செவ்வாய், 16 ஜூன், 2015

மன்னரும், போரும் 3



8 ம் நூற்றாண்டிலிருந்து போர் கைதிகளை எந்த காயமும் இன்றி பிடிப்பதற்கே முயற்சி செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் பழங்கள், காய்கறி போல் ஒரு விற்பனைப்பொருள். ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியாவின் புகழ்பெற்ற அடிமைச்சந்தையில் விற்றுவிடுவார்கள். குறிப்பாக பெண்களைப் பிடிப்பார்கள் அது கூடுதல் விலைபோகும். போர் சித்திரவதை என்பது வெகுகாலத்திற்கு முன்பு முதல் இருக்கிறது. சித்திரவதையின் நோக்கம் மனோதத்துவ ரீதியிலும், காயம் ஏற்படுத்துவதற்காக செய்யப்படும். சித்திரவதையின் காரணங்களாக தண்டனைக்காகவும், பழிவாங்குவதற்காகவும் செய்யப்படும். சித்திரவதையின் முறைகளாக கைகளால் அடிப்பது, சவுக்கால் அடிப்பது, விரல்கள், கால்நகங்கள், முட்டி, பற்கள் மற்றும் தலையை இருபுறம் விரிந்த இரும்பு விசை கொண்டு நசுக்குவது, கொதிக்கும் எண்ணெய், கத்திகள், மிதமான தீ, செம்புக்கம்பியை சுட்டு கண்களை காயப்படுத்துவது என்று பலவகை உண்டு. சித்திரவதை செய்யப்படுபவர்களை நிர்வாணமாகத் தான் வைத்திருப்பார்கள். முதுகுக்குப் பின்னே கரிகளை எறியவிட்டு தோல்கள் கருகி விழவைப்பார்கள். தொங்கவிட்டு காலின் கீழே தீ எரிய வைப்பார்கள். தலையில் இரும்பு கயிரைக்கட்டி மூளையை நசுக்குவார்கள்.
                                     இவான் தி டெர்ரிபிள் என்ற மன்னன் தனது படுக்கையறையிலிருந்து நேராக சித்திரவதைக்கூடம் செல்ல தனி வழி வைத்திருந்தான். தன் வாலிப மகனுடன் சென்று சித்திரவதை செய்யப்படுவதை அனுபவித்துப் பார்ப்பான். பீட்டர் தி கிரேட், வ்ளாட் டிபிஸ் போன்ற மன்னர்களும் சித்திரவதையை அனுபவித்துப் பார்ப்பார்கள். ரோமர்கள், யூதர்கள், எகிப்தியர்கள் சித்திரவதையை ஒரு தண்டனைச் சட்டமாகவே வைத்திருந்தார்கள். ரோமர்கள் சிலுவையில் அறைவதும், யூதர்கள் கற்களால் அடிப்பதும், எகிப்தியர்கள் பாலைவன வெயிலில் போடுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் பாதாள அறைகளில் ரகசியமாக செய்யப்பட்டது. நாளடைவில் பலர் கூடி வேடிக்கை பார்க்க பொதுமக்களின் முன்பு நடத்தப்பட்டது. சித்திரவதைக் கருவிகளைக் கண்டுபிடிக்க என்றே குழுக்கள் இருந்தன.
                               ஹிட்லர் குறைந்த செலவில் யூதர்களைக் கொல்ல, தென்னை, பனை மரங்களைப்போல உயரமான மரத்தின் கீழே கை,கால்களைக் கட்டி, தலை அசையா வண்ணம் பெரிய பாறைகளை இருபுறமும் வைத்து கட்டி, நெற்றி முடிந்து, கன்னத்தின் மேற்புறம் மூளைப்பகுதி மரத்தின் உச்சியை நோக்கி இருக்கும் வகையில் வைத்து மரத்தின் உச்சியில் ஒரு எண்ணெய், பெயிண்ட் பயன்படுத்தும் தகர டப்பாவில் நீர் நிரப்பி சிறு ஓட்டையிட்டு அளவான நிலையில் தண்ணீர் சொட்டுவது போல் வைத்தார். அந்த சொட்டு 30 அடிக்கும் மேலாக இருந்து சரியாக மூளையின் மேல் பகுதியில் வந்து விழும். நீர் சொட்டு விழ விழ சகல நினைவுகளும் போய் மூளை அடுத்த சொட்டை எதிர்பார்த்து எதிர்பார்த்து உள்ளுக்குள்ளேயே சிதைந்து போய் விடும். ஐரோப்பாவில் அதிகமானவர்களைக் கொல்ல கைகளைக் கட்டி மலை மேல் ஓடச் சொல்வார்கள். குறிப்பிட்ட உச்சியை அடைந்தவுடன் மேலிருக்கும் வீரர்கள் குதிரையின் வயிறளவுள்ள பெரிய மரத்தின் அடிப்பாகங்களை தப்பிக்க இடைவெளி இல்லாமல் உருட்டி விடுவார்கள். ஒவ்வொரு மரத்துண்டும் எங்கே படும் எப்படிப்படும் என்றே சொல்லமுடியாது. ஒரு மேல் விவரமாகத் தான் மேற்படி சொன்னேன். போதும் என்று நினைக்கிறேன். அடுத்ததற்கு போவோம்.
                                    போரை இஸ்லாம் “ஜிஹாத்” என்று அரபியில் அழைக்கிறது. அதன் விவரம் அல்லாஹ்வின் வழியில் போராடுவது அல்லது எதிர்ப்பது என்பதாகும். இச்சொல் திருக்குர்ஆனில் 23 இடங்களிலும், ஜிஹாத் எப்படி இருக்க வேண்டுமென்று 41 இடங்களிலும் அல்லாஹுத்தாலா இந்த சொல்லை குறிப்பிட்டுள்ளான். ஆனாலும், இதைவைத்து இன்று அமெரிக்காவும், மேற்கத்தியர்களும் புதுப்புது அர்த்தங்கள் கூறி முஸ்லீம்களை வேட்டையாடி வருகிறார்கள். இப்படிப் போராடுபவர்களை முஜாஹிதீன்கள் என்று சொல்லப்படுவார்கள். தன்னை எதிர்ப்பவர்களுடன் போராடு என்பதை இஸ்லாமின் ஆறாவது தூண் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள். தனது மதக்கடமைகளை செய்யவிடாமல் தடுக்கும் சக்தியை எதிர்த்து போராடுவது முதல் ஜிஹாதாகும். வெளிப்படையான ஜிஹாதானது மற்ற எல்லாரையும் போல (இஸ்லாமியர்கள் அல்லாஹ்வின் வழியில் மட்டும்) போரிடுவது. இதைப் புனிதப்போர் என்றும் சொல்லலாம்.
                              BBC  நிறுவனம் மூன்றாவதாக ஒரு நல்ல சமுதாயம் அமைக்க போராடுவதும் ஜிஹாத் தான் என்று அல் மின்ஹஜ்ஜின் கீழ் சஹீஹ் புகாரியின் ஹதீஸை மேற்கோள் காட்டுகிறது. கிதால் என்ற அரபிச்சொல் தான் நேரடியான போர் என்பதும், ஜிஹாத் என்பது முஸ்லீம்களைச் சுற்றி உள்ளவர்களுடனான நிலைப்பாடு என்றும் கருதப்படுகிறது. நாளடைவில் சுற்றியுள்ளவர்களைத் தாண்டி எதிர்ப்பு பரவலானதால் ஜிஹாத் உலகம் முழுக்க பொதுவானதாகிப் போனது. ஜிஹாதைப்பற்றி முதல்முதலில் அப்த் அல் ரஹ்மான் அல் அவாஸி மற்றும் முஹம்மது இப்ன் அல் ஹசன் அல் ஷைபானி ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.
                               அரபியில் “ஜிஹாத் அல் நிக்காஹ்” என்பது பாலியல் சார்ந்த ஜிஹாத், அதாவது தன்னிடம் ஒன்றும் இல்லாத நிலையில் ஒரு அநியாயத்தை எதிர்க்கவோ அல்லது இஸ்லாத்தை நிலைநாட்டவோ ஒரு இஸ்லாமிய பெண் தன்னை ஒரு ஆணுடன் இணைய சம்மதிக்கலாம். இந்த வகையான ஜிஹாத் சமீபத்தில் துனிஷீயாவில் இருந்ததாக மீடியாக்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
                       முதல் ஜிஹாத் குர்ஆனின் 5 வது அத்தியாயத்தின் படி நபி (ஸல்) அவர்களால் வாணிப வாகனங்களை எதிர்த்து நடத்தப்பட்டது. மேலும், 60:1, 9:24 என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாத் செய்வதற்காகக் காரணங்களாக ஒப்புக்கொண்ட ஒன்றுக்காக உழைப்பது, தனி ஒருவனின் குறிக்கோளை எட்ட முயற்சிப்பது, சிறந்த ஒன்றுக்காக போராடுவது, அமைதிக்காகவும், நல்லவற்றிற்காகவும் அடுத்தவர்க்கு உதவுவது மற்றும் இஸ்லாமிய நெறியுடன் வாழ்வது போன்றதாகும். 11 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அல் காதிப் அல் பாக்தாதி என்பவர் தனது “பாக்தாத் சரித்திரத்தில்” நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக தோழர் முஹம்மது ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்து திரும்பி வந்து ஜிஹாத் என்பது அல்லாஹ்வின் அடியான் தனது தேவைகளுக்காக போராடுவதும் ஜிஹாத் தான் என்றார்கள், என்று கூறியுள்ளார். இப்படி பலவகையான குறிப்புகள் இமாம்கள், அறிஞர்கள் அதிகமதிகமாகக் கூறியுள்ளனர். சிறந்த ஜிஹாத் என்பது தனது மன்னனின் முன் நீதிக்காகப் போரிடுவது என்பதாக நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
                               ஜிஹாத் பற்றி நம் இஸ்லாமின் பல பிரிவுகளில் பல கருத்துகள் உண்டு. அஹமதிய்யாஹ் பிரிவு, அரசியலும், வன்முறையும் இன்றி தனியாகப் போராடுவது. வன்முறையை தன்னைக்காத்துக் கொள்ள கடைசியாகத் தான் பயன்படுத்த வேண்டும் என்கிறது. ஷியா பிரிவு, தற்பெருமை மற்றும் (நப்ஸ்) சுய எண்ணத்திற்கு எதிராக உள்ளும், புறமும் போராடுவது. சலஃபி வழிமுறை, வாளெடுத்து அல்லாஹ்வின் வழியில் போராடுவதுமாகும். மேலும், ஷைத்தானை விட்டு விலக மனதால் போராடுவதும், இஸ்லாமைப் பற்றி உண்மையாக நாவால் உரைப்பதும், நல்லவைகளுக்காகவும், தீயவற்றைத் தடுப்பதற்காகவும் கைகளால் போராடுவதும் ஜிஹாத் வகையைச் சேர்ந்தது தான். இந்த ஜிஹாத் என்பதின் சொல்பற்றி பல்வேறு நாடுகளும், பல்வேறு தரப்பினரும் இன்று விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள். வேதத்தில் நமக்கு சொல்லப்பட்ட இந்த சொல் பற்றி நம்மைவிட கிறிஸ்தவர்களும், யூதர்களும் தான் இன்று விவாதிக்கிறார்கள். காரணம் அதற்கு ஒரு விளக்கம் கண்டு எப்படியாவது இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து விடவேண்டும் என்பதே நோக்கம்.
                                  நபி (ஸல்) அவர்கள் மறைவிற்குப் பிறகு, கலீஃபா உமர்(ரலி)அவர்கள் பைசாந்தியப் பேரரசு மற்றும் சஸ்ஸானிய பேரரசை எதிர்த்து போரை ஆரம்பித்தார்கள். 636 ல் யர்முக் போரில்  முஸ்லீம்கள் வெற்றி பெற்று பைசாந்தியர்களை சிரியாவை விட்டு விரட்டினார்கள். 641 ல் கெய்ரோவில் பைசாந்தியர்களை சரணடைய வைத்தார்கள். மேலும் பைசாந்திய ஆட்சியாளர்களால் துயரத்துடன் இருந்த எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவைக் கைப்பற்றினார்கள். 637 ல் கதிஸ்ஸியா போரில் பெர்ஷியர்களை வென்றார்கள். 642 ல் நஹாவந்த் போரில் மீண்டும் பெர்ஷியர்களை வென்றார்கள். அடுத்த 15 ஆண்டுகளில் ஈரானை வென்று மத்திய ஆசியாவில் காலடி வைத்தார்கள்.
                            இதற்குப் பின் மாபெரும் பேரரசுகளான ஓட்டோமானும் (உஸ்மானியா), பெர்ஷியாவும் பாரம்பரிய இஸ்லாமிய மதக்கல்விக்கான அமைப்புகளை உருவாக்கினார்கள். போர்வீரர்களுக்காக “காஸா” என்ற அடிப்படை அமைப்பில் இஸ்லாமிய இராணுவத்தை அமைத்தார்கள். ஓட்டோமானின் இரண்டாம் மெஹ்மெத் கிறிஸ்துவர்களின் கான்ஸ்டாண்டிநோபிளை வெல்வது ஜிஹாத் வழிமுறையாகும் என்று கூறினார்.
                                  இஸ்லாமிய இராணுவம் என்பது ஷரியா சட்டம், இஸ்லாமிய நீதி மற்றும் உலமாக்களின் தீர்ப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாம் காட்டிய வழியில் அமைக்கப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்கள் முதலில் இதை திருக்குர்ஆன் காட்டிய வழியில் மதீனாவில் அமைத்தார்கள். ஜிஹாதின் முதல் எதிர்ப்பின் இலக்காக முஸ்லீம்களுக்கு மக்கா குரைஷிகள் ஆனார்கள். பின்னால் இது முஸ்லீம் பகுதிகளுக்கும்(தார் அல் இஸ்லாம்), முஸ்லீம் அல்லாதவர் பகுதிகளுக்கும் (தார் அல் ஹர்ப்) தனித்தனியாக அமைக்கப்பட்டது. எதிரிகளையும் நம்மவர்கள் போல் மதிக்க வேண்டும். தாக்குதலில் தம்மை தடுத்துக் கொள்வதற்கும், சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் அதை மீறக்கூடாது. நபி(ஸல்)அவர்கள் ஜிஹாத் போர் பற்றி அதிகமாக உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். முதல் கலீஃபா அபுபக்கர் சித்திக்(ரலி)அவர்கள் அதை இராணுவத்திற்கு போதித்தார்கள். அலி(ரலி) அவர்கள் தனது இராணுவத்தினருக்கு எக்காரணத்தைக் கொண்டும் எதிரியின் உணவு மற்றும் நீராதாரங்களைத் தடுக்கக் கூடாது என்றார்கள்.
                               நபி (ஸல்)அவர்கள் இறப்பதற்கு முன்பே,” ஒருநாள் நீங்கள் செல்வம் கொழிக்கும் எகிப்தில் நுழைவீர்கள். அதிகபட்சமாக அவர்களோடு திருமண உறவை வைத்துக் கொள்ளும் அளவிற்கு நல்லுறவை பேணுங்கள். நான் இறந்த பிறகு நடக்கும் எகிப்தின் நுழைவில் அவர்களை நமது இஸ்லாமிய படையில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் தான் உலகின் மிகச் சிறந்த போர் வீரர்கள். அவர்களும், அவர்களின் மனைவிகளும் மறுமை நாள் வரை கடமைக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கருவி ஆவார்கள். அல்லாஹ்வின் முன்பு அவர்களுடன் நீதமாக நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இவைகளை அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர்கள் தனது தலைமையில் எகிப்தை வென்றபோது, கடைபிடித்தார்கள். 7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவரான நிக்யூவைச் சேர்ந்தவரான ஜான் என்பவர், “அலெக்ஸாண்டிரியா சரணடைந்தவுடன் அவர்களின் தலைமை இராணுவ தளபதி அம்ர் அவர்கள் தனது படைகளையும் மற்ற அதிகாரிகளையும் சைப்ரஸ் தீவிலேயே விட்டுவிட்டு தான் மட்டும் நகருக்குள் வந்தார். அவரை எகிப்து மக்கள் மரியாதையுடன் வரவேற்றார்கள். நகரின் தேவாலயங்களைக் கொள்ளையடிக்கவில்லை.” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸலாவுத்தீன், அல் காமில் ஆகியோர் சிலுவைப்போரில் வென்ற பின் கூட முஸ்லீம் படைகள் நடந்து கொண்ட விதம் ஆச்சரியம் அளித்ததாக ஓலிவெரஸ் ஸ்கோலஸ்டிகஸ் என்ற கிறிஸ்தவர் கூறினார். மேலும், ‘நாங்கள் அவர்களுடைய இடங்களைக் கைப்பற்றினோம். அவர்களுடைய பெற்றோர்கள், மகன்கள், மகள்கள், சகோதர, சகோதரிகளை எங்கள் கரங்களால் கொன்றோம். அவர்களின் வீடுகளை விட்டு நிர்வாணமாக விரட்டினோம். ஆனால், நாங்கள் தோல்வியுற்று அவர்களின் அதிகாரத்தில் இருந்தபோது, எங்கள் பசிக்கு முஸ்லீம் படைகள் உணவளித்தார்கள்’ என்று கூறினார்.
