வியாழன், 16 ஜூலை, 2015

பர்மகிட்கள் வரலாறு

பர்மகிட்கள் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
பர்மகிட்கள் என்பவர்கள் எட்டாம் நூற்றாண்டில் அப்பாஸிட்கள் ஆட்சியில் வைசிராயராக இருந்தவர்கள். அரபியில் பராமிகாஹ் என்றால் தலைவர்கள், தலைமை நிர்வாகஸ்தர்கள் என்று பொருள். இவர்கள் நவ்பஹார் (நவ விஹாரா) புத்த கோவிலின் பூசாரியாக இருந்தவர்களின் வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். ஈரானின் கோராசான் மாகாணத்தில் பல்க் என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள். பல்க் மாகாணம் ஸோரோஸ்ட்ரியன்கள் அதிகமுள்ள பகுதியாதலால் பர்மகிட்கள் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற கருத்து இஸ்லாமியர்களிடம் உண்டு. ஆயிரத்தோரு அரபு இரவுகள் என்ற கதைகளில் இவர்களின் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருந்தன. பர்மகிட்கள் தத்துவம், அறிவியல், இலக்கியம் ஆகியவைகளில் மிகவும் சிறந்தவர்கள். இவர்கள் கால்வாய்கள், மசூதிகள், தபால் நிலையங்கள் அமைப்பதில் புகழ் பெற்றிருந்தார்கள். உலகின் முதல் காகித ஆலையை பாக்தாதில் நிறுவியதில் பர்மகிட்களுக்கும் பங்குண்டு. அறிவியலில் மிகச்சிறந்த பங்களிப்பாற்றினார்கள். அறிவியலில் இந்தியாவுக்கும், அரபு தேசத்திற்கும் பாலமாக இருந்தார்கள், ரமலான் மாதத்தில் முதல் முறையாக மசூதிகளை இவர்கள் தான் விளக்குகளால் அலங்கரித்தார்கள். அதேநேரத்தில் டைக்ரிஸில் பளபளக்கும் அரண்மனைகள் கட்டி செல்வத்தை வீணடித்தவர்கள்.
பர்மகிட்கள் அறிவில் சிறந்து உயர்கல்வி, மரியாதை, திட்டமிடுதல், கணிப்பது ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். அரேபியா, பெர்ஷியா, மத்திய ஆசியா மற்றும் லீவண்ட் பகுதிகளில் பெயருடன் விளங்கினார்கள். பாக்தாதில் பர்மகிட்களின் சபை உலமாக்களாலும், கவிஞர்களாலும், மதபோதகர்களாலும் நிரம்பி இருக்கும். 663 ல் பர்மகிட் அரபுகளிடம் வீழ்ச்சி பெற்ற பிறகு, காலித் இப்ன் பர்மக் என்பவரும் அவர் சகோதரர்களும் ஈராக்கின் இராணுவ நகரமாக இருந்த பஸ்ரா சென்று இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். பர்மகிட்களில் காலித் இப்ன் பர்மக்கே மிகவும் புகழ் பெற்றவர். 8 ம் நூற்றாண்டுகளில் அப்பாஸிட்கள் தொடங்கியிருந்த புரட்சிப் படையின் ஆதரவாளராக இருந்தார். கலீஃபாக்கள் அல் ஸஃப்ஃபாஹ், அல் மன்சூர் ஆகியோரிடம் உயர் அதிகாரத்தில் பணி புரிந்திருக்கிறார். அப்பாஸிட்கள் ஈராக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, காலித் கொள்ளைப் பொருள்களைப் பங்கிடுபவராக இருந்தார். பிறகு, டையர் குன்னா என்ற மாகாணத்திற்கு நிர்வாகஸ்தராக நியமிக்கப்பட்டார். கலீஃபா அபூல் அல் அப்பாஸ் அஸ் ஸஃப்ஃபாஹ் ஆட்சியில் அபூல் அல் ஜஹ்ம் என்பவருடன் இணைந்து இராணுவப் பணிகளையும், வரி வசூலிப்பையும் கவனித்துக் கொண்டார்.
கலீஃபா அல் மன்சூர் ஆட்சியில் ஃபர்ஸ் மாகாணத்தின் கவர்னராக ஆக்கப்பட்டார். 765 ல் மற்றவர்களுடன் சேர்ந்து இளவரசர் இஸா முடிசூட உதவி புரிந்தார். 767 லிருந்து 771 வரை தபரிஸ்தானில் கவர்னராய் இருந்து நாணயங்களை வெளியிட்டார். உஸ்தூனா வண்த் என்ற இடத்தைக் கைப்பற்றி மன்சூராஹ் என்ற நகரத்தை உருவாக்கினார். 775 ல் அல் மன்சூர் காலிதை அரசியல் சூழ்நிலையின் காரணமாக பதவி நீக்கி ஒரு பெரும் தொகையை அபராதமாகவும் விதித்தார். அல் கைய்ஸுரானின் இளவரசர் அல் மஹ்தியின் மனைவி இவருக்கு தொகை சேர உதவிபுரிந்தார். இவர் மகன் யஹ்யாவை அஜர்பைஜானை கவனிக்க அனுப்பிவிட்டு, குர்திஷ்களின் தொந்தரவு மிகுந்த மோசூலுக்கு காலிதை அனுப்பினார்கள். அல் மஹ்தியின் ஆட்சியில் காலித் இப்ன் பர்கத் செல்வாக்குடன் இருந்து தன் மகன் யஹ்யாவை ஃபர்ஸ் பிரதேசத்தின் கவர்னராக்கினார். 781 ல் காலித் அவர்கள் இறந்து போனார்கள்.
தந்தையுடன் இருந்து நல்ல நிர்வாகத்திறன் பெற்றிருந்த யஹுயா அவர்கள் 778 ல் கலீஃபாவின் மகன் ஹாரூனுக்கு தனிச் செயலாளரானார். கலீஃபா மகன், ஹாரூனுடன் யஹ்யாவை அனுப்பி பைசாந்தியர்களுடன் படையெடுக்க உத்தரவிட்டார். அதன்பின் மேற்குப் பிராந்தியங்களுக்கு ஹாரூனை நிர்வகிக்கவும், யஹ்யாவை உதவியாகவும் நியமித்தார். அடுத்த கலீஃபாவாக ஹாரூனைத் தேர்ந்தெடுக்க அல் மன்சூர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்குள் மரணமடைய  சகோதரர் மூஸா அல் ஹாதி புதிய கலீஃபாவானார். ஹாரூன் எதிர்க்க வேண்டாம் என்ற முடிவில் இருந்தார்.
அல் ஹாதி, ஹாரூனையும், யஹ்யாவையும் அவர்களின் பொறுப்புகளிலேயே இருக்கச் செய்தார். அல் ஹாதி அடுத்து தன் மகனை கலீஃபாவாக முயற்சித்தார். இதனால் வெகுண்ட ஹாரூன், யஹ்யா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் புரட்சியில் இறங்கினார். இதனால் குழப்பங்கள் ஏற்பட்டு, ஹாரூன் மற்றும் யஹ்யா சிறை பிடிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் அல் ஹாதி இறந்து போனார். அதைச் சரியாகப் பயன்படுத்தி தாய் ராணியார் மற்றும் யஹ்யாவின் உதவியுடன் ஹாரூன் அர் ராஷித் 786 ல் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதன் பிறகு, அதிகாரங்கள் யஹ்யாவிடமும், அவரின் மகனிடமும் வந்தது. யஹ்யா வஸீராகவும், அவர் மகன்கள் ஃபத்ல் மற்றும் ஜாஃபர் கலீஃபாவின் தனி செயலாளர்களாகவும் ஆனார்கள். யஹ்யா கலீஃபாவை பாக்தாதுக்கு அழைத்துப் போய் பல மதபோதகர்களை சந்திக்க வைத்தார். யஹ்யாவும், ஜாஃபரும் எழுதுகோல்களால் ஆளக்கூடியவர்கள் “அஹ்ல் அல் கலம்’ என்று புகழ் பெற்றவர்கள். பின்னாளில் அல் ஃபத்ல் குராசனுக்கு கவர்னராகவும், ஜாஃபர் வஸீர் பதவியும் வகித்தார்கள். இளைய சகோதரர் ஜாஃபர் ஹாரூன் அர் ராஷீதுக்கு பிரியமானவராக இருந்து எல்லா விசேஷங்களிலும் கலந்து கொண்டார். 796 ல் கலீஃபா ஹாரூன் சிரியாவில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஜாஃபரை அனுப்பினார். அவர் நிலைமைகளை சீராக்கி திரும்பி தபால், துணிகள் மற்றும் நாணயத்துறைகளுக்கு திவானாக நியமிக்கப்பட்டார். தன் பெயர் பொறிக்கப்பட்ட பல நாணயங்களை ஜாஃபர் வெளியிட்டார்.
அல் ஃபத்ல் மிக நேர்மையானவராகக் கருதப்பட்டார். 793 ல் குராசான் பகுதிக்கு கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தார். காபூலில் ஏற்பட்ட தொந்திரவுகளை சரி செய்தார். 797 ல் தந்தை மக்கா புனித பயணம் சென்றிருந்த சமயத்தில் அவரின் பணிகளை ஃபத்ல் கவனித்தார். கலீஃபா அர் ராஷீதின் மூத்த மகன் ஒருவருக்கும் ஆசிரியராக இருந்தார். அல் ஃபத்ல் தான் ரமதான் மாதத்தில் அனைத்து மஸ்ஜிதுகளிலும் விளக்கு ஏற்றும் பழக்கத்தைக் கொண்டு வந்தார். இந்த பர்மகிட்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிக சொத்து சேர்த்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு முறை ஹாரூன் அவர்கள் பாக்தாத் வரும் போதும், புதிய பளபளக்கும் மாளிகையைப் பார்த்தால், யாருடையது என்று கேட்டால் அது பர்மகிட்களுடையது என்றே பதில் கிடைக்கப் பெற்றார். கோராசானில் கவர்னராக இருந்த அலி இப்ன் மஹான் என்பவர் யஹ்யாவும், ஜாஃபரும் அடிக்கடி தன் அதிகாரத்தில் தலையிட்டு தொந்திரவு செய்வதாக புகார் அளித்திருந்தார். செல்வச்செழிப்பில் மிதந்த பர்மகிட்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்கள். யஹ்யா பின் காலித் தன் மாளிகையின் சுவற்றில் தங்கத்தகடுகளைப் பதித்திருந்தார். ஹாரூனின் மாளிகை அப்போதைய மதிப்பில் 20 மில்லியன் திர்ஹாம்களில் இருந்தது. யஹ்யா இப்ன் அப்துல்லாஹ் என்பவரை கலீஃபா ஹாரூன் அவர்கள் பெர்ஷியாவில் டைலம் அரண்மனையை ஆள்வதற்கு அனுப்பினார். ஆனால், நாளடைவில் யஹ்யா இப்ன் அப்துல்லாஹ் கலீஃபாவையே மிரட்டினார். இதனால் வெகுண்ட கலீஃபா அவரைப்பிடித்து அல் ஃபத்லின் காவலில் வைத்துக் கொள்ள வைத்தார். அல் ஃபத்ல் அவரைத் தப்பிக்கவைத்து கலீஃபாவுக்கு துரோகம் செய்தார். அதற்கிடையில் ஜாஃபருக்கும், கலீஃபா ஹாரூன் அல் ராஷிதின் சகோதரி அப்பாசாவுக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது. கலீஃபா ஹாரூன் இருவருக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டார். ஆனால், இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று உத்தரவு போட்டார். ஏனென்றால் பின்னாளில் அக் குழந்தை ஆட்சிக்கு உரிமை கோரலாம். இருவரும் ஒப்புக்கொண்டு திருமணம் செய்ய உத்தரவை மீறி விரைவில் ஒரு ஆண்குழந்தையைப் பெற்றார்கள். இதனால் ஜாஃபர் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். 
இடையில் யஹ்யா பெர்ஷியாவில் டைலம் பகுதியை தனதாக்கிக் கொண்டு, அப்பாஸிட்களை சங்கடத்தில் ஆழ்த்தினார். ஜாஃபர் 803 ல் தூக்கிலிடப்பட்டு பாக்தாதின் பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்தார். கலீஃபா ஹாரூன் அவர் மீது நடவடிக்கை எடுக்க, பெரும் தொகை கொடுத்து தப்பிக்க விடுமாறு கலீஃபாவுக்கு தூது விட்டார். மற்ற பர்மகிட்கள் சிறை பிடிக்கப்பட்டு, அவர்களின் சொத்துகள் கைப்பற்றப்பட்டன. யஹ்யாவும், அல் ஃபத்லும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் தேசத்துரோகத்திற்காக தண்டனை கொடுக்கப்பட்டிருந்தார்கள்.துலுனித்கள் வரலாறு

துலுனித்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
துலுனித்கள் துருக்கிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமிய எகிப்தில் முதல் சுதந்திர ஆட்சியாளர்கள் இவர்கள் தான். 868 லிருந்து ஆட்சி செய்தார்கள். அப்பாஸிய கலீஃபாக்களின் ஆட்சியின் போது தலைநகர் பாக்தாதிலிருந்து நீண்ட தொலைவிலிருந்த மாகாணங்களை நிர்வகிப்பதில் நிர்வாக சிக்கல் இருந்தது. இதனால் சில மாகாணங்களை அங்கிருந்த கவர்னர்களும், ஊர் தலைவர்களும் தனதாக்கிக் கொண்டு ஆண்டு வந்தார்கள். சிலவற்றை அப்பாஸிய ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். சிலவற்றை கப்பம் செலுத்தச் சொல்லி ஆண்டு வந்தார்கள். கலீஃபா அல் முவஃப்ஃபக் மீண்டும் தென் ஈராக்கில் ஆட்சியை நிலை நிறுத்தினார். ஆரம்பத்தில் துருக்கிய பாரம்பரியத்தில் வந்த அஹ்மத் இப்ன் தூலூன் என்பவர் பாக்தாதில் அமைக்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவில் இருந்தார். பின் கலீஃபா அல் முஃதசிம் சமர்ராவை நிறுவிய போது அங்கே அனுப்பப்பட்டார். பிறகு கலீஃபா அல் முஃதஸ் இவரை எகிப்தின் கவர்னராக அங்கு அனுப்பினார். நாளடைவில் எகிப்திய இராணுவம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்திய அஹ்மத் இப்ன் தூலூன் எகிப்தின் மொத்த நிர்வாகத்தை தனதாக்கிக் கொண்டார். பிறகு அப்பாஸிய கலிஃபாவுடன் கப்பம் செலுத்துவதாக ஒப்பந்தமானது. ஆனால், நாளடைவில் கப்பம் செலுத்தாததால் அப்பாஸிய கலிஃபா இராணுவ நடவடிக்கை எடுத்தார். அஹ்மத் இப்ன் தூலூன் அதை எதிர் கொண்டு வெற்றி பெற்று, உடன் சிரியாவையும் கைப்பற்றினார்.
அஹ்மத் இப்ன் தூலூன் பாக்தாதில் பிறந்தவர். அப்பாஸிய கலீஃபா துருக்கி அடிமைகளை இராணுவத்திற்கு தேர்ந்தெடுத்ததில் தூலூனின் தந்தையும் ஒருவர். சமர்ராவிலிருந்த போது இராணுவப் பயிற்சியும், மதக் கல்வியும் கற்றுக் கொண்டார். அரண்மனை பாதுகாப்புப் படையிலிருந்த துருக்கிய தளபதி ஒருவரின் மகள் ஹதுனை தூலூன் மணந்து அப்பாஸ், ஃபாத்திமா என்ற இரு குழந்தைகளைப் பெற்றார். அஹ்மத் இப்ன் தூலூன் பைஸாந்தியர்களை எதிர்த்து டார்சஸ் என்ற இடத்தை வென்ற பிறகு, கலீஃபா மெய்யெஸ் என்ற வைப்பாட்டியைப் பரிசளித்தார். அவர் மூலம் குமாரவைய் என்ற மகனைப் பெற்றார். இவர் இறந்த பிறகு, இவர் மனைவியை துருக்கிய தளபதி பயிக் பெய் திருமணம் செய்து கொண்டார்.
பத்தாண்டுகளுக்கும் அதிகமாக மிகச் சிறந்த இராணுவத்துடன், திறமையான அதிகாரிகளையும் வைத்திருந்தார். தனக்குப் பிறகு மகன் குமாரவைய்யை ஆட்சிக்கு தயார் படுத்தினார். கலீஃபாவுக்கு கப்பம் செலுத்தாததால் அந்த பணத்தைக் கொண்டு, நல்ல திட்டங்களை செயல் படுத்தினார். கப்பல் படையை உண்டாக்கி அதன் மூலம் வாணிபத்தில் வருவாயைப் பெருக்கினார். ஜோர்டான் பள்ளத்தாக்கை கைப்பற்றி பைஸாந்தியர்களின் எல்லையிலுள்ள லெபனான் மலைப்பகுதி வரை முன்னேறினார். இதனால் அப்பாஸியர்கள் எகிப்தின் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுத்தார். எகிப்தின் கவர்னராக இருந்தபோது ஜபல் யஷ்குர் என்ற இடத்தில் இப்ன் தூலூன் மஸ்ஜித் ஒன்றைக் கட்டினார். நூஹ்(அலை) நபி அவர்களின் கப்பல் இங்கு தங்கியதாக அவ்வூர் மக்கள் சொல்கின்றனர். சுவற்றின் உட்புறமும், வெளிப்புறமும் இயற்கையாக உளு செய்வதற்காக நீரூற்று அமைத்தார். இதன் மினாரா கோபுரத்தின் படிகளில் ஒருவர் குதிரையுடன் ஏறலாம். 1177 ல் ஃபாத்திமிட்களின் வஸீர் பத்ர் அல் ஜமாலி இதை சீரமைத்தார். 1296 ல் சுல்தான் லஜீன் என்பவர் இந்த மஸ்ஜிதை சீரமைத்தார். பழைய தலைநகர் ஃபுஸ்தத்துக்கு பதிலாக அல் கட்டாயைத் தலைநகரமாக்கினார்.
தூலூத்களின் ஆட்சியில் அஹ்மத் இப்ன் தூலூனுக்குப் பிறகு அவர் மகன் குமாரவைய் ஆட்சிக்கு வந்து யூப்ரடீஸிலிருந்து நூபியா வரை நிலப்பரப்பைப் பெருக்கி னார். இவர் பதவிக்கு வந்தவுடன் கலீஃபா அல் முவஃப்ஃபக்கின் இராணுவத்தை சிரியாவில் எதிர் கொண்டார். உண்மையில் இவர்தான் தூலூத்களின் ஆட்சியை ஸ்திரப்படுத்தினார். 886 ல் கலீஃபா அல் முவஃப்ஃபக்கிடம் ஒப்பந்தம் போட்டு தூலூன்களின் ஆட்சியை எகிப்தில் உறுதி செய்து, அடுத்த 30 ஆண்டுகளுக்கு சிரியாவிலும் தங்கள் ஆட்சியை பாதுகாத்தார். மீண்டும் 892 ல் கலீஃபா முஃததிதுடன் பழைய ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டார். இவர் கட்டிய நீலக்கண் அரண்மனை மிகவும் புகழ் பெற்றது. பல அரண்மனைகளையும், தோட்டங்களையும் கட்டினார். ஒரே ஒரு முறை தவிர இவர் குதிரை ஏற்றம் செய்ததில்லை. குமாரவைஸ் தன் மகள் கத்ர் அல் நதாவை 892 ல் அப்பாஸிட் கலீஃபா அல் முஃததுக்கு மணமுடித்துக் கொடுத்தார். மணமகள் சீதனமாக அக்காலத்திலேயே மிகப்பெரிய தொகையாக 400,000 தீனார்களைக் கொடுத்தார். இவர் காலத்தில் தூலூன்களின் அரசுக் களஞ்சியத்தை 10 மில்லியன் தீனார்களுக்கு உயர்த்தினார். குமாரவைஸுக்குப் பிறகு, வந்த அவர் மகன் அபு இ அஷிர் (ஜைஷ்) திறமையற்று இருக்க, அவர் சகோதரர் ஹாரூன் ஆட்சிக்கு வந்தார். எட்டாண்டுகள் ஆண்ட அவர் அப்பாஸியர்கள் சிரியாவைக் கைப்பற்றி எகிப்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தருணத்தில் 904 ல் படுகொலை செய்யப்பட்டார். பிறகு, அவர் சிறிய தந்தை ஷய்பான் இப்ன் அஹ்மத் இப்ன் தூலூன் ஆட்சிக்கு வந்து அப்பாஸிய தளபதி முஹம்மது இப்ன் சுலைமானின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இருந்தார். அத்துடன் தூலூன்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.