புதன், 17 டிசம்பர், 2014

செல்ஜுக்குகள் சரித்திரம் 21063 ல் துக்ருல்பெக் மரணமடைந்த பின் இவருடைய சகோதரர் சக்ரிபெக்கின் மகன் அல்ப் அர்சலன் (அல்ப்-போர்வீரன், அர்சலன்-சிங்கம்) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர் பைஸாந்தியர்களை எதிர்த்துப் போரிட்டு மேற்குப் புறமாக முன்னேறினார். அப்போது கிழக்கு அனடோலியாவில் அவ்வளவாக மக்கள் தொகை இல்லை, பைஸாந்திய சக்கரவர்த்தி இரண்டாம் பாசில் அங்கு வசித்த 40,000 அர்மேனிய மக்களை வெளியேற்றி சிவாஸ் மற்றும் கைசெரியில் தங்க வைத்தார். அல்ப் அர்சலன் 1064 ல் அர்மேனியாவையும், 1070 ல் அனடோலியா மற்றும் அலிப்போவையும் கைப்பற்றினார். 1071 ல் ஜெருசலத்தையும் இவர் கைப்பற்றிய பின் தான் ஐரோப்பியர்கள் சிலுவைப்போருக்கான ஆரம்பத்தை ஆராய்ந்தார்கள். 1071 ல் பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன்டியாகினிஸ் (ரோமனாஸ்) அர்மேனியாவைத் திரும்ப வெற்றி கொள்ள ‘வான்’ ஏரியிலிருந்து 25 மைல் தொலைவிலுள்ள மன்ஸிகர்ட் என்ற கோட்டையில் அல்ப் அர்சலனால் தந்திரமாகத் தோற்கடிக்கப்பட்டார். தன்முன் கைதியாக நின்ற ரோமைன்டியாகினிஸிடம் , “ ஒருவேளை தாங்கள் கைதாகாமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்” என்று கேட்க, அதற்கு ரோமைன்டியாகினிஸு, “ நான் உங்களைக் கொன்றிருப்பேன் அல்லது கான்ஸ்டாண்டிநோபிள் தெருக்களில் கட்டி இழுத்து வரச் செய்திருப்பேன்” என்று கூற, அதற்கு அல்ப் அர்சலன், எனது தண்டனை தங்கள் மீது மன்னிப்பளிப்பதாகும்” என்று கூறியது மிகப்பெரிய சரித்திரப்பதிவு. தோற்றுப்போன பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன்டியாகினிஸுக்கு தனது மாளிகையில் விருந்து வைத்து கௌரவித்து ‘தினசரி ஆயிரம் தினார்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பைஸாந்தியர்கள் செலுத்தவும், கைது செய்யப்பட்ட செல்ஜுக்குகளை விடுவிக்கவும், கைப்பற்றப்பட்ட பகுதிகள் செல்ஜுக்குகளின் எல்லையுடன் இணைக்கவும், எப்போது அழைத்தாலும் உதவிக்கு வருவதாகவும் (FEUDEL SYSTEM), பைஸாந்திய சக்கரவர்த்தி ரோமைன் டியாகினிஸுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்த வெற்றிக்குப் பிறகே அனடோலியாவில் துருக்கியர்களின் ஆட்சி நிலை பெற்றது. 1072 ல் அல்ப் அர்சலன் தனது கூடாரத்தில் படுகொலை செய்யப்பட்டார. அல்ப் அர்சலனின் மரணத்தால் பெர்ஷியாவின் மாபெரும் செல்ஜுக்குகள் கிழக்கு அனடோலியாவின் நிலப்பரப்பை செல்ஜுக்குகளின் ஒரு பகுதியாக மட்டுமே விட்டு விட்டு விலக வேண்டியதாகியது.
                          அடுத்ததாக அல்ப் அர்சலனின் மகன் மாலிக் ஷா 1072 ல் ஆட்சிக்கு வந்தார். செல்ஜுக்குகளில் இவர் மிகவும் பலம் வாய்ந்தவராகவும், புத்திசாலியாகவும் இருந்தார். இவர் 1079 ல் ட்ரான்ஸ்க்சியானா மற்றும் கிர்மான் பகுதிகளைக் கைப்பற்றினார். இவரின் ஆட்சியில்தான் மாபெரும் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் பல திசைகளிலும் விரிவடைந்து மைனர் ஆசியாவிலிருந்து துருக்கிஸ்தான் வரை நீண்டது. இவர் தலைநகரை ரெய்யிலிருந்து இஸ்ஃபஹானுக்கு மாற்றிக் கொண்டார். மாலிக் ஷாவின் ஆட்சிகாலம் செல்ஜுக்குகளின் பொற்காலமாகும். இவரது ஆட்சி “கிரேட் செல்ஜுக்” என்று புகழப்பட்டது. அப்பாஸிட் கலீஃபா இவரை “கிழக்கு, மேற்கின் சுல்தான்” என்று புகழாரம் சூட்டினார். மாலிக் ஷாவின் ஆட்சியில் இராணுவம், விஞ்ஞானம், அரசியல், இலக்கியம் என்று பல துறைகளில் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் வளர்ச்சியடைந்திருந்தது. இந்த மாபெரும் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தது மெலிக் ஷாவின் வலதுகரமாய் இருந்த நிர்வாகத்திறன் மிக்க பெர்ஷிய மந்திரி நிஜாம் அல் முல்க் என்பவராவார். பின்னாளில் இவர் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். இன்னும் ஒரு பெயர் பெற்ற மந்திரி தாஜ் அல் முல்க் என்பவர். பெர்ஷிய சரித்திரத்தில் செல்ஜுக்குகளின் திறமைக்கு சிறப்புண்டு. இஸ்ஃபஹானி லுள்ள ‘மஸ்ஜித் இ ஜாமி’ மசூதி இவர்கள் கட்டியது. கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கினார்கள். நீலமும் கருப்பும் கலந்த பளிங்கு கற்கள் வேலைப்பாடு இவர்களின் சிறப்பம்சம். இஸ்லாமியர்களின் ஆட்சியில் செல்ஜுக்குகளின் கலை, சிலை வடிவமைப்புக்கு தனி சிறப்புண்டு. 1092 ல் மாலிக் ஷா மரணமடைந்த பின் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் குடும்ப சண்டையினால் பல பகுதிகளாக சிதறி மத்திய ஆட்சியின் கட்டுப்பாடு இல்லாமல் போனது. உள் மாநிலங்களை சிரிய செல்ஜுக்குகளும், ஈராக்கை கோரசான் செல்ஜுக்குகளும், கிர்மான் செர்ஜுக்குகள், அனடோலியா செல்ஜுக்குகள் என்று பிரிந்து போயினர். ஷியா பிரிவினரின் இடையூறுகள், சிலுவைப் போர்கள் மற்றும் மத்திய ஆசியா விலிருந்து குடியேறிய துருக்கி பழங்குடியினரின் தொல்லைகள் என்று பல குழப்பங்களுக்கு நடுவே மாபெரும் செல்ஜுக் சாம்ராஜ்ஜியம் மேலும் ஒரு நூற்றாண்டைக் கடந்து ஆண்டது.                       
      
ரோம செல்ஜுக்குகள்
                     சிரிய செல்ஜுக்குகள், கோரசான் செல்ஜுக்குகள், கிர்மான் செர்ஜுக்குகள், அனடோலியா செல்ஜுக்குகள் என்று சிறிய பகுதிகளின் ஆட்சியாளர்களாகப் பிரிந்து போன செல்ஜுக்குகளில் அனடோலியா செல்ஜுக்குகள் திறமையாக செயல்பட்டு மீண்டும் சாம்ராஜ்ஜியத்தை நிலை நிறுத்தினார்கள். இவர்களை சரித்திரம் மைனர் ஆசியாவிலிருந்து வந்த செல்ஜுக்குகள், ரோமின் செல்ஜுக்குகள், துருக்கிய செர்ஜுக்குகள் என்றும் குறிப்பிடுகிறது. இவர்களை க்ரேட் துருக்கிகள் என்றும் அழைக்கிறார்கள். துருக்கிய செர்ஜுக்குகள் மன்ஸிகர்ட் போரில் வெற்றியடைந்தனர். மேலும் வடக்கு மேற்கு பகுதிகளில் முன்னேறி பெரும் பண்ணை யாளர்களாகவும், கால்நடை வளர்ப்பாளர்களாகவுமாகி ஆதாயம் பெற்றார்கள். இவர்களின் மத்திய அண்டோலியா பகுதிதான் தற்போதைய துருக்கி நாடானது. இவர்கள் இஸ்லாமிய மதத்தை துருக்கியில் பரப்பினார்கள்.
                         அந்த நேரத்தில் அனடோலியாவைச் சுற்றி அதிக அளவில் லத்தீன் மொழி பேசுபவர்கள், பைஸாந்தியர்கள், வெனிஷியன் மற்றும் ஜினோயெஸின்களின் காலனிகள், மெடிட்டரேனியன் பகுதிகளில் செயிண்ட் ஜானின் மன்னர்கள், மேற்குப்புறத்தில் க்ரீக் இனத்தவர்கள் மற்றும் அர்மேனியன்கள், ஜார்ஜியன்கள் கிழக்கிலுமான அரசியல் சூழ்நிலை இருந்தது. 1064 ல் சுலைமான் இப்ன் குதல்மிஸ் என்பவர் அல்ப் அர்சலனை எதிர்த்து புரட்சி செய்தார். ஆனால் அது தோல்வியடைந்து அவர் பெர்ஷியாவிலிருந்து அனடோலியாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு அருமையான வாய்ப்பு அமைந்து அவரும் அவர் மகனும் துருக்கி பழங்குடியின தலைவர்களாக அறியப்பட்டு பைஸாந்தியர்களை எதிர்த்துப் போரிட்டு கிழக்கு அனடோலியாவை கைப்பற்றினார்கள். மேலும் மேற்கில் முன்னேறி ஆண்டியாக், கொன்யா (கென்யா அல்ல) பகுதிகளை வெற்றி கொண்டார்கள். இவர்களில் சிலர் பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தில் பல பகுதிகளில் பணியில் இருந்தார்கள். அங்கே அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து அந்த பகுதிகளுக்கும், நகரங்களுக்கும் எதிராக இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டினார்கள். 1081 ல் முதலாம் அலெக்ஸியஸ் என்பவர் பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான போது சுலைமான் இப்ன் குதல்மிஸ் உடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார். அதாவது சுலைமான் இப்ன் குதல்மிஸ் பைஸாந்தியர்களின் தலைநகர் கான்ஸ்டாண்டி நோபிளுக்கு அருகேயுள்ள இஸ்னிக் நகரில் தங்கள் தலைநகரை அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவானது. அதே நேரத்தில் இன்னொரு பிரிவு செல்ஜுக்குகள் பைஸாந்தியர்களுக்கு சொந்தமான சிவாஸ், அமஸ்யா மற்றும் அர்மேனியாவை கைப்பற்றி தென் அனடோலியாவில் சிலிஷியா என்ற பகுதியை தங்கள் தனி மாகாணமாக அறிவித்துக்கொண்டார்கள். அவர்களின் இந்த அதிகாரத்திற்கு சுலைமான் இப்ன் குதல்மிஸ் ஆதரவளித்தார். அதே நேரத்தில் அல்ப் அர்சலன் வழியில் வந்த க்ரேட் செல்ஜுக்குகளுக்கு தான் கட்டுப்பட மாட்டேன் என்றார். 1086 ல் சுலைமான் இப்ன் குதல்மிஸ் ஆண்டியாக்கைக் கைப்பற்றினார். அலொப்போவை வெல்ல பலமுறை முயற்சி செய்தார். அந்த முயற்சியில் இறந்து போனார். அவரின் மகன் கிலிக் அர்சலன் என்பவரை க்ரேட் செல்ஜுக்கின் ஆட்சியாளர் மெலிக் ஷா கைது செய்து ஈராக்குக்கு கொண்டு சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக