ஞாயிறு, 19 ஜூலை, 2015

மங்கோலியர்கள் வரலாறு 6

ஒட்டு மொத்த உலகுக்கும் மங்கோலியர்கள் என்றாலே கொடுமையாளர்கள் என்ற எண்ணம் தான் வரும். சிலைகளையும், நட்சத்திரங்களையும் வணங்கியவர்கள். மஞ்சள் நிறத்தவராக அறியப்பட்ட இவர்கள் மிருகங்களுக்கு காணிக்கை செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால் வியப்பு அல்லாஹ் இந்த சந்ததியினருக்கு இஸ்லாமில் நுழையும் வாய்ப்பை அருளினான். அடுத்த ஐம்பது ஆண்டுகளில் பெரும்பாலான மங்கோலியர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாத்திற்காக பல நன்மைகளைச் செய்தார்கள். இவர்களால் அழிக்கப்பட்ட கலாச்சாரம், பண்பாடுகள் முஸ்லீம் பிரதேசம் மட்டும் அல்லாது மங்கோலியா வரை வளர்க்கப்பட்டது. தங்கள் கரங்களால் சேதப்படுத்தியதை தாங்களே புணரமைத்தார்கள்.
1259 ல் ஹுலகுவால் அலிப்போ மற்றும் டமாஸ்கஸ் நகரம் கைப்பற்றப்பட்டது. இதனால் தென்கடற்கரைப் பகுதியில் எகிப்தின் வழி அவர்களுக்கு திறக்கப்பட்டது. 1260 ல் எகிப்தின் மம்லுக் சுல்தானின் ஜெனரல் ஒருவரால் பைபர்களால் நாஸரெத் நகரத்திற்கருகில் அய்ன் ஜாலூத் என்ற இடத்தில் எதிர்கொள்ளப்பட்டது. மிகக்கடுமையான உலகப்போர்களில் ஒன்றான இதில் பைபர்கள் மங்கோலியர்களை வென்றார்கள். மங்கோலியர்கள் அய்ன் ஜாலூத்தில் மம்லூக் என்னும் சாதாரண அடிமைப்படைகளிடம் தோற்றார்கள். பைபர் என்னும் எகிப்தின் இரா ணுவக் கமாண்டரை சில ஆண்டுகளுக்கு முன் தான் மங்கோலியர்கள் கைது செய்து அடிமைச் சந்தையில் விற்றிருந்தார்கள். அவர் தன் திறமையால் எகிப்து இராணுவத்தில் உயர்பதவியில் இருந்து இன்று அதே மங்கோலியர்களை எதிர்த்தார். 50 ஆண்டுகளான போர்களில் முதல் முறையாக ஜெங்கிஸ்கானின் வம்சம் தோல்வியுற்றது. அய்ன் ஜாலூத் தோல்வி மங்கோலியர்களின் அதிகாரத்தை மேலும் வளரவிடாமல் தடுத்தது. பாலஸ்தீனமும், சிரியாவும் எகிப்தின் மம்லூக்குக ளின் பேரரசுடனே இருக்கவும், மெஸோபோடாமியாவும், பெர்ஷியாவும் மங்கோலிய பேரரசுடன் இருந்தது.
அய்ன் ஜாலூத் தோல்விக்குப் பிறகு, ஹுலகுவும், அவர் சந்ததியினரும் கருங்கடலின் கிழக்கே வாணிப வழியான தப்ரிஸ் என்ற இடத்தை தலைநகராக்கிக் கொண்டார்கள். ஹுலகு மம்லூக்குகளிடமிருந்து சிரியாவையும், பாலஸ்தீனத்தையும் கைப்பற்ற எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், பேரரசின் மேற்கு எல்லையாக யூப்ரடிஸ் நதிக்கு மேல் முன்னேற முடியவில்லை. மேலும் தீவிர இஸ்லாமியராக இருந்த படுகானின் சகோதரர் பெர்கிகான், ஹுலகு பாக்தாதின் மீது காட்டிய கொடுமை பொறுக்க முடியாமல் மம்லூக்குகளுடன் இணைந்து ஹுலகுவின் பகுதிகளில் கலவரம் செய்தார். கிழக்கில் இந்துஸும், அமுதர்யா விலிருந்து கீழ் வடக்கில் இந்தியப் பெருங்கடல் வரை கான்களின் பேரரசு இருந்தது. ஹுலகுகான் மரணமடைந்து ஷஹி தீவில் அடக்கம் செய்யப்பட்டார். தார். பெர்ஷியாவில் சிறிய ஆட்சியாளர்களின் வெற்றியாலும், மத்திய ஆசியாவின் மலைப்பகுதியிலிருந்து கிளம்பிய இன்னொரு கூட்டத்தினரின் வருகையாலும், ஜெங்கிஸ்கான் என்னும் தனி மனிதனின் சந்ததி முடிவுக்கு வந்தது. சீனாவிலும் 1368 ல் யூவன் பேரரசு முடிவுக்கு வந்து மிங்க் ஆட்சி துவங்கியது. 1383 ல் தைமூரியர்கள் வடக்கு பெர்ஷியாவில் நுழைந்தனர். ரஷ்யாவிலும் அடுத்த கால்நூற்றாண்டுகளில் தங்க நாடோடிகளின் ஆட்சி சரிவை நோக்கி நகர்ந்தது. 1380 ல் மாஸ்கோவின் இளவரசர் குலிகோவோ என்ற இடத்தில் தோற்கடித்தனர். 1395 ல் தைமூரியர்கள் சராய் பெர்கே நகரை அழித்தனர். ரஷ்ய சரித்திரத்தில் டடார்கள் என மங்கோலியர்கள் அழைக்கப்பட்டனர். ரஷ்யாவின் அதிகாரத்தில் போட்டியிட்ட ஒரே இனம் மங்கோலிய இனம் மட்டுமே. மங்கோலியாவின் உலான்பாடர் நகரில் உள்ள ஜெங்கிஸ்கானின் குதிரையில் வீற்றிருப்பது போன்ற சிலை மிகவும் உயரமானது. கீழிருந்து இயந்திரத்தில் (லிப்ட்) சென்று பின்பு கழுத்துப் பகுதியிலிருந்து ஏணியில் செல்ல வேண்டும்.
சரித்திரத்தில் மிக குறுகிய காலத்தில் பிரமாண்ட வெற்றி பெற்று வெகு விரைவில் அதிகாரம் இழந்தது மங்கோலியர்கள் தான். மங்கோலியர்களின் வெற்றி இணையற்ற திறமையால் பெற்றது. ஜெங்கிஸ்கானின் கல்வியறிவில்லாத காலத்திலிருந்து வந்த இவர்கள் பின்னாளில் துருக்கியர்களின் எழுத்தை பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பழக்கப்படுத்திக் கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட மதமும் ஷாமானிஸம் (ஷாமானிஸக் கொள்கையானது இயற்கையை வணங்குவதாகும்) என்ற கொள்கையைக் கொண்டது. மங்கோலியர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கருதுவது அவர்கள் ஒரு தொடர்ச்சியாக இல்லாமல் க்ரேட் கானால் மூன்று பகுதிகளுக்கு திசை மாறி வெற்றி கொண்டதே என்பதாகும். சீனாவில் அவர்கள் திபெத்துடன் பலமான உறவு வைத்திருந்த காரணத்தால் புத்தமதத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்குஆசியாவில் அவர்கள் வெற்றி கொண்ட பகுதிகள் முஸ்லீம் கலீஃபாக்கள், லத்தீன் ஜெருசலம் மற்றும் பைஸாந்திய பேரரசின் எல்லைகளை ஒட்டி இருந்ததால் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்திருக்க வேண்டியதாகி இருந்தது. 1255 ல் பெர்கே தான் முதலில் இஸ்லாத்தைத் தழுவினார். அடுத்த மூன்று ஆண்டுகளில் 1258 ல் ஹுலகு (இவர் மனைவி நெஸ்டோரியன் கிறிஸ்தவர்) பாக்தாதை அழித்து (இஸ்லாமிய உலகுக்கு இன்றுவரை ஈடு செய்யவே முடியாத ஒரு இழப்பு) இஸ்லாமிய கலீஃபாவைக் கொன்றார்.
இந்துகுஷ் மலைப்பகுதியில், ஏறக்குறைய உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் ஜெங்கிஸ்கானின் மகன் சகாடையின் வழிமுறையில் வந்தவர்கள் ஆண்டு வந்தனர். நாளடைவில் அவர்களுக்குள்ளேயே மாகாணங்களை ஆள்வதில் சண்டையிட்டுக் கொண்டார்கள். சிறு ஆட்சியாளர்களும் சண்டையில் சேர்ந்து கொண்டார்கள். இவர்களை சகாடைய் துருக்கி என்றே அழைத்தார்கள். குப்ளாய்கான் சீனாவிலிருந்து திரும்பிய பிறகு, சீனாவில் மிங்க் பேரரசு ஆட்சி செய்து வந்தது. யூவான் பேரரசு சீனாவில் தூக்கி எறியப்பட்ட பிறகு, குப்ளாய்கான் மிங்க் பேரரசுடன் போரிட்டார். 1380 ல் மிங்க் இராணுவம் மங்கோலியர்களின் கரகோரம் நகரை சேதப்படுத்தியது. ஆனால், மங்கோலியர்கள் விடாமல் தங்களின் பிறப்பிலேயே அமைந்த புராதன தாக்குதல் முறையில் தொடர்ந்து சீனாவின் எல்லைகளை தாக்கிக் கொண்டிருந்தார்கள். குப்ளாய்கான் சீன பாரம் பரியத்திலான அரண்மனையிலேயே தங்கி இருப்பதை விரும்பினார். இதனூடே சீனாவில் திபெத்தியர்களுடனும், மன்சூஸ்களுடனும் மங்கோலியர்கள் நல்ல உறவைப் பேணி வந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் தலாய்லாமாவுடன் இருந்த நெருக்கமான உறவால் மங்கோலிய பழங்குடிகள் புத்தமதத்தை தழுவினார்கள். குப்ளாய்கான் ஜெங்கிஸ்கான் பரம்பரையிலேயே சற்று வித்தியாசமாக இருந்தார். கலை ரசிகராகவும், நிர்வாகத் திறமை வாய்ந்தவராகவும் இருந்தார். நிறைய சீன கலாச்சாரமுள்ள கட்டிடங்களை நிர்மாணித்தார். சீன நாட்காட்டியை பயன்படுத்தினார். முஸ்லீம், கிறிஸ்தவ, சீன, லத்தீன் போன்ற பல மத தலைவர்களை அரண்மனைக்கு வரவழைத்தார்.
90 ஆண்டுகால மங்கோலிய சீன ஆட்சியில் பல நன்மைகள் விளைந்தாலும், நாட் டுக்குள்ளேயே உள்நாட்டு குழப்பங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. புத்த மதக் கோட்பாடு இரத்தம் சிந்துவதற்கு எதிராக இருந்ததால் மங்கோலியர்களுக்கு போரிடுவதில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டது. இராணுவத்திலும் முறை கேடுகள் நடந்தன. ஜப்பான், வியட்நாம் மற்றும் ஜாவா தீவுகளுக்கு அனுப்பப்பட்ட மங்கோலிய இராணுவம் தோல்விகண்டு திரும்பின. குப்ளாய்கானின் மனைவி சாபியின் மரணமும், அடுத்த ஐந்தாம் ஆண்டில் அவர் மகன் மரணமும் அவரை நிலை குலைய செய்தன. தன் ராஜகம்பீரமான வாழ்க்கை தரத்தை வெறுக்க ஆரம்பித்தார். நாட்டில் ஊழல் தலை தூக்க ஆரம்பித்தது. நாட்டின் நடைமுறை செலவுகளுக்கு வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயமாகியது. மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. சமாளிக்க முடியாமல் மங்கோலிய குடும்பங்கள் மத்திய ஆசியாவை நோக்கி சென்றன. நாட்டில் அமைதி ஏற்படவேண்டி மக்களிடையே மிகவும் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த ஜு யூவான்ஸ்ங்க் என்பவர் தலைமையேற்று மிங்க் பேரரசை நிறுவி மூன்று நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டார்.
பதினாறாம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் கிழக்குப்பகுதி மன்சூஸ்கள் சற்று பலம் பெற்றார்கள். இதனால் அந்த பகுதி மங்கோலியர்கள் மன்சூஸ்களின் பிரதேச மக்களாகிப் போனார்கள். அவர்கள் இரு பிரிவுகளுக்குள்ளும் திருமண உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு நட்பாகிப் போயினர். 1644 ல் மன்சூஸ்கள் மிங்க் பேரரசை எதிர்த்து போரிட்டு கிங்க் பேரரசு என்ற ஒன்றை புதியதாக உருவாக்கினார்கள். அந்த பகுதி மங்கோலிய மக்கள் சீனாவாசிகளாகவே ஆகிப்போனார்கள். 1691 வரை வெகு தொலைவில் இருந்த சில மங்கோலியர்கள் மட்டும் சீனப் பேரரசிலேயே வெளி மங்கோலியர்களாய் இருந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டுகளில் மன்சூஸ் பேரரசுடன் இருந்த மங்கோலியர்கள் 1912 ல் மன்சூஸ் பேரரசு வீழ்ந்து சீனா விடுதலை (ரிபப்ளிக் ஆஃப் சீனா) அடைந்ததில் சீன மக்கள் ஆகினார்கள்.
சீனாவின் வெளிப்புறத்தில் இருந்த மங்கோலியர்கள் சீனாவால் முற்றிலும் கை விடப்பட்டு தனியாகிப் போனார்கள். 1912 ல் ரஷ்யாவின் உதவியால் வெளி மங்கோலியர்கள் சீனா, ரஷ்யா என்ற இரு சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையில் தனியாக செயல்பட்டு வந்தது. இது அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. இறுதியில் 1946 ல் மங்கோலியா சுதந்திர நாடாக அங்கீகாரம் பெற்றது. (மங்கோலியன் பீப்பிள்ஸ் ரிபப்ளிக்) சர்வதேச நாடுகளின் ஐக்கிய நாட்டு சபை 1961 ல் அங்கீகாரம் அளித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக