகம் இரண்டையும் மாற்றி முன்னேற்றத்திற்கு வித்திட்டார். நான்காம் முஹம்மது இறந்த போது, அவர் மகன் மௌலாய் ஹஸன் என்பவர் ஆட்சிக்கு உரிமை கோரி இருந்தார். இவர் அவரை அடக்கினார். 1893 ல் ஃபெஸ் நகரத்திலிருந்து மர்ரகெஷ், மணற்பாங்கான எர்ஜ் செப்பி டேட்ஸ் பள்ளத்தாக்கு, ஓவர்ஸஸேட்ஸ், அய்த் பென்ஹத்தூ, உயர்ந்த பகுதியான கடல் மட்டத்திலிருந்து 2260 மீட்டர் உயரத்திலுள்ள டெலோயூட், துறைமுக நகரமான கூயல்மிம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று அனைத்து பழங்குடி புரட்சியாளர்களையும் நேரடியாக சந்தித்து ஒன்றுபடுத்தினார். ஆறு மாதகாலம் இவர் மேற்கொண்ட கடும் பயணம் நல்ல பலனைத் தந்தது. க்லாஓவா குடும்பத்தினருக்கு இவர் டெலோயெட் நகரத்தில் வழங்கிய குருப் பீரங்கி இப்போதும் ஓவர்ஸஸேட் நகரத்தின் மையத்தில் உள்ளது. முதலாம் ஹஸன் 1877 ல் கீனிஃப்ராவின் ஸயனிஸ் பழங்குடியின தலைவர் மௌஹா ஓ ஹம்மௌ ஸயானி என்பவரை கைட்ஸ் தலைவராக நியமித்தார். கொஞ்சம் இவரைப் பற்றிப் பார்ப்போம். இவரை அமஹ் ஸோயூனி பென் மௌஸா என்றும் அழைப்பார்கள். கீனிஃப்ரா மாகாணத்தில் ஸயானிஸ் மக்களின் தலைவராக இருந்தார். ஃப்ரான்சுக்கு எதிராக புகழ்பெற்ற ஸையான் போரை கொரில்லா முறையில் நடத்தினார். எல்லா பழங்குடி மக்களையும் இணைத்து சில சிறிய போர்களையும் நடத்தினார். 1914 ஜூனில் ஃப்ரென்சின் முன்ணனிப்படையினரால் கீனிஃப்ரா நகரம் கைப்பற்றப்பட்டு, உடனே நவம்பரில் மௌஹா ஓ ஹம்மௌ ஸயானியால் எல்ஹ்ரி போரில் வெற்றி கொள்ளப்பட்டது. இதனால் ஃப்ரான்சுக்கு 600 பேர் இறந்து பெரும் சேதமும் ஏற்பட்டது. வெற்றி பெற்றாலும் கீனிஃப்ரா நகரை விட்டு மலைப்பகுதிக்கு சென்று விட்டார். 1920 ல் இவர் மகன் ஹஸன் என்பவர் ஃப்ரென்ச் ஜெனரல் போயீமிராவ் என்பவரிடம் சரணடைந்தார். இதனால் மொரோக்கோவிற்கு பெரும் பலம் போனது. இவர் பெயரில் அய்த் ஹம்மோவ் ஓ சைத் என்ற கிராமமும், ஒரு கல்லூரியும் உள்ளது. இவரின் சமாதி பென் செர்ரோவில் உள்ளது. 20 ம் நூற்றாண்டில் ஃப்ரான்சை எதிர்த்து முக்கிய நபராக மாறி புகழ் பெற்றார். அதே போன்று 1887 ல் மேற்கு சஹாராவில் மா அல் அய்னைய்ன் என்பவரை கைட்ஸ் தலைவராக நியமித்தார். இவரும் மொரோக்கோவின் சுதந்திரத்திற்கு பாடுபட்டு புகழ் பெற்றார். 1894 ல் முதலாம் ஹஸன் மரணமடைய ரபாத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
மா அல் அய்னைய்ன் என்பவரைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். சஹாரன் மூரிஷ் இனத்தைச் சேர்ந்த இவர் காதிரிய்யா சூஃபி பிரிவின் சகோதர அமைப்பான ஃபத்லிய்யா என்ற அமைப்பைத் துவக்கிய முஹம்மது ஃபாதில் மாமின் என்பவரின் மகனாவார். மாரிடானியாவில் மதத்தலைவராக இருந்த ஷெய்க் சாத் பூஹ் என்பவர் இவரின் மூத்த சகோதரர். மா அல் அய்னைய்ன் என்ற இவர் பெயருக்கு நீர் நிரம்பிய இரு கண்கள் என்று பொருள். இவர் தகப்பனாரின் வழிமுறையில் பார்த்தால் சில நூற்றாண்டுகளுக்கு முன் காதிரிய்யா ஷெய்க் சிடி அஹ்மத் எல் பெக்காய் தற்போதைய அல்ஜீரியாவாகிய டின்டூஃப் பள்ளத்தாக்கில் ஓவலடா என்ற பகுதிக்கு வந்து குடியேறினார். அந்த் காதிரிய்யா இயக்கத்தின் மதகுருவாக மா அல் அய்னைய்னின் தந்தை இருந்ததால் இவரும் விரைவில் புகழுக்கு வந்தார். பழங்குடியின மாணவர்கள் பலர் இவரிடம் இஸ்லாமிய சட்டம் பயின்றார்கள். 1898 ல் ஸ்மாராவில் ரிபாத் என்னும் விடுதி ஒன்றைக் கட்டினார். ஆரம்பத்தில் இது பயணிக்கும் மலைப்பகுதி மக்கள் சற்று ஓய்வெடுத்து தண்ணீர் அருந்திவிட்டுச் செல்லும் இடமாக இருந்தது. பின்னர் ஐரோப்பிய காலனிப்படைகளையும், ஃப்ரென்ச் படைகளையும் எதிர்ப்பதற்கு இந்த இடம் பயன்பட்டது. முந்தைய ஆட்சியாளர் அப்தெல் அஜீஸ் ரிபாத்தைக் கட்ட பொருட்களையும், பணி ஆட்களையும் தந்து உதவினார். பின்னர் மா அல் அய்னைய்ன் அங்கு ஒரு இஸ்லாமிய நூலகத்தையும் அமைத்தார். நாளடைவில் மொரோக்கோவில் கிறிஸ்தவ ஐரோப்பியபடைகள் ஆக்கிரமிப்பு செய்ததால் அவர்களை மா அல் அய்னைய்ன் எதிர்த்தார். அவர்களை தற்போதைய மாரிடானியா, தென் மொரோக்கோ, மேற்கு சஹாரா, தெற்கு மேற்கு அல்ஜீரியா ஆகிய பகுதிகளில் நுழைய விடாமல் தடை செய்தார். சுல்தான் இவரை அதிகாரம் செய்யாமல் அவர் போக்கில் சுதந்திரமாக போராட விட்டு விட்டார். ஐரோப்பியர்களுக்கு எதிராக ஜிஹாத் என்று அறிவித்த இவர் ஆயுதங்களை ஆட்சியாளரிடம் பெற்று பகிரங்க தாக்குதல் நடத்தினார். நேரடியாக ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரத்தில் பலம் வாய்ந்த ஒரு சிறிய படையைத் தயார் செய்தார்.
1906 ல் சுல்தான் அப்துல் அஜீஸ் அல்ஜிசிராஸ் கூட்டத்தில் ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்திற்கு ஒப்புக்கொண்டதால் கோபமுற்ற மா அல் அய்னைய்ன் சுல்தான் சகோதரர் அப்தெல் ஹஃபீதுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் சுல்தானிடமிருந்து ஆயுதம் வருவது நின்று போனது. ஆனாலும் விடாமல் அப்துல் அஜீஸை எதிர்த்து அப்தெல் ஹஃபீதை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார். 1909 ல் டிஸ்நிட் பகுதியில் தானொரு மெஹ்தி என்று அறிவித்தார். புதிய சுல்தானும் நாளடைவில் ஐரோப்பிய சக்திகளுக்கு ஆதரவாகப் போனதால் 6000 பேர் கொண்ட படையைத் தயார் செய்து அவரை ஆட்சியை விட்டுத் தூக்கினார். 1910 ல் ஃப்ரென்ச் ஜெனரல் மொய்னியரிடம் தோற்றுப் போய் சில மாதங்கள் கழித்து டிஸ்நிட்டில் இறந்து போனார். இவர் மகன் எல் ஹிபா என்பவர் (நீல சுல்தான் என்று அறியப்பட்டவர்) ஃப்ரான்சை எதிர்த்துத் தோற்றுப் போனார். புரட்சியினால் மா அல் அய்னைய்ன் மொரோக்கோவில் மிகவும் புகழப்பட்டார். இவரின் சந்ததியினர் இப்போதும் மொரோக்கோவின் பலதுறைகளில் அதிகாரிகளாக இருக்கிறார்கள். டிஸ்நிடில் இவர் அடக்கவிடம் புனிதஸ்தலமாக இருக்கிறது.
