புதன், 17 டிசம்பர், 2014

செல்ஜுக்குகள் சரித்திரம் 1செல்ஜுக்குகள் மிகப்பெரிய பரப்பளவினாலான ஹிந்து குஷில் இருந்து கிழக்கு அனடோலியா(துருக்கி) வரையும், மத்திய ஆசியாவிலிருந்து பெர்ஷியன் வளைகுடா வரையும் உண்டான நிலப்பரப்பை ஆண்டார்கள். இவர்கள் இரு பிரிவாக ஈரானையும், அண்டோலியாவையும் ஆட்சி செய்தனர் மொத்த செல்ஜுக்குகளின் ஆட்சிகாலம் ஏறக்குறைய பதினொன்றாம், பதிமூன்றாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட 300 ஆண்டுகாலமாகும். ஈரானிய செல்ஜுக்குகளின் சரித்திரம் அவ்வளவாக குறிப்பிடப்படவில்லை.
                       
                           எந்தவிதமான இயற்கையான வளம் தரக்கூடிய காற்றோ, மண்ணோ, நிலையான தட்பவெப்பமோ இல்லாத பிரதேசங்களிலிருந்து புராதன மக்கள் நீர் சூழ்ந்த இடங்களைத் தேடிப்போவது இயற்கை. எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அனடோலியாவும் அப்படித்தான் இருந்தது. ஆனாலும், அங்கே ஹிட்டீஸ்கள், செல்ஜுக்குகள், உரர்ஷியன்கள், ப்ரைஜியன்கள் மற்றும் க்ரேக்கர்கள் போன்ற மக்கள் கூட்டம் இருந்ததாக சரித்திரம் தெரிவிக்கிறது. அதில் எல்லோரையும் போல் அந்தகால வழக்கப்படி வளமையைத் தேடி செல்ஜுக் என்ற நாடோடி இனமும் மத்திய ஆசியாவை நோக்கி நகர்ந்தது. அப்படி வந்தவர்கள் பிற்காலத்தில்  ஒரு சாம்ராஜ்ஜியத்தை பதினொன்றாம் மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டின் மத்தியில் உருவாக்கி ஏறக்குறைய 200 ஆண்டுகள் துருக்கியை ஆண்டார்கள். இன்றைக்கு இருக்கும் பெரும் பான்மையான துருக்கி மக்கள் இந்த வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்தான். கொன்யா என்பது இவர்களின் தலைநகரமாக இருந்தது. இந்த அனடோலியா செல்ஜுக்குகள் உயர்ந்த கலாச்சார முடையவர்கள்.

                                 பத்தாம் நூற்றாண்டுகளின் இறுதியில் அப்பாஸிட் கள் இஸ்லாமிய பேரரசை பாக்தாதிலிருந்து ஆண்டு வந்தார்கள். இவர்களின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட பகுதி மிகப்பெரும் நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இதனால் நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு பல பகுதிகளாகப் பிரிந்து கவர்னர் களாலும், உள்ளூர் பிரபுக்களாலும் தூரத்தில் உள்ள பகுதிகள் ஆளப்பட்டன. மத்திய ஆட்சியின் கலீஃபாக்களின் உடனடித் தொடர்பு இல்லாததால் பல பகுதிகளில் சுன்னி, ஷியா முஸ்லீம்களுக்குள் இருந்த பிரச்சினை அதிகமாகியது. பத்தாம் நூற்றாண்டுகளின் இறுதியில் ஆளும் அப்பாஸிட் சுன்னி பிரிவினராய் இருந்த போதிலும் பெரும்பாலான நகரங்களில் ஷியாக்களின் கரங்களே ஓங்கியிருந்தன. 945 ல் அப்பாஸிட்களின் நீதித்துறை ஷியா பிரிவினரின் புயுத் (புவாஹித்) குடும்பத்தினர் வசமே இருந்தது. நூற்றாண்டின் இறுதியில் அப்பாஸிட் சாம்ராஜ்ஜியத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டு நகரங்கள் அவரவர் கைவசம் போயின. உமய்யாத்கள் ஆண்ட எட்டாம் நூற்றாண்டிலிருந்தே சிரியாவில் கலீஃபாவின் அதிகாரம் இல்லை. எகிப்தில் ஆட்சியிலிருந்த ஷியா ஃபாத்திமிட்கள் அவர்களின் சொந்த பிரச்சினையின் சுமையில் இருந்தார்கள். இன்னொரு புறத்தில் 867 ல் பலம் வாய்ந்த அதிகாரமுள்ள மாஸிடோனியன் சாம்ராஜ்ஜியம் என்றும் அறியப்பட்ட பைஸாந்திய சக்கரவர்த்தி ஆண்டு கொண்டிருந்தார். பைஸாந்தியர்கள் வெனிஸ், தென் இத்தாலி மற்றும் ஸ்லாவிக் நாடுகளை இணைத்து கான்ஸ்டாண்டிநோபிலைத் தலைநகரமாகக் கொண்டு வாணிப செழிப்புடன் இருந்தார்கள். பைஸாந்தியர்கள் ஸ்காண்டிநேவியன்களை கூலிக்காக இராணுவ வேலை செய்ய அழைப்பார்கள். அதுபோல் செல்ஜுக் துருக்கிகளையும் இராணுவக் கூலியாக அழைத்தனர்.
                           இது அவர்களுக்கு பைஸாந்தியர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது. செல்ஜுக்குகள் வசதியைத்தேடி ஒவ்வொரு இடமாக நகர்ந்து கூடாரம் அமைத்து தங்கினார்கள். எட்டாவது நூற்றாண்டிலிருந்தே சிதறிப்போன ஒன்பது குழுக்கள் அடங்கிய ஓகுஸ் என்ற நாடோடிக்கூட்டம் மேற்கு நோக்கி சைபீரியாவைக் கடந்து ஆரல் கடலின் ஓரப் பகுதியில் தங்க ஆரம்பித்தார்கள். ஓகுஸ்கள் இறுதியில் பத்தாம் நூற்றாண்டில் தங்கள் வளர்ப்பு கால்நடைகளுக்கு பசுமையான இடத்தைத் தேடி சிர்தர்யா ஆற்றின் ஓரத்தில் வந்து தங்கினார்கள் அந்த கால ஆய்வேடு இவர்களை வழிதவறிய கழுதைகள் போலிருந்ததாகக் கூறுகிறது. நாடோடிகளல்லவா அவர்கள் அப்படித்தான் தோற்றமளித்தார்கள். ஆனால் சில ஓகுஸ் நாடோடிகளின் எண்ணமும், ஆர்வமும் வேறு மாதிரியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் ஜண்ட், குவார் மற்றும் யெங்கிகெண்ட் ஆகிய நகரங்களில் தஞ்சமடைந்தனர். நாளடைவில் ஏற்கனவே அங்கிருந்தவர்களின் மூலம் இனவெறி அவர்களுக்கு அந்த நகரங்களில் வேலியிட்டது. நாடோடிக் கூட்டமாக இருந்து சும்மாவே இருந்த அவர்களுக்கு கொஞ்சம் மோதிப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவர்களின் தலைவர் தெமூர் யலீக்கும், அவர் மகன் செல்ஜுக்கும் சண்டையிட்டு அதிகாரம் பெற்றனர். மகன் செல்ஜுக் அப்பாஸிட்களின் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஓக்சுஸ் என்ற மாகாணத்தில் உயர்பதவியில் இருந்தார். இதனால் அரசாங்கத்திலும், கலீஃபாக்கள் மட்டத்திலும் அறிந்தவராக இருந்தார். சில காலத்திற்குப் பிறகு 950 ல் சிர்காவின் ஆட்சியின் போது க்வாரிஸ்ம் மாகாணத்தில் ஜெண்ட் நகரத்தில் குடியேறி கஸார் இராணுவப்பிரிவில் பணிபுரிந்தார்.  
                            அந்த நாடோடிக் கூட்டத்திலேயே செல்ஜுக் நாடோடிகள் தான் உயர் அந்தஸ்தில் இருந்தார்கள். பின் அங்கிருந்து ட்ரான்ஸாக்சியானா (தற்போது சமர்கண்ட்) என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தனர். ஆரம்பத்தில் ஷாமானிசம் என்ற ஒரு மதப்பிரிவில் இருந்த இவர்கள் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளால் கவரப்பட்டு ‘சுன்னி’ ப்பிரிவு முஸ்லீமாக மதம் மாறினார்கள். தந்தைக்குப் பிறகு அந்தக் கூட்டத்தின் தலைவராக மிகவும் திறமையாக செல்ஜுக் செயல்பட்டார். அவர்களின் சாம்ராஜ்ஜியம் இவரின் பெயரையே தாங்கி நின்றது. அந்த ட்ரான்ஸாக்சியானா என்ற இடத்திற்காக இவர்கள் அப்போதிருந்த கரஹனித்கள், சமானித்கள் மற்றும் காஸ்னிவித்கள் பேரரசுகளுடன் போட்டியிட்டார்கள். அவர்கள் தங்கியிருந்த பகுதி ஓக்ஸுஸ் நீர்வளம் மிக்கதாக இருந்தது. இருபுறமும் சிர்தர்யா மற்றும் அமுதர்யா ஆறுகளின் உதவியால் அந்த பகுதியில் விவசாயத்திற்கு ஏற்ற ஒரே இடமாகவும் இருந்தது. செல்ஜுக் அவர்களுக்கு மூஸா, மிக்காயீல், அர்சலன் என்று மூன்று மகன்கள் இருந்தார்கள். அதில் மிக்காயீல் ஒரு போரில் இறந்து போனார். அவருக்கு துக்ருல் பெக், சக்ரி பெக் என்று இரு மகன்கள் இருந்தார்கள். மாபெரும் வீர்ர் செல்ஜுக் தனது நூறாவது வயதில் இறந்து போனார். செல்ஜுக்குகள் வட இந்தியா, கோராசன் மற்றும் ஈரானிலிருந்த காஸ்னிவித்களை பலமுறை தோற்கடித்தார்கள். இறுதியில் 1035 ல் சக்ரிபெக் ஈரானின் வடமேற்கு பகுதியான கோராசனைக் கைப்பற்றினார். ஆனால், உண்மையில் இவரது சகோதரர் துக்ருல்பெக் தான் செல்ஜுக்கின் விரிவான ஆட்சிக்கு வித்திட்டார். முக்கியமான நகரங்களான நிஷாப்பூர்(1038), க்வாரெஸ்ம்(1042) ஆகியவற்றைக் கைப்பற்றினார். ஈரானுக்குள் நுழைந்து ஹமதான் மற்றும் ஹிஸ்பஹானைக் கைப்பற்றினார். 1051 ல் ஹிஸ்பஹானை தலைநகரமாக ஆக்கி கொண்டார். 1055 ல் பாக்தாதின் கலீஃபா அவசரமாகக் கலவரங்களை அடக்கவும், மற்ற பணிகளுக்காகவும் துக்ருல்பெக்கின் உதவியை நாடி பாக்தாதுக்கு அழைத்தார். துக்ருல்பெக் பிரச்சினைகளை சமாளித்து பாக்தாதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இவரின் வீரத்தையும், சாமர்த்தியத்தையும் மெச்சி அப்பாஸிட் கலீஃபா ‘சுல்தான்’ என்று பட்டப் பெயரிட்டு அழைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக