புதன், 17 டிசம்பர், 2014

செல்ஜுக்குகள் சரித்திரம் 6



இரண்டாம் கியா ஸுத்தீன் கெயுஸ்ரெவ் மரணமடையும் போது வெவ்வேறு தாய்க்குப் பிறந்த மூன்று இளைய பிள்ளைகளை விட்டுச் சென்றார். இதனால் செல்ஜுக் பேரரசை முறையாக ஆளத்தகுதியான ஆட்சியாளர் இல்லாமல் போனது. இந்த நிலைமையில் செல்ஜுக் பேரரசு தானாகவே இல்கானித் மங்கோலிய ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் சென்றது. இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவின் மூன்று பிள்ளைகளின் சச்சரவால் செல்ஜுக்குகளின் பேரரசு மேலும் பலவீனமானது. இறுதியில் மூவரும் சேர்ந்து தனித்தனியாக பிரித்து ஆள்வது என்று முடிவானது. 1249 ல் இடையில் துணை மந்திரி செலாத்தீன் கரடாய் என்பவர் அரசியல் தரகராக செயல்பட்டு சகோதரர்களுக்கும், மங்கோலியர்களுக்கும் இடையில் ஒரு ஆட்சி நிர்வாக ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். அதன்படி மூன்று சுல்தான்களும் இணைந்து கையெழுத்திட தனித்தனி மாகாணம் பிரிக்கப்பட்டு மூன்று பேரும் மங்கோலிய கானின் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்து கொள்ளலாம் என்று முடிவானது. கொன்யா மற்றும் கிஸிலிர்மாக் ஏரியின் மேற்குப்பகுதி மூத்த மகன் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கும், சிவாஸும் கிஸி லிர்மாக் ஏரியின் கிழக்குப் பகுதி நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனுக்கும், மலத்யாவுக்கு அருகில் உள்ள பகுதி இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதுக்கும் என்று முடிவானது. மங்கோலிய கானிடம் எதையாவது பெறுவதென்றாலும், கேட்பதென்றாலும் மூவரும் மூன்று விதமாக அணுகினர்.
                         இந்த மூவர் ஆட்சி 1257 வரை நீடித்தது. இவர்களின் தந்தையார் இரண்டாம் கியாஸுத்தீனிடம் பணியாற்றிய மந்திரி செம்ஸ் அத்தீன் இஸ்ஃபஹானி என்பவர் மூவர் கூட்டணி ஆட்சிக்கும், மங்கோலிய கானுக்கும் இடையே பொதுவாக இருந்து பார்த்துக் கொண்டார். 1249 ல் மிகவும் திறமை வாய்ந்த இவர் கைது செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டார். அதேபோல் இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதும் 1257 ல் தனது பிரதேசத்தை ஆள விரும்பாமல் மங்கோலிய கானிடம் திருப்பிக் கொடுக்க முடிவெடுத்தபோது எர்ஸுரும் என்ற இடத்தில் அவரின் உயர் அதிகாரியால் கொல்லப்பட்டார். இப்போது மீதி இரண்டு சகோதரர்களில் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் தாய் கிரேக்க வம்சாவழி ஆனதால், அவர் பைஸாந்தியர்களின் உதவியை நாடி மங்கோலிய கானை எதிர்க்க திட்டமிட்டார்.  நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலன் மொத்த பகுதிகளையும் மங்கோலிய கானிடம் கொடுத்துவிட எண்ணினார். மேலும் இந்த சூழ்நிலையில் மந்திரி கரடாயிடம் ஆலோசனை பெற எண்ணினார். ஆனால்  எதிர்பாராத விதமாக கரடாய் இறந்து போனார். செல்ஜுக்குகளின் நம்பிக்கை தளர்ந்தது. மங்கோலிய கான் பேரரசை இரண்டாகப் பிரித்து சிவாஸை நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனுக்கும், தலைநகர் கொன்யாவை இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
                           இதற்கிடையில் குறிப்பிடத்தக்க நபராக செல்ஜுக்குகளின் அரசியல் அரங்கில் நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனின் பிரதம மந்திரி மொய்னுத்தீன் சுலைமான் நுழைந்தார். சுயசிந்தனையும், ஆள வேண்டும் ஆசையும் கொண்ட அவர் எல்லா அரசியல் அதிகாரமும் தன் கையில் வர வேண்டும் என்று விரும்பினார். மங்கோலியர்கள் அப்பாஸிட்கள் வசமிருந்த பாக்தாதைக் கைப்பற்ற தங்களுக்கு சிரியா போருக்கு உதவ இரு இளவரசர்களுக்கும் உத்தரவிட்டார்கள். 1261 ல் கான்ஸ்டாண்டிநோபிளைக் வெற்றி கொண்டு மைக்கேல் பலாயோலோகோஸ் என்பவர் பைஸாந்திய பேரரசின் மன்னரானார். இதனால் ஆர்வம் கொண்ட இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸும், மந்திரி மொய்னுத்தீன் சுலைமானும் உடனே கிரீமியா சென்று மைக்கேல் பலாயோலோகோஸிடம் மங்கோலியர்களுக்கு எதிராக போரிட ஒத்துழைப்பைக் கேட்டனர். இது இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தியது. மைக்கேல் பலாயோலோகோஸ் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸை சிறைப்படுத்தி 1278 ல் தூக்கிலிட்டுக் கொன்றார். தற்போது நான்காம் கிலிக் அர்சலன் மொத்த செல்ஜுக்குகளின் பேரரசுக்கும் ஆட்சியாளரானார். மந்திரி மொய்னுத்தீன் சுலைமான் உயர் பதவியாக சுல்தானின் அதிகார ஆலோசகராகவும், முதல் மந்திரியாகவும் அதிகாரம் பெற்றார். தூக்கிலிடப்பட்ட இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் மந்திரி சாஹிப் அடா எவ்வளவோ முயன்றும் தன் முந்தைய பதவியைப் பெற முடியாமல் மொய்னுத்தீன் சுலைமானின் கீழ் பணி செய்தார்.
                                    பதவி வெறிபிடித்த மொய்னுத்தீன் சுலைமானால் நான்காம் கிலிக் அர்சலன் விருந்தொன்றில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார். ஆட்சி நான்காம் கிலிக் அர்சலனின் இளைய மகன் வசம் சென்றது. திட்டப்படி பேருக்கு மகன் மன்னனாய் இருந்தாலும் மொய்னுத்தீன் சுலைமான் தான் ஆட்சி செய்தார். மொய்னுத்தீன் சுலைமான் சினோப் என்ற பகுதியின் மீது படையெடுத்துக் கைப்பற்றினார். அதை தனக்கான சிறிய ஆட்சிப்பகுதியாக ஆக்கிக்கொண்டார். தனது மூன்று வயது மகனை அந்த பகுதிக்கு சுல்தானாக அறிவித்துக் கொண்டார் மேலும் தன் வளர்ச்சிக்காக விதவையான இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் மனைவியை மணந்து கொண்டார். அவர் சிறிய மகன் இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதின் ஆட்சிப் பொறுப்பாளாராக இருந்தார். அந்த கால கட்டத்தில் இவ்வளவு அரசியல் சிக்கல் இருந்தாலும் முன்னேற்றத்திலும் சிறிது கவனம் செலுத்தப்பட்டது. கொன்யா, கைசெரி மற்றும் அன்டால்யாவில் செல்ஜுக்குகளின் பெயர் சொல்லும் வண்ணம் நிறைய கட்டிடங்களைக் கட்டினார்கள். குறிப்பாக மந்திரி கரடாய், மந்திரி சாஹிப் அடா கட்டிய டோகட் பாலம், மேலும் அக், ஓப்ருக், ஹோரோஸ்லு, சரி, இசக்லி அரணமனைகள் புகழ் பெற்றவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக