செவ்வாய், 16 ஜூன், 2015

மன்னரும், போரும் 38 ம் நூற்றாண்டிலிருந்து போர் கைதிகளை எந்த காயமும் இன்றி பிடிப்பதற்கே முயற்சி செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் பழங்கள், காய்கறி போல் ஒரு விற்பனைப்பொருள். ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியாவின் புகழ்பெற்ற அடிமைச்சந்தையில் விற்றுவிடுவார்கள். குறிப்பாக பெண்களைப் பிடிப்பார்கள் அது கூடுதல் விலைபோகும். போர் சித்திரவதை என்பது வெகுகாலத்திற்கு முன்பு முதல் இருக்கிறது. சித்திரவதையின் நோக்கம் மனோதத்துவ ரீதியிலும், காயம் ஏற்படுத்துவதற்காக செய்யப்படும். சித்திரவதையின் காரணங்களாக தண்டனைக்காகவும், பழிவாங்குவதற்காகவும் செய்யப்படும். சித்திரவதையின் முறைகளாக கைகளால் அடிப்பது, சவுக்கால் அடிப்பது, விரல்கள், கால்நகங்கள், முட்டி, பற்கள் மற்றும் தலையை இருபுறம் விரிந்த இரும்பு விசை கொண்டு நசுக்குவது, கொதிக்கும் எண்ணெய், கத்திகள், மிதமான தீ, செம்புக்கம்பியை சுட்டு கண்களை காயப்படுத்துவது என்று பலவகை உண்டு. சித்திரவதை செய்யப்படுபவர்களை நிர்வாணமாகத் தான் வைத்திருப்பார்கள். முதுகுக்குப் பின்னே கரிகளை எறியவிட்டு தோல்கள் கருகி விழவைப்பார்கள். தொங்கவிட்டு காலின் கீழே தீ எரிய வைப்பார்கள். தலையில் இரும்பு கயிரைக்கட்டி மூளையை நசுக்குவார்கள்.
                                     இவான் தி டெர்ரிபிள் என்ற மன்னன் தனது படுக்கையறையிலிருந்து நேராக சித்திரவதைக்கூடம் செல்ல தனி வழி வைத்திருந்தான். தன் வாலிப மகனுடன் சென்று சித்திரவதை செய்யப்படுவதை அனுபவித்துப் பார்ப்பான். பீட்டர் தி கிரேட், வ்ளாட் டிபிஸ் போன்ற மன்னர்களும் சித்திரவதையை அனுபவித்துப் பார்ப்பார்கள். ரோமர்கள், யூதர்கள், எகிப்தியர்கள் சித்திரவதையை ஒரு தண்டனைச் சட்டமாகவே வைத்திருந்தார்கள். ரோமர்கள் சிலுவையில் அறைவதும், யூதர்கள் கற்களால் அடிப்பதும், எகிப்தியர்கள் பாலைவன வெயிலில் போடுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் பாதாள அறைகளில் ரகசியமாக செய்யப்பட்டது. நாளடைவில் பலர் கூடி வேடிக்கை பார்க்க பொதுமக்களின் முன்பு நடத்தப்பட்டது. சித்திரவதைக் கருவிகளைக் கண்டுபிடிக்க என்றே குழுக்கள் இருந்தன.
                               ஹிட்லர் குறைந்த செலவில் யூதர்களைக் கொல்ல, தென்னை, பனை மரங்களைப்போல உயரமான மரத்தின் கீழே கை,கால்களைக் கட்டி, தலை அசையா வண்ணம் பெரிய பாறைகளை இருபுறமும் வைத்து கட்டி, நெற்றி முடிந்து, கன்னத்தின் மேற்புறம் மூளைப்பகுதி மரத்தின் உச்சியை நோக்கி இருக்கும் வகையில் வைத்து மரத்தின் உச்சியில் ஒரு எண்ணெய், பெயிண்ட் பயன்படுத்தும் தகர டப்பாவில் நீர் நிரப்பி சிறு ஓட்டையிட்டு அளவான நிலையில் தண்ணீர் சொட்டுவது போல் வைத்தார். அந்த சொட்டு 30 அடிக்கும் மேலாக இருந்து சரியாக மூளையின் மேல் பகுதியில் வந்து விழும். நீர் சொட்டு விழ விழ சகல நினைவுகளும் போய் மூளை அடுத்த சொட்டை எதிர்பார்த்து எதிர்பார்த்து உள்ளுக்குள்ளேயே சிதைந்து போய் விடும். ஐரோப்பாவில் அதிகமானவர்களைக் கொல்ல கைகளைக் கட்டி மலை மேல் ஓடச் சொல்வார்கள். குறிப்பிட்ட உச்சியை அடைந்தவுடன் மேலிருக்கும் வீரர்கள் குதிரையின் வயிறளவுள்ள பெரிய மரத்தின் அடிப்பாகங்களை தப்பிக்க இடைவெளி இல்லாமல் உருட்டி விடுவார்கள். ஒவ்வொரு மரத்துண்டும் எங்கே படும் எப்படிப்படும் என்றே சொல்லமுடியாது. ஒரு மேல் விவரமாகத் தான் மேற்படி சொன்னேன். போதும் என்று நினைக்கிறேன். அடுத்ததற்கு போவோம்.
                                    போரை இஸ்லாம் “ஜிஹாத்” என்று அரபியில் அழைக்கிறது. அதன் விவரம் அல்லாஹ்வின் வழியில் போராடுவது அல்லது எதிர்ப்பது என்பதாகும். இச்சொல் திருக்குர்ஆனில் 23 இடங்களிலும், ஜிஹாத் எப்படி இருக்க வேண்டுமென்று 41 இடங்களிலும் அல்லாஹுத்தாலா இந்த சொல்லை குறிப்பிட்டுள்ளான். ஆனாலும், இதைவைத்து இன்று அமெரிக்காவும், மேற்கத்தியர்களும் புதுப்புது அர்த்தங்கள் கூறி முஸ்லீம்களை வேட்டையாடி வருகிறார்கள். இப்படிப் போராடுபவர்களை முஜாஹிதீன்கள் என்று சொல்லப்படுவார்கள். தன்னை எதிர்ப்பவர்களுடன் போராடு என்பதை இஸ்லாமின் ஆறாவது தூண் என்றும் மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள். தனது மதக்கடமைகளை செய்யவிடாமல் தடுக்கும் சக்தியை எதிர்த்து போராடுவது முதல் ஜிஹாதாகும். வெளிப்படையான ஜிஹாதானது மற்ற எல்லாரையும் போல (இஸ்லாமியர்கள் அல்லாஹ்வின் வழியில் மட்டும்) போரிடுவது. இதைப் புனிதப்போர் என்றும் சொல்லலாம்.
                              BBC  நிறுவனம் மூன்றாவதாக ஒரு நல்ல சமுதாயம் அமைக்க போராடுவதும் ஜிஹாத் தான் என்று அல் மின்ஹஜ்ஜின் கீழ் சஹீஹ் புகாரியின் ஹதீஸை மேற்கோள் காட்டுகிறது. கிதால் என்ற அரபிச்சொல் தான் நேரடியான போர் என்பதும், ஜிஹாத் என்பது முஸ்லீம்களைச் சுற்றி உள்ளவர்களுடனான நிலைப்பாடு என்றும் கருதப்படுகிறது. நாளடைவில் சுற்றியுள்ளவர்களைத் தாண்டி எதிர்ப்பு பரவலானதால் ஜிஹாத் உலகம் முழுக்க பொதுவானதாகிப் போனது. ஜிஹாதைப்பற்றி முதல்முதலில் அப்த் அல் ரஹ்மான் அல் அவாஸி மற்றும் முஹம்மது இப்ன் அல் ஹசன் அல் ஷைபானி ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.
                               அரபியில் “ஜிஹாத் அல் நிக்காஹ்” என்பது பாலியல் சார்ந்த ஜிஹாத், அதாவது தன்னிடம் ஒன்றும் இல்லாத நிலையில் ஒரு அநியாயத்தை எதிர்க்கவோ அல்லது இஸ்லாத்தை நிலைநாட்டவோ ஒரு இஸ்லாமிய பெண் தன்னை ஒரு ஆணுடன் இணைய சம்மதிக்கலாம். இந்த வகையான ஜிஹாத் சமீபத்தில் துனிஷீயாவில் இருந்ததாக மீடியாக்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
                       முதல் ஜிஹாத் குர்ஆனின் 5 வது அத்தியாயத்தின் படி நபி (ஸல்) அவர்களால் வாணிப வாகனங்களை எதிர்த்து நடத்தப்பட்டது. மேலும், 60:1, 9:24 என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாத் செய்வதற்காகக் காரணங்களாக ஒப்புக்கொண்ட ஒன்றுக்காக உழைப்பது, தனி ஒருவனின் குறிக்கோளை எட்ட முயற்சிப்பது, சிறந்த ஒன்றுக்காக போராடுவது, அமைதிக்காகவும், நல்லவற்றிற்காகவும் அடுத்தவர்க்கு உதவுவது மற்றும் இஸ்லாமிய நெறியுடன் வாழ்வது போன்றதாகும். 11 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர் அல் காதிப் அல் பாக்தாதி என்பவர் தனது “பாக்தாத் சரித்திரத்தில்” நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக தோழர் முஹம்மது ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்து திரும்பி வந்து ஜிஹாத் என்பது அல்லாஹ்வின் அடியான் தனது தேவைகளுக்காக போராடுவதும் ஜிஹாத் தான் என்றார்கள், என்று கூறியுள்ளார். இப்படி பலவகையான குறிப்புகள் இமாம்கள், அறிஞர்கள் அதிகமதிகமாகக் கூறியுள்ளனர். சிறந்த ஜிஹாத் என்பது தனது மன்னனின் முன் நீதிக்காகப் போரிடுவது என்பதாக நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
                               ஜிஹாத் பற்றி நம் இஸ்லாமின் பல பிரிவுகளில் பல கருத்துகள் உண்டு. அஹமதிய்யாஹ் பிரிவு, அரசியலும், வன்முறையும் இன்றி தனியாகப் போராடுவது. வன்முறையை தன்னைக்காத்துக் கொள்ள கடைசியாகத் தான் பயன்படுத்த வேண்டும் என்கிறது. ஷியா பிரிவு, தற்பெருமை மற்றும் (நப்ஸ்) சுய எண்ணத்திற்கு எதிராக உள்ளும், புறமும் போராடுவது. சலஃபி வழிமுறை, வாளெடுத்து அல்லாஹ்வின் வழியில் போராடுவதுமாகும். மேலும், ஷைத்தானை விட்டு விலக மனதால் போராடுவதும், இஸ்லாமைப் பற்றி உண்மையாக நாவால் உரைப்பதும், நல்லவைகளுக்காகவும், தீயவற்றைத் தடுப்பதற்காகவும் கைகளால் போராடுவதும் ஜிஹாத் வகையைச் சேர்ந்தது தான். இந்த ஜிஹாத் என்பதின் சொல்பற்றி பல்வேறு நாடுகளும், பல்வேறு தரப்பினரும் இன்று விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள். வேதத்தில் நமக்கு சொல்லப்பட்ட இந்த சொல் பற்றி நம்மைவிட கிறிஸ்தவர்களும், யூதர்களும் தான் இன்று விவாதிக்கிறார்கள். காரணம் அதற்கு ஒரு விளக்கம் கண்டு எப்படியாவது இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து விடவேண்டும் என்பதே நோக்கம்.
                                  நபி (ஸல்) அவர்கள் மறைவிற்குப் பிறகு, கலீஃபா உமர்(ரலி)அவர்கள் பைசாந்தியப் பேரரசு மற்றும் சஸ்ஸானிய பேரரசை எதிர்த்து போரை ஆரம்பித்தார்கள். 636 ல் யர்முக் போரில்  முஸ்லீம்கள் வெற்றி பெற்று பைசாந்தியர்களை சிரியாவை விட்டு விரட்டினார்கள். 641 ல் கெய்ரோவில் பைசாந்தியர்களை சரணடைய வைத்தார்கள். மேலும் பைசாந்திய ஆட்சியாளர்களால் துயரத்துடன் இருந்த எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவைக் கைப்பற்றினார்கள். 637 ல் கதிஸ்ஸியா போரில் பெர்ஷியர்களை வென்றார்கள். 642 ல் நஹாவந்த் போரில் மீண்டும் பெர்ஷியர்களை வென்றார்கள். அடுத்த 15 ஆண்டுகளில் ஈரானை வென்று மத்திய ஆசியாவில் காலடி வைத்தார்கள்.
                            இதற்குப் பின் மாபெரும் பேரரசுகளான ஓட்டோமானும் (உஸ்மானியா), பெர்ஷியாவும் பாரம்பரிய இஸ்லாமிய மதக்கல்விக்கான அமைப்புகளை உருவாக்கினார்கள். போர்வீரர்களுக்காக “காஸா” என்ற அடிப்படை அமைப்பில் இஸ்லாமிய இராணுவத்தை அமைத்தார்கள். ஓட்டோமானின் இரண்டாம் மெஹ்மெத் கிறிஸ்துவர்களின் கான்ஸ்டாண்டிநோபிளை வெல்வது ஜிஹாத் வழிமுறையாகும் என்று கூறினார்.
                                  இஸ்லாமிய இராணுவம் என்பது ஷரியா சட்டம், இஸ்லாமிய நீதி மற்றும் உலமாக்களின் தீர்ப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாம் காட்டிய வழியில் அமைக்கப்பட்டதாகும். நபி (ஸல்) அவர்கள் முதலில் இதை திருக்குர்ஆன் காட்டிய வழியில் மதீனாவில் அமைத்தார்கள். ஜிஹாதின் முதல் எதிர்ப்பின் இலக்காக முஸ்லீம்களுக்கு மக்கா குரைஷிகள் ஆனார்கள். பின்னால் இது முஸ்லீம் பகுதிகளுக்கும்(தார் அல் இஸ்லாம்), முஸ்லீம் அல்லாதவர் பகுதிகளுக்கும் (தார் அல் ஹர்ப்) தனித்தனியாக அமைக்கப்பட்டது. எதிரிகளையும் நம்மவர்கள் போல் மதிக்க வேண்டும். தாக்குதலில் தம்மை தடுத்துக் கொள்வதற்கும், சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் அதை மீறக்கூடாது. நபி(ஸல்)அவர்கள் ஜிஹாத் போர் பற்றி அதிகமாக உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். முதல் கலீஃபா அபுபக்கர் சித்திக்(ரலி)அவர்கள் அதை இராணுவத்திற்கு போதித்தார்கள். அலி(ரலி) அவர்கள் தனது இராணுவத்தினருக்கு எக்காரணத்தைக் கொண்டும் எதிரியின் உணவு மற்றும் நீராதாரங்களைத் தடுக்கக் கூடாது என்றார்கள்.
                               நபி (ஸல்)அவர்கள் இறப்பதற்கு முன்பே,” ஒருநாள் நீங்கள் செல்வம் கொழிக்கும் எகிப்தில் நுழைவீர்கள். அதிகபட்சமாக அவர்களோடு திருமண உறவை வைத்துக் கொள்ளும் அளவிற்கு நல்லுறவை பேணுங்கள். நான் இறந்த பிறகு நடக்கும் எகிப்தின் நுழைவில் அவர்களை நமது இஸ்லாமிய படையில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் தான் உலகின் மிகச் சிறந்த போர் வீரர்கள். அவர்களும், அவர்களின் மனைவிகளும் மறுமை நாள் வரை கடமைக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒரு கருவி ஆவார்கள். அல்லாஹ்வின் முன்பு அவர்களுடன் நீதமாக நடந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இவைகளை அம்ர் இப்ன் அல் ஆஸ் அவர்கள் தனது தலைமையில் எகிப்தை வென்றபோது, கடைபிடித்தார்கள். 7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவரான நிக்யூவைச் சேர்ந்தவரான ஜான் என்பவர், “அலெக்ஸாண்டிரியா சரணடைந்தவுடன் அவர்களின் தலைமை இராணுவ தளபதி அம்ர் அவர்கள் தனது படைகளையும் மற்ற அதிகாரிகளையும் சைப்ரஸ் தீவிலேயே விட்டுவிட்டு தான் மட்டும் நகருக்குள் வந்தார். அவரை எகிப்து மக்கள் மரியாதையுடன் வரவேற்றார்கள். நகரின் தேவாலயங்களைக் கொள்ளையடிக்கவில்லை.” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸலாவுத்தீன், அல் காமில் ஆகியோர் சிலுவைப்போரில் வென்ற பின் கூட முஸ்லீம் படைகள் நடந்து கொண்ட விதம் ஆச்சரியம் அளித்ததாக ஓலிவெரஸ் ஸ்கோலஸ்டிகஸ் என்ற கிறிஸ்தவர் கூறினார். மேலும், ‘நாங்கள் அவர்களுடைய இடங்களைக் கைப்பற்றினோம். அவர்களுடைய பெற்றோர்கள், மகன்கள், மகள்கள், சகோதர, சகோதரிகளை எங்கள் கரங்களால் கொன்றோம். அவர்களின் வீடுகளை விட்டு நிர்வாணமாக விரட்டினோம். ஆனால், நாங்கள் தோல்வியுற்று அவர்களின் அதிகாரத்தில் இருந்தபோது, எங்கள் பசிக்கு முஸ்லீம் படைகள் உணவளித்தார்கள்’ என்று கூறினார்.
                                ஆரம்பகால இஸ்லாமிய படைகளில் 15 வயதிற்கு மேலுள்ள உடலும், மனமும் வலுவான நிலையில் அவர்களுக்கு பெற்றோர் இருந்தால் அவர்களின் அனுமதியுடனே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். முதலில் தானாக போரிட உத்தரவிட்டவர் 820 ல் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ் ஷஃபி ஆவார். இவர் ஷாஃபி கல்விக்கூடங்களைத் தொடங்கியவர். இவர் காட்டு அரபுகளுடன் போரிடச் சொன்னார். ஆனால் அதே நேரத்தில் முஸ்லீமல்லாதவர்களையும், முஸ்லீமல்லாத அரபுகளிடமும் போரிடக்கூடாது என்று உத்தரவிட்டார். இஸ்லாமிய சட்டப்படி தாக்குதல் முன்னறிவிப்பு இல்லாமல் போர் செய்யக்கூடாது. எதிரியைக் கொடுமைப் படுத்துவதோ, தீயிலிடுவதோ கூடாது. மேலும் போர் செய்வதைப்பற்றிய பல விவரங்களைக் குர் ஆன் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக