ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

உமய்யாதகள் வரலாறு 2

661 ல் சில கரிஜியாக்களால் அலி(ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்று அலி (ரலி) அவர்களின் மகன் இமாம் ஹசன் இப்ன் அலி(ரலி) அவர்கள் கலீஃபாவாக பதவி ஏற்று மூ ஆவியா அவர்க ளுடன் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் இமாம் ஹசன் இப்ன் அலி(ரலி) அவர்கள் பதவி விலகிவிடுவதாகவும், ஆனால் மூ ஆவியா இறந்த பிறகு சந்ததித்தொடராக அவர்களின் குடும்பம் ஆளக் கூடாது என்று முடிவான தாகவும் கூறப்படுகிறது. மூ ஆவியா அவர்கள் கொடுத்த வாக்கை முறித்து தன் வழியில் “உமய்யாத் சாம்ராஜ்ஜியம்” நிறுவி டமாஸ்கஸை தலைநகராக ஆக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் உமய்யாக்கள் அபு ஸுஃப்யானின் வழித்தோன்றலாக இருந்ததால் “ஸுஃபியானிக்கள்” என்று அழைக்கப்பட்டனர். மூஆவியா அவர்கள் உள்நாட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தி ஆட்சியின் நிலப்பரப்பை பெருக்குவதில் ஆர்வம் காட்டினார். உள்நாட்டில் குஃபாவில் ஹுஜ்ர் இப்ன் அதி என்ற அலி(ரலி) அவர்களின் ஆதரவாளர் ஏற்படுத்திய புரட்சியை ஈராக்கின் கவர்னர் ஸியாத் இப்ன் அபுஸுஃப்யான் மூலம் அடக்கினார். மூஆவியா அவர்கள் சிரிய கிறிஸ்துவர்களுக்கும், அரபுக்களுக்கும் இடையே நட்புறவை வளர்த்தார்கள். டமாஸ்கஸ் ஜானின் தந்தை சார்ஜுன் என்பவர் மூஆவியா அவர்களின் நெருங்கிய ஆலோசகராக இருந்தார். பைஸாந்தியரோமன் பேரரசின் மீது போர் தொடுத்தார்.                                                                                                                                                                
இவரது ஆட்சியின் போது தான் க்ரீட் மற்றும் ரோட்ஸ் தீவுகள் இஸ்லாமியர்கள் வசமானது. தொடர்ந்து கான்ஸ்டாண்டிநோபிள் மீது பலமுறைப்போர் தொடுத்தார். வெற்றிபெற முடியாத நிலையில் பெருவாரியான கிறிஸ்துவர்கள் ‘மார்டைட்கள்’ என்று திரண்டு வர பைஸாந்தியர்களுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டார். வடஆப்பிரிக்காவின் மீதும் கவனம் செலுத்தி கைரோவன் என்ற நகரத்தைக் கைப்பற்றினார். மத்திய ஆசியாவில் காபூல், புகாரா மற்றும் சமர்கண்ட் ஆகியவற்றையும் வெற்றிகொண்டார். 680 ல் மூஆவியா அவர்கள் இறந்த பின் மீண்டும் ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இரண்டாவது உள் நாட்டுப்போர் (SECOND FITNA) உருவாகியது. அவர் மகன் யஸீத் கலீஃபாவானார். இவ ருக்கு முஸ்லீம்களிடத்திலும், குறிப்பாக நபி (ஸல்) தோழர் ஜுபைர்(ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்ன் அல் ஜுபைர், நபி (ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன் இப்ன் அலி (ரலி) ஆகியோரிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அப்துல்லாஹ் இப்ன் அல் ஜுபைர் மதீனாவிலிருந்து மக்காவுக்கு சென்றிருந்தார். யஸீத் கலீஃபாவாக இருப்பதற்கு ஹுசைன் இப்ன் அலி(ரலி) அவர்கள் விரும்பவில்லை என்பதை அறிந்தார். குஃபா நகர மக்கள் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தருவதாக தெரிவித்தார்கள். ஹுசைன் (ரலி) அவர்கள் தன் உறவினர் முஸ்லிம் பின் அகைல் என்பவரை அனுப்பி உண்மையிலேயே குஃபா நகர மக்கள் தனக்கு ஆதரவு தருவார்களா என்று அறிந்துவர அனுப்பினார். இச்செய்தியை கேள்விப்பட்ட யஸீத் உடனே பஸ்ரா நகர ஆட்சியாளர் உபைதுல்லாஹ் பின் ஸியாதை அனுப்பி குஃபா நகர மக்களை ஹுசைனின் ஆதரவு ஊர்வலத்துக்கு செல்லவிடாமல் தடுத்து விட்டார். இருந் தாலும் முஸ்லிம் பின் அகைலின் பின் குஃபா நகர மக்கள் சேர ஆரம்பித்து விட்டார்கள். முஸ்லிம் பின் அகைல் கைது செய்யப்பட்டார். முஸ்லிம் பின் அகைல் அவர்கள் என்னைக் கைது செய்து விட்டீர்கள். இருந்தாலும் நான் ஹுசைன்(ரலி) அவர்களை குஃபா நகருக்கு வர வேண்டாம் என தகவல் தர அனுமதிக்க வேண்டும் என கேட்க, அது மறுக்கப்பட்டு முஸ்லிம் பின் அகைல் கொல்லப்பட்டார். 
அப்துல்லாஹ் இப்ன் அல் ஜுபைர் (ரலி)அவர்கள் தான் மரணிக்கும் வரை மக்கா விலேயே இருந்து விட்டார். ஹுசைன் (ரலி) அவர்கள் தன் குடும்பத்துடன் குஃபா நகரம் வந்தார். வழியில் யஸீதின் படையைச் சேர்ந்த அம்ர் பின் ஸாத், ஷமர் பின் தி அல் ஜோஷன் மற்றும் ஹுசைன் பின் தமீம் ஆகியோரால் தடுக்கப்பட்டு, ஹூசைன்(ரலி) அவர்களும், அவரின் குடும்ப ஆண் உறுப்பினர்களும் அவர்களுடன் போரிட்டு இறந்து போனார்கள். ஹுசைன்(ரலி) அவர்களுடன் இருநூறு பேர் பயணித்தனர். அவர்களின் சகோதரி, மனைவிகள், மகள்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். பெண்களையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து டமாஸ்கஸ் அழைத்துச் சென்று யஸீதிடம் ஒப்படைத்தனர். யஸீத் அவர்களை டமாஸ்கஸ் சிறையில் அடைத்தார். பொதுமக்களிடமிருந்து நபி (ஸல்)அவர்களின் குடும்பத்தினரை சிறை வைத்ததற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. யஸீத் உடனே அவர்களை விடுவித்து மதீனா அனுப்பினார். அந்த குடும்பத்தில் தப்பித்த ஒரே ஆண் வாரிசு ஹுசைன்(ரலி) அவர்களின் மகன் அலி இப்ன் ஹுசைன் ஆவார்கள். யஸீதின் படைகளால் அவர்களின் பயண வாகனம் தாக்கப்படும் போது அவர்கள் சண்டை யிட முடியாமல் கடும் நோயின் பிடியில் இருந்தார்கள். 
ஹுசைன்(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, மக்காவிலிருந்த இப்ன் அல் ஜுபைர் இரண்டு அமைப்புகளைத் தொடங்கினார். ஒன்று நபி(ஸல்) அவர்களின் குடும்பம் இருந்த காரணத்தினால், குடும்பத்தினரை சிறைப் பிடித்ததற்கு நியாயம் வேண்டி மதீனாவை மையப்படுத்தி ஒரு அமைப்பும், கரிஜியாக்களை எதிர்த்து பஸ்ரா நகரில் ஒரு அமைப்பையும் தொடங்கினார்கள். 683 ல் யஸீத் மதீனா அமை ப்பை ஹர்ராஹ் என்னும் போரின் மூலம் அடக்கினார். அப்போது மதீனாவின் பெரிய பள்ளி கடும் சேதத்திற்குள்ளாகியது. நகரில் கொள்ளைகளும் நடந்தன. பிறகு, யஸீதின் படைகள் மக்காவிற்கும் சென்றது. அப்போது ஏதோ ஒரு வகையில் புனித காபா பள்ளி தீக்கிரையானது. இந்த இரு பள்ளிகளின் சேதம் உமய்யாத்களின் ஆட்சியில் நடந்த கரும்புள்ளிகளாகும். யஸீத் இறந்த பிறகும் இந்த கலவரங்கள் நடந்துகொண்டு தான் இருந்தன. யஸீதின் படைகள் மக்கா நகரை இப்ன் அல் ஜுபைரின் கட்டுப்பாட்டிலேயே விட்டு விட்டு கிளம்பின. 683 ல் யஸீதின் மகன் இரண்டாம் மூ ஆவியா கலீஃபாவாக பதவியேற்றார். ஆனால், அவருக்கு சிரியாவைத் தாண்டி போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கிடை யில் சிரியாவில் கெய்ஸின் உறுப்பினர்கள் இப்ன் அல் ஜுபைரை ஆதரித்தார்கள். குதா ஆ உறுப்பினர்கள் வா இல் இப்ன் உமய்யாஹ் என்பவரின் மகன் மர்வானை ஆதரித்தார்கள். 684 ல் டமாஸ்கஸ் அருகில் நடந்த மர்ஜ் ரஹித் போரில் மர்வான் வெற்றி பெற்று கலீஃபாவானார்.                                                
மர்வான் முதலில் இப்ன் அல் ஜுபைரின் ஆதரவைப் பெற்றார். மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு மனதாக மர்வானை ஆதரித்தார்கள். மர்வான் எகிப்தை மீண்டும் வெற்றி பெற்று உமய்யாத் பேரரசுடன் இணைத்தார். ஆனால், எதிர்பாராத விதமாக ஒன்பது மாதகால ஆட்சிக்குப் பிறகு 685 ல் இறந்து போனார். மர் வானுக்குப் பிறகு அவர் மகன் அப்த் அல் மாலிக் கலீஃபாவானார். அலி(ரலி) அவர்களின் மற்றொரு மகன் முஹம்மது இப்ன் ஹனஃபிய்யாவைத்தான்  கலீஃபாவாக ஆக்க வேண்டுமென்று குஃபாவைச் சேர்ந்த அல் முக்தார் என்பவர் அப்த் அல் மாலிக்குக்கு எதிராக கலவரம் செய்து எதிர்த்தார். ஆனால், இதில் முஹம்மது இப்ன் ஹனஃபிய்யாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அல் முக்தாரின் படைகள் 686 ல் மோஸுல் நகருக்கருகில் காஸிர் ஆற்றின் கரையில் நடந்த போரில் உமய்யாத்களைத் தோற்கடித்தனர். 687 ல் இப்ன் அல் ஜுபைருடன் நடந்த போரில் அல் முக்தாரின் படை அழிக்கப்பட்டது. 691 ல் உமய்யாத்கள் மீண்டும் ஈராக்கைக் கைப்பற்றினார்கள். 692 ல் அதே படை மக்காவையும் கைப்பற்றியது. இப்ன் அல் ஜுபைர் கொல்லப்பட்டார். 
அப்த் அல் மாலிக் அவர்களின் ஆட்சியின் இன்னொரு சாதனையாக ஜெருசலத் தில் ‘டோம் ஆஃப் ராக்’ முழுமையாகக் கட்டப்பட்டது. இது மக்காவின் காபாவுக்கு போட்டியாக கட்டப்பட்டதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அப்த் அல் மாலிக் அவர்கள் முழுக்கட்டுப்பாடுடன் ஆட்சி நடத்தினார். அரபு மொழியை ஆட்சி மொழி ஆக்கி, புழக்கத்திலிருந்த பைஸாந்திய,ஸசானிய நாணயத்திற்கு பதிலாக அழகாக அலங்கரிக்கப்பட்ட முஸ்லீம் நாணயத்தை வெளியிட்டார். பைஸாந்தியர்களுக்கு எதிராக செபாஸ்டோபொலிஸ் என்ற இடத்தில் போரிட்டு அர்மேனியாவையும், காகஷியன் ஐபீரியாவையும் வெற்றி கொண்டார். அப்த் அல் மாலிக் இறந்த பின் அவர் மகன் முதலாம் அல் வலீத் கலீஃபாவானார். இவர் ஆட்சியில் மதீனாவில் அல் மஸ்ஜித் அல் நபவியை புதுப்பித்தார். டமாஸ்கஸில் கிரேட் மஸ்ஜித் கட்டி னார். அப்த் அல் மாலிக் மற்றும் அல் வலீத் ஆகியோரின் ஆட்சியில் ஈராக்கின் கவர்னராக அல் ஹஜ்ஜஜ் பின் யூஸுஃப் என்பவர் இருந்தார். பெரும் பான்மை ஈராக் மக்கள் உமய்யாத்களின் ஆட்சியை விரும்பவில்லை. அல் ஹஜ்ஜஜ் பின் யூஸுஃப் சிரியாவிலிருந்து இராணுவத்தை அழைத்துவந்து வாஸித் என்ற ஒற்றர்கள் நகரத்தையே உருவாக்கி சிறப்பாக எதிர்ப்பாளர்களை அடக்கினார். அதில் குறிப்பிடத்தக்கது இப்ன் அல் அஷ் அத் என்ற ஈராக்கின் ஜெனரல் எட்டாம் நூற்றாண்டில் நடத்திய புரட்சியை அடக்கியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக