வெள்ளி, 17 ஜூலை, 2015

அலாஒயிட்டுகள் வரலாறு 4

இரண்டாம் ஹஸன் பழைய வழக்கங்களைக் கொண்ட சட்டங்களுடன் தங்கள் அலவிட் பரம்பரையை பலமாக்கினார். மொரோக்கோவின் கோரிக்கையான பல கட்சி ஆட்சிமுறையை மறுத்தார். அடிப்படை அரசியல் அமைப்பு கொடுத்த அதிகாரத்தால் பலத்தை கையாண்டார். இதனால் UNFP மற்றும் இஸ்திக்லால் போன்ற எதிர்ப்பு அமைப்புகள் பலமாகின. இரண்டாம் ஹஸன் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, அதன் அடிப்படையை மட்டும் வைத்துக் கொண்டார். அடுத்து வந்த தேர்தலில் இவருடைய ராயல் கட்சி பெரும்பான்மை பெற, எதிர்கட்சிகள் பொங்கி எழுந்து மன்னராட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், கலவரங்களும் செய்தார்கள். இரண்டாம் ஹஸன் இருமுறை தன்னைக் கொல்ல நடந்த சதியிலிருந்து தப்பித்தார். லிபியாவின் ஆதரவில் ஜெனரல் முஹம்மது மெட்பூஹ் மற்றும் கர்னல் முஹமது அபடூ ஆகியோர் அமைத்த ‘டி ஈடட் புரட்சி’ என்ற அமைப்பு இரண்டாம் ஹஸனைக் கொல்ல திட்டமிட்டார்கள். மன்னர் ஹஸனின் 42 வது வயது கொண்டாட்டம் மன்னரின் ரபாத் அரண்மனையில் 1971 ல் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள பல முக்கியமான தலைவர்கள் வந்திருந்தார்கள். பெல்ஜிய தூதர் மார்செல் டூபர்டும் ஒருவராவார். தூதரை வீட்டுக்காவலில் வைத்த கொலைகாரர்கள், இரண்டாம் ஹஸனை ஒரு விளையாட்டு அரங்கத்தில
சிறை வைத்து விட்டு ரபாத் வானொலி நிலையத்தைக் கைப்பற்றி மன்னர் கொல்லப்பட்டு மொரோக்கோ சுதந்திர நாடாக ஆகிவிட்டது என்று அறிவித்தது. இதற்குள் அதேநாளில் மன்னரின் ராயல் படைகள் வந்து சண்டைக்குப் பிறகு, கொலைத்திட்டம் முறியடிக்கப்பட்டது. சில மூத்த அதிகாரிகளின் வழி காட்டலால் இளைஞர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அடுத்த கொலைத்திட்டம் 1972 ல் அரங்கேறியது. மன்னர் இரண்டாம் ஹஸன் ஃப்ரான்சிலிருந்து ரபாத் திரும்பும் போது, மொரோக்கோ விமானப்படையைச் F-5 ரக விமானங்கள் நான்கு மன்னர் பயணித்த போயிங்க் 727 விமானத்தை நோக்கி வானிலேயே சுட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறிய சேதத்திற்குப் பிறகு மன்னரின் விமானம் தப்பியது. பின்னர் நடந்த விசாரணையில் மொரோக்கோ விமானப்படையைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு உடந்தை யாக இருந்ததாக பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் முஹம்மது அவ்ஃப்கிர் குற்றம் சாட்டப்பட, அவர் தற் கொலை செய்து கொண்டார். பல குண்டுக்காயங்களுடன் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு எதிராக நடந்த பனிப்போரை மன்னர் இரண்டாம் ஹஸன் அமெரிக்காவின் உதவியுடன் சமாளித்தார். இதற்கு அமெரிக்காவின் CIA துறை முக்கியபங்கு வகித்தது. அரபு, இஸ்ரேல் பிரச்சினையில் பின்ணனியிலிருந்து பேச்சுவார்த்தைக்கு பாடுபட்டார். இதற்கு மொரோக்கோவில் அதிகமாக வசித்த யூத மக்கள் ஆதரவளித்தார்கள். ஸ்பெயின் வசமிருந்த இஃப்னி என்ற இடத்தை 1969 ல் கைப்பற்றினார். பின்னர் 1975 ல் ‘கிரீன் மார்ச்’ என்ற பெயரில் நடந்த படையெடுப்பில் ஸ்பெயினின் வசமிருந்த மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றினார். 1963 லிருந்து மொரோக்கோ உரிமை கொண்டாடிய அல்ஜீரியாவின் டின்டூஃப் மற்றும் பெச்சார் பகுதிகள் அப்போதே ‘சேண்ட் வார்’ என்னும் மணற்போரை வரவழைத்தது. அருகிலிருந்த மாரிடோனியாவிடமும் மொரோக்கோவிற்கு பிரச்சினை இருந்தது. 1969 க்குப் பிறகு, மொரோக்கோ புகழ்பெற்ற நாடாக அறியப்பட்டது.
இரண்டாம் ஹஸன் பொருளாதாரத்திற்காக பாஸ்பேட் என்னும் இரசாயன சுரங்கம், விவசாயம், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். இவரது ஆட்சி ஆரம்பித்த 1961 லிருந்து 1980 வரை ‘முன்னேற்றத்திற்கான வருடங்கள்’ என்று குறிப்பிடப்பட்டு பல ஆயிரம் எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், சிலர் கொல்லப்பட்டும், சிலர் மாயமாகவும் ஆனார்கள். பாராளுமன்ற அமைப்புப்படி எதிர்கட்சி வேண்டும் என்ற அடிப்