வெள்ளி, 17 ஜூலை, 2015

அலாஒயிட்டுகள் வரலாறு 1

அலாஓயிட் ஆட்சிவம்சம் 

கூ.செ. செய்யது முஹமது
சாதியன் பேரரசில் இறுதி சுல்தானாக மொரோக்கோவில் அஹ்மத் அல் மன்சூர் என்பவர் இருந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு, அரச குடும்பத்தினரின் குழப்பத்தினால் அலாஓயிட் ஆட்சிவம்சம் என்ற புதிய பெயரில் ஸாவியா போரில் வெற்றி பெற்று முலாய் அல் ராஷித் என்பவரின் ஆட்சி மொரோக்கோவில் ஏற்பட்டது. இந்த ஆட்சியை அலவிட் ஆட்சிவம்சம் என்றும் அழைக்கலாம். இவர்கள் அலி இப்ன் அல்தாலிப்(ரலி), ஃபாத்திமா அஸ் ஸஹரா(ரலி) அவர்களின் வாரிசு முஹம்மது என்பவரின் வழிமுறையில் வந்தவர்கள். 13 ம் நூற்றாண்டில் ஹிஜாஸ் மாகாணத்தில் யான்பு நகரத்திலிருந்து அல் ஹஸ்ஸன் அத்தாகில் என்பவரை மொரோக்கோவைச் சேர்ந்த ஒரு இமாம் (மதகுரு) தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்வதால் அவரின் துவா (பிரார்தனை) வினினால் தங்கள் பேரீச்சைத் தோட்டத்திற்கு பரக்கத் (வளமை) வரலாம் என்று அழைத்து வந்தார். அத்தாகிலின் சந்ததி படிப்படியாகப் பெருகி 16 ம் நூற்றாண்டில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஷரீஃப் இப்ன் அலி என்பவர் சாதியன் பேரரசின் பலவீனத்தைப் பயன்படுத்தி ‘டஃபிலல்ட்’ பகுதியில் இளவரசரானார். இவர் தான் அலவிட் ஆட்சிவம்சம் அமைய தூண்டுகோலாக இருந்தார். இவரின் 15 மகன்களில் மூத்த மகனான முஹம்மது இப்ன் ஷரீஃபை 1536 ல் டஃபிலல்டுக்கு ஆட்சியாளராக்கினார். முஹம்மது இப்ன் ஷரீஃபிற்கு பிறகு அவர் சகோதரர் முலாய் அல் ராஷித் 1664 ல் ஆட்சிக்கு வந்து சிறிய இராணுவத்தின் மூலம் கிழக்கு மொரோக்கோவில் ஆதிக்கம் பெற்றார். அடுத்து டஸா என்ற பகுதியையும் வென்றார். 1666 ல் ஃபெஸ் மாகாணத்தை ஆட்சி செய்த பெர்பெர்களின் வழிவந்த ஸ்வோய்யா என்பவரை மொரோஸாவியா போரில் வெற்றி பெற்று வட மொரோக்கோவின் மொத்த அதிகாரத்தையும் பெற்றார். இவர் தனது குதிரையில் இருந்து தவறி விழுந்து மர்ராகெச்சில் 1672 ல் 26 வயதில் இறந்து போனார். இவருக்குப் பிறகு இவரின் ஒன்று விட்ட சகோதரர் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஆட்சிக்கு வந்தார்.
இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஆட்சிக்கு வந்தவுடன் உள்நாட்டு பழங்குடியினரால் அடிக்கடி சண்டை நடந்தது. மர்ராகெஷிலிருந்து மாற்றி மெக்னஸ் என்ற நகரத்தை தலைநகராக உருவாக்கினார். இது மொரோக்கோவின் மூன்றாவது பெரிய நகரமாகும். ஏறக்குறைய ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள் 9 ம் நூற்றாண்டில் தென் துனீஷியாவில் வாழ்ந்த மிக்னஸா என்ற பெர்பெர் பழங்குடியினரின் நினைவாக மெக்னஸ் என்று பெயர் வைத்தார். 11 ம் நூற்றாண்டில் அல்மொராவிட்கள் ஆட்சியின்போது இங்கொரு கோட்டை இருந்தது. பின் அல்மொஹத் என்பவர்களால் ஒரு பெரிய மஸ்ஜித் கட்டுவதற்காக அது இடிக்கப்பட்டது. பின்னால் வந்த மெரினித்கள் ஒரு மதரஸாவையும் கட்டினார்கள். இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் கடலில் பிடிக்கப்படும் கிறிஸ்தவ மாலுமிகளை அடைத்து வைக்க இங்கு பெரிய சிறைச்சாலையும், மாளிகைகளும், தோட்டங்களும், நினைவு கதவுகளையும், மஸ்ஜித்களையும் கட்டினார். இந்நகரம் “சிட்டி ஆஃப் ஹன்ரட் மினாரட்ஸ்” என்று அழைக்கப்பட்டது. 40 கி.மீ நீளத்தில் மிகப்பெரிய சுவரையும் நகரைச் சுற்றிக் கட்டினார். இச்சுவரால் 2000 ஆம் ஆண்டு மெக்னஸ் நகரில் மழை பெய்தால் வெளியேறாமல், வடிவு நீர்க்குழாய்கள் அமைப்பதும் சிரமமாக இருந்தது.
இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் கொடூரத்தன்மையால் ‘இரத்த தாகம் எடுத்தவர் என்று சொல்லப்பட்டார். இவர் மெக்னஸில் கட்டிய சுவரில் எதிரிகளின் 10,000 தலையால் அழகுபடுத்தப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. இவரது ஆட்சியில் சரியாக வேலை செய்யாத பணியாட்கள், அரண்மனை வேலையாட்கள், எதிரிகள் என்று தோராயமாக 30,000 பேர் வரை கொன்றார் என்று சொல்கிறார்கள். 1682 ல் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் ஃப்ரான்ஸின் மன்னரான 18 ம் லூயிஸிடம் முஹம்மது டெனிம் என்பவரை தூதுவராக அனுப்பினார். ஃப்ரான்சுடன் நல்லுறவைப் பேண லூயிஸின் அழகான மகள் மேரி அன்னி டி போர்டனை மணந்து கொள்ளவும் விரும்பினார். ஆனால், போர்டன் அதை மறுத்துவிட்டாள். 1679, 1682, 1695,1695 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து ஓட்டோமான்களுடன் போரி ட்டு மொரோக்கோவின் சுதந்திரத்தை அலாவிட்டுகளுக்கு உறுதி செய்தார். இதனால் இன்றும் மொரோ க்கோவின் சரித்திரத்தில் இவருக்கொரு பெயருண்டு.  ஐரோப்பியர்கள் நிறைய துறைமுகங்களை ஆக் கிரமித்து வைத்திருந்தார்கள். 1681 ல் ஸ்பெயினிடமிருந்து அல் மமூராஹ், 1684 ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து டான்ஜியர், 1689 ல் மீண்டும் ஸ்பெயினிடமிருந்து லராச்சி ஆகிய துறைமுகங்களை மீட்டார். ஸ்பெயினின் எதிரியாய் இருந்த ஃப்ரான்சின் 
18 ம் லூயிசின் நட்புறவால் பல உதவிகள் பெற்றார். ஃப்ரான்ஸ் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் இராணுவத்திற்கு பயிற்சியும் கொடுத்து, அரசு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று ஒழுங்குமுறைகளையும் சொல்லிக் கொடுத்தது. பல ஐரோப்பிய கடல் கொள்ளையர்களையும், அடிமைகளையும் பிடித்து வைத்திருந்த இவர் தலைநகர் மெக்னஸை உருவாக்க அவர்களைப் பயன்படுத்திக் கொண்டும், ஐரோப்பியர்களுடனான போர்களில் அவர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தியும், அவர்களை விடுதலை செய்ய பெரிய பணயத் தொகைகளையும் பெற்றார். ஏறக்குறைய 150,000 துணை சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் இவரின் ‘கரும் பாதுகாப்புப்படை’ யில் இருந்தார்கள். இவர் இறக்கும் போது அப்படை பலமடங்கு பெரியதாக மாறி மொரோக்கோவின் சரித்திரத்தில் இடம் பெற்றது.
நம்பித்தான் ஆகவேண்டும் இவருக்கு 867 குழந்தைகள் பிறந்தனர். அதில் 525 ஆண் குழந்தைகளும், 342 பெண் குழந்தைகளும் ஆவார்கள். 1721 ல் இவரது 700 வது குழந்தை பிறந்தது. இப்பிறப்புகள் எந்த ஒரு தனி மனிதனுக்கும் இல்லாமல் ஆதாரத்துடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1727 ல் தனது 80 வது வயதில் இஸ்மாயில் இப்ன் ஷரீஃப் இறந்து போனார். இவர் இறப்பிற்கு பிறகு எண்ணற்ற மகன்களால் ஆட்சிக்கு பெரும் குழப்பம் நிலவியது. மேலும் நல்ல உறவு இல்லாத பெர்பெர் மற்றும் அரபு பிதோயின் பழங்குடியினர்களாலும் பல புரட்சிகளும், சண்டைகளும் நடந்தது. 1755 ல் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தில் மெக்னஸ் நகரின் அரண்மனை சுவர் பெரிதும் பாதிக்கப்பட்டது. இஸ்மாயில் இப்ன் ஷரீஃபுக்குப் பிறகு, சில மாதங்களே ஒன்று விட்ட சகோதரர் அஹ்மெத் எத் தெஹிபி 1727 ல் ஆண்டார். மதுப்பழக்கம் இருந்ததாலும், ஆட்சியாளும் சரியான தகுதி இல்லாததாலும் இவரின் சொந்த மனைவியே புரட்சிக்குத் தூண்டி இவரை ஆட்சியை விட்டு துரத்தினார். உடனே பல பிரச்சினைகளின் பின்ணனியில் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் மகன் அபுல் அப்பாஸ் அஹமத் ஆட்சிக்கு வந்தார். ஒரே ஒரு ஆண்டு மட்டும் ஆட்சி செய்தார். உடனே இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் பிரபலமான மகன் அப்தல் மாலிக் என்பவர் ஆட்சியைப் பிடித்தார். இவரை வாய்மொழியாக தந்தை ஆட்சிக்குப் பரிந்துரைத்திருந்தார். இவர் செய்த தவறு சகோதரரைத் தப்பிக்க விட்டது. அதற்குக் காரணமாக கரும்பாதுகாப்புப்படையை குற்றம் சாட்டினார்.
இதனால் கரும்பாதுகாப்புப்படை கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அப்தல் மாலிக்குக்கு ஒத்துழைக்காமல் அஹ்மெத் எத் தெஹிபுக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்தார்கள். இதனால் மீண்டும் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்தது. அதிகமான ரத்தம் சிந்தப்பட்ட பிறகு, சகோதரர்கள் இருவருக்கும் இடையில் சமாதானத்திற்கு ஒப்புக் கொண்டார்கள். மொரோக்கோவை இரண்டாகப் பிரித்து அஹ்மெத் எத் தெஹிபி மெக்னெஸ் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு ஆட்சியும், ஃபெஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு அப்தல் மாலிக் ஒரு ஆட்சியும் ஆள்வதாக ஒப்புக் கொண்டார்கள். இதன் சாராம்சம் சரியாக இல்லாததால், சகோதரருடன் நேரில் சந்தித்துப் பேச அழைத்தார். ஆனால் பின்ணனியில் அவரைக் கொல்ல அப்தல் மாலிக் திட்டமிட்டிருந்தார். ஆனால் திட்டம் தோல்வி அடைந்ததால் ரகசிய படையால் பிடிக்கப்பட்டு தனிச் சிறையில் அடைக்கப்பட்டு, பல வாரங்கள் கழித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த தருணத்தைப் பயன்படுத்தி தப்பிப்போன அபுல் அப்பாஸ் அஹமது மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். முன்பு போலவே சில மாதங்களே ஆண்ட இவரை புரட்சியின் மூலம் சுல்தான் இஸ்மாயில் இப்ன் ஷரீஃபின் இன்னொரு மகன் அபு அப்பாஸ் அப்துல்லாஹ் ஆட்சிக்கு வந்தார். இவரை ஒரே முறையாக ஆட்சி செய்யவிடாமல் அவரது சகோதரர்கள் புரட்சியின் மூலம் கவிழ்த்தார்கள். இவர் 1729-1734, 1736, 1740-1741, 1741-1742, 1743-1747 மற்றும் 1748-1757 வரை விட்டு விட்டு ஆண்டார். தார் இட்டிபிபாக் என்ற இடத்தில் நவம்பர் 1757 ல் இறந்து போனார். இடைப் பட்ட காலங்களில் 1734-1736 ல் அலி என்பவரும், 1736-1738 வரை இரண்டாம் முஹம்மதுவும், 1738-1740, 1742-1743, 1747-1748 வரை மூன்று முறை அல் மொஸ்தாடியும், 1741 ல் சில மாதம் ஸின் அல் அபிதினும் நிலையற்று ஆட்சி செய்தார்கள். அந்தளவுக்கு சகோதரர்கள் புரட்சியின் மூலம் அடித்துக் கொண்டார்கள்.
1757 ல் அபு அப்பாஸ் அப்துல்லாஹ் இறந்த பிறகு, 1745 லிருந்து 1748 வரை ஆண்ட நான்காம் அப்துல்லாஹ் என்பவரின் மகன் முஹம்மது பென் அப்துல்லாஹ் ஆட்சிக்கு வந்தார். இவரை மூன்றாம் முஹம்மது என்றும் அழைப்பார்கள். இவர் வந்த பிறகு, இராணுவம், நிர்வாகம் அனைத்தையும் உடனடியாக மாற்றினார். மத்தியிலிருந்து அனைத்துப்பகுதியிலும் ஆள்வதற்கு பதில் அங்கங்குள்ள பழங்குடி மக்களை அவர்களையே நிர்வகிக்கச் செய்தார். இவர் இதற்கு முன்பு மர்ரகெஷில் கவர்னராக இருந்தார். பலருடன் அதிகமாக அமைதி ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். ஐரோப்பியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, கடற்கொள்ளையர்களைத் தடுத்தார். மூன்றாம் முஹம்மது கவனிக்கப் படாமல் இருந்த எஸ்ஸஓயிரா நகரத்திற்கு புத்துயிர் அளித்தார். இந் நகரம் மேற்கு மொரோக்கோவில் அட்லாண்டிக் கடலின் கரையில் இருந்தது. மர்ரகெஷுக்கும், டென்சி ஃப்ட் அல் ஹஊஸ் நகரங்களுக்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டித்தந்தது. மொரோக்கோவின் சிறந்த துறைமுகமாக வேகமாக வீசும் கடல் காற்றைத் தடுக்கும் வண்ணம் அமைதியாக இருந்தது. எஸ்ஸா ஓயிரா நகரம் சரித்திரகாலத்திற்கு முற்பட்ட புராதன நகரம். புராதன பொருட்கள் பல ஆராய்ச்சியாளர்களால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிடி மொக்தூல் என்ற ஒரு இஸ்லாமிய ஞானியின் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டதால் மொகடார் என்றும் இந்நகரம் அழைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக