ஞாயிறு, 19 ஜூலை, 2015

மங்கோலியர்கள் வரலாறு 4

1237 ல் சென்ற மங்கோலியப் படைகள் ரஷ்யாவில் 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தின. ரஷ்யர்கள் மங்கோலியர்களை தங்க நாடோடிகள் (ZOLOTAYA ORDA-GOLDEN HORDE) என்று அழைத்தனர். ஏனென்றால், படு தங்குவதற்கு தங்க கூடாரத்தைத் தான் பயன்படுத்துவார். பெரும்பாலான ரஷ்ய நகரங்களைக் கொள்ளை அடித்தார்கள். இந்த தோல்வியை ரஷ்யா சரித்திரம், ‘இறந்தவர்களுக்காக அழுவதற்கு கூட சந்தர்ப்பம் அளிக்கவில்லை’ என்று கூறுகிறது. மங்கோலியர்கள் சேற்றில் குதிரையில் சண்டையிட மிகவும் சிரமப்பட்டார்கள். அதனால் வலுக்கட்டாயமாக பின்வாங்கினர். மீண்டும் குளிர் காலத்தில் போரிட வந்தார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்த கீவ் நகரின் சுவர்கள் மங்கோலியர்களால் இடித்து நொறுக்கப்பட்டது. இரக்கமில்லாமல் மக்கள் கொல்லப்பட்டனர். 1238 ல் மாஸ்கோவையும், 1240 ல் கீவ் நகரத்தையும் கைப்பற்றினார்கள். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் மங்கோலியர்கள் ரஷ்யாவை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, தென்பகுதி நோக்கி சென்றனர். இதற்கிடையில் மங்கோலியர்கள் என்னும் இஸ்லாமிய இராணுவம் கிறிஸ்தவ ரஷ்யாவை வென்று விட்டது என்று ஐரோப்பியர்களுக்கு செய்தி எட்டியது. ஐரோப்பிய ஆட்சியாளர்கள் வரும் ஆபத்தை எதிர்கொள்ள தயாராகினார்கள். மங்கோலியர்கள் ஒரு ஆங்கில தூதுவரை ஹங்கேரியின் மன்னர் பேலாவிடம் அனுப்பி சரணடைய வேண்டினார்கள். அவர் தான் ஒரு நாட்டின் மன்னர் சாதாரணமாக எங்கிருந்தோ வரும் நாடோடிக் கொள்ளைக் கூட்டத்துடன் சரணடைவதா முடியாது என்று மறுத்து விடுகிறார். ஒரு நாடோடி இராணுவப்படை 1241 ல் போலந்தை நோக்கி முன்னேறியது. போலந்தும் ஜெர்மனியும் கூட்டு சேர்ந்து லெக்னிகா என்ற இடத்தில் மங்கோலியர்களை எதிர்த்து போரிட்டுத் தோற்றனர். அதே நேரத்தில் இன்னொரு நாடோடி இராணுவம் மொஹ்லி என்ற இடத்தில் ஹங்கேரியை வெற்றி கொண்டது. முதலில் 70,000 கிறி ஸ்தவ வீரர்களும், அடுத்து 40,000 வீரர்களும் ஐரோப்பிய தரப்பில் கொல்லப்பட்டனர். அந்த கோடை காலத்தை மங்கோலியப் படைகள் ஹங்கேரியின் திறந்த வெளிகளில் கழித்தது. அவர்களின் புல் நிறைந்த பூமியின் வாழ்க்கைச் சூழலுக்கு அது ஒத்துவரவில்லை என்றாலும், வெற்றி அவர்களை ஏற்றுக்கொள்ள வைத் தது. அந்த வெற்றி மேலும் ஐரோப்பிய நகரங்களை வெல்ல ஏதுவாக இருந்தது. மங்கோலிய நாடோடிகளின் படை அப்போது ஐரோப்பாவை பயத்தில் ஆழ்த்தியது. அந்த வருட டிசம்பரில் மாவீரன் ஒகிடாய் மரணமடைந்து விட்டதாகவும், உடனே வேறு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி திரும்பிவர செய்திவந்தது. படுவும் அடுத்த நிலை பெரிய மனிதர்களும் கலந்து கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஹங்கேரியை விட்டு பழங்குடி இடமான வோல்காவுக்கு திரும்பினார்கள்.
ரஷ்யாவில் நிறைய சிறிய மன்னர்கள் சிறிய பிரதேசங்களை ஆண்டுவந்தவர்கள் தங்ககூடார மாவீரன் ஒக்டாயிக்கு மிகுந்த மரியாதையும், ஆண்டு கப்பமும் செலுத்தி வந்தார்கள். பின் படு ஆட்சிக்கு வந்து வோல்காவிலேயே ஒரு பகுதியை தலைநகராக்கி தன் பெயர் வருமாறு சராய்படு என்று மாற்றி ஆட்சி செய்து வந்தார். இவருக்குப் பிறகு, இவரின் சகோதரர் பெர்கி 1255 ல் ஆட்சிக்கு வந்தார். பெர் கி தன் பழங்குடியின மக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைத் தழுவச் செய் தார். நவீன வோல்காக்ராடுக்கு கிழக்கில் சராய் பெர்கி என்ற நகரத்தை உருவாக்கி தலைநகராக்கிக் கொண்டார். அங்கு நகர் முழுதும் மசூதிகளையும், பொதுக் கழிப்பிடங்கள் போன்றவற்றைக் கட்டினார். 600,000 மக்கள் அங்கு வசித்தனர். 1395 ல் தைமூரியர்கள் அழிக்கும் வரை அந்நகர் மிகவும் சிறப்பாக இருந்தது. இடையில் படுவிடமிருந்து ஆட்சி வாரிசு பிரச்சினையால் இறந்துபோன ஓகிடாயின் விதவை மனைவி டோரிகினி கதுனிடம் வந்து நான்கு ஆண்டுகள் அவர் ஆண்டார். ஜெங்கிஸ்கான் மெர்கிட் பழங்குடியை வென்றபோது, அதன் தலைவர் குடுவின் மனைவி தான் டோரிகினி ஹதுன். ஓகிடாய்க்கு முதல் மனைவி மூலம் குழந்தை இல்லாததால் ஜெங்கிஸ்கான் டோரிஜினி ஹதுனை ஓகிடாய்க்கு வழங்கினார். ஓகிடாய் மூலம் டோரிகினி ஐந்து மகன்கள் பெற்றார். விரைவில் ஓகிடாயின் மற்ற மனைவிகளை பின் தள்ளி முன்னுக்கு வந்தார். வட சீனாவில் வரி வசூலிக்க அப்த் உர் ரஹ்மானை கணவரிடம் பரிந்துரைத்தார். ஓகிடாயின் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்தும், நீக்கியும் நடவடிக்கை எடுத்தார். பெர்ஷி யாவைச் சேர்ந்த ஷியா பிரிவு ஃபாத்திமா என்பவரை அரண்மனை அதிகாரத்தில் வைத்தார். அவர் அடுத்து தன் மகன் கூயூக்குக்கு பதவி கிடைக்கும் வண்ணம் திட்டமிட்டு செயல்பட்டார். டோரிகினி ஆண்ட காலத்தில் பல வெளிநாட்டு மன்னர்கள் தலைநகர் கரகோரத்திற்கு வருகை தந்தார்கள். அதில் துருக்கியிலிருந்து செல்ஜுக் சுல்தான், பாக்தாதிலிருந்து அப்பாஸிட் கலீஃபா, டெல்லி சுல்தான் அலாவுதீன் மசூத், ஜார்ஜியாவிலிருந்து டேவிட் உலு, டேவிட் நரின், மிக உயரிய விருந்தினராக அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கியின் தந்தை விளாடிமீரின் இளவரசர் யரோஸ்லவ் விவோலோடோவிச் போன்றோர் ஆவார்கள். இளவரசர் டோரிகினியுடன் மது அருந்திய பிறகு மர்மமான முறையில் இறந்து போனார். இடையில் டோரிகினியிடமிருந்து ஆட்சியை மீட்க ஜெங்கிஸ்கானின் சகோதரர் தெமூஜி தன் ஆதரவாளர்களுடன் திரண்டு வர அவர்களை கூயுக் சந்தித்து சமாதானப் படுத்தினார். ஐரோப்பிய தாக்குதலில் இருந்த படுவும் வர தாமதமாகியது. இறுதியாக டோரிகினி மகன் கூயூக்கை ஆட்சியில் அமர்த்தினார். கூயூக் இளமையில் ஜெங் கிஸ்கான், ஓகிடாயுடன் இராணுவ அனுபவம் பெற்றிருக்கிறார். மங்கோலிய ஜெனரல் டங்குட்டுடன் புக்சியன் வன்னாவில் போரிட்டிருக்கிறார். தோல்யூ இறந்த பிறகு, அவர் மனைவி சொர்கக்டனியை கூயூக்கை மணந்து கொள்ள ஓகிடாய் வேண்டினார். ஆனால், தோல்யூவின் மனைவி மறுத்து விட்டார். ரய்ஸான் என்ற இடத்தின் படையெடுப்பின் போது, உறவினர் படுவை தரக்குறைவாக ‘அம்பராத்தூளியில் கட்டப்பட்ட வயதான பெண்மணி’ என்று கூறினார். இச்செய்தி ஓகிடாய்க்கு எட்ட அவர் கடுங்கோபத்துடன் ‘நீ இன்னும் ஒரு ஆட்டுக்குட்டியைக் கூட  பிடிக்கவில்லை. படுவை சாடுவதா?’ என்று கடிந்து கொண்டார். கூயூக் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தாய்க்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. அதிகாரத்திலிருந்த ஃபாத்திமா அதிகமான சொத்தை கொள்ளை அடித்து விட்டதாக கூயூக்கின் சகோதரர் கோடன் புகார் எழுப்பினார். சில நாட்களில் கோடன் இறந்து விட கூயூக் ஃபாத்திமாவை தூக்கிலிட உத்தரவிட்டார். தாயார் டோரிகினி, ஃபாத்திமாவைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றார். இறுதியில் உடலின் அனைத்து துவாரங்களும் தைக்கப்பட்டு, நீரில் மூழ்கச் செய்து ஃபாத்திமா சாகடிக்கப்பட்டார். வரி வசூலித்த அப்த் உர் ரஹ்மானும் தூக்கிலிடப்பட்டார். அடுத்த சில மாதங்களில் டோரிகினி ஹதுன் விளங்கமுடியாத காரணத்தால் மரணமடைந்தார். கூயூக்கின் தலைமையை படு ஏற்கவில்லை. அவரைத் தன்னை வந்து சந்திக்கும்படி கூயூக் கேட்க, பெரும் படையுடன் படு சந்திக்க வந்தார். கூயூக்குக்கு பெரும் உறவினர் கூட்டம் இருந்தது. பெரும்பாலும் அனைவரும் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். கூயூக் திறமையாகவும், நேர்மை விரும்பியாகவும் இருந்தார். கூயூக் சீனாவின் சின்ஜியாங்க் பிராந்தியத்திலிருந்து திரும்பும் வழியில் இறந்து போனார். ஆட்சிசெய்த இரண்டே ஆண்டுகளில் 1246ல் இறந்து போனார்.
மீண்டும் ஆட்சி கூயூக்கின் விதவை மனைவி ஓகுல் கைமிஷ் வசம் போனது. ஓகுல் மெர்கிட் என்னும் பழங்குடியைச் சேர்ந்தவள். மெர்கிட் புரட்சியை ஜெங்கிஸ்கான் அடக்கிய போது, அவளை கூயூக்குக்கு கொடுத்தார். கூயூக்குடன் அவளுக்கு கோஜா, நகூ என்று இரண்டு மகன்கள். கூயூக்கின் தலைமை அதிகாரிகள் சின்கை, கடக், பல ஆகியோர் ஓகுல் ஆள்வதற்கு ஆதரவளித்தார்கள். ஆனால் உயர் பதவியில் இருந்தவர்கள் முறையாக ஆட்சிக்கு அதிகாரம் உள்ளவர் ஜெங்கிஸ்கானின் பேரர் அதாவது மூன்றாவது மகன் துல்யூவின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த மூங்கீ தான் என்றார்கள். ஓகுல் தனக்கு முதல் கணவன் மூலம் பிறந்த ஷிரீமூன் அல்லது கூயூக்குக்குப் பிறந்த கோஜா தான் ஆள் வேண்டும் என்றார். ஆனால் ஒருபுறம் மூங்கி தேர்ந்தெடுக்கப்பட, ஓகுல் கைமிஷ் கைது செய்யப்பட்டு அரண்மனையில் நிர்வாணப்படுத்தப்பட்டார். பின் தடித்த கம்பளித்துணியால் சுருட்டப்பட்டு ஆற்றில் வீசிக் கொல்லப்பட்டார். மூங்கிக்கு குடுக்யூ என்ற மனைவி மூலம் பல்டு, உரெண்டஷ் என்ற மகன்களும், பைய்லூன் என்ற மகளும் இருந்தார்கள். ஓகுல் கோயிமிஷ் என்ற மனைவி மூலம் ஷிரின், பிச்சிகே என்ற மகள்களும், சுபெய் என்ற இளம் மனைவியும், வைப்பாட்டிகளாக ஷிரேகி, அசுடை ஆகியோர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக