வியாழன், 2 ஏப்ரல், 2015

டடார்கள் வரலாறு



டடார்கள் எனப்படுபவர்கள் பலவகை உண்டு. வோல்கா டடார்கள், கிரிமியன் டடார்கள், லிப்கா டடார்கள், அஸ்ட்ரகான் டடார்கள், சைபீரிய டடார்கள் இன்னும் சில சிறு பிரிவைச் சேர்ந்த டடார்கள். நாம் பார்க்கப் போவது பழைய துருக்கி டடார்கள். உய்குர் இனத்தைச் சேர்ந்த மத்திய ஆசியாவைச் சார்ந்தவர்கள். இவர்களை டர்டார்கள் என்றும் அழைப்பார்கள். சைபீரியா கலந்த துருக்கி மொழி பேசக்கூடியவர்கள். இவர்களின் மொழி 7 ம் நூற்றாண்டிலிருந்து 13 ம் நூற்றாண்டுவரை காலங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் டடர்ஸ்தான் மற்றும் பஷ்கோர்தோர்ஸ்தான் பகுதியிலிருந்த வோல்கான் டடார்கள் ஆவார்கள். இவர்கள் ஏறக்குறைய 6 மில்லியன்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டிருக்கிறது. துருக்கி மொழி பேசும் முஸ்லீம்களும் டடார்களாகவே கணக்கிடப்பட்டனர். இதில் 0.50% மில்லியன் கிரிமிய டடார்களும் அடங்கும். பொதுவாக ஜெங்கிஸ்கானின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களும், ருஸ் எனப்படுபவர்களின் ஆக்கிரமிப்பின் மூலம் வந்த டடார்களே அதிகம். டடார் என்றால் துருக்கிய மற்றும் பெர்ஷிய மொழியில் “உயர்ந்த தூதன்” என்று பொருள். ரஷ்ய பேரரசில் இருந்த துருக்கிகள் அனைவருமே டடார்களாக அழைக்கப்பட்டனர். துருக்கிய மோங்கோல் டடார்களின் பலம் 14 மற்றும் 15 ம் நூற்றாண்டுகளில் அதிகமிருந்தது. ரஷ்யாவில் கிரிமிய நோகாய் படையெடுப்பின் மூலம் அதிகமான அடிமைகளை சிறைப் பிடித்து ஓட்டோமான் பேரரசுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இது இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியது. மேலும் இந்த படையெடுப்புகள் கொசாக்குகளின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவியது.
                                          அதிகப்படியான டடார் மொழிபேசுபவர்கள் இருப்பதாக 2010 ல் நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்தது. இவர்களின் எழுத்து வடிவம் ‘சிரில்லிக்’ என்னும் அமைப்பைக் கொண்டதாக இருக்கும். டடார்கள் மரம், துணி, செராமிக், தோல், உலோகங்களைக் குடைந்து வடிவமைப்பதில் மிகவும் கை தேர்ந்தவர்கள். இது அவர்களுக்கு பெரிதும் வாணிபத்தில் உதவியது. 
                                           7 ம் நூற்றாண்டுகளில் வோல்கா நதிக்கரையில் பரவியவர்கள் 922 ல் அஹ்மது இப்னு ஃபத்லான் என்பவரின் உபதேசத்தால் இஸ்லாமிய மதத்தைத் தழுவினார்கள். பிறகு, மங்கோலிய படையெடுப்புக்குப் பின் வோல்கா பகுதி (கோல்டன் ஹார்டி) தங்க நாடோடிகளுடன் இணைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டுகளில் துருக்கிய மொழி பேசும் இஸ்லாமிய கிரிமியன் டடார்கள் மத்திய ஐரோப்பாவில் சக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள். மங்கோலிய ஜெங்கிஸ்கானின் பேரன் பதூ கான் என்பவரின் தலைமையில் 1223 ல் ஐரோப்பாவை நோக்கி படையெடுத்தார்கள். முதலில் குமன்ஸ், வோல்கா பல்கேரியா, கெய்வன் ருஸ் ஆகிய பகுதிகளை வென்றார்கள். இவர்களின் திட்டம் அட்லாண்டிக் கரைப்பகுதிகள் வரை வெல்வதாக இருந்தது. பதூ கானின் உறவினரும், ஜெங்கிஸ்கானின் மூன்றாவது மகனுமாகிய ஓகிடெய் கானின் திடீர் மரணத்தால் படையெடுப்பை நிறுத்தி கொண்டு. கிழக்குப் புறமாக தங்கள் மலைப்பிரதேசத்திற்குத் திரும்பினார்கள். 1223 லிருந்து 1293 வரை நிறைய படையெடுப்புகளை பல்கேரியா, லுத்வேனியா, போலந்து மற்றும் இன்னும் பல பகுதிகளின் மீது நடத்தினார்கள்.

கர்மாஷியன்கள் வரலாறு



கர்மாஷியன்கள் என்பவர்கள் (அரபியில் கராமிதா) ஷியா பிரிவின் இஸ்மாயிலிகளுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டவர்கள். இவர்கள் வெறும் சைவம் மட்டுமே சாப்பிடுவதால் தி கிரீன்க்ரோஸர்’ (அரபியில் அல் பக்லியாஹ்) என்றும் அறியப்பட்டனர். இவர்கள் 899 ல் அபி ஸைத் அல் ஜன்னபி என்பவரின் கீழ் ரிலிஜியஸ் உடோபியன் ரிபப்ளிக் என்று ஒரு அமைப்பை தொடங்கி கிழக்கு அரேபியாவில் அல் ஹஸா என்ற பகுதியை தலைமையகமாக ஆக்கிக்கொண்டார்கள். இந்த கர்மாஷியன்கள் அப்பாஸியர்களின் ஆட்சியில் புரட்சி செய்து புகழ் பெற்றார்கள். மக்காவிற்கு புனித யாத்ரீகர்கள் வந்திருந்த சமயத்தில் அதன் தலைவன் அபு ஸைத் அல் ஜன்னபி கருப்புக்கல்லை கொள்ளையடித்துக் கொண்டு, ஜம்ஜம் என்றும் நீரின் புனிதத்தையும் பாழ்படுத்தி இஸ்லாமிய உலகத்தை அதிர்ச்சிப்படுத்தினான்.
                           750 லிருந்து 1258 வரை ஆண்ட அப்பாஸிய       ( நபி (ஸல்)அவர்களின் வம்சத்து சுன்னிப்பிரிவு) ஆட்சியாளர்களை எதிர்த்து பல ஷியா பிரிவு குழுக்கள் தோன்றின. அதில் இஸ்மாயிலிக்கள் சமூகத்தைச் சேர்ந்த முதன்மைக் குழு முபாரகிய்யாஹ்ஆகும். அதன் தலைமை இமாம் ஜாஃபர் அல் சாதிக் என்பவர் தன் இரண்டாவது மகன் இஸ்மாயில் இப்ன் ஜாஃபரை கொன்றுவிட உத்திரவிடுகிறார். சிலர் அவர் தப்பி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல, இஸ்மாயிலிகள் அவர் இறந்து விட்டதாகக் கூறி அவரின் மூத்த மகன் முஹம்மது இப்ன் இஸ்மாயிலை இமாமாக ஏற்றுக்கொண்டார்கள். அவர் கூஃபாவில் தங்கியிருந்த பெரும்பான்மையான முபாரகிய்யாஹ் குழுவினருடன் தொடர்பில் இருந்தார். முஹம்மது இப்ன் இஸ்மாயில் இறந்து போக, இதை ஏற்றுக்கொள்ளாத அதிகப்படியானோர் அவர் இறக்கவில்லை அவர் ஒரு மஹ்தி என்றார்கள். இதனால் முபாரகிய்யாஹ்வில் பிளவு ஏற்படுகிறது. இறந்துவிட்டார் என்று நம்பிய குறைவானோர் ஃபாத்திமிட் இஸ்மாயிலிகள் என்று ஆனார்கள்.
                           இந்த அதிகப்படியானோர்கள் அல் ஹுஸைய்ன் அல் அஹ்வாஸி என்பவர் தலைமையில் ஸலாமியாஹ்(தற்போதைய சிரியா) மற்றும் குஸெஸ்தான்(தென்மேற்கு பெர்ஷியா) என்ற இடங்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். அதன் தலைவர் குஸெஸ்தானின் கூஃபன் மன் ஹம்தானை தங்கள் பிரிவுக்கு மாற்ற, அவர் கர்மத்என்று பெயர் பெற்றார். கர்மத்தும் அவரின் மதவாதி மருமகன் அப்தன் என்பவரும் புதிய மஹ்தி வரப்போகிறார் என்று தென் ஈராக்கில் மத மற்றும் இராணுவ அமைப்புகளை தயார் படுத்தினார்கள். இது மேலும் ஏமன், பஹ்ரைன் மற்றும் வட ஆப்பிரிக்காவிலும் பரவியது. இவர்களின் போதிப்பு கவர்ச்சியாக இருந்ததைக் கண்ட புதியதாக ஷியா பிரிவில் சேர்ந்தவர்கள் இதில் இணைந்து கொண்டார்கள். பின்னாளில் கர்மாஷியன்கள் ஈரான் மற்றும் ட்ரான்ஸோக்சியானா வரை பரவியது. ஸலாமிய்யாவில் இருந்தவர்களுக்கும், கர்மத் அவர்களுக்கும் இடையே மஹ்தியின் இறப்பு சம்பந்தமாக கருத்து வேறுபாடு வந்து கலவரம் நடந்து மருமகன் அப்தன் கொல்லப்பட்டார். கர்மத் புதிய இமாமாகி அப்துல்லஹ் அல் மஹ்தி பில்லாஹ் என்று 909 ல் வட ஆப்பிரிக்காவில் ஃபாத்திமிட்கள்(நபி(ஸல்)அவர்களின் மகளார்) ஆட்சியை கொண்டு வந்தார். அபூ ஸைத் ஜன்னபி அப்பாஸியர்களிடமிருந்து பஹ்ரைன் மற்றும் அல் ஹஸா ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
                             அரேபிய பாலையைக் கடந்து மக்கா புனித யாத்திரை செல்பவர்களத் தாக்கி கொன்றார்கள். 906 ல் அதுபோல் 20,000 யாத்ரீகர்களின் வாகனத்தை வழி மறித்து கொன்றார்கள். 10 ம் நூற்றாண்டுகளில் பெரும் சக்தியாக வளர்ந்து ஓமனின் கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். மத்திய கிழக்கிலும், பெர்ஷியாவிலும் வளர்ந்திருந்தார்கள். கர்மாஷியன்களுக்கு எதிராக இருந்த இஸ்மாயிலிகளிடம்  கெய்ரோவிலிருந்து கொண்டு கப்பம் பெற்றார்கள்.
                        கர்மாஷியன்கள் கைப்பற்றி இருந்த இடங்கள் நல்ல வளமான இடங்கள். அடிமைச்சந்தை வாணிபத்தால் வரவு இருந்தது. பழங்களும், பருப்பு வகைகளும் விளையும் தீவுகள் நிறைந்திருந்தன. 1051 ல் அல் ஹஸா விஜயம் செய்திருந்த நஸிரி குஸ்ரு என்பவர்,’அங்கு ஒரு பண்னையில் 30,000 எத்தியோப்பிய அடிமைகள் பணியில் இருந்தார்கள். ஹஸாவாசிகளுக்கு வரிவிதிப்பில் விலக்கிருந்தது. ஏழையாய் இருந்தவர்களுக்கும், வியாபாரச்சரிவு கண்டவர்களுக்கும் கடன் வழங்கப்பட்டது.’ என்று கூறினார். ஒரு கர்மாஷியன் ஆட்சியாளர் 920 வெளியிட்டிருந்த நாணயம் 20 ம் நூற்றாண்டு வரை ஹஸாவில் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 931 ல் வந்த சனி கிரகத்தை கருத்தில் கொண்டு கர்மாஷியன்களின் தலைவர் அபூ தாஹிர் அல் ஜன்னபி உலகம் அழியப் போகிறது என்றார். ஸோரோஸ்ட்ரியன் மதத்தூதர் மறைந்து 1500 ஆண்டுகள் வேறு ஆகியிருந்தது. புது மெஹ்தி வரப்போகிறார் என்ற பரபரப்பு இருந்தது. அதை எதிர்நோக்கி அபூ தாஹிர் அல் ஜன்னபி தனக்கு நம்பிக்கையான ஒரு இளைஞரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.
                                     திடீரென்று அந்த பெர்ஷிய இளைஞர் இஸ்லாமிய சட்டம், தொழுகை ஆகியவற்றைப் புறக்கணிக்கச் சொன்னார், இறைத்தூதர்கள், இமாம்களை கேவலப்படுத்தினார். பல கர்மாஷியன் தலைவர்களைக் கொன்றார். இது முதல் தூதர் ஆதம்(அலை)அவர்களின் பூமி என்றார். 80 நாட்களே ஆண்ட அந்த இளைஞரை அபூ தாஹிர் கொன்று விட உத்தரவிட்டார். ஆனால், அந்த இளைஞர் ஏற்படுத்திய பாதிப்பு கர்மாஷியன்களின் அமைப்புக்கு சரிவைத் தந்தது. மேலும் 976 ல் சில பகுதிகளில் அப்பாஸியர்கள் கர்மாஷியன்களைத் தோற்கடித்தார்கள். ஈராக் போன்ற பகுதிகளிலிருந்து வந்த கப்பங்கள் நின்று போயின. உள்நாட்டுப் பொருளாதாரம் வீழ்ந்தது. பஹ்ரைனிலும் அபு அல் பஹ்லுல் அல் அவ்வாம் என்ற தலைவர் ஷியாபிரிவிலிருந்து விலகி சுன்னிப்பிரிவை ஏற்றுக் கொண்டார். இப்படி பல வகைகளிலும் சரிந்த கர்மாஷியன்கள் ஹோஃபுஃப் பகுதியில் சுருங்கி போனார்கள். அப்துல்லாஹ் பின் அலி அல் உயூனி என்பவர் செல்ஜுக் படைகளின் உதவியுடன் தொடர்ந்து 7 ஆண்டுகள் ஹோஃபுஃப் பகுதி மீது படையெடுத்து கர்மாஷியன்களின் இறுதி ஆட்சியை சரணடைய வைத்தார்.