நஸ்ரித் ஆட்சிவம்சம் வரலாறு
கூ.செ. செய்யது முஹமதுநஸ்ரித் ஆட்சிவம்சத்தினர் ஸ்பெயினில் ஆட்சி செய்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆவார்கள். 1238 லிருந்து 1492 வரை ஸ்பெயினில் க்ரனடாவை ஆண்டார்கள். க்ரனடாவை 23 நஸ்ரித் எமிர்கள் ஆட்சி செய்தாரகள். நஸ்ரித்களின் முதல் ஆட்சியாளர் முஹம்மது இப்ன் நஸ்ர் ஆவார். இவர் அண்டலூசியா பகுதியில் ஜாயீன் என்ற இடத்தில் பிறந்தவர். இவருக்கு யூசுஃப், ஃபரஜ், இஸ்மாயில் என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். இதில் இஸ்மாயில் இறந்த பிறகு, அபு சைத் ஃபரஜ் மாலகாவின் கவர்னராக ஆனார். லாஸ் நவாஸ் போரில் அல்மொஹத்களை வென்று க்ரனடாவை முஹம்மது இப்ன் நஸ்ர் கைப்பற்றினார். நஸ்ரித்களின் இரண்டாவது க்ரனடாவின் எமிராக முஹம்மது இப்ன் அல்ஹமர் என்பவரின் மகன் இரண்டாவது முஹம்மது அல் ஃபகீஹ் ஆட்சிக்கு வந்தார். இவர் தந்தையின் கலைப்பணிகளைத் தொடர்ந்தார். இவரது மகள் ஃபாத்திமாவை அபு சைத் ஃபரஜ் திருமணம் செய்திருந்தார். இவரது ஆட்சியில் இவர்களது நஸ்ரித் குடும்பத்திற்கும், எதிரி குடும்பமான அஷ்கிலூலாவுக்கும் பகையால் உள்நாட்டுப்போர் நடந்தது. அஷ்கிலூலாவை வென்றுதான் அபு சைத் ஃபரஜ் மாலகாவின் கவர்னரானார். முஹம்மது இரண்டாம் அல் ஃபகீஹுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். ஃபரஜ், மூன்றாம் முஹம்மது மற்றும் கிறிஸ்தவ வைப்பாட்டி ஒருவருக்குப் பிறந்த நஸ்ர் ஆகியோர் ஆவார்கள். இவர் மகன் மூன்றாம் முஹம்மது அல் ஃபகீஹை விஷம் வைத்துக் கொன்றுவிட்டு 1302 ல் தான் ஆட்சிக்கு வந்தார். இவர் கட்டிட வடிவமைப்பிலும், கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டவராய் இருந்தார். புகழ்பெற்ற அல் ஹம்ப்ரா அரண்மனையைக் கட்டியதில் பங்கு பெற்றார். இவருக்குப்பிறகு, சகோதரர் நாஸ்ர் ஆட்சிக்கு வந்தார். கல்வியிலும், வானாராய்ச்சியிலும் சிறந்தவராய் இருந்தார். அடுத்து அல் ஃபகீஹின் பேரர் முதலாம் இஸ்மாயில் 1314 லிருந்து 1325 வரை க்ரனடாவின் ஆட்சிக்கு வந்தார். இவருக்குப் பிறகு இவர் மகன் நான்காம் முஹம்மது நஸ்ரித்களின் ஆட்சியாளராக வந்தார். 1325 லிருந்து 1333 வரை ஆண்ட இவர் குதிரையேற்றத்தில் வல்லவராய் இருந்தார். இவருக்கு பாட்டியார் ஃபாத்திமா மற்றும் தர்பாரின் மந்திரிகள் ஆதரவாய் இருந்தார்கள். நான்காம் முஹம்மதை எதிர்த்து காஸ்டிலின் மன்னன் பதினொன்றாம் அல்ஃபோன்சா டிபா போரை பல ஆண்டுகள் நடத்தினார். நான்காம் முஹம்மது 18 வயதில் படுகொலை செய்யப்பட்டு இறந்து போனார். இவருக்குப்பிறகு, இவரது இளைய சகோதரர் முதலாம் யூசுஃப் 1333 ல் ஆட்சிக்கு வந்தார். நஸ்ரித்களின் மிகச்சிறப்பான ஆட்சியாளராக இருந்தார். இவரது பேச்சு, செயல்பாடு, சிரிப்பு, உணவுண்ணும் முறை என்று ஒவ்வொன்றுக்காகவும் மிகவும் புகழப்பட்டார்.
க்ரனாடாவில் 889 ல் கட்டப்பட்ட அல் ஹம்ப்ரா என்று ஒரு கோட்டை இருந்தது. முதலாம் யூசுஃபின் பாட்டனார் அல் அஹ்மர் இக்கோட்டையை 11 ம் நூற்றாண்டில் சீரமைத்தார். சுல்தான் முதலாம் யூசுஃப் அக்கோட்டையை பெரிய அரண்மனையுடன் கட்டினார். இன்றளவும் நஸ்ரித் ஆட்சிவம்சத்தின் அடையாளமாக அல் ஹம்ப்ரா அரண்மனை விளங்குகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள அல் ஹம்ப்ரா அரண்மனை பல பாடல்களுக்கும், கதைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. மலையின் மீது அமைந்துள்ள இந்த அரண்மனையில் பல பூக்கள் நிறைந்த தோட்டங்கள் நிறுவப்பட்டன. ஓசைகளுக்கேற்றவாறு பீய்ச்சும் நீரூற்றும் உண்டு. அருவிகளுடன் கூடிய இந்த நீரூற்றுகள் 8 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது. கோட்டையுடன் கூடிய இந்த அரண்மனை 1,530,000 சதுர அடியில் கட்டப்பட்டது. முதலாம் யூசுஃபுக்கு முன்பாகவே நான்காம் முஹம்மது மற்றும் முதலாம் இஸ்மாயில் ஆகியவர்களால் சில பணிகள் செய்யப்பட்டது. அல் ஹம்ப்ரா பூமியின் சொர்க்கம் என்றும் வருணிக்கப்பட்டது. முதலாம் யூசுஃப் தலைநகரில் 1349 ல் மதப்பள்ளிக்கூடங்களையும் கட்டினார். இவருக்கு முன்னாள் அடிமை முதல் மனைவி புதைய்னா மூலம் ஆயிஷா என்ற மகள் இருந்தார். முன்னாள் அடிமையாக இருந்த இரண்டாவது மனைவி மூலம் இரண்டாம் இஸ்மாயில், ஐந்தாம் முஹம்மது உட்பட இரண்டு மகன்களும், ஐந்து மகள்களும் பிறந்தார்கள். 1354 ல் ஒரு மஸ்ஜிதில் தொழுது கொண்டிருந்த முதலாம் யூசுஃபை மனநிலை சரியில்லாத ஒருவன் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்தான். இவருக்குப்பிறகு, இவர் மகன் ஐந்தாம் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். இடையில் சில மாதங்கள் இவர் சகோதரர் இரண்டாம் இஸ்மாயிலால் ஆட்சி இழந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1366 ல் க்ரனாடாவில் மருத்துவமனை ஒன்றைக் கட்டினார். கொடுமைக்கார பெட்ரோவுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு இப்ன் கல்தூனை அமர்த்தினார். 1391 ல் இவர் மரணமடைந்த பின் இவர் மகன் இரண்டாம் யூசுஃப் 1391 லிருந்து 1392 வரையில் ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு தொடர்ந்து ஏழாம் முஹம்மது, மூன்றாம் யூசுஃப், எட்டாம் முஹம்மது என்று வரிசையாக பனிரெண்டாம் முஹம்மது வரை நஸ்ரித்கள் ஆட்சி செய்தார்கள். முதலாம் அபு ஹசன் அலியின் மகனான பனிரெண்டாம் முஹம்மது 1482 ல் ஆட்சிக்கு வந்தார். கௌரவத்திற்காக காஸ்டிலில் போரிட, 1483 ல் கைதாகி லூசினாவில் அடைக்கப்பட்டார். இதனால் இவர் தந்தையே மீண்டும் க்ரனாடாவின் ஆட்சிக்கு வந்தார். 1487 ல் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆட்சிக்கு கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டதின் பேரில் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். இந்த ஒப்புதலால் மாலகா நகரை கிறிஸ்தவர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏற்கனவே பலமில்லாத முந்தைய ஆட்சியாளர்களால் வீழ ஆரம்பித்திருந்த நஸ்ரித்கள் 1489 ல் பஸா, அல்முனீசார், சலோப்ரினா, அல்மீரியா ஆகிய பகுதிகளை இழந்தார்கள். 1491 ல் ஸ்பெயினில் வெறும் க்ரனாடா மட்டும் முஸ்லீம்கள் ஆளும் பகுதியாக இருந்தது. 1492 ல் காஸ்டிலியன்களால் தாக்கப்பட்ட க்ரனாடாவை சரணடையும்படி ஃபெர்டினெண்டும், இசபெல்லாவும் மிரட்ட வேறுவழியின்றி பனிரெண்டாம் முஹம்மது கிறிஸ்தவர்களிடம் ஒப்படைத்தார். இவருக்கும் இவர் தாயாருக்கும் மெடிட்டரேனியன் கடல்பகுதியில் சியர்ரா நிவாடா பகுதியில் லாஜர் டி அண்டராக்ஸ் மற்றும் லாஸ் அல்புஜர்ராஸ் என்ற எஸ்டேட் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இறுதியாக மொரோக்கோவின் ஃபெஸ் நகரம் சென்றார். அங்கிருந்த மரினித் ஆட்சியாளர்களின் ஆதரவில் ஒரு மாளிகை கட்டி மெலில்லா என்ற இடத்தில் வாழ்ந்த அவர் இறந்த பின் பாப் ஷிரியா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரின் இருமகன்கள் யூசுஃப் மற்றும் அஹ்மத் வறுமையில் ஜக்காத்தை எதிர்பார்த்து வாழ்ந்ததாக அவர்களை 1618 ல் சந்தித்த அல் மக்கரி என்பவர் குறிப்பிட்டுள்ளார். பனிரெண்டாம் முஹம்மதுவை பவுப்தில் என்றும் குறிப்பிடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக