வெள்ளி, 1 ஜூலை, 2016

தகவல் 1

அஸ்ஸலாமு அலைக்கும்
எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இஸ்லாமிய ஆட்சி வரலாற்றுத் தொடரில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் இன்னும் வரவேண்டிய பகுதிகள் அதிகம் உள்ளன. இன் ஷா அல்லாஹ் விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். தங்கள் பாராட்டுதலுக்கும், அறிவுறுத்தலுக்கும் எனது நன்றிகள். வஸ்ஸலாம்
கூ.செ. செய்யது முஹமது.

திங்கள், 11 ஏப்ரல், 2016

எத்தியோப்பியா வரலாறு

அடல் சுல்தானேட்
கூ.செ.செய்யது முஹமது
1990 வரையிலும் எத்தியோப்பாவின் பகுதியில் குடியேறியவர்களைப் பற்றி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதானிருந்தது. எத்தியோப்பாவின் தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வழியாக செல்லும் கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா வழியாக சிலர் குடியேறி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. 1974 ல் நடந்த சில ஆராய்ச்சியில் அவாஷ் ஆற்றின் கரையில் சில மனித படிவங்கள் கிடைத்தன. முதல் எத்தியோப்பியா பேரரசு ஹபீஷா மக்களால் தான் (அபிசீனியர்கள்) அமைக்கப்பட்டது.
எத்தியோப்பாவில் ஆஃப்ரோ ஏஷியாடிக் மொழி பரவலாக இருக்கிறது. மேலும், ஓமோடிக், குஷிடிக், செமிடிக் மொழிகளும் உண்டு. இதில் ஓமோடிக் 13,000 B.C. க்கு பிறகு தென்பகுதி வழியாக மத்திய மற்றும் தென்மேற்கு எத்தியோப்பாவில் பரவியது. கிறிஸ்துவத்துக்கு முன்பு வரை இவர்கள் காட்டு புல் மற்றும் தானிய வகைகள் பயிரிட்டார்கள். முதலாம் நூற்றாண்டில் தென்மேற்கு அரேபியாவிலிருந்து செங்கடலைக் கடந்து எத்தியோப்பாவின் கரைகளிலும் சிலர் பரவினர். ஹீப்ரு ஷிபா என்றழைக்கப்பட்ட இவர்கள் ஹாமைட் என்ற பகுதியை வெற்றிகொண்டு எத்தியோப்பியாவாக உருவாக்கினார்கள். இரண்டாம் நூற்றாண்டில் ஆக்ஸும் பேரரசு உருவாகியது. இதை சாலமோனிட்கள் ஆண்டார்கள். இவர்கள் பைபிளில் சொல்லப்பட்ட சாலமோனும், ராணி ஷீபா வழிவந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். துறைமுக நகரமான அடுலிஸ், குடியேறுபவர்களுக்கு பெரிதும் பயன்பட்டது. கிறிஸ்துவத்துக்குப் பிறகு, அக்ஸுமைட் கலாச்சாரம் கிழக்கிலும், மேற்கிலும் உருவாகியது. பின்னாளில் அக்ஸுமைட் மாநிலம் என்றும் உருவானது. பத்தாம் நூற்றாண்டில் சாலமோன் பேரரசு வீழ்த்தப்பட்டு ஸாக்வி பேரரசு உருவானது. மீண்டும் போராடி சாலமோன்கள் எத்தியோப்பியாவின் பகுதிகளை வென்றார்கள்.
அடல் என்னும் இஸ்லாமிய பகுதியைச் சேர்ந்த கிரான் அஹ்மத் என்பவர் 1527 ல் எத்தியோப்பா மீது படையெடுத்து வென்றார். அடல் சுல்தானேட் என்பது ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு ஆட்சிவம்சம். அரபுமொழியில் அடல் என்றால் நீதி என்று பொருள். அடல் சுல்தானேட் தற்போதைய சோமாலியா, எத்தியோப்பியா, திபோத்தி, எரிட்ரியா ஆகிய பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இஸ்லாம் பரவ ஆரம்பித்த 7 ம் நூற்றாண்டிலேயே வேகமாக ஆப்பிரிக்காவில் பரவியதற்கு ஆதாரமாக சோமாலியாவில் கட்டப்பட்ட மிஹ்ரப் அல் கிப்லதைன் மஸ்ஜித் ஆதாரமாக இருக்கிறது. சோமாலியாவில் ஸெய்லா நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட இவர்கள் 14 ம் நூற்றாண்டில் அபிசீனிய மன்னன் அம்டா சியோன் கிறிஸ்தவர்களை எதிர்த்துப் போர் இருந்திருக்கிறான். இவர்களின் பெரும் பகுதியான இஃபாத் பகுதியிலிருந்த சாஃஅத்தீனை எத்தியோப்பிய மன்னன் முதலாம் தாவித் செய்லா போரில் கொன்றுவிட, அவர் மகன்கள் ஏமனுக்கு தப்பிச் சென்றார்கள். 15 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திரும்பிவந்த அவர் மகன் இரண்டாம சாஃஅத்தீன் தன் சகோதரர் முஹம்மதுவின் உதவியுடன் டக்கார் பகுதியில் அடல் ஆட்சிவம்சத்தை மீண்டும் துவக்கினார். இவர் தந்தையாருடன் முன்பு இருந்தவர்கள் இவருடன் சேர்ந்து கொண்டார்கள். முதலில் எத்தியோப்பியாவில் எதிரியாக இருந்த சிலரை செர்ஜான், ஸிக்ர் அம்ஹாரா போர்களில் வென்றார். யெஷாக் என்பவன் பெரிய படைகொண்டு, இரண்டாம் சாஃஅத்தீன் வீரர்களை விரட்ட முதலில் ஓடியவர்கள் பிறகு, மேலும் சிலரை சேர்த்துக் கொண்டு, யெஷாத்தின் பகுதிகளில் கொள்ளையடித்து கோட்டையை முற்றுகை இட்டார்கள். இதில் இவர் படைகள் கொல்லப்பட இரண்டாம் சாஃஅத்தீன் தப்பித்தார். ஆனால், இயற்கையாக 1422 ல் இறந்து போனார். இவர்களுக்கு போட்டியாக முஸ்லீம்களின் ஆட்சியாக இன்னொரு வலாஷ்மா ஆட்சிவம்சம் இருந்தது. அவர்களை இரண்டாம சாஃஅத்தீன் சந்ததிகள் யாரும் விரும்பாமல் எதிர்த்தார்கள். சந்ததியின் பத்லாய் என்பவரின் மகன் முஹம்மது இப்ன் பத்லாய் அடல் ஆட்சிவம்சத்தின் சுல்தானாய் இருந்தார். இவர் வலாஷ்மாவின் பயீதா மர்யமுடன் ஆண்டு கப்பம் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, அப்பகுதியில் அமைதி ஏற்படுத்தினார். ஆனால், வளம்கொழிக்கும் ஸெய்லா பகுதியிலிருந்த எமிர் இது அடல்களை ஏமாற்றும் செயல் என்று கப்பம் செலுத்த மறுத்தார். அடல்களின் இராணுவம் சப்ர் அத்தீன், மன்சூர் அத்தீன், ஜமால் அத்தீன், ஷம்ஸ் அத்தீன் மற்றும் ஜெனெரல் மஹ்ஃபூஸ் ஆகியோரின் கீழ் அபிசீனியாவின் ஆதிக்கத்தை எதிர்க்க போராடிக் கொண்டிருந்தார்கள். இதில் மஹ்ஃபூஸ் வெற்றிகரமாக போராடி பேரரசர் நஃஓதைக் கொன்றார். ஆனால், இவரை இரண்டாம் தாவித் என்பவர் 1517 ல் கொன்றார். அடல்களுக்குள் உள்நாட்டுப்போர் வர இரண்டாண்டு காலத்தில் ஐந்து எமிர்கள் ஆட்சி செய்தார்கள். இவர்களில் கரட் அபூவுன் அத்துஸ் என்பவர் பலத்துடனும், மக்களின் பெரும் ஆதரவுடனும் ஆட்சிக்கு வர அவரை சுல்தான் அபுபக்கர் இப்ன் முஹம்மது கொன்று 1554 ல் ஆட்சிக்கு வந்தார். ஹராரை தலைநகராகக் கொண்டு ஆண்ட இவரை இமாம் அஹ்மத் இப்ன் இப்ராஹீம் அல் காஸி என்பவர் தோற்கடித்துக் கொன்று தன் சகோதரர் உமர்தின் என்பவரை சுல்தான் ஆக்கினார். இவர் புகழ்பெற்ற அபிசீனிய போரை ஓட்டோமான்கள் கொடுத்த பீரங்கிகளுடன் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தார். இதில் எத்தியோப்பியாவின் உயர்பகுதிகள் பலவற்றைக் கைப்பற்றினார். இந்த அடல்கள் பிரிந்து எத்தியோப்பியாவின் ஆஸ்ஸா, ஹரார் பகுதிகளை பல சுல்தானேட் பகுதிகளாக ஆண்டார்கள். இதில் ஹரார் பகுதியும் சிதைந்து போக ஆஸ்ஸா சுல்தானேட் இமாம்களால் வரிசையாக ஆளப்பட்டது. அதை அவர்கள் முதைய்தா ஆட்சிவம்சம் என்று கூறிக்கொண்டு, சுல்தான்கள் கையில் ஒரு வெள்ளி தடியை வைத்திருப்பார்கள். அது அவர்களுக்கு சக்தி அளிப்பதாகக் கூறிக்கொண்டார்கள்.
1543 ல் மீண்டும் கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லீம்களை வென்று, எத்தியோப்பா மன்னனை காப்டிக் கிறிஸ்துவத்திலிருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு மாற்ற முயன்றனர். பின் பல கலவரங்களுக்குப் பின் ஃபசிலாதாஸ் என்பவரும் , தொடர்ந்து அவர் மகன் முதலாம் ஜோஹன்னசும் ஆண்டனர். பதினேழாம் நூற்றாண்டில் மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்துடன் எத்தியோப்பியா உருவானது. இது முதலாம் ஜோஹன்னசின் மகன் இயாஸுஸ் காலத்தில் 1682 ல் நடந்தது. இவர் கலைகளில் நாட்டமுள்ளவராய் இருந்து பல அழகிய கட்டிடங்களையும் கட்டினார். 1706 ல் இயாஸிசின் மரணத்திற்கு பிறகு, குழப்பங்கள் நிலவி எத்தியோப்பியா பல பகுதிகளாகப் பிரிந்தது. 1855 ல் கஸ்ஸா ஹைலு பல போராட்டங்களுக்குப் பிறகு, இரண்டாம் தியோடராக பதவியேற்றார்.
இவர் சிறிய கவர்னர்களைக் கலைத்து விட்டு, ஒரே தலைமையின் கீழ் கொண்டு வந்தார். இதனால் பிரிட்டிஷாருடன் பதட்டம் நிலவியது. தியோடர், பிரிட்டிஷ் கான்சுலர் உள்பட, பல பிரிட்டிஷாரை கைது செய்தார். பிரிட்டிஷார் லார்ட் ராபர்ட் நேப்பியர் என்பவர் தலைமையில் நடவடிக்கை எடுக்க, பேரரசர் தற்கொலை செய்து கொண்டார். பின் பலர் அரசாட்சிக்கு முயற்சிக்க டிஜாச் கஸ்ஸாய் என்பவர் டிக்ராய் பகுதியைக் கைப்பற்றி நான்காம் ஜோஹன்னசாகப் பொறுப்பேற்றார். இவரது ஆட்சியும் உள்நாட்டு குழப்பங்களாலும், 1876 ல் எகிப்தியர்களின் ஆக்கிரமிப்பாலும் 1881 ல் சூடானின் படையெடுப்பாலும் தடுமாறியது. பின் சூயஸ் கால்வாயின் பயன்பாட்டால் இத்தாலி, ஃப்ரான்ஸ் மற்றும் பிரிட்டனின் நடமாட்டம் அதிகமாகியது. பின் 1889 ல் இரண்டாம் மெனெலிக் என்பவர் அட்டிஸ் அபாபாவை தலைநகராகக் கொண்டு, டிக்ரேய், அம்ஹரா மற்றும் ஷிவா பகுதிகளை இணைத்து ஒரு ஆட்சியை உருவாக்கினார்.
19 ம் நூற்றாண்டில் நிறைய ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்காவில் காலூன்ற சந்தர்ப்பம் பார்த்தன. குறிப்பாக இத்தாலி எத்தியோப்பியாவைக் குறி வைத்தது. இத்தாலிக்கும், எத்தியோப்பியாவுக்கும் இடையே பல குழப்பங்களுக்கிடையில் 1895 ல் அத்வா என்ற இடத்தில் போர் நடந்தது. இதில் மெனெலிக் வென்று எத்தியோப்பியாவை சுதந்திர நாடாக அறிவித்தார். அவருக்குப் பின் அவரது மகள் 1917 ல் ஸௌடிது ஆட்சி செய்தார். அவர் இறந்த பிறகு, முதலாம் ஹைலி செலஸ்ஸி 225 வது சாலமோனிக் பேரரசரானார். முதல்முறையாக எழுத்து பூர்வமான சட்டம் இயற்றினார். எத்தியோப்பியாவை 1932 ல் ஐக்கிய நாட்டு சபையுடன் இணைத்தார். 1936 ல் முசோலினி எத்தியோப்பியா மீது படையெடுத்து வென்று மன்னர் மூன்றாம் விக்டர் இம்மானுவேலை அரசராக்கினார். ஹைலி செலாஸ்ஸி தப்பி இங்கிலாந்துக்கு சென்றார். மீண்டும் 1941 ல் பிரிட்டிஷ் எத்தியோப்பியா படைகளின் உதவியுடன் ஹைலி செலாஸ்ஸி வென்றார். 1960 ல் பொருளாதார முன்னேற்றம், சமூக சீரமைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் போது ஹைலி செலஸ்ஸி மீண்டும் பதவியிலிருந்து எறியப்பட்டார். பல பிரச்சினைக்குப் பிறகு, எத்தியோப்பியாவில் ஒரோமோ, அஃபர்ஸ், சோமாலி மற்றும் எரிட்ரியன் என்று பல போராளி குழுக்கள் உருவாகின. எத்தியோப்பியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட ஹைலி செலஸ்ஸியின் முயற்சிகளை வீணாக்கி ஐரோப்பிய நாடுகள் எத்தியோப்பியாவை உலகின் மிகவும் வறுமையான நாடாக ஆக்கியது.

நஸ்ரித் ஆட்சிவம்சம் வரலாறு

நஸ்ரித் ஆட்சிவம்சம் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
நஸ்ரித் ஆட்சிவம்சத்தினர் ஸ்பெயினில் ஆட்சி செய்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆவார்கள். 1238 லிருந்து 1492 வரை ஸ்பெயினில் க்ரனடாவை ஆண்டார்கள். க்ரனடாவை 23 நஸ்ரித் எமிர்கள் ஆட்சி செய்தாரகள். நஸ்ரித்களின் முதல் ஆட்சியாளர் முஹம்மது இப்ன் நஸ்ர் ஆவார். இவர் அண்டலூசியா பகுதியில் ஜாயீன் என்ற இடத்தில் பிறந்தவர். இவருக்கு யூசுஃப், ஃபரஜ், இஸ்மாயில் என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். இதில் இஸ்மாயில் இறந்த பிறகு, அபு சைத் ஃபரஜ் மாலகாவின் கவர்னராக ஆனார். லாஸ் நவாஸ் போரில் அல்மொஹத்களை வென்று க்ரனடாவை முஹம்மது இப்ன் நஸ்ர் கைப்பற்றினார். நஸ்ரித்களின் இரண்டாவது க்ரனடாவின் எமிராக முஹம்மது இப்ன் அல்ஹமர் என்பவரின் மகன் இரண்டாவது முஹம்மது அல் ஃபகீஹ் ஆட்சிக்கு வந்தார். இவர் தந்தையின் கலைப்பணிகளைத் தொடர்ந்தார். இவரது மகள் ஃபாத்திமாவை அபு சைத் ஃபரஜ் திருமணம் செய்திருந்தார். இவரது ஆட்சியில் இவர்களது நஸ்ரித் குடும்பத்திற்கும், எதிரி குடும்பமான அஷ்கிலூலாவுக்கும் பகையால் உள்நாட்டுப்போர் நடந்தது. அஷ்கிலூலாவை வென்றுதான் அபு சைத் ஃபரஜ் மாலகாவின் கவர்னரானார். முஹம்மது இரண்டாம் அல் ஃபகீஹுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். ஃபரஜ், மூன்றாம் முஹம்மது மற்றும் கிறிஸ்தவ வைப்பாட்டி ஒருவருக்குப் பிறந்த நஸ்ர் ஆகியோர் ஆவார்கள். இவர் மகன் மூன்றாம் முஹம்மது அல் ஃபகீஹை விஷம் வைத்துக் கொன்றுவிட்டு 1302 ல் தான் ஆட்சிக்கு வந்தார். இவர் கட்டிட வடிவமைப்பிலும், கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டவராய் இருந்தார். புகழ்பெற்ற அல் ஹம்ப்ரா அரண்மனையைக் கட்டியதில் பங்கு பெற்றார். இவருக்குப்பிறகு, சகோதரர் நாஸ்ர் ஆட்சிக்கு வந்தார். கல்வியிலும், வானாராய்ச்சியிலும் சிறந்தவராய் இருந்தார். அடுத்து அல் ஃபகீஹின் பேரர் முதலாம் இஸ்மாயில் 1314 லிருந்து 1325 வரை க்ரனடாவின் ஆட்சிக்கு வந்தார். இவருக்குப் பிறகு இவர் மகன் நான்காம் முஹம்மது நஸ்ரித்களின் ஆட்சியாளராக வந்தார். 1325 லிருந்து 1333 வரை ஆண்ட இவர் குதிரையேற்றத்தில் வல்லவராய் இருந்தார். இவருக்கு பாட்டியார் ஃபாத்திமா மற்றும் தர்பாரின் மந்திரிகள் ஆதரவாய் இருந்தார்கள். நான்காம் முஹம்மதை எதிர்த்து காஸ்டிலின் மன்னன் பதினொன்றாம் அல்ஃபோன்சா டிபா போரை பல ஆண்டுகள் நடத்தினார். நான்காம் முஹம்மது 18 வயதில் படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். இவருக்குப்பிறகு, இவரது இளைய சகோதரர் முதலாம் யூசுஃப் 1333 ல் ஆட்சிக்கு வந்தார். நஸ்ரித்களின் மிகச்சிறப்பான ஆட்சியாளராக இருந்தார். இவரது பேச்சு, செயல்பாடு, சிரிப்பு, உணவுண்ணும் முறை என்று ஒவ்வொன்றுக்காகவும் மிகவும் புகழப்பட்டார்.
க்ரனாடாவில் 889 ல் கட்டப்பட்ட அல் ஹம்ப்ரா என்று ஒரு கோட்டை இருந்தது. முதலாம் யூசுஃபின் பாட்டனார் அல் அஹ்மர் இக்கோட்டையை 11 ம் நூற்றாண்டில் சீரமைத்தார். சுல்தான் முதலாம் யூசுஃப் அக்கோட்டையை பெரிய அரண்மனையுடன் கட்டினார். இன்றளவும் நஸ்ரித் ஆட்சிவம்சத்தின் அடையாளமாக அல் ஹம்ப்ரா அரண்மனை விளங்குகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள அல் ஹம்ப்ரா அரண்மனை பல பாடல்களுக்கும், கதைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. மலையின் மீது அமைந்துள்ள இந்த அரண்மனையில் பல பூக்கள் நிறைந்த தோட்டங்கள் நிறுவப்பட்டன. ஓசைகளுக்கேற்றவாறு பீய்ச்சும் நீரூற்றும் உண்டு. அருவிகளுடன் கூடிய இந்த நீரூற்றுகள் 8 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது. கோட்டையுடன் கூடிய இந்த அரண்மனை 1,530,000 சதுர அடியில் கட்டப்பட்டது. முதலாம் யூசுஃபுக்கு முன்பாகவே நான்காம் முஹம்மது மற்றும் முதலாம் இஸ்மாயில் ஆகியவர்களால் சில பணிகள் செய்யப்பட்டது. அல் ஹம்ப்ரா பூமியின் சொர்க்கம் என்றும் வருணிக்கப்பட்டது. முதலாம் யூசுஃப் தலைநகரில் 1349 ல் மதப்பள்ளிக்கூடங்களையும் கட்டினார். இவருக்கு முன்னாள் அடிமை முதல் மனைவி புதைய்னா மூலம் ஆயிஷா என்ற மகள் இருந்தார். முன்னாள் அடிமையாக இருந்த இரண்டாவது மனைவி மூலம் இரண்டாம் இஸ்மாயில், ஐந்தாம் முஹம்மது உட்பட இரண்டு மகன்களும், ஐந்து மகள்களும் பிறந்தார்கள். 1354 ல் ஒரு மஸ்ஜிதில் தொழுது கொண்டிருந்த முதலாம் யூசுஃபை மனநிலை சரியில்லாத ஒருவன் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்தான். இவருக்குப்பிறகு, இவர் மகன் ஐந்தாம் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். இடையில் சில மாதங்கள் இவர் சகோதரர் இரண்டாம் இஸ்மாயிலால் ஆட்சி இழந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1366 ல் க்ரனாடாவில் மருத்துவமனை ஒன்றைக் கட்டினார். கொடுமைக்கார பெட்ரோவுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு இப்ன் கல்தூனை அமர்த்தினார். 1391 ல் இவர் மரணமடைந்த பின் இவர் மகன் இரண்டாம் யூசுஃப் 1391 லிருந்து 1392 வரையில் ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு தொடர்ந்து ஏழாம் முஹம்மது, மூன்றாம் யூசுஃப், எட்டாம் முஹம்மது என்று வரிசையாக பனிரெண்டாம் முஹம்மது வரை நஸ்ரித்கள் ஆட்சி செய்தார்கள். முதலாம் அபு ஹசன் அலியின் மகனான பனிரெண்டாம் முஹம்மது 1482 ல் ஆட்சிக்கு வந்தார். கௌரவத்திற்காக காஸ்டிலில் போரிட, 1483 ல் கைதாகி லூசினாவில் அடைக்கப்பட்டார். இதனால் இவர் தந்தையே மீண்டும் க்ரனாடாவின் ஆட்சிக்கு வந்தார். 1487 ல் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆட்சிக்கு கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டதின் பேரில் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். இந்த ஒப்புதலால் மாலகா நகரை கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏற்கனவே பலமில்லாத முந்தைய ஆட்சியாளர்களால் வீழ ஆரம்பித்திருந்த நஸ்ரித்கள் 1489 ல் பஸா, அல்முனீசார், சலோப்ரினா, அல்மீரியா ஆகிய பகுதிகளை இழந்தார்கள். 1491 ல் ஸ்பெயினில் வெறும் க்ரனாடா மட்டும் முஸ்லீம்கள் ஆளும் பகுதியாக இருந்தது. 1492 ல் காஸ்டிலியன்களால் தாக்கப்பட்ட க்ரனாடாவை சரணடையும்படி ஃபெர்டினெண்டும், இசபெல்லாவும் மிரட்ட வேறுவழியின்றி பனிரெண்டாம் முஹம்மது கிறிஸ்தவர்களிடம் ஒப்படைத்தார். இவருக்கும் இவர் தாயாருக்கும் மெடிட்டரேனியன் கடல்பகுதியில் சியர்ரா நிவாடா பகுதியில் லாஜர் டி அண்டராக்ஸ் மற்றும் லாஸ் அல்புஜர்ராஸ் என்ற எஸ்டேட் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இறுதியாக மொரோக்கோவின் ஃபெஸ் நகரம் சென்றார். அங்கிருந்த மரினித் ஆட்சியாளர்களின் ஆதரவில் ஒரு மாளிகை கட்டி மெலில்லா என்ற இடத்தில் வாழ்ந்த அவர் இறந்த பின் பாப் ஷிரியா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரின் இருமகன்கள் யூசுஃப் மற்றும் அஹ்மத் வறுமையில் ஜக்காத்தை எதிர்பார்த்து வாழ்ந்ததாக அவர்களை 1618 ல் சந்தித்த அல் மக்கரி என்பவர் குறிப்பிட்டுள்ளார். பனிரெண்டாம் முஹம்மதுவை பவுப்தில் என்றும் குறிப்பிடுவர்.  


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

மரினித் ஆட்சிவம்ச வரலாறு

மரினித் ஆட்சிவம்சம் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
இஃப்ரிகியா பகுதியைச் சேர்ந்த ஸினாடா பெர்பெர் பழங்குடியைச் சேர்ந்த இனமான இவர்கள் மொரோக்கோவை 13 லிருந்து 15 ம் நூற்றாண்டுவரை ஆண்டார்கள். இவர்கள் பூர்வீகம் நஜ்த், ஹிஜாஸ் பகுதியிலிருந்து 11 ம் நூற்றாண்டில் வடஆப்பிரிக்காவில் குடியேறியவர்கள். இவர்கள் அடிக்கடி சிஜில்மாசா மற்றும் ஃபிக்யூக் பகுதியில் நடமாடினார்கள். வட மொரோக்கோவை ஆக்கிரமிப்பதற்கு முன்னால் இவர்கள் 13 ம் நூற்றாண்டில் தற்போதைய அல்ஜீரியாவில் இருந்தார்கள். மரினித் என்பது இவர்களுடைய மூதாதையர் மரின் இப்ன் வர்தஜன் அல் ஸினாடி என்பவரது பெயரிலிருந்து வந்தது. அப்போது மொரோக்கோவின் ஆட்சியாளர்களாக இருந்த அல்மொஹத்களுக்கு அடிபணிந்தவர்களாக இருந்த மரினித்கள் ஆட்சியாளர்களுடன் மத்திய ஸ்பெயினின் அலர்கோஸ் போரில் கலந்து கொண்டு அரசியல் செல்வாக்கு பெற்றார்கள். வட மற்றும் கிழக்கு மொரோக்கோவில் வரி வசூலிப்பதைப் பார்த்துக் கொண்டார்கள். 1215 லிருந்து அல்மொஹத்களுக்கும், மரினித்களுக்கும் இடையே உரசல் ஆரம்பித்தது. முதலாம் அப்த் அல் ஹக் என்பவர் 10,000 அல்மொஹத் வீரர்களை வெற்றி கொண்டு ரிஃப் மலைப்பகுதியைக் கைப்பற்றினார். இதில் அப்த் அல் ஹக் படுகாயமடைந்தார். அப்த் அல் ஹக்கிற்குப் பிறகு மரினித்களின் தலைமைக்கு வந்த அவர் மகன் உதுமான் இப்ன் அப்த் அல் ஹக் அவரது கிறிஸ்தவ அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார். மரினித்கள் 1217 ல் கிழக்கு மொரோக்கோவை ஆக்கிரமிக்க வந்தார்கள். ஆட்சியாளர்களால் விரட்டப்பட்டு ரிஃப் மலைப்பகுதியில் தஞ்சமடைந்தார்கள். மரினித்கள் 30 ஆண்டுகாலம் அம்மலைப் பகுதியிலிருந்தபோது, ஆட்சியாளர்கள் அல்மொஹத்கள் பல பகுதிகளை கிறிஸ்தவ ஸ்பெயினிடம் இழந்து வந்தார்கள். 1229 ல் இஃப்ரிகியாவின் ஹஃப்சித்களும், 1235 ல் லெம்சென் நகரின் ஸய்யனித்களும் பலமிழந்து போனார்கள். அப்த் அல் ஹக்கின் இன்னொரு மகன் முஹம்மது மரினித்களின் ஆட்சிவம்சத்திற்கு வந்தார் . இவர் இவர் மெக்னெஸ் பகுதியை தாக்கினார். ஒரு போரில் இவரும் இறந்து போனார். இதனால் வலுவில்லாமல் போன ஆட்சியாளர்கள் அல்மொஹத்களிடமிருந்து 1244, 1248 களில் தாஸா, ரபாத், மெக்னெஸ் மற்றும் ஃபெஸ் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். ஃபெஸ்ஸைக் கைப்பற்றும் போது அல்மொஹத்களிடம் போர் அறிவித்துவிட்டு, சில கிறிஸ்தவ மடாலயங்களின் உதவியுடன் அபு யூசுஃப் யாகூப் என்ற மரினித் 1269 ல் மர்ரகெஷ்ஷைக் கைப்பற்றினார். தென்பகுதி மஃகில் மற்றும் ட்ரா பகுதி அரபுகள் மர்னித்களுக்கு அடிபணியாமல் இருந்தார்கள். 1271 ல்  ட்ராவும், 1274 ல் சிஜில்மஸாவும் மரினித்கள் கைப்பற்றிய பிறகே அவர்கள் அடிபணிந்தார்கள். அதேபோல் வடக்கில் சியோட்டா மற்றும் டான்ஜியரை வெற்றி கொண்டபின் அம்மக்களும் மரினித்களை ஏற்றுக்கொண்டார்கள். இப்ன் கல்தூன் கூற்றுப்படி 1274 ல் அபு யூசுஃப் யாகூப் தான் முதலில் வெடிமருந்தைப் பயன்படுத்தினார் என்று கூறுகிறார். கிரனாடாவின் ஆட்சியாளர் முதலாம் முஹம்மதுவின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு உதவ ஸ்பெயின் சென்றார். பின் 1276 ல் அபு யூசுஃப் யாகூப் மொரோக்கோ திரும்பி எஞ்சியிருந்த அல்மொஹத் ஆட்சியை விலக்கி ஃபெஸ் நகரத்தை புதுமைப்படுத்தி மரினித்களின் தலைநகராக்கினார். கிரனாடாவின் ஆட்சியாளர் உதவியுடன் மேலும் மூன்றுமுறை ஸ்பெயின் மீது தாக்குதல் நடத்தினார். அப்த் அல் ஹக் மற்றும் அபு யஹ்யா ஆகியோரின் ஆரம்ப நடவடிக்கைக்குப் பிறகு, அபு யூசுஃப் யாகூப் தான் மர்னித்கள் ஆட்சி நிலைபெற பாடுபட்டார். பல மஸ்ஜித்கள், மதராஸாக்களையும் கட்டினார். இவருக்குப்பின் வந்த இரண்டாம் அபு சைத் உதுமான் பெரிய கட்டிடங்களைக் கட்டினார். பல மதரஸாக்கள், மஸ்ஜித்கள் என்று பெரிய அளவில் கட்டினார். இவர் கட்டிய அல் அட்டரீன் மதரஸா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மதரஸாவின் வளாகத்தில் சந்தையும், மசாலாப் பொருட்களும், வாசனைப் பொருட்களும் விற்பதற்கான கடைகளையும் கட்டப்பட்டிருந்தன. இரண்டாம் அபு சைத் உதுமானுக்குப் பிறகு, அவர் மகன் அபு அல் ஹசன் மரினித்களின் ஆட்சிக்கு வந்தார். இவர் கருமை நிறத்தவராக இருந்ததால், ‘கரும் சுல்தான்’ என்று பெயர் பெற்றார். அபு அல் ஹசன், இஃப்ரிகியாவின் ஹஃப்சித் ஆட்சியாளர் அபுபக்கரின் மகள் ஃபாத்திமாவை மணந்திருந்தார்.

1309 ல் காஸ்டில்லியன் மன்னர் நான்காம் ஃபெர்டினண்ட் ஜிப்ரால்டரைக் கைப்பற்றி இருந்தார். அதனால் க்ரனாடாவின் ஆட்சியாளர் நான்காம் முஹம்மதுவின் வேண்டுகோளை ஏற்று தன் மகன் அப்த் அல மாலிக் தலைமையில் 7000 வீரர்களுடன் ஜிப்ரால்டரைக் கடந்து உதவிக்குப் போனார். உணவுப் பற்றாக்குறை, ஆயுதப் பற்றாக்குறை என்று பல இன்னல்களுக்குப் பிறகு, ஜிப்ரால்டரை வென்றார். அபு அல் ஹசன் மகன் அப்த் அல் மாலிக் தலைமையில் மூன்றாண்டு காலமாக லெம்சென் நகரை முற்றுகையிட்டார். இதற்கிடையில் சிஜில்மஸாவை நிர்வகித்து வந்த அபு அல் ஹசனின் சகோதரர் அபு அலி மரினித் ஆட்சிவம்சத்தைப் பிரித்தாள மிரட்டினார். லெம்சென் முற்றுகையை சற்று கைவிட்டு, சகோதரனைக் கைது செய்து கொலை செய்தார். பின்னர் லெம்சென் நகரைக் கைப்பற்றினார். இதன்பின் அபு அல் ஹசனை எகிப்து, க்ரனாடா, துனீஸ், மாலி ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் மரினித்களுடன் உறவு வைத்துக்கொண்டார்கள். 1346 ல் இஃப்ரிகியாவின் ஆட்சியாளர் அபுபக்கர் இறந்து போக ஆட்சி ஆள பல குழப்பங்கள் இருந்தன. இதனால் இஃப்ரிகியாவின் பல கட்சிகள் மரினித் ஆட்சியாளர் அபு அல் ஹசனை உதவிக்கு அழைத்தார்கள். 1347 ல் மொரோக்கோ இராணுவத்துடன் அபு அல் ஹசன் இஃப்ரிகியாவில் நுழைந்து அதை மரினித் ஆட்சியுடன் இணைத்தார். மரினித் ஆட்சிக்கு எதிராக அரபு பழங்குடிகள் புரட்சியில் இறங்கினார்கள். 1348 ல் அபு அல் ஹசனின் இராணுவத்தை கைய்ரோவானில் வெற்றி கொண்டார்கள். லெம்செனில் கவர்னராக இருந்த இவர் மகன் அபு இனான் ஃபரீஸ் என்பவர் ஃபெஸ் நகரம் திரும்பி தன்னை சுல்தானாக அறிவித்துக் கொண்டார். லெம்செனிலும், மத்திய மக்ரிபிலும் அபு அல் ஹசனுக்கு எதிராக கலவரம் நடந்தது. பௌஜீ என்ற பகுதியில் அபு அல் ஹசன் பயணம் செய்த கப்பல் வழிதவறி  எதிரிகளின் பகுதியில் சிக்கிக்கொண்டது. அதிலிருந்து தப்பித்து லெம்செனை மீட்க முயன்றதில் செலிஃப் ஆற்றுப் பகுதியில் தோல்வியடைந்தார். அட்லாஸ் மலையில் பதுங்கி இருந்தபோது 1351 ல் மரணமடைந்த அபு அல் ஹசனின் உடலை அவர் மகன் அபு இனான் அடக்கம் செய்தார். அபு இனானும் அவரது வைஸ்ராயாரால் 1358 ல் படுகொலை செய்யப்பட்டார். வைஸ்ராயர் வசம் போய்விட்ட மரினித்களின் ஆட்சியைப் பிடிக்க சுல்தான்கள் சிலர் முயன்றார்கள். 1359 ல் அட்லாஸ் மலையின் உயரத்தில் இருந்த ஹிண்டாடா பழங்குடியினர் கீழிறங்கி வந்து மர்ரகெஷ்ஷைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அபு யாகூப் யூசுஃப் அந் நாசர், அபு தப்பித் ஆமிர், அபு அல் ரபி சுலைமான், அபு சைத் உதுமான், அபு அல் ஹசன் இப்ன் உதுமான், அபு யஹ்யா அபுபக்கர் இப்ன் ஃபரீஸ், அபு சலீம் இப்ராஹீம் என்று பலர் சில காலங்கள் ஆண்டார்கள். கைவசமிருந்த சில சுல்தான்களின் பகுதிகளும் நாளடைவில் மரினித்களை விட்டு போயின.  

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

தகவல்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹீ வ பரக்காத்துஹூ

அன்புள்ள பயனாளிகளுக்கு இவ் வரலாற்றுத் தொடரை எழுதிவரும் ஆசிரியர் கூ.செ. செய்யது முஹமது கடந்த சில மாதங்களாக கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் மேற்படி பதிவேற்றம் செய்யப்படவில்லை. இன் ஷா அல்லாஹ் இன்னும் தொடரின் பகுதிகள் இருப்பதால் விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.