வெள்ளி, 3 ஏப்ரல், 2015

ஜானிஸ்ஸரீஸ் என்னும் இஸ்லாமிய படை


                                                             ஜானிஸ்ஸரீஸ் என்பது ஓட்டோமான் பேரரசின் சிறப்பு போர் படையாகும். ஜானிஸ்ஸரீஸ் என்றால் துருக்கியில் புதிய வீரர்கள் என்று அர்த்தம். இந்த ஜானிஸ்ஸரீஸ் படைக்கு ஆறு வயதிலிருந்தே தேர்வு செய்து பயிற்சி அளிப்பார்கள். இந்தப் பயிற்சி உடல்தகுதி, உயர்கல்வியுடன் எதிர்காலத்தில் பொறியியலாளராகவோ, கட்டிடக்கலை நிபுணராகவோ, மருத்துவராகவோ, ஆராய்ச்சியாளராகவோ அல்லது அதிகபட்சம் வைசிராயராகவும் உயரும் தகுதியுடன் கூடியது. இவர்கள் சுல்தானின் தனிப்பாதுகாவலராகவும் இருப்பார்கள். பால்கன் தீபகற்பம், வட கிரீஸ், செர்பியா, அனடோலியாவில் இருந்த கிறிஸ்தவர்களும் இந்தப்படையில் இருந்தார்கள். போரில் காலாட்படைகளாக இது 1363 லிருந்து 1826 வரை ஓட்டோமான் பேரரசில் இருந்தது. ஆரம்பத்தில் 1000 வீரர்களாக இருந்த ஜானிஸ்ஸரீஸ் படைவீரர்களின் எண்ணிக்கை 1680 ல் 135,000 வரை உயர்ந்தது. இதன் தலைமையகங்கள் அட்ரியனோபிள்(எடிர்னி) மற்றும் கான்ஸ்டாண்டி நோபிளில்(இஸ்தான்புல்) இருந்தது. இந்த படைவீரர்கள் பெயர் பெற்ற கொஸோவா போர், நிகோபாலிஸ் போர், அங்காரா போர், வர்னா போர், சால்டிரன் போர், மொஹாக்ஸ் போர், வியன்னா போர் இன்னும் பல போர்களில் ஓட்டோமான் பேரரசுக்காக போரிட்டிருக்கிறார்கள்.           
                                ஜானிஸ்ஸரீஸுக்கு முதல் கமாண்டராக சுல்தான் முதலாம் முராதும், கடைசி கமாண்டராக சுல்தான் இரண்டாம் மஹ்மூதும் இருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருந்த ஜானிஸ்ஸரீஸ் ஊழல்களும், தவறுகளும் நிறைந்து, விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட 6000 பேர் தூக்கிலிடப்பட்டு சுல்தான் இரண்டாம் மஹ்மூதால் கலைக்கப்பட்டது. பெரும்பான்மையான வீரர்கள் நாடோடிகளிடமிருந்து வந்ததால் முரட்டுத்தனத்துடன் இருந்த இவர்களிடம் மற்றவற்றை எதிர்பார்ப்பது மிகவும் கடினம். இராணுவக் கட்டுப்பாடு, சிறந்த கல்வி, நேர்மையுடன் இருந்த ஜானிஸ்ஸரீஸ்கள் சுல்தான்களின் அவ்வப்போதைய சலுகைகளால் பொதுமக்களோடு சாதாரணமாக வாழலாம், நகரில் நிலங்கள் வாங்கிக்கொள்ளலாம், வியாபாரங்கள் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் நாட்டு மக்களுடன் கலந்தனர். போட்டி, பொறாமைகள் எழுந்தன, அவர்களின் அடிப்படை இராணுவ ஒழுக்கம், கட்டுப்பாடுகள் சீர்குலைந்தன. பயிற்சிகளுக்கு முறையாக செல்வதைத் தவிர்த்தனர். தங்களின் சொந்த ஆதாயத்துக்கே முதலிடம் கொடுத்தார்கள். முதலில் ஒழுக்கத்துடன் இவர்கள் தான் உலகில் முதல்முதலில் சீருடையணிந்த இராணுவத்தினர். ஜானிஸ்ஸரீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம், பணி ஓய்வு மற்றும் தனிசமூக அந்தஸ்து ஆகியவை உண்டு. சிறப்பான தகுதியில் இருந்தார்கள். தேர்ந்தெடுத்த சிலரை ‘எண்டெருன்’ என்னும் அரண்மனைப் பள்ளியில் தங்கவைத்து சிறப்புப்பயிற்சி கொடுப்பார்கள். இதனால் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய மன்னர் பரம்பரையில் உயர்பணிகளை புரியும் வாய்ப்பு கிடைத்தது. எண்டெருனில் படிப்பது பெரிய கௌரவமாக இருந்தது ஏனென்றால் பல கலாச்சாரத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் இருந்தார்கள், தரமான கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. உலகிலேயே மிகச்சிறந்த கல்வி அங்கு வழங்கப்பட்டது. முதலாம் முராதுக்குப் பின் வந்த இரண்டாம் முராத் எண்டெரூனை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தினார்.
                       பால்கன் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் 6 லிருந்து 14 வயதான பிள்ளைகளைத் தானே முன் வந்து எண்டெரூன் பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். ஜானிஸ்ஸரீஸ்கள் ஓட்டோமான் பேரரசில் ‘அஸ்கெரி’ என்னும் உயர்தரகுடிமக்களாகக் கருதப்பட்டனர். 16 ம் நூற்றாண்டின் சுல்தான் ஜானிஸ்ஸரீஸ் வீரர்களின் பிள்ளைகளும் ஜானிஸ்ஸரீஸ் படையில் சேரலாம் என்றும், தாடி வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டு, 300 ஆண்டுகளாக அதற்கெல்லாம் இருந்த தடையை நீக்கினார். ஜானிஸ்ஸரீஸ் வீரர்களாய் இருந்து புகழ் பெற்றவர்கள் அல்பேனியாவைச் சேர்ந்த ஜார்ஜ் கஸ்ட்ரியோடி 20 ஆண்டுகளாக நடந்த அல்பேனிய கலவரத்தை அடக்கினார். போஸ்னியாவைச் சேர்ந்த சொகொல்லு மெஹ்மெத் பாஷா என்பவர் 14 ஆண்டுகாலம் ஓட்டோமானின் தலைமை வைசிராயராக இருந்து மூன்று சுல்தான்களிடம் பணிபுரிந்தார்.
                                போர் இல்லாத காலங்களில் ஜானிஸ்ஸரீஸ்கள் தீயணைப்பு பணிகள், காவலர் மற்றும் அரண்மனைக்காவல் ஆகியவற்றை கவனிப்பார்கள். அவர்களுக்குத் தேவையான சாலைகளைப் போடுவது, கூடாரங்களைப் போடுவது, ரொட்டி தயாரிப்பது என்று சகல பணிகளையும் செய்து கொள்வார்கள். ஜானிஸ்ஸரீஸ் படையிலிருந்து பணி ஓய்வு பெற்றிருந்து ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் பிள்ளைகளை பேரரசு கவனித்துக் கொண்டது. ஓட்டோமான் பேரரசின் எல்லைகள் விரிவான பின் பல்கேரியா, க்ரோட்ஸ், செர்ப்ஸ், ரோம், ஜியாரியா, போல்ஸ், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருப்பவர்களையும் ஜானிஸ்ஸரீஸ் படையில் சேர்த்தார்கள். ஊழல்களும், சீர்கேடும் ஜானிஸ்ஸரீஸ் படையில் தலைவிரித்து ஆடியதால் சுல்தான் நான்காம் மெஹ்மெத் துருக்கிய முஸ்லீம்களை மட்டும் படையில் சேர்த்தார். சுல்தான் முதலாம் அஹ்மெத் காலத்தில் ஒருநாளைக்கு 3 அக்சிஸாக இருந்த ஜானிஸ்ஸரீஸ்களின் சம்பளம். பதவி உயர்வு பெற்றால் 10 அக்சிஸாக உயர்த்தப்பட்டது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை 12 அக்சிஸ்கள் சீருடை சீரமைக்கவும், 30 அக்சிஸ்கள் ஆயுதங்கள் கையாள்வதற்கும் மேலும் ஒரு தொகை வெடிமருந்து கையாள்வதற்கும் வழங்கப்பட்டது. படைக்கு தேர்ந்தெடுத்தவர்களை முதலில் துருக்கிய குடும்பங்களுக்கு அனுப்பி எப்படி துருக்கி மொழி பேசுவது இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை ஆரம்ப பாடமாக பயில வைத்தனர்.
                                ஜானிஸ்ஸரீஸ்கள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டார்கள். துருக்கியில் ஜிமாத் என்று அழைக்கப்பட்ட 101 வீர்ர்கள் வீதம் கொண்ட முண்னணிப்படை. பெய்லிக் என்று அழைக்கப்பட்ட 61 வீரர்கள் வீதம் கொண்ட சுல்தானின் பாதுகாப்புப்படை. செக்பான் என்று அழைக்கப்பட்ட 34 வீரர்கள் வீதம் அடங்கிய காலாட்படை என்று இருந்தது. யெர்லிய்யஸ் என்ற படைகள் நிரந்திரமாக ஏதாவது ஒரு ஊரிலோ அல்லது நகரத்திலோ நிற்க வைக்கப்படும். ஆரம்பத்தில் ஜானிஸ்ஸரீஸ் படைகள் ஈட்டி எறிவதில் வல்லவராக இருந்தார்கள். பின் 15 ம் நூற்றாண்டில் பரவலாகக் கிடைத்த வெடிமருந்துகளைப் பயன்படுத்தினார்கள். மிலீ போரில் கோடாரிகளைப் பயன்படுத்தினார்கள். சீருடையுடன் கூடிய ‘யடகன்’  எனப்பட்ட வாள் ஜானிஸ்ஸரீஸ்களின் அடையாளமாகத் திகழ்ந்தது.
                           16 ம் நூற்றாண்டுகளில் ஓட்டோமானின் எதிரிகளை அஞ்சவைத்த 80 மில்லிமீட்டர் தோட்டாக்கள் பொருத்தப்பட்ட ‘ட்ரென்ச் கன்’ பயன்படுத்தப்பட்டது. மேலும் கையெறி குண்டு, கை பீரங்கி ஆகியவற்றையும். 1645 க்குப் பிறகு க்ரீடன் போரில் கைத்துப்பாக்கியும் பயன்படுத்தினார்கள்.
                                    சமூகத்தில் கலந்திருந்ததனாலும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததனாலும் இவர்கள் எப்போதும் சற்று தயக்கத்துடனே வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு உயர்குடிமக்கள் அந்தஸ்து கொடுக்கப் பட்டிருந்ததால் 17 ம் நூற்றாண்டில் இவர்கள் சமூகத்திலும், இராணுவத்திலும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் எதிர்பார்த்து அரசாங்கத்திற்கு எதிராக மெதுவாக செயல்பட ஆரம்பித்தார்கள். ஜானிஸ்ஸரீஸ் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு மைதானம் சார்ந்த கடுமையான பயிற்சிகள் தேவையில்லை என்றார்கள். ஒரு கலகத்தை ஏற்படுத்தி அதனால் தங்களுக்கான ஆதாயத்தைப் பெற துணிந்தார்கள். அரண்மனைக் காவலில் இருந்த ஜானிஸ்ஸரீஸ் படைகள் மூலம் சுல்தானையே சிறைபிடிக்க முடியும் என்றும் நம்பினார்கள். சில சர்ச்சைகளால் ஓட்டோமானின் வடக்குப் பகுதியில் பிரச்சினை ஆரம்பித்தது.
                           ஜானிஸ்ஸரீஸ்கள் சம்பள உயர்வு வேண்டும் என்று கேட்டார்கள். ஒவ்வொரு சுல்தான் மாறும் போதும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. சுல்தான் இரண்டாம் செலிம் தான் ஜானிஸ்ஸரீஸ் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதித்தார். இப்படி பல சலுகைகளை அனுபவித்த பிறகும், ஐரோப்பாவுக்கு எதிரான ஓட்டோமான்களின் போரில் சரியான ஒத்துழைப்பைத் தராமல் இருந்தார்கள். சுல்தான் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது போன்ற வதந்தியைக் கேள்விப்பட்டு சுல்தான் மூன்றாம் செலிமைக் கைது செய்து பெயர் பெற்ற ஏழு கோபுரங்கள் என்ற இடத்தில் வைத்துக் கொன்றார்கள்.
                           வடக்குப் பகுதியில் ஸ்மெடெரெவோ என்ற பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜானிஸ்ஸரீஸ்கள், எங்கே சுல்தான் செர்பியர்களின் கூட்டுடன் சேர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து விடுவாரோ என்று அஞ்சி மத்திய செர்பியாவிலிருந்த அனைத்து தலைவர்களையும் கொன்றார்கள். இது ஸ்லாட்டர் ஆஃப் தி நிஸெஸ் (SLAUGHTER OF THE KNEZES) என்று எல்லோராலும் அறியப்பட்டது. இரண்டாம் மெஹ்முத் ஒரு ஆண்டுகாலம் தன்னைச் சுற்றி முதலில் பலப்படுத்திக் கொண்டார். முதலில் ஓட்டோமான் இராணுவத்தை தற்போதைய ஐரோப்பிய முறையில் நவீனப்படுத்தப் போவதாக அறிவித்தார். ஆத்திரமடைந்த ஜானிஸ்ஸரீஸ்கள் அனைவரும் தங்குமிடங்களை விட்டு கலவரம் செய்த வண்ணம் சுல்தானின் கோட்டையை நோக்கி வந்தனர். முதலில் அவர்களின் தங்குமிடங்களை சுல்தான் அழித்தார். அட்டூழியம் செய்த 4000 ஜானிஸ்ஸரீஸ் படையினரைக் கொன்றார். மேலும், அனைத்துக்கும் காரணமான 1000 வீரர்களை விசாரணைக்குப் பிறகு கொன்றார். இந்த சம்பவம் சரித்திரத்தில் ‘தி ஆஸ்பிஷியஸ் இன்ஸிடண்ட்’ என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.