ஞாயிறு, 19 ஜூலை, 2015

மங்கோலியர்கள் வரலாறு 2

ஜெங்கிஸ்கானுக்கு ஹசர், ஹசியுன், தெமூஜி என்ற சகோதரர்களும், தெமூலீன் என்ற ஒரு சகோதரியும், பெக்தர், பெல்குதெய் என்று ஒன்றுவிட்ட சகோதரர்களும் இருந்தார்கள். இவரின் இளவயது மிகவும் கஷ்டமாக இருந்தது. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த இவர் தந்தை சிறுவயதிலேயே மணப்பெண் இருக்கும் கோங்கிரட் பழங்குடியினரிடம் வழக்கப்படி விட்டுவிடுகிறார். ஜெங்கிஸ்கான் அக்குழுத்தலைவர் டை செட்சென் என்பவருக்கு பணிவிடை செய்தார். இவர் மனைவி பெயர் போர்டி. இவர் தந்தை பழைய டடார் இனத்தவரின் பகையால் விஷம் வைத்து கொல்லப்பட்டார். அதனால் முறைப்படி தன் கூட்டத்திற்கு தானே தலைவன் என்று உரிமை கொண்டாடிய ஜெங்கிஸ்கானையும், அவர் தாயாரையும் கொடுமைகள் செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். தாயார் ஹொய்லூனுடன் மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஜெங்கிஸ்கானின் ஒன்று விட்ட வயதுக்கு வந்த மூத்த சகோதரர் (இவர்தான் குடும்பத்திற்கு உணவளிக்கும் பொறுப்பில் இருந்தார். இவர் ஹொய் லூனுக்கு பிறந்தவர் அல்ல) பெக்டருடன் தாயாருக்கு கணவர் போல் உறவாகி விடுகிறது. ஒரு வேட்டையின் போது ஜெங்கிஸ்கானும், சகோதரர் கசரும் சேர்ந்து பெக்டரைக் கொன்று விடுகிறார்கள். இடையில் தந்தையின் எதிரி தயிசியுத் என்பவன் ஜெங்கிஸ்கானை சிறைப்பிடித்து அடிமையாக விற்க ஏற்பாடு செய்கிறார். இவர் மீது இரக்கம் கொண்ட சிலாவுன் என்ற (இவர்தான் பின்னாளில் ஜெங்கிஸ்கானின் படையில் ஜெனரலாக இருந்தார்.) காவலன் இரவில் தப்பிக்க வைத்தார். அந்த தப்பித்தலுக்குப் பிறகு ஜெங்கிஸ்கானின் வாழ்க்கை வேகம் பிடித்தது. அவருடன் பின்னாளில் ஜெனரலாக இருந்த ஜெல்மி, போ ஒர்சு என்ற இருவர் கூட்டு சேர்ந்தனர். ஜெங்கிஸ்கான், எதிரி பழங்குடி இனத்தவருடன் சண்டை, அரசியல், கொள்ளை, கலவரம், ஊழல், பழிவாங்குதல் என்று பம்பரமாக சுழன்றார். இவர் தாயார் பழங்குடி இனக் கூட்டங்களின் அரசியல் கதைகளை அவ்வப் போது பாடம் போல் சொல்வார். ஜெங்கிஸ்கான் பெயரைக் கேட்டாலே சுற்று வட்டாரத்தில் அலர வைத்தார். இரக்கம் என்பதை குளியலுக்கு முன் உடை கழட்டுவது போல் கழட்டி விடுவார். ஒரு கூட்டத்தில் நுழைந்தால் கண்ணில் தென்படுபவர்கள் ஆண், பெண், குழந்தை என்று சரமாரியாக காரணமில்லாமல் வெட்டுவார். இந்த அதிர்ச்சியில் எதிரி திக்குமுக்காகி சரணடைந்து விடுவான். அதுவே அவர் ஆரம்ப பலமாக இருந்தது. ஜெங்கிஸ்கானுக்கு மனைவி போர்டேயின் மூலம் ஜோச்சி,சகடாய், ஓகிடாய், தோலூயி என்ற மகன்கள் பிறந்தார்கள்.
சரித்திரத்தில் எவருடைய ஆரம்பமும், முடிவும் ஜெங்கிஸ்கானுடையது போல் அல்ல. இவர் தோராயமாக 1167 ல் பிறந்தார். இவர் தங்களுடைய மூதாதையர்கள் போல் அதே இடத்தில் பிறந்தோம் வளர்ந்தோம் மரணித்தோம் என்று வாழ விரும்பவில்லை. வேற்றுமனிதர்கள் அறியாவண்ணம் நூற்றுக்கணக்கான மலைகளுக்கு பின் வாழ்ந்து கொண்டிருக்கும் தமது கூட்டம் உலகம் அறியப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் நாடோடி கூட்ட மக்களை தன் தலைமையின் கீழ் திரட்டி இரத்தம் இரத்தமாக போகுமிட மெல்லாம் சிதறடித்து முன்னேறினார். மங்கோலிய இனத்தில் குழந்தைப் பருவத்திலேயே மலையேறுவது, குதிரை விளையாட்டு போன்றவை கட்டாயமாகிப் போனது. பயம் என்றால் என்ன என்றே அறியாத ஒரு கூட்டம். கம்யூனிஸ சீனா மங்கோலிய சரித்திரத்தை காட்டுமிராண்டிகள் என்று வருணிக்கின்றன. இரத்தத்தாலேயே பசிபிக்கடலின் வழியைத் திறந்து ஐரோப்பாவில் நுழைந்தார். முதல் முதலில் ஸி ஸியா என்ற வட சீனப் பகுதியைக் கைப்பற்றினார். பின் சக்திவாய்ந்த கின் பேரரசைத் தாக்கினார். 1209 ல் வடக்கில் சீனா நோக்கி நகர்ந்து 1215 ல் பெய்ஜிங்க் நகரத்தைப் கைப்பற்றினார். 1219 ல் இவரின் வாழ்வின் அதிமுக்கிய திட்டமாகிய மேற்கை நோக்கி நகர்ந்தார். க்வாரஸெம் என்ற மாகாணத்தின் துருக்கி ஆட்சியாளர் இரண்டாம் முஹமது ஷா என்பவரை சரணடையச் சொல்லி தூது அனுப்பினார். சாதாரண பழங்குடிப் படையினர் மன்னரை சரணடையச் சொல்வதா? முஹமது ஷாவின் ஆட்கள் வந்த தூதுவரைக் கொன்று, மீதி ஆட்களை தலை மழித்து அவமானப்படுத்தி அனுப்பினர். வெகுண்டெழுந்த ஜெங்கிஸ்கான் போரில் குதித்தார். பலமான கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு, ஜெங்கிஸ்கான் வெற்றிபெற்றார். 1220 ல் சமர்கண்ட் மற்றும் புகாரா நகரங்களை கைப்பற்றினார். முஹமது ஷா கஸ்பியன் கடலின் ஏதோ ஒரு தீவில் மறைந்து இறந்து போனார். முஹமது ஷாவின் இராணுவத்திலிருந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான குதிரைப் படை வீரர்கள் மங்கோலியப் படையில் சேர்ந்தனர். அங்கிருந்து தெற்காக திசை திரும்பி இந்தியாவை நோக்கி வந்தார். ஆனால், இந்துஸ் ஆறுவரை வந்தவர் அறியப்படாத காரணத்தால் திரும்பி விட்டார். பின்னர் 1223 ல் கஸ்பியன் கடல் மற்றும் காகசஸ் மலைகளின் வாயிலாக படைகளுடன் பயணித்து க்ரீமியா மற்றும் தென் ரஷ்யா பகுதிகளில் கொள்ளையடித்தார். அலெக்ஸாண்டரின் மனோ தத்துவ ரீதியான போருக்கு முன்வரை ஜெங்கிஸ்கானின் வேகத்திற்கும், வெற்றிக்கும் இணையான வீரர் எவரும் இல்லை.
ஜெங்கிஸ்கானின் வெற்றிகள் இவரை உலகத்தின் முதல் மாவீரனாக சித்தரிப்பதில் அழுத்தமான உண்மைகள் பலவுள்ளன. நெப்போலியன், அலெக்ஸாண்டர் எல்லாம் வழக்கம் போல் மேற்கத்தியர்களால் மிக அளவுக்கதிமாக புகழப்பட்டவர்கள். அவர்களும் வீரர்கள்தான் சந்தேகமில்லை. ஆனால், ஜெங்கிஸ்கான் அளவுக்கு இல்லை. இவரது பலம் எந்த நகரத்தில் நுழைந்தாலும் நல்லது, கெட்டது என்று பாராமல் கண்மூடித்தனமாக கொன்று குவிப்பது, எரிப்பது என்று எதிரியை கதி கலங்க வைப்பார். முறையாக ஆட்சி செய்யும் மன்னர்களை இது நிலைகுலையச் செய்தது. ஜெங்கிஸ்கான் எந்த நவீன ஆயுதங்களும் பயன்படுத்தியதில்லை. இயற்கையான அப்பழுக்கற்ற வீரம் அது. பழங்குடியினராதலால் மலைகளில் சர்வ சாதாரணமாக குதிரை விளையாட்டு, ஒப்பற்ற வேகம், தப்பாத குறி இவையெல்லாம் தான் அவருக்கு வெற்றிகளைத் தேடித்தந்தன. இவருக்கு அமைந்த வீரர்களும் தனி சிறப்பு வாய்ந்தவர்கள். குதிரைவீரர்கள் சர்வசாதாரணமாக எந்தவிதமான பயணப் பாதையிலும் பயணித்து ஒரு நாளைக்கு 200 மைல் தூரத்துக்கு செய்தி கொண்டு செல்வார்கள். பருந்துகளும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டன. இவருக்கு அமைந்த வீரர்கள் இராஜவிசுவாசத்திற்கும், பயத்திற்கும் பணிந்தவர்கள். மிகவும் தந்திரமாகவும், உயர்தரத்திலும் தமது பழங்குடி மக்களுக்கு நகரங் களில் இருப்பிடம் அமைத்துக்கொடுத்தார். வீரர்கள் குதிரைகளில் விரைந்த வண்ணம் எறி ஈட்டிகளை எரிவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அந்தகால கட்டத்தில் ஆங்கில படைகள் 250 யார்டு தூரத்தில் எரிவதை மங்கோலிய வீரர்கள் 400 யார்டு தூரத்திற்கு குறி தப்பாமல் எரிவார்கள். உலகில் இந்த மங்கோலிய வீரர்களுக்கு இணையான வீரம் அப்போது எங்கும் காணப்படவில்லை என சரித்திரம் சொல்கிறது. முதலில் தோல்வியுற்றது போல் மலைகளுக்குப் பின்னால் திரும்பி ஓடுபவர்கள் மீண்டும் புயலைப்போல் பன்மடங்காக அம்பெய்த வண்ணம் வருவார்கள். அவர்கள் வந்தால் எதிரிப்படை இருந்த இடம் துடைத்தெறியப்பட்டது போல் இருக்குமாம். போர் புரிவதை காதலித்துச் செய்தார்களாம்.
இவர்கள் பெரும்பாலும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு பல மாதங்கள் சண்டை செய்ய செல்வதால் போகுமிடமெல்லாம் உணவுக்கும், உடமைக்கும் கொள்ளையடித்துக் கொண்டே செல்வார்கள். வெற்றி இல்லை என்றால் உணவில்லை அதனாலேயே மிகவும் கொடூரமாக போரிடுவார்கள். இவர்களின் காட்டுமிராண்டித் தனமான பழங்குடி பழக்கவழக்க போர்முறை, முரட்டுத்தனம், உளவுபார்க்கும் நூதனம் இவையெல்லாம் மிகவும் புதுமையாக இருந்தது அப்போது. இவரிடம் இருந்த ‘ஜெபி’ என்ற இராணுவ கமாண்டர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரை “தி ஏரோ” என்றும் புகழுரைத்தார்கள். ஜெங்கிஸ்கான் தன்னுடன் தைரியமாக போரிட்டு தோற்கும் எதிரியை மன்னித்து மங்கோலியப் படையில் சேர்த்துக் கொள்வார். ஆனால், தங்கள் பழங்குடியினரை அவமதிப்பவர்களையும், துரோகிகளையும் மன்னிக்காமல் உடனே தண்டனை கொடுப்பார். தான் செல்லும் நகரங்களை முன்னா லேயே உளவாளிகளை வைத்துக் கண்காணிப்பார். அவர்களுக்கு தேவைப்பட்ட பொருள்களை லஞ்சமாகக் கொடுப்பார். மங்கோலியர்கள் ஒரு இடத்தில் கால் வைத்தால் அது 100% வெற்றியாக வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். எதிரி க்கு நேரடியாக இரண்டே வாய்ப்புதான் கொடுப்பார். ஒன்று தன்னுடன் போரிட வேண்டும் அல்லது சரணடைந்து விடவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக