ஞாயிறு, 19 ஜூலை, 2015

மங்கோலியர்கள் வரலாறு 1

மங்கோலியர்கள் வரலாறு 
கூ.செ.செய்யது முஹமது
அமைதியாக இருக்கும் அருகாமை மக்களைக் கொள்ளையடித்து, தங்கள் உணவை தேடிக்கொண்டிருந்த பழங்குடியினர் மீது போர் தொடுத்து ஸ்காண்டிநேவியன்கள் கைப்பற்றிய பூமி. மங்கோலியப் பீடபூமி. இதை ஸ்காண்டிநேவியன்கள் கடற்கொள்ளைக்கும், அடிமை வாணிபத்திற்கும் பயன்படுத்தி வந்தார்கள் அது தனி கதை. இந்த மங்கோலியா தான் துருக்கிகளுக்கும், மங்கோலியர்களுக்கும் உண்மையான தாய் பிரதேசம். ஆண்டாண்டாக பழங்குடியினராக இங்கு வாழ்ந்த இந்த இரு சமூகமும் உலக சரித்திரத்தில் மகத்தான இடம் பிடித்தனர். இவர்களின் மொழி ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கும். ஆளுயரத்திற்கு வளர்ந்திருக்கும் காட்டுப்புல், கரடுமுரடான மலைகள் எல்லாம் தாண்டி அமைந்த பிரதேசம். இவைகளைக் கடந்தால் நேராக கொண்டு போய் ஐரோப்பாவில் விடும். குதிரைகளில் பயணித்தால் விரைவில் எட்டலாம். தென் பகுதியில் உயர்குடி வகுப்பினர் வசித்து வந்தார்கள். அமெரிக்க இந்தியர்கள், சைபீரிய பழங்குடியினர்கள் மற்றும் வடக்கு மங்கோலியர்கள் அனைவரும் ஒரே வழிமுறையில் வந்தவர்கள் என்று இறுதியான மனித ஆய்வு சமீபத்தில் தெரிவிக்கிறது.
இந்த மங்கோலிய பீடபூமியைப் பற்றி கொஞ்சம் ஆதியிலிருந்து பார்ப்போம். காட்டு மிராண்டி கூட்டங்களாய் 100 ஆம் ஆண்டுகளில் பல பிரிவு மக்கள் சேர்ந்த இனம் மங்கோலிய இனம். பின்னாளில் ஸோன்ங்க்யூ, ஸியான்பி, ரூரன், கூக்துர்க் அல்லது ஹூன் மாகாணம் என்று அடையாளம் காணப்பட்டது. இன்றும் சரித்திர ஆசிரியர்கள் இவர்கள் மங்கோலிய பழங்குடியினரா அல்லது துருக்கி பழங்குடியினரா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஹூன் மாகாணம் மத்திய ஆசியாவில் “ஷன்யூ” என்ற பேரரசாக மாறியது. ஷன்யூ மோடுன் என்பவர் இதை விரிவுபடுத்தினார். ஷன்யூ பேரரசு சீனாவின் ஹான் பேரரசுடன் போட்டியிட்டது. ஷன்யூவின் பிரமாண்ட படை முன்னால் தாக்கு பிடிக்க முடியாமல் ஹான் பேரரசின் சீனா மன்னர் ஷன்யூவை தனிப்பேரரசாக ஒத்துக்கொண்டார். ஷன்யூவுடன் திருமண உறவுகளை வளர்த்துக்கொண்டு ஆண்டு கப்பம் செலுத்தவும் ஒப்புக் கொண்டார். மோடுன் ஆட்சியில் ஷன்யூ பேரரசு நிர்வாகத்திறமையிலும், இராணுவத்திலும் பலமாகஇருந்து “ஷாமானிஸம்” என்ற மதக்கொள்கையை கடைபிடித்து வந்தது. (இங்கு நிறைய குறிப்பிடவரலாறு உள்ளது. தேவையில்லை என்ற கார ணம் கருதி தவிர்த்து விடுகிறேன்.) நாளடைவில் சரித்திரம் ஸியன்பிஸ்கள் என்பவர்கள் தான் மங்கோலியர்கள் என்று முடிவுக்கு வந்தது. 2006 ல் நடந்த அகழ் ஆராய்ச்சியில் மங்கோலியாவின் அல்டாய் மலைப் பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஸைத்திய போர்வீரன் உடல் கண்டு பிடிக் கப்பட்டது. மங்கோலியர்களின் புராதனம் கொய்ட் செங்கெரீன் அகூய் பகுதியில் வட நீலவண்ண குகை ஓவியங்கள், பயன் கோங்கார் பகுதியில் ஸகான் அகூய் வெள்ளை குகை ஓவியங்கள் மூலமும் கண்டறியப்பட்டுள்ளன. ஸியன்பிஸ்களின் இளம்தலைவர் தன்ஷி ஹுயூ சிறு நாடோடிக் குழுக்களை ஒருங்கிணைத்து ஹூன் மற்றும் சீன அரசுடன் அவ்வப்போது மோதிக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக ஸியான்பி மாகாணத்தை உருவாக்கினார். அதுவும் சிறிது நாளில் சிதறுண்டு போனது. பல சிறு அரசர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதிக் கொண்டார்கள். ஸியான்பி மாகாணம் தன் தலைமையை ‘கான்’ என்று அழைத்தது. இவர்கள் துருக்கி நாடோடிகளாகவும் அறியப்பட்டனர். ஆனால், நவீன துருக்கிகள் இதிலிருந்து மரபு ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் மாறுபட்டவர்கள். சரித்திரத்தில் முதல் கானாக காபுல்கான் என்றவர் கியாத் பழங்குடியினரிலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறார். காபுல்கானின் மகன் ஹோடுலாகான் எதிரிக் கூட்டத் தலைவனான அம்பகைகானுடன் பலமுறை போரிட்டார். ஹோடுலாகான் இறந்தவுடன் கூட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க திணறினார்கள். இறுதியில் காபுல் கானின் பேரர் ஒருவரான யெஸுகெய் பகாதூர் என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
மங்கோலியாவின் கிழக்கில் அல்டாய் மலைப்பகுதி. அந்த தாய், தகப்பனில்லாத தன் குழந்தைகளுக்கு உணவளிக்க மிகவும் சிரமப்பட்டாள். சில சமயம் காட்டுத் தாவரங்களையும், சிறிய மிருகங்களையும், சுண்டெலிகளையும், அவர்கள் கூட்டத்துக் குள்ளேயே திருடியும் உணவளித்து வந்தாள். அவர்களின் சிறிய கூட்டத்தின் தலைவராக இருந்த அந்த குழந்தையின் தந்தையை அந்தக் கூட்டத்தார்கள் தலைமைப் போட்டியில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டார்கள். அவர் தான் யெசுகெய் பகாதூர். ஆறு குழந்தைகளின் தந்தை ஆவார். அந்த குழந்தைகளில் ஒரு சிறுவனுக்கு தந்தை இறந்தபோது எட்டு வயது. அந்த சிறுவனின் பெயர் தெமுஜின். வழக்கமாக தந்தைக்குப் பின் தலைமைக்கு வர வேண்டிய தெமுஜின்னை அவர்களின் கூட்டத்திலேயே யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் ஒருகுழு சேர்த்து முரண்டுபிடித்த அந்த சிறுவன் தெமுஜின்னை மரக்கூண்டுக்குள் பலநாட்களாக சிறைவைத்தனர். ஒருநாள் இரவில் தெமுஜின் தப்பித்து தன் தாய் தம்பிகளுடன் வெளியேறி நீண்ட தூரம் பயணித்து வேறு ஒரு நாடோடிக்குழுவுடன் சேர்ந்து கொண்டார். தன் தந்தையின் சகோதரர் தூரில் கானுடனும், தனது இன்னொரு சகோதரர் ஜமுகாவுடனும் சேர்ந்து சிறிய கூட்டங்களை வெற்றி கொண்டார். அந்த கூட்டங்களில் ஒன்றான மெர்ஜித் பழங்குடியினர் தெமுஜினின் வீட்டை அழித்து அவர் மனைவி பூர்டேயை சிறைப்பிடித்துச் சென்றனர். இது ஏற்கனவே முன்பு தெமுஜினின் தந்தை யெஷுகெய் மெர்ஜித் தலைவனின் மனைவி ஹூலுனை சிறைப்பிடித்து சென்றதற்கு பழிவாங்குவதாக இருந்தது. தந்தையால் சிறைபிடித்து வரப்பட்ட ஹூலுன் தான் தெமுஜின் தாயார். மனைவியை மீட்க மெர்ஜித் கூட்டத்தின் மீது தெமுஜின் படையெடுத்து வென்றார். இந்த சிறுவன் தெமுஜினின் கதை உலகின் அனைத்து மொழிகளிலும் சினிமாப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவரின் கதை என்று சொல்லப்படுவதில்லை. அந்த சிறுவன் தந்தையைக் கொன்ற தன் கூட்டத்துக்குள்ளேயே அதிகாரத்திற்கு வர இருபத்தைந்து ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது. தனது நாற்பதாவது வயதில் தங்கள் பழங்குடியின குழுவுக்குத் தலைவனாகி, இன்றளவும் உலகம் வியக்கும் “ஜெங்கிஸ்கான்’ என்று பெயர் பெற்றார். ஜெங்கிஷ் என்றால் ‘எல்லோரும் சூழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்’ என்று பொருள். இவர் தனி மனித இராணுவம் (ONE MAN ARMY) என்று புகழப்பட்டார்.

மங்கோலியர்கள் வரலாறு 2

ஜெங்கிஸ்கானுக்கு ஹசர், ஹசியுன், தெமூஜி என்ற சகோதரர்களும், தெமூலீன் என்ற ஒரு சகோதரியும், பெக்தர், பெல்குதெய் என்று ஒன்றுவிட்ட சகோதரர்களும் இருந்தார்கள். இவரின் இளவயது மிகவும் கஷ்டமாக இருந்தது. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த இவர் தந்தை சிறுவயதிலேயே மணப்பெண் இருக்கும் கோங்கிரட் பழங்குடியினரிடம் வழக்கப்படி விட்டுவிடுகிறார். ஜெங்கிஸ்கான் அக்குழுத்தலைவர் டை செட்சென் என்பவருக்கு பணிவிடை செய்தார். இவர் மனைவி பெயர் போர்டி. இவர் தந்தை பழைய டடார் இனத்தவரின் பகையால் விஷம் வைத்து கொல்லப்பட்டார். அதனால் முறைப்படி தன் கூட்டத்திற்கு தானே தலைவன் என்று உரிமை கொண்டாடிய ஜெங்கிஸ்கானையும், அவர் தாயாரையும் கொடுமைகள் செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். தாயார் ஹொய்லூனுடன் மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஜெங்கிஸ்கானின் ஒன்று விட்ட வயதுக்கு வந்த மூத்த சகோதரர் (இவர்தான் குடும்பத்திற்கு உணவளிக்கும் பொறுப்பில் இருந்தார். இவர் ஹொய் லூனுக்கு பிறந்தவர் அல்ல) பெக்டருடன் தாயாருக்கு கணவர் போல் உறவாகி விடுகிறது. ஒரு வேட்டையின் போது ஜெங்கிஸ்கானும், சகோதரர் கசரும் சேர்ந்து பெக்டரைக் கொன்று விடுகிறார்கள். இடையில் தந்தையின் எதிரி தயிசியுத் என்பவன் ஜெங்கிஸ்கானை சிறைப்பிடித்து அடிமையாக விற்க ஏற்பாடு செய்கிறார். இவர் மீது இரக்கம் கொண்ட சிலாவுன் என்ற (இவர்தான் பின்னாளில் ஜெங்கிஸ்கானின் படையில் ஜெனரலாக இருந்தார்.) காவலன் இரவில் தப்பிக்க வைத்தார். அந்த தப்பித்தலுக்குப் பிறகு ஜெங்கிஸ்கானின் வாழ்க்கை வேகம் பிடித்தது. அவருடன் பின்னாளில் ஜெனரலாக இருந்த ஜெல்மி, போ ஒர்சு என்ற இருவர் கூட்டு சேர்ந்தனர். ஜெங்கிஸ்கான், எதிரி பழங்குடி இனத்தவருடன் சண்டை, அரசியல், கொள்ளை, கலவரம், ஊழல், பழிவாங்குதல் என்று பம்பரமாக சுழன்றார். இவர் தாயார் பழங்குடி இனக் கூட்டங்களின் அரசியல் கதைகளை அவ்வப் போது பாடம் போல் சொல்வார். ஜெங்கிஸ்கான் பெயரைக் கேட்டாலே சுற்று வட்டாரத்தில் அலர வைத்தார். இரக்கம் என்பதை குளியலுக்கு முன் உடை கழட்டுவது போல் கழட்டி விடுவார். ஒரு கூட்டத்தில் நுழைந்தால் கண்ணில் தென்படுபவர்கள் ஆண், பெண், குழந்தை என்று சரமாரியாக காரணமில்லாமல் வெட்டுவார். இந்த அதிர்ச்சியில் எதிரி திக்குமுக்காகி சரணடைந்து விடுவான். அதுவே அவர் ஆரம்ப பலமாக இருந்தது. ஜெங்கிஸ்கானுக்கு மனைவி போர்டேயின் மூலம் ஜோச்சி,சகடாய், ஓகிடாய், தோலூயி என்ற மகன்கள் பிறந்தார்கள்.
சரித்திரத்தில் எவருடைய ஆரம்பமும், முடிவும் ஜெங்கிஸ்கானுடையது போல் அல்ல. இவர் தோராயமாக 1167 ல் பிறந்தார். இவர் தங்களுடைய மூதாதையர்கள் போல் அதே இடத்தில் பிறந்தோம் வளர்ந்தோம் மரணித்தோம் என்று வாழ விரும்பவில்லை. வேற்றுமனிதர்கள் அறியாவண்ணம் நூற்றுக்கணக்கான மலைகளுக்கு பின் வாழ்ந்து கொண்டிருக்கும் தமது கூட்டம் உலகம் அறியப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் நாடோடி கூட்ட மக்களை தன் தலைமையின் கீழ் திரட்டி இரத்தம் இரத்தமாக போகுமிட மெல்லாம் சிதறடித்து முன்னேறினார். மங்கோலிய இனத்தில் குழந்தைப் பருவத்திலேயே மலையேறுவது, குதிரை விளையாட்டு போன்றவை கட்டாயமாகிப் போனது. பயம் என்றால் என்ன என்றே அறியாத ஒரு கூட்டம். கம்யூனிஸ சீனா மங்கோலிய சரித்திரத்தை காட்டுமிராண்டிகள் என்று வருணிக்கின்றன. இரத்தத்தாலேயே பசிபிக்கடலின் வழியைத் திறந்து ஐரோப்பாவில் நுழைந்தார். முதல் முதலில் ஸி ஸியா என்ற வட சீனப் பகுதியைக் கைப்பற்றினார். பின் சக்திவாய்ந்த கின் பேரரசைத் தாக்கினார். 1209 ல் வடக்கில் சீனா நோக்கி நகர்ந்து 1215 ல் பெய்ஜிங்க் நகரத்தைப் கைப்பற்றினார். 1219 ல் இவரின் வாழ்வின் அதிமுக்கிய திட்டமாகிய மேற்கை நோக்கி நகர்ந்தார். க்வாரஸெம் என்ற மாகாணத்தின் துருக்கி ஆட்சியாளர் இரண்டாம் முஹமது ஷா என்பவரை சரணடையச் சொல்லி தூது அனுப்பினார். சாதாரண பழங்குடிப் படையினர் மன்னரை சரணடையச் சொல்வதா? முஹமது ஷாவின் ஆட்கள் வந்த தூதுவரைக் கொன்று, மீதி ஆட்களை தலை மழித்து அவமானப்படுத்தி அனுப்பினர். வெகுண்டெழுந்த ஜெங்கிஸ்கான் போரில் குதித்தார். பலமான கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு, ஜெங்கிஸ்கான் வெற்றிபெற்றார். 1220 ல் சமர்கண்ட் மற்றும் புகாரா நகரங்களை கைப்பற்றினார். முஹமது ஷா கஸ்பியன் கடலின் ஏதோ ஒரு தீவில் மறைந்து இறந்து போனார். முஹமது ஷாவின் இராணுவத்திலிருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான குதிரைப் படை வீரர்கள் மங்கோலியப் படையில் சேர்ந்தனர். அங்கிருந்து தெற்காக திசை திரும்பி இந்தியாவை நோக்கி வந்தார். ஆனால், இந்துஸ் ஆறுவரை வந்தவர் அறியப்படாத காரணத்தால் திரும்பி விட்டார். பின்னர் 1223 ல் கஸ்பியன் கடல் மற்றும் காகசஸ் மலைகளின் வாயிலாக படைகளுடன் பயணித்து க்ரீமியா மற்றும் தென் ரஷ்யா பகுதிகளில் கொள்ளையடித்தார். அலெக்ஸாண்டரின் மனோ தத்துவ ரீதியான போருக்கு முன்வரை ஜெங்கிஸ்கானின் வேகத்திற்கும், வெற்றிக்கும் இணையான வீரர் எவரும் இல்லை.
ஜெங்கிஸ்கானின் வெற்றிகள் இவரை உலகத்தின் முதல் மாவீரனாக சித்தரிப்பதில் அழுத்தமான உண்மைகள் பலவுள்ளன. நெப்போலியன், அலெக்ஸாண்டர் எல்லாம் வழக்கம் போல் மேற்கத்தியர்களால் மிக அளவுக்கதிமாக புகழப்பட்டவர்கள். அவர்களும் வீரர்கள்தான் சந்தேகமில்லை. ஆனால், ஜெங்கிஸ்கான் அளவுக்கு இல்லை. இவரது பலம் எந்த நகரத்தில் நுழைந்தாலும் நல்லது, கெட்டது என்று பாராமல் கண்மூடித்தனமாக கொன்று குவிப்பது, எரிப்பது என்று எதிரியை கதி கலங்க வைப்பார். முறையாக ஆட்சி செய்யும் மன்னர்களை இது நிலைகுலையச் செய்தது. ஜெங்கிஸ்கான் எந்த நவீன ஆயுதங்களும் பயன்படுத்தியதில்லை. இயற்கையான அப்பழுக்கற்ற வீரம் அது. பழங்குடியினராதலால் மலைகளில் சர்வ சாதாரணமாக குதிரை விளையாட்டு, ஒப்பற்ற வேகம், தப்பாத குறி இவையெல்லாம் தான் அவருக்கு வெற்றிகளைத் தேடித்தந்தன. இவருக்கு அமைந்த வீரர்களும் தனி சிறப்பு வாய்ந்தவர்கள். குதிரைவீரர்கள் சர்வசாதாரணமாக எந்தவிதமான பயணப் பாதையிலும் பயணித்து ஒரு நாளைக்கு 200 மைல் தூரத்துக்கு செய்தி கொண்டு செல்வார்கள். பருந்துகளும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டன. இவருக்கு அமைந்த வீரர்கள் இராஜவிசுவாசத்திற்கும், பயத்திற்கும் பணிந்தவர்கள். மிகவும் தந்திரமாகவும், உயர்தரத்திலும் தமது பழங்குடி மக்களுக்கு நகரங் களில் இருப்பிடம் அமைத்துக்கொடுத்தார். வீரர்கள் குதிரைகளில் விரைந்த வண்ணம் எறி ஈட்டிகளை எரிவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அந்தகால கட்டத்தில் ஆங்கில படைகள் 250 யார்டு தூரத்தில் எரிவதை மங்கோலிய வீரர்கள் 400 யார்டு தூரத்திற்கு குறி தப்பாமல் எரிவார்கள். உலகில் இந்த மங்கோலிய வீரர்களுக்கு இணையான வீரம் அப்போது எங்கும் காணப்படவில்லை என சரித்திரம் சொல்கிறது. முதலில் தோல்வியுற்றது போல் மலைகளுக்குப் பின்னால் திரும்பி ஓடுபவர்கள் மீண்டும் புயலைப்போல் பன்மடங்காக அம்பெய்த வண்ணம் வருவார்கள். அவர்கள் வந்தால் எதிரிப்படை இருந்த இடம் துடைத்தெறியப்பட்டது போல் இருக்குமாம். போர் புரிவதை காதலித்துச் செய்தார்களாம்.
இவர்கள் பெரும்பாலும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்ய செல்வதால் போகுமிடமெல்லாம் உணவுக்கும், உடமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள். வெற்றி இல்லை என்றால் உணவில்லை அதனாலேயே மிகவும் கொடூரமாக போரிடுவார்கள். இவர்களின் காட்டுமிராண்டித் தனமான பழங்குடி பழக்கவழக்க போர்முறை, முரட்டுத்தனம், உளவுபார்க்கும் நூதனம் இவையெல்லாம் மிகவும் புதுமையாக இருந்தது அப்போது. இவரிடம் இருந்த ‘ஜெபி’ என்ற இராணுவ கமாண்டர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரை “தி ஏரோ” என்றும் புகழுரைத்தார்கள். ஜெங்கிஸ்கான் தன்னுடன் தைரியமாக போரிட்டு தோற்கும் எதிரியை மன்னித்து மங்கோலியப் படையில் சேர்த்துக் கொள்வார். ஆனால், தங்கள் பழங்குடியினரை அவமதிப்பவர்களையும், துரோகிகளையும் மன்னிக்காமல் உடனே தண்டனை கொடுப்பார். தான் செல்லும் நகரங்களை முன்னா லேயே உளவாளிகளை வைத்துக் கண்காணிப்பார். அவர்களுக்கு தேவைப்பட்ட பொருள்களை லஞ்சமாகக் கொடுப்பார். மங்கோலியர்கள் ஒரு இடத்தில் கால் வைத்தால் அது 100% வெற்றியாக வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். எதிரி க்கு நேரடியாக இரண்டே வாய்ப்புதான் கொடுப்பார். ஒன்று தன்னுடன் போரிட வேண்டும் அல்லது சரணடைந்து விடவேண்டும்

மங்கோலியர்கள் வரலாறு 3

இவர் ஒரு பகுதியை வெற்றி கொண்டால் அந்த செய்தி உடனே அடுத்துள்ள பகுதிகளுக்கு விரைவில் தெரியப்படுத்தி விடுவதில் குறியாக இருப்பார். ஒருவேளை ஏதாவது ஒரு எதிரி தன்னுடன் தைரியமாகப் போரிட்டால், இறுதியில் அவர்களை பொது மக்களின் முன்னிலையில் வைத்து கடுமையான முறையில் தண்டித்து பார்ப்பவருக்கு பயத்தை ஏற்படுத்துவார். நூற்றாண்டுகளுக்கும் மேலாக மலை சூழ்ந்த பகுதிகளுக்குள்ளேயே வாழ்ந்த ஒரு கூட்டத்தின் மனிதனிடத்திலிருந்து வந்த வீரம் கண்டு உலகம் இன்றளவும் வியக்கிறது. ஆனால், அது சிறு வயதிலிருந்து ஆத்திரத்தாலும், அவமானத்தினாலும் சமுதாயத்தின் மீது வந்த கோபம். நாடோடிக் கூட்டத்தின் தலைவனான தன் தந்தையைக் கொன்று, இளவயதிலேயே தன்னை அனாதையாக்கிய வேதனையின் வெளிப்பாடு. அந்த கோபத்தையும், வேதனையும் இறக்கி வைக்க அவர் தேர்ந்தெடுத்த இடம் அந்த மலைசூழ்ந்த பகுதியின் வெளிப்புறத்தில் பூமி எங்கும் பரவியிருந்தது.
மற்ற இராணுவங்கள் இரும்பாலான பீரங்கியை பயன்படுத்தி வந்த நேரத்தில் ஜெங்கிஸ்கான் பித்தளையாலான பீரங்கியை எந்த விதமான தட்பவெப்ப சூழ் நிலையிலும் பயன்படுத்தச்செய்தார். மங்கோலியர்கள் எந்த ஒரு நகரத்தில் நுழையும் முன் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் போல் நுழைவார்கள். நகரத்தின் உள்ளே இருக்கும் உளவாளிகளால் சரணடைந்து விடுவது நல்லது என்பதுபோல் ஆட்சியாளருக்கு அறிவுரை சொல்லப்படும். பெரும்பாலும் ஐரோப்பிய வைக்கிங்குகள் போல் கொள்ளையடித்து விட்டுத் திரும்பி விடுவார்கள். தன் ஆட்சியின் போது ஒன்றரை மில்லியன் பழங்குடியின மக்களுக்கும், தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட இரண்டு மில்லியன் மற்ற நாடோடிக் கூட்ட மக்களுக்கும் ஆட்சியாளராக இருந்தார். நீண்ட மேற்கத்திய தாக்குதலுக்குப் பிறகு, 1225 ல் மங்கோலியா திரும்பினார். பின் தனது கவனத்தை மீண்டும் வட சீனாவின் மீது திருப்பினார். ஏற்கனவே ஸி ஸியா மாகாணம் வெற்றி கொள்ளப்பட்ட போது ஒப்புக்கொண்ட ஆண்டு கப்பத் தொகையை ஸி ஸியா மன்னன் கட்ட மறுத்தான். மேலும் இம்முறைப் போரிட்டால் மங்கோலியர்கள் வெல்லமுடியாது என்ற கருத்தில் இருந்தான். ஜெங்கிஸ்கான் இந்த முறை எப்படியாவது ஸி ஸியாவை குறையில்லாமல் வெற்றி கொள்ள எண்ணினார். 180,000 வீரர்களுடன் கடுமையான குளிரில் உறைந்து போயிருந்த மஞ்சள் ஆற்றில் போரிட்டார். மிகுந்த உயிர் சேதம் ஏற்படுத்தி, பல நகரங்களை அழித்து வெற்றி பெற்றார். 1227 ல் ஒரு வேட்டையின் போது குதிரையிலிருந்து முறையில்லாமல் விழுந்ததில் பலத்த காயமுற்று சில நாட்களில் இறந்து போனார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறந்த இடத்திலல்லாமல் வேறு இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
தான் இறப்பதற்கு முன்பே தன் மகன்கள் குறிப்பாக சகடாய், ஜோச்சி இருவரும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்று எண்ணினார். இளைய மகன் தோல்யூ மிகச் சிறிய வயது அதனால் அவர் ஆட்சிக்கு உகந்தவர் அல்ல. பேரரசை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் கொடுத்து விடலாமா என்று கூட யோசித்தார். ஆரம்பத்திலேயே மிகவும் முரட்டுத்தனமுள்ள சகடாய் தான் எக்காரணம் கொண்டும் ஜோச்சிக்குக் கட்டுப்பட மாட்டேன் என்று கூறிவிட்டார். இறுதியில் தனக்குப் பின் சகடாய் தான் ஆள் வேண்டும் என்று முடிவெடுத்தார். ஜெங்கிஸ்கான் உயிரோடு இருக்கும் போதே ஜோச்சி இறந்து போனார். ஜெங்கிஸ்கான் தான் விஷம் வைத்துக் கொன்றார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜெங்கிஸ்கானின் இறப்பிற்குப் பிறகு, மங்கோலியர்கள் கூடி அடுத்த தலைவராக ஜெங்கிஸ்கானின் இரண்டாவது மகன் சகடாய் என்பவரைத் தேர்ந்தெடுத்தனர்.
சகடாய் புகாரா பகுதியில் சிலரின் ராஜதுரோகத்தைத் திறமையாக சமாளித்தார். ட்ரான்ஸாக்சியானாவில் ஜுமிலத் உல் முல்க் என்னும் முஸ்லீம் மந்திரியைத் தான் அமர்த்தி இருந்தார். இவர் காலத்தில் மசூதிகளையும், கல்லூரிகளையும் கட்டினார். தனித்திருந்த அல் மலிக் என்ற இடத்தை தலைநகரமாக ஆக்கி இருந்தார். 14 ஆண்டுகள் ஆட்சி செய்த இவர் கரகோரத்தில் இறந்து போன பிறகு, உடனடியாக இவர் மனைவி துராகினா ஆட்சிக்கு சில காலம் பொறுப்பேற்றார். சகடாயின் மகன் முடுகன், பமியன் படையெடுப்பின் போது இறந்து போனார். இன்னொரு மகன் பைதர், உறவினர் பூரியுடன் ஐரோப்பிய படையெடுப்பில் ஈடுபட்டார். மொகலாய மன்னர் பாபர் சகடாயின் வழிமுறையில் வந்தவரென்று ‘பாபர் நாமா’ வில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அதாவது சகடாய் மகன் முடுகன், முடுகன் மகன் யெ சுந்தவா கான், யெசுந்தவா கான் மகன் பரக்கான், பரக்கான் மகன் தவாகான், தவாகான் மகன் ஐசன்புகா கான், ஐசன்புகா கான் மகன் துக்ளக் திமீர் கான், துக் ளக் திமூர் கான் மகன் கிஸ்ர் க்வாஜாஹ் கான், கிஸ்ர் க்வாஜாஹ் கான் மகன் முஹம்மது கான், முஹம்மது கான் மகன் ஷேர்அலி ஆகுல்தீன், ஷேர் அலி ஆகு ல்தீனின் மகன் வயிஸ் கான், வயிஸ்கான் மகன் யூனுஸ் கான், யூனுஸ் கானின் மகன் பாபர் என்று)
வட சீனாவும், பெர்ஷியாவின் பகுதிகளும் மங்கோலிய ஆட்சியாளர்களின் குடும்ப பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. இன்னொரு சகோதரர் ஒகிடாய் கரகோரத்தை மங்கோலியர்களின் நவீன தலைநகரமாக்கினார். ஜெங்கிஸ்கானின் மூன்றாவது மகனான இவர் தந்தையுடன் பல படையெடுப்புகளில் கலந்து கொண்டார். 17 வயதில் ஜமுகா இராணுவத்திற்கு எதிராக தோல்வியுற்று படுகாயம் அடைந்த இவரை தந்தையின் சகோதரமுறை உறவினர் போரோகுலா காப்பாற்றினார். ஜெங்கிஸ்கான் இவருக்கு ஜலயிர், பெசுட், சுல்டுஸ், கோங்க்கடன் ஆகிய பழங்குடிப் பகுதியை நிர்வகிக்கக் கொடுத்தார். ஜெங்கிஸ்கானின் விருப்பப்படி ஜலயிரின் தலைவர் இல்லுகெய் ஓகிடாயின் ஆசிரியராக இருந்தார். ஓகிடாய் சகோதரர்களு டன் முதல்முறையாக ஜின் பேரரசை எதிர்த்து தனியாகப் போரிட்டார். ஓகிடாயும், சகடாயும் கிழக்கு பெர்ஷியாவில் ஒத்ரர் என்ற நகரத்தை ஐந்து மாதமாக முற்று கையிட்டார்கள். க்வாரிஸ்மிட் பேரரசுக்கு பொறுத்தமான ஒருவரை பொறுப்பாக்க இருந்த போது, சகடாயும்,ஜோச்சியும் அதற்கு கை கலப்பில் மோதிக் கொண்டார்கள். ஜெங்கிஸ்கான் ஓகிடாயை அதற்குப் பொறுப்பாக்கினார். ஓகிடாயும் தந்தையைப் போலவே இராணுவத்திலும், நிர்வாகத்திலும் திறமையாக இருந்தார். இளைய சகோதரர் தோல்யூ இறந்த போது மிகவும் துயரமடைந்தார். ஓகிடாய் நோய்வாய்ப்பட்ட போது ஷாமானிய வழக்கப்படி அவர் உயிரைக்காக்க தோல்யூ விஷம் அருந்தி மரணமடைந்தார். பின்னாளில் ஓகிடாய் மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆனார். ஓகிடாய்க்கு போரக்சின், டூரிஜின், முகா, ஜச்சின் என்ற மனைவிகளும், எண்ணற்ற சட்டபூர்வமில்லாத (வைப்பாட்டிகள்) மனைவிகளும், ஏழு மகன்களும் இருந்தார்கள்.
கரகோரம் நகரம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தது. 1253 ல் அங்கு வருகைதந்த ஒரு கிறிஸ்தவ துறவி (அவர் வில்லியமாகவோ அல்லது ருப்ருகிஸ் ஆகவோ இருக்கலாம்) கரகோரத்தில் நகரத்தின் சுவர்கள் பலமாக உயர்வாக அமைந்திருந்ததாகவும், செவ்வக வடிவத்தில் பெரிய அரண்மனையும், செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், அழகாக அமைக்கப்பட்ட தெருக்கள், பனிரெண்டு ஷாமானிஸ்ட் புனித ஸ்தலங்கள், இரண்டு மசூதிகள் மற்றும் நெஸ்டோரியன் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் இருந்ததாகக் கூறுகிறார் ஜெங்கிஸ்கான் கொள்ளையடிப்பதிலும், நகரங்களைத் தாக்கி தனது வீரத்தை பரப்புவதிலுமே வாழ்நாளை செலவழித்தார். ஆனால், ஒக்டாய் தலைநகரத்தை மையமாக்கி ஆட்சி அதிகாரத்தில் கவனம் செலுத்தினார். மேலும் சீனாவின் பகுதிகளையும் கொரியாவையும் வென்றார். ஜெங்கிஸ்கான் உயிரோடிருக்கும் போது மூத்த மகன் ஜோச்சியை ஐரோப்பாவை வென்றெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், ஜுச்சி ஜெங்கிஸ்கானுக்கு முன்பே மரணமடைந்து விட்டார். ஒகிடாய் தந்தையின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக ஜோச்சியின் மகன் படுவை மேற்கு நோக்கி சென்று ஐரோப்பாவை வெல்ல கேட்டுக் கொண்டார். படு 1236ல் வடக்காகச்சென்று ரஷ்யாவில் வோல்கா என்ற இடத்தை வென்றார்.

மங்கோலியர்கள் வரலாறு 4

1237 ல் சென்ற மங்கோலியப் படைகள் ரஷ்யாவில் 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தின. ரஷ்யர்கள் மங்கோலியர்களை தங்க நாடோடிகள் (ZOLOTAYA ORDA-GOLDEN HORDE) என்று அழைத்தனர். ஏனென்றால், படு தங்குவதற்கு தங்க கூடாரத்தைத் தான் பயன்படுத்துவார். பெரும்பாலான ரஷ்ய நகரங்களைக் கொள்ளை அடித்தார்கள். இந்த தோல்வியை ரஷ்யா சரித்திரம், ‘இறந்தவர்களுக்காக அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அளிக்கவில்லை’ என்று கூறுகிறது. மங்கோலியர்கள் சேற்றில் குதிரையில் சண்டையிட மிகவும் சிரமப்பட்டார்கள். அதனால் வலுக்கட்டாயமாக பின்வாங்கினர். மீண்டும் குளிர் காலத்தில் போரிட வந்தார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்த கீவ் நகரின் சுவர்கள் மங்கோலியர்களால் இடித்து நொறுக்கப்பட்டது. இரக்கமில்லாமல் மக்கள் கொல்லப்பட்டனர். 1238 ல் மாஸ்கோவையும், 1240 ல் கீவ் நகரத்தையும் கைப்பற்றினார்கள். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் மங்கோலியர்கள் ரஷ்யாவை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, தென்பகுதி நோக்கி சென்றனர். இதற்கிடையில் மங்கோலியர்கள் என்னும் இஸ்லாமிய இராணுவம் கிறிஸ்தவ ரஷ்யாவை வென்று விட்டது என்று ஐரோப்பியர்களுக்கு செய்தி எட்டியது. ஐரோப்பிய ஆட்சியாளர்கள் வரும் ஆபத்தை எதிர்கொள்ள தயாராகினார்கள். மங்கோலியர்கள் ஒரு ஆங்கில தூதுவரை ஹங்கேரியின் மன்னர் பேலாவிடம் அனுப்பி சரணடைய வேண்டினார்கள். அவர் தான் ஒரு நாட்டின் மன்னர் சாதாரணமாக எங்கிருந்தோ வரும் நாடோடிக் கொள்ளைக் கூட்டத்துடன் சரணடைவதா முடியாது என்று மறுத்து விடுகிறார். ஒரு நாடோடி இராணுவப்படை 1241 ல் போலந்தை நோக்கி முன்னேறியது. போலந்தும் ஜெர்மனியும் கூட்டு சேர்ந்து லெக்னிகா என்ற இடத்தில் மங்கோலியர்களை எதிர்த்து போரிட்டுத் தோற்றனர். அதே நேரத்தில் இன்னொரு நாடோடி இராணுவம் மொஹ்லி என்ற இடத்தில் ஹங்கேரியை வெற்றி கொண்டது. முதலில் 70,000 கிறி ஸ்தவ வீரர்களும், அடுத்து 40,000 வீரர்களும் ஐரோப்பிய தரப்பில் கொல்லப்பட்டனர். அந்த கோடை காலத்தை மங்கோலியப் படைகள் ஹங்கேரியின் திறந்த வெளிகளில் கழித்தது. அவர்களின் புல் நிறைந்த பூமியின் வாழ்க்கைச் சூழலுக்கு அது ஒத்துவரவில்லை என்றாலும், வெற்றி அவர்களை ஏற்றுக்கொள்ள வைத் தது. அந்த வெற்றி மேலும் ஐரோப்பிய நகரங்களை வெல்ல ஏதுவாக இருந்தது. மங்கோலிய நாடோடிகளின் படை அப்போது ஐரோப்பாவை பயத்தில் ஆழ்த்தியது. அந்த வருட டிசம்பரில் மாவீரன் ஒகிடாய் மரணமடைந்து விட்டதாகவும், உடனே வேறு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி திரும்பிவர செய்திவந்தது. படுவும் அடுத்த நிலை பெரிய மனிதர்களும் கலந்து கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஹங்கேரியை விட்டு பழங்குடி இடமான வோல்காவுக்கு திரும்பினார்கள்.
ரஷ்யாவில் நிறைய சிறிய மன்னர்கள் சிறிய பிரதேசங்களை ஆண்டுவந்தவர்கள் தங்ககூடார மாவீரன் ஒக்டாயிக்கு மிகுந்த மரியாதையும், ஆண்டு கப்பமும் செலுத்தி வந்தார்கள். பின் படு ஆட்சிக்கு வந்து வோல்காவிலேயே ஒரு பகுதியை தலைநகராக்கி தன் பெயர் வருமாறு சராய்படு என்று மாற்றி ஆட்சி செய்து வந்தார். இவருக்குப் பிறகு, இவரின் சகோதரர் பெர்கி 1255 ல் ஆட்சிக்கு வந்தார். பெர் கி தன் பழங்குடியின மக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைத் தழுவச் செய் தார். நவீன வோல்காக்ராடுக்கு கிழக்கில் சராய் பெர்கி என்ற நகரத்தை உருவாக்கி தலைநகராக்கிக் கொண்டார். அங்கு நகர் முழுதும் மசூதிகளையும், பொதுக் கழிப்பிடங்கள் போன்றவற்றைக் கட்டினார். 600,000 மக்கள் அங்கு வசித்தனர். 1395 ல் தைமூரியர்கள் அழிக்கும் வரை அந்நகர் மிகவும் சிறப்பாக இருந்தது. இடையில் படுவிடமிருந்து ஆட்சி வாரிசு பிரச்சினையால் இறந்துபோன ஓகிடாயின் விதவை மனைவி டோரிகினி கதுனிடம் வந்து நான்கு ஆண்டுகள் அவர் ஆண்டார். ஜெங்கிஸ்கான் மெர்கிட் பழங்குடியை வென்றபோது, அதன் தலைவர் குடுவின் மனைவி தான் டோரிகினி ஹதுன். ஓகிடாய்க்கு முதல் மனைவி மூலம் குழந்தை இல்லாததால் ஜெங்கிஸ்கான் டோரிஜினி ஹதுனை ஓகிடாய்க்கு வழங்கினார். ஓகிடாய் மூலம் டோரிகினி ஐந்து மகன்கள் பெற்றார். விரைவில் ஓகிடாயின் மற்ற மனைவிகளை பின் தள்ளி முன்னுக்கு வந்தார். வட சீனாவில் வரி வசூலிக்க அப்த் உர் ரஹ்மானை கணவரிடம் பரிந்துரைத்தார். ஓகிடாயின் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்தும், நீக்கியும் நடவடிக்கை எடுத்தார். பெர்ஷி யாவைச் சேர்ந்த ஷியா பிரிவு ஃபாத்திமா என்பவரை அரண்மனை அதிகாரத்தில் வைத்தார். அவர் அடுத்து தன் மகன் கூயூக்குக்கு பதவி கிடைக்கும் வண்ணம் திட்டமிட்டு செயல்பட்டார். டோரிகினி ஆண்ட காலத்தில் பல வெளிநாட்டு மன்னர்கள் தலைநகர் கரகோரத்திற்கு வருகை தந்தார்கள். அதில் துருக்கியிலிருந்து செல்ஜுக் சுல்தான், பாக்தாதிலிருந்து அப்பாஸிட் கலீஃபா, டெல்லி சுல்தான் அலாவுதீன் மசூத், ஜார்ஜியாவிலிருந்து டேவிட் உலு, டேவிட் நரின், மிக உயரிய விருந்தினராக அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கியின் தந்தை விளாடிமீரின் இளவரசர் யரோஸ்லவ் விவோலோடோவிச் போன்றோர் ஆவார்கள். இளவரசர் டோரிகினியுடன் மது அருந்திய பிறகு மர்மமான முறையில் இறந்து போனார். இடையில் டோரிகினியிடமிருந்து ஆட்சியை மீட்க ஜெங்கிஸ்கானின் சகோதரர் தெமூஜி தன் ஆதரவாளர்களுடன் திரண்டு வர அவர்களை கூயுக் சந்தித்து சமாதானப் படுத்தினார். ஐரோப்பிய தாக்குதலில் இருந்த படுவும் வர தாமதமாகியது. இறுதியாக டோரிகினி மகன் கூயூக்கை ஆட்சியில் அமர்த்தினார். கூயூக் இளமையில் ஜெங் கிஸ்கான், ஓகிடாயுடன் இராணுவ அனுபவம் பெற்றிருக்கிறார். மங்கோலிய ஜெனரல் டங்குட்டுடன் புக்சியன் வன்னாவில் போரிட்டிருக்கிறார். தோல்யூ இறந்த பிறகு, அவர் மனைவி சொர்கக்டனியை கூயூக்கை மணந்து கொள்ள ஓகிடாய் வேண்டினார். ஆனால், தோல்யூவின் மனைவி மறுத்து விட்டார். ரய்ஸான் என்ற இடத்தின் படையெடுப்பின் போது, உறவினர் படுவை தரக்குறைவாக ‘அம்பராத்தூளியில் கட்டப்பட்ட வயதான பெண்மணி’ என்று கூறினார். இச்செய்தி ஓகிடாய்க்கு எட்ட அவர் கடுங்கோபத்துடன் ‘நீ இன்னும் ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட  பிடிக்கவில்லை. படுவை சாடுவதா?’ என்று கடிந்து கொண்டார். கூயூக் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தாய்க்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. அதிகாரத்திலிருந்த ஃபாத்திமா அதிகமான சொத்தை கொள்ளை அடித்து விட்டதாக கூயூக்கின் சகோதரர் கோடன் புகார் எழுப்பினார். சில நாட்களில் கோடன் இறந்து விட கூயூக் ஃபாத்திமாவை தூக்கிலிட உத்தரவிட்டார். தாயார் டோரிகினி, ஃபாத்திமாவைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றார். இறுதியில் உடலின் அனைத்து துவாரங்களும் தைக்கப்பட்டு, நீரில் மூழ்கச் செய்து ஃபாத்திமா சாகடிக்கப்பட்டார். வரி வசூலித்த அப்த் உர் ரஹ்மானும் தூக்கிலிடப்பட்டார். அடுத்த சில மாதங்களில் டோரிகினி ஹதுன் விளங்கமுடியாத காரணத்தால் மரணமடைந்தார். கூயூக்கின் தலைமையை படு ஏற்கவில்லை. அவரைத் தன்னை வந்து சந்திக்கும்படி கூயூக் கேட்க, பெரும் படையுடன் படு சந்திக்க வந்தார். கூயூக்குக்கு பெரும் உறவினர் கூட்டம் இருந்தது. பெரும்பாலும் அனைவரும் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். கூயூக் திறமையாகவும், நேர்மை விரும்பியாகவும் இருந்தார். கூயூக் சீனாவின் சின்ஜியாங்க் பிராந்தியத்திலிருந்து திரும்பும் வழியில் இறந்து போனார். ஆட்சிசெய்த இரண்டே ஆண்டுகளில் 1246ல் இறந்து போனார்.
மீண்டும் ஆட்சி கூயூக்கின் விதவை மனைவி ஓகுல் கைமிஷ் வசம் போனது. ஓகுல் மெர்கிட் என்னும் பழங்குடியைச் சேர்ந்தவள். மெர்கிட் புரட்சியை ஜெங்கிஸ்கான் அடக்கிய போது, அவளை கூயூக்குக்கு கொடுத்தார். கூயூக்குடன் அவளுக்கு கோஜா, நகூ என்று இரண்டு மகன்கள். கூயூக்கின் தலைமை அதிகாரிகள் சின்கை, கடக், பல ஆகியோர் ஓகுல் ஆள்வதற்கு ஆதரவளித்தார்கள். ஆனால் உயர் பதவியில் இருந்தவர்கள் முறையாக ஆட்சிக்கு அதிகாரம் உள்ளவர் ஜெங்கிஸ்கானின் பேரர் அதாவது மூன்றாவது மகன் துல்யூவின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த மூங்கீ தான் என்றார்கள். ஓகுல் தனக்கு முதல் கணவன் மூலம் பிறந்த ஷிரீமூன் அல்லது கூயூக்குக்குப் பிறந்த கோஜா தான் ஆள் வேண்டும் என்றார். ஆனால் ஒருபுறம் மூங்கி தேர்ந்தெடுக்கப்பட, ஓகுல் கைமிஷ் கைது செய்யப்பட்டு அரண்மனையில் நிர்வாணப்படுத்தப்பட்டார். பின் தடித்த கம்பளித்துணியால் சுருட்டப்பட்டு ஆற்றில் வீசிக் கொல்லப்பட்டார். மூங்கிக்கு குடுக்யூ என்ற மனைவி மூலம் பல்டு, உரெண்டஷ் என்ற மகன்களும், பைய்லூன் என்ற மகளும் இருந்தார்கள். ஓகுல் கோயிமிஷ் என்ற மனைவி மூலம் ஷிரின், பிச்சிகே என்ற மகள்களும், சுபெய் என்ற இளம் மனைவியும், வைப்பாட்டிகளாக ஷிரேகி, அசுடை ஆகியோர் இருந்தனர்.

மங்கோலியர்கள் வரலாறு 5

மூங்கி (மோங்கே என்றும் அழைக்கப்பட்டார்) தன் இரு சகோதரர்கள் உதவியுடன் கிழக்கிலும், மேற்கிலும் வடசீனாவின் பகுதிகள், ரஷ்யா, பெர்ஷியா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளை வென்றார். ஜெங்கிஸ்கானின் மூத்த மகன் தோல்யூவுக்குப் பிறந்தவர். ஓகிடாயின் குழந்தை இல்லாத மனைவியான அங்க்யூ இவரை வளர்த்தார். ஓகிடாய் பெர்ஷிய போதகர் இதி தன் முஹம்மதை மூங்கிக்கு ஆசிரியராக அமர்த்தினார். ஜின் பேரரசை எதிர்த்து போரிட்ட போது முதல்முறை யாக ஓகிடாய் மற்றும் தந்தை தோல்யூவுடன் கலந்து கொண்டார். மூங்கி        1252 ல் மூங்கி கிழக்கில் வென்ற சில பகுதிகளுக்கு தன் சகோதரர் குப்ளாய்கானை ஆட்சியாளராக்கினார். பின் 1255 ல் இன்னொரு சகோதரர் ஹுலகுகானை மத்திய ஆசியாவின் இஸ்லாமிய நாடுகளை வெல்லச் சொன்னார். குப்ளாய்கான் மேற்கு சீனாவில் ஷெஸ்வான் மற்றும் யூன்னன் பகுதிகளை வென்று முன்னேறிக் கொண்டிருக்கும் போது, மூங்கி இறந்து விட்டதாக தகவல் வர திரும்பிவிடுகிறார். இடைவிடாத வயிற்றுப் போக்கால் மூங்கி 1259 ல் இறந்து போனார். அனைவரும் கூடி குப்ளாய்கானையே மன்னராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், கரகோரத்தில் கடைசி சகோதரர் அரிக் போகி தான் மன்னராக வேண்டும் என்று உரிமை கோருகிறார்.
ஒரு வழியாக 1264 ல் குப்ளாய்கான் சகோதரரை வென்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். குப்ளாய்கான் தோல்யூவின் நான்காவது மகனாவார். இவரது தர்பாரில் உயர் அதிகாரிகளாக 30 க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இருந்தார்கள். பனிரெண்டு மாகாணமாக இருந்த குப்ளாய்கானின் பேரரசில் எட்டு மாகாணங்களில் முஸ்லீம் கவர்னர்கள் இருந்தார்கள். இஸ்லாமிய மதபோதகர்களையும், விஞ்ஞானிகளையும் பெரிதும் மதித்தார். ஜமால் அத் தீன் என்பவர் வானாராய்ச்சிக்காக ஏழு கருவிகளைக் கண்டு பிடித்தார். இஸ்லாமிய மருத்துவர்களைக் கொண்டு சீனாவில் உயர்தர மருத்துவமனைகள் அமைத்தார். ஆராய்ச்சியாளர் இப்ன் சினாவின் படைப்புகளை சீன மொழியில் மொழி பெயர்த்தார். இஸ்லாமிய கணிதவியலாளர்கள் ஈக்லூடியன் ஜியாமெட்ரி, ஸ்பெரிகல் ட்ரைகோனோமெட்ரி, அரபிய எண்களை சீனாவில் அறிமுகப்படுத்தினார். குப்ளாய்கான் மேலும் இஸ்லாமிய பொறியாளர்கள் இஸ்மாயில், அல் அல் தீன் ஆகியோரைக் கொண்டு கல்லெறிந்து கோட்டைச் சுவர்களை சிதைக்கும் இயந்திரத்தையும் செய்யச் சொன்னார். தற்போது முழுகவனத்தையும் சீனாவின் மீது திருப்பினார். தலைநகர் கரகோரத்திலிருந்து தன் பாட்டனார் 1215 ல் சீரழிக்கப்பட்டிருந்த பெய்ஜிங்க் நகரத்தை வென்றார். தானே கவனம் செலுத்தி பெய்ஜிங்க் நகரத்தை சீரமைத்தார். 24 மைல் நீளத்திலும், 50 அடி உயரத்திலும் நகரைச்சுற்றி பிரமாண்டமான சுவர் எழுப்பினார். அந் நகரத்திற்கு “கான் பாலிக்” (கான்களின் நகரம்) என்று பெயரிட்டார். அந் நகரம் ஐரோப்பியர்கள் மத்தியிலும் மிகவும் புகழப்பட்டது. அவர்கள் சற்று பெயர் மாற்றி கம்பலூக் (CAMB ALUC) என்று அழைத்தனர்.
குப்ளாய்கான் இந்த நகரத்தை மையமாக வைத்து தான் ஸங்க் பேரரசை வெற்றி கொண்டார். 1271 ல் தாங்கள் கொள்ளையர்களாக அங்கு பிரவேசித்தவர்கள் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் உண்மையாக அங்கு ஒரு சீனப்பேரரசை நிறுவினார் அதே ஆண்டு அந்த பேரரசுக்கு “தா யூவன்” (YUAN DYNASTY) என்று பெயர் சூட்டினார். சீனாவில் மூதாதையர்கள் சந்ததியினரை பெரிதும் மதிப்பார்கள் அதை மனதில் கொண்டு தனது பாட்டனார் ஜெங்கிஸ்கானுக்கு மரியாதை செய்யும் விதத்தில் “ட் ஆய் ட்சூ” (GRAND PROGENITOR- மதிப்புமிக்க மூத்த சந்ததியினர்) என்று அழைத்தார். குப்ளாய்கான் 1276 ல் ஹாங்க்ஸூவில் ஸங்க் பேரரசைக் கைப்பற்றி அதன் இளம் பேரரசரையும், அவர் தாயாரையும் மரியாதையுடன் நடத்தினார். 1279 ல் மங்கோலியர்களுக்கு சீனாவில் எதிர்ப்பில்லாமல் போனது. சீனச் சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி முதல்முதலாக வெளியில் இருந்து சீனா வந்து ஆட்சி செய்தவர்கள் யூவன் பேரரசு மட்டுமே என்று கூறுகிறார்கள். ஆனால், குப்ளாய்கான் தான் என்றுமே வெளியிலிருந்து வந்து ஆட்சிசெய்பவர் என தோன்றாமல் இருந்தார். சீனாவின் நிர்வாகத்தையே தன் ஆட்சியிலும் கடைபிடித்தார். ஒரே ஒரு வேற்றுமை பணியாளர்களாக வெளிநாட்டினரை நியமித்தார். இடையில் மின்னல்போல் பிரகாசமாக வந்துசென்றவர் மார்கோபோலோ ஆகும்.
குப்ளாய்கான் இதற்கு முன்னிருந்த சீன ஆட்சியாளர்களை விட சிறப்பான முறையில் சீனப் பிரதேசங்களை ஆட்சி செய்தார். மங்கோலியா, திபெத், மன்சூரியா, கொரியா மற்றும் தென் சீனக் கடல் பகுதிகள் அனைத்தையும் தன் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். இவரின் ஆளுமையிலிருந்து தப்பியது ஜப்பான் மட்டும்தான். அதுகூட 1274 ல் மாபெரும் அழிவிற்குண்டானது, பின்பு மீண்டும் 1281 ல் மார்கோபோலோவால் மீண்டும் அழிவிற்குண்டானது. குப்ளாய்கானை ஜெங்கிஸ்கான் போல் கொள்ளையடிக்க சென்ற நாடோடிக் கூட்டத்தலைவன் போலல்லாமல் சரித்திரம் “தி க்ரேட் கான்” என்று புகழுரைக்கிறது. இவர் தன் பழங்குடியின மக்களை வென்ற இடத்தில் குடியமர்த்தினார். வென்ற இடங்களை சுதந்திரப் பிரதேசமாக அறிவித்தார். குப்ளாய்கானின் பேரரசு மிகப் பெரியது. சகோதரர் மகன்கள் படு மற்றும் பெர்கேவை ரஷ்யாவின் தங்கநாடோடிகள் நகரத்தின் அட்சியாளர்களாக்கி, தன் சொந்த சகோதரர் ஹுலகுவை பெர்ஷியாவிலும், மெஸோபொடாமியாவில் மங்கோலியர் பேரரசை நிறுவி ஆட்சியாளராக்கினார். மங்கோலியர்கள் ஏறக்குறைய பூமியின் 20% பகுதியையும், 100 மில்லியன்கள் மக்களையும் அப்போது ஆண்டார்கள்.
குப்ளாய்கான் முதல் மனைவி டெகுலென் சில நாட்களிலேயே இறந்து போனார். அடுத்து சபி என்பவரை மணந்தார். சபியும் இறந்து போக அவர் முன் மொழிந்து விட்டு போன அவர் உறவினப் பெண் நம்பூய்யை மணந்து கொண்டார். குப்ளாய் கானுக்கு டோர்ஜி, ஸென்ஜின், மங்கலா, நொமுகான், குங்குஜில், அய்ச்சி, சகுல் கச்சி, குகுச்சு, டோகன், குலன் தெமுர், சேவர், குதுக் பெகி ஆகிய பிள்ளைகள் இருந்தார்கள்.
குப்ளாய்கானுக்கு அடுத்ததாக ஹுலகுகான் ஆட்சிக்கு வந்தார். இவரும் தோல்யூ, சொர்கக்டனி பெகி தம்பதிகளின் மகனாவார். சொர்கக்டனி பெகிக்குப் பிறந்த அனைத்து மகன்களும் நாடாண்டார்கள். இவர் நொஸ்டோரியன் கிறிஸ்தவ நெறி முறையைச் சேர்ந்தவள். ஹுலகுகானும் கிறிஸ்தவர்களிடத்தில் நட்பாக இருந்தார். ஹுலகுகானின் விருப்பமான மனைவி டோகுஸ் கதுனும் கிறிஸ்தவராக இருந்தார். இறப்பதற்கு முன் மனைவியின் விருப்படி ஹுலகுகான் புத்தமதத்திற்கு மாறியதாகச் சொல்லப்படுகிறது. ஹுலகுவுக்கு அபகா கான், டெகுடெர் அஹ்மத், டரகாய் என்று மூன்று மகன்கள் இருந்தார்கள். மூங்கி இவரை தென்மேற்கு ஆசியாவின் முஸ்லீம் பகுதிகளை வெல்ல அனுப்பினார்.
ஹுலகு 1256 ல் அமுதர்யா ஆற்றைக்கடந்து இஸ்லாமிய பெர்ஷியாவில் மங்கோலிய பேரரசை நிறுவ தொடங்கினார். அப்போது அந்த பகுதி பல அரசியல் கொலைகளுக்கு ஆளாகி இருந்தது. அதற்கு காரணமாய் இருந்த ‘இஸ்மாயிலி’ என்ற அமைப்பு ஏறக்குறைய மங்கோலியர்களின் நடைமுறை முறைக்கு ஒத்து போனதாய் இருந்தது. ஹுலகுவும் ஒவ்வொரு கோட்டைகளாக கொலைகளின் மூலம் கைப்பற்றத் தொடங்கினார். 1257 ல் மேலும், மேற்கு நோக்கி வளமான பகுதியை நோக்கி முன்னேறினார். ஹுலகுவும், அவரின் நாடோடிப் படையும் வெளிப்படையில் மட்டும் இஸ்லாமின் மையமாகத் தோன்றிய கலீஃபாவின் ஆட்சிக்கு கீழுள்ள மேஸோபொடாமியாவை நோக்கி நகர்ந்தன. அப்போதைய பாக்தாதின் கலீஃபா அல் முஸ்தாஸிம் 1258 ல் மங்கோலியர்களுக்கு எதிராக படையை அனுப்பினார். ஹுலகுவால் முஸ்லீம்படை அடக்கப்பட்டு, கலீஃபாவை தன் முன்னே வந்து சரணடைந்து நகரத்தின் சுவர்களை இடிக்கச்சொன்னார். கலீஃபா அல் முஸ்தாஸிம் மறுத்துவிட, ஹுலகு பாக்தாதை வெற்றிகொண்டு, நகரை சின்னாபின்னப்படுத்தினார். ஏறக்குறைய 800,000 மக்களைக் கொன்றார். இது சுன்னி பிரிவு முஸ்லீம்களிடத்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக மிகவும் பயத்தை விளைவித்தது. மங்கோலியப் படைகள் பல கோட்டைகளை நகரங்களை அழித்தனர். கலீஃபாவையும் அவர் குடும்பவாரிசுகளையும் கொன்றனர். இஸ்லாமிய வரலாற்றில் மறக்கமுடியாத அழிவு. பல கலை ஆவணங்கள், அறிவுக் களஞ்சியங்களின் மதிப்பறியாமல் தீக்கிரையாக்கப்பட்டன. வரலாறு இஸ்லாமியர்கள் மீதான மங்கோலியர்களின் தாக்குதலை பதிவு செய்து வைத்திருக்கிறது. நாற்பது நாட்கள் இடைவெளியே விடாமல் மக்களைக் கொன்றும், மசூதிகள், கட்டிடங்களை இடித்தும் எரித்தும் நாசப்படுத்தினார்கள். இந்த பாக்தாதின் தாக்குதல் பற்றி இமாம் இப்ன் கதீர் அவர்கள் விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். ஷியா பிரிவைச் சேர்ந்த இப்ன் அல் கமி என்பவன் கலீஃபா அல் முஸ்தகீமுக்கு சமாதானமாகப் போவதாக எண்ணும் வகையில் பரிசுப் பொருள்களை அனுப்புமாறு தந்திரமான தகவலுடன் ஹுலகுவுக்கு அறிவுரை சொன்னான். பின்பு கலீஃபா தன் முன்னே கொண்டு வரப்பட்ட போது மண்டியிட்டு தலை குனிந்து போகும்படி ஹுலகு செய்தார். செழிப்பான பாக்தாத் நகரம் சின்னாபின்னமாகியது. அந்தகால கட்டத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் இப்ன் அல் அதிர் என்பவர், “ பாக்தாதின் கொடுமைகளால் நான் பல நாட்கள் மன்நிலை பாதிக்கப்பட்டிருந்தேன். இந்தக் கொடுமைகளுக்கு முன்பே என் தாய் என்னைப் பெற்று நான் மரணித்திருக்கக்கூடாதா என்று நினைத்தேன். இதற்கு முன் ஆதமின் சந்ததிகள் இது மாதிரி ஒரு மனித வேதனையைக் கண்டதில்லை என்றால் அது உண்மை. பின்னால் வரப்போகும் தஜ்ஜால் கூட தன்னைப் பின்பற்றுபவர்களை விட்டுவிடுவான். வெறும் ஒரு ஆண்டுகாலத்தில் எவ்வளவு பேரழிவு ஏற்படுத்த முடியுமோ, எப்படியெல்லாம் அழகைச் சிதைக்க முடியுமோ, குணத்தாலும், நாகரீகத்தாலும் சிறந்திருந்த பெருவாரியான மக்களை எப்படியெல்லாம் கொல்ல முடியுமோ அத்தனையையும் செய்தார்கள். அவர்கள் அங்கிருந்த இரவுகளை இனி யாரும் இந்த உலகில் சந்தித்திருக்க மாட்டார்கள். முஸ்லீம்களும், இஸ்லாமும் சற்று இயங்காமல் போனது” என்று குறிப்பிட்டிருக்கிறார். பாக்தாதின் புகழ்பெற்ற மத்திய நூலகத்தில் இருந்த பௌதீகம், விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், தத்து வம் சம்பந்தமான ஒப்பற்ற களஞ்சியங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. டைக்ரீஸ் நதியின் நீர் பல நாட்களுக்கு கருநிறத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தப்பிக்க முயன்ற பொது மக்களைக் கூட விடாமல் கொன்று குவித்தார்கள் ஹுலகு வின் இராணுவத்தினர். எப்படி அழைப்பது என்று சொல்லிக் கொடுப்பதற்காகவே ஆயிரக்கணக்கான வட சீனா பொறியாளர்கள் ஹுலகுவுடன் மத்திய ஆசியா போருக்குச் சென்றார்களாம்.

மங்கோலியர்கள் வரலாறு 6

ஒட்டு மொத்த உலகுக்கும் மங்கோலியர்கள் என்றாலே கொடுமையாளர்கள் என்ற எண்ணம் தான் வரும். சிலைகளையும், நட்சத்திரங்களையும் வணங்கியவர்கள். மஞ்சள் நிறத்தவராக அறியப்பட்ட இவர்கள் மிருகங்களுக்கு காணிக்கை செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால் வியப்பு அல்லாஹ் இந்த சந்ததியினருக்கு இஸ்லாமில் நுழையும் வாய்ப்பை அருளினான். அடுத்த ஐம்பது ஆண்டுகளில் பெரும்பாலான மங்கோலியர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாத்திற்காக பல நன்மைகளைச் செய்தார்கள். இவர்களால் அழிக்கப்பட்ட கலாச்சாரம், பண்பாடுகள் முஸ்லீம் பிரதேசம் மட்டும் அல்லாது மங்கோலியா வரை வளர்க்கப்பட்டது. தங்கள் கரங்களால் சேதப்படுத்தியதை தாங்களே புணரமைத்தார்கள்.
1259 ல் ஹுலகுவால் அலிப்போ மற்றும் டமாஸ்கஸ் நகரம் கைப்பற்றப்பட்டது. இதனால் தென்கடற்கரைப் பகுதியில் எகிப்தின் வழி அவர்களுக்கு திறக்கப்பட்டது. 1260 ல் எகிப்தின் மம்லுக் சுல்தானின் ஜெனரல் ஒருவரால் பைபர்களால் நாஸரெத் நகரத்திற்கருகில் அய்ன் ஜாலூத் என்ற இடத்தில் எதிர்கொள்ளப்பட்டது. மிகக்கடுமையான உலகப்போர்களில் ஒன்றான இதில் பைபர்கள் மங்கோலியர்களை வென்றார்கள். மங்கோலியர்கள் அய்ன் ஜாலூத்தில் மம்லூக் என்னும் சாதாரண அடிமைப்படைகளிடம் தோற்றார்கள். பைபர் என்னும் எகிப்தின் இரா ணுவக் கமாண்டரை சில ஆண்டுகளுக்கு முன் தான் மங்கோலியர்கள் கைது செய்து அடிமைச் சந்தையில் விற்றிருந்தார்கள். அவர் தன் திறமையால் எகிப்து இராணுவத்தில் உயர்பதவியில் இருந்து இன்று அதே மங்கோலியர்களை எதிர்த்தார். 50 ஆண்டுகளான போர்களில் முதல் முறையாக ஜெங்கிஸ்கானின் வம்சம் தோல்வியுற்றது. அய்ன் ஜாலூத் தோல்வி மங்கோலியர்களின் அதிகாரத்தை மேலும் வளரவிடாமல் தடுத்தது. பாலஸ்தீனமும், சிரியாவும் எகிப்தின் மம்லூக்குக ளின் பேரரசுடனே இருக்கவும், மெஸோபோடாமியாவும், பெர்ஷியாவும் மங்கோலிய பேரரசுடன் இருந்தது.
அய்ன் ஜாலூத் தோல்விக்குப் பிறகு, ஹுலகுவும், அவர் சந்ததியினரும் கருங்கடலின் கிழக்கே வாணிப வழியான தப்ரிஸ் என்ற இடத்தை தலைநகராக்கிக் கொண்டார்கள். ஹுலகு மம்லூக்குகளிடமிருந்து சிரியாவையும், பாலஸ்தீனத்தையும் கைப்பற்ற எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், பேரரசின் மேற்கு எல்லையாக யூப்ரடிஸ் நதிக்கு மேல் முன்னேற முடியவில்லை. மேலும் தீவிர இஸ்லாமியராக இருந்த படுகானின் சகோதரர் பெர்கிகான், ஹுலகு பாக்தாதின் மீது காட்டிய கொடுமை பொறுக்க முடியாமல் மம்லூக்குகளுடன் இணைந்து ஹுலகுவின் பகுதிகளில் கலவரம் செய்தார். கிழக்கில் இந்துஸும், அமுதர்யா விலிருந்து கீழ் வடக்கில் இந்தியப் பெருங்கடல் வரை கான்களின் பேரரசு இருந்தது. ஹுலகுகான் மரணமடைந்து ஷஹி தீவில் அடக்கம் செய்யப்பட்டார். தார். பெர்ஷியாவில் சிறிய ஆட்சியாளர்களின் வெற்றியாலும், மத்திய ஆசியாவின் மலைப்பகுதியிலிருந்து கிளம்பிய இன்னொரு கூட்டத்தினரின் வருகையாலும், ஜெங்கிஸ்கான் என்னும் தனி மனிதனின் சந்ததி முடிவுக்கு வந்தது. சீனாவிலும் 1368 ல் யூவன் பேரரசு முடிவுக்கு வந்து மிங்க் ஆட்சி துவங்கியது. 1383 ல் தைமூரியர்கள் வடக்கு பெர்ஷியாவில் நுழைந்தனர். ரஷ்யாவிலும் அடுத்த கால்நூற்றாண்டுகளில் தங்க நாடோடிகளின் ஆட்சி சரிவை நோக்கி நகர்ந்தது. 1380 ல் மாஸ்கோவின் இளவரசர் குலிகோவோ என்ற இடத்தில் தோற்கடித்தனர். 1395 ல் தைமூரியர்கள் சராய் பெர்கே நகரை அழித்தனர். ரஷ்ய சரித்திரத்தில் டடார்கள் என மங்கோலியர்கள் அழைக்கப்பட்டனர். ரஷ்யாவின் அதிகாரத்தில் போட்டியிட்ட ஒரே இனம் மங்கோலிய இனம் மட்டுமே. மங்கோலியாவின் உலான்பாடர் நகரில் உள்ள ஜெங்கிஸ்கானின் குதிரையில் வீற்றிருப்பது போன்ற சிலை மிகவும் உயரமானது. கீழிருந்து இயந்திரத்தில் (லிப்ட்) சென்று பின்பு கழுத்துப் பகுதியிலிருந்து ஏணியில் செல்ல வேண்டும்.
சரித்திரத்தில் மிக குறுகிய காலத்தில் பிரமாண்ட வெற்றி பெற்று வெகு விரைவில் அதிகாரம் இழந்தது மங்கோலியர்கள் தான். மங்கோலியர்களின் வெற்றி இணையற்ற திறமையால் பெற்றது. ஜெங்கிஸ்கானின் கல்வியறிவில்லாத காலத்திலிருந்து வந்த இவர்கள் பின்னாளில் துருக்கியர்களின் எழுத்தை பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பழக்கப்படுத்திக் கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட மதமும் ஷாமானிஸம் (ஷாமானிஸக் கொள்கையானது இயற்கையை வணங்குவதாகும்) என்ற கொள்கையைக் கொண்டது. மங்கோலியர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதுவது அவர்கள் ஒரு தொடர்ச்சியாக இல்லாமல் க்ரேட் கானால் மூன்று பகுதிகளுக்கு திசை மாறி வெற்றி கொண்டதே என்பதாகும். சீனாவில் அவர்கள் திபெத்துடன் பலமான உறவு வைத்திருந்த காரணத்தால் புத்தமதத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்குஆசியாவில் அவர்கள் வெற்றி கொண்ட பகுதிகள் முஸ்லீம் கலீஃபாக்கள், லத்தீன் ஜெருசலம் மற்றும் பைஸாந்திய பேரரசின் எல்லைகளை ஒட்டி இருந்ததால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்திருக்க வேண்டியதாகி இருந்தது. 1255 ல் பெர்கே தான் முதலில் இஸ்லாத்தைத் தழுவினார். அடுத்த மூன்று ஆண்டுகளில் 1258 ல் ஹுலகு (இவர் மனைவி நெஸ்டோரியன் கிறிஸ்தவர்) பாக்தாதை அழித்து (இஸ்லாமிய உலகுக்கு இன்றுவரை ஈடு செய்யவே முடியாத ஒரு இழப்பு) இஸ்லாமிய கலீஃபாவைக் கொன்றார்.
இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் ஜெங்கிஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டு வந்தனர். நாளடைவில் அவர்களுக்குள்ளேயே மாகாணங்களை ஆள்வதில் சண்டையிட்டுக் கொண்டார்கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்து கொண்டார்கள். இவர்களை சகாடைய் துருக்கி என்றே அழைத்தார்கள். குப்ளாய்கான் சீனாவிலிருந்து திரும்பிய பிறகு, சீனாவில் மிங்க் பேரரசு ஆட்சி செய்து வந்தது. யூவான் பேரரசு சீனாவில் தூக்கி எறியப்பட்ட பிறகு, குப்ளாய்கான் மிங்க் பேரரசுடன் போரிட்டார். 1380 ல் மிங்க் இராணுவம் மங்கோலியர்களின் கரகோரம் நகரை சேதப்படுத்தியது. ஆனால், மங்கோலியர்கள் விடாமல் தங்களின் பிறப்பிலேயே அமைந்த புராதன தாக்குதல் முறையில் தொடர்ந்து சீனாவின் எல்லைகளை தாக்கிக் கொண்டிருந்தார்கள். குப்ளாய்கான் சீன பாரம் பரியத்திலான அரண்மனையிலேயே தங்கி இருப்பதை விரும்பினார். இதனூடே சீனாவில் திபெத்தியர்களுடனும், மன்சூஸ்களுடனும் மங்கோலியர்கள் நல்ல உறவைப் பேணி வந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் தலாய்லாமாவுடன் இருந்த நெருக்கமான உறவால் மங்கோலிய பழங்குடிகள் புத்தமதத்தை தழுவினார்கள். குப்ளாய்கான் ஜெங்கிஸ்கான் பரம்பரையிலேயே சற்று வித்தியாசமாக இருந்தார். கலை ரசிகராகவும், நிர்வாகத் திறமை வாய்ந்தவராகவும் இருந்தார். நிறைய சீன கலாச்சாரமுள்ள கட்டிடங்களை நிர்மாணித்தார். சீன நாட்காட்டியை பயன்படுத்தினார். முஸ்லீம், கிறிஸ்தவ, சீன, லத்தீன் போன்ற பல மத தலைவர்களை அரண்மனைக்கு வரவழைத்தார்.
90 ஆண்டுகால மங்கோலிய சீன ஆட்சியில் பல நன்மைகள் விளைந்தாலும், நாட் டுக்குள்ளேயே உள்நாட்டு குழப்பங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. புத்த மதக் கோட்பாடு இரத்தம் சிந்துவதற்கு எதிராக இருந்ததால் மங்கோலியர்களுக்கு போரிடுவதில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது. இராணுவத்திலும் முறை கேடுகள் நடந்தன. ஜப்பான், வியட்நாம் மற்றும் ஜாவா தீவுகளுக்கு அனுப்பப்பட்ட மங்கோலிய இராணுவம் தோல்விகண்டு திரும்பின. குப்ளாய்கானின் மனைவி சாபியின் மரணமும், அடுத்த ஐந்தாம் ஆண்டில் அவர் மகன் மரணமும் அவரை நிலை குலைய செய்தன. தன் ராஜகம்பீரமான வாழ்க்கை தரத்தை வெறுக்க ஆரம்பித்தார். நாட்டில் ஊழல் தலை தூக்க ஆரம்பித்தது. நாட்டின் நடைமுறை செலவுகளுக்கு வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயமாகியது. மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. சமாளிக்க முடியாமல் மங்கோலிய குடும்பங்கள் மத்திய ஆசியாவை நோக்கி சென்றன. நாட்டில் அமைதி ஏற்படவேண்டி மக்களிடையே மிகவும் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த ஜு யூவான்ஸ்ங்க் என்பவர் தலைமையேற்று மிங்க் பேரரசை நிறுவி மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டார்.
பதினாறாம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் கிழக்குப்பகுதி மன்சூஸ்கள் சற்று பலம் பெற்றார்கள். இதனால் அந்த பகுதி மங்கோலியர்கள் மன்சூஸ்களின் பிரதேச மக்களாகிப் போனார்கள். அவர்கள் இரு பிரிவுகளுக்குள்ளும் திருமண உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு நட்பாகிப் போயினர். 1644 ல் மன்சூஸ்கள் மிங்க் பேரரசை எதிர்த்து போரிட்டு கிங்க் பேரரசு என்ற ஒன்றை புதியதாக உருவாக்கினார்கள். அந்த பகுதி மங்கோலிய மக்கள் சீனாவாசிகளாகவே ஆகிப்போனார்கள். 1691 வரை வெகு தொலைவில் இருந்த சில மங்கோலியர்கள் மட்டும் சீனப் பேரரசிலேயே வெளி மங்கோலியர்களாய் இருந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டுகளில் மன்சூஸ் பேரரசுடன் இருந்த மங்கோலியர்கள் 1912 ல் மன்சூஸ் பேரரசு வீழ்ந்து சீனா விடுதலை (ரிபப்ளிக் ஆஃப் சீனா) அடைந்ததில் சீன மக்கள் ஆகினார்கள்.
சீனாவின் வெளிப்புறத்தில் இருந்த மங்கோலியர்கள் சீனாவால் முற்றிலும் கை விடப்பட்டு தனியாகிப் போனார்கள். 1912 ல் ரஷ்யாவின் உதவியால் வெளி மங்கோலியர்கள் சீனா, ரஷ்யா என்ற இரு சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையில் தனியாக செயல்பட்டு வந்தது. இது அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. இறுதியில் 1946 ல் மங்கோலியா சுதந்திர நாடாக அங்கீகாரம் பெற்றது. (மங்கோலியன் பீப்பிள்ஸ் ரிபப்ளிக்) சர்வதேச நாடுகளின் ஐக்கிய நாட்டு சபை 1961 ல் அங்கீகாரம் அளித்தது.