ஞாயிறு, 19 ஜூலை, 2015

மங்கோலியர்கள் வரலாறு 5

மூங்கி (மோங்கே என்றும் அழைக்கப்பட்டார்) தன் இரு சகோதரர்கள் உதவியுடன் கிழக்கிலும், மேற்கிலும் வடசீனாவின் பகுதிகள், ரஷ்யா, பெர்ஷியா மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளை வென்றார். ஜெங்கிஸ்கானின் மூத்த மகன் தோல்யூவுக்குப் பிறந்தவர். ஓகிடாயின் குழந்தை இல்லாத மனைவியான அங்க்யூ இவரை வளர்த்தார். ஓகிடாய் பெர்ஷிய போதகர் இதி தன் முஹம்மதை மூங்கிக்கு ஆசிரியராக அமர்த்தினார். ஜின் பேரரசை எதிர்த்து போரிட்ட போது முதல்முறை யாக ஓகிடாய் மற்றும் தந்தை தோல்யூவுடன் கலந்து கொண்டார். மூங்கி        1252 ல் மூங்கி கிழக்கில் வென்ற சில பகுதிகளுக்கு தன் சகோதரர் குப்ளாய்கானை ஆட்சியாளராக்கினார். பின் 1255 ல் இன்னொரு சகோதரர் ஹுலகுகானை மத்திய ஆசியாவின் இஸ்லாமிய நாடுகளை வெல்லச் சொன்னார். குப்ளாய்கான் மேற்கு சீனாவில் ஷெஸ்வான் மற்றும் யூன்னன் பகுதிகளை வென்று முன்னேறிக் கொண்டிருக்கும் போது, மூங்கி இறந்து விட்டதாக தகவல் வர திரும்பிவிடுகிறார். இடைவிடாத வயிற்றுப் போக்கால் மூங்கி 1259 ல் இறந்து போனார். அனைவரும் கூடி குப்ளாய்கானையே மன்னராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், கரகோரத்தில் கடைசி சகோதரர் அரிக் போகி தான் மன்னராக வேண்டும் என்று உரிமை கோருகிறார்.
ஒரு வழியாக 1264 ல் குப்ளாய்கான் சகோதரரை வென்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். குப்ளாய்கான் தோல்யூவின் நான்காவது மகனாவார். இவரது தர்பாரில் உயர் அதிகாரிகளாக 30 க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இருந்தார்கள். பனிரெண்டு மாகாணமாக இருந்த குப்ளாய்கானின் பேரரசில் எட்டு மாகாணங்களில் முஸ்லீம் கவர்னர்கள் இருந்தார்கள். இஸ்லாமிய மதபோதகர்களையும், விஞ்ஞானிகளையும் பெரிதும் மதித்தார். ஜமால் அத் தீன் என்பவர் வானாராய்ச்சிக்காக ஏழு கருவிகளைக் கண்டு பிடித்தார். இஸ்லாமிய மருத்துவர்களைக் கொண்டு சீனாவில் உயர்தர மருத்துவமனைகள் அமைத்தார். ஆராய்ச்சியாளர் இப்ன் சினாவின் படைப்புகளை சீன மொழியில் மொழி பெயர்த்தார். இஸ்லாமிய கணிதவியலாளர்கள் ஈக்லூடியன் ஜியாமெட்ரி, ஸ்பெரிகல் ட்ரைகோனோமெட்ரி, அரபிய எண்களை சீனாவில் அறிமுகப்படுத்தினார். குப்ளாய்கான் மேலும் இஸ்லாமிய பொறியாளர்கள் இஸ்மாயில், அல் அல் தீன் ஆகியோரைக் கொண்டு கல்லெறிந்து கோட்டைச் சுவர்களை சிதைக்கும் இயந்திரத்தையும் செய்யச் சொன்னார். தற்போது முழுகவனத்தையும் சீனாவின் மீது திருப்பினார். தலைநகர் கரகோரத்திலிருந்து தன் பாட்டனார் 1215 ல் சீரழிக்கப்பட்டிருந்த பெய்ஜிங்க் நகரத்தை வென்றார். தானே கவனம் செலுத்தி பெய்ஜிங்க் நகரத்தை சீரமைத்தார். 24 மைல் நீளத்திலும், 50 அடி உயரத்திலும் நகரைச்சுற்றி பிரமாண்டமான சுவர் எழுப்பினார். அந் நகரத்திற்கு “கான் பாலிக்” (கான்களின் நகரம்) என்று பெயரிட்டார். அந் நகரம் ஐரோப்பியர்கள் மத்தியிலும் மிகவும் புகழப்பட்டது. அவர்கள் சற்று பெயர் மாற்றி கம்பலூக் (CAMB ALUC) என்று அழைத்தனர்.
குப்ளாய்கான் இந்த நகரத்தை மையமாக வைத்து தான் ஸங்க் பேரரசை வெற்றி கொண்டார். 1271 ல் தாங்கள் கொள்ளையர்களாக அங்கு பிரவேசித்தவர்கள் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் உண்மையாக அங்கு ஒரு சீனப்பேரரசை நிறுவினார் அதே ஆண்டு அந்த பேரரசுக்கு “தா யூவன்” (YUAN DYNASTY) என்று பெயர் சூட்டினார். சீனாவில் மூதாதையர்கள் சந்ததியினரை பெரிதும் மதிப்பார்கள் அதை மனதில் கொண்டு தனது பாட்டனார் ஜெங்கிஸ்கானுக்கு மரியாதை செய்யும் விதத்தில் “ட் ஆய் ட்சூ” (GRAND PROGENITOR- மதிப்புமிக்க மூத்த சந்ததியினர்) என்று அழைத்தார். குப்ளாய்கான் 1276 ல் ஹாங்க்ஸூவில் ஸங்க் பேரரசைக் கைப்பற்றி அதன் இளம் பேரரசரையும், அவர் தாயாரையும் மரியாதையுடன் நடத்தினார். 1279 ல் மங்கோலியர்களுக்கு சீனாவில் எதிர்ப்பில்லாமல் போனது. சீனச் சரித்திர ஆய்வாளர்களின் கருத்துப்படி முதல்முதலாக வெளியில் இருந்து சீனா வந்து ஆட்சி செய்தவர்கள் யூவன் பேரரசு மட்டுமே என்று கூறுகிறார்கள். ஆனால், குப்ளாய்கான் தான் என்றுமே வெளியிலிருந்து வந்து ஆட்சிசெய்பவர் என தோன்றாமல் இருந்தார். சீனாவின் நிர்வாகத்தையே தன் ஆட்சியிலும் கடைபிடித்தார். ஒரே ஒரு வேற்றுமை பணியாளர்களாக வெளிநாட்டினரை நியமித்தார். இடையில் மின்னல்போல் பிரகாசமாக வந்துசென்றவர் மார்கோபோலோ ஆகும்.
குப்ளாய்கான் இதற்கு முன்னிருந்த சீன ஆட்சியாளர்களை விட சிறப்பான முறையில் சீனப் பிரதேசங்களை ஆட்சி செய்தார். மங்கோலியா, திபெத், மன்சூரியா, கொரியா மற்றும் தென் சீனக் கடல் பகுதிகள் அனைத்தையும் தன் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார். இவரின் ஆளுமையிலிருந்து தப்பியது ஜப்பான் மட்டும்தான். அதுகூட 1274 ல் மாபெரும் அழிவிற்குண்டானது, பின்பு மீண்டும் 1281 ல் மார்கோபோலோவால் மீண்டும் அழிவிற்குண்டானது. குப்ளாய்கானை ஜெங்கிஸ்கான் போல் கொள்ளையடிக்க சென்ற நாடோடிக் கூட்டத்தலைவன் போலல்லாமல் சரித்திரம் “தி க்ரேட் கான்” என்று புகழுரைக்கிறது. இவர் தன் பழங்குடியின மக்களை வென்ற இடத்தில் குடியமர்த்தினார். வென்ற இடங்களை சுதந்திரப் பிரதேசமாக அறிவித்தார். குப்ளாய்கானின் பேரரசு மிகப் பெரியது. சகோதரர் மகன்கள் படு மற்றும் பெர்கேவை ரஷ்யாவின் தங்கநாடோடிகள் நகரத்தின் அட்சியாளர்களாக்கி, தன் சொந்த சகோதரர் ஹுலகுவை பெர்ஷியாவிலும், மெஸோபொடாமியாவில் மங்கோலியர் பேரரசை நிறுவி ஆட்சியாளராக்கினார். மங்கோலியர்கள் ஏறக்குறைய பூமியின் 20% பகுதியையும், 100 மில்லியன்கள் மக்களையும் அப்போது ஆண்டார்கள்.
குப்ளாய்கான் முதல் மனைவி டெகுலென் சில நாட்களிலேயே இறந்து போனார். அடுத்து சபி என்பவரை மணந்தார். சபியும் இறந்து போக அவர் முன் மொழிந்து விட்டு போன அவர் உறவினப் பெண் நம்பூய்யை மணந்து கொண்டார். குப்ளாய் கானுக்கு டோர்ஜி, ஸென்ஜின், மங்கலா, நொமுகான், குங்குஜில், அய்ச்சி, சகுல் கச்சி, குகுச்சு, டோகன், குலன் தெமுர், சேவர், குதுக் பெகி ஆகிய பிள்ளைகள் இருந்தார்கள்.
குப்ளாய்கானுக்கு அடுத்ததாக ஹுலகுகான் ஆட்சிக்கு வந்தார். இவரும் தோல்யூ, சொர்கக்டனி பெகி தம்பதிகளின் மகனாவார். சொர்கக்டனி பெகிக்குப் பிறந்த அனைத்து மகன்களும் நாடாண்டார்கள். இவர் நொஸ்டோரியன் கிறிஸ்தவ நெறி முறையைச் சேர்ந்தவள். ஹுலகுகானும் கிறிஸ்தவர்களிடத்தில் நட்பாக இருந்தார். ஹுலகுகானின் விருப்பமான மனைவி டோகுஸ் கதுனும் கிறிஸ்தவராக இருந்தார். இறப்பதற்கு முன் மனைவியின் விருப்படி ஹுலகுகான் புத்தமதத்திற்கு மாறியதாகச் சொல்லப்படுகிறது. ஹுலகுவுக்கு அபகா கான், டெகுடெர் அஹ்மத், டரகாய் என்று மூன்று மகன்கள் இருந்தார்கள். மூங்கி இவரை தென்மேற்கு ஆசியாவின் முஸ்லீம் பகுதிகளை வெல்ல அனுப்பினார்.
ஹுலகு 1256 ல் அமுதர்யா ஆற்றைக்கடந்து இஸ்லாமிய பெர்ஷியாவில் மங்கோலிய பேரரசை நிறுவ தொடங்கினார். அப்போது அந்த பகுதி பல அரசியல் கொலைகளுக்கு ஆளாகி இருந்தது. அதற்கு காரணமாய் இருந்த ‘இஸ்மாயிலி’ என்ற அமைப்பு ஏறக்குறைய மங்கோலியர்களின் நடைமுறை முறைக்கு ஒத்து போனதாய் இருந்தது. ஹுலகுவும் ஒவ்வொரு கோட்டைகளாக கொலைகளின் மூலம் கைப்பற்றத் தொடங்கினார். 1257 ல் மேலும், மேற்கு நோக்கி வளமான பகுதியை நோக்கி முன்னேறினார். ஹுலகுவும், அவரின் நாடோடிப் படையும் வெளிப்படையில் மட்டும் இஸ்லாமின் மையமாகத் தோன்றிய கலீஃபாவின் ஆட்சிக்கு கீழுள்ள மேஸோபொடாமியாவை நோக்கி நகர்ந்தன. அப்போதைய பாக்தாதின் கலீஃபா அல் முஸ்தாஸிம் 1258 ல் மங்கோலியர்களுக்கு எதிராக படையை அனுப்பினார். ஹுலகுவால் முஸ்லீம்படை அடக்கப்பட்டு, கலீஃபாவை தன் முன்னே வந்து சரணடைந்து நகரத்தின் சுவர்களை இடிக்கச்சொன்னார். கலீஃபா அல் முஸ்தாஸிம் மறுத்துவிட, ஹுலகு பாக்தாதை வெற்றிகொண்டு, நகரை சின்னாபின்னப்படுத்தினார். ஏறக்குறைய 800,000 மக்களைக் கொன்றார். இது சுன்னி பிரிவு முஸ்லீம்களிடத்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக மிகவும் பயத்தை விளைவித்தது. மங்கோலியப் படைகள் பல கோட்டைகளை நகரங்களை அழித்தனர். கலீஃபாவையும் அவர் குடும்பவாரிசுகளையும் கொன்றனர். இஸ்லாமிய வரலாற்றில் மறக்கமுடியாத அழிவு. பல கலை ஆவணங்கள், அறிவுக் களஞ்சியங்களின் மதிப்பறியாமல் தீக்கிரையாக்கப்பட்டன. வரலாறு இஸ்லாமியர்கள் மீதான மங்கோலியர்களின் தாக்குதலை பதிவு செய்து வைத்திருக்கிறது. நாற்பது நாட்கள் இடைவெளியே விடாமல் மக்களைக் கொன்றும், மசூதிகள், கட்டிடங்களை இடித்தும் எரித்தும் நாசப்படுத்தினார்கள். இந்த பாக்தாதின் தாக்குதல் பற்றி இமாம் இப்ன் கதீர் அவர்கள் விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள். ஷியா பிரிவைச் சேர்ந்த இப்ன் அல் கமி என்பவன் கலீஃபா அல் முஸ்தகீமுக்கு சமாதானமாகப் போவதாக எண்ணும் வகையில் பரிசுப் பொருள்களை அனுப்புமாறு தந்திரமான தகவலுடன் ஹுலகுவுக்கு அறிவுரை சொன்னான். பின்பு கலீஃபா தன் முன்னே கொண்டு வரப்பட்ட போது மண்டியிட்டு தலை குனிந்து போகும்படி ஹுலகு செய்தார். செழிப்பான பாக்தாத் நகரம் சின்னாபின்னமாகியது. அந்தகால கட்டத்தில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் இப்ன் அல் அதிர் என்பவர், “ பாக்தாதின் கொடுமைகளால் நான் பல நாட்கள் மன்நிலை பாதிக்கப்பட்டிருந்தேன். இந்தக் கொடுமைகளுக்கு முன்பே என் தாய் என்னைப் பெற்று நான் மரணித்திருக்கக்கூடாதா என்று நினைத்தேன். இதற்கு முன் ஆதமின் சந்ததிகள் இது மாதிரி ஒரு மனித வேதனையைக் கண்டதில்லை என்றால் அது உண்மை. பின்னால் வரப்போகும் தஜ்ஜால் கூட தன்னைப் பின்பற்றுபவர்களை விட்டுவிடுவான். வெறும் ஒரு ஆண்டுகாலத்தில் எவ்வளவு பேரழிவு ஏற்படுத்த முடியுமோ, எப்படியெல்லாம் அழகைச் சிதைக்க முடியுமோ, குணத்தாலும், நாகரீகத்தாலும் சிறந்திருந்த பெருவாரியான மக்களை எப்படியெல்லாம் கொல்ல முடியுமோ அத்தனையையும் செய்தார்கள். அவர்கள் அங்கிருந்த இரவுகளை இனி யாரும் இந்த உலகில் சந்தித்திருக்க மாட்டார்கள். முஸ்லீம்களும், இஸ்லாமும் சற்று இயங்காமல் போனது” என்று குறிப்பிட்டிருக்கிறார். பாக்தாதின் புகழ்பெற்ற மத்திய நூலகத்தில் இருந்த பௌதீகம், விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், தத்து வம் சம்பந்தமான ஒப்பற்ற களஞ்சியங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. டைக்ரீஸ் நதியின் நீர் பல நாட்களுக்கு கருநிறத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தப்பிக்க முயன்ற பொது மக்களைக் கூட விடாமல் கொன்று குவித்தார்கள் ஹுலகு வின் இராணுவத்தினர். எப்படி அழைப்பது என்று சொல்லிக் கொடுப்பதற்காகவே ஆயிரக்கணக்கான வட சீனா பொறியாளர்கள் ஹுலகுவுடன் மத்திய ஆசியா போருக்குச் சென்றார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக