செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 1



                   சலாவுத்தீன் அல் அய்யூபி
                ஹத்தீன் போரின் மாவீரரும்
சிலுவைப் போரில் ஜெருசலத்தை மீட்ட விடுதலை வீரரும்
                 532 – 589 ஹிஜ்ரி/1137 – 1193 கி.பி.
                          -------------------------
             தமிழாக்கம்: கூ. செ. சையத் முஹமது.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்துப் புகழும், சாந்தியும், சமாதானமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், சஹாபாக்கள், தாபியீன்கள், தபா அத்தாபியீன்கள் கலீஃபாக்கள், உத்தமர்கள் மற்றும் தீன் வழியில் போரிட்ட மாவீரர்களூக்கும் உரித்தாகுக.
தீன், ஜிஹாத் வழியில் இஸ்லாத்தில் போரிட்டு பெரும் மாற்றங்களை அரசியல் உலகில் வகுத்த மாபெரும் வீரர்களை நினைவு கூறும் போது அது நம்மை பெருமையடைய செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் நன்கு படித்த நம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு கூட நம் மார்க்க வரலாறு தெரியவில்லை. ஏனென்றால், மற்ற மதத்தினரைப் போல இஸ்லாத்தில் தனி மனித புகழ் பாடப் படுவதில்லை, சிலைகளோ, விழாக்களோ எடுத்து நினைவு படுத்தப்படுவதில்லை. ஆனாலும் தினசரி செய்திகள் போலவோ, சினிமா, விளையாட்டு, சமூகத்தை அறிந்து கொள்ள காட்டும் சாதாரண ஆர்வம் கூட இஸ்லாமிய சரித்திரத்தை தெரிந்து கொள்ள காட்டுவதில்லை என்பது வேதனையான விஷயம். இஸ்லாமிய நாடுகளில் உள்ளோர் இந்த சரித்திரங்களை அறிந்திருக்கிறார்கள். நாமும் அறிந்து நம் குழந்தைகளுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டிய வரலாறு இது. உலகில் ஒரு புள்ளியாக இருந்து, எவருமே அவ்வளவாக அறியாத, நாகரீகமறியாத, கல்வியறிவு அற்ற அரேபிய சமுதாயத்திலிருந்து  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூலமாக வேகம் பெற்ற (இஸ்லாம் ஆதம் அலைஹி வஸல்லம் காலத்திலிருந்தே இருக்கிறது.) ஒரு மார்க்கம் இஸ்லாம். இதை விட உறுதியான ஒரு உலோகமோ, சக்தியோ ஒன்று உலகில் இல்லை எனும் அளவில் பரந்து இன்னும் (ஸுப்ஹானல்லாஹ்) விரிந்து சென்ற வண்ணம் எதிரிகளுக்கு மாபெரும் ஆச்சரியத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.
இதை தீன், ஜிஹாத் மற்றும் தன்னிகரற்ற வீரத்தின் வழியில் ஆரம்பத்திலிருந்து துவக்கியவர்கள் வரிசையில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் உடன் வாழ்ந்த உம்ர் பின் கத்தாப் (ரலி), அலி பின் அபுதாலிப் (ரலி), அப்பாஸ் (ரலி), ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) , காலித் பின் வாலித் (ரலி) போன்ற மாவீரர்களை யும், போர்களில் உயிர் நீத்த சில சஹாபாக்களையும் சமுதாயம் நினைவில் வைத்திருக்கிறது. நபி (ஸல்) அவர்களால் ஒரு முஸ்லீமின் உயரிய பதவி, நேரடி சொர்க்கத்தின் திறவுகோல் ஜிஹாத் மட்டுமே என்று வழிகாட்டப்பட்டிருக்கிறது. இது சாதாரண மக்களான நமக்கு சாத்தியமில்லாவிட்டாலும், நாடாளும் முஸ்லீம் மன்னர்களுக்கு இது மாற்றுக் கருத்து இல்லாத கடமை யாகும். இந்த ஜிஹாதை அடியோடு மறந்துவிட்டு தானும், தங்களது வாரிசுகளும் மட்டுமே ஆளவேண்டும் என்று ஆசைப்பட்டு மேற்கத்தியவர்களின் கைப்பாவை ஆகிப் போன முஸ்லீம் ஆட்சியாளர்களைத் தான் இன்று உலகம் முழுவதும் காண நேரிடுகிறது.
எகிப்து நாசர்களும், சதாம்களும், கடாஃபிகளும், பின் லேடன்களும், நல்லவர்களா என்பது நமக்கு தெரியாது அது நமக்கு தேவையுமில்லை. ஆனால் மேற்கத்தியவர் களை எதிர்த்தவர்கள். அதனாலேயே ஆட்சியையும், உயிரையும் இழந்தவர்கள். இன்றைக்கு ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முஸ்லீம் நாடுகளின் அதிபர்களைக் கூட உள்நாட்டு கலவரத்தைத் தூண்டி மேற்கத்தியவர்கள் விரட்டி அடிப்பதை நாம் காண்கிறோம். அன்றிலிருந்து இன்றுவரை ஷியாக்கள் ஆட்சி செய்யும் ஒரே நாடு ஈரான். இன்று ஏதோ உலகில் மேற்கத்தியவர்களை எதிர்க்கும் ஒரே நாடு ஈரான் ஒன்று தான் என்பது போல் விளம்பரம் செய்யப்படுவதையும் பார்க்கிறோம். யாரை அழிப்பதற்கு யாரை உயர்த்துகிறார் கள் என்பது உண்மை சரித்திரம் அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த 21 ம் நூற்றாண்டிலும் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், ஷியாக்களுக்கும் வெளிப்படையான தேவாலயங்களும், மசூதிகளும் ஈரானில் உண்டு. ஆனால், உலகின் பெரும்பான்மையான சுன்னி முஸ்லீம்களுக்கு மசூதி கட்டிக்கொள்ள அனுமதி இல்லை. சரித்திரத்தில் வழிதவறிய ஷியா கூட்டத்தார்களின் ஆட்சியாளர்களை யும், அவர்களின் அருவருக்கத்தக்க துரோகச் செயலையும், இஸ்லாத்தை வேரோடு அறுத்தெரிய மேற்கிலிருந்து தொடர்ந்து 900 வருடங்களுக்கும் மேலாக வந்து (உலக வரலாற்றில் பல்லாண்டுகளாக நடந்த சிலுவைப் போர்) லட்சக்கணக்கில் முஸ்லீம்களை கொன்று குவித்த (முழங்கால் அளவு இரத்த வெள்ளத்தில் என்று மாற்று மத சரித்திர ஆய்வாளர்களே எழுதிய) ஐரோப்பிய மத மற்றும் அரசுப் போராளிகளை சரித்திரத்தின் இடையே நெஞ்சு நிமிர்த்தி எதிர்த்த சில இஸ்லாமிய மன்னர்களையும், வீரர்களையும் நாம் தெரிந்து கொள்ளவில்லை. இதை நம் சமுதாயம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.    
இஸ்லாம் எங்கே ஜிஹாதை இழந்தது என்றால் நேர்மையான கலீஃபாக்களின் (சரித்திரம் இவர்களை RIGHTLY KHALIFAS என்றே குறிப்பிடுகிறது) ஆட்சிக்குப் பிறகு வந்து உலகம் வியக்கும் வண்ணம் பரந்த பூமியை பின்னாளில் ஆண்ட பிரிட்டிஷாருக்கு முன்பே ஆண்ட இஸ்லாமியர்கள் தவறான வழியில் இறை அச்சம் இன்றி போனதினால் தான். அதே நேரத்தில் இன்று உலகின் பெரும்பான்மையான கண்டுபிடிப்புகளுக்கு இஸ்லாமியர் களின் ஆட்சி தான் அடிப்படை ஆராய்ச்சி அமைத்துக் கொடுத்தது. கட்டிடக்கலை இலக்கியம், கல்வி, இன்றிருக்கும் அலுவலக நிர்வாகம், மருத்துவ துறை என்று அனைத்துத் துறைகளிலும் வானளாவ உயர்ந்து இருந்தார்கள். இதற்கு சிறந்த ஆதாரம் இன்றைய எல்லா நவீன கண்டு பிடிப்புகளுமே அதிகபட்சம் இரு நூற்றாண்டுகளின் இடைவெளியில் கண்டு பிடிக்கப்பட்டது தான். ஆனால் ஆச்சரியம் இஸ்லாமியர்கள் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டு வரை இவைகளை மின்சாரமில்லாமலும், ஆரம்ப நிலையிலும் பயன்படுத்தி இருந்தனர். இவைகள் இஸ்லாமியர்களின் ஆட்சியின் போது ஸ்பெயின், ஃப்ரான்ஸ் மூலமாக ஐரோப்பா கண்டத்தில் பரவியது. இதைத் தனிக் கட்டுரையாக இன்ஷா அல்லாஹ் வேறொரு முறை பார்ப்போம். அதே சமயம் தன் இனம், குடும்பம், சந்ததியே ஆளவேண்டும் என்று பார்த்தார்கள். அதனால் தங்களுக் குள்ளேயே கொலைகளையும், துரோகங்களையும் சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டார்கள். எளிமையை மறந்து ஆடம்பரமான அரண்மனைகள், தங்கள் உயிர் இறைவனின் நாட்டப்படிதான் போகும் என்பதை மறந்து மிகுந்த பொருட்செலவில் தங்களுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்திக் கொண்டார்கள். ஐம்பது மைல்களுக்கு ஒரு சுல்தான் இருந்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இது இறைவனுக்கு கோபம் ஏற்படுத்தாதா? ஆல இம்ரானில் அல்லாஹ் தான் விரும்புபவர்களுக்கு தான் ஆட்சி அதிகாரம் தருவேன் என்று சொல்லி இருக்கிறான். அப்படித்தந்த அல்லாஹ் அல்லவா அந்தந்த சுல்தானுக்கும், மன்னருக்கும், சக்கரவர்த்திக்குமான உயிருக்கும், ஆட்சிக்கும் பொறுப்பு ஆளுமையின் போதையில் அதை மறந்து போனார்கள்.
அந்த வரிசையில் எகிப்தில் மாவீரர் சுல்தான் யூஸுஃப் ஸலாவுதீன் அல் அய்யூபி சரியான வழியில் மக்களை வழி நடத்தி இஸ்லாமிய உலகில் கொடியை உயர்த்திப் பிடித்தவர். சிறு வயதிலிருந்து தீனையும், ஜிஹாதையும் நன்கு உணர்ந்து கற்று தேர்ந்தவர். பகுதி பகுதியாக அலைந்து திரிந்து சிறு சிறு முஸ்லீம் ஆட்சியாளர்களை கெஞ்சி புரியவைத்து சிலுவைப் போராளிகளுக்கு எதிராக ஜிஹாதின் வழியிலே ஒன்று திரட்டியவர். சில முஸ்லீம் ஆட்சியாளர்களே எதிரியுடன் சேர்ந்து இவருக்குத் தான் எப்படி எல்லாம் துரோகம் செய்திருக்கிறார்கள் தெரியமா?. இன்றைக்கும் நம்மிடையே கமாலுத்தீன், ஷரீஃபுத்தீன், ஜியாவுத்தீன், மொய்தீன் என்று தீன்களில் முடியும் பல பெயர்களை சுமர்ந்திருப்பவர்களே உங்கள் பெயர்களுக் கான காரணகர்த்தா இவர். உங்களுக்கு பெயரிட்ட மூதாதையர்கள் கூட காரணமறியாமல் தெரிந்து கொள்ள மறந்தவரின் சரித்திரம் இது. இது எகிப்திய அரேபிய வரலாற்று ஆசிரியரால் அரபியில் எழுதப்பட்டு பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வரலாறு. அதை நான் என்னால் முடிந்த தமிழில் மொழி பெயர்த்து நம் தமிழ் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியிருக்கிறேன். இதில் ஏதேனும் சரித்திரப்பிழை இருந்தால் நான் பொறுப்பல்ல. சொற்பிழையோ, இலக்கணப் பிழையோ இருப்பின் தெரியப்படுத்தினால் இந்த சகோதரன் திருத்திக் கொள்ள தயாராய் இருக்கிறேன். வாருங்குள் நுழைவோம்.
பாகம்: 2  
“பூமியில் பலவீனப்பட்டவருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களை தலைவர்களாக்கவும், நாட்டுக்கு வாரிசு களாக்கவும் நாம் நாடினோம்” – அல் கஸஸ் 28-5.
நூற்றாண்டுகளுக்கும் மேலாக எதிரிகளின் பிடியிலிருத்த அல் அக்ஸா மஸ்ஜித், ஜெருசலம் மற்றும் இன்ன பிற முஸ்லீம் நாடுகளை மீண்டும் முஸ்லீம்கள் வெல்வார்கள் என்று யாராவது நம்பியிருப்பார்களா? ஸலாவுத்தீன் போன்ற இறையச்சம், இஸ்லாத்தின் மீது பற்றும் கொண்ட மன்னர் ஹத்தீன் என்னும் போரில் அவைகளை மீட்டெடுப் பார் என்று யாராலாவது சொல்லி இருக்க முடியுமா? அதுவும் எண்ணிப்பார்க்க முடியாத இழப்புகள், கற்பழிப்பு கள், கொலைகள், சித்திரவதைகள் ஆண்டாண்டாக நடந்த பின்னர், டர்டார் என்னும் செயற்கை மலையை (எதிரி ஹுலக்கு என்பவன் முஸ்லீம்களின் மண்டை ஓடுகளால் எழுப்பிய மலை) இரக்கமில்லாமல் அமைத்த பின்னரும் முஸ்லீம்களுக்கு வெற்றி சாத்தியமாகும் என்று யாரா லாவது கணித்திருக்க முடியுமா? ஆம். அது நடந்தது. அல்லாஹ்வின் நாட்டப்படி இறைஅச்சமும், வீரமும், கண்ணியமும், கருணையும் வாய்ந்த சுல்தான் ஸலாவுத்தீன் அவர்களின் மூலம். அரபி அல்லாத குர்திஷ் இனத்தை சேர்ந்த ஒருவரால் எப்படி ஒட்டு மொத்த முஸ்லீம்களை தன் வழிகாட்டலின் கீழ் கொண்டு வர முடிந்தது. இவரின் சரித்திரத்தை இந்த நேரத்தில் தெரியப் படுத்துவதின் காரணம். தற்போது போட்டி போட்டு யூத இஸ்ரேலும், கிறிஸ்தவ நாடுகளும் இணைந்து இஸ்லாத்தை அழித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் ஸலாவுத்தீன் போல் ஜிஹாத் வழியில் போராடக்கூடிய ஒரு தலைவர் தேவை. யாருடைய நலனுக்கு யார் பஞ்சாயத்து செய்வது. மேற்கத்திய, யூதர்களின் திட்டப்படி கூடிக்கூடி பாலஸ்தீனுக்காகவும், சூடானுக்காகவும், பர்மா, கொஸோவாவுக்காகவும், தாலிபான்களுக்காகவும் முஸ்லீம் தலைவர்கள் மாநாடுகளும் கூட்டங்கள் நடத்துவது எதற்கு?. நாளுக்கு நாள் ஜெருசலம் தேய்ந்து கொண்டே போகிறது. முஸ்லீம்கள் நம் முன்னோர்கள் எப்படி போரிட்டு ஜெருசலத்தை வென்றார்கள் என்று தெரிந்து கொண்டு, அதன் சுவட்டை தொடர வேண்டும். இன்று முஸ்லீம் நாடுகள் பலவாறாக சிதைந்து விட்டனர். திருக்குர்ஆன் கூறும் ஜிஹாத் வழிமுறையை மறந்து விட்டார்கள் அல்லது வழிமுறையில் செல்ல மறுக்கிறார் கள். அன்றைய அகன்ற சிரியா என்பது தற்போதைய சிரியா, பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான் உள்ளடங்கி யது. மேலும், எகிப்தையும் ஒருங்கிணைத்து இருந்த இஸ்லாமிய நாட்டை தான் சிலுவைப் போராளிகள் போர் தொடுத்து வந்தனர். இன்றைக்கு அதே போன்று ஒருங்கிணைந்து முஸ்லீம் நாடுகள் இஸ்லாத்துக்காக ஸலாவுத்தீன் போன்ற ஒரு மாவீரரின் தலைமையில் ஒன்று சேர்ந்து ஜெருசலத்துக்காக போரிட வேண்டும். ஆனால், ஒவ்வொரு முஸ்லீம் நாட்டு ஆட்சியாளர்களும் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தனித்தனி திசையில் பயணிக்கிறார்கள். இது போலவே முன்பிருந்த மன்னர்களை ஸலாவுத்தீன் எப்படி இஸ்லாத்தின் பால் ஒன்று சேர்த்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
திட்டமிட்டு எதிரிகளை வெல்லலாம். ஆனால் உடன் இருந்து கழுத்தறுக்கும் துரோகிகளையும் வைத்துக் கொண்டு அதை செய்வதற்கு சாமர்த்தியமான திறன் வேண்டும். அன்னாந்து பார்த்து எச்சில் துப்பலாமா? முஸ்லீம் உலகம் அதை செய்தது. தன் இனத்தை அழிக்க நினைப்பவனுடன் துணை போகலாமா? முஸ்லீம் உலகம் அதை செய்தது. ஈஸா நபி (அலைஹி வஸ்ஸலாம்) அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் மாபெரும் கொடுமை செய்தவர்கள் யூதர்கள். உண்மையில் கிறிஸ்தவர்களுக்கு யூதர்கள் தான் நேரடிப் பகை. ஆனால், இஸ்லாமை அழிக்க இருவரும் கூட்டு சேர்ந்ததின் ரகசியம் என்ன? ஒரு வேளை ஈஸா நபி அவர்களும் (யஃகூப் நபிக்கு பிறகு) இஸ்ரவேலர்கள் இனத்தைச் சேர்ந்தவர் தான் என்று எல்லாவற்றையும் மறந்து இருவரும் தோழர்களாகி விட்டார்களா? ஸலாவுத்தீன் அவர்களின் வீரம் ஆங்கில, ஐரோப்பிய கட்டுக் கதைகளால் நிரம்பிய ஹெர்குலஸ் (ஹிராக்கிளிஸ்), நெப்போலியன் போன பார்ட், அலெக் ஸாண்டர் போன்றவர்களை விட கண்மூடித்தனமான, தன்னிகரற்ற, தன் மார்க்கத்தை காக்க எழுந்த மாபெரும் வீரம். அவர் பிறந்த, வளர்ந்த, கல்வி, இஸ்லாமிய தீன் கல்வி, போர்திறன், அறிவு, வீரம் போன்ற வரலாற்றை அறியும் போது, இவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவரோ என்று தோன்றும். ஆம் உண்மை அது தான்.
“ அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான் அவன் அவர்களை நேசிப்பான். அவனை அவர்களும் நேசிப்பார்கள். அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள். இது அல்லாஹ்வின் அருட் கொடையாகும்.” (அல் மாயிதா 5:54)

துவக்கம்

                                                        உங்களுக்கு இந்த சரித்திரங்களில் ஒரு ஆர்வம் வர வேண்டும் என்பதற்காக முதலில் ஈடினையற்ற இஸ்லாமிய மன்னர் சலாவுதீன் அவர்களின் வரலாறை வெளியிடுகிறேன். இதுவரை ஜெருசலத்தை இரு முஸ்லீம்கள் தான் கைப்பற்றி இருக்கிறார்கள். இரத்தமே இல்லாமல் உமர்(ரலி) அவர்களும், அதிகப்படியான இரத்தத்துடன் சலாவுதீன் அவர்களும்.. இந்த வரலாறுகளை உங்கள் குழந்தைகளையும் படிக்கத் தூண்டுங்கள். நம் இந்திய நாட்டின் கல்வியமைப்பில் நிச்சயமாக இந்த சரித்திரங்களை அறிய முடியாது.