ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

மரினித் ஆட்சிவம்ச வரலாறு

மரினித் ஆட்சிவம்சம் வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
இஃப்ரிகியா பகுதியைச் சேர்ந்த ஸினாடா பெர்பெர் பழங்குடியைச் சேர்ந்த இனமான இவர்கள் மொரோக்கோவை 13 லிருந்து 15 ம் நூற்றாண்டுவரை ஆண்டார்கள். இவர்கள் பூர்வீகம் நஜ்த், ஹிஜாஸ் பகுதியிலிருந்து 11 ம் நூற்றாண்டில் வடஆப்பிரிக்காவில் குடியேறியவர்கள். இவர்கள் அடிக்கடி சிஜில்மாசா மற்றும் ஃபிக்யூக் பகுதியில் நடமாடினார்கள். வட மொரோக்கோவை ஆக்கிரமிப்பதற்கு முன்னால் இவர்கள் 13 ம் நூற்றாண்டில் தற்போதைய அல்ஜீரியாவில் இருந்தார்கள். மரினித் என்பது இவர்களுடைய மூதாதையர் மரின் இப்ன் வர்தஜன் அல் ஸினாடி என்பவரது பெயரிலிருந்து வந்தது. அப்போது மொரோக்கோவின் ஆட்சியாளர்களாக இருந்த அல்மொஹத்களுக்கு அடிபணிந்தவர்களாக இருந்த மரினித்கள் ஆட்சியாளர்களுடன் மத்திய ஸ்பெயினின் அலர்கோஸ் போரில் கலந்து கொண்டு அரசியல் செல்வாக்கு பெற்றார்கள். வட மற்றும் கிழக்கு மொரோக்கோவில் வரி வசூலிப்பதைப் பார்த்துக் கொண்டார்கள். 1215 லிருந்து அல்மொஹத்களுக்கும், மரினித்களுக்கும் இடையே உரசல் ஆரம்பித்தது. முதலாம் அப்த் அல் ஹக் என்பவர் 10,000 அல்மொஹத் வீரர்களை வெற்றி கொண்டு ரிஃப் மலைப்பகுதியைக் கைப்பற்றினார். இதில் அப்த் அல் ஹக் படுகாயமடைந்தார். அப்த் அல் ஹக்கிற்குப் பிறகு மரினித்களின் தலைமைக்கு வந்த அவர் மகன் உதுமான் இப்ன் அப்த் அல் ஹக் அவரது கிறிஸ்தவ அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார். மரினித்கள் 1217 ல் கிழக்கு மொரோக்கோவை ஆக்கிரமிக்க வந்தார்கள். ஆட்சியாளர்களால் விரட்டப்பட்டு ரிஃப் மலைப்பகுதியில் தஞ்சமடைந்தார்கள். மரினித்கள் 30 ஆண்டுகாலம் அம்மலைப் பகுதியிலிருந்தபோது, ஆட்சியாளர்கள் அல்மொஹத்கள் பல பகுதிகளை கிறிஸ்தவ ஸ்பெயினிடம் இழந்து வந்தார்கள். 1229 ல் இஃப்ரிகியாவின் ஹஃப்சித்களும், 1235 ல் லெம்சென் நகரின் ஸய்யனித்களும் பலமிழந்து போனார்கள். அப்த் அல் ஹக்கின் இன்னொரு மகன் முஹம்மது மரினித்களின் ஆட்சிவம்சத்திற்கு வந்தார் . இவர் இவர் மெக்னெஸ் பகுதியை தாக்கினார். ஒரு போரில் இவரும் இறந்து போனார். இதனால் வலுவில்லாமல் போன ஆட்சியாளர்கள் அல்மொஹத்களிடமிருந்து 1244, 1248 களில் தாஸா, ரபாத், மெக்னெஸ் மற்றும் ஃபெஸ் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். ஃபெஸ்ஸைக் கைப்பற்றும் போது அல்மொஹத்களிடம் போர் அறிவித்துவிட்டு, சில கிறிஸ்தவ மடாலயங்களின் உதவியுடன் அபு யூசுஃப் யாகூப் என்ற மரினித் 1269 ல் மர்ரகெஷ்ஷைக் கைப்பற்றினார். தென்பகுதி மஃகில் மற்றும் ட்ரா பகுதி அரபுகள் மர்னித்களுக்கு அடிபணியாமல் இருந்தார்கள். 1271 ல்  ட்ராவும், 1274 ல் சிஜில்மஸாவும் மரினித்கள் கைப்பற்றிய பிறகே அவர்கள் அடிபணிந்தார்கள். அதேபோல் வடக்கில் சியோட்டா மற்றும் டான்ஜியரை வெற்றி கொண்டபின் அம்மக்களும் மரினித்களை ஏற்றுக்கொண்டார்கள். இப்ன் கல்தூன் கூற்றுப்படி 1274 ல் அபு யூசுஃப் யாகூப் தான் முதலில் வெடிமருந்தைப் பயன்படுத்தினார் என்று கூறுகிறார். கிரனாடாவின் ஆட்சியாளர் முதலாம் முஹம்மதுவின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு உதவ ஸ்பெயின் சென்றார். பின் 1276 ல் அபு யூசுஃப் யாகூப் மொரோக்கோ திரும்பி எஞ்சியிருந்த அல்மொஹத் ஆட்சியை விலக்கி ஃபெஸ் நகரத்தை புதுமைப்படுத்தி மரினித்களின் தலைநகராக்கினார். கிரனாடாவின் ஆட்சியாளர் உதவியுடன் மேலும் மூன்றுமுறை ஸ்பெயின் மீது தாக்குதல் நடத்தினார். அப்த் அல் ஹக் மற்றும் அபு யஹ்யா ஆகியோரின் ஆரம்ப நடவடிக்கைக்குப் பிறகு, அபு யூசுஃப் யாகூப் தான் மர்னித்கள் ஆட்சி நிலைபெற பாடுபட்டார். பல மஸ்ஜித்கள், மதராஸாக்களையும் கட்டினார். இவருக்குப்பின் வந்த இரண்டாம் அபு சைத் உதுமான் பெரிய கட்டிடங்களைக் கட்டினார். பல மதரஸாக்கள், மஸ்ஜித்கள் என்று பெரிய அளவில் கட்டினார். இவர் கட்டிய அல் அட்டரீன் மதரஸா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மதரஸாவின் வளாகத்தில் சந்தையும், மசாலாப் பொருட்களும், வாசனைப் பொருட்களும் விற்பதற்கான கடைகளையும் கட்டப்பட்டிருந்தன. இரண்டாம் அபு சைத் உதுமானுக்குப் பிறகு, அவர் மகன் அபு அல் ஹசன் மரினித்களின் ஆட்சிக்கு வந்தார். இவர் கருமை நிறத்தவராக இருந்ததால், ‘கரும் சுல்தான்’ என்று பெயர் பெற்றார். அபு அல் ஹசன், இஃப்ரிகியாவின் ஹஃப்சித் ஆட்சியாளர் அபுபக்கரின் மகள் ஃபாத்திமாவை மணந்திருந்தார்.

1309 ல் காஸ்டில்லியன் மன்னர் நான்காம் ஃபெர்டினண்ட் ஜிப்ரால்டரைக் கைப்பற்றி இருந்தார். அதனால் க்ரனாடாவின் ஆட்சியாளர் நான்காம் முஹம்மதுவின் வேண்டுகோளை ஏற்று தன் மகன் அப்த் அல மாலிக் தலைமையில் 7000 வீரர்களுடன் ஜிப்ரால்டரைக் கடந்து உதவிக்குப் போனார். உணவுப் பற்றாக்குறை, ஆயுதப் பற்றாக்குறை என்று பல இன்னல்களுக்குப் பிறகு, ஜிப்ரால்டரை வென்றார். அபு அல் ஹசன் மகன் அப்த் அல் மாலிக் தலைமையில் மூன்றாண்டு காலமாக லெம்சென் நகரை முற்றுகையிட்டார். இதற்கிடையில் சிஜில்மஸாவை நிர்வகித்து வந்த அபு அல் ஹசனின் சகோதரர் அபு அலி மரினித் ஆட்சிவம்சத்தைப் பிரித்தாள மிரட்டினார். லெம்சென் முற்றுகையை சற்று கைவிட்டு, சகோதரனைக் கைது செய்து கொலை செய்தார். பின்னர் லெம்சென் நகரைக் கைப்பற்றினார். இதன்பின் அபு அல் ஹசனை எகிப்து, க்ரனாடா, துனீஸ், மாலி ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் மரினித்களுடன் உறவு வைத்துக்கொண்டார்கள். 1346 ல் இஃப்ரிகியாவின் ஆட்சியாளர் அபுபக்கர் இறந்து போக ஆட்சி ஆள பல குழப்பங்கள் இருந்தன. இதனால் இஃப்ரிகியாவின் பல கட்சிகள் மரினித் ஆட்சியாளர் அபு அல் ஹசனை உதவிக்கு அழைத்தார்கள். 1347 ல் மொரோக்கோ இராணுவத்துடன் அபு அல் ஹசன் இஃப்ரிகியாவில் நுழைந்து அதை மரினித் ஆட்சியுடன் இணைத்தார். மரினித் ஆட்சிக்கு எதிராக அரபு பழங்குடிகள் புரட்சியில் இறங்கினார்கள். 1348 ல் அபு அல் ஹசனின் இராணுவத்தை கைய்ரோவானில் வெற்றி கொண்டார்கள். லெம்செனில் கவர்னராக இருந்த இவர் மகன் அபு இனான் ஃபரீஸ் என்பவர் ஃபெஸ் நகரம் திரும்பி தன்னை சுல்தானாக அறிவித்துக் கொண்டார். லெம்செனிலும், மத்திய மக்ரிபிலும் அபு அல் ஹசனுக்கு எதிராக கலவரம் நடந்தது. பௌஜீ என்ற பகுதியில் அபு அல் ஹசன் பயணம் செய்த கப்பல் வழிதவறி  எதிரிகளின் பகுதியில் சிக்கிக்கொண்டது. அதிலிருந்து தப்பித்து லெம்செனை மீட்க முயன்றதில் செலிஃப் ஆற்றுப் பகுதியில் தோல்வியடைந்தார். அட்லாஸ் மலையில் பதுங்கி இருந்தபோது 1351 ல் மரணமடைந்த அபு அல் ஹசனின் உடலை அவர் மகன் அபு இனான் அடக்கம் செய்தார். அபு இனானும் அவரது வைஸ்ராயாரால் 1358 ல் படுகொலை செய்யப்பட்டார். வைஸ்ராயர் வசம் போய்விட்ட மரினித்களின் ஆட்சியைப் பிடிக்க சுல்தான்கள் சிலர் முயன்றார்கள். 1359 ல் அட்லாஸ் மலையின் உயரத்தில் இருந்த ஹிண்டாடா பழங்குடியினர் கீழிறங்கி வந்து மர்ரகெஷ்ஷைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அபு யாகூப் யூசுஃப் அந் நாசர், அபு தப்பித் ஆமிர், அபு அல் ரபி சுலைமான், அபு சைத் உதுமான், அபு அல் ஹசன் இப்ன் உதுமான், அபு யஹ்யா அபுபக்கர் இப்ன் ஃபரீஸ், அபு சலீம் இப்ராஹீம் என்று பலர் சில காலங்கள் ஆண்டார்கள். கைவசமிருந்த சில சுல்தான்களின் பகுதிகளும் நாளடைவில் மரினித்களை விட்டு போயின.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக