கெய்டா ஆட்சிவம்ச வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
கெய்டா ஆட்சிவம்சத்தினர் சொங்காய்களுக்கு முன்பு ஆண்டவர்கள். இவர்கள் பிலால் இப்ன் ரபாஹ் (ரலி) அவர்களின் வழிவந்தவர்கள். பிலால் அவர்கள் இஸ்லாமை ஏற்கும் முன் பிலால் கெய்டா என்ற பெயரைக் கொண்டிருந்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் 580 ம் ஆண்டு மக்காவில் பிறந்தார்கள். இவர் தந்தை ரபாஹ் ஒரு அடிமை. தாயார் ஹமாமாஹ் அபிசீனியாவின் இளவரசியாக இருந்து அடிமையானவர். அமுல் ஃபீல் என்னும் கஃபாவை இடிக்கவந்த யானைப்படையுடன் வந்த இவரது தாயார் பிடிக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டவர். இஸ்லாமின் தொழுகைக்கு முதல் அழைப்பாளராக (முஃஅத்தீன்) நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு ஏழு பிள்ளைகள். அதில் ஒருவர் மண்டீன் என்னும் பகுதியில் குடியேறிய லவாலோ கெய்டா. அவர் மகன் லடல் கலபி கெய்டா, அவர் மகன் டமுல் கலபி கெய்டா, அவர் மகன் லஹிலாடூல் கெய்டா. மண்டீன் பகுதி மக்கள் தங்கள் ஆட்சியாளைரை ஃபாமா என்று அழைப்பார்கள். லஹிலாடூல் கெய்டா அவர்களுக்கு நியானி பகுதியின் முதல் ஃபாமாவாக இருந்தார். இவர்களின் பகுதி மாலிப் பேரரசைச் சேர்ந்ததாக இருந்தது. நியானிப் பகுதியை ஒன்பது கெய்டா ஆட்சிவம்சத்தினர் ஆண்டார்கள். இவர்களில் புகழ்பெற்றவர் சுண்டைய்டா கெய்டா என்பவர். இவர் தந்தை பெயர் நாரி மகன் கொனாடீ, தாயார் சொகோலோன் கொண்டீ.. சுண்டைய்டா கெய்டாவின் தந்தைக்கு சஸ்ஸௌமா பிரிடீ என்ற இன்னொரு மனைவியும், டன்காரன் டௌமன் என்ற மகனும் இருந்தார்கள். சுண்டைய்டா கெய்டா சிறுவயதிலேயே முடமாக இருந்தார். அவர் தாயாரும் முதுகு வளைந்து கூன் விழுந்து இருந்தார். தந்தை இறந்த பின் இன்னொரு மனைவி இவர்களை எந்நேரமும் திட்டிக்கொண்டு சித்திரவதைகள் செய்து வந்தாள். இதனால் மிகுந்த வேதனைக்குள்ளான சுண்டைய்டா கெய்டா ஒருநாள் அதிசயத்தக்க வகையில் எழுந்து நன்றாக நடந்தார். இது அவருக்கு இறைவனிடமிருந்து வந்த அருளாகவே இருந்தது. தாயாரும் அவரும் அப்பகுதியை விட்டு விலகி கானாபேரரசின் பலபகுதிகளுக்குச் சென்றார்கள். இறுதியில் மிமா பகுதியில் அடைக்கலம் புகுந்தனர். சுண்டைய்டா கெய்டாவின் நற்குணத்தால் மிமாவின் மன்னர் இவர் மீது பிரியமாக இருந்தார். மிமா மன்னர் சௌமாரோ காண்டீ, மாண்டின்காவை வென்ற பிறகு, மீண்டும் சுண்டைய்டா கெய்டாவை மாண்டீனுக்கு அழைத்து வந்து அவரைத் தலைவராக்கினார். அப்பகுதியில் சோஸ்ஸோ மன்னன் பலம் வாய்ந்தவனாக இருந்தான். மிமா மன்னர் சுண்டைய்டா கெய்டாவுக்கு சில வீரர்களைக் கொடுத்தார். சுண்டைய்டாவும் தன் வயதொத்த பல இளைஞர்களைச் சேர்த்து கிரினா போரில் சோஸ்ஸோ மன்னனைத் தோற்கடித்து அப்பகுதியில் முதல் மன்னரானார். மண்டின்கா மொழியில் மன்னருக்கு மன்னர் என்ற சிறப்பில் “மான்சா” என்று அழைக்கப்பட்டார். இவர் பெயரான சுண்டைய்டாவை சுன் ஜாஹ் டா என்றும் அழைத்து இவர் இன்னொரு பிரிவினரின் வழிமுறைக்கு உரியவர் என்றும் சொல்லப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்க காம்பியா, செனெகல், மாலி, கினியாவில் ஜாடா என்றால் சிங்கம் என்று பொருள். சுண்டைய்டா கெய்டாவும் அவர் பரம்பரையினரும் தீவிர முஸ்லீமாக இருந்தார்கள். சொங்காய் ஆட்சிவம்சமான மான்சா மூசா இவர் வழிவந்தவர் தான்.
கிரினா போருக்குப்பிறகு, சுண்டைய்டா கெய்டா நியானியைத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டார். தன் தளபதி டிரமகானை விட்டு பழைய கானா பேரரசுப் பகுதிகளை வெற்றி பெறச் செய்தார். மேலும், செனெகல், காம்பியா, கினியா, செனெகாம்பியா, காபு, டியாஃபுனு, கிடா ஆகிய பகுதிகளை வென்றார். 1255 ல் சுண்டைய்டா கெய்டா இறந்து போனார். இவருக்கு மான்சா வலி கெய்டா, மான்சா உவாலி கெய்டா, மான்சா கலிஃபா கெய்டா என்று மூன்று மகன்கள். சுண்டைய்டா கெய்டாவின் வரலாறு மேற்கு ஆப்பிரிக்காவின் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடமாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 1994 ல் வால்ட் டிஸ்னி என்னும் அமெரிக்க நிறுவனம் எடுத்த திரைப்படமான ‘தி லயன் கிங்’ இவரின் கதையோட்டத்தில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. நியானி பகுதி ஃபாமாக்களாக லஹிலாடௌல் கலபி, கலபி பொம்பா, மமடி கனி, பமரி டக்னோகோகெலின், மாபலி நினி, பெல்லோ, பெல்லோ பாகோன், மகன் கோன் ஃபட்டா, டன்காரன் டௌமன் ஆகியோர் இருந்தார்கள்.
நியானியின் மான்சாவாக சுண்டைய்டா கெய்டாவுக்குப் பிறகு, அவர் மகன் மான்சா உலி ஆட்சிக்கு வந்தார். இவர் மிகவும் இளவயதாக இருந்ததால், சுண்டைய்டாவின் சகோதரர் மாண்டிங் போரி கெய்டா (அபுபக்கர் கெய்டா) ஆட்சிக்கு வர இருந்தார். ஆனால், மான்சா உலியே வலுக்கட்டாயமாக ஆட்சிக்கு வந்து மேற்கு ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பை விரிவாக்கினார். இவர் விவசாயத்தை வளமாக்கினார். பொருளாதாரத்தையும், அரசியலையும் சீர்படுத்தினார். புனித பயணமாக மக்கா சென்றார். இவருக்கு வாரிசுக்கு குழந்தைகள் இல்லாததால், இவருக்குப் பிறகு, ஆட்சிக்கு தத்தெடுத்த சகோதரர்கள் அடித்துக் கொண்டார்கள். முன்பைப் போலவே இப்போதும் முயற்சித்த மாண்டிங் போரியை மீறி மான்சா வாடி (உவாடீ கெய்டா) ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் சுண்டைய்டா கெய்டாவின் தத்து எடுத்த மகன் என்று சொல்லப்படுகிறது. இவருக்குப் பிறகு, மான்சா கலீஃபா என்ற தத்து மகன் ஆட்சிக்கு வந்தார். மான்சா வாடி ஆட்சிக்கு வரும் போது இவரை நாட்டைவிட்டு துரத்தி இருந்தார். நான்காண்டு ஆட்சிக்குப்பிறகு அவர் இறந்த பிறகு, மான்சா கலீஃபா வந்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஓராண்டே ஆண்ட இவரது ஆட்சி மிகவும் மோசமாக இருந்தது. எப்போதும் அரண்மனை மேற்கூரையில் ஏறி தீ அம்பு விட்டு விளையாடுவதே இவர் பொழுதுபோக்காக இருந்தது. இவரைப் படுகொலை செய்து வயதான சுண்டைய்டாவின் சகோதரர் மாண்டிங் போரி (அபுபக்கர் கெய்டா) ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன் சகோதரரின் ஆட்சியில் வைசிராயராக இருந்தார். இவர் ஆட்சிக்கு வந்தபின் பரவலாக இருந்த மேற்கு ஆப்பிரிக்காவின் உள்நாட்டுப்போர் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வந்தது. இவருக்குப் பிறகு, அடிமையாக இருந்த மான்சா சகுரா ஆட்சிக்கு வந்தார். பிறப்பால் அடிமையாக இருந்த இவரை சுண்டைய்டா கெய்டா விடுவித்து திறமைக்கேற்ப இராணுவ தளபதி ஆக்கினார். அபுபக்கர் கெய்டாவின் பேரர் மற்றும் சில தத்துப் பிள்ளைகளுக்கிடையே ஆட்சியைப் பிடிக்க போட்டி இருந்தபோது, தளபதியான மான்சா சகுரா 1285 ல் ஆட்சியைப் பிடித்தார். இவர் காவ் மற்றும் மேற்கு சூடான் ஆகியவற்றைப் பிடித்தார். இவர் மக்கா ஹஜ் புனிதபயணம் போனபோது, திபோத்திக்கு அருகில் இவரிடமிருந்த தங்கத்தைக் கொள்ளை அடிக்க டனகில் வீரர்கள் இவரைக் கொலை செய்தார்கள்.
இவருக்குப் பிறகு சுண்டைய்டாவின் சகோதரி மகன் காவ் மான்சா 1300 ல் ஆட்சிக்கு வந்தார். அவருக்குப் பிறகு, அவர் மகன் மான்சா முஹம்மது இப்ன் காவ் 1305 ல் ஆட்சிக்கு வந்தார். இவருக்குப் பிறகு, இரண்டாம் அபுபக்கர் 1310 ல் ஆட்சிக்கு வந்தார். இவருக்குப்பின் மூசா முதலாம் கெய்டா ஆட்சிக்கு வந்தார். இவரின் வரலாறை சொங்காய் ஆட்சிவம்ச வரலாறில் இணைத்துள்ளேன். இவருக்குப் பின் முதலாம் மகன் 1337 ல் ஆட்சிக்கு வந்தார். பின் 1341 ல் சுலைமான் மான்சாவும், 1360 ல் கம்பா கெய்டாவும், மாரி ஜாடா இரண்டாவது கெய்டாவும், 1374 ல் மூசா இரண்டாம் கெய்டாவும், 1387 ல் மகன் இரண்டாம் கெய்டாவும், 1389 ல் சண்டகி கெய்டாவும், 1390 ல் மகன் மூன்றாம் கெய்டாவும் (முதலாம் மஹ்மூத் கெய்டா), 1404 ல் மூசா மூன்றாம் கெய்டாவும், 1460 ல் உலி இரண்டாம் கெய்டாவும், 1480 ல் மஹ்மூத் இரண்டாம் கெய்டாவும், 1496 ல் மஹ்மூத் மூன்றாம் கெய்டாவும், 1590 ல் மஹ்மூத் நான்காம் கெய்டாவும் ஆட்சியில் இருந்தார்கள். இவரோடு கெய்டாக்களின் ஆட்சிவம்சம் முடிவுக்கு வந்தது.