புதன், 17 டிசம்பர், 2014

செல்ஜுக்குகள் சரித்திரம் 7நான்காம் கிலிக் அர்சலனின் மகன் மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாத் மன்னராய் இருந்த போது ஆறு வயது, இதனால் அவரின் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த மொய்னுத்தீன் சுலைமானுக்கு சாதகமாகி  மொத்த ஆட்சி அதிகாரமும் தன் வசம் வைத்திருந்தார். மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாத் எதிர்காலத்தில் கொன்யாவைச் சுற்றியுள்ள பகுதியை மட்டும் உரிமை கொண்டாட முடியும். அடுத்த பத்தாவது ஆண்டில் மங்கோலியர்களின் கீழ் வழக்கமாக சுதந்திரமாக ஆளும் அதிகாரம் பெற்றார். 1276 ல் மொய்னுத்தீன் சுலைமான், எகிப்தின் மம்லுக் சுல்தானாகிய பைபருடன் கூட்டு சேர்ந்து மங்கோலியர்களை போரிட்டு ஆசியா மைனரை விட்டு விரட்டி தன்னை மங்கோலியர்களின் கீழில்லாத சுல்தானாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். அதன்படி மம்லுக்கின் பைபர் படை எடுத்து வந்து மங்கோலியர்கள் வசமிருந்த எல்பிஸ்டான், கைசெரி நகரங்களைக் கைப்பற்றினார். பின் சுல்தான் பைபர் வெளியில் அறிந்து கொள்ள முடியாத சில காரணங்களால் போரிலிருந்து விலகி எகிப்து சென்று விட்டார். இதனால் மொய்னுத்தீன் சுலைமான் டோகத் என்ற இடத்தில் தனியாக விடப்பட்டு மங்கோலியர்களுக்கு எதிரான போர் திட்டத்திற்கு மொய்னுத்தீன் சுலைமானின் துரோகம் தான் காரணம் என்பது வெளிப்பட்டு அவரையும், உடனிருந்த சிற்ப, கட்டிட கலை நிபுணரும், மந்திரியுமான சாஹிப் அடாவும் கொல்லப்பட்டனர்.                    
                       மொய்னுத்தீன் சுலைமானின் மரணத்திற்குப் பிறகும் பேரரசின் குழப்பங்கள் தீரவில்லை. 1283 ல் மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாதும் மங்கோலியர்களால் கொல்லப்பட்டார். எவ்வளவு தான் குழப்பங்கள் இருந்தாலும் செல்ஜுக்குகள் கட்டிடம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தார்கள். கெசிக்கோப்ருவிலும், தூரக், ஓரெசின், எக்ரிட் மற்றும் கேயில் அரண்மனைகளும், பாலங்கள் அமைத்தார்கள். கைசெரியில் சாஹிபியே மதரஸா, சிவாஸில் கோக் மதரஸா, அஃப்யொன் உலு கேமியில் மதரஸா கட்டினார்கள். இவர்களால் விடப்பட்ட சிஃப்டி மினாரே மதரஸா, சிவாஸில் முஸ்ஸாஃபர் பருசிர்டி மதரஸா, அமஸ்யா கோக் மதரஸா மற்றும் அஃப்யோனில் டோரும்டாய் கோபுரங்களை மங்கோலியர்கள் முழுமையாக கட்டினார்கள்.
                                     எந்த நேரமும் குடும்பத்திற்குள் பதவிச் சண்டை, குழப்பங்களுக்கு மத்தியில் இறுதியாக இரண்டாம் மசூத் என்பவர் தன்னை கைசெரியின் சுல்தானாக அறிவித்துக் கொண்டார். அவரும் அவர் மகன் மூன்றாம் மசூதும் 1303 ல் கொலை செய்யப்பட்ட பிறகு, அனடோலியா (துருக்கி) செல்ஜுக்கு களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில் மங்கோலியர்களும் பலமும் மங்கத் துவங்கியது. அனடோலியா சிறு சிறு பகுதிகளாக உள்ளூர் ஆட்சியாளர்களாலும், எஞ்சிய செல்ஜுக்குகளின் அறியப்படாத குடுப்பத்தவர்களாலும் ‘பெய்லிக்கு’கள் என்றழைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆண்டுவந்தார்கள். இப்படியான பகுதிகள் கரமான், ஜெர்மியான், எஸ்ரிஃப், ஹமித், மெண்டிசி, கேண்டர், பெர்வனி, சாஹிப் அடா, கரெசி, ஸருஹான், அய்டின் மற்றும் ஒஸ்மனோகுல்லார் ஆகியவை ஆகும். சரித்திரம் இதை “பெய்லிக் காலம்” என்று குறிப்பிடுகிறது. அனடோலியா செல்ஜுக்குகள் ஆட்சி இழந்ததற்கு மங்கோலியர்களின் வரவும் ஒரு முக்கிய காரணம். இதன் பிறகு, சற்று பலம் வாய்ந்த கரமான் பகுதி பெய்லிக் மன்னர் மெஹ்மூத் பெய் என்பவர் தென் துருக்கியில் பிரபலமானார். அவர் அரசு மொழியாக துருக்கியைத் தவிர வெறெதுவும் ஏற்றுக் கொள்ள மறுத்தார். மற்றொரு பெய்லிக் ஓஸ்மனோகுல்லாரி சரித்திரத்தில் தங்கள் பெயரை மிகவும் அழுத்தம் திருத்தமாக எழுதும் வண்ணத்தில் வெளிக் கிளம்பி னார்கள். ஓஸ்மனோகுல்லாரி என்றால் ஒஸ்மானின் மகன்கள் என்று பொருள். அவர்களில் எர்துக்ருல் என்பவர் அங்காரா மற்றும் கான்ஸ்டாண்டி நோபிளின் இடையில் ஸோகூத் என்னும் இடத்தில் பெருவாரியான நிலப்பரப்பைக் கைப்பற்றி இருந்தார். அவருக்குப் பிறகு, அவர் மகன் ஒஸ்மான் ஆளுகைக்கு வந்தார். ஒஸ்மான் துருக்கி மொழியில் ஒத்மான் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒஸ்மானின் தொடர்ச்சியாக வந்தவர்கள் பெரும் பேரரசை நிறுவினார்கள். சிறு பகுதியை ஆண்ட இவர்கள் கற்பனைக்கு எட்டாத வண்ணம், இதுவரை உலகம் கண்டிராத துருக்கி “ஓட்டோமான்" களாக ஆதிக்கம் செலுத்தினார்கள். 

செல்ஜுக்குகள் சரித்திரம் 6இரண்டாம் கியா ஸுத்தீன் கெயுஸ்ரெவ் மரணமடையும் போது வெவ்வேறு தாய்க்குப் பிறந்த மூன்று இளைய பிள்ளைகளை விட்டுச் சென்றார். இதனால் செல்ஜுக் பேரரசை முறையாக ஆளத்தகுதியான ஆட்சியாளர் இல்லாமல் போனது. இந்த நிலைமையில் செல்ஜுக் பேரரசு தானாகவே இல்கானித் மங்கோலிய ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் சென்றது. இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவின் மூன்று பிள்ளைகளின் சச்சரவால் செல்ஜுக்குகளின் பேரரசு மேலும் பலவீனமானது. இறுதியில் மூவரும் சேர்ந்து தனித்தனியாக பிரித்து ஆள்வது என்று முடிவானது. 1249 ல் இடையில் துணை மந்திரி செலாத்தீன் கரடாய் என்பவர் அரசியல் தரகராக செயல்பட்டு சகோதரர்களுக்கும், மங்கோலியர்களுக்கும் இடையில் ஒரு ஆட்சி நிர்வாக ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். அதன்படி மூன்று சுல்தான்களும் இணைந்து கையெழுத்திட தனித்தனி மாகாணம் பிரிக்கப்பட்டு மூன்று பேரும் மங்கோலிய கானின் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்து கொள்ளலாம் என்று முடிவானது. கொன்யா மற்றும் கிஸிலிர்மாக் ஏரியின் மேற்குப்பகுதி மூத்த மகன் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கும், சிவாஸும் கிஸி லிர்மாக் ஏரியின் கிழக்குப் பகுதி நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனுக்கும், மலத்யாவுக்கு அருகில் உள்ள பகுதி இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதுக்கும் என்று முடிவானது. மங்கோலிய கானிடம் எதையாவது பெறுவதென்றாலும், கேட்பதென்றாலும் மூவரும் மூன்று விதமாக அணுகினர்.
                         இந்த மூவர் ஆட்சி 1257 வரை நீடித்தது. இவர்களின் தந்தையார் இரண்டாம் கியாஸுத்தீனிடம் பணியாற்றிய மந்திரி செம்ஸ் அத்தீன் இஸ்ஃபஹானி என்பவர் மூவர் கூட்டணி ஆட்சிக்கும், மங்கோலிய கானுக்கும் இடையே பொதுவாக இருந்து பார்த்துக் கொண்டார். 1249 ல் மிகவும் திறமை வாய்ந்த இவர் கைது செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டார். அதேபோல் இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதும் 1257 ல் தனது பிரதேசத்தை ஆள விரும்பாமல் மங்கோலிய கானிடம் திருப்பிக் கொடுக்க முடிவெடுத்தபோது எர்ஸுரும் என்ற இடத்தில் அவரின் உயர் அதிகாரியால் கொல்லப்பட்டார். இப்போது மீதி இரண்டு சகோதரர்களில் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் தாய் கிரேக்க வம்சாவழி ஆனதால், அவர் பைஸாந்தியர்களின் உதவியை நாடி மங்கோலிய கானை எதிர்க்க திட்டமிட்டார்.  நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலன் மொத்த பகுதிகளையும் மங்கோலிய கானிடம் கொடுத்துவிட எண்ணினார். மேலும் இந்த சூழ்நிலையில் மந்திரி கரடாயிடம் ஆலோசனை பெற எண்ணினார். ஆனால்  எதிர்பாராத விதமாக கரடாய் இறந்து போனார். செல்ஜுக்குகளின் நம்பிக்கை தளர்ந்தது. மங்கோலிய கான் பேரரசை இரண்டாகப் பிரித்து சிவாஸை நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனுக்கும், தலைநகர் கொன்யாவை இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
                           இதற்கிடையில் குறிப்பிடத்தக்க நபராக செல்ஜுக்குகளின் அரசியல் அரங்கில் நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனின் பிரதம மந்திரி மொய்னுத்தீன் சுலைமான் நுழைந்தார். சுயசிந்தனையும், ஆள வேண்டும் ஆசையும் கொண்ட அவர் எல்லா அரசியல் அதிகாரமும் தன் கையில் வர வேண்டும் என்று விரும்பினார். மங்கோலியர்கள் அப்பாஸிட்கள் வசமிருந்த பாக்தாதைக் கைப்பற்ற தங்களுக்கு சிரியா போருக்கு உதவ இரு இளவரசர்களுக்கும் உத்தரவிட்டார்கள். 1261 ல் கான்ஸ்டாண்டிநோபிளைக் வெற்றி கொண்டு மைக்கேல் பலாயோலோகோஸ் என்பவர் பைஸாந்திய பேரரசின் மன்னரானார். இதனால் ஆர்வம் கொண்ட இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸும், மந்திரி மொய்னுத்தீன் சுலைமானும் உடனே கிரீமியா சென்று மைக்கேல் பலாயோலோகோஸிடம் மங்கோலியர்களுக்கு எதிராக போரிட ஒத்துழைப்பைக் கேட்டனர். இது இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தியது. மைக்கேல் பலாயோலோகோஸ் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸை சிறைப்படுத்தி 1278 ல் தூக்கிலிட்டுக் கொன்றார். தற்போது நான்காம் கிலிக் அர்சலன் மொத்த செல்ஜுக்குகளின் பேரரசுக்கும் ஆட்சியாளரானார். மந்திரி மொய்னுத்தீன் சுலைமான் உயர் பதவியாக சுல்தானின் அதிகார ஆலோசகராகவும், முதல் மந்திரியாகவும் அதிகாரம் பெற்றார். தூக்கிலிடப்பட்ட இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் மந்திரி சாஹிப் அடா எவ்வளவோ முயன்றும் தன் முந்தைய பதவியைப் பெற முடியாமல் மொய்னுத்தீன் சுலைமானின் கீழ் பணி செய்தார்.
                                    பதவி வெறிபிடித்த மொய்னுத்தீன் சுலைமானால் நான்காம் கிலிக் அர்சலன் விருந்தொன்றில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார். ஆட்சி நான்காம் கிலிக் அர்சலனின் இளைய மகன் வசம் சென்றது. திட்டப்படி பேருக்கு மகன் மன்னனாய் இருந்தாலும் மொய்னுத்தீன் சுலைமான் தான் ஆட்சி செய்தார். மொய்னுத்தீன் சுலைமான் சினோப் என்ற பகுதியின் மீது படையெடுத்துக் கைப்பற்றினார். அதை தனக்கான சிறிய ஆட்சிப்பகுதியாக ஆக்கிக்கொண்டார். தனது மூன்று வயது மகனை அந்த பகுதிக்கு சுல்தானாக அறிவித்துக் கொண்டார் மேலும் தன் வளர்ச்சிக்காக விதவையான இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் மனைவியை மணந்து கொண்டார். அவர் சிறிய மகன் இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதின் ஆட்சிப் பொறுப்பாளாராக இருந்தார். அந்த கால கட்டத்தில் இவ்வளவு அரசியல் சிக்கல் இருந்தாலும் முன்னேற்றத்திலும் சிறிது கவனம் செலுத்தப்பட்டது. கொன்யா, கைசெரி மற்றும் அன்டால்யாவில் செல்ஜுக்குகளின் பெயர் சொல்லும் வண்ணம் நிறைய கட்டிடங்களைக் கட்டினார்கள். குறிப்பாக மந்திரி கரடாய், மந்திரி சாஹிப் அடா கட்டிய டோகட் பாலம், மேலும் அக், ஓப்ருக், ஹோரோஸ்லு, சரி, இசக்லி அரணமனைகள் புகழ் பெற்றவை.

செல்ஜுக்குகள் சரித்திரம் 5இஸ்ஸத்தின் கெய்கவுஸ் இறந்த பிறகு, அவரால் அங்காரா கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த அவர் சகோதரர் அலாவுத்தீன் கெய்குபாத் விடுவிக்கப்பட்டு 1219 ல் மன்னரானார். இவரும் சகோதரர் போல் எல்லாத் துறைகளிலும் முன்னிலை வகித்து ஆட்சி நடத்தினார். அலாவுத்தீன் கெய்குபாத் சிறந்த ஓட்டப்பந்தய வீரராகவும், ஓவியராகவும், தச்சுத் தொழில் தெரிந்தவராகவும், சிறந்த பலமான இராணுவ கமாண்டராகவும் இருந்தார். இவரது இராணுவம் பதினைந்து ஆண்டுகளில் தியர்பாகர் பகுதி தவிர மொத்த அனடோலியாவையும் வெற்றி கொண்டது. அலாவுத்தீன் கெய்குபாத் விவசாயத்தை ஊக்கப் படுத்தினார். சர்க்கரை ஆலைகளை உண்டாக்கியும் மொத்த லீவண்ட் பகுதியின் வியாபாரத்தலமாக சிவாஸ் நகரை உருவாக்கினார். இவரின் முதல் வெற்றி லெஸ்ஸர் அர்மேனியாவின் சிலிஷியன் மன்னராட்சியிலிருந்து  மெடிட்டரேனியன் துறைமுக நகரமான கொலோனோரோஸ் (அலன்யா) நகரமாகும். வெற்றிக்கு பிறகு இதை ‘அலைய்யே’ என்று பெயர் மாற்றி கடற்படை தளமாகவும், கோடை காலத்தில் தான் தங்கும் விடுமுறை தலமாகவும் ஆக்கிக்கொண்டார். பின்பு படை நடத்தி கஹ்டா(1222), எர்ஸின் கன்(1230), எர்ஸுரும்(1230), செமிஸ்கிஸிக் கோட்டைகளையும், மேலும் ஹர்புத் மற்றும் அஹ்லத் ஆகியவற்றையும் வென்றார்.
                                 அலாவுத்தீன் கெய்குபாத் பெரும்பாலும் முன்னேற்ற பாதையிலேயே உயர்ந்த எண்ணத்தில் சிந்தித்தார். எதிரிகளாக இருந்தவர்களிடம் நல்ல உறவைப்பேணும் வகையில் 1221 ல் அர்மேனியன் இளவரசி மஹ்பெரி ஹுவாண்டையும், 1227 ல் அய்யுபிட் ராணி மெலிகி ஹதூனையும் மணந்து கொண்டார். இவரின் கட்டிட நிர்மாணங்களும் மிகவும் புகழப்பட்டது. கைசெரி, சிவாஸ் நகரங்களின் சுற்றுச்சுவற்றைப் பலமாக்கினார். கொன்யா நகரின் சுவர்களையும் பலப்படுத்தி, சுடுநீர் குளியலறை அடங்கிய ஆடம்பரமான அரண்மனையைக் கட்டினார். இராணுவ நடவடிக்கைக்காக 1221 ல் இவர் கட்டிய சிவப்பு கோபுரம், அலன்யாவின் இராணுவ மையம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எண்ணற்ற கட்டிடப்பணிகளைச் செய்தார். 1229 ல் கொன்யா மற்றும் அக்சராய் இடையிலும்,  1232 ல் கைசெரி மற்றும் சிவாஸுக்கும் இடையிலும் சுல்தான் அரண்மனை, கரதாய் அரண்மனைகளையும், மேலும் அலாரா, ஸஸதின், கார்டக், கதின், எர்டோகுஸ், எக்ரிதிர், இஷாப் இ கெய்ஃப் போன்ற சிறப்பு மிக்க கட்டிடங்களைக் கட்டி னார். கைசெரிக்குகருகிலும், குபாதாபாத்தில் பெய்செஹிர் ஏரியின் மீதும் இவர் கட்டிய பாலங்கள் இன்றளவும் பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன. புகழின் மிக உச்சத்தில் இருந்தபோது ரமலான் மாதத்தின் முடிவில் மாமன்னன் மங்கோலிய கான் அளித்த விருந்தில் விஷம் வைக்கப்பட்டு மூன்று நாள் கழித்து இறந்து போனார். ஏற்கனவே கிழக்கில் மங்கோலியர்களால் துவக்கப்பட்டு விட்ட தன் தேசத்தின் அழிவைக் காணாமலேயே சென்றுவிட்டார்.
                                 அலாவுத்தீன் கெய்குபாதுக்குப் பின் அவரின் பிள்ளைகளுக்குள் நடந்த பல படுகொலைக்குப் பின் அவரின் ஒரு மகன் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் ஆட்சிக்கு வந்து அமைதியை கொண்டு வந்தார். தன் தந்தையின் மூலம் வந்த மைனர் ஆசியாவின் முழு நிலப்பரப்பையும் ஆண்டார். உடன் தியர்பாகிரின் அருகாமை இடத்தையும் கைப்பற்றி ஆண்டுவந்தார். ஆனால், விரைவில் எல்லாம் அழிவை நோக்கி சென்றது. 1241 ல் பாபா இஷாக் என்னும் மத பிரச்சாரகர் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ்வை எதிர்த்து உள்நாட்டில் கலவரம் செய்தார், இது மத, சமூக, அரசியல் கலவரமாக உருவெடுக்க இறுதி யில் பாபா இஷாக்கை தூக்கிலிட்டு அடக்கினார். இந்த கலவரம் உள்நாட்டில் பெரும் பிரச்சினையாகவே இருந்தது. இது மட்டுமல்லாமல் வெளியே செல்ஜுக்கின் எல்லையோரத்தில் மங்கோலியர்களின் படையெடுப்பு அத்துமீறியது. 1241 ல் மங்கோலியர்களின் திறமையான தளபதி ஒருவர் எர்ஸுருமைக் கைப்பற்றினார். இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் கூட்டு இராணுவமாக பைஸாந்தியர்கள், அர்மேனியர்கள் மற்றும் ஃப்ராங்கிஷின் கூலிப்படைகளை இணைத்து மங்கோலியர்களை எதிர்த்தார். சிவாஸ், எர்ஸிங்கன் அருகில் கோசிடாக் என்ற இடத்தில் 1243 ல் நடந்த போரில் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் படுதோல்வி அடைந்தார். பிறகு மங்கோலிய படைகள் சிவாஸ், கைசெரி போன்ற பகுதிகளையும் கைப்பற்றி கொள்ளையடித்தனர். மங்கோலியர்கள் பரவலாக போரிட்டு அனடோலியாவின் பிற நகரங்களை நாசப்படுத்தினர். இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் எவ்வளவோ முயற்சி செய்து தங்கள் சுதந்திரப் பகுதிகளை மீட்க முனைந்தார். இறுதியில் மங்கோலியர்களுக்கு ஆண்டு வருவாய் செலுத்த ஒப்புக் கொண்டு செல்ஜுக்குகள் மங்கோலியர்களின் வேலைக்காரர்கள் போல் ஆனார்கள். இந்த காலகட்டம் செல்ஜுக்குகளின் இல்கானித் காலம் என்றழைக்கப்பட்டது. இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் காலத்தில் அக்சிகரா அரண்மனை, இன்சிர், கிர்கோஸ், பஸார், சிம்சிம்லி சுல்தான் அரண்மனை, சிஃப்ட் லிக், கர்கி, சுசுஸ், ககால்லி, இன்சிர், செகிரிக்சு மற்றும் சரஃப்சா அரண்மனைகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. 1246 ல் இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவ் மரணமடைந்தார்.

செல்ஜுக்குகள் சரித்திரம் 4இரண்டாம் கிலிக் அர்சலனின் மரணத்திற்குப் பின் அவர் மகன்களின் பதவிச் சண்டையில் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் என்ற மகன் மன்னரானார். அவரால் நீண்ட நாட்கள் பதவியில் நீடிக்க முடியவில்லை. அடுத்த சகோதரர் இரண்டாம் ரூக்னத்தீன் விரைவில் அவரை அகற்றி விட்டு ஆட்சியில் அமர்ந்தார். அமர்ந்த கையோடு கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், அவர் மகன்கள் இஸ் ஸத்தீன் கெயுஸ்ரேவ், அலாத்தீன் கெயுஸ்ரேவ் ஆகியோரை பைஸாந்திய பேரரசுக்கு நாடு கடத்தினார். இரண்டாம் ரூக்னத்தீன் மலத்யா, அர்டுகிட்ச் மற்றும் ஹர்புத் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். எர்ஸுருமின் சால்துகிட் தலைமையகத்தை செல்ஜுக்குகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். மிகுந்த சிரமத்தில் ஆட்சி செய்த இவர் 1204 ல் மரணமடைந்தார். இவருக்குப் பின் மீண்டும் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் ஆட்சியைக் கைப்பற்றினார்.  அந்த நேரத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று, கான்ஸ்டாண்டிநோபிள் நான்காம் சிலுவைப்போராளிகள் வசம் வீழ்ந்தது. இரண்டாவது, மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கான் சூறாவளி போல் தனது முதல் படையெடுப்பை நடத்தினார்.
                                முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் பதவியேற்றதும் லத்தீன் பகுதி கான்ஸ்டாண்டிநோபிள் இவர் வசம் வந்து மீண்டும் மத்திய அனடோலியா செல்ஜுக்குகளின் ஆதிக்கத்தில் வந்தது. தற்போது செல்ஜுக்குகளின் மாகாணம் முன்பை விட இருபுறமும் கடல் அமைந்து பலமானது. இது முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவின் முக்கியமான திட்டமாக கருதப்பட்டது. அடுத்து வெனிஷிய அல்டோப்ரந்தினியிடமிருந்து புத்திசாலித்தனமாக சண்டையிட்டு 1207 ல் மெடிட்டரேனியன் துறைமுக நகரமான அண்டால்யாவைக் கைப்பற்றினார். தென் மேற்கு துருக்கியில் அமைந்துள்ள அண்டால்யா நகரம் ரோம, பைசாந்திய சாம்ராஜ்ஜியங்களிலிருந்து மிகவும் புகழ் வாய்ந்த அழகான நகரம். சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு, கோட்டையுடன் தோட்டங்களும் அமைந்திருந்தன. இங்கு ஒரு பெரிய புகழ்வாய்ந்த மசூதியும் கட்டப்பட்டது. தனது பொழுதுபோக்கை பெரும்பாலும் பைஸாந்திய அரண்மனையில் தன் மகன் இஸ்ஸத்தீன் கெய்கவுஸ், அலாவுத்தீனுடன் சென்று கழிப்பார். மேற்கத்திய கிறிஸ்தவ நட்பை பலவகையிலும் விரும்பினார். இது செல்ஜுக்குகளின் மேற்குப்புற வாணிபத்திற்கு பெரிதும் உதவியது. அண்டால்யாவைக் கைப்பற்றிய பிறகு, செல்ஜுக்குகளுக்கும், வெனிஷியர்களுக்கும் இடையில் முதல் வாணிப ஒப்பந்தம் கையெழுத்தானது.
                                 முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ், மூன்றாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் என்று வரிசையாக ஆண்டார்கள். முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் நிறைய கட்டிடங்களைத் தன் ஆட்சியின் போது கட்டினார். அதில் 1206 ல்  செல்ஜுக்குகளின் கட்டிடக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டப்பட்ட பிரமாண்டமான மருத்துவமனையும், தனது சகோதரி கெவ்ஹிர் நெசிபி ஹாதுன் நினைவால் கைசெரியில் கட்டப்பட்ட ‘சிஃப்டி மதரஸா’வும் மிகவும் புகழ் வாய்ந்தது. குறிப்பிடத்தக்க பல கட்டிடங்களை குருசெஸ்மி, டோகுஸ் டெர்பெண்ட் ஆகிய இடங்களில் கட்டினார். மரவேலைப்பாடு மிகுந்த அங்காரா மியூசியம் அழகானது. இஸ்னிக்கின் பைஸாந்திய சக்கரவர்த்தி முதலாம் தியோடர் லாஸ்கரிஸ் என்பவரிடம் அலாசஹிர் என்ற இடத்தை கைப்பற்ற நடந்த போரில் 1211 ல் முதலாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரேவ் மரணமடைந்தார்.
                            இவருக்குப் பின் இவர் மகன் இஸ்ஸத்தின் கெய்கவுஸ் தந்தையின் வழியில் ஆட்சியை விரிவுபடுத்தியும், வாணிபத்தில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி ஆட்சி நடத்தினார். இவரும் இவர் சகோதரர் அலாவுத்தீன் கெய்குபாதும் நடத்திய நாற்பதாண்டு கால ஆட்சியில் செல்ஜுக் மாகாணம் அதிக பட்ச முன்னேற்றத்தைக் கண்டது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் 1214 ல் நிரந்தரமாக கைப்பற்றிய கருங்கடலின் துறைமுக நகரமான ‘சினோப்’ பில் கப்பல் கட்டுமான வாணிபத்தை நிறுவினார். இதனால் சீனா, இந்தியா, பெர்ஷியா, க்ரீமியன் பகுதிகள் மற்றும் மேற்குப் புறங்களில் வாணிபத்தைப் பெறுக்கினார். சிலுவைப் போராளிகளால் கைப்பற்றப்பட்ட அண்டாலியா நகரம் மீண்டும் இஸ்ஸத்தின் கெய்கவுஸால் வெல்லப்பட்டது. செல்ஜுக்குகள் கருங்கடல் மற்றும் மெடிட்டரேனியன் கடல் பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மேலும், துணைகடல்களின் வழியாக வியாபாரங்களும் பெருகின.
                                  இஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஆட்சியில் செல்ஜுக்குகள் பல துறைகளில் முண்ணனியில் இருந்தனர். இராணுவம் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தது. அரசியல் நிர்வாகம், வாணிபம் மற்றும் சிற்பக்கலை சிறந்தோங்கியது. இஸ்ஸத்தின் கெய்கவுஸ் ஒரு கவிஞராக இருந்தார். மேலும் பெர்ஷிய இலக்க ணம், சூஃபியிஸத்தில் மிகவும் ஆர்வமுள்ளவராகவும் இருந்தார். மஞ்சள் காமாலை நோயினால் மரணமடைந்து சிவாஸ் பகுதியில் தான் கட்டிய மருத்துவமனை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

செல்ஜுக்குகள் சரித்திரம் 31092 ல் இளம்வயது கிலிக் அர்சலன் மெலிக் ஷாவால் விடுதலை செய்யப்பட்டார். அவர் திரும்பி இஸ்னிக் வந்து க்ரேட் செல்ஜுக்குகளை ஒன்றும் செய்ய முடியாமல் போனார். ஆனால் அதேசமயம் அவர்கள் ஐரோப்பிய சிலுவைப் போராளிகளுக்கு எதிராக போரிடும் வரை நிரந்தர எதிரியாக இருந் தார். 1096 ல் முதல் சிலுவைப்போராளிகள் பைஸாந்திய பேரரசர் அலெக்ஸியஸை எதிர்த்து போரிட செல்லும் வழியில் மேற்கு அனடோலியா வந்தார்கள். அப்போது கிலிக் அர்சலன் எதிர்திசையில் கிழக்கில் மலட்யா என்ற இடத்தில் போரில் இருந்ததால் சிலுவைப் போராளிகள் தலைநகர் இஸ்னிக்கை கைப்பற்றுவதை தடுக்க முடியவில்லை. கிலிக் அர்சலன் சிலுவைப்போராளிகளை எதிர்க்க க்ரேட் செல்ஜுக்குகளுடன் இணைந்து போரிட சம்மதித்தார். ஆனால் இணைந்த இரு செல்ஜுக் படைகளும் 1097 ஜூனில் டோரிலாயெம் என்ற இடத்தில் படு தோல்வி அடைந்தன. அதன் பிறகு செல்ஜுக்குகள் கொன்யாவை புதிய தலைநகரமாக ஆக்கிக்கொண்டனர். சிலுவைப்போராளிகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால் அவர்கள் கொன்யாவையும் மேலும் எரிக்லி, கைசெரி ஆகிய இடங்களையும் செல்ஜுக்குகளிடமிருந்து வென்றார்கள். 75% சதவிகித நிலப்பரப்பு பைஸாந்தியர்களின் ஆளுமைக்கு சென்றுவிட்டது. ஜெருசலத்தை நோக்கி செல்ல வேண்டிய சிலுவைப்போராளிகள் சில காலம் அனடோலியாவிலிருந்து கொலைகளைச் செய்தும், கொள்ளை அடித்தும் அட்டூழியம் செய்து கொண்டு செல்ஜுக்குகளின் மேலும் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆசையைத் தடுத்து மத்திய கடலோரம் நோக்கி விரட்டினர். மேலும் சிலுவைப்போராளிகளை எதிர்க்க ஒன்று கூடிய க்ரேட் செல்ஜுக்குகளுடனான நட்பை பிளவு படுத்தினர். ஆனால் அவர்கள் சென்ற பிறகு மீண்டும் செல்ஜுக்குகள் நட்பு கொண்டார்கள்.
                           கிலிக் அர்சலன் ஆட்சியில் சரியாக சூடான வெயில் காலமான ஆகஸ்டில் செல்ஜுக்குகள் அமஸ்யா என்ற இடத்தில் லம்பார்ட்சை எதிர்த்து போரிட்டனர். இந்த அமஸ்யா கருங்கடலுக்கு மேலே மலைப்பகுதியான இடமாகும். அவர்களின் தானியக்கிடங்கை குறிவைத்து தாக்கி சிலுவைப்போராளிகளை தவிக்கவிட்டனர். அடுத்தடுத்து செல்ஜுக்குகள் அமஸ்யா, எரிக்லி ஆகிய பகுதிகளை மீண்டும் திரும்ப கைப்பற்றி மத்திய அனடோலியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம் க்ரேட் செல்ஜுக்குகள் இதுவரை கூட்டாளியாக இருந்த துருக்கி செல்ஜுக்குகளுக்கு மேலும் கிழக்கு பகுதியில் மலத்யாவையோ, ஈராக்கின் மோஸுல் நகரையோ நோக்கி முன்னேற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கிலிக் அர்சலனின் எல்லை பரப்பும் எண்ணம் பலனற்று போனது.
                           கிலிக் அர்சலனுக்குப் பிறகு வந்த முதலாம் மெலிக் ஷா என்பவர் தனது சகோதரர் முதலாம் மெசுத்துடன் சேர்ந்து 1116 ல் பலமுறை பைஸாந்தியர்களை எதிர்த்து தோற்றுக்கொண்டிருந்தார். இருந்தாலும் விடாமல் கிரேட் செல்ஜுக்குகளுடன் கூட்டு சேர்ந்து (இதற்காக சகோதரர் மெசுத்துக்கு க்ரேட் செல்ஜுக்கின் இளவரசியை திருமணம் செய்து வைத்தார்.) எதிர்த்தார். 1134 ல் க்ரேட் செல்ஜுக்கின் மன்னர் இறந்தவுடன், சூழ்நிலை மெசுத்துக்கு சாதகமாக இருக்க அவர் இரண்டாம் சிலுவைப்போராளிகளுடன் போரிட்டு எஸ்கிசெஹிர், டெனிஸ்லி, அனடோலியா ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார். இந்த செல்ஜுக் போரின் இடையூறாலேயே ஐரோப்பியர்களுக்கு இரண்டாம் சிலுவைப்போர் பெரும் தோல்வியைத்தந்தது. க்ரேட் செல்ஜுக்குகளின் வெகு தொலைவிலிருந்த பிரதேசங்களை எல்லாம் மெசுத் வென்றெடுத்தார். இவருடைய ஆட்சியில் கொன் யாவில் கட்டப்பட்ட அலாவுத்தீன் மசூதி (1153) செல்ஜுக்குகளின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தது.
                               மெலிக் ஷாவுக்குப் பிறகு, இரண்டாம் கிலிக் அர்சலன் ஆட்சிக்கு வந்தார். இவர் சிலுவைப்போராளிகள், பைஸாந்தியமன்னர் மானுவேல்  க்ரேட் செல்ஜுக்குகள் மற்றும் இவர்களுடன் கூட்டு வைத்திருந்த சொந்த சகோதரர் ஷஹின் ஷா ஆகிய அனைவருடன் போரிட்டார். சகோதரருடனும், மற்ற செல்ஜுக்குடன் நடந்தபோரில் வெற்றிபெற்றார். தோற்ற இருவரும் மீண்டும் இரண்டாம் கிலிக் அர்சலனுடன் மவுண்ட் சுல்தான் தாக் என்ற இடத்தில் இறுதி யாக போரிட்டு ஆட்சியை இழந்தார்கள். போரில் கைப்பற்றப்பட்ட செல்வத்தை வைத்து இரண்டாம் கிலிக் அர்சலன் கொன்யா நகரை வளப்படுத்தினார். பைஸாந்தியர்களின் கையை விட்டு அனடோலியா முற்றிலும் நழுவி செல்ஜுக்குகள் வசமானது. ஐரோப்பியர்கள் அனடோலியாவை துருக்கி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். செல்ஜுக்குகளும் துருக்கியில் பொருளாதார நடிவடிக்கைகளை மேற்க்கொண்டார்கள். கட்டிடங்கள், வியாபாரம், துறைமுகம், மதரஸா என்னும் இஸ்லா மிய கல்விக்கூடங்கள் போன்றவற்றை நிர்மாணித்தார்கள். முக்கியமான முன்னேற்றங்களை துருக்கி நாட்டில் உண்டாக்கினார்கள். விஞ்ஞான ஆராய்ச்சி முன்னேற்றத்திற்கு பெரும் தூண்டுகோலாய் இருந்தார்கள்.
                              1190 ல் மூன்றாவது சிலுவைப்போரின் போது கொன்யா நகரத்தை சிலுவைப்போராளிகள் கைப்பற்றினார்கள்.  இரண்டாம் கிலிக் அர்சலனுக்கு எழுபது வயது ஆனபோது அவர் மிகவும் தளர்ந்துவிட்டார், அவரின் ஒன்பது பிள்ளைகளும், ஒரு சகோதரரும், சகோதரர் மகனும் தங்கள் இஷ்டம் போல் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டார்கள். கொன்யா மட்டும் இரண்டாம் கிலிக் அர்சலனின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரின் மகன்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தனி ஆட்சியாளர்கள் போல் செயல்பட்டனர். வேடிக்கை என்னவென்றால் தனித்தனி நாணயங்கள் கூட வெளியிட்டுக் கொண்டார்கள். 1192 ல் தனது 77 வது வயதில் இரண்டாம் கிலிக் அர்சலன் மரணமடைந்தார். அவரின் மகன்கள் ஏறக்குறைய பனிரெண்டு ஆண்டுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அந்த பேரரசின் ஸ்திரத்தன்மையைக் குலைத்தார்கள். 1190 ல் மூன்றாம் சிலுவைப் போரின்போது ஜெர்மனி சக்கரவர்த்தி ஃப்ரெடெரிக் பார்பரொஸ்ஸா ஜெருசலம் போக கிலிக் அர்சலனிடம் அவர் இறப்பதற்கு முன், தென் துருக்கி வழியாக கடந்து செல்ல அனுமதி கேட்டுப்பெற்றார். அந்த அனுமதியுடன் அவர் தென் துருக்கியைக் கடக்கும் போது, இரண்டாம் கிலிக் அர்சலனும், அவர் மகன்களும் திடீரென்று எதிர்பாராத விதமாக ஜெர்மனி சக்கரவர்த்தி ஃப்ரெடெரிக் பார்பரொ ஸ்ஸாவின் படையைத் தாக்கினர். இதில் நிலைகுலைந்து ஃப்ரெடெரிக், சிலிஃப்கி என்ற இடத்தில் கோக் ஆற்றின் வெள்ளத்தில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டு இறந்துபோனார். இது அவர்களுக்கும் சிலுவைப்போராளிகளுக்குமிடையில் பெரும் பிளவை ஏற்படுத்தியது.  1192 ல் இரண்டாம் கிலிக் அர்சலன் மரணமடைந்து கொன்யாவில் செல்ஜுக் சுல்தான்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.