வியாழன், 16 ஜூலை, 2015

துலுனித்கள் வரலாறு

துலுனித்கள் வரலாறு
கூ.செ.செய்யது முஹமது
துலுனித்கள் துருக்கிய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். இஸ்லாமிய எகிப்தில் முதல் சுதந்திர ஆட்சியாளர்கள் இவர்கள் தான். 868 லிருந்து ஆட்சி செய்தார்கள். அப்பாஸிய கலீஃபாக்களின் ஆட்சியின் போது தலைநகர் பாக்தாதிலிருந்து நீண்ட தொலைவிலிருந்த மாகாணங்களை நிர்வகிப்பதில் நிர்வாக சிக்கல் இருந்தது. இதனால் சில மாகாணங்களை அங்கிருந்த கவர்னர்களும், ஊர் தலைவர்களும் தனதாக்கிக் கொண்டு ஆண்டு வந்தார்கள். சிலவற்றை அப்பாஸிய ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். சிலவற்றை கப்பம் செலுத்தச் சொல்லி ஆண்டு வந்தார்கள். கலீஃபா அல் முவஃப்ஃபக் மீண்டும் தென் ஈராக்கில் ஆட்சியை நிலை நிறுத்தினார். ஆரம்பத்தில் துருக்கிய பாரம்பரியத்தில் வந்த அஹ்மத் இப்ன் தூலூன் என்பவர் பாக்தாதில் அமைக்கப்பட்ட பாதுகாப்புப் பிரிவில் இருந்தார். பின் கலீஃபா அல் முஃதசிம் சமர்ராவை நிறுவிய போது அங்கே அனுப்பப்பட்டார். பிறகு கலீஃபா அல் முஃதஸ் இவரை எகிப்தின் கவர்னராக அங்கு அனுப்பினார். நாளடைவில் எகிப்திய இராணுவம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்திய அஹ்மத் இப்ன் தூலூன் எகிப்தின் மொத்த நிர்வாகத்தை தனதாக்கிக் கொண்டார். பிறகு அப்பாஸிய கலிஃபாவுடன் கப்பம் செலுத்துவதாக ஒப்பந்தமானது. ஆனால், நாளடைவில் கப்பம் செலுத்தாததால் அப்பாஸிய கலிஃபா இராணுவ நடவடிக்கை எடுத்தார். அஹ்மத் இப்ன் தூலூன் அதை எதிர் கொண்டு வெற்றி பெற்று, உடன் சிரியாவையும் கைப்பற்றினார்.
அஹ்மத் இப்ன் தூலூன் பாக்தாதில் பிறந்தவர். அப்பாஸிய கலீஃபா துருக்கி அடிமைகளை இராணுவத்திற்கு தேர்ந்தெடுத்ததில் தூலூனின் தந்தையும் ஒருவர். சமர்ராவிலிருந்த போது இராணுவப் பயிற்சியும், மதக் கல்வியும் கற்றுக் கொண்டார். அரண்மனை பாதுகாப்புப் படையிலிருந்த துருக்கிய தளபதி ஒருவரின் மகள் ஹதுனை தூலூன் மணந்து அப்பாஸ், ஃபாத்திமா என்ற இரு குழந்தைகளைப் பெற்றார். அஹ்மத் இப்ன் தூலூன் பைஸாந்தியர்களை எதிர்த்து டார்சஸ் என்ற இடத்தை வென்ற பிறகு, கலீஃபா மெய்யெஸ் என்ற வைப்பாட்டியைப் பரிசளித்தார். அவர் மூலம் குமாரவைய் என்ற மகனைப் பெற்றார். இவர் இறந்த பிறகு, இவர் மனைவியை துருக்கிய தளபதி பயிக் பெய் திருமணம் செய்து கொண்டார்.
பத்தாண்டுகளுக்கும் அதிகமாக மிகச் சிறந்த இராணுவத்துடன், திறமையான அதிகாரிகளையும் வைத்திருந்தார். தனக்குப் பிறகு மகன் குமாரவைய்யை ஆட்சிக்கு தயார் படுத்தினார். கலீஃபாவுக்கு கப்பம் செலுத்தாததால் அந்த பணத்தைக் கொண்டு, நல்ல திட்டங்களை செயல் படுத்தினார். கப்பல் படையை உண்டாக்கி அதன் மூலம் வாணிபத்தில் வருவாயைப் பெருக்கினார். ஜோர்டான் பள்ளத்தாக்கை கைப்பற்றி பைஸாந்தியர்களின் எல்லையிலுள்ள லெபனான் மலைப்பகுதி வரை முன்னேறினார். இதனால் அப்பாஸியர்கள் எகிப்தின் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுத்தார். எகிப்தின் கவர்னராக இருந்தபோது ஜபல் யஷ்குர் என்ற இடத்தில் இப்ன் தூலூன் மஸ்ஜித் ஒன்றைக் கட்டினார். நூஹ்(அலை) நபி அவர்களின் கப்பல் இங்கு தங்கியதாக அவ்வூர் மக்கள் சொல்கின்றனர். சுவற்றின் உட்புறமும், வெளிப்புறமும் இயற்கையாக உளு செய்வதற்காக நீரூற்று அமைத்தார். இதன் மினாரா கோபுரத்தின் படிகளில் ஒருவர் குதிரையுடன் ஏறலாம். 1177 ல் ஃபாத்திமிட்களின் வஸீர் பத்ர் அல் ஜமாலி இதை சீரமைத்தார். 1296 ல் சுல்தான் லஜீன் என்பவர் இந்த மஸ்ஜிதை சீரமைத்தார். பழைய தலைநகர் ஃபுஸ்தத்துக்கு பதிலாக அல் கட்டாயைத் தலைநகரமாக்கினார்.
தூலூத்களின் ஆட்சியில் அஹ்மத் இப்ன் தூலூனுக்குப் பிறகு அவர் மகன் குமாரவைய் ஆட்சிக்கு வந்து யூப்ரடீஸிலிருந்து நூபியா வரை நிலப்பரப்பைப் பெருக்கி னார். இவர் பதவிக்கு வந்தவுடன் கலீஃபா அல் முவஃப்ஃபக்கின் இராணுவத்தை சிரியாவில் எதிர் கொண்டார். உண்மையில் இவர்தான் தூலூத்களின் ஆட்சியை ஸ்திரப்படுத்தினார். 886 ல் கலீஃபா அல் முவஃப்ஃபக்கிடம் ஒப்பந்தம் போட்டு தூலூன்களின் ஆட்சியை எகிப்தில் உறுதி செய்து, அடுத்த 30 ஆண்டுகளுக்கு சிரியாவிலும் தங்கள் ஆட்சியை பாதுகாத்தார். மீண்டும் 892 ல் கலீஃபா முஃததிதுடன் பழைய ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டார். இவர் கட்டிய நீலக்கண் அரண்மனை மிகவும் புகழ் பெற்றது. பல அரண்மனைகளையும், தோட்டங்களையும் கட்டினார். ஒரே ஒரு முறை தவிர இவர் குதிரை ஏற்றம் செய்ததில்லை. குமாரவைஸ் தன் மகள் கத்ர் அல் நதாவை 892 ல் அப்பாஸிட் கலீஃபா அல் முஃததுக்கு மணமுடித்துக் கொடுத்தார். மணமகள் சீதனமாக அக்காலத்திலேயே மிகப்பெரிய தொகையாக 400,000 தீனார்களைக் கொடுத்தார். இவர் காலத்தில் தூலூன்களின் அரசுக் களஞ்சியத்தை 10 மில்லியன் தீனார்களுக்கு உயர்த்தினார். குமாரவைஸுக்குப் பிறகு, வந்த அவர் மகன் அபு இ அஷிர் (ஜைஷ்) திறமையற்று இருக்க, அவர் சகோதரர் ஹாரூன் ஆட்சிக்கு வந்தார். எட்டாண்டுகள் ஆண்ட அவர் அப்பாஸியர்கள் சிரியாவைக் கைப்பற்றி எகிப்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தருணத்தில் 904 ல் படுகொலை செய்யப்பட்டார். பிறகு, அவர் சிறிய தந்தை ஷய்பான் இப்ன் அஹ்மத் இப்ன் தூலூன் ஆட்சிக்கு வந்து அப்பாஸிய தளபதி முஹம்மது இப்ன் சுலைமானின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் இருந்தார். அத்துடன் தூலூன்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக