ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

உமய்யாத்கள் வரலாறு 1

உமய்யாத்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
நபி(ஸல்) அவர்களுக்கும், நேர்மையான நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு பெரிய சாம்ராஜ்ஜியமாக துவங்கிய இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பம்
ஆறாம் நூற்றாண்டுகளில் மக்காவில் இருந்த புகழ்பெற்ற குடும்ப பாரம்பரியத்தில் குரைஷி பழங்குடிவம்சம் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அதன் மதிப்புமிக்க தலைவராக அப்த் மனாஃப் இப்ன் குஸாய் இருந்தார். அவரின் மகன்களில் ஒருவர் அப்த் மனாஃப். அவருடைய இரு மகன்கள் ஹாஷிம், அப்த் ஷம்ஸ். இந்த இருமகன்களின் வாயிலாகத்தான் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வரிசையாகத் தோன்றினார்கள். அப்த் ஷம்ஸின் ஒரு மகன் தான் உமய்யா இவரின் வழியில் ஆட்சி செய்தவர்களை ‘உமய்யாக்கள்’ என்றழைத்தனர். நபி(ஸல்) களாரின் காலத்திலிருந்தே ஹாஷிம்களுக்கும், உமய்யாத்களுக்கும் கசப்பான அனுபவங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை எதிர்த்து ஆரம்பத்தில் அவதூறாகவும், தொல்லைகளும் கொடுத்தவர்கள் உமய்யாக்கள். அது ‘பத்ர்’ என்னும் போரில் வெளிப்பட்டது. பத்ர் போரில் உமய்யாத்களான உத்பா இப்ன் ராபியாஹ்(தந்தை), வாலித் இப்ன் உத்பா(மகன்) மற்றும் ஷய்பாஹ் ஆகி யோர் முறையே ஹாஷிம்களான அலி இப்ன் அபுதாலிப்(ரலி), ஹம்ஸா இப்ன் முத்தலிப்(ரலி) மற்றும் உபைதாஹ் இப்ன் அல் ஹரித் (ரலி) ஆகியோரால் கொல்லப்படுகின்றனர். இது உமய்யாவின் பேரர் அபு சுஃப்யான் இப்ன் ஹர்ப் என்பவருக்கு நபி (ஸல்) அவர்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் பெரும் கோபத்தை உண்டு செய்கிறது
இதனால் அபுசுஃப்யான் பத்ர் போருக்கு பழிவாங்க உஹுத் போரை சந்தித்தார். இதில் முஸ்லீம்கள் படை தோல்வி அடைந்தது. இதில் அபு சுஃப்யானின் மனைவி ஹிந்த் என்ற பெண்மனி பத்ர் போரில் தன் தந்தை உத்பா இப்ன் ராபியாஹ் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் விதமாக உஹுத் போரில் கொல்லப்பட்ட நபி (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் ஹம்ஸா இப்ன் முத்தலிப் (ரலி) அவர்களின் உடலை மிகவும் அகோரமாகச் சிதைத்தார். பின்னாளில் நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரை வெற்றி கொண்டபின் எல்லோருக்கும் பொது மன்னிப்பு அளித்தார்கள். அதில் அபு சுஃப்யான், அவர் மனைவி ஹிந்த், மகன் மூ ஆவியா (பிற்கால கலீஃபா) ஆகியோரும் அடங்குவர். பெரும்பான்மையான சரித்திர ஆசிரியர்கள் உமய்யாத்களின் சாம்ராஜ்ஜியத்தின் முதல் கலீஃபாவாக மூஆவியாவைத் தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால், உண்மையில் நேர்மையான கலீஃபாக்கள் (RIGHTLY KHALIFAS) வரிசையில் மூன்றாவது கலீஃபாவாக இருந்த உதுமான் இப்ன் அஃப்ஃபான் (ரலி) அவர்கள் தான் உமய்யாத்களின் குடும்ப பாரம்பரியத்தில் முதல் கலீஃபா ஆவார்.  
உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் ஆளும் போது நம்பிக்கைக்கு ஏற்றவாறு பெரும்பான்மையான தனது உறவினர்களையே உயர்பதவியில் அமர்த்திய தாகச் சொல்லப்படுகிறது. இதுவே பிற்காலத்தில் உமய்யாக்கள் ஆட்சிக்கு வர அஸ்திவாரமாக இருந்ததாகவும் கருதப்படுகிறது இதில் குறிப்பாக உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்களின் மிகவும் நெருங்கிய உறவினரான மர்வான் இப்ன் அல் ஹகம் அவர்களுக்கு தனக்கு அடுத்த ஸ்தானத்தில் பதவி அளித்தது, ஹாஷிம் குடும்பத்தினர்கள் மத்தியில் பெரும்புயலைக் கிளப்பியது. ஏனென்றால், நபி(ஸல்) அவர்கள் மர்வான் இப்ன் அல் ஹகம் அவர்களையும், அல் ஹகம் இப்ன் அபி அல் அஸ் அவர்களையும் தனது வாழ்நாள் வரை மதீனாவுக்குள் நுழைய தடை விதித்திருந்தார்கள். மேலும் உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் தன் ஒன்றுவிட்ட சகோதரர் வாலித் இப்ன் உக்பா அவர்களை குஃபா நகரத்தின் கவர்னராக பதவி அளித்திருந்தார்கள். இவரும் வெளியில் கூறமுடியாத ஒரு குற்றம் செய்திருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் பெரும் நிலப்பரப்பைக்கொண்ட சிரியாவின் கவர்னராக மூஆவியா அவர்களையும், தனது இன்னொரு சகோதரர் முறையான அப்துல்லாஹ் இப்ன் சாஃத் அவர்களை எகிப்து கவர்னராகவும் நியமித்திருந்தார்கள். ஆனாலும் உதுமான் இப்ன் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் தனக்குப் பிறகு இன்னார்தான் கலீஃபாவாக வர வேண் டும் என்று அறிவிக்காததால் உமய்யாத்களின் சாம்ராஜ்ஜியத்தின் ஆரம்ப கலீஃபா வாக சரித்திர ஆசிரியர்கள் இவரை சேர்க்கவில்லை. 
639 ல் ப்ளேக் என்னும் கொடிய நோயின் மூலம் சிரியாவின் பெரும்பான்மையான மக்களுடன் அபு உபைதாஹ் இப்ன் அல் ஜர்ராஹ் என்ற கவர்னரும் இறந்தார். உடன் மூஆவியா அவர்கள் சிரியாவின் கவர்னராக பதவியேற்றார். ஆரம்பத்தில் மூஆவியா அவர்கள் முதல் கலீஃபா அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் காலத்தில் பைஸாந்தியர்களை எதிர்க்க இராணுவத்தில் சேர்ந்து சிரியா அனுப்பப் பட் டார். பின் இரண்டாவது கலீஃபா உமர் இப்ன் கத்தாப் (ரலி)  அவர்களின் காலத்தில் டமாஸ்கஸின் கவர்னராக பதவிபெற்றார். இவர் 649 ல் அரபு பைஸாந்தியப் போரில், பைஸாந்தியர்களின் கடலோரத் தாக்குதல்களை சமாளிக்க மோனோ ஃபிசிடிஸ் கிறிஸ்துவர்கள் மற்றும் ஜாகோபைட் சிரிய கிறிஸ்தவர்களை மாலுமி களாகவும், முஸ்லீம்களை படைவீரர்களாகவும் இணைத்து கப்பற்படை ஒன்றை நிர்மாணித்தார். இது 655 ல் மாஸ்ட் போரில் பைஸாந்தியர்களைத் தோற்கடித்து இஸ்லாமியப் படைகளுக்கு மெடிட்டரேனியன் கடல் திறந்து விடப்பட்டது. மூ ஆ வியா அவர்கள் பழைய ரோமன் சிரிய படைகளை கொண்டு ஒழுக்கமான சிறப் பான இராணுவத்தை அமைத்தார். ஏற்கனவே எகிப்தை வென்று பின்னாளில் உதுமான் இப்ன் அல் அஃப்ஃபான்(ரலி) அவர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர்களுடன் பெரிதும் நட்பாகப் பழகினார்..
குறிப்பாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தனது இறுதி உரையில் அரபுக்களின் பூர்வீகத்தைப்பற்றியும், தேசியத்தைப்பற்றியும் சொல்லி இருந்தார்கள். ஆனால் அவர்களின் மறைவிற்குப்பிறகு, அரபுப் பழங்குடியினர் ரோமன்பெர்ஷியன் போர், பைஸாந்திய சஸானிய போர்களில் தங்கள் ஆழமான சந்ததியின் ஆதாயத்தையே பார்த்தார்கள். ஏனென்றால், ஆரம்பத்தில் ஈராக் பெர்ஷிய சஸானியர்களின் ஆட்சியிலும், சிரியா பைஸாந்தியர்களின் ஆட்சியிலும் இருந்தது. இரு பகுதியைச் சேர்ந்தவர்களும் புதிய இஸ்லாமிய ஆட்சியில் தலைநகரம் தங்கள் பகுதியில் இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த நேர்மையான கலீஃபாக்களின் வரிசையில் இரண்டாவது கலீஃபாவான உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள் கவர்னர்களை ஒற்றர்கள் மூலம் கண்காணித்தார்கள். எந்த கவர்னராவது காரணமில்லாமல் அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருந்தால் உடனே அவர்களை பதவியைவிட்டு விலக்கினார்கள்.
உதுமான் இப்ன் அல் அஃப்ஃபான்(ரலி) அவர்கள் முதுமை அடைந்தபொழுது, கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த அதிகாரத்திற்கு வந்த மர்வான் அவர்கள் அரசு விதிகளைத் தளர்த்தினார். அதற்கு முன் மர்வான் அவர்கள் சில முக்கிய பொறுப்புகளில் இல்லை. உதுமான் இப்ன் அல் அஃப்ஃபான் (ரலி) அவர்களின் அருகில் பெரும்பாலும் அபுபக்கர் சித்தீக்(ரலி) அவர்களின் மகன் முஹம்மது இப்ன் அபுபக்கரும், அலி இப்ன் அபு தாலிப்(ரலி) அவர்களின் வளர்ப்பு மகனும், ஜாஃபர் அல் சாதிக் அவர்களின் பாட்டனாரும் மேலும் சில எகிப்தியர்களும் இருந்தார்கள். அங்கிருந்த எகிப்தியர்கள்தான் பின்னாளில் உதுமான் இப்ன் அல் அஃப்ஃபான்(ரலி) அவர்களைப் படுகொலை செய்ததாக நம்பப்படுகிறது. இந்த படுகொலைக்குப்பின் 656 ல் நபி (ஸல்) அவர்களின் மருமகன் அலி இப்ன் அபு தாலிப் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அலி(ரலி) அவர்கள் தங்கள் தலை நகரை பாதுகாப்பு கருதி மதீனாவிலிருந்து குஃபா என்ற நகரத்திற்கு மாற்றினார்கள். 
சிரியாவில் கவர்னராக இருந்த மூஆவியா அவர்கள் உதுமான் இப்ன் அல் அஃப் ஃபான்(ரலி) அவர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டினார்கள். இதனால் முதல் உள்நாட்டுக் கலவரம் (FIRST FITNA) ஆரம்பித்தது. இதற்கு மர்வான் அவர்கள்தான் தூண்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள், தல்ஹா(ரலி), அல் ஸுபைர் (ரலி) மற்றும் இரண்டு நபித்தோழர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்த பஸ்ரா சென்று கொலைக்குற்றவாளிகளை கைது செய்ய அலி (ரலி) அவர்களிடம் வேண்டுகிறார்கள். மர்வானும் மற்றவர்களும் போரிட்டு இதற்கு தீர்வு காணலாம் என்று 656 ல் ‘ஒட்டகப் போர்’ நிகழ்த்துகிறார்கள். இப்போரில் அலி(ரலி) அவர்கள் வென்றுவிடுகிறார்கள். இந்த வெற்றியின் தொடராக அலி(ரலி) அவர்கள் மூ ஆவியாவுடன் சிஃப்ஃபின் என்ற இடத்தில் போரிடுகிறார்கள். இந்தப் போரில் வெற்றி தோல்வியின்றி இருவரும் மத்தியஸ்தர்களை வைத்து தீர்த்துக் கொள்ளலாம் என்று போரைக் கைவிடுகிறார்கள்.  
போருக்குப் பிறகு 658 ல் மூஆவியா அவர்களால் அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர் களும், அலி (ரலி) அவர்களால் அபு மூஸா அஷாரி அவர்களும் மத்தியஸ்தர் களாக அமர்த்தப்படுகிறார்கள். ஜோர்டானின் வடமேற்குப் பகுதியில் அத்ரூஹ் என்ற இடத்தில் மத்தியஸ்தர்கள் சந்தித்துப் பேசினார்கள். அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர்கள் அபு மூஸா அஷாரியிடம் அலி(ரலி) அவர்கள் மற்றும் மூஆவியா இருவரும் முதலில் பதவியை விட்டு விலகி விட்டு புதிய கலீஃபா ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு அலி(ரலி) அவர்களின் ஆதரவாளர்கள் ஒரு புரட்சியாளர் அலி(ரலி) அவர்களின் கலீஃபா தரத்தை நீக்கக்கோருவதா என்று கொந்தளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அலி(ரலி) அவர்கள் மத்தியஸ்தர்கள் கட்டுப்பாட்டிலிருந்து தான் விலகுவதாக கூறி விலகிக் கொண்டார்கள். இதுவரை அலி(ரலி) அவர்களின் முக்கிய ஆதரவாளர் களாக இருந்து அவர்களை ஆதரித்த கரிஜியாக்கள் (தமிழில்-விலகிப் போனவர்கள்) அவரை விட்டும் அவர் படையை விட்டும் விலகிவிடு கிறார்கள். இந்த செயல் அலி (ரலி) அவர்களை மிகவும் பலவீனப்படுத்தி யது. அந்த துரோகத்திற்கு 659 ல் நஹ்ரவான் என்ற இடத்தில் அலி(ரலி) அவர்கள் கரிஜியாக்களுடன் போரிட்டு வென்றார்கள். இருந்தாலும் பழைய குழப்பங்கள் தொடர்ந்தன. சிரியர்கள் பெரிதும் நேசித்த 
மூ ஆவியா அவர்களைப் போட்டி கலீஃபாவாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். 

உமய்யாதகள் வரலாறு 2

661 ல் சில கரிஜியாக்களால் அலி(ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்று அலி (ரலி) அவர்களின் மகன் இமாம் ஹசன் இப்ன் அலி(ரலி) அவர்கள் கலீஃபாவாக பதவி ஏற்று மூ ஆவியா அவர்க ளுடன் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் இமாம் ஹசன் இப்ன் அலி(ரலி) அவர்கள் பதவி விலகிவிடுவதாகவும், ஆனால் மூ ஆவியா இறந்த பிறகு சந்ததித்தொடராக அவர்களின் குடும்பம் ஆளக் கூடாது என்று முடிவான தாகவும் கூறப்படுகிறது. மூ ஆவியா அவர்கள் கொடுத்த வாக்கை முறித்து தன் வழியில் “உமய்யாத் சாம்ராஜ்ஜியம்” நிறுவி டமாஸ்கஸை தலைநகராக ஆக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் உமய்யாக்கள் அபு ஸுஃப்யானின் வழித்தோன்றலாக இருந்ததால் “ஸுஃபியானிக்கள்” என்று அழைக்கப்பட்டனர். மூஆவியா அவர்கள் உள்நாட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தி ஆட்சியின் நிலப்பரப்பை பெருக்குவதில் ஆர்வம் காட்டினார். உள்நாட்டில் குஃபாவில் ஹுஜ்ர் இப்ன் அதி என்ற அலி(ரலி) அவர்களின் ஆதரவாளர் ஏற்படுத்திய புரட்சியை ஈராக்கின் கவர்னர் ஸியாத் இப்ன் அபுஸுஃப்யான் மூலம் அடக்கினார். மூஆவியா அவர்கள் சிரிய கிறிஸ்துவர்களுக்கும், அரபுக்களுக்கும் இடையே நட்புறவை வளர்த்தார்கள். டமாஸ்கஸ் ஜானின் தந்தை சார்ஜுன் என்பவர் மூஆவியா அவர்களின் நெருங்கிய ஆலோசகராக இருந்தார். பைஸாந்தியரோமன் பேரரசின் மீது போர் தொடுத்தார்.                                                                                                                                                                
இவரது ஆட்சியின் போது தான் க்ரீட் மற்றும் ரோட்ஸ் தீவுகள் இஸ்லாமியர்கள் வசமானது. தொடர்ந்து கான்ஸ்டாண்டிநோபிள் மீது பலமுறைப்போர் தொடுத்தார். வெற்றிபெற முடியாத நிலையில் பெருவாரியான கிறிஸ்துவர்கள் ‘மார்டைட்கள்’ என்று திரண்டு வர பைஸாந்தியர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். வடஆப்பிரிக்காவின் மீதும் கவனம் செலுத்தி கைரோவன் என்ற நகரத்தைக் கைப்பற்றினார். மத்திய ஆசியாவில் காபூல், புகாரா மற்றும் சமர்கண்ட் ஆகியவற்றையும் வெற்றிகொண்டார். 680 ல் மூஆவியா அவர்கள் இறந்த பின் மீண்டும் ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இரண்டாவது உள் நாட்டுப்போர் (SECOND FITNA) உருவாகியது. அவர் மகன் யஸீத் கலீஃபாவானார். இவ ருக்கு முஸ்லீம்களிடத்திலும், குறிப்பாக நபி (ஸல்) தோழர் ஜுபைர்(ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்ன் அல் ஜுபைர், நபி (ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன் இப்ன் அலி (ரலி) ஆகியோரிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அப்துல்லாஹ் இப்ன் அல் ஜுபைர் மதீனாவிலிருந்து மக்காவுக்கு சென்றிருந்தார். யஸீத் கலீஃபாவாக இருப்பதற்கு ஹுசைன் இப்ன் அலி(ரலி) அவர்கள் விரும்பவில்லை என்பதை அறிந்தார். குஃபா நகர மக்கள் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தருவதாக தெரிவித்தார்கள். ஹுசைன் (ரலி) அவர்கள் தன் உறவினர் முஸ்லிம் பின் அகைல் என்பவரை அனுப்பி உண்மையிலேயே குஃபா நகர மக்கள் தனக்கு ஆதரவு தருவார்களா என்று அறிந்துவர அனுப்பினார். இச்செய்தியை கேள்விப்பட்ட யஸீத் உடனே பஸ்ரா நகர ஆட்சியாளர் உபைதுல்லாஹ் பின் ஸியாதை அனுப்பி குஃபா நகர மக்களை ஹுசைனின் ஆதரவு ஊர்வலத்துக்கு செல்லவிடாமல் தடுத்து விட்டார். இருந் தாலும் முஸ்லிம் பின் அகைலின் பின் குஃபா நகர மக்கள் சேர ஆரம்பித்து விட்டார்கள். முஸ்லிம் பின் அகைல் கைது செய்யப்பட்டார். முஸ்லிம் பின் அகைல் அவர்கள் என்னைக் கைது செய்து விட்டீர்கள். இருந்தாலும் நான் ஹுசைன்(ரலி) அவர்களை குஃபா நகருக்கு வர வேண்டாம் என தகவல் தர அனுமதிக்க வேண்டும் என கேட்க, அது மறுக்கப்பட்டு முஸ்லிம் பின் அகைல் கொல்லப்பட்டார். 
அப்துல்லாஹ் இப்ன் அல் ஜுபைர் (ரலி)அவர்கள் தான் மரணிக்கும் வரை மக்கா விலேயே இருந்து விட்டார். ஹுசைன் (ரலி) அவர்கள் தன் குடும்பத்துடன் குஃபா நகரம் வந்தார். வழியில் யஸீதின் படையைச் சேர்ந்த அம்ர் பின் ஸாத், ஷமர் பின் தி அல் ஜோஷன் மற்றும் ஹுசைன் பின் தமீம் ஆகியோரால் தடுக்கப்பட்டு, ஹூசைன்(ரலி) அவர்களும், அவரின் குடும்ப ஆண் உறுப்பினர்களும் அவர்களுடன் போரிட்டு இறந்து போனார்கள். ஹுசைன்(ரலி) அவர்களுடன் இருநூறு பேர் பயணித்தனர். அவர்களின் சகோதரி, மனைவிகள், மகள்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். பெண்களையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து டமாஸ்கஸ் அழைத்துச் சென்று யஸீதிடம் ஒப்படைத்தனர். யஸீத் அவர்களை டமாஸ்கஸ் சிறையில் அடைத்தார். பொதுமக்களிடமிருந்து நபி (ஸல்)அவர்களின் குடும்பத்தினரை சிறை வைத்ததற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. யஸீத் உடனே அவர்களை விடுவித்து மதீனா அனுப்பினார். அந்த குடும்பத்தில் தப்பித்த ஒரே ஆண் வாரிசு ஹுசைன்(ரலி) அவர்களின் மகன் அலி இப்ன் ஹுசைன் ஆவார்கள். யஸீதின் படைகளால் அவர்களின் பயண வாகனம் தாக்கப்படும் போது அவர்கள் சண்டை யிட முடியாமல் கடும் நோயின் பிடியில் இருந்தார்கள். 
ஹுசைன்(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, மக்காவிலிருந்த இப்ன் அல் ஜுபைர் இரண்டு அமைப்புகளைத் தொடங்கினார். ஒன்று நபி(ஸல்) அவர்களின் குடும்பம் இருந்த காரணத்தினால், குடும்பத்தினரை சிறைப் பிடித்ததற்கு நியாயம் வேண்டி மதீனாவை மையப்படுத்தி ஒரு அமைப்பும், கரிஜியாக்களை எதிர்த்து பஸ்ரா நகரில் ஒரு அமைப்பையும் தொடங்கினார்கள். 683 ல் யஸீத் மதீனா அமை ப்பை ஹர்ராஹ் என்னும் போரின் மூலம் அடக்கினார். அப்போது மதீனாவின் பெரிய பள்ளி கடும் சேதத்திற்குள்ளாகியது. நகரில் கொள்ளைகளும் நடந்தன. பிறகு, யஸீதின் படைகள் மக்காவிற்கும் சென்றது. அப்போது ஏதோ ஒரு வகையில் புனித காபா பள்ளி தீக்கிரையானது. இந்த இரு பள்ளிகளின் சேதம் உமய்யாத்களின் ஆட்சியில் நடந்த கரும்புள்ளிகளாகும். யஸீத் இறந்த பிறகும் இந்த கலவரங்கள் நடந்துகொண்டு தான் இருந்தன. யஸீதின் படைகள் மக்கா நகரை இப்ன் அல் ஜுபைரின் கட்டுப்பாட்டிலேயே விட்டு விட்டு கிளம்பின. 683 ல் யஸீதின் மகன் இரண்டாம் மூ ஆவியா கலீஃபாவாக பதவியேற்றார். ஆனால், அவருக்கு சிரியாவைத் தாண்டி போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கிடை யில் சிரியாவில் கெய்ஸின் உறுப்பினர்கள் இப்ன் அல் ஜுபைரை ஆதரித்தார்கள். குதா ஆ உறுப்பினர்கள் வா இல் இப்ன் உமய்யாஹ் என்பவரின் மகன் மர்வானை ஆதரித்தார்கள். 684 ல் டமாஸ்கஸ் அருகில் நடந்த மர்ஜ் ரஹித் போரில் மர்வான் வெற்றி பெற்று கலீஃபாவானார்.                                                
மர்வான் முதலில் இப்ன் அல் ஜுபைரின் ஆதரவைப் பெற்றார். மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு மனதாக மர்வானை ஆதரித்தார்கள். மர்வான் எகிப்தை மீண்டும் வெற்றி பெற்று உமய்யாத் பேரரசுடன் இணைத்தார். ஆனால், எதிர்பாராத விதமாக ஒன்பது மாதகால ஆட்சிக்குப் பிறகு 685 ல் இறந்து போனார். மர் வானுக்குப் பிறகு அவர் மகன் அப்த் அல் மாலிக் கலீஃபாவானார். அலி(ரலி) அவர்களின் மற்றொரு மகன் முஹம்மது இப்ன் ஹனஃபிய்யாவைத்தான்  கலீஃபாவாக ஆக்க வேண்டுமென்று குஃபாவைச் சேர்ந்த அல் முக்தார் என்பவர் அப்த் அல் மாலிக்குக்கு எதிராக கலவரம் செய்து எதிர்த்தார். ஆனால், இதில் முஹம்மது இப்ன் ஹனஃபிய்யாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அல் முக்தாரின் படைகள் 686 ல் மோஸுல் நகருக்கருகில் காஸிர் ஆற்றின் கரையில் நடந்த போரில் உமய்யாத்களைத் தோற்கடித்தனர். 687 ல் இப்ன் அல் ஜுபைருடன் நடந்த போரில் அல் முக்தாரின் படை அழிக்கப்பட்டது. 691 ல் உமய்யாத்கள் மீண்டும் ஈராக்கைக் கைப்பற்றினார்கள். 692 ல் அதே படை மக்காவையும் கைப்பற்றியது. இப்ன் அல் ஜுபைர் கொல்லப்பட்டார். 
அப்த் அல் மாலிக் அவர்களின் ஆட்சியின் இன்னொரு சாதனையாக ஜெருசலத் தில் ‘டோம் ஆஃப் ராக்’ முழுமையாகக் கட்டப்பட்டது. இது மக்காவின் காபாவுக்கு போட்டியாக கட்டப்பட்டதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அப்த் அல் மாலிக் அவர்கள் முழுக்கட்டுப்பாடுடன் ஆட்சி நடத்தினார். அரபு மொழியை ஆட்சி மொழி ஆக்கி, புழக்கத்திலிருந்த பைஸாந்திய,ஸசானிய நாணயத்திற்கு பதிலாக அழகாக அலங்கரிக்கப்பட்ட முஸ்லீம் நாணயத்தை வெளியிட்டார். பைஸாந்தியர்களுக்கு எதிராக செபாஸ்டோபொலிஸ் என்ற இடத்தில் போரிட்டு அர்மேனியாவையும், காகஷியன் ஐபீரியாவையும் வெற்றி கொண்டார். அப்த் அல் மாலிக் இறந்த பின் அவர் மகன் முதலாம் அல் வலீத் கலீஃபாவானார். இவர் ஆட்சியில் மதீனாவில் அல் மஸ்ஜித் அல் நபவியை புதுப்பித்தார். டமாஸ்கஸில் கிரேட் மஸ்ஜித் கட்டி னார். அப்த் அல் மாலிக் மற்றும் அல் வலீத் ஆகியோரின் ஆட்சியில் ஈராக்கின் கவர்னராக அல் ஹஜ்ஜஜ் பின் யூஸுஃப் என்பவர் இருந்தார். பெரும் பான்மை ஈராக் மக்கள் உமய்யாத்களின் ஆட்சியை விரும்பவில்லை. அல் ஹஜ்ஜஜ் பின் யூஸுஃப் சிரியாவிலிருந்து இராணுவத்தை அழைத்துவந்து வாஸித் என்ற ஒற்றர்கள் நகரத்தையே உருவாக்கி சிறப்பாக எதிர்ப்பாளர்களை அடக்கினார். அதில் குறிப்பிடத்தக்கது இப்ன் அல் அஷ் அத் என்ற ஈராக்கின் ஜெனரல் எட்டாம் நூற்றாண்டில் நடத்திய புரட்சியை அடக்கியது. 

உமய்யாத்கள் வரலாறு 3

அல் வலீதுக்குப் பின் அவர் சகோதரர் சுலைமான் என்பவர் கலீஃபாவானார். இவர் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்ற நீண்ட போரை நடத்தினார். அது முடியா மல் போக பைஸாந்திய பேரரசை வெல்லும் ஆர்வம் முஸ்லீம்களிடத்தில் குறை ந்தது. முதல் இருபது ஆண்டு உமய்யாக்களின் ஆட்சியில் மேற்கில் ஐபீரிய தீபகற் பம், குதைய்பா இப்ன் முஸ்லிமின் கீழ் ட்ரான் ஸாக்சியானா மற்றும் கிழக்கில் வட இந்தியா வரை பரவினார்கள். சுலைமானுக்குப் பிறகு, உறவினர் உமர் இப்ன் அப்துல் அஜீஸ் கலீஃபாவாக பதவியேற்றார். உமய்யாத்களில் இவரின் கலீஃபா பதவி மட்டும் விந்தையாக இருந்தது. இவரை மட்டும் இஸ்லாமிய பாரம்பரிய வழிமுறையில் கலீஃபாவாக ஏற்றுக்கொண்டார்கள். உமர் இப்ன் அப்துல் அஜீஸ் புதியதாக முஸ்லீம் மதம் மாறுவதன் சம்பந்தமாக இருந்த பிரச்சினையை திறம் பட சமாளித்து நற்பெயர் பெற்றார். உமய்யாத்களின் காலத்தில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்துவர்களாகவும், யூதர்களாகவும், ஸோரோஸ்ட்ரியன்களாகவும் இருந்தார்கள். அவர்களை யாரும் முஸ்லீமாக மதம் மாற கட்டாயப் படுத்தவில்லை. ஆனால், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு விதிக்கப்படும் ‘ஜிஸ்யா’ வரியைத் தவிர்ப்பதற்கு பலர் முஸ்லீமாக மதம் மாறினார்கள். இதனால் மாகாணங்களில் வரி மூலம் போதிய வருவாய் இல்லை. கவர்னர்கள் மதம் மாறுபவர்களைத் தடுத்தனர். இதைத்தான் உமர் இப்ன் அப்துல் அஜீஸ் அவர்கள் திறமையாகக் கையாண்டார்கள். ஆனால், எப்படி என்பதற்கான குறிப்புகள் கிடைக்க வில்லை. 
உமர் இப்ன் அப்துல் அஜீஸ் இறப்பிற்குப் பின் மற்றொரு மகனான அப்துல் மலிக் இரண்டாம் யஸீத் 720 லிருந்து 724 வரை கலீஃபாவாக இருந்தார். இவர் பிரச்சினை யாக இருந்த கர்ஜியாக்களுடன் சமாதானத்திற்கு முயன்றார். இதற்கிடையில் இவரின் படைகள் கரிஜியாக்களின் தலைவர் ஷவ்தாபைக் கொன்றனர். அதிலிருந்து தப்பித்த யஸீத் பின் அல் முஹல்லப் என்பவர் தனக்கு ஆதரவு அதிகமாய் இருந்த ஈராக்குக்குத் தப்பி ஓடினார். இவர் இரண்டாம் யஸீத் ஆட்சிக்கு வந் ததை விரும்பவில்லை. வெகு சீக்கிரம் வளர்ந்த இவர் மஸ்லமாஹ் இப்ன் அப்த் அல் மலீக் படைகளால் கொல்லப்பட்டார். இவர் நாட்டில் உள்ள அனைத்து கிறி ஸ்தவ அடையாளமுள்ள சிலைகளை இடிக்கச் சொல்லி சிலை வணக்கத்திற்கு எதிராக இருந்தார். இவரது ஆட்சியிலும் ஈராக்கில் யஸீத் இப்ன் அல் முஹல்லப் என்பவர் புரட்சி செய்தார். 724 ல் இரண்டாம் யஸீத் அப்துல் மாலிக் எலும்புருக்கி நோயால் மரணமடைய அவர் கடைசி மகன் ஹிஷாம் என்பவர் கலீஃபா பதவி யேற்றார். இவர் 743 வரை ஆண்டார். பல பிரச்சினைகள் இருந்த இவரின் நீண்ட கால ஆட்சியில் உமய்யாத்களின் இராணும் விரிவுபடுத்தப்பட்டது. தனது அரண் மனையை டமாஸ்கஸை விட்டு தொலைவில் பைஸாந்திய எல்லைக்கு அருகில் வட சிரியா பகுதியில் ரிஸாஃபா என்ற இடத்தில் அமைத்துக்கொண்டார். இது ஏற்கனவே கான்ஸ்டாண்டிநோபிள் மீது படையெடுத்த காரணத்தால் கோபத்தி லிருந்த பைஸாந்தியர்களை மேலும் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. ஹிஷாம் வெற்றிகரமாக அனடோலியாவைக் கைப்பற்றினார். ஆனால் அக்ரோயினன் போரில் பெரும் தோல்வி கண்டு மேலும் பேரரசை விசாலமாக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.  732 ல் ‘டூர்ஸ்போரில்’ ஃப்ராங்க்ஸ் படைகளிடம் தோல்வியுற்றதால், மேற்கிலும் பரவ முடியாமல் போனது. ஹிஷாமின் ஆட்சியில் 739 ல் வட ஆப்பி ரிக்காவில் பெர்பெர்கள் பெரும் புரட்சியில் ஈடுபட்டார்கள். காகசஸில் கஸார் என் பவர்களின் பிரச்சினையும் சிக்கலாக இருந்தது. ஹிஷாம் டெர்பெண்ட் என்னும் உயரிய இராணுவ படையை அமைத்து பலமுறை வட காகசின் மீது படையெடுத் தார். ஆனால், கஸார் நாடோடிகளை ஒன்றும் செய்யமுடியவில்லை. உமய்யாத் படைகள் மர்ஜ் அர்தாபில் போரில் நிறைய இழப்புகளைச் சந்தித்தது. கிழக்கிலும், பல்க் மற்றும் சமர்கண்டிலும் ஆட்சிக்குட்பட்ட பகுதி இருந்தாலும், நிர்வாகம் செய்யமுடியாமல் இருந்தது. மீண்டும் முஸ்லீமல்லாதவர்களின் வரிப் பிரச்சினை சோக்டியன் என்ற பிரிவினரால் டிரான்ஸ்ட்ராக்சியானாவில் தோன்றியது. குராசனின் கவர்னர் அப்துல்லாஹ் சுலாமி முஸ்லீமாக மாறிய அவர்களின் வரியைக் குறைப்பதாக உறுதியளித்தார். ஆனால் மாகாணத்தின் வரிப்பற்றாக் குறையினால் அது முடியாமல் போனது. மேலும் உமய்யாத்களுக்கு முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமைப்                                             பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகிப் போனது.                                 
ஹிஷாம் அவர்களின் ஆட்சியில் கல்வித் துறை பலமாக வளர்ந்து பல பள்ளிக் கூடங்கள் புதியதாகக் கட்டப்பட்டன. கலாச்சாரத்தை மேம்படுத்தினார். பல அரிய வேற்று மொழி நூல்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்தார். உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போதிருந்த இஸ்லாமிய ஷரியா சட்டத்தை உறுதியாக நிலை நாட்டினார். தன் குடும்பத்தினரிடையும் அதைக் கடை பிடித்தார். ஆட்சிக்கு வந்த போது உடுத்திய அதே பச்சை நிற அங்கியையே மரணிக்கும் வரை அணிந் திருந்தார். மக்களுக்கு எப்படி ரொட்டி தயாரிப்பதென்றும், ஆட்டிலிருந்து எப்படி பால் கறக்க வேண்டும் என்பதையும் கௌரவம் பார்க்காமல் செய்து காட்டினார். மர்வான்களின் வாரிசிலேயே போருக்கு போகாவிட்டால் ஊதியம் பெற மாட்டார். ப்ளேக் நோயிலிருந்து தப்பிக்க பாலைவனத்தில் சில காலம் தங்கி இருந்தார். பைஸாந்தியர்களின் எல்லைக்கருகில் இரு அரண்மனைகளைக் கட்டினார். 
ஹிஷாமிற்குப் பிறகு. இரண்டாம் யஸீதின் மகன் இரண்டாம் அல் வலீத் ஆட்சிக்கு வந்தார். இவர் குடிப்பழக்கம் உள்ளவராக இருந்ததால், ஹிஷாம் அவருக்கான உதவித்தொகைகளை நிறுத்தி, இஸ்லாமிய நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து அவரை நல்ல முறையில் ஆட்சிக்கு தயார் படுத்தினார். பின்னாளில் ஹிஷாமின் மகன் சுலைமான் இப்ன் ஹிஷாமை குடிப்பது, பாட்டு பாடுவது மேலும் கீழ்தரமான செயல்களிலும் ஈடுபட்ட காரணத்தால் சிறையில் அடைத்தார். குதிரையின் மீது ஆர்வமாய் இருந்த இரண்டாம் வலீத் பந்தயங்களை நடத் தினார். இதனால் வெறுப்புற்ற இவரின் அரசியல் எதிரிகள் இவரை கொல்ல திட்டம் தீட்டினர். காலித் இப்ன் அப்துல்லாஹ் அல் கஸ்ரி என்பவர் நேரடியாக வலீதை எச்சரித்தார். அவரை சிறையிலடைத்து யூசுஃப் பின் உமர் என்பவர் மூலம் கொல்லச் செய்து சொந்த குடும்பத்தில் பகையை வளர்த்துக் கொண்டார். இவர் கலை வண்ணத்துடன் கூடிய கட்டிடங்களைக் கட்டுவதில் ஆர்வம் காட்டினார். பாலைவன அரண்மனைகள் என்று புகழப்பட்ட இவரின் குஸைர் அம்ரா, கிர்பத் அல் மஃப்ஜர் கட்டிடங்கள் சிறப்பு வாய்ந்தது. இவர் தனது ஆட்சியை எதிர்த்தவர் களை தூக்கிலிட்டும், கதரிய்யாக்களை துன்புறுத்தியும் கவனம் பெற்றார். 744 ல் இடையில் முதலாம் அல் வலீதின் மகன் மூன்றாம் யஸீத் என்பவர் டமாஸ்கஸில் தான் தான் கலீஃபா என்று கிளர்ந்தெழுந்தார். 744 ல் தற்போதைய ஜோர்டானுக்கருகில் அல் அக்தஃப் என்ற இடத்தில் சுலைமான் இப்ன் ஹிஷாம் படைகளுடன் கடுமையாகப் போராடி கொல்லப்பட்டார். மூன்றாம் யஸீத் இரண்டாம் அல் வலீதைக் கொன்று ஆறுமாத காலமே கலீஃபாவாக இருந்தார். மூன்றாம் யஸீத் முதலாம் வலீதின் சட்டத்திற்குட்படாத (வைப்பாட்டி) மனைவியான பெர்ஷிய இளவரசிக்குப் பிறந்தவர். இவர் தானே கடைதெருவுக்கு சென்று பொருட்களை வாங்குவார். இவர் கதரிய்யாக்கள் மீது இரக்கம் காட்டினார். மூளை அதிர்வு நோயால் அக்டோபர் 744 ல் இறந்து போனார். இவர் தனக்குப் பிறகு தன் சகோதரர் இப்ராஹிம் கலீஃபாவாக இருக்க ஆணையிட்டிருந்தார். ஆனால், மர்வானின் பேரர் இரண்டாம் மர்வான் என்பவர் வடக்கு முண்ணனிப் படையுடன் டமாஸ்கஸில் நுழைந்து 744 ல் கலீஃபாவாக நியமித்துக் கொண்டு 750 வரை ஆண்டார். இவர் முன்பு ஹிஷாமால் அர்மேனியாவிலும், அஸர்பைஜானிலும் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தார். உடனடியாக தலைநகரை ஹர்ரானுக்கு (தற்போதைய துருக்கி) மாற்றிக் கொண்டார். ஹாம்ஸுக்கும் டமாஸ்கஸுக்கும் நடுவில் பெரிய சுவரை எழுப்பினார். இரண்டாம் மர்வானுக்கு ஈராக் மற்றும் ஈரானிலிருந்த கரிஜியாக்களிடமிருந்து தஹ்ஹக் இப்ன் கைய்ஸ், அபு துலாஃப் தலைமையில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. கலீஃபா எப்படியாவது அதை அடக்கி ஈராக்கை கட்டுப்பாட் டில் கொண்டுவர நினைத்தார். ஆனால் கோரசான்களிடமிருந்து பலமான மிரட் டல் கிளம்பியது. 
மக்கா குரைஷி இனத்தவரின் ஹாஷிம் பரம்பரையில் வந்தவர்கள் அப்பாஸிட்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்களில் கைசானியப் பகுதியைச்சேர்ந்த சிலர் அபு ஹாஷிம் என்பவரைச் சேர்ந்தவர்கள் என்று குறிக்கும் வண்ணம் “ஹஷிமிய் யா” என்ற ஒரு அமைப்பை நடத்தினார் கள். அபு ஹாஷிம் என்பவர் முஹம்மது இப்ன் அல் ஹனஃபிய்யா என்பவரின் மகனும், அலி(ரலி) அவர்களின் பேரரும் ஆவார், ஹஷிமியாக்கள் எப்போதுமே உமய்யாக்களின் எதிரியாகத்தான் இருந் தார்கள். மூத்தவர் அபு ஹாஷிம் முஹம்மது இப்ன் அலியின் இல்லத்தில் மரணமடையும் போது, முஹம்மது இப்ன் அலி அவர்கள் கலீஃபாவாக வேண்டும் என்றார். இந்த பாரம்பரிய வார்த்தையை முன் வைத்து தான் அல் முக்தார் என்பவர் நாம் முன் அத்தியாயங்களில் பார்த்த கலீஃபா அப்த் அல் மாலிக் காலத்தில் புரட் சியில் ஈடுபட்டுத் தோற்றுப்போனார். இந்த ஹஷிமிய்யா அமைப்பினர் முதலில் குராசன் பகுதியில் ஆதரவைத் திரட்டினார்கள். இவர்கள் தங்கள் பிரச்சாரத்தில் “தாஃவா” என்னும் அல்லாஹ் மற்றும் இஸ்லாமிய மதச்சார்புடைய வண்ணமும், தாங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வண்ணமும் அமைத்துக் கொண்டார்கள். இதனால் இவர்களுக்கு முஸ்லீம்களிடத்திலும், முஸ்லீமல்லாதவர்களிடத்திலும் செல்வாக்கு உயர்ந்தது.
746 ல் குராசனில் அபு முஸ்லிம் ஹஷிமிய்யாக்களின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். 747 ல் கருப்புக் கொடியேந்தி உமய்யாத்களுக்கு எதிராக புரட்சியை உண்டாக்கினார். குராசனின் பகுதியைக் கைப்பற்றி நாசர் இப்ன் சய்யார் என்னும் உமய்யாத் கவர்னரை வெளியேற்றி மேற்குப் பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார். 749 ல் குஃபா நகரமும், உமய்யாத்களின் பலம் வாய்ந்த வாசித் நகரமும் ஹஷிமிய்யாக்கள் கைப்பற்றினார்கள். அந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் அபு அல் அப்பாஸ் என்பவரை தங்கள் கலீஃபாவாக குஃபா நகர மசூதியில் தேர்ந்தெடு த்தார்கள். அந்த நேரத்தில் உமய்யாத் கலீஃபா மர்வான் ஹர்ரானிலிருந்து படைகளை ஈராக் நோக்கி திருப்பினார். இரு படைகளும் ‘ஸாப் போரில்’ சந்தித்து உமய்யாத்கள் தோல்வி அடைந்தனர். அந்த போரின் போது 85 வயதான நாஸர் நோயினால் மரணமடைந்தார். டமாஸ்கஸ் நகரம் அப்பாஸிட்கள் வசம் வந்து மர்வான் எகிப்தில் கொல்லப்பட்டார். உமய்யாத்களின் கோபுரங்கள் இடிக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் 80 நபர்கள் பொது மன்னிப்பு வழங்கபட்டு மீதி நெருங்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். உமய்யாத்களில் கலீஃபா ஹிஷாம் அவர்களின் பேரர் முதலாம் அப்த் அல் ரஹ்மான் மட்டும் தப்பித்து அல் அண்டலூசில் (மூரிஷ் ஐபீரியா) ஆட்சி அமைத்தார்.
உமய்யாத்களின் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய மதம் பெரும் வளர்ச்சியைக் கண்டது. அதிகமான பெர்ஷியர்கள், பெர்பெர்கள், காப்டுகள் மற்றும் அரமாயிக்குகள் இஸ்லாத்தைத் தழுவினர். அவர்கள் ஆரம்ப முஸ்லீம்களை விட கல்வியி லும், வாழ்க்கைத் தரத்திலும் உயர்ந்தனர். உமய்யாத்களின் அழிவிற்கு ஈராக், சிரியாவுக்கிடையில் இருந்த வேற்றுமையே காரணம் என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆரம்பத்தில் மூ ஆவியா அவர்கள் சாம்ராஜ்ஜியத்தில் நிலையான நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஏற்கனவே ஆண்ட பைஸாந்தியர் களின் வழியையே பின்பற்றினார். மேலும், அரசு நிர்வாகத்தை அரசியல் மற்றும் இராணுவத்தை கவனிக்க ஒரு பிரிவும், வரி வசூல்களைக் கவனிக்க ஒரு பிரிவும், மத விவகாரங்களைக் கவனிக்க ஒரு பிரிவுமாக மூன்று பிரிவாகப் பிரித்தார். அதிலிருந்து அதனுள்ளேயே பல அலுவல்கள் மற்றும் பிரிவுகளை உண்டாக்கி னார். பூகோள அமைப்புப்படி நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. எல்லைப் பகுதிகள் அவ்வப்போது வென்ற பகுதிகளுக்கேற்ப பலமுறை மாற்றி அமைக்கப் பட்டன. ஒவ்வொரு பகுதிக்கும் கவர்னர்கள் கலீஃபா வால் நியமிக்கப்பட்டார்கள். கவர்னர்கள் மத விஷயங்கள், இராணுவ தலைமைகள், காவலர்கள் மற்றும் சமூக நிர்வாகம் ஆகியவற்றை கவனித்துக் கொண்டார்கள். அந்தந்த பகுதிகளில் வசூலிக்கப்படும் வரிகளைக் கொண்டு உள் பகுதி செலவுகளைக் கவனித்துக் கொண்டு, உபரியை மத்திய அரசு வகிக்கும் டமாஸ்க ஸுக்கு அனுப்பினார்கள். சிலசமயங்களில் சில கவர்னர்கள் மீதி வரித்தொகையை டமாஸ்கஸுக்கு அனுப் பாமல் பிரச்சினையை உண்டாக்கினார்கள். 
உமய்யாத் சாம்ராஜ்ஜியம் வளர வளர மூ ஆவியா அவர்கள் தகுதிவாய்ந்த அரபு வேலையாட்களை புதியதாக வெற்றி பெற்ற பகுதிகளுக்கு அனுப்பி முன்னேற்றம் கண்டார்கள். இப்படி முன்னேற்றம் கண்ட பகுதிகளாக கிரீக், காப்டிக் மற்றும் பெர் ஷியா ஆகும். கலீஃபா அப்த் அல் மாலிக் காலத்தில் முறையாக அரசு பணிகளை பதிவு செய்து பாதுகாக்க உத்தரவிட்டிருந்தார். உமய்யாத்களின் ஆரம்ப காலத்தில் பைஸாந்திய, ஸசானிய நாணயங்களே புழக்கத்திலிருந்தன. அதன் மீது திருக்குரான் வசனங்கள் மட்டும் பதியப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன. பின்னாளில் உமய்யாத்கள் சொந்த நாணயத்தை வெளியிட்டு உலகில் நாணயம் வெளியிட்ட முதல் இஸ்லாமிய நாடு என்ற பெருமையைப் பெற்றார்கள். தங்க நாணயங்கள் தினார் என்றும், வெள்ளி நாணயங்கள் திர்ஹாம் என்றும் அழைக்கப்பட்டன.  
கலீஃபாவிற்கு நிர்வாகத்தில் உதவியாக ஆறு துறைகள் இருந்தன. திவான் அல் கரஜ் (வருவாய்த்துறை), திவான் அல் ரஸா இல் (ஒப்புதல் சரிபார்த்தல்), திவான் அல் கதம் (அதிகார முத்திரையிடுபவர்கள்), திவான் அல் பரித் (தகவல் தொடர்பு), திவான் அல் குதத் (நீதித்துறை), திவான் அல் ஜுந்த் (இராணுவ நிர்வாகம்) ஆகியவை ஆகும். இதில் திவான் அல் கரஜ் என்னும் வருவாய்த்துறை, மொத்த சாம்ராஜ்ஜியத்தின் வரி விதிப்பு, வரி குறைப்பு, வரி வசூல், ஊதியம் வழங்கல் ஆகிய வற்றைக் கவனித்துக் கொண்டது. திவான் அல் ரஸா இல் என்னும் ஒப்புதல் சரிபார்த்தல் துறை அனைத்து துறைகளின் விண்ணப்பங்கள், மத்திய, பிராந்தியங் களுக்கிடையிலான கடிதப்படிவங்களை சரி பார்த்தல் மற்றும் மனுக்கள் ஆகியவ ற்றை கவனித்துக் கொண்டன. திவான் அல் கதம் என்னும் முத்திரைத்துறை, மூஆவியா காலத்தில் பிரத்யேகமாக உருவாக்கப் பட்டது. எந்தவொரு அரசு ஆணையும், மற்ற உத்தரவுகளும் போலி களுக்கு இடம் கொடுக்காமல், முதலில் சம்பந்தப்பட்ட துறைக்கோ அல்லது நபருக்கோ அதன் நகல் அனுப்படும். இந்தத்துறை நகலையும், உண்மையையும் ஒப்பிட்டு சரி பார்த்து முத்திரையிட்டு அனுப்ப வேண்டும். இந்த துறை கலீஃபா அப்த் அல் மாலிக் ஆட்சி காலத்தில் பெரிதும் உதவிகரமாக இருந்தது.