வியாழன், 30 ஜூலை, 2015

கதார் வரலாறு 1

கதார் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
கதார் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கற்காலம் என்று சொல்லப்படும் 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்போது பெர்ஷிய வளைகுடாவைச் சேர்ந்த இப்பகுதி நீரில்லா ஆற்றுப் பள்ளத்தாக்காய் இருந்தது. இதனால் இது குளிர்காலங்களில் வேட்டையாடியவர்கள் தங்கிய பகுதியாக இருந்தது. 1961 ல் இங்கு ஆய்வு மேற்கொண்ட டச்சு நாட்டுக்காரர்கள் 122 பழங்கற்கால இடங்களை அறிந்து 30,000 கற்களைக் கண்டுபிடித்தார்கள். இவ்விடங்கள் கடற்கரையை ஒட்டி இருந்தன. மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நான்கு வகையான மக்கள் கூட்டத்தினரின் கோடாரிகள், அம்பு முனைகள் மற்றும் பல கருவிகளைக் கண்டுபிடித்தார்கள். 8000 ஆண்டுகளுக்கு முன்பு பெர்ஷிய வளைகுடாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, சௌதி அரேபியாவிலிருந்து நஜ்த் மற்றும் அல் ஹசா பழங்குடியினர் குடிபெயர்ந்து கடற்கரையிலிருந்து கதாரை தலைநகரமாக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்தார்கள். கதாரின் மிகப்பழைய குடியிருப்புகளாக நியோலிதிக் காலத்து ‘வாதி தெபாயன்’ வாசிகள் இருந்தார்கள். இவர்களின் கடல் சார்ந்த மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் மொசொபோடாமியாவின் உபைத் காலத்தைக் குறிக்கின்றன. உறுதியான ஆதாரமாக கி.மு. 6000 தின் இரண்டு அறைகளைக் கொண்ட வீடும், மீனின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 1980 ல் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பானை ஒன்றும் தென் மெசொபொடாமியாவின் உபைத் காலத்தையே குறிக்கிறது. கதாரின் வட கிழக்கில் அல் தஃஅசா குடியிருப்பு உபைத் கால பெரும் குடியிருப்பாகக் கருதப்படுகிறது. இங்கு 65 தீக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு இங்கிருந்து மீன் பிடித்து சமைத்ததற்கான ஆதாரங்களைத் தெரிவித்தன. 1977-78 லும் அல் கோர் என்ற இடத்தில் நடந்த ஆராய்ச்சியில் உபைதுகளின் மிகப்பெரிய கல்லறைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. அதில் கண்டுபிடிக்கப்பட்ட கழுத்து மணிகள் தென்மேற்கு அரேபியாவின் நஜ்ரான் பகுதியைச் சேர்ந்ததாகும். பஹ்ரைனைச் சேர்ந்த தில்முன் சமூகத்தின் நெருங்கிய உறவு கதாரின் பாலைவனப் பகுதி மக்களிடையே காணப்படுகிறது. கி.மு. 2100 லிருந்து 1700 வரை கதார் பகுதியில் முத்துக் குளிப்பவர்கள் இருந்தார்கள். அப்போது பேரீச்சம் மரங்களும் பயிரிடப்பட்டன. அஸ்ஸைரிய மன்னன் எசர்ஹட்டான் வெற்றி பெற்ற ‘பாஸு’ தில்முன், கதார் பகுதியில் தான் இருந்தது. கி.பி. 5 ம் நூற்றாண்டில் சரித்திர ஆய்வாளர் ஹிராடோடஸ் வெளியிட்ட புத்தகத்தில் கதாரை கனானிட்ஸ் கடல் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
250 ல் பார்த்தியன்கள் பெர்ஷியன் வளைகுடாவை வென்றபின் கதாரின் பகுதியில் காவல்படையை அமைத்தார்கள். இதை அங்கு கிடைத்த பானைகளின் பகுதிகள் உறுதி செய்கின்றன. துகானின் வடக்குப் பகுதியில் ராஸ் அப்ரூக் பகுதியில் 140 ல் மீன் பிடிப்பதற்கான வீடுகள், வெளிநாட்டினர் தங்கியதற்கான அடையாளங்கள், மீன்களை உலர்த்தியதற்கான தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 224 ல் சஸ்ஸானியர்கள் இந்த பகுதியை வென்றபின், முத்துக்களுக்கும், பவளத்திற்குமான வாணிபத்திற்கு கதார் முதலிடத்தில் இருந்தது. சஸ்ஸானியர்களின் பானைகளும், கண்ணாடிப் பொருள்களும் வடமேற்கு தோஹாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கிறிஸ்தவ மதம் இங்கு பரவலாக இருந்தது. பல கிறிஸ்தவ மடங்களும் இருந்தன. அப்போது கதார் பகுதி “பெத் கத்ராயீ” என்று சைரியாக் மொழியில் அழைக்கப்பட்டது. அப்போது இப்போதிருக்கும் கதார் நாட்டுப்பகுதி மட்டும் இல்லாமல் பஹ்ரைன், தரூத் தீவு, அல் காட், அல் ஹசா ஆகியவை இணைந்து இருந்தன. 628 ல் கிழக்கு அரேபியாவின் ஆட்சியாளராக இருந்த முன்ஸிர் இப்ன் சவா அல் தமீமிடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல் அலாஃஅ அல் ஹத்ரமி என்ற தூதுவரை அனுப்பி இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். உடனே முன்ஸிர் தானும் இஸ்லாமை ஏற்று, அங்கிருந்த அரபு பழங்குடியினரையும் ஏற்கச் சொன்னார். மர்வாப் பகுதியில் சிறிய 100 இஸ்லாமிய கால வீடுகள் இதை உறுதி செய்கின்றன. பின்னால் இஸ்லாமியர்களின் பெர்ஷியா மீதான படையெடுப்பால் சஸ்ஸானியர்களின் ஆட்சி இப்பகுதியில் முடிவுற்றது. ஆனாலும் இப்பகுதி முழுமையாக இஸ்லாத்தை தழுவவில்லை என்றும் சில தேவாலயங்கள் ஏழாம் நூற்றாண்டில் இருந்ததென்றும் கருதப்படுகிறது.
உமய்யாத்களின் ஆட்சியின் போது குதிரை மற்றும் ஒட்டகங்கள் இங்கு வளர்க்கப்பட்டன. 8 ம் நூற்றாண்டில் இவற்றுடன் முத்துக்குளிப்பிலும் கதார் சிறந்து விளங்கியது. கதாரின் அல் குவைய்ர் பகுதியில் பிறந்த ஷியா பிரிவு கரீஜிய தளபதி கதாரி இப்ன் அல் ஃபுஜாஃஅ என்பவர் ‘அஸாரிகா’ என்ற அமைப்பின் மூலம் இங்கிருந்து 10 ஆண்டுகள் பல போர்களைப் புரிந்தார். 688-89 ல் நாணயங்களையும் வெளியிட்டிருந்தார். உமய்யாத் கலீஃபா மத மற்றும் அரசியல் மாற்றங்களுக்காக பல நடவடிக்கைகள் எடுத்த போது கதார் மற்றும் பஹரைன் பகுதிகள் முக்கிய இடமாக இருந்து இப்ன் அல் ஃபுஜாஃஅ அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக உமய்யாத்களை எதிர்க்க பயன்பட்டது. 750 ல் உமய்யாத்களின் ஆட்சி இப்பகுதியில் நீக்கப்பட்டு அப்பாஸிட்கள் ஆட்சிக்கு வந்தனர். இரு மசூதிகள் கட்டப்பட்டு, மர்வாப் பகுதி பல வகைகளிலும் முன்னேற்றம் கண்டது. இங்கிருந்த பழைய கோட்டை தீயில் நாசமடைய புதிய கோட்டைக் கட்டப்பட்டது. இவர்களின் காலத்தில் பஸ்ராவிலிருந்து இந்தியா, சீனா சென்ற கப்பல்கள் கதாரில் நின்று சென்றன. 9 ம் நூற்றாண்டுகளில் கதார் பகுதி நல்ல வளம் பெற்று செல்வச் செழிப்பில் இருந்தன. 868 ல் முஹம்மது இப்ன் அலி என்பவர் அப்பாஸிய ஆட்சிக்கு எதிராக பஹ்ரைன், கதார் மக்களைத் திரட்டி புரட்சியில் ஈடுபட்டு தோற்றுப்போய் பஸ்ராவுக்குச் சென்றார். 899 ல் ஷியா பிரிவு கர்மாஷியனின் இஸ்மாயிலி கூட்டம் இங்கிருந்து புனித பயணமாக மக்கா செல்லும் யாத்ரீகர்களைத் தாக்கினார்கள். 906 ல் பதுங்கியிருந்து யாத்ரீகர்களின் வாகனங்களைத் தாக்கி 20,000 பேரைக் கொலை செய்தார்கள். கதாரிகள் கட்டம்போட்ட மேலாடை நெய்வதில் பிரசித்தி பெற்றவர்கள் என்று 13 ம் நூற்றாண்டின் இஸ்லாமிய போதகர் யகுத் அல் ஹமாவி குறிப்பிட்டுள்ளார். 1320 ல் ஓர்முஸ்களின் ஆட்சியின் போது கதாரின் முத்து வாணிபம் நல்ல பொருளாதாரத்தை ஈட்டித்தந்தது. 1521 ல் போர்ச்சுகீசியர்கள் கதார் பகுதியைக் கைப்பற்றி அரேபிய கடலோரங்களில் பல கோட்டைகளைக் கட்டினார்கள். ஆனால் போர்ச்சுகீசியர்களின் அடையாளங்கள் கதாரில் இல்லை. 1550 ல் அல் ஹசா பகுதி மக்கள் தாங்களாகவே ஓட்டோமானின் கீழ் சென்றார்கள். அவ்வப்போது ஓட்டோமான்களின் இராணுவம் இந்த பகுதியில் நடமாடியது. 1670 ல் பனி காலித் பழங்குடியினர் ஓட்டோமான்களின் நடமாட்டத்தை விரட்டினார்கள். 
அப்போதிருந்து கதார் பனி காலித்களின் அதிகாரத்தில் இருந்தது. இதற்கிடையில் குவைத்திலிருந்து கதாரின் ஸுபராஹ் பகுதிக்கு அல் ஜலாஹ்மா மற்றும் அல் கலீஃபா பழங்குடிக் கூட்டத்தினர்கள் குடிபெயர்ந்தனர். அந்த நேரத்தில் பனி காலீதின் தூரத்து உறவினர் ஒருவர் அதிக பலமில்லாமல் ஸுபாராஹ் பகுதியை நிர்வகித்து வந்தார். அதேபோல் 1777 ல் பெர்ஷியர்கள் பஸ்ரா பகுதியைக் கைப்பற்றி இருந்ததால் அங்கிருந்த பல வணிகர்களும், குடும்பங்களும், குவைத்திலிருந்து மேலும் சில குடும்பங்களும் ஸுபாராஹ்வுக்கு குடிபெயர்ந்தார்கள். இதனால் அப்பகுதி செழிப்புற்று முத்து வாணிபமும் பெருகியது. 

கதார் வரலாறு 2

முடிவாக அல் கலீஃபா குடும்பத்தினர் கதாரையும், பஹ்ரைனையும் தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பற்ற, பனி காலித் குடும்பத்தினர் அல் ஹசா பகுதியை 1795 ல் கைப்பற்றினார்கள். அல் ஜலாஹ்மா குடும்பத்தினர் உதுப் குடும்பத்தின் உறவை விலக்கிக் கொண்டு 1783 ல் பஹ்ரைனை தங்களுக்காக இணைத்துக் கொண்டு ஸுபாராஹ் பகுதியை உதுபுக்கு விட்டுக் கொடுத்தார்கள். இதனால் அல் கலீஃபா குடும்பத்திற்கு பஹ்ரைனில் உரிமை இல்லாமல் போனது. அவர்கள் தங்களை ஸுபராஹ்விலிருந்து மனாமா என்ற பகுதிக்கு மாறினார்கள். அங்கிருந்து வஹ்ஹாபிகளுக்கு கப்பம் செலுத்தினார்கள். கதார் பல ஷெய்க் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலிருந்து ரஹ்மாஹ் இப்ன் ஜாபிர் அல் ஜலாஹிமாஹ் தலைமைக்கு வந்தது. 1790 ஸுபாராஹ் வணிகர்களுக்கு வரியில்லாத சிறந்த இடமாக இருந்து செழிப்பாக இருந்தது. 1795 ல் வஹ்ஹாபிகள் கதாரின் அல் ஜலாஹ்மாஹ் பழங்குடியினருடன் கூட்டு வைத்து, கிழக்கில் ஒமானிகளையும், அல் கலீஃபாக்களையும் எதிர்த்தார்கள். மஸ்கட்டின் ஆட்சியாளர் சைத் பின் சுல்தான் பஹ்ரைன் மற்றும் ஸுபராஹ்விலிருந்த வஹ்ஹாபிகளை எதிர்த்து ஸுபாராஹ் கோட்டையைத் தீவைத்துக் கொளுத்தி அல் கலீஃபாக்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனியின் வாணிபத்திற்காக பெர்ஷிய வளைகுடாப் பகுதியில் பிரிட்டிஷ் மேற்கொண்ட ‘ஒப்பந்தய பகுதிகளில்’ கதார் கடல்பகுதியும் ஒன்று. அதில் கதாரின் அல் ஹுவைய்லா, ஃபுவைய்ரித், அல் பித்தா, தோஹா ஆகியவையும் அடங்கும். இதில் தோஹா நல்ல வளர்ச்சி கண்டது. இப்பகுதியில் பழங்குடியினர், குடிபெயர்ந்த அரபுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட அடிமைகளும் இருந்தார்கள். 1821 ல் தோஹா வாசிகள் கடல்கொள்ளையில் ஈடுபட்டதால், கிழக்கிந்திய கம்பெனி குண்டு வீசி தீக்கிரையாக்கியது. இதனால் 400 பேர் வரை நகரை விட்டு ஓடிப்போனார்கள். இதனால் 1828 ல் தோஹாவை அல் புயய்னியன் பழங்குடியினர் ஆட்சி செய்தார்கள். அல் புயய்னியன் பழங்குடியினன் ஒருவன் பஹ்ரைனில் ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக பஹ்ரைன் ஷெய்கால் சிறையிலடைக்கப்பட்டார். இதனால் அல் புயய்னியன் பழங்குடிகள் புரட்சியில் இறங்கினார்கள். இக்காரியத்தால் தூண்டப்பட்ட அல் கலீஃபா கூட்டத்தினர் அவர்களின் கோட்டையை அழித்து அவர்களை தோஹாவை விட்டு விரட்டினார்கள். இதனால் தோஹா நகரம் அல் கலீஃபாக்களின் ஆட்சிக்கு வந்தது.  
1833 ல் இப்பகுதியின் வஹ்ஹாபிகளைக் கண்காணிக்க, பஹ்ரைன் அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல்கலீஃபா என்பவரை அரசு அதிகாரியாக குவைத்தின் கரையோரத்தில் நியமித்தது. அவர் பஹ்ரைனியின் அல் ஹுவைய்லா மக்களை குவைத்தின் ஆட்சியிலிருந்த அல் கலீஃபா குடும்பத்தினருக்கு எதிராக கலவரம் செய்ய வைத்தார். இதனால் இருவருக்கும் இடையில் மஸ்கட்டின் சுல்தானுடைய மகன் முன்பு ஒரு ஒப்பந்தம் 1835 ல் உருவானது. அதன்படி அல் ஹுவைய்லா மக்கள் தங்கள் இருப்பிடங்களைத் தரைமட்டமாக்கி விட்டு பஹ்ரைனை விட்டு போக வேண்டும். அப்துல்லாஹ் பின் அஹ்மதின் உறவினன் ஒருவன் ஒப்பந்தத்ததை மீறி அல் குவாரி என்ற பழங்குடியினரைத் தூண்டிவிட்டு, வெளியேறிக் கொண்டிருந்த அல் ஹுவைய்லாஹ் மக்களை தாக்கச் சொன்னான். 1840 ல் பஹ்ரைன் ஷெய்க்குகளுக்கும், அல் ஹசாவின் எகிப்திய தளபதிக்கும் இடையே நடந்த பல சண்டைகளால் பாலைவன மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். 1847 ல் பஹ்ரைனுக்கு எதிரியாகிப்போன அப்துல்லாஹ் பின் அஹ்மத் அல் கலீஃபா, கதாரிகளின் தலைவர் இசா பின் தாரிஃபுடன் இணைந்து பஹ்ரைனின் ஆட்சியாளர் முஹம்மது பின் கலீஃபாவை ‘ஃபுவௌய்ரித் போரில் சந்தித்தார். பின் கலீஃபாவுக்கு காதீஃப் மற்றும் அல் ஹசாவின் கவர்னர்களின் ஆதரவுடன் 500 வீரர்கள் இருந்தனர். கதாரி படைகளுக்கு பின் தாரிஃப் தலைமையில் 600 வீரர்கள் இருந்தனர். கடுமையான அந்தப்போரில் பின் தாரீஃபும், 80 வீரர்களும் கொல்லப்பட்டு கதாரி படைகள் தோற்றன. பின்னர் பஹ்ரைனின் பின் கலீஃபா, அல் பித்தா பகுதியை சேதப்படுத்தி அம்மக்களை பஹரைனுக்கு அனுப்பினார்.
19 ம் நூற்றாண்டில் ஸுபாராஹ் மற்றும் அல் ருவைஸ் பகுதிலிருந்த பனு தமீம் பழங்குடியினரின் ஒரு பிரிவான அல் தானிகள் கதாரின் தோஹா பகுதியில் தானி பின் முஹம்மது தலைமையில் ஒன்று கூடினார்கள். இவரின் மகன் முஹம்மது பின் தானி அக்கூட்டத்திற்கு தலைவராகி கதாரில் முதலில் ஆட்சியில் அமர்ந்தார். பல அரபு கூட்டுக் குடும்பமாக இருந்த அவர்களில் பனி அலி, பனி ஹமாத், பனி காலித் ஆகிய குடும்பங்கள் முக்கியமானவை. அப்போது இவர்கள் சுமார் 20,000 பேர் இருந்தார்கள். 1949, 1960, 1995 களில் ஆட்சிமாறும் போது இவர்களுக்குள் பெரும் துறத்தல்கள் இருந்தது. இந்த ஒவ்வொரு ஆட்சி துறத்தல்களிலும் அல் தானிகளின் கையே ஓங்கி இருந்தது. எமிரின் குடும்பட்த்தினரே பெரும் அதிகாரமுள்ள பதவிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். முஹம்மது பின் தானிக்குப் பிறகு, அவர் மூத்த   மகன் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது அல் தானி ஆட்சிக்கு வந்தார். 1825 ல் பிறந்த இவர் கதாரை நவீனப்படுத்தினார். முற்காலங்களில் தந்தையுடன் இருந்து பல அரசியல் அனுபவங்களைப் பெற்றார். அல் பித்தா பகுதியிலிருந்து கொண்டு 21 வயதில் தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து கதாரை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்தார். சுற்றுப்பகுதிகளை ஒன்றிணைத்து கதாரை தனி ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். பெர்ஷிய வளைகுடாவின் மீது கிழக்கிந்தியக் கம்பெனிக்காக பிரிட்டிஷும், போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கைத் தடுக்க ஓட்டோமான்களும் ஆர்வமாய் இருந்த போது இருவரையும் அரவணைத்துச் சென்றார்.    

கதார் வரலாறு 3

1867 ல் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது பஹ்ரைனால் கைது செய்யப்பட்டார். கதாரின் பிதோயின் பழங்குடியினர் ஒருவர் அத்துமீறி பஹ்ரைன் பகுதியில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிப்பது சம்பந்தமாக பேசச்சென்ற ஜாஸ்ஸிம் பின் முஹம்மதுவை பஹ்ரைன் ஆட்சியாளர் ஃபைசல் பின் துர்கி கைது செய்தார். இதனால் கதாருக்கும், பஹ்ரைனுக்கும் போர் மூள, பஹ்ரைனை அபுதாபி ஆதரித்தது. கதாரின் பல நகரங்கள் தாக்கப்பட்டன. இறுதியில் 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டு, 60 படகுகள் மூழ்கடிக்கப்பட்டு ஜாஸ்ஸிம் பின் முஹம்மது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஓட்டோமான்கள் தங்கள் இராணுவ பாதுகாப்புப்படைக்கு அல் பித்தா கோட்டையை பயன்படுத்தினார்கள். ஓட்டோமான்கள் தனி நிர்வாகஸ்தர்களை நியமித்து ஸுபாராஹ், தோஹா, அல் வக்ராஹ் மற்றும் கவ்ர் அல் உதைத் ஆகிய பகுதிகளில் வரி வசூலிப்பதை ஜாஸ்ஸிம் பின் முஹம்மது முழுமூச்சாக எதிர்த்தார். இதனால் கதாரின் முன்ணனி அரசியல்வாதிகளையும், ஜாஸ்ஸிமின் இளைய சகோதரர் ஷெய்க் அஹ்மத் பின் முஹம்மது தானியையும் பிடித்துச் சென்றது. இதன் விளைவாக ஜாஸ்ஸிம் பின் முஹம்மது பல பழங்குடி இனத்தவர்களை இணைத்து கடுமையாக ஓட்டோமான் படைகளுடன் மோதி வெற்றி கண்டார். சகோதரரை விடுவித்து பதிலுக்கு ஓட்டோமான் படைகள் சுதந்திரமாக அவ்வப்போது சௌதியின் ஹாஃபூஃப் நகர் செல்ல அனுமதித்தார். கதார், ஓட்டோமான்களுடன் பல போர்கள் புரிந்திருந்தாலும் குறிப்பாக ‘அல் வாஜ்பாஹ் போர்’ பிரசித்தி பெற்றது. இப்போரினால் கதாரிகளுக்கு புகழும், ஆட்சி ஆள சுதந்திரமும் கிடைத்தது. கதாருக்கும், ஓட்டோமான்களுக்கும் இடையில் சமரசம் செய்ய பிரிட்டிஷ் முயன்று தோற்று போனது. முடிவில் கதாரின் ஆட்சியாளராக ஜாஸ்ஸிம் பின் முஹம்மதுவின் சகோதரர் ஷெய்க் அஹமது பின் முஹம்மதுவை வைத்துவிட்டு ஜாஸ்ஸிம் லுசைல் என்ற இடத்திற்கு சென்று அமைதியாக வசிக்க வேண்டும் என்று முடிவானது. அதன்படி கதாரின் ஆட்சியிலிருந்த சகோதரர் அஹ்மதை ஒரு சக படைவீரன் கொன்றுவிட மீண்டும் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். இவருக்கு 19 மகன்கள் இருந்தார்கள். 1913 ல் தோஹா நகரிலிருந்து 24 கி.மீ. தூரத்திலுள்ள லுசாலி என்ற கிராமத்தில் மரணமடைந்தார். இப்போது அப்பகுதி உம் சலால் நகராட்சியாக இருக்கிறது. 
இவருக்குப்பிறகு, மகன் ஷெய்க் முஹம்மது பின் ஜாஸ்ஸிம் பின் முஹம்மது அல் தானி 1913 ல் ஆட்சிக்கு வந்தார். 1881 ல் பிறந்த இவர் வளரும் பருவத்திலேயே பிற்கால ஆட்சிக்கு தந்தையால் பயிற்சி கொடுக்கப்பட்டார். உம் சலால் முஹம்மது பகுதிக்கு கவர்னராகவும் இருந்தார். இவருக்கு 12 மகன்களும், 6 மகள்களும் இருந்தனர். சில பிள்ளைகள் வைப்பாட்டிக்கு பிறந்ததாகக் கூறப்படுகிறது. 1971 ல் இவர் மரணமடைந்தார். ஷெய்க் முஹம்மது பின் ஜாஸ்ஸிம் ஆட்சியிலிருக்கும் போதே அவரை நீக்கிவிட்டு அடுத்து 1880 ல் பிறந்த அப்துல்லாஹ் பின் ஜாஸ்ஸிம் அல் தானி 1913 லிருந்து 1940 வரை ஆட்சிக்கு வந்தார். பிரிட்டனும், ஓட்டோமான்களும் இவரும் இவர் சந்ததியினரும் கதாரை ஆள உரிமை அளித்தார்கள். 1915 ல் ஓட்டோமானை கதாரைவிட்டு வலுக்கட்டாயமாக விலக்கி வைத்தார். 1916 ல் கதாரின் கடல்வழி பாதுகாப்புக்கும், அனைத்து முன்னேற்றத்துக்கும் ஆதரவளிப்பதின் பேரில் பிரிட்டிஷுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதேபோல் 1935 ல் வெளிநாட்டு தாக்குதல்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக பிரிட்டனுடன் மேலும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். 1927 ல் அல் பித்தாவுக்கு அருகில் அல் கூட் கோட்டை ஒன்றைக் கட்டி அதை காவல்நிலையமாக்கி திருடர்களிடமிருந்து பாதுகாத்தார். தலைநகர் தோஹாவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் மதீனத் அஷ் ஷமல் நகராட்சியில் ஸுபாராஹ் நகரத்தில் ஸுபாராஹ் கோட்டை ஒன்றை 1938 ல் கட்டினார். இவரது ஆட்சியில் தான் எண்ணெய் வளத்திற்காக முதல் முறை ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்துல்லாஹ் பின் ஜாஸ்ஸிமின் முதல் மனைவியின் விவரம் தெரியவில்லை. இவரது இரண்டாவது மனைவி ஷெய்கா ஃபாத்திமா பின்த் இசா அல் தானியின் மூலம் இவருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். 1957 ல் இவர் மரணமடைந்தார். 
இவருக்குப்பின் 1895 ல் பிறந்த மகன் அலி பின் அப்துல்லாஹ் அல் தானி 1949 ல் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் முதல்முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ஆட்சியாளர். இவர் இந்தியா, எகிப்து, ஐரோப்பா, லெபனான் மற்றும் லீவண்ட் பகுதிகளுக்குப் பயணம் செய்தார். கதாரின் அடிப்படை கட்டமைப்பிலும், கல்வியிலும் முன்னேற்றம் கண்டார். பல இஸ்லாமிய மதபோதகர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரது ஆட்சியில் தான் முதல் எண்ணெய்கப்பல் துறைமுக நகரமான மெஸ்ஸயீதிலிருந்து 1949 ல் ஏற்றுமதியாகி புறப்பட்டது. ஆண், பெண் பிள்ளைகளுக்கென தனி பள்ளிக்கூடங்களைத் திறந்தார். பல்கலைக்கழகம், மருத்துவமனைகளைக் கட்டினார். தோஹா சர்வதேச விமான நிலையத்தின் கட்டிடத்தையும் துவக்கினார். மேலும் எண்ணெய் வள வருமானத்தில் நல்ல சாலைகள், குடிநீர், மின்சாரவசதி மற்றும் துறைமுகங்களைக் கொண்டு வந்தார். பல துறைகளுக்கு அமைச்சகங்களைக் கொண்டு வந்து பங்குச்சந்தையும் தொடங்கினார். ரொனால்ட் கோட்ரனி என்ற வெளிநாட்டினரை வைத்து கதார் காவல்துறையும் துவக்கினார். அலி பின் அப்துல்லாஹ் 1950 ல் தனக்கு ஆலோசகராக பிரிட்டிஷ் ராயல் ஏர் ஃபோர்ஸின் அதிகாரியாக இருந்த பில்லிப் ப்ளாண்ட் என்பவரை நியமித்துக் கொண்டார். இதுவரை வெளியிடப்படாமலே இருந்த பல இஸ்லாமிய வரலாறுகளை மதபோதகர்களை வைத்து வெளியிட்டார். எண்ணெய் தொழிலாளிகளிடமிருந்து திருப்தி இல்லாத நிலையில் பல எதிர்ப்புகள் கிளம்பின. அதை முன்னின்று சமாதானப்படுத்தினார். இவருக்கு 11 மகன்களும், 3 மகள்களும் இருந்தார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, லெபனானில் பார்பிர் மருத்துவமனையில் 1974 ல் மரணமடைந்தார். இவர் உடல் கதாருக்கு கொண்டு வரப்பட்டு அல் ரய்யான் நகராட்சியில் அடக்கம் செய்யப்பட்டது. 1960 ல் அலி பின் அப்துல்லாஹ்வுக்கு எதிராக கதாரிலும், 15 அரபு நாடுகளிலும் துண்டுப்பிரச்சாரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கதாரின் மக்கள் வறுமையிலும், நோயிலும் வாடிக்கொண்டிருக்க அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போவதாக சாடியிருந்தன. இதனால் ஆட்சியை 1960 ல் தன் மகன் ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் தானியிடம் ஒப்படைத்தார்.
ஷெய்க் அஹ்மத் பின் அலியின் ஆட்சியின் போதுதான் 1971 ல் பிரிட்டிஷாரிடமிருந்து கதார் சுதந்திரமடைந்தது. 1963 ல் தேசிய கூட்டமைப்பு, தொழிலாளர்கள் ஊர்வலம் ஒன்றை நடத்திய போது ஷெய்க் அஹ்மத் பின் அலி அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி சிலரைக் கொன்றார். இவர் நாட்டின் சில ஏழை விவசாயிகளுக்கு கடனுதவியும், சிலருக்கு நிலங்களையும் அளித்திருந்தாலும் இவர் மீது எதிர்ப்புகள் அதிகமிருந்தன. உண்மையில் ஷெய்க் அஹ்மத் பின் அலி ஆட்சியில் தான் கதார் பலதுறைகளில் முன்னேற்றம் கண்டது. இவரது ஆட்சியில் தான் உலகில் கடல்மேல் அமைந்த முதல் எண்ணெய்துறை இத் அல் ஷர்கி ஆகும். மிகப்பெரிய எண்ணெய்துறையான மைய்தான் மஹ்ஸாமும், புல் ஹன்னியன் எண்ணெய்துறையும் இவர் ஆட்சியில்தான் உருவானது. மூன்று மனைவிகளைத் திருமணம் செய்திருந்த இவர் மனைவியரில் ஒருவர் துபாயின் ஷெய்க் ராஷித் பின் ஸைத் அல் மக்தூம் அவர்களின் மகள் ஆவார். இவருக்கு 7 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவர் ஒன்றுவிட்ட சகோதரர் ஷெய்க் கலீஃபா பின் ஹமாத் அல் தானியை கதாரின் துணை ஆட்சியாளராக நியமித்திருந்தார். 1972 பிப்ரவரியில் ஷெய்க் அஹ்மத் பின் அலி வேட்டைக்காக ஈரான் பகுதிக்குச் சென்றிருந்தபோது, அவரை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு, கலீஃபா பின் ஹமத் அல் தானி ஆட்சிக்கு வந்தார். ஷெய்க் அஹ்மத் பின் அலி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அடைக்கலமாக இருந்தார்.
கலீஃபா பின் ஹமத் 1957 ல் கதாரின் கல்வித்துறை மந்திரியாக இருந்தார். 1960 ல் பிரதம மந்திரியாகவும், பொருளாதார மந்திரியாகவும் இருந்த இவர் இறுதியாக துணை ஆட்சியாளராக இருந்தார். இவர் ஆட்சிக்கு வந்ததை கடுமையான ஆட்சியாளரை தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர் என்று பேசப்பட்டார். முதல் வேலையாக அரசை மறுசீரமைத்தார். அரச குடும்பத்தின் செலவுகளைக் குறைத்தார். வெளியுறவுத்துறைக்கு ஒரு மந்திரியை அமைத்து தினசரி நடவடிக்கைகளை அறிந்து கொண்டார். பலதுறைகளுக்கு மந்திரிகளை அமைத்து, வெளிநாடுகளிலும் தூதர் அலுவலகங்களை ஏற்படுத்தினார். எண்ணெய் வளம் அதிகரித்ததால் 1985 ல் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் ஓஹாயோவுடன் ஒரு ஒப்பந்தமும், 1986 ல் அமோகோ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார். உலகின் மிகப்பெரிய 250 ட்ரில்லியன் க்யூபிக் கொள்ளளவு உற்பத்தி கொண்ட ஏரிவாயு தொழிற்சாலையும், 500 ட்ரில்லியன் க்யூபிக் சேமிப்புத்திறன் கொண்ட எரிவாயு கிடங்கும் அமைத்தார். மேலும் கதாரின் பல இடங்களில் எண்ணெய் வளம் அறிய உத்தரவிட்டார். கலீஃபா பின் ஹமத் 1995 ல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் இருந்தபோது, அவர் மகன் ஹமாத் பின் கலீஃபாவால் ஆட்சி பறிக்கப்பட்டார். பின்னர் ஃப்ரான்சில் குடியிருந்த கலீஃபா பின் ஹமத் 2004 ல் கதார் திரும்பினார். இவருக்கு 4 மனைவிகள், 5 மகன்கள், 10 மகள்கள் இருந்தனர்.

கதார் வரலாறு 4

இரத்தம் சிந்தாமல் ஷெய்க் ஹமாத் பின் கலீஃபா அல் தானி 1995 ல் ஆட்சிக்கு வந்தார். கதாரின் எரிவாயு தயாரிப்பு 77 மில்லியன் டன்னுக்கு இருந்தது. உலகின் பணக்கார நாடாக இருந்து ஒரு தனிநபர் வருமானம் ஆண்டுக்கு $86,440 இருந்தது. இவர் பிறந்தவுடனே இவர் தாயார் இறந்து போனதால், மாமன் ஓருவரிடம் வளர்ந்தார். பிரிட்டிஷ் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்று 1971 ல் லெப்டினண்ட் கர்னல் ஆனவர். கதாரின் நடமாடும் படைக்கு தளபதி ஆனார். இவருடைய படை பின்னாளில் ‘ஹமாத் படை’ என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1972 ல் இராணுவத்தில் ஜெனரலாகி, தலைவராகவும் ஆனார். 1977 ல் இராணுவ மந்திரியாக இருந்தார். 1977 லிருந்து 1995 வரை வெளிப்படையாக கதாரின் ஆட்சி வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
கதாரின் எண்ணெய் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். அதிகாரப்பங்கீட்டில் தந்தையுடன் குழப்பம்வர, அவர் ஜெனீவா சென்றிருந்த நேரம் அவரின் வெளிநாட்டு வங்கிக்கணக்கை முடக்கி கதாரின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். இஸ்லாமிய மன்னர்களின் சரித்திரத்தை உடைத்து வெளிப்படையாக இவர் மனைவி ஷெய்கா மோஸா பின்த் நாஸர் அல் மிஸ்னெத் வழக்கறிஞராகவும், கதாரின் கல்வி மற்றும் குழந்தைகள் நலத்துறையையும் பார்த்துக்கொண்டார். ஹமாத் பின் கலீஃபா தானே ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவும், நீச்சல் வீரராகவும் இருந்து, கதாரின் தடகளப் பிரிவை உலகளவில் பலப்படுத்தினார். ஒலிம்பிக் பதக்கம், 15 வது ஆசிய விளையாட்டு பதக்கம் போன்றவற்றை கதார் அணி வெற்றி பெறச் செய்தார். மேலும் பல சாம்பியன் பட்டங்களை கதார் விளையாட்டில் பெறுவதற்கு துணை புரிந்தார். அல் ஜஸீரா என்னும் அரபு செய்தி தொலைக்காட்சிக்கு இவர்தான் நிதி வழங்குவதாக செய்தி பரவியது. செய்திதொடர்பு தலைவர் ஹமாத் பின் தாமர் அல் தானிக்கு இவர் நெருங்கிய உறவினராக இருந்த்தால் $137 மில்லியன்கள் இவரிடம் பெற்றதாகவும் செய்தி. பின் லாடனின் பழைய பேட்டிகளை ஒளிபரப்பி அமெரிக்காவின் விசாரணைக்கு தடையாக இருப்பதாகக் கூறி அமெரிக்காவின் காலின் பாவெல் இச்செய்தி நிறுவனத்தை மூடச்சொல்லி வற்புறுத்தினார். ஷெய்க் ஹமாத் இதை தனி நிறுவனமாக்கி தன் மகன் தமீமை அதற்கு தலைவராக்கினார். ‘ஒரு காலம் வரும் அப்போது இதன் பயணத்தின் புதிய பக்கங்கள் திறக்கும். புதிய தலைமுறைகள் பொறுப்பேற்பார்கள்’ என்றார்.
ஹமாத் பின் கலீஃபாவின் ஆட்சியில் மத்திய ஆசியாவிலேயே முதல்முறையாக (FIFA) சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் போட்டியை 2022 ல் கதாரில் நடத்த உரிமை பெற்றார். இவர் மற்றும் இவர் மனைவியின் ஈடுபாட்டால் பல தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களான கார்னிஜியே மெல்லான் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டௌன் பல்கலைக்கழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம், டெக்ஸாஸ் ஏ&எம் பல்கலைக்கழகம் மற்றும் வீல் கார்னெல் மருத்துவக் கல்லூரி ஆகியவைகளை கதாரில் திறந்தார். 2005 ல் கதார் அருங்காட்சியகம் கழகம் என்று ஏற்படுத்தி ஐ.எம் பெய் என்பவரால் வடிவமைக்கப்பட்ட முயூசியம் ஆஃப் இஸ்லாமிக் ஆர்ட் தோஹா என்று அருங்காட்சியகத்தைத் திறந்தார். இதனால் உலகில் சமகால கலைப்பொருட்களை அதிகம் வாங்கும் நாடாக கதார் அறியப்படுகிறது. இது 2012 ல் சீஸென்னின் “தி கார்ட் ப்ளேயரை” (ஃப்ரென்ச் ஓவியங்கள்) $ 250 மில்லியன்களுக்கு வாங்கியது. இதல்லாமல் திரைப்பட விருதுகள், புத்தகங்கள், திரைப்படங்கள் என்று பல கலைத்துறை விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. கதார் உலகின் பல முன்ணனி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. ஹமாத் பின் கலீஃபா 2012 ல் பாலஸ்தீனின் காஸா பகுதிக்கு சென்று ஹமாஸுக்கு $ 400 மில்லியன்கள் கொடுத்து மருத்துவமனை, அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக உதவி புரிந்தார். சிரியா மற்றும் லிபியாவின் உள்நாட்டுப் போராளிகளுக்கு ஆயுதம் மற்றும் பண உதவிகள் செய்தார். 2013 ல் ஆட்சியைத் தன் 33 வயது மகன் ஷெய்க் தமீமுக்கு வழங்கப்போவதாகச் சொன்னார். 2005 ல் அமெரிக்காவின் நியூ ஓர்லியன்சில் ஏற்பட்ட கத்ரினா புயலுக்கு $ 100 மில்லியன் கொடுத்தார். 2006 லெபனான் போரை முடிவுக்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி புரிந்தார். வெளிநாட்டு இராணுவத்திற்காக அல் உதைத் ஏர்பேஸ் மற்றும் கேம்ப் அஸ் ஸய்லியாஹ் என்ற இரண்டு தளங்களைக் கொடுத்திருக்கிறார். கதார் பல தீவிரவாதக் குழுக்களுக்கு பொருளுதவி செய்வதாக மேற்கத்திய பத்திரிக்கைகள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகின்றன. ஹமாத் பின் கலீஃபாவுக்கு முதல் மனைவி ஷெய்கா மரியம் பின்த் முஹம்மது மூலம் 11 மகன்கள், 13 மகள்களும், இரண்டாவது மனைவி ஷெய்கா மோஸாஹ் பின்த் நாசர் மூலம் 5 மகன்கள், 2 மகள்களும், மூன்றாவது மனைவி ஷெய்கா நூரா பின்த் காலித் மூலம் 4 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். ஹமாத் பின் கலீஃபா, அமெரிக்க உரிமையாளர் மால்கம் க்லேசரிடமிருந்து மான்செஸ்டர் கால்பந்தாட்ட அணியை வாங்குவதற்கு 1.65 பில்லியன் ஈரோக்கள் தர தயாராய் இருப்பதாக பத்திரிக்கை செய்தி வெளியானது. 2013 ல் ஹமாத் பின் கலீஃபா தன் மகன் ஷெய்க் தமீம் பின் ஹமாத் பின் கலீஃபா பின் அல் தானிக்கு ஆட்சியைக் கொடுத்தார்.
ஷெய்க் தமீம் பின் ஹமாத் 1980 ல் இரண்டாவது மனைவி மோஸாஹ் பின்த் நாசருக்குப் பிறந்தவர். பிரிட்டனின் ஷெர்பார்ன் மற்றும் ஹார்ரோ பள்ளிகளில் படித்து, சந்துர்ஸ்டின் ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டம் பெற்றார். கதார் ஆயுதப்படைக்கு தலைவராக இருந்தார். லிபியாவின் மாம்மர் கடாபியை நீக்க லிபிய விடுதலைப்படைக்கு உதவினார். கதாரின் விளையாட்டுத்துறைக்கு அதிக ஆர்வமூட்டுபவராக இருக்கும் இவர் வெளிநாடுகளில் பில்லியன்களுக்கு மேற்பட்ட டாலர்களை முதலீடு செய்துள்ளார். 2015 மார்ச்சில் இந்தியாவுக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இந்தியாவில் முதலீடுகள் செய்வதாக கூறியுள்ளார். ஷெய்க் தமீம் பின் ஹமாதின் முதல் மனைவி ஷெய்கா ஜவாஹிர் பின்த் ஹமாத் மூலம் இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும், இரண்டாவது மனைவி ஷெய்கா அனூத் பின்த் மன அல் ஹஜ்ரி மூலம் ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். பல பட்டங்களையும், பதவிகளையும் பெற்ற ஷெய்க் தமீம் பின் ஹமாத் தற்போதும் கதாரின் ஆட்சியாளராக இருக்கிறார்.