அடுத்து முதலாம் ஹஸனின் மகன் அப்தெல் அஜீஸ் 16 வயதில் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு ஆட்சியின் பின் பலமாக பா அஹ்மத் பின் மூசா என்பவர் இருந்தார். ஆறு ஆண்டுகள் அப்தெல் அஜீஸுக்கு துணையாக இருந்த இவர் 1900ல் விஷமிட்டு படுகொலை செய்யப்பட்டார். பின் தானே ஆட்சி செய்ய ஆரம்பித்த அப்தெல் அஜீஸ் தென்பகுதி அரபி ஒருவரான எல் மெனிபி என்பவரை நிர்வாகத்திற்கு தலைமை அறிவுரையாளராக வைத்துக் கொண்டார். இவரின் தாயார் ஜியார்ஜியாவைச் சேர்ந்தவராக இருந்ததால் ஐரோப்பாவிலிருந்தும் இவருக்கு ஆலோசனைக் கிடைத்தது. ஆனால் மொரோக்கோவின் உள்நாட்டு அரசியலுக்குப் பொருந்தவில்லை. மேலும் வெளிநாட்டுத் தொடர்புகளால் வெறுக்க ஆரம்பித்தார்கள். அப்தெல் அஜீஸ் புதிய வரிகளின் மூலம் வருமானம் ஈட்ட முயற்சித்தார். ஆனால், அது ஊதியம் கொடுக்கவும், ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும் கூட போதவில்லை. ஐரோப்பியர்கள் கூட இவரை நாட்டைக் கெடுக்கிறார் என்று கருத்து வெளியிட்டார்கள். வணிகத்திற்கு பெரிதும் உதவி வருவாய் அதிகரிக்க ஏதுவாய் இருக்கும் என்று கருதப்பட்டு பிரிட்டிஷ் பொறியாளர்களை வைத்து ஃபெஸ் நகரத்திற்கும் மெக்னெஸ் நகரத்திற்கும் இடையே இர யில் போக்குவரத்தைக் கொண்டுவர இருந்தார். இதற்கு அல்ஜீரியன் முன்ணனி எதிர்ப்பு தெரிவித்து கலகம் செய்தது. ஜெர்மனி அப்தெல் அஜீஸுக்கு ஆலோசனை தந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு சர்வதேச நாடுகளை அழைத்து ஒரு மாநாடு நடத்தச் சொன்னது. இது அன்னியர்களை நமது நாட்டின் ஆக்கிரமிப்பிலிருந்து விரட்ட ஏதுவாய் இருக்கும் என்று கருதி 1906 ல் சர்வதேச மாநாடு நடத்தினார். அது ஒன்றும் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. 1907 ல் மொரோக்கோவின் தென்பகுதி க்லாஓவா பழங்குடித்தலைவர் சி எல்மதனி எல் க்லாஓவா அப்துல் அஜீஸின் மூத்த சகோதரர் அப்தெல் ஹஃபித் என்பவரை வர வழைத்து கலகம் செய்து மர்ரகெஷ்ஷைப் பிடித்தார். இதற்கிடையில் காஸாப் ளாங்காவில் ஐரோப்பியர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அதன் தொடர்பில் மர்ரகெஷ் ஃப்ரான்சின் பிடியில் சென்றது. அப்தெல் அஜீஸ் ஃபெஸ் ஸுக்கு வருகை தந்து ஐரோப்பியர்களிடம் தன் சகோதரர்களுக்கு எதிராக உதவி கோரினார். ஃப்ரான்சை நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த தனக்கு பணம் தந்து உதவுமாறு கோரினார். ஐரோப்பாவின் தோழமையை விரும்பாத ஃபெஸ்ஸின் உலமா சபை தலைவர் மா அல் அய்னைய்ன் 1908 ல் இவரை நீக்கிவிட்டு இவருக்கு பதில் சகோதரர் அப்தெல் ஹஃபித்தை சுல்தானாக அங்கீகரிப்பதாக அறிவித்தது. தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள படையுடன் மர் ரகெஷ் சென்றார். ஆனால் முழுமையாக ஆட்சி நீக்கப்பட்ட இவர் ஃப்ரான்சின் காஸாப்ளாங்கா அருகி லுள்ள செட்டட் பகுதிக்குத் தப்பிச் சென்றார். பின்னர் சகோதரர் அப்தெல் ஹஃபீதிடம் சமாதானம் செய்து கொண்டு டான்ஜீயரில் தங்கி ஓய்வூதியம் பெற்றார். அப்தெல் ஹஃபீதாலும் நிம்மதியாக ஆள முடியவில்லை. 1943 ல் டான்ஜியரில் அப்தெல் அஜீஸ் மரணமடைந்தார். இவருடைய கதாபாத்திரம் கற்பனை கலந்து ‘அயோன் பெர்டிகாரிஸ்’ என்ற பாத்திரத்தில் 1975 ல் எடுக்கப்பட்ட ‘தி விண்ட் அண்ட் தி லயன்’ என்ற ஆங்கிலப்படத்தில் காட்டப்பட்டது.
1908 ல் ஃபெஸ் நகரத்தலைவர் மா அல் அய்னைய்ன் ஆட்சியில் அமர்த்திய அப்தெல் ஹாஃபித் சகோதரர் அப்தெல் அஜீஸ் ஐரோப்பியர்களுக்கு கொடுத்த பல சலுகைகளை எதிர்த்தார். ஆனால் இவரால் ஆட்சியை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க முடியாமல் ஃப்ரான்சின் பின்ணனியில் ஆட்சி செய்தார். அப்தெல் ஹஃபீதின் இராணுவத்திற்கு ஆன்றூ பெல்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி பயிற்சி அளித்தார். 1912 ல் ஃப்ரான்சுக்கு சென்ற இவர் திரும்பி வந்த போது தார் எல் மக்ஸின் என்ற சுல்தானிய அரண்மனை இவரை டான்ஜியருக்கு விரட்டியது. சில மாதங்கள் கழித்து ஃப்ரான்ஸ் அப்தெல் ஹஃபீதின் இன்னொரு சகோதரர் யூசுஃப் பென் ஹஸன் என்பவரை ஆட்சியாளராக அறிவுறுத்தியது. யூசுஃப் பென் ஹஸன் சுல்தான் முதலாம் ஹஸனின் ஐந்தாவது மனைவி ருக்கியாவுக்குப் பிறந்தவர். மெக்னெஸ் நகரத்தில் பிறந்த இவர் இளைய மகனாவார். இவர் பாதுகாப்பைக் கருதி ரபாத்தைத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டார். அமைதியற்று குழப்பமாக இருந்த யூசுஃப் பென் ஹஸனின் ஆட்சி ஸ்பெயின், ஃப்ரான்சிடமிருந்து சற்று உயர்வு பெற்றது. மா அல் அய்னைய்னின் மகன் அஹ்மத் அல் ஹிபாவின் ஆதரவில் பெர்பெர் சஹ்ரஊய் பழங்குடியினரின் தலைவர் அப்த் எல் க்ரிம் என்பவர் தலைமையில் ரிஃப் மலைப் பகுதியில் வெகு வேகமாக அதிகாரமெடுத்து தொந்திரவாக இருந்தார்கள். முதலில் ஸ்பெயின் அதிகாரத்திலிருந்த இந்தப் பகுதி பின்னர் ஃப்ரென்ச் அதிகாரத்திற்கு மாறியது. ஃப்ரான்சும், ஸ்பெயினும் இணைந்த பிறகு, ஸ்பெயின் 1925 ல் சஹ்ரஊய் பழங்குடியினரின் புரட்சியை அடக்கினார்கள். யூசுஃப் பென் ஹஸனின் ஆட்சி திடீரென்று கவிழ்ந்தது. 1927 ல் உரிமியா என்ற நோயால் மரணமடைந்தார்.
இவருக்குப் பின் இவர் மகன் ஐந்தாம் முஹம்மது அலவிட்டுகளின் மொரோக்கோ சுல்தானாக ஆனார். இவர் இரண்டு முறை ஆட்சி செய்தார். முதல் முறையாக 1927-1953 வரையிலும், 1957 லிருந்து 1961 வரையிலும் ஆட்சி செய்தார். முதல் ஆட்சியில் சுல்தானாகவும், இரண்டாவது ஆட்சியில் மன்னராகவும் இருந்தார். இவருக்கு முதல் மனைவியாக லல்லா ஹனிலா பிந்த் மாமூன் என்பவர் மூலம் லல்லா ஃபாத்திமா ஸொஹ்ரா என்ற மகள் இருந்தார். இரண்டாவது மனைவியாக அரபு இன தஹார் பின் ஹஸன் என்பவரின் மகள் லல்லா அப்லா பிந்த் தஹார் இருந்தார். இவர் மூலம் ஐந்து குழந்தைகளாக மன்னர் இரண்டாம் ஹஸன், லல்லா அய்ச்சா, லல்லா மலிகா, மௌலாய் அப்துல்லாஹ், லல்லா நுஸா ஆகியோர் இருந்தார்கள். மூன்றாவது மனைவியாக லல்லா பஹியா பிந்த் அன்தர் மூலம் லல்லா ஆமினா என்ற மகளும் இருந்தார். மேலும் லல்லா யகுத் என்ற துருக்கிய மனைவியும் இருந்தார். இதில் 1929 ல் திருமணம் செய்து கொண்ட மனைவி லல்லா அப்லா பிந்த் தஹார் 100 வயதுக்கு ஆறு மாதம் குறைவாக 1992 ல் மரணமடைந்தார். இவரது பெயரில் தான் மொரோக்கோ விமான நிலையம் உள்ளது. மேலும் மொரோக்கோவின் ஒவ்வொரு நகரத்திலும் பல்க லைக்கழகம், அரசு மற்றும் பொது நிறுவனம், குடியிருப்பு பகுதி, தெருப்பெயர்கள் என்று இவரின் பெயர் இருக்கும். துனீஷியா நாட்டின் தலைநகர் துனீசில் ஒரு குடியிருப்பு பகுதிக்கு இவரின் பெயர் சூட்டப்பட் டுள்ளது. யூசுஃப் பென் ஹஸனுக்கு துனீஷியா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், லிபியா, ஈராக், லெபனான், சிரியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகள் போட்டி போட்டு பல பட்டங்களை வழங்கியது. ஐந்தாம் முஹம்மதை ஃப்ரான்ஸ் ஆட்சியை விட்டு நீக்கி மடகாஸ்கருக்கு துரத்தி யது. ஐந்தாம் முஹம்மது தான் சுல்தான் என்பதை மாற்றி மன்னர் என்று பெயர் சூட்டிக் கொண்டார். யூசுஃப் பென் ஹஸன் ஒரு நுணுக்கமான அறுவை சிகிச்சையின் போது 1961ல் மரணமடைந்தார். சிலர் இவரது மரணத்திற்கு மகன் இரண்டாம் ஹஸன் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்கள்.
ஐந்தாம் முஹம்மதை வெளியேற்றிய பின் ஃப்ரான்ஸ் அவரின் தூரத்து உறவினரான முஹம்மது பென் ஆரஃபா என்பவரை 1953 ல் ஆட்சியில் அமர்த்தியது. ஏற்கனவே ஐந்தாம் முஹம்மதை ஃப்ரான்ஸ் ஆட்சியில் அமர்த்தியபோது மொரோக்கோவின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருந்த ஸ்பெயின் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஐந்தாம் முஹம்மது மொரோக்கோவை சுத ந்திரமாக்க வேண்டும் என்று கேட்டதால் தான் ஃப்ரான்ஸ் மடகாஸ்கருக்கு விரட்டியது. மேலும் அப்போது ஃப்ரான்ஸ் சுதந்திரத்திற்கு ஒப்புக் கொண்டது போல் நடித்தது. இப்போது முஹம்மது பென் ஆரஃபாவை ஆட்சியில் வைத்ததால் மொரோக்கோ மக்களின் கோபம் சுதந்திரத்தை நோக்கி திரும்பியது. இந்த ஃப்ரான்சின் பொம்மை மன்னர் முஹம்மது பென் ஆரஃபா 1976 ல் ஃப்ரான்சிலேயே மரணமடைந்தார். நான்காண்டு மட்டுமே ஆட்சி செய்த முஹம்மது பென் ஆரஃபாவிற்குப் பிறகு, ஐந்தாம் முஹம்மதுவுக்கும், இரண்டாவது மனைவி லல்லா அப்லா பிந்த் தஹார் என்பருக்கும் பிறந்த மகன் இரண்டாம் ஹஸன் அலவிட்டுகளின் மொரோக்கோ மன்னராக ஆட்சிக்கு 1961 ல் வந்தார்.
இரண்டாம் ஹஸன் ரபாத்தில் இம்பீரியல் கல்லூரியில் படித்தார். பின் ஃப்ரான்சின் போர்டூவக்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். தந்தையை நாட்டை விட்டு ஃப்ரான்ஸ் வெளியேற்றும் போதே இரண்டாம் ஹஸனையும் உடன் வெளியேற்றியது. அக்காலங்களில் தந்தைக்கு அரசியல் ஆலோசகராக இரண்டாம் ஹஸன் இருந்தார். தந்தை, மகன் இருவரும் 1955 நவம்பரில் மொரோக்கோ திரும்பினார்கள். 1966 பிப்ரவரியில் ஃப்ரான்சுடன் மொரோக்கோவின் சுதந்திரத்திற்கான பேச்சு வார்த்தையில் தந்தையுடன் கலந்து கொண்டார். தந்தை இவரை தான் ஆரம்பித்திருந்த ‘ராயல் ஆர்ம்ட் ஃபோர்ஸெஸ்’ என்ற அமைப்புக்கு 1956 ஏப்ரலில் இரண்டாம் ஹஸனை தலைவராக்கினார். பழங்குடி போராளிகள் இருந்த ரிஃப் மலைப்பகுதிக்குச் சென்றார். 1957 ல் ஐந்தாம் முஹம்மது இவரை பட்டத்து இளவரசராக அறிவித்தார். தந்தை இறந்த பிறகும், முஹம்மது பின் ஆரஃபாவிற்குப் பிறகும் இரண்டாம் ஹஸன் 1961 பிப்ரவரியில் அலவிட்டுகளின் மொரோக்கோ மன்னரானார்.

அலாஒயிட்டுகள் வரலாறு 4

இரண்டாம் ஹஸன் பழைய வழக்கங்களைக் கொண்ட சட்டங்களுடன் தங்கள் அலவிட் பரம்பரையை பலமாக்கினார். மொரோக்கோவின் கோரிக்கையான பல கட்சி ஆட்சிமுறையை மறுத்தார். அடிப்படை அரசியல் அமைப்பு கொடுத்த அதிகாரத்தால் பலத்தை கையாண்டார். இதனால் UNFP மற்றும் இஸ்திக்லால் போன்ற எதிர்ப்பு அமைப்புகள் பலமாகின. இரண்டாம் ஹஸன் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, அதன் அடிப்படையை மட்டும் வைத்துக் கொண்டார். அடுத்து வந்த தேர்தலில் இவருடைய ராயல் கட்சி பெரும்பான்மை பெற, எதிர்கட்சிகள் பொங்கி எழுந்து மன்னராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், கலவரங்களும் செய்தார்கள். இரண்டாம் ஹஸன் இருமுறை தன்னைக் கொல்ல நடந்த சதியிலிருந்து தப்பித்தார். லிபியாவின் ஆதரவில் ஜெனரல் முஹம்மது மெட்பூஹ் மற்றும் கர்னல் முஹமது அபடூ ஆகியோர் அமைத்த ‘டி ஈடட் புரட்சி’ என்ற அமைப்பு இரண்டாம் ஹஸனைக் கொல்ல திட்டமிட்டார்கள். மன்னர் ஹஸனின் 42 வது வயது கொண்டாட்டம் மன்னரின் ரபாத் அரண்மனையில் 1971 ல் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள பல முக்கியமான தலைவர்கள் வந்திருந்தார்கள். பெல்ஜிய தூதர் மார்செல் டூபர்டும் ஒருவராவார். தூதரை வீட்டுக்காவலில் வைத்த கொலைகாரர்கள், இரண்டாம் ஹஸனை ஒரு விளையாட்டு அரங்கத்தில
சிறை வைத்து விட்டு ரபாத் வானொலி நிலையத்தைக் கைப்பற்றி மன்னர் கொல்லப்பட்டு மொரோக்கோ சுதந்திர நாடாக ஆகிவிட்டது என்று அறிவித்தது. இதற்குள் அதேநாளில் மன்னரின் ராயல் படைகள் வந்து சண்டைக்குப் பிறகு, கொலைத்திட்டம் முறியடிக்கப்பட்டது. சில மூத்த அதிகாரிகளின் வழி காட்டலால் இளைஞர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அடுத்த கொலைத்திட்டம் 1972 ல் அரங்கேறியது. மன்னர் இரண்டாம் ஹஸன் ஃப்ரான்சிலிருந்து ரபாத் திரும்பும் போது, மொரோக்கோ விமானப்படையைச் F-5 ரக விமானங்கள் நான்கு மன்னர் பயணித்த போயிங்க் 727 விமானத்தை நோக்கி வானிலேயே சுட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறிய சேதத்திற்குப் பிறகு மன்னரின் விமானம் தப்பியது. பின்னர் நடந்த விசாரணையில் மொரோக்கோ விமானப்படையைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு உடந்தை யாக இருந்ததாக பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் முஹம்மது அவ்ஃப்கிர் குற்றம் சாட்டப்பட, அவர் தற் கொலை செய்து கொண்டார். பல குண்டுக்காயங்களுடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு எதிராக நடந்த பனிப்போரை மன்னர் இரண்டாம் ஹஸன் அமெரிக்காவின் உதவியுடன் சமாளித்தார். இதற்கு அமெரிக்காவின் CIA துறை முக்கியபங்கு வகித்தது. அரபு, இஸ்ரேல் பிரச்சினையில் பின்ணனியிலிருந்து பேச்சுவார்த்தைக்கு பாடுபட்டார். இதற்கு மொரோக்கோவில் அதிகமாக வசித்த யூத மக்கள் ஆதரவளித்தார்கள். ஸ்பெயின் வசமிருந்த இஃப்னி என்ற இடத்தை 1969 ல் கைப்பற்றினார். பின்னர் 1975 ல் ‘கிரீன் மார்ச்’ என்ற பெயரில் நடந்த படையெடுப்பில் ஸ்பெயினின் வசமிருந்த மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றினார். 1963 லிருந்து மொரோக்கோ உரிமை கொண்டாடிய அல்ஜீரியாவின் டின்டூஃப் மற்றும் பெச்சார் பகுதிகள் அப்போதே ‘சேண்ட் வார்’ என்னும் மணற்போரை வரவழைத்தது. அருகிலிருந்த மாரிடோனியாவிடமும் மொரோக்கோவிற்கு பிரச்சினை இருந்தது. 1969 க்குப் பிறகு, மொரோக்கோ புகழ்பெற்ற நாடாக அறியப்பட்டது.
இரண்டாம் ஹஸன் பொருளாதாரத்திற்காக பாஸ்பேட் என்னும் இரசாயன சுரங்கம், விவசாயம், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். இவரது ஆட்சி ஆரம்பித்த 1961 லிருந்து 1980 வரை ‘முன்னேற்றத்திற்கான வருடங்கள்’ என்று குறிப்பிடப்பட்டு பல ஆயிரம் எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், சிலர் கொல்லப்பட்டும், சிலர் மாயமாகவும் ஆனார்கள். பாராளுமன்ற அமைப்புப்படி எதிர்கட்சி வேண்டும் என்ற அடிப்படையில் 1990-91 ல் சிறையிலிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அரபு நாடுகளில் முதல் முறையாக எதிர்கட்சியாக மொரோக்கோ அவர்களை அங்கீகரித்தது. ராயல்குழு ஒன்றை ஏற்படுத்தி நாட்டில் மனித உரிமைக்கு எதிரான புகார்களை கவனிக்கச் சொன்னார். இவரது மனைவி லல்லா லதிஃபா ஹம்மூ மூலம் ஐந்து குழந்தைகள் இவருக்கு பிறந்தது. இளவரசி லல்லா மெர்யெம், மன்னர் ஆறாம் முஹம்மது, இளவரசிகள் லல்லா அஸ்மா, லல்லா ஹஸ்னா மற்றும் இளவரசர் மௌலாய் ரச்சிட் ஆகியோர் ஆவார்கள். இரண்டாம் ஹஸனுக்கு லல்லா ஃபாத்திமா பிந்த் கைட் என்ற மனைவியும் இருந்தார். அவர் மூலம் குழந்தைகள் இல்லை. 1999 ஜூலை 23 ல் 70 வது வயதில் இயற்கையான முறையில் தான் பிறந்த ஊரில் இரண்டாம் ஹஸன் மரணமடைந்தார். இவரது உடல் ராஜமரியாதையு டன் ரபாத்துக்கு கொண்டுவரப்பட்டு 40 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள ஐந்தாம் முஹம்மதுவின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலை மகன்கள் ஆறாம் முஹம்மது, இளவரசர் மௌலாய் ரச்சிட் மற்றும் சிறிய தகப்பனார் மௌலாய் ஹிச்சாம் ஆகியோர் சுமக்க, உடல் மீது ‘அல் லாஹ் ஒருவனே அவனின்றி வேறு இறைவன் இல்லை’ என்று எழுதப்பட்ட பச்சைத் துணியால் மூடப் பட்டிருந்தது.
1999 ல் இரண்டாம் ஹஸனின் மகன் மன்னர் ஆறாம் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். பிறந்த போது இவர் தான் அடுத்த ஆட்சிக்கு உரியவர் என்று அறிவிக்கப் பட்டவர் மன்னர் ஆறாம் முஹம்மது. சிறுவயதிலிருந்தே இஸ்லாமியக் கல்வியும், அரசியல் பயிற்சியும் தந்தையால் அளிக்கப் பெற்றார். நான்கு வயதிலேயே அரண்மனையில் திருக்குரான் படிக்கும் பயிற்சியைத் துவங்கினார். பள்ளிப்படிப்பு முடித்து இளநிலை சட்டப்படிப்பை அக்டலில் நான்காம் முஹம்மது பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஆராய்ச்சி படிப்பாக இவர் தேர்ந்தெடுத்த ‘அரபு-ஆப்பிரிக்க கூட்டுறவு’ என்ற படிப்பு சர்வதேச உறவுகளை வெளிப்படுத்தியது. ரபாத் பல்கலைக்கழகத்திலும் படித்த மன்னர் ஆறாம் முஹம்மது பான்-அராப் விளையாட்டின் தலைவராகவும், கர்னல் மேஜராக ராயல் மொரோக்கோ ஆர்மியிலும் நியமிக்கப்பட்டார். 1987 ல் ஆரசியல் விஞ்ஞானத்திற்கான பட்டமும், 1988 ல் பொதுச் சட்டத்திற்கான அத்தாட்சி பட்டமும் (டிப்ளமா) பெற்றார். 1993 ல் ஃப்ரான்சின் நைஸ் சோபியா ஆண்டி பொலிஸ் பல்கலைக்கழகத்திலும் சட்டத்திற்கான ஆராய்ச்சி பட்டம் பெற்றார். 1994 ல் மொரோக்கோ இராணுவத்தின் மேஜர் ஜெனரலாக பதவி பெற்றார். மன்னர் ஆறாம் முஹம்மதுவுக்கு சரளமாக அரபு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஃப்ரென்ச் மொழிகள் தெரியும்.
இவருக்கு ஒரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் இருப்பதை முன்பே பார்த்தோம். இவர் மனைவி பெயர் சல்மா பென்னானி ஆகும். திருமணத்தின் போதே மொரோ க்கோவின் இளவரசியாக ஹெர் ராயல் ஹைனஸ் லல்லா சல்மா என்று பட்டம் சூட்டப்பட்டார். இவரு க்கு 2003 ல் பிறந்த பட்டத்து இளவரசர் மௌலாய் ஹஸன் என்ற மகனும், 2007 ல் பிறந்த இளவரசி லல்லா கதீஜா என்ற மகளும் உண்டு. மன்னர் ஆறாம் முஹம்மதுவின் பிறந்த நாளான ஆகஸ்டு 21 ல் மொரோக்கோவில் பொது விடுமுறை தினமாகும். பதவியேற்ற அன்றே நாட்டின் வறுமையையும், ஊழ லையும் ஒழித்து மனித உரிமையைப் பாதுகாப்பேன் என்று உறுதி அளித்தார். நாட்டுக்கான இவரின் மறுசீரமைப்பு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் எதிர்க்கப்பட்டது. 2004 ல் ‘முதவானா’ என்று பெண்கள் அதிகாரம் பெற சட்டம் போட்டார். 2010 ல் விக்கிலீக்ஸ் என்ற வலைப்பதிவு மொரோக்கோவின் உயர்மட்ட அளவில் ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தையும், மன்னர் ஆறாம் முஹம்மதுவுக்கும் அதில் பங்குண்டு என்று வெளியிட்டது. 2011 ல் உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் இங்கும் மக்கள் பல போராட்டங்களை நடத்தினார்கள். 2011 ல் புது அரசியல் சட்டத்தை நிர்மாணிக்க குழு அமைத்தார். அதன்படி அரபுமொழியுடன் பெர்பெர் மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட்டது. சிதைந்து போய்க்கொண்டிருந்த ஹஸானியா மொழுயை சீர்படுத்தவும், புராதன மொரோக்கோவின் கலாச்சாரத்தையும் பாரம் பரியத்தையும் பாதுகாக்கவும் தீர்மானம் உண்டாக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்காக தேர்தல் நடத்தப் பட்டு பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கட்சித்தலைவராகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இத ற்கு முன் மன்னர் தான் விரும்பியவரை பிரதம மந்திரியாகக் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தது. மேலும் ஜனநாயக முறையில் நவீன பல திட்டங்களுக்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மொரோக்கோவின் வாணிபத்தில் மன்னர் குடும்பத்தினர் தான் முதலிடத்தில் இருந்தார்கள். 2009 ல் ‘ஃபொர்ப்ஸ்’ என்னும் பத்திரிக்கை இவர்களின் வியாபார மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று செய்தி வெளியிட்டது. இவர்களின் ஒரே நிறுவனம் காஸாப்ளாங்காவின் பங்குச் சந்தையில் 50 பில்லியன் திர்ஹாம்கள் (US $ 6 மில்லியன்) வைத்திருப்பதாக மதிப்பிட்டது. SIN எனப்படும் சோஷியல் நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் என்ற அந்நிறுவனம் அத்திஜாவரிவஃபா வங்கி, மானாகம் சுரங்கம், ஓனாபர் என்ற கம்பெனி, சோமட் (சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் மஸி ரெட்டி என்னும் விலைமதிப்பான காரின் விநியோகம்), வஃபா இன்சூரன்ஸ், மர்ஜானி என்ற சூப்பர் மார்கெட் கம்பெனி, வானா-இன்வி என்னும் தொலைதொடர்பு நிறுவனம், லஃபார்ஜி என்னும் சிமெண்ட் தாயாரிப்பு நிறுவனம், சோனாசிட், சோப்ரியம் (பீஜட், கிட்ரியான் கார் விநியோகம்), ரினால்ட் கார் விநியோகம், நரீவா என்னும் எனர்ஜி நிறுவனம் ஆகியவைகள். மேற்படி அத்தனை நிறுவனங்களும் இந்த SNI மூலம் ஓம்னியம் நார்ட் ஆஃப்ரிக்கன் (ONA)  நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன. இந்த SNI  நிறுவனம் பல உணவு தயாரிப்புகள் கம்பெனியும் கொண்டுள்ளது. இது 2013 ல் சில நிறுவனங்களை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்றதின் மூலம் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டியது. SNI  யும் ONA  வும் இணைந்து மிகப்பெரிய மது உற்பத்தியாளர்களாக ‘ஹெனிகான்’ என்னும் மதுவைத் தயாரிக்கிறார்கள். இதை எல்லாம் நான் ஏன் இங்கு விளக்கமாக குறிப்பிடுகிறேன் என்றால் 1859 ல் ஆட்சிக்கு வந்த நான்காம் முஹம்மதுவின் காலத்தில் எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை மொரோக்கோ சந்தித்தது. ஃப்ரான்சிடம் மிகப்பெரிய கடன் சுமையை வைத்திருந்தது. ஆனால் தற்போது இந்த ராஜ குடும்பம் மட்டுமே எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகத்தான்.
தற்போதும் மன்னர் ஆறாம் முஹம்மது தான் மொரோக்கோவை ஆட்சி செய்து வருகிறார்.

வியாழன், 16 ஜூலை, 2015

பர்மகிட்கள் வரலாறு

பர்மகிட்கள் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
பர்மகிட்கள் என்பவர்கள் எட்டாம் நூற்றாண்டில் அப்பாஸிட்கள் ஆட்சியில் வைசிராயராக இருந்தவர்கள். அரபியில் பராமிகாஹ் என்றால் தலைவர்கள், தலைமை நிர்வாகஸ்தர்கள் என்று பொருள். இவர்கள் நவ்பஹார் (நவ விஹாரா) புத்த கோவிலின் பூசாரியாக இருந்தவர்களின் வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். ஈரானின் கோராசான் மாகாணத்தில் பல்க் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள். பல்க் மாகாணம் ஸோரோஸ்ட்ரியன்கள் அதிகமுள்ள பகுதியாதலால் பர்மகிட்கள் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்து இஸ்லாமியர்களிடம் உண்டு. ஆயிரத்தோரு அரபு இரவுகள் என்ற கதைகளில் இவர்களின் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருந்தன. பர்மகிட்கள் தத்துவம், அறிவியல், இலக்கியம் ஆகியவைகளில் மிகவும் சிறந்தவர்கள். இவர்கள் கால்வாய்கள், மசூதிகள், தபால் நிலையங்கள் அமைப்பதில் புகழ் பெற்றிருந்தார்கள். உலகின் முதல் காகித ஆலையை பாக்தாதில் நிறுவியதில் பர்மகிட்களுக்கும் பங்குண்டு. அறிவியலில் மிகச்சிறந்த பங்களிப்பாற்றினார்கள். அறிவியலில் இந்தியாவுக்கும், அரபு தேசத்திற்கும் பாலமாக இருந்தார்கள், ரமலான் மாதத்தில் முதல் முறையாக மசூதிகளை இவர்கள் தான் விளக்குகளால் அலங்கரித்தார்கள். அதேநேரத்தில் டைக்ரிஸில் பளபளக்கும் அரண்மனைகள் கட்டி செல்வத்தை வீணடித்தவர்கள்.
பர்மகிட்கள் அறிவில் சிறந்து உயர்கல்வி, மரியாதை, திட்டமிடுதல், கணிப்பது ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். அரேபியா, பெர்ஷியா, மத்திய ஆசியா மற்றும் லீவண்ட் பகுதிகளில் பெயருடன் விளங்கினார்கள். பாக்தாதில் பர்மகிட்களின் சபை உலமாக்களாலும், கவிஞர்களாலும், மதபோதகர்களாலும் நிரம்பி இருக்கும். 663 ல் பர்மகிட் அரபுகளிடம் வீழ்ச்சி பெற்ற பிறகு, காலித் இப்ன் பர்மக் என்பவரும் அவர் சகோதரர்களும் ஈராக்கின் இராணுவ நகரமாக இருந்த பஸ்ரா சென்று இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். பர்மகிட்களில் காலித் இப்ன் பர்மக்கே மிகவும் புகழ் பெற்றவர். 8 ம் நூற்றாண்டுகளில் அப்பாஸிட்கள் தொடங்கியிருந்த புரட்சிப் படையின் ஆதரவாளராக இருந்தார். கலீஃபாக்கள் அல் ஸஃப்ஃபாஹ், அல் மன்சூர் ஆகியோரிடம் உயர் அதிகாரத்தில் பணி புரிந்திருக்கிறார். அப்பாஸிட்கள் ஈராக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, காலித் கொள்ளைப் பொருள்களைப் பங்கிடுபவராக இருந்தார். பிறகு, டையர் குன்னா என்ற மாகாணத்திற்கு நிர்வாகஸ்தராக நியமிக்கப்பட்டார். கலீஃபா அபூல் அல் அப்பாஸ் அஸ் ஸஃப்ஃபாஹ் ஆட்சியில் அபூல் அல் ஜஹ்ம் என்பவருடன் இணைந்து இராணுவப் பணிகளையும், வரி வசூலிப்பையும் கவனித்துக் கொண்டார்.
கலீஃபா அல் மன்சூர் ஆட்சியில் ஃபர்ஸ் மாகாணத்தின் கவர்னராக ஆக்கப்பட்டார். 765 ல் மற்றவர்களுடன் சேர்ந்து இளவரசர் இஸா முடிசூட உதவி புரிந்தார். 767 லிருந்து 771 வரை தபரிஸ்தானில் கவர்னராய் இருந்து நாணயங்களை வெளியிட்டார். உஸ்தூனா வண்த் என்ற இடத்தைக் கைப்பற்றி மன்சூராஹ் என்ற நகரத்தை உருவாக்கினார். 775 ல் அல் மன்சூர் காலிதை அரசியல் சூழ்நிலையின் காரணமாக பதவி நீக்கி ஒரு பெரும் தொகையை அபராதமாகவும் விதித்தார். அல் கைய்ஸுரானின் இளவரசர் அல் மஹ்தியின் மனைவி இவருக்கு தொகை சேர உதவிபுரிந்தார். இவர் மகன் யஹ்யாவை அஜர்பைஜானை கவனிக்க அனுப்பிவிட்டு, குர்திஷ்களின் தொந்தரவு மிகுந்த மோசூலுக்கு காலிதை அனுப்பினார்கள். அல் மஹ்தியின் ஆட்சியில் காலித் இப்ன் பர்கத் செல்வாக்குடன் இருந்து தன் மகன் யஹ்யாவை ஃபர்ஸ் பிரதேசத்தின் கவர்னராக்கினார். 781 ல் காலித் அவர்கள் இறந்து போனார்கள்.
தந்தையுடன் இருந்து நல்ல நிர்வாகத்திறன் பெற்றிருந்த யஹுயா அவர்கள் 778 ல் கலீஃபாவின் மகன் ஹாரூனுக்கு தனிச் செயலாளரானார். கலீஃபா மகன், ஹாரூனுடன் யஹ்யாவை அனுப்பி பைசாந்தியர்களுடன் படையெடுக்க உத்தரவிட்டார். அதன்பின் மேற்குப் பிராந்தியங்களுக்கு ஹாரூனை நிர்வகிக்கவும், யஹ்யாவை உதவியாகவும் நியமித்தார். அடுத்த கலீஃபாவாக ஹாரூனைத் தேர்ந்தெடுக்க அல் மன்சூர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்குள் மரணமடைய  சகோதரர் மூஸா அல் ஹாதி புதிய கலீஃபாவானார். ஹாரூன் எதிர்க்க வேண்டாம் என்ற முடிவில் இருந்தார்.
அல் ஹாதி, ஹாரூனையும், யஹ்யாவையும் அவர்களின் பொறுப்புகளிலேயே இருக்கச் செய்தார். அல் ஹாதி அடுத்து தன் மகனை கலீஃபாவாக முயற்சித்தார். இதனால் வெகுண்ட ஹாரூன், யஹ்யா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் புரட்சியில் இறங்கினார். இதனால் குழப்பங்கள் ஏற்பட்டு, ஹாரூன் மற்றும் யஹ்யா சிறை பிடிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் அல் ஹாதி இறந்து போனார். அதைச் சரியாகப் பயன்படுத்தி தாய் ராணியார் மற்றும் யஹ்யாவின் உதவியுடன் ஹாரூன் அர் ராஷித் 786 ல் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதன் பிறகு, அதிகாரங்கள் யஹ்யாவிடமும், அவரின் மகனிடமும் வந்தது. யஹ்யா வஸீராகவும், அவர் மகன்கள் ஃபத்ல் மற்றும் ஜாஃபர் கலீஃபாவின் தனி செயலாளர்களாகவும் ஆனார்கள். யஹ்யா கலீஃபாவை பாக்தாதுக்கு அழைத்துப் போய் பல மதபோதகர்களை சந்திக்க வைத்தார். யஹ்யாவும், ஜாஃபரும் எழுதுகோல்களால் ஆளக்கூடியவர்கள் “அஹ்ல் அல் கலம்’ என்று புகழ் பெற்றவர்கள். பின்னாளில் அல் ஃபத்ல் குராசனுக்கு கவர்னராகவும், ஜாஃபர் வஸீர் பதவியும் வகித்தார்கள். இளைய சகோதரர் ஜாஃபர் ஹாரூன் அர் ராஷீதுக்கு பிரியமானவராக இருந்து எல்லா விசேஷங்களிலும் கலந்து கொண்டார். 796 ல் கலீஃபா ஹாரூன் சிரியாவில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஜாஃபரை அனுப்பினார். அவர் நிலைமைகளை சீராக்கி திரும்பி தபால், துணிகள் மற்றும் நாணயத்துறைகளுக்கு திவானாக நியமிக்கப்பட்டார். தன் பெயர் பொறிக்கப்பட்ட பல நாணயங்களை ஜாஃபர் வெளியிட்டார்.
அல் ஃபத்ல் மிக நேர்மையானவராகக் கருதப்பட்டார். 793 ல் குராசான் பகுதிக்கு கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தார். காபூலில் ஏற்பட்ட தொந்திரவுகளை சரி செய்தார். 797 ல் தந்தை மக்கா புனித பயணம் சென்றிருந்த சமயத்தில் அவரின் பணிகளை ஃபத்ல் கவனித்தார். கலீஃபா அர் ராஷீதின் மூத்த மகன் ஒருவருக்கும் ஆசிரியராக இருந்தார். அல் ஃபத்ல் தான் ரமதான் மாதத்தில் அனைத்து மஸ்ஜிதுகளிலும் விளக்கு ஏற்றும் பழக்கத்தைக் கொண்டு வந்தார். இந்த பர்மகிட்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிக சொத்து சேர்த்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு முறை ஹாரூன் அவர்கள் பாக்தாத் வரும் போதும், புதிய பளபளக்கும் மாளிகையைப் பார்த்தால், யாருடையது என்று கேட்டால் அது பர்மகிட்களுடையது என்றே பதில் கிடைக்கப் பெற்றார். கோராசானில் கவர்னராக இருந்த அலி இப்ன் மஹான் என்பவர் யஹ்யாவும், ஜாஃபரும் அடிக்கடி தன் அதிகாரத்தில் தலையிட்டு தொந்திரவு செய்வதாக புகார் அளித்திருந்தார். செல்வச்செழிப்பில் மிதந்த பர்மகிட்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்கள். யஹ்யா பின் காலித் தன் மாளிகையின் சுவற்றில் தங்கத்தகடுகளைப் பதித்திருந்தார். ஹாரூனின் மாளிகை அப்போதைய மதிப்பில் 20 மில்லியன் திர்ஹாம்களில் இருந்தது. யஹ்யா இப்ன் அப்துல்லாஹ் என்பவரை கலீஃபா ஹாரூன் அவர்கள் பெர்ஷியாவில் டைலம் அரண்மனையை ஆள்வதற்கு அனுப்பினார். ஆனால், நாளடைவில் யஹ்யா இப்ன் அப்துல்லாஹ் கலீஃபாவையே மிரட்டினார். இதனால் வெகுண்ட கலீஃபா அவரைப்பிடித்து அல் ஃபத்லின் காவலில் வைத்துக் கொள்ள வைத்தார். அல் ஃபத்ல் அவரைத் தப்பிக்கவைத்து கலீஃபாவுக்கு துரோகம் செய்தார். அதற்கிடையில் ஜாஃபருக்கும், கலீஃபா ஹாரூன் அல் ராஷிதின் சகோதரி அப்பாசாவுக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. கலீஃபா ஹாரூன் இருவருக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டார். ஆனால், இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று உத்தரவு போட்டார். ஏனென்றால் பின்னாளில் அக் குழந்தை ஆட்சிக்கு உரிமை கோரலாம். இருவரும் ஒப்புக்கொண்டு திருமணம் செய்ய உத்தரவை மீறி விரைவில் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றார்கள். இதனால் ஜாஃபர் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். 
இடையில் யஹ்யா பெர்ஷியாவில் டைலம் பகுதியை தனதாக்கிக் கொண்டு, அப்பாஸிட்களை சங்கடத்தில் ஆழ்த்தினார். ஜாஃபர் 803 ல் தூக்கிலிடப்பட்டு பாக்தாதின் பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்தார். கலீஃபா ஹாரூன் அவர் மீது நடவடிக்கை எடுக்க, பெரும் தொகை கொடுத்து தப்பிக்க விடுமாறு கலீஃபாவுக்கு தூது விட்டார். மற்ற பர்மகிட்கள் சிறை பிடிக்கப்பட்டு, அவர்களின் சொத்துகள் கைப்பற்றப்பட்டன. யஹ்யாவும், அல் ஃபத்லும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் தேசத்துரோகத்திற்காக தண்டனை கொடுக்கப்பட்டிருந்தார்கள்.



துலுனித்கள் வரலாறு

துலுனித்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
துலுனித்கள் துருக்கிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமிய எகிப்தில் முதல் சுதந்திர ஆட்சியாளர்கள் இவர்கள் தான். 868 லிருந்து ஆட்சி செய்தார்கள். அப்பாஸிய கலீஃபாக்களின் ஆட்சியின் போது தலைநகர் பாக்தாதிலிருந்து நீண்ட தொலைவிலிருந்த மாகாணங்களை நிர்வகிப்பதில் நிர்வாக சிக்கல் இருந்தது. இதனால் சில மாகாணங்களை அங்கிருந்த கவர்னர்களும், ஊர் தலைவர்களும் தனதாக்கிக் கொண்டு ஆண்டு வந்தார்கள். சிலவற்றை அப்பாஸிய ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். சிலவற்றை கப்பம் செலுத்தச் சொல்லி ஆண்டு வந்தார்கள். கலீஃபா அல் முவஃப்ஃபக் மீண்டும் தென் ஈராக்கில் ஆட்சியை நிலை நிறுத்தினார். ஆரம்பத்தில் துருக்கிய பாரம்பரியத்தில் வந்த அஹ்மத் இப்ன் தூலூன் என்பவர் பாக்தாதில் அமைக்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவில் இருந்தார். பின் கலீஃபா அல் முஃதசிம் சமர்ராவை நிறுவிய போது அங்கே அனுப்பப்பட்டார். பிறகு கலீஃபா அல் முஃதஸ் இவரை எகிப்தின் கவர்னராக அங்கு அனுப்பினார். நாளடைவில் எகிப்திய இராணுவம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்திய அஹ்மத் இப்ன் தூலூன் எகிப்தின் மொத்த நிர்வாகத்தை தனதாக்கிக் கொண்டார். பிறகு அப்பாஸிய கலிஃபாவுடன் கப்பம் செலுத்துவதாக ஒப்பந்தமானது. ஆனால், நாளடைவில் கப்பம் செலுத்தாததால் அப்பாஸிய கலிஃபா இராணுவ நடவடிக்கை எடுத்தார். அஹ்மத் இப்ன் தூலூன் அதை எதிர் கொண்டு வெற்றி பெற்று, உடன் சிரியாவையும் கைப்பற்றினார்.
அஹ்மத் இப்ன் தூலூன் பாக்தாதில் பிறந்தவர். அப்பாஸிய கலீஃபா துருக்கி அடிமைகளை இராணுவத்திற்கு தேர்ந்தெடுத்ததில் தூலூனின் தந்தையும் ஒருவர். சமர்ராவிலிருந்த போது இராணுவப் பயிற்சியும், மதக் கல்வியும் கற்றுக் கொண்டார். அரண்மனை பாதுகாப்புப் படையிலிருந்த துருக்கிய தளபதி ஒருவரின் மகள் ஹதுனை தூலூன் மணந்து அப்பாஸ், ஃபாத்திமா என்ற இரு குழந்தைகளைப் பெற்றார். அஹ்மத் இப்ன் தூலூன் பைஸாந்தியர்களை எதிர்த்து டார்சஸ் என்ற இடத்தை வென்ற பிறகு, கலீஃபா மெய்யெஸ் என்ற வைப்பாட்டியைப் பரிசளித்தார். அவர் மூலம் குமாரவைய் என்ற மகனைப் பெற்றார். இவர் இறந்த பிறகு, இவர் மனைவியை துருக்கிய தளபதி பயிக் பெய் திருமணம் செய்து கொண்டார்.
பத்தாண்டுகளுக்கும் அதிகமாக மிகச் சிறந்த இராணுவத்துடன், திறமையான அதிகாரிகளையும் வைத்திருந்தார். தனக்குப் பிறகு மகன் குமாரவைய்யை ஆட்சிக்கு தயார் படுத்தினார். கலீஃபாவுக்கு கப்பம் செலுத்தாததால் அந்த பணத்தைக் கொண்டு, நல்ல திட்டங்களை செயல் படுத்தினார். கப்பல் படையை உண்டாக்கி அதன் மூலம் வாணிபத்தில் வருவாயைப் பெருக்கினார். ஜோர்டான் பள்ளத்தாக்கை கைப்பற்றி பைஸாந்தியர்களின் எல்லையிலுள்ள லெபனான் மலைப்பகுதி வரை முன்னேறினார். இதனால் அப்பாஸியர்கள் எகிப்தின் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுத்தார். எகிப்தின் கவர்னராக இருந்தபோது ஜபல் யஷ்குர் என்ற இடத்தில் இப்ன் தூலூன் மஸ்ஜித் ஒன்றைக் கட்டினார். நூஹ்(அலை) நபி அவர்களின் கப்பல் இங்கு தங்கியதாக அவ்வூர் மக்கள் சொல்கின்றனர். சுவற்றின் உட்புறமும், வெளிப்புறமும் இயற்கையாக உளு செய்வதற்காக நீரூற்று அமைத்தார். இதன் மினாரா கோபுரத்தின் படிகளில் ஒருவர் குதிரையுடன் ஏறலாம். 1177 ல் ஃபாத்திமிட்களின் வஸீர் பத்ர் அல் ஜமாலி இதை சீரமைத்தார். 1296 ல் சுல்தான் லஜீன் என்பவர் இந்த மஸ்ஜிதை சீரமைத்தார். பழைய தலைநகர் ஃபுஸ்தத்துக்கு பதிலாக அல் கட்டாயைத் தலைநகரமாக்கினார்.
தூலூத்களின் ஆட்சியில் அஹ்மத் இப்ன் தூலூனுக்குப் பிறகு அவர் மகன் குமாரவைய் ஆட்சிக்கு வந்து யூப்ரடீஸிலிருந்து நூபியா வரை நிலப்பரப்பைப் பெருக்கி னார். இவர் பதவிக்கு வந்தவுடன் கலீஃபா அல் முவஃப்ஃபக்கின் இராணுவத்தை சிரியாவில் எதிர் கொண்டார். உண்மையில் இவர்தான் தூலூத்களின் ஆட்சியை ஸ்திரப்படுத்தினார். 886 ல் கலீஃபா அல் முவஃப்ஃபக்கிடம் ஒப்பந்தம் போட்டு தூலூன்களின் ஆட்சியை எகிப்தில் உறுதி செய்து, அடுத்த 30 ஆண்டுகளுக்கு சிரியாவிலும் தங்கள் ஆட்சியை பாதுகாத்தார். மீண்டும் 892 ல் கலீஃபா முஃததிதுடன் பழைய ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டார். இவர் கட்டிய நீலக்கண் அரண்மனை மிகவும் புகழ் பெற்றது. பல அரண்மனைகளையும், தோட்டங்களையும் கட்டினார். ஒரே ஒரு முறை தவிர இவர் குதிரை ஏற்றம் செய்ததில்லை. குமாரவைஸ் தன் மகள் கத்ர் அல் நதாவை 892 ல் அப்பாஸிட் கலீஃபா அல் முஃததுக்கு மணமுடித்துக் கொடுத்தார். மணமகள் சீதனமாக அக்காலத்திலேயே மிகப்பெரிய தொகையாக 400,000 தீனார்களைக் கொடுத்தார். இவர் காலத்தில் தூலூன்களின் அரசுக் களஞ்சியத்தை 10 மில்லியன் தீனார்களுக்கு உயர்த்தினார். குமாரவைஸுக்குப் பிறகு, வந்த அவர் மகன் அபு இ அஷிர் (ஜைஷ்) திறமையற்று இருக்க, அவர் சகோதரர் ஹாரூன் ஆட்சிக்கு வந்தார். எட்டாண்டுகள் ஆண்ட அவர் அப்பாஸியர்கள் சிரியாவைக் கைப்பற்றி எகிப்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தருணத்தில் 904 ல் படுகொலை செய்யப்பட்டார். பிறகு, அவர் சிறிய தந்தை ஷய்பான் இப்ன் அஹ்மத் இப்ன் தூலூன் ஆட்சிக்கு வந்து அப்பாஸிய தளபதி முஹம்மது இப்ன் சுலைமானின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இருந்தார். அத்துடன் தூலூன்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

செவ்வாய், 14 ஜூலை, 2015

சாதியன்கள் வரலாறு 1

சாதியன்கள் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
சாதியன்கள் ஆட்சிவம்சம் இவர்கள் அரபுகளின் வழிவந்த மொரோக்கோவின் ஆட்சியாளர்கள். இவர்கள் ஸகோரா (ZAGORA) என்ற நகரத்தைச் சேர்ந்தவர்கள். அல் மொராவித் என்ற கோட்டையை உடைய இந் நகரம் டஸகோர்ட் என்றும் அழைக்கப்பட்டது. சாதியன் களின் பூர்வீகம் சகோராவிலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ட்ரா ஆற்றுப் பள்ளத்தாக்காகும். ஒவ்வோர் ஆண்டும் மௌஸ்ஸிம் என்ற பண்டிகையின் போது இந்நகரத்தில் சூஃபி ஞானி மௌலவி அப்துல் காதர் ஜிலாலி பேரில் கொண்டாடுவார்கள். இங்குள்ள மக்கள் மொரோக்கோ அரபு, டசெல்ஹிட், டம ஸைட் என்ற மொழிகளை அறிந்தவர்கள். இந்த சாதியன் பேரரசைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் தாங்கள் அலி இப்ன் அபிதாலிப்(ரலி), ஃபாத்திமா ஜொஹ்ரா ஆகியோரின் வழிமுறையில் வந்த யான்புவைச் சேர் ந்த ‘ஷரீஃபியன்’ வழிமுறை என்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் இவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய தாயார் ஹலிமா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள்.
சாதியன் ஆட்சிவம்சம் முதல் ஆட்சியாளர் சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் அஷ் ஷரீஃப் அல் ஹசனி ஆவார். இவர் 1544 லிருந்து 1557 வரை மொரோக்கோவை ஆண்டார். ட்ரா ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு டக்மடெர்ட் என்ற பெயரும் இருந்ததால் இவர் பெயருக்குப் பின்னால் அல் த்ராவி அத் டக்மடெர்டி என்ற இணைப்பும் உண்டு. இவர் மொரோக்கோவிலிருந்த போர்ச்சுகீஸியர்களைப் போரிட்டு விரட்டினார். மேலும், வட்டஸிட்கள், ஓட்டோமான்கள் ஆகியோரை மொரோக்கோவிலிருந்து கட்டுப்படுத்தி ஆட்சி செய்தார். சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்கின் தந்தை அபு அப்தல்லாஹ் அல் காயிம் 1517 ல் இறந்த பிறகு, ட்ரா ஆற்று வாசியான இவர் சகோதரர் அஹ்மத் அல் அரஜ் என்பவருடன் இணைந்து 1524 ல் மர்ரகேஷ் என்ற போரில் போர்ச்சுகீசியர்களை வென்றார். ஃபெஸ் பகுதியின் வட்டஸிட் சுல்தான் அங்கீகரிக்கும் வரை அஹ்மத் அல் அரஜ் மர்ரகேஷின் எமிராக வும், சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் டரூடண்ட் ஆட்சியாளராகவும் இருந்தார்கள். 1527 ல் வட்டஸிட் களுடன் நடந்த வாதி அல் அபிட் போரில் சாதியன் சகோதரர்கள் வென்றார்கள். இதனால் ‘டட்லா போர் ஒப்பந்தம்’ ஏற்பட்டு டட்லா மட்டும் தீர்வுகாணாத பகுதியாக ஆக்கப்பட்டு, சாதியன்களின் தனி ஆட்சிவம்சத்திற்கு வட்டாஸிட்கள் ஒப்புக் கொண்டார்கள்.
1536 ல் அஹ்மத் அல் அரஜ்  அதிகாரம் பெற்றதிலிருந்து சகோதர்கள் இருவரிடையே குழப்பம் உண்டானது. அஹ்மத் அல் அரஜ் வட்டாஸிட்களின் ஆட்சியாளர் அலி அபு ஹஸ்ஸுனுடன் கூட்டு வைத்துக் கொண்டார். சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் தென் மொரோக்கோவை அதிகாரத்தில் வைத்துக் கொண்டே 1541 ல் அகதீர் மற்றும் பிற கடற்பகுதிகளையும் போர்ச்சுகீசியர்களிடமிருந்து வென்றார். அகதீரை இழந்த போர்ச்சுகீசியர்கள் அஸமோர் மற்றும் சஃபி பகுதி களை விட்டு வெளியேறினார்கள். அஹ்மத் அல் அரஜ் டஃபிலாலெட்டுக்கு தப்பி ஓடினார். ஐரோப்பிய வெடி மருந்துகளைப் பயன்படுத்தி 1549 ல் வட்டாஸிட்களை வெற்றி பெற்று ஃபெஸ் பகுதியைக் கைப் பற்றினார். தன் மகனுக்கு இராணுவ உதவி கொடுத்து லெம்சென் பகுதியை வென்று அதன் ஸய்யனித் சுல்தானை வெளியேற்றினார். ஃபெஸ் வீழ்ந்ததால் சார் எல் கெபிர் மற்றும் அசிலா பகுதியை விட்டு 1550 ல் போர்ச்சுகீசியர்கள் வெளியேறினார்கள். இறுதியாக டியூடா, டான்ஜியர், மஸாகன் மட்டும் போர்ச் சுகீசியர்கள் வசம் இருந்தது. ஓட்டோமான், வட்டாஸிட்களின் உதவியுடன் அலி அபு ஹஸ்ஸுனின் கீழ் 1554 ன் ஆரம்பத்தில் ஃபெஸ் வெற்றி கொள்ளப்பட்டது. ஆனால் உடனே டட்லா போரில் சுல்தான் முஹ ம்மது அஷ் ஷெய்க் சண்டையிட்டு 1554 செப்டம்பரில் வட்டாஸிட்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார். ஓட்டோமான்களின் வசமிருந்த ஓரன் பகுதியை சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் ஸ்பானிஷ் களுடன் கூட்டு வைத்து வெற்றி பெற்றார். இப்போரில் அலி அபு ஹஸ்ஸுன் இறந்து போனார்.
சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்க் ஓட்டோமான்களை பெரிய அளவில் எதிர்க்க ஸ்பெயினுடன் கூட்டு சேர்வதை அறிந்த பார்பரொஸ்ஸாவின் மகன் ஹசன் பாஷா அவரை ஒழிக்கத் திட்டமிட்டார். சில ஓட்டோமான் வீரர்களை பாலைவனத்திலிருந்து வழி தவறி வந்தவர்கள் என்று கூறி சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்கிடம் பணிக்கு சேர வைத்தார். அவர் கள் சரியான சந்தர்ப்பம் பார்த்து சுல்தான் முஹம்மது அஷ் ஷெய்கை படுகொலை செய்தார்கள். அவர் உடல் மர்ரகெச்சிலுள்ள சாதியன்கள் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு, அவர் மகன் அப்தல்லாஹ் அல் காலிப் ஆட்சிக்கு வந்தார். முஹம்மது அஷ் ஷெய்கின் முதல் மனைவியின் மூத்த மகன் இவர். இவர்தான் அதிகாரபூர்வமாக மொரோக்கோவின் சுல்தான் ஆனார். இவரின் தாயார் லல்லா மசூதா புகழ் பெற்றவர். முஹம்மது அஷ் ஷெய்க் இறந்த பிறகு, ஆட்சிக்கு வருவதற்கு அவரின் பிள்ளைகள் இடையே கடும் போட்டி நிலவியது. மூத்தவர் அப்துல்லாஹ் அல் காலிப் 40 வது வயதில் ஆட்சியைப் பிடித்த பின், இளைய சகோதரர்களான அஹ்மத் அல் மன்சூர் மற்றும் அப்த் அல் மாலிக் ஆகியோரை 1576 வரை நாட்டைவிட்டு துரத்தினார். அவர்கள் 17 ஆண்டுகாலம் ஓட்டோமான்களிடம் முறையே அல்ஜீயரிலும், கான்ஸ்டாண்டிநோபிளிலும் இருந்து அவர்களின் கலாச்சாரங்களையும், தொடர்புகளையும் கற்றுக் கொண்டார்கள்.
அப்துல்லாஹ் அல் காலிப் 1558 ல் வாதி அல் லபானை ஆக் கிரமிக்க முயன்ற துருக்கியர்களை போரிட்டு விரட்டினார். இவர்தான் ஓட்டோமான்களுக்கு எதிராக ஸ்பெயினுடன் கூட்டு வைத்து சிறிது காலம் லெம்சென் பகுதியை வைத்திருந்தார். இவர் காலத்தில் நான்காண்டாக உள்நாட்டுப்போர் நடந்தது. மர்ராகெச்சை தன் இருப்பிடமாகக் கொண்டிருந்த அப்துல்லாஹ் அல் காலிப் மருத்துவமனையுடன் இணைந்த முவாஸ்ஸின் மசூதியைக் கட்டினார். அல் மன்சூரியா மஸ்ஜிதை சீரமைத்தார். மர்ராகெஷில் இருந்த பென் யூசுஃப் மதரஸாவை பெரிய அளவில் சீரமைத்தார். முன்பு இது அல்மொராவித் சுல்தான் அலி இப்ன் யூசுஃபால் கட்டப்பட்டிருந்தது. அப்துல்லாஹ் அல் காலிப் மொரோக்கோவிலேயே மிகப் பெரிய கல்லூரியாக மாற்றினார். தொழுகை அறை, 900 மாணவ ர்கள் தங்கிப்படிக்க வசதியுடன் பளிங்கு தரையுடன் கட்டி இருந்தார். அப்போது வட ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய மதக்கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரியாகவும் இருந்தது. இதன் ஆசிரியராக புகழ் பெற்ற முஹம்மது அல் இஃப்ரானி இருந்தார். இந்த பென் யூசுஃப் மதரஸா 1960 மூடப்பட்டு, 1982 ல் சரித்திர கால இடமாக பார்வைக்கு திறக்கப்பட்டது. அப்துல்லாஹ் அல் காலிபுக்குப் பின் அவர் மகன் அப்துல் லாஹ் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். சாதியன்களின் சட்டப்படி முன்பு சகோதரருடன் வெளியேறிப் போன அபு மர்வான் அப்த் அல் மாலிக் தான் ஆட்சிக்கு வரவேண்டும்.

சாதியன்கள் வரலாறு 2

இவரை இரண்டாம் அப்துல்லாஹ் முஹம்மது என்பார்கள். இவர் ஆட்சிக்கு வந்தவுடன் தன் சகோதரரைக் கொன்று டட்லாவில் கவர்னராய் இருந்த முலாய் எந் நாசர் என்பவரை சிறையில் அடைத்தார். வெளியேறிப்போய் கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்த  அபு மர்வான் அப்த் அல் மாலிக் ஓட்டோமான்களின் அல்ஜீரியாவில் இருந்தார். இவர் ஓட்டோமான் படைகளின் உதவியுடன் மொரோக்கோவில் ஊடுருவி இரண்டாம் அப்துல்லாஹ் முஹம்மதுவிடம் இருந்து ஃபெஸ் பகுதியைக் கைப்பற்றினார். பின் வரிசையாக அல் ருக்ன், ஜன்டக் அல் ரைய்ஹான் டரூடண்ட் ஆகியவற்றையும் வென்றார். 1578 ல் அல்கஸர்க்யூவிர் போரில் அபு மர்வான் அப்த் அல் மாலிக் மற்றும் இரண்டாம் அப்துல்லாஹ் முஹம்மது இருவரும் மரணமடைந்தார்கள். அப்த் அல் மாலிக் இறக்கும் முன் தன் சகோதரர் அஹ்மத் அல் மன்சூரை ஆட்சிக்கு முன் மொழிந்திருந்தார்.
சாதியன் பேரரசின் புகழ்பெற்ற ஆட்சியாளராக சுல்தான் அஹ்மத் அல் மன்சூர் என்பவர் 1578 ல் ஆட்சிக்கு வந்தார். இவரின் பலமான, சாதுரியமான இராணுவத் திறமையால் ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் நன்கு அறியப்பட்டார். இவர் முஹம்மது அஷ் ஷெய் கின் ஐந்தாம் மகனாவார். இவர் போர்ச்சுகீசியர்களிடம் அவர்களின் வீரர்கள், தளபதிகள் போரில் பிடிபட்டால் பணயத்தொகை விட மாட்டேன் என்று கூறினார். அதன்படி நிறைய வீரர்கள் இவரிடம் பிடிபட பெரிய பணயத் தொகைகளை அடிக்கடிப் பெற்றார். மர்ரகெஷில் ‘எல் பாடி’ என்னும் பிரமாண்டமான அரண்மனையைக் கட்டினார். 200 மீட்டர் நீளத்தில் பெரிய முன்புற முற்றம் வைத்து இந்தியாவிலிருந்து பணியாட் களையும், ஐயர்லாந்து ,இத்தாலியிலிருந்து பளிங்கு கற்களையும் வரவழைத்துக் கட்டினார். ஐயர்லாந்தில் அப்போது சர்க்கரை இல்லை. அதற்கு பதில் சர்க்கரைக் கொடுத்து பளிங்கு கற்களை வாங்கினார். ஆயிரம் தூண்களைக் கொண்டும், பணயத்தொகை செலுத்த முடியாத ஐரோப்பிய வீரர்க ளைக் கொண்டும் பதினாறு ஆண்டாக இந்த அல் பாதி அரண்மனையைக் கட்டினார். மொரோக்கோ மக்களின் ஒவ்வொருவரின் உழைப்பும் இதில் இருந்ததாம். இவர் அரண்மனைப் பணியை பார்வையிட வரும் போதெல்லாம் பணியாளர்களுக்கு சிறப்புத் தொகை கொடுப்பாராம். தூண்களில் தங்க இலைக ளை பதித்தாராம். அரண்மனைக்குள் நீச்சல் குளம், தோட்டங்களையும் அமைத்தாராம். அக்கால கட்டத் தில் மிகப்பெரிய பொருட் செலவில் ஆன கட்டுமானம் இந்த அல் பாதி அரண்மனையாம். பூமியின் சொர்க்கம், உலகின் அதிசயம் என்று போற்றப்பட்டது. இதை நேரில் பார்த்த ஒரு ஐரோப்பியர் அரண்ம னைப் பணி நடந்த ஒவ்வொரு நாளும் எந்நேரமும் 1,400 பணியாட்கள் வாசலில் தங்கங்களை சுத்தி யல் கொண்டு வடிவமைப்பார்களாம். ஒரு வண்டியில் 3000 லிருந்து 3600 கிலோ வரை கொள்ளளவு கொண்ட தங்கத்தை 36 வண்டிகளில் கொண்டு வந்தாராம். இதன் கலைப்படைப்பால் உலகின் எட்டாவது அதிசயமாக இது கருதப்பட்டது. பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் மொரோக்கோவில் உள்ள அனைத்து மெழுகுவர்த்திகளும் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டு அரண்மனை இதுதான் சொர்க்கமா என்று நம்பும்படி கண் கொள்ளாகாட்சியாக ஜொலிக்குமாம். அந்நாட்களில் மொத்த மக்க ளுக்கும் சிறப்பான உணவு தகுதிக்கேற்ப வழங்கப்படுமாம். சாதியன்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மொரோக்கோவை ஆண்ட அலாவோயிட் சுல்தான் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் என்பவர் அனைத் தையும் பிரித்து தனது தலைநகர் மெக்னெசில் கட்டிய புதிய அரண்மனைக்கு எடுத்துச் சென்றாராம். தற்போது இந்த அரண்மனை வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. இவரால் நிறைய கட்டிடங் களும், ஆடம்பரமான வாழ்க்கை முறையாலும் இராணுவ செலவினங்களாலும், சிறப்பான ஒற்றர்களி ன் ஊதியங்களாலும் அரசு கஜானா விரைவில் காலியாகியது. கிறிஸ்தவ நாடாகவே இருந்த மொரோ க்கோவில் அதிகமான ஸ்பெயின் மற்றும் போர்ச் சுகீசியர்கள் இருந்தார்கள். அவர்களைக் கொண்டே மொரோக்கோவின் பொருளாதாரம் இருக்கிறது என்பதை அல் மன்சூர் நன்கறிவார். மொரோக்கோவில் குறிப்பிட்ட அளவில் தங்கம் சுரங்கம் மூலமாக கிடைத்தது. இதனால் ட்ரான்ஸ் சஹாரன் தங்க வியாபாரத்தில் முனைப்பு காட்டினார். அஹ்மத் அல் மன்சூர் இங்கிலாந்துடன் நட்புறவிலும் இருந்தார். அமெரிக்காவிலும் ஒரு மெஹ்தி தோன்றி இஸ்லாமை வளப்படுத்துவார் என்று கூறினார். இவருக்கு மருத்துவராக இருந்த ஃப்ரான்சைச் சேர்ந்த அர்னூ ல்ட் டி லிஸ்லி என்பவரும், ஈடியன்னீ ஹூபெர்ட் டி ஓர் லியன்சும் பின்னாளில் ஃப்ரான்ச் திரும்பி அரபுக் கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றினார்கள்.
ஆப்பிரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரரசாக மேற்கில் சொங்காய் பேரரசு இருந்தது. 1590 ல் அங்கு நடந்த உள்நாட்டுக் கலவரத்தை பயன்படுத்தி இஸ்லாமியராக மார்க்கம் மாறியிருந்த ஸ்பெயினின் ஜுடார் பாஷாவின் தலைமையில் 4,000 வீரர்களை சஹாரா பாலைவனம் கடந்து அனுப்பினார். 40,000 வீரர்களுடன் அதை எதிர்கொண்ட சொங்காய் பேரரசு சாதியன் பயன்படுத்திய வெடிப்பொருள்களால் சிதறியது. அஹ்மத் அல் மன்சூரின் படைகள் சொங்காயின் நகரங்களான டொண்டிபி, டிம்புக்டு, ஜென்னி மற்றும் தலைநகர் காவ் ஆகியவற்றைக் கைப்பற்றியது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் நகரங்களைப் பாதுகாக்க ஆட்களுக்கும், பொருள்களுக்கும் நீண்ட தொலைவு சஹாரா பாலைவனத்தை கடக்கும்படி இருந்ததால் விரைவில் அந்நகரங்களை விட்டு திரும்பினார். இவரது ஆட்சியில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அஹ்மத் முஹம்மது அல் மக்கரி, அப்த் அல் அஜீஸ் அல் ஃபிஷ்டலி, அஹ்மத் இப்ன் அல் காதி மற்றும் அல் மஸ்ஃபிவி ஆகியோர் இருந்தார் கள். 1603 ல் ஏற்பட்ட ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்டு அஹ்மத் அல் மன்சூர் இறந்து போனார். அவரது உடல் மொரோக்கோவின் சாதியன்கள் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டது.
அஹ்மத் அல் மன்சூருக்குப் பிறகு, அவர் மகன் ஸிடான் எல் நாசிர் ஆட்சிக்கு வந்தார். இவர் வந்த பின் பெரும் இழப்புகளைச் சந்தித்தார். பல பகுதிகளில் உள்நாட்டு கலவரங்கள் நடந்தது. அனார்சி நகரத்தின் அதிகாரம் போனது. சாலி நகரமும் பிரிந்து சுதந்திரமானது. உள்நாட்டு கலவரங்கள் தொடர்ந்து தெற்கில் அஹ்மத் இப்ன் அபி மஹல்லி என்பவராலும், சிடி அல் அயாச்சி என்பவரால் வடக்கிலும் நடந்தது. ஸ்பெயினும் 1610 ல் லராச்சி மற்றும் அல் மஃமுரா நகரங்களைக் கைப்பற்றியது. சிறிய நாட்டுத்தலைவர்களான முஹம்மது அல்குவாஸிர், யூசுஃப் பிஸ்கைனோ ஆகியோருடன் நட்பாகப் பழகினார். இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் 1610,1613, 1615 ஆகிய ஆண்டுக ளில் ஜான் ஹாரிஸ்ஸன் என்பவரை தூதுவராக அனுப்பி ஆங்கில கைதிகளை ஸிடான் எல் நாசிரிடம் விடுதலைச் செய்யச் சொல்லி அழைத்துச் சென்றார். தொடர்ந்த உள்நாட்டுப் போரால் தனது மொத்தப் பொருட்களையும் ஒரு கப்பலில் ஏற்றி இடம் மாற்றினார். ஆனால் கப்பல் கேப்டன் அவைகளைத் திருடி கப்பலை ஸ்பெயினுக்கு எடுத்துச் சென்று எல் எஸ்கோரியல் நகரத்தில் விற்று விட்டான்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அபு மர்வான் அப்த் அல் மாலிக் இரண்டாம் இப்ன் ஸிடன் இருந்தார். இவர் இரண்டாம் அப்த் அல் மாலிக் என்று அழைக்கப்பட் டார். ஃப்ரான்சின் ஐசக் டி ரஸில்லி மொரோக்கோ மீது படையெடுத்ததால், அவருடன் இரண்டாம் அப்த் அல் மாலிக் ‘ஃப்ரான்கோ மொரோக்கன் போர் ஒப்பந்தம்’ என்று ஓர் ஒப்பந்தைச் செய்து கொண்டார். இதனால் ஆட்சியின் அதிகாரத்தில் ஃப்ரான்சுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இவரைப் பற்றி மேலதிக விவரம் ‘மலெய் அப்தல மெலிக்’ என்று ஜான் ஹாரிஸ்ஸன் 1633ல் எழுதிய புத்தகத்தில் மட்டுமே உள்ளது. அடுத்து 1631 லிருந்து 1636 வரை அல் வலீத் பென் ஸிடான் என்பவர் மொரோக்கோவின் சுல்தானாக இருந்தார். இவர் ஃப்ரான்சின் துரோகி ஒருவனால் கொல்லப்பட்டார். பின்னர் முஹம்மது அஷ் ஷெய்க் அஸ் ஸெகிர் என்பவர் சுல்தான் ஆனார். 1640 ல் குடைந்து உருவாக்கப்பட்ட இவரது ஓவியம் ஒன்று உள்ளது. இவரைப் பற்றியும் அவ்வளவாக விவரம் இல்லை. இறுதியாக அஹ்மத் அல் அப்பாஸி என்ற சுல்தானுடன் சாதியன்கள் ஆட்சி முடிவுற்றது. அஹ்மத் அல் அப்பாஸி இறந்த பிறகு, மிச்சமிருந்த ராஜகுடும்ப உறுப்பினர்களால் பெரும் குழப்பம் ஏற்பட்டு, அலாஓயிட் என்பவர்களின் புதிய ஆட்சியாக முலாய் அல் ராஷித் ஆட்சிக்கு வந்தார்.