                                ஆரம்பகால இஸ்லாமிய படைகளில் 15 வயதிற்கு மேலுள்ள உடலும், மனமும் வலுவான நிலையில் அவர்களுக்கு பெற்றோர் இருந்தால் அவர்களின் அனுமதியுடனே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். முதலில் தானாக போரிட உத்தரவிட்டவர் 820 ல் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ் ஷஃபி ஆவார். இவர் ஷாஃபி கல்விக்கூடங்களைத் தொடங்கியவர். இவர் காட்டு அரபுகளுடன் போரிடச் சொன்னார். ஆனால் அதே நேரத்தில் முஸ்லீமல்லாதவர்களையும், முஸ்லீமல்லாத அரபுகளிடமும் போரிடக்கூடாது என்று உத்தரவிட்டார். இஸ்லாமிய சட்டப்படி தாக்குதல் முன்னறிவிப்பு இல்லாமல் போர் செய்யக்கூடாது. எதிரியைக் கொடுமைப் படுத்துவதோ, தீயிலிடுவதோ கூடாது. மேலும் போர் செய்வதைப்பற்றிய பல விவரங்களைக் குர் ஆன் கூறுகிறது.

மன்னரும், போரும் 2



 மனிதன் முதல் முதலில் போரிட்டது நீருக்காகத்தான். அந்தகாலத்தில் மனித கூட்டம் ஒரு சமுதாயமாக கால்போன போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும். நீர்வளத்தைப் பிடிப்பதற்கு இரு கூட்டங்களும் அடித்துக் கொள்ளும். அப்போது அவர்களுக்குண்டான அறிவு அடிப்படையில் ஒரு உயிரின் மதிப்பு தெரியாது. (இப்போது மட்டும் என்ன இஸ்ரேலும், அமெரிக்காவும் உயிரின் மதிப்பையா தெரிந்து வைத்திருக்கிறார்கள்). நீர்வளம் கிடைத்தவுடன் கால்நடைகளுடன் கூடிய ஒரு நிரந்தர வாழ்க்கைச் சூழலை உருவாக்குவார்கள். பின் இன்னொரு கூட்டம் வரும் அவர்கள் இவர்களை அழிப்பார்கள் இப்படித்தான் அக்கால போர் இருந்தது. சட்டங்கள், எல்லைகள் கிடையாது. உங்களுக்கொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் உலகிலுள்ள எல்லா நாகரீகங்களும் நதியின் விலாசமிட்டு தான் தோன்றியது. சிந்து சமவெளி நாகரீகம், யூப்ரடீஸ், டைக்ரீஸ் நாகரீகம், வோல்கா நதி நாகரீகம் என்று. பின் நாகரீகங்கள் போரிட்டன. ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இறைவனால் பல கூட்டங்களுக்கு பல இறை தூதர்கள் வந்தார்கள் அவர்கள் மூலம் வேதங்கள் வந்தன. மறுத்தே பழகிப்போன மனிதர்களால் மதமும் சேர்ந்து கொண்டது.
                                போருக்கு பல காரணங்கள் உண்டு. பெண்களுக்காக, குலப் பெருமைக்காக, சுய கௌரவத்திற்காக, அடுத்தவரின் வளத்தையும், நிலப்பரப்பையும் கைப்பற்றுவதற்காக இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தாவூத் (அலை) நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட சபூர் வேதம் நீங்க, முதலில் நிலையான வேதத்துடன் வந்த மூஸா(அலை) நபியவர்களின் வழி வந்த யூதர்களும், இரண்டாவதாக வந்த ஈஸா(அலை) நபியவர்களின் வழி வந்த கிறிஸ்தவர்களும் கூட போரிட்டிருக்கிறார்கள். எப்படியும் யாரையும் அடித்துக் கொள்ளலாம். நீங்கள் நினைக்கலாம் ஈஸா(அலை) நபியவர்களுக்கு சட்டப்படி விசாரித்து தானே சிலுவைத் தண்டனை கொடுத்தார்கள் என்று அதுவேறு அது மதகுருமார்களால் கொடுக்கப்பட்டது. போர் சட்டம் என்பது வேறு. போருக்கென்று எந்த சட்டமும் இல்லை. அன்றும், இன்றும் ஒரு நாட்டில் போர் வீரர்கள் நுழைந்தால் முதலில் செய்வது கற்பழிப்பு. அடுத்து கொள்ளை, அடுத்து அடையாளங்களை அழிப்பது.
                                    உலகில் முதல்முதலில் வாயால் போர் சட்டம் போட்டவர்கள் நபி (ஸல்) அவர்களின் அன்புத்தோழர் அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் தான். போருக்கு புறப்படும் முன் வீரர்களிடம் சட்டம் போட்டார்கள். இதுவே அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. “ நில்லுங்கள் மக்களே நான் உங்களுக்கு போர்களத்தில் கையாள்வதற்கான பத்து சட்டங்கள் போடுகிறேன். எக்காரணத்தை முன்னிட்டும் நேர்பாதையை விட்டு ராஜதுரோகம் செய்தோ அல்லது விலகவோ கூடாது. இறந்த உடல்களை சித்திரவதை செய்யக்கூடாது. எந்நிலையிலும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களைக் கொல்லக்கூடாது. எதற்காகவும் மரங்களைச் சேதப்படுத்துவதோ, எரிப்பதோ (குறிப்பாக கனிதரும் மரங்களை) கூடாது. எதிரியை தீயிட்டு கொல்லக்கூடாது. மதகுருமார்களையும் கொல்லக்கூடாது” என்று சொன்னார்கள். அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்கு முன் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போர் உரை தான் நிகழ்த்தினார்கள்.
                                மேலும், குர்ஆன் மட்டுமே மனித குலத்திற்கு முதல் முறையாக போர் சட்டத்தைச் சொன்னது. அல்-பகரா: 2:190-193 ல் உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். போரின்போது அவர்களை எங்கு கண்டாலும் வெட்டி வீழ்த்துங்கள். மேலும், எங்கிருந்து உங்களை வெளியேற்றினார்களோ, அங்கிருந்து நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். போர் கொடியதுதான் என்றாலும், அதைவிட அராஜகத்தை தோற்றுவிப்பது கொலையைக்காட்டிலும் கொடியது என்று கூறுகிறது. கோடிட்ட இடங்களை கவனமாகப் படியுங்கள் படைத்தவன் மனிதர்களுக்கு எந்த மாதிரி அறிவுரை கூறுகிறான் என்று விளங்கும்.
                           சர்வதேச அளவில் முதல்முறை ஜினீவா போர் ஒப்பந்தம் என்று 1864 ல் ஐரோப்பிய சக்திகள் இயற்றின. இன்றளவிலும் அதை ஐரோப்பிய, அமெரிக்க, இஸ்ரேலிய நாடுகள் மதிப்பதில்லை. நூரெம்பர்க் போருக்குப் பிறகு, 1907 ல் நூரெம்பர்க் பிரின்ஸிபிள்ஸ் என்று இயற்றினார்கள். நிறைய போட ஆரம்பித்தார்கள், போட்டார்கள், போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  
                               சர்வதேச சட்டப்படி, போருக்கான காரணம் ஒரு நாடு இன்னொரு நாட்டை அரசியல் ஆதாயத்திற்காக நிலப்பரப்பைப் பிடிப்பதற்கு போரிடலாம். ஆனால் தேவையில்லாமல் சேதாரங்களை ஏற்படுத்தக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போரை முடித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டு மக்களோ அல்லது சொத்துக்களுக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது. போர் புரியும் நாடும், போர் தொடுக்கப்பட்ட நாடும் தேவையில்லாத கஷ்டங்களைத் தவிர்க்க வேண்டும். மனித உரிமைச் சட்டப்படி கைதியாக பிடிபட்டவர்களையும், காயங்களுடன், நோய்வாய் பட்டுள்ளவர்களையும் மற்றும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும். கூடுமானவரை அமைதிக்கு முயற்சிக்க வேண்டும். ஒரு இராணுவம் இன்னொரு இராணுவத்தினரையோ அல்லது இராணுவ நிலைகளையோ மட்டும் தான் தாக்க வேண்டும். போர் வீரர்கள் பொது மக்களிடமிருந்து தனித்துத்தெரிய அந்தந்த நாட்டின் சீருடை அணிந்திருக்க வேண்டும். நாட்டுக்குச் சொந்தமான பாராளுமன்றம், இராணுவ நிலைகள், தபால் நிலையங்கள், இரயில் நிலையங்கள், பாலங்கள், தொலைகாட்சி மற்றும் ரேடியோ நிலையங்கள் என்று குண்டு வீசித் தாக்கிக்கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் கல்விக்கூடம், மருத்துவமனை போன்ற நிலைகளில் வீசக்கூடாது. வெள்ளைக்கொடி அல்லது துணி ஏந்தி வந்தால் கொல்லக்கூடாது.
                                      பெயரளவில் உள்ள சர்வதேச போர் சட்டத்தை யாரும் மதிப்பதில்லை. கொசோவா, போஸ்னியா, இலங்கை, ஈராக், ஈரான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், சூடான், கொரியா இப்படி வரிசையாக நடந்த போர்களில் யாரும் மதித்ததில்லை. போர் சட்டம் என்பது வான்வழிப்போர், கடற்படைப்போர், தரை இராணுவம், போர் கைதிகளைக் கையாள்வது, காயம் நோய்வாய்ப்பட்டவர்கள், சரணடைந்தவர்களைக் கையாள்வது, எந்த வகையான குண்டுகளைப் (சிரிப்பாய் இருக்கும் 400 கிராம் வெடி மருந்து கொண்ட குண்டைதான் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு சட்டம்/ இன்று 2000 கிலோ வெடி மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள்) பயன்படுத்துவது என்று இன்னும் பல பிரிவுகளில் உள்ளது.
                                கடல் சட்டம் ஒவ்வொரு நாட்டின் கரைப்பகுதியில் இருந்து 3 நாட்டிகல் மைல்களாகும். இது பீரங்கித் தாக்குதலின் அளவை வைத்து டச்சுக்காரர் கார்னலியஸ் வான் பின்கர்ஷூக் என்பவர் நிர்ணயித்தது. இந்த எல்லையைத் தாண்டிய கடல்பகுதி சர்வதேசத்திற்கும் சொந்தமானதாகும். அதில் எந்த குற்றம் நடந்தாலும் எந்த நாடும் விசாரிக்கவோ, கேள்வி கேட்கவோ கூடாது. அப்போது யாரையாவது கொல்ல வேண்டுமென்றால் கை, கால் கட்டி நடுக்கடலுக்கு கூட்டி போய் கொன்றுவிடுவார்கள். 20 ம் நூற்றாண்டில் எல்லா நாடுகளும் தங்கள் கடல் எல்லையை இயற்கை வளங்களுக்காகவும், மீன்பிடி உரிமையை மேலும் விரிப்படுத்தவும், தன் நாட்டு கடல்பகுதி சுற்றுச்சூழலை கவனிப்பதற்கும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டின. 1930 ல் அப்போதிருந்த லீக் ஆஃப் நேஷன்ஸ் அதை அங்கீகரிக்கவில்லை. ஆனால், 1945 ல் அமெரிக்க அதிபர் ட்ரூமன் மேற்சொன்ன காரணங்களுக்காக கடல் எல்லையை விரிவு படுத்திக் கொள்வது அந்த அந்த நாட்டின் சொந்த விஷயம் என்று சட்டத்தை மீறிக்கொண்டது. 1946 லிருந்து 1950 வரை சிலி, பெரு, ஈக்வடார் போன்ற நாடுகள் மீன்வளம் சார்ந்ததாகச் சொல்லி 200 நாட்டிகல் வரை எல்லையை வகுத்துக் கொண்டார்கள். சில நாடுகள் 12 நாட்டிகல் வரை வகுத்துக் கொண்டார்கள்.
                                      1967 கணக்குப்படி, 25 நாடுகள் 3 நாட்டிகள், 66 நாடுகள் 12 நாட்டிகல், 8 நாடுகள் 200 நாட்டிகல் என்று கடல் எல்லையிட்டுக் கொண்டார்கள். பின் 1973 ல் 160 நாடுகள் கூடி பேசினார்கள். 12 நாட்டிகல்கள் எல்லாநாடுகளுக்கும் பொதுவானது என்று அமைத்துக் கொண்டார்கள். மேலும் அதிலிருந்து 12 நாட்டிகல்கள் தொட்டுள்ள எல்லை என்றும், 200 நாட்டிகல்கள் மீன்பிடிப்பு, எண்ணெய் வளம், வாணிபத்திற்கென வகுத்துக் கொண்டார்கள். அதன்படி எந்த நாட்டின் கடலோர எல்லைப்பகுதியிலும் வெளிநாட்டு கப்பல்கள் கடக்க அனுமதியில்லை.
                                   இன்று சர்வதேச கடலில் எல்லா கண்டத்திலும் அமெரிக்கா தனது 13 க்கும் மேற்பட்ட பெரிய விமானம் தாங்கி கப்பல்களை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. கடற்கொள்ளையையும் முடிந்தால் எந்த நாடும் தடுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் ஆப்பிரிக்காவின் தீவுகளில் கடலோரத்தில் நியூக்ளியர் கழிவுகள், மருத்துவ கழிகள், இரசாயன கழிவுகள் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தன. இதனால் ஆத்திரமுற்று தான் சோமாலியா போன்ற நாடுகளின் தீவிரவாத குழுக்கள் அவர்களின் கப்பல்களை சிறை பிடித்துவருகிறார்கள். மேலைநாடுகள் அவர்களை கடற்கொள்ளையர்களாக சித்தரிக்கிறார்கள்.
                             முதல்முறையாக 1474 ல் ரோமப் பேரரசில் பீட்டர் வான் ஹாகன்பாக் என்பவர் போர்குற்றம் புரிந்தார் என்று தலைத் துண்டித்துக் கொல்லப்பட்டார். மேஜர் கன்னாட் என்பவரை 1643 ல் செஷையர் என்ற இடத்தில் ஒரு தேவாலயத்தில் வைத்து மொத்த கிராம மக்களையும் கொன்றார் என்று 1654 ல் தூக்கிலிடப்பட்டார். 1865 ல் அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆண்டர்சன் சிறைச்சாலையிலிருந்த போர் கைதிகளைக் கொன்றதற்காக ஹென்றி விர்ஸ் என்பவரை தூக்கிலிட்டார்கள்.

மன்னரும், போரும் 1



மன்னரும், போரும்
கூ.செ.செய்யது முஹமது
                                                              சரித்திரங்களைப் படித்து விட்டு முஸ்லீம் மன்னர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்களா என்று நினைக்க வேண்டாம். கிரேக்க, ரோம கிறிஸ்தவ மன்னர்களின் வரலாறுகள் வன்முறைகளும், காமமும் மிகைத்திருக்கும். 7 ம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கு பிறகு, மாற்றம் வந்தது. இறையச்சத்துடன் ஆட்சி செய்தார்கள். மக்களுக்கு நல்லாட்சியைத் தந்தார்கள். முறையாக திருமணம் செய்த பெண்களையே அந்தப்புரங்களில் வைத்திருந்தார்கள். நாளடைவில் அதிகாரம், பதவி மோகம் என்று கொஞ்சம் கொஞ்சமாக தீனின் பாதையை விட்டு விலகிப்போனார்கள். பிரிட்டிஷார் தங்கள் ஆட்சிப்பிரதேசங்களில் சூரியன் மறைவதே இல்லை என்று பெருமை அடித்துக் கொண்டார்கள். அது பொய் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பிரதேசங்களுக்குப் முன் ஒன்றுமே இல்லை. இஸ்லாமியர்கள் கண்டங்களை ஆண்டார்கள். 6 ம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த காட்டுமிராண்டி ஆட்சி இஸ்லாமியர்களுக்குப் பின் தான் மாறியது. முஸ்லீம்களின் ஆட்சி சரித்திரத்தில் இல்லை என்றால் உலகின் போக்கே மாறி இருக்கும்.
                                        இந்தியாவில் மௌரியர்கள், குப்தர்கள், சாணக்கியர்கள், சேர, சோழ, பாண்டியன் மற்றும் சிறிய மன்னர்கள் என்று பெரிய சரித்திரத்தையே எழுதி வைத்திருக்கிறார்கள். குப்தர்கள் தான் இந்துக்களின் மனுஸாஸ்திர அமைப்பை உண்டாக்கினார்கள். அந்த ஒரே காரணத்திற்காக குப்தர்களின் காலம் பொற்காலம் என்று எழுதிக் கொண்டார்கள். இருப்பதிலேயே போதை மிகுந்தது மன்னனாய் இருப்பது தான். தான் நினைப்பது நடக்கும். ஏறக்குறைய இறைவனுக்கு அடுத்தது போல் தாம் தான் என்ற எண்ணம் தோன்றும். (உதாரணம் ஷத்தாத், ஃபிர் அவ்ன்). அந்த பதவிக்கு வர தந்தை, மகன், தாய், தாரம், சகோதரன், சகோதரி என்று எந்த உறவுகளையும் கூட கொல்ல தயங்க மாட்டார்கள். மன்னனின் பிள்ளைகள் கல்வியுடன் கூடிய அந்தப்புரங்களில் தான் வளர்வார்கள். அங்கு மன்னனின் மனைவிகள், பணிப்பெண்கள், அரவாணிகள், வாசனைப் பொருள்கள், மது, நாட்டிய நாடக கேளிக்கைகள் என்று தான் பெரும்பாலும் இருக்கும். ராஜ பிள்ளைகளுக்கு கல்வி, போர் பயிற்சி கற்றுக் கொடுக்க வரும் ஆசிரியர்கள் ராஜ குடும்பத்து தாய் அல்லது மகனின் மனவோட்டத்திற்கு ஏற்பதான் பாடம் நடத்த முடியும். ஒவ்வொரு மனைவியும் அடுத்து தன் மகனுக்குதான் ஆட்சி வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பிள்ளைகளோ அந்தப்புரத்தின் அசிங்கங்களிலிருந்து தப்பித்து வருவது மிகமிக கடினம். ஆயிரக்கணக்கான இளவரசர்களின் வாழ்க்கை அந்தப்புரத்தோடு முடிந்துவிட்டிருக்கிறது. 20 வயதிற்குள் நோய் வந்து இறந்த வரலாறுகள் உண்டு. சில தாயார்களின் வளர்ப்பு மற்றும் பொறுப்பு ஒன்றுதான் அடுத்த மன்னனைத் தேர்ந்தெடுக்க உதவும். ஒரு இளவரசன் மன்னன் ஆனான் என்றால் முழுப்பொறுப்பும் அவன் தாயையே சாரும்.
                                  ஜனநாயக முறைப்படி, தேர்தலில் வெற்றி பெற்று ஒருவர் பதவிக்கு வந்தால், தோற்றவர்கள் அடுத்த தேர்தலுக்குள் வென்றவரை தோற்கடிக்க சிந்திப்பார்கள். தகுந்த காரணம் இல்லாமல் கொல்ல முற்பட மாட்டார்கள். ஆனால் மன்னனாய் இருப்பது எந்த நொடி மரணம் என்று பயந்தபடியே வாழவேண்டும். கூடலுக்குச் செல்லும் மன்னன் மனைவியின் நிர்வாணத்தைத் தவிர அனைத்தையும் அறையிலிருந்து நீக்க செய்த வரலாறுகள் உண்டு. இந்த அச்ச உணர்வே ஒரே மனைவியைத் தவிர்த்து பல பெண்களை மணப்பார்கள். மேலும் மன்னர்களின் உணவுப்பழக்கத்தால் அளவுக்கதிகமான உறவை நாடுவார்கள். அதை ஒரே மனைவியால் தீர்த்துவிட முடியாது. நாட்டு பிரச்சினை, போர் சிந்தனை, உயிர் பயம் என்று பல கலவையில் மன்னர்கள் இருப்பார்கள் கிரேக்க, ரோம மன்னர்களின் கதை மிகவும் அருவருப்பானது. தனது பிள்ளைகளையே காணாமல் மரணித்த மன்னர்கள் உண்டு. அதே சமயத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே முதல் காரியமாக வாரிசுகளைக் கொல்வார்கள். அப்படி கொல்ல மனமில்லை என்றால் கண்களைக் குருடாக்கி விடுவார்கள். ஆகக் கடைசி கண்களைக்கட்டி திசை தெரியாமல் பயங்கர மிருகங்கள் வாழும் காட்டில் மாறு கால் மாறு கை வாங்கி விட்டு விட்டு வந்து விடுவார்கள். மனநோயாளிகளாக ஆக்கி விடுவார்கள். அறிவிப்பு செய்யாமல் ஒரு மன்னன் இறந்து போனால், அனைத்து வாரிசுகளும் மந்திரிகளை, தாயாரை, மக்களை கைக்குள் அடக்கி வாளெடுத்து நிற்பார்கள். தன் குறிப்பிட்ட பிள்ளையின் தன்மை அறிந்து ஆட்சிக்கு தயார் படுத்திய மன்னர்களும் உண்டு.
                               மன்னன் அந்தப்புரங்களுக்கு இளைப்பார மட்டுமே வருவார். பல மன்னர்களுக்கு தனது சொந்த பிள்ளைகளையே தெரியாது. அந்தப்புரங்களில் வளர்ந்து வந்த பல நல்ல மன்னர்களும் உண்டு. சுல்தான் சுலைமான், முதலாம் செலிம், ஔரங்கஸேப், மன்னர் சௌத் (இவர் சௌதியை வென்றெடுக்க இவரின் பாட்டியின் வளர்ப்பே காரணம்) இப்படி பலபேர் உண்டு. மன்னர்களும் எச்சரிக்கை காரணமாக எந்தநிலையிலும் எந்த உணவும் உண்ணவோ அருந்தவோ மாட்டார்கள். மன்னருக்கு முன் அவைகளை ருசித்துப் பார்க்க என்று பணியாள் வைத்திருப்பார்கள். ராஜ பெண்களும் தன் மகனுக்குதான் அடுத்த மன்னன் பதவி என்று மற்ற மனைவிகளின் பிள்ளைகளை தகுதியற்ற நிலைக்கோ அல்லது கொல்லவோ செய்வார்கள். வளர்ந்த பிள்ளைகளோ பதவி மோகத்திற்காக தன் சகோதரன் தான் என்பதை மறந்து ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிப்பார்கள். சரியான வாரிசின்றி தகுதியற்ற கெட்ட இளவரசர்கள் மன்னனான வரலாறுகளும் உண்டு. இவைகளெல்லாம் வெறும் முஸ்லீம் மன்னர்களின் குடும்பத்தில் தான் என்று எண்ணிவிடாதீர்கள். எல்லா மன்னர்களின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். சிலரை நாம் வாழ்ந்து கெட்டான் என்று சொல்வோம். ஆனால், உலக சரித்திரத்தில் பல ராஜகுடும்பத்து வாரிசுகள் கெடுவதற்காகவே வாழ்ந்தார்கள். ராஜ வாழ்க்கையின் ஆரம்ப அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் மேற்சொன்னவைகளை எழுதினேன்.
                          அடுத்த விஷயத்திற்கு போவோம். ஒரு நாட்டின் நிர்வாகம், இராணுவ அமைப்புகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அமைத்தார்கள். பல அரிய கண்டுபிடிப்புகள், விவசாயம், கலை, கலாச்சாரம், நகர அமைப்புகள் என்று பல அற்புதங்களை நிகழ்த்தினார்கள். 7 ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லீம் மன்னர்கள் காட்டிய வழியில் தான் இன்றைக்கும் பல நாடுகள் நிர்வாகம் செய்கின்றன. 14 ம் நூற்றாண்டிற்கு பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளர்களின் நேர்மை, வல்லமை குறைய மெதுவாக தலைதூக்கிய மேற்கத்திய ஆட்சியாளர்கள் மீண்டும் மதம் சார்ந்த காட்டுமிராண்டி ஆட்சியையே நடத்தினார்கள். அவர்களின் பிரதேசங்களிலிருந்து முதலில் முஸ்லீம்களை விரட்ட 4 நூற்றாண்டுகள் எடுத்துக்கொண்டார்கள். பின் 18 ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லீம்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பல அரிய கண்டுபிடிப்புகளின் நுணுக்கங்களை மின்சாரம் கொண்டு நவீனப்படுத்தி தாங்கள் கண்டுபிடித்தது போல் பெருமை அடித்துக் கொண்டார்கள்.
                                   மனிதகுலத்திற்கு குர்ஆன் அருளப்பட்டதற்கு பின் இஸ்லாமிய ஆட்சியாளர்தான் மொத்த உலகுக்கும் எல்லாவற்றிற்கும் வழிகாட்டி இதில் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம். ஏனென்றால் 7 ம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த மன்னர்களின் வரலாறு, சொல்லப்பட்டிருக்கலாம், இருந்திருக்கலாம் என்றுதான் இருக்கும். அதே நேரத்தில் சில உண்மைகளும் உள்ளன அதை மறுப்பதற்கில்லை. ஆனால், இஸ்லாமிய வரலாறு கடல்கடந்து சான்றுகளுடன் கட்டிடங்களாகவும், கலை வடிவங்களாகவும் இந்தியாவிலிருந்து ஸ்பெயின் வரை ஆதாரத்துடன் நின்று பறைசாற்றுகிறது.
                                    போர் என்பது யாரால் எங்கு, எப்படி நடந்தாலும் ஒரு துயரமான சம்பவமே. அதை அல்லாஹுத்தாலா குர்ஆனில் சொன்னதை மேலே அறிந்திருப்பீர்கள். அது நாகரீகம் அடைய ஆரம்பித்த காலத்திலிருந்து அறிவு முதிர்ச்சியின் சிகரத்தில் இருக்கும் இன்று வரை அப்படித்தான். காரணம் போர் என்பது எத்தரப்புக்கும் மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது. வெற்றி தோல்வி வேறு விஷயம். போரினால் உறவுகள் இழக்கப்படுகின்றன, உணவு, வீடுகள் இழக்கப்படுகின்றன. உடல் உறுப்புகள் சிதைக்கப்படுகின்றன. மருத்துவ, வாகன, கல்வி போன்ற உதவிகள் தடைபடுகின்றன. எஞ்சி இருப்பவர்களுக்கு பல துயரங்களுக்குப் பிறகு, ஒரு வேளை நல்வாழ்வு கிடைக்குமானால் பல ஆண்டுகள் ஆகும். தனி மனித சண்டை, நோய், இயற்கை சீற்றம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பை விட கொடுமையானது போர். அவைகளில் இன்னார் இறந்து போய்விட்டார் என்று தெரிந்துவிடும். ஆனால் போரினால் சிதறிய குடும்பத்தில் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள்? எங்கு இருக்கிறார்கள்? அல்லது இருக்கிறார்களா? என்றே தெரியாது. (தற்போது அப்படியல்ல) போர் நீங்கலாக மேற்சொன்னவைகளுக்கு முற்றுப்புள்ளி உண்டு. ஆனால், போரினால் பாதிக்கப்பட்டு எஞ்சியவர்களின் மனநிலை பாதிப்பு, பொருளாதார பாதிப்பு, ஊனமான வாழ்க்கை நிலை எண்ணிப்பார்க்கும் போதே மனம் பதைக்கும். அமெரிக்காவில் ஹிரோஷிமா, நாகாசாகியில் வீசிய குண்டில் இன்றைக்கும் அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 100 ல் 80 குழந்தைகள் ஏதாவது ஒரு குறையுடன் தான் பிறக்கின்றன. அதேபோல் தான் வியட்நாம், ஈராக், ஆஃப்கானிஸ்தான் நாடுகளிலும் இருக்கின்றன.