வெள்ளி, 17 ஜூலை, 2015

அலாஒயிட்டுகள் வரலாறு 2

சுல்தான் மூன்றாம் முஹம்மது இந்நகரை சீரமைத்ததால்  அவர் எதிரிகளுக்கு வாணிபத்திற்குப் பயன்பட்ட அக்தீர் பகுதி தடைபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கட்டாயமாக எஸ்ஸஓயிரா நகரத்திற்கு குடியேறினார்கள். 12 ஆண்டுகள் மூன்றாம் முஹம்மது ஃப்ரான்சின் தலைமை பொறியாளர் தியோடர் கோர்னட் தலைமையில் ஐரோப்பிய பணியாட்களை வைத்து நவீன நகரமாக கோட்டையுடன் இதை வடிவமைத்தார். மிகவும் அழகாகத் தோன்றிய இந்நகரம் மொகடார் என்பதிலிருந்து மாறி “எஸ்-ஸஓயிரா” (அழகாக வடிவமைக்கப்பட்டது.) இந்நகரின் கஸ்பாஹ் பகுதியில் சுல்தான் குடும்பத்தினர் தங்க இருப்பிடம். ஐரோப்பியர்கள் தங்க தனி இடம், கிறிஸ்தவ மற்றும் கடல் வணிகர்கள் தங்க தனி இடங்களைக் கட்டினார். துறைமுகத்தின் அழகிய நுழைவாயில் அஹ்மத் எல் இங்கிலீஸி என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கச் செய்தார். 19 ம் நூற்றாண்டு வரை மொரோக்கோவின் முக்கிய துறைமுகமாக விளங்கி, இங்கிருந்து வாகனங்களில் பல நகரங்களுக்கு தினசரி பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. மொரோக்கோவின் பல பகுதிகளில் வசித்த யூதர்களை மூன்றாம் முஹம்மது இந்நகரத்திற்கு வந்து தங்கி ஐரோப்பியர்களுடன் வாணிபம் செய்ய வேண்டினார் அதனால் அங்கு பல யூத மடங்களும், கல்லறைகளும் உள்ளன. மூன்றாம் முஹம்மது ஃப்ரான்சுகளிடமிருந்து லராச்சி, போர்ச்சுகீசியர்களிடமிருந்து மஸகன் ஆகியவற்றைக் கைப்பற்றினார். இவரது ஆட்சியில் அமெரிக்காவால் முதல் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. 1789 ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் தங்கள் கப்பல்களை மொரோக்கோ துறைமுகங்களில் நிறுத்த அனுமதி கோரினார்.
மூன்றாம் முஹம்மதுவுக்குப் பின் அவர் மகன் யஸீத் 1790-1792 வரை ஆட்சி செய்தார். அதிக லாபம் ஈட்டி வந்த யூதர்கள் தனக்கு பொருளாதார உதவிகள் செய்யாததால் அவர்கள் அதிகமாக வாணிபம் செய்து வந்த டீடோவன் நகரத்தில் பல தொந்திரவுகள் செய்தார். தனது கரும்பாதுகாப்புபடைகளைப் பயன்படுத்தி அடிக்கடி அந்நகரை கொள்ளை அடிக்கச் செய்தார். இவருக்குப் பிறகு, மூன்றாம் முஹம்மதுவின் ஐந்து மகன்களில் இன்னொருவரான முலாய் ஸ்லிமானி என்பவர் 1792 ல் அலவுட்களின் மொரோக்கோ சுல்தான் ஆனார். நிறைய உள்நாட்டுப் புரட்சிகளை எதிர் கொண்டு மொரோக்கோவை நிலைப்படுத்தினார். 30 ஆண்டுகள் ஆட்சி செய்த இவரது காலத்தில் மொரோக்கோ பெரும் வளர்ச்சியை எட்டியது. வெகுகாலமாக மொரோக்கோவின் கடற்பகுதிகளில் நடமாடிக் கொண்டிருந்த கடற்கொள்ளையர்களை முற்றிலும் கட்டுப்படுத்தினார். நீண்ட காலமாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் பல குழப்பங்கள் நிலவியதால் ஐரோப்பிய வணிகத்தை நிறுத்தி வைத்தார். ஆனாலும் சுல்தான் முலாய் ஸ்லிமானி அமெரிக்காவுடன் நட்புறவில் இருந்தார். நல்ல எழுத்தாளராகவும் இருந்த முலாய் ஸ்லிமானி இனாயத் உலா லி அல் மஜ்த், ஹவாஷி அலா ஷர் அல் கர்ஷி, தகயித் ஃபீ ஹுக்ம் அல் கினா மற்றும் ரிசாலா ஃபீ ஹுக்ம் அல் கினா ஆகிய புத்தகங்களையும், எண்ணற்ற கடிதங்களையும் எழுதி உள்ளார்.
முலாய் ஸ்லிமானிக்குப் பிறகு, ஹிஷாம் என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் 1822 நவம்பரில் ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிக்கு வந்த சமயத்தில் பல உள்ளூர் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அதிகாரம் வேண்டி புரட்சி செய்தார்கள். ஆரம்பத்தில் அவர்களை கடுமையான முறையில் அடக்கினார். மொரோக்கோ நாட்டின் பொருளாதாரம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. இதனால் முந்தைய ஆட்சியாளர் நிறுத்தி வைத்திருந்த ஐரோப்பிய வாணிபத்தை துவங்க நினைத்தார். அவர்கள் பல சட்டதிட்டங்களுடன் வாணிப ஒப்பந்தம் போடச் சொன்னார்கள். இதனால் துவண்டு போன அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் கடற்கொள்ளையர்களுடன் கப்பல்களை துறைமுகங்களில் நிறுத்திக் கொள்ள அனுமதித்து வருவாய் ஈட்டத் தொடங்கினார். இதனால் தங்கள் கப்பல்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஐரோப்பியர்கள் கோபமடைந்தார்கள். பிரிட்டிஷ் டான்ஜியர் துறைமுகத்தை தடை செய்து வைத்துக் கொண்டது. ஆஸ்ட்ரியன்கள் லராச்சி, அசிலாஹ் மற்றும் டெடோவான் துறைமுகங்களை குண்டு வெடித்து தகர்த்தது. இறுதியாக 1851 ல் சாலியில் குண்டு எறியப்பட்டு கடற்கொள்ளை நின்று போனது. நல்ல நிவாகியாக இருந்த அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் பல பொதுக் கட்டிடங்களையும் அடிப்படை கட்டமைப்பை சரி செய்தார். 1824,1828, 1831, 1843, 1849, 1853 ஆகிய ஆண்டுகளில் நடந்த உள்நாட்டு சண்டைகளை சமாளித்தார். இவருக்கு பெரிய வெளிநாட்டு எதிரியாக இருந்தது ஃப்ரான்ஸ் தான். மிக அருகில் 1830 ல் ஃப்ரான்ஸ் அல்ஜீரியாவை ஆக்கிரமிப்புச் செய்து வைத்திருந்ததால் எப்போதும் மொரோக்கோவிற்கு மிரட்டலாகவே இருந்தது.
அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் இராணுவத்தை அனுப்பி செம்சென் நகரை பாதுகாக்க செய்தார். உடனே ஃப்ரான்ஸ் சண்டையிட்டு இராணுவத்தைத் துரத்தி விட்டு 1832 ல் லெம்சென்னைக் கைப்பற்றியது. ஃப்ரான்சை எதிர்த்து அல்ஜீரியாவின் அப்த் அல் காதி அல் ஜஸா இரி நடத்திய கொரில்லா முறை தாக்குதல்களுக்கு அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் ஆதரவு கொடுத்தார். இவரை விட கடற்கொள்ளையர்கள் அல் ஜஸா இரிக்கு பெரும் ஆதரவு கொடுத்தார்கள். இதனால் எல் லையில் எந்நேரமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஃப்ரான்ஸ் அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாமை அல் ஜஸா இரிக்கு கொடுத்து வரும் கொரில்லா ஆதரவை நிறுத்திக் கொள்ளச் சொன்னது. மொரோக் கோவின் கிழக்குப் பகுதியை ஃப்ரான்ஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. 1844 ல் ஃப்ரான்கோ மொரோக்கோ போரைத் துவக்கியது. இது அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாமுக்கு சாதகமாக இல்லை. அப்போரின் தளபதியாக இருந்த அவர் மகன் முலாய் முஹம்மது எஸ்ஸஓரியா, டான்ஜியர் ஆகிய நகரங்களை ஃப்ரான்சிடம் இழந்தார். இதனால் ஃப்ரான்சுடன் டான்ஜியர் ஒப்பந்தம் போடப்பட்டு, அவர் அல் ஜஸா இரிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு மொரோக்கோ அல்ஜீரியா எல்லையை மாற்றி அமைக்க ஒத்துக் கொண்டார்.  அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம்  ஃப்ரான்சின் எல்லா ஒப்பந்தங்களுக்கும் ஒத்துப் போவதாகக் கருதிய மொரோக்கோ மக்கள் உள்நாட்டுக் கலவரத்தில் ஈடு பட்டனர்.
அப்துல் ரஹ்மான் இப்ன் ஹிஷாம் 12 ம் நூற்றாண்டில் அல்மொராவிட் களால் நிர்மாணிக்கப்பட்டு, சாதியன்களால் விரிவாக்கப்பட்டிருந்த அக்டல் தோட்டத்தை மறுசீரமைத்தார். 1859 ஆகஸ்டில் அப்துல்ரஹ்மான் இப்ன் ஹிஷாம் மரணமடைந்தார். இவருக்குப் பிறகு இவர் மகன் நான்காம் முலாய் முஹம்மது மொரோக்கோவின் அலவிட்களின் சுல்தானாக ஆனார். மொரோக்கோவின் ஃபெஸ் நகரத்தில் பிறந்த இவர் தந்தையின் ஆட்சியின் போது இராணுவ தளபதியாக இருந்தார். இவரது தலைமையில் ஃப்ரன்சுகளுடன் நடந்த ஐஸ்லி போரில் தோல்வி அடைந்தார். பின்னர் தந்தையின் அனுமதியுடன் மொரோக்கோ இராணுவத்தின் தலைமைத் தளபதியானார். 1845 ல் இராணுவ நிர்வாகத்தை மாற்றி அமைத்தார். நான்காம் முலாய் முஹம்மது ஓட்டோமான்களுக்கு ஐரோப்பிய முறை போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த துனீஷியா இராணுவ அதிகாரிகளை அழைத்து வந்து நவீன போர்திறமைகளை தன் வீரர்களுக்குக் கற்றுக் கொடுக்க வைத்தார். அவைகள் அஸ்கரி, அபிட் (அரண்மனை பாதுகாப்பு), கிஷ் மற்றும் நுஃஅய்ப் (பழங்குடியினர் இராணுவம்) என்று துணை இராணுவப்பிரிவுகளாக ஆக்கினார். இதற்காக ஃபெஸ்ஸில் இராணுவ பொறியியல் பள்ளியை அமைத் தார். அப்பள்ளிக்கு ஃப்ரென்சிலிருந்து ஜோசப் டி சால்டி என்ற பெயரிலிருந்து, அப்த் அல் ரஹ்மான் அல் அலி என்று இஸ்லாமுக்கு மாறிய பீரங்கியில் அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரியை மேற்பார்வை யாளராக ஆக்கினார்.
நான்காம் முலாய் முஹம்மது மொழிபெயர்ப்பாளர்களை வைத்து பல ஐரோப்பிய பொறியியல், விஞ்ஞானம், கல்வி புத்தகங்களை மொழி பெயர்த்தார். தொடர்ந் து பிரிட்டிஷ், எகிப்து இராணுவ பீரங்கி அனுபவசாலிகளை வரவழைத்து மொரோக்கோ இராணுவத்திற்கு பயிற்சி அளித்தார். இவர் முதல் போராக ஸ்பானிஷ் மொரோக்கன் போரைச் சந்தித்தார். ஸ்பெயினின் ஆளுகைக்கு உட்பட்ட சியோட்டா, மெல்லிலா பகுதிகளில் சுற்றியுள்ள பழங்குடியினர் அடிக்கடி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஸ்பெயின் நான்காம் முலாய் முஹம்மதுவிடம் தங்கள் சியோட்டா பகுதியை சற்று விரிவாக்கம் செய்து கொள்ள கேட்டார்கள். அதற்கு சுல்தான் மறுத்தார். இதனால் இரண்டாம் இஸபெல்லா என்பவரின் தலைமையில் ஸ்பெயின் போர் தொடுத்தது. பெரும் படையுடன் வந்து டான்ஜியர், அசிலாஹ், டெடோவான் பகுதிகளைத் தாக்கி போரில் மொரோக்கோவை ஸ்பெயின் வென்றது. இதனால் 1860 ல் வத்ராஸ் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி தென்மேற்குப் பகுதியின் சிடி இஃப்னி என்ற இடத்தை ஸ்பெயின் எடுத்துக் கொள்ளும், சியோட்டா பகுதியில் எல்லையை நீட்டிக் கொள்ளவும், போரின் நஷ்ட ஈடாக பெருந்தொகை 100 மில்லியன் மொரோக்கோ ஃப்ராங்க்ஸ் கொடுக்க வேண்டும். (இது மொரோக்கோவின் இருபது ஆண்டு பட்ஜெட் தொகை). இத்தொகை செலுத்தும் வரை டெடோவான் நகரத்தை ஸ்பெயின் வைத்துக் கொள்ளும் என்று முடிவானது.
இந்த தோல்வியாலும், நொறுங்கிப் போன பொருளாதாரத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு போன நான்காம் முலாய் முஹம்மது மனமுடைந்து போய், தனது கவனங்களை கணிதம், வாண சாஸ்திரம், கவிதை, இசை போன்ற துறைகளில் திருப்பி நாட்டுப் பொருளாதாரத்தை திறமையான அரண்மனை அடிமை மற்றும் வைசிராயராக இருந்த சி மௌஸாவிடம் ஒப்படைத்தார். மொத்த மொரோக்கோ துறைகளின் பாதி வருமானத்தை ஸ்பெயின் எடுத்துக் கொண்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் வெகுவாக பாதிக்கப்பட்டது. நான்காம் முலாய் முஹம்மது அந்தந்த பகுதிகளை நிர்வகித்து வந்த பழங்குடி தலைவர்களிடம் அரசுக்கு பணம் கொடுத்து உதவும்படி சொன்னார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் தானே கைட்ஸ் என்னும் தலைவர்களை தேர்ந்தெடுத்து அந்த பகுதிகளுக்கு அனுப்பினார். இப்படி அனுப்பப்பட்ட கைட்ஸ்கள் அந்தந்த பழங்குடியினத்தவர்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்ததால், இது அரசுக்கு எதிர்விளைவையே ஏற்படுத்தியது. இதனால் சமாளிக்க முடியாமல் போன நிலையில் நான்காம் முலாய் முஹம்மது 1873 ல் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக