புதன், 17 டிசம்பர், 2014

செல்ஜுக்குகள் சரித்திரம் 7நான்காம் கிலிக் அர்சலனின் மகன் மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாத் மன்னராய் இருந்த போது ஆறு வயது, இதனால் அவரின் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த மொய்னுத்தீன் சுலைமானுக்கு சாதகமாகி  மொத்த ஆட்சி அதிகாரமும் தன் வசம் வைத்திருந்தார். மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாத் எதிர்காலத்தில் கொன்யாவைச் சுற்றியுள்ள பகுதியை மட்டும் உரிமை கொண்டாட முடியும். அடுத்த பத்தாவது ஆண்டில் மங்கோலியர்களின் கீழ் வழக்கமாக சுதந்திரமாக ஆளும் அதிகாரம் பெற்றார். 1276 ல் மொய்னுத்தீன் சுலைமான், எகிப்தின் மம்லுக் சுல்தானாகிய பைபருடன் கூட்டு சேர்ந்து மங்கோலியர்களை போரிட்டு ஆசியா மைனரை விட்டு விரட்டி தன்னை மங்கோலியர்களின் கீழில்லாத சுல்தானாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். அதன்படி மம்லுக்கின் பைபர் படை எடுத்து வந்து மங்கோலியர்கள் வசமிருந்த எல்பிஸ்டான், கைசெரி நகரங்களைக் கைப்பற்றினார். பின் சுல்தான் பைபர் வெளியில் அறிந்து கொள்ள முடியாத சில காரணங்களால் போரிலிருந்து விலகி எகிப்து சென்று விட்டார். இதனால் மொய்னுத்தீன் சுலைமான் டோகத் என்ற இடத்தில் தனியாக விடப்பட்டு மங்கோலியர்களுக்கு எதிரான போர் திட்டத்திற்கு மொய்னுத்தீன் சுலைமானின் துரோகம் தான் காரணம் என்பது வெளிப்பட்டு அவரையும், உடனிருந்த சிற்ப, கட்டிட கலை நிபுணரும், மந்திரியுமான சாஹிப் அடாவும் கொல்லப்பட்டனர்.                    
                       மொய்னுத்தீன் சுலைமானின் மரணத்திற்குப் பிறகும் பேரரசின் குழப்பங்கள் தீரவில்லை. 1283 ல் மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாதும் மங்கோலியர்களால் கொல்லப்பட்டார். எவ்வளவு தான் குழப்பங்கள் இருந்தாலும் செல்ஜுக்குகள் கட்டிடம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தார்கள். கெசிக்கோப்ருவிலும், தூரக், ஓரெசின், எக்ரிட் மற்றும் கேயில் அரண்மனைகளும், பாலங்கள் அமைத்தார்கள். கைசெரியில் சாஹிபியே மதரஸா, சிவாஸில் கோக் மதரஸா, அஃப்யொன் உலு கேமியில் மதரஸா கட்டினார்கள். இவர்களால் விடப்பட்ட சிஃப்டி மினாரே மதரஸா, சிவாஸில் முஸ்ஸாஃபர் பருசிர்டி மதரஸா, அமஸ்யா கோக் மதரஸா மற்றும் அஃப்யோனில் டோரும்டாய் கோபுரங்களை மங்கோலியர்கள் முழுமையாக கட்டினார்கள்.
                                     எந்த நேரமும் குடும்பத்திற்குள் பதவிச் சண்டை, குழப்பங்களுக்கு மத்தியில் இறுதியாக இரண்டாம் மசூத் என்பவர் தன்னை கைசெரியின் சுல்தானாக அறிவித்துக் கொண்டார். அவரும் அவர் மகன் மூன்றாம் மசூதும் 1303 ல் கொலை செய்யப்பட்ட பிறகு, அனடோலியா (துருக்கி) செல்ஜுக்கு களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில் மங்கோலியர்களும் பலமும் மங்கத் துவங்கியது. அனடோலியா சிறு சிறு பகுதிகளாக உள்ளூர் ஆட்சியாளர்களாலும், எஞ்சிய செல்ஜுக்குகளின் அறியப்படாத குடுப்பத்தவர்களாலும் ‘பெய்லிக்கு’கள் என்றழைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆண்டுவந்தார்கள். இப்படியான பகுதிகள் கரமான், ஜெர்மியான், எஸ்ரிஃப், ஹமித், மெண்டிசி, கேண்டர், பெர்வனி, சாஹிப் அடா, கரெசி, ஸருஹான், அய்டின் மற்றும் ஒஸ்மனோகுல்லார் ஆகியவை ஆகும். சரித்திரம் இதை “பெய்லிக் காலம்” என்று குறிப்பிடுகிறது. அனடோலியா செல்ஜுக்குகள் ஆட்சி இழந்ததற்கு மங்கோலியர்களின் வரவும் ஒரு முக்கிய காரணம். இதன் பிறகு, சற்று பலம் வாய்ந்த கரமான் பகுதி பெய்லிக் மன்னர் மெஹ்மூத் பெய் என்பவர் தென் துருக்கியில் பிரபலமானார். அவர் அரசு மொழியாக துருக்கியைத் தவிர வெறெதுவும் ஏற்றுக் கொள்ள மறுத்தார். மற்றொரு பெய்லிக் ஓஸ்மனோகுல்லாரி சரித்திரத்தில் தங்கள் பெயரை மிகவும் அழுத்தம் திருத்தமாக எழுதும் வண்ணத்தில் வெளிக் கிளம்பி னார்கள். ஓஸ்மனோகுல்லாரி என்றால் ஒஸ்மானின் மகன்கள் என்று பொருள். அவர்களில் எர்துக்ருல் என்பவர் அங்காரா மற்றும் கான்ஸ்டாண்டி நோபிளின் இடையில் ஸோகூத் என்னும் இடத்தில் பெருவாரியான நிலப்பரப்பைக் கைப்பற்றி இருந்தார். அவருக்குப் பிறகு, அவர் மகன் ஒஸ்மான் ஆளுகைக்கு வந்தார். ஒஸ்மான் துருக்கி மொழியில் ஒத்மான் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒஸ்மானின் தொடர்ச்சியாக வந்தவர்கள் பெரும் பேரரசை நிறுவினார்கள். சிறு பகுதியை ஆண்ட இவர்கள் கற்பனைக்கு எட்டாத வண்ணம், இதுவரை உலகம் கண்டிராத துருக்கி “ஓட்டோமான்" களாக ஆதிக்கம் செலுத்தினார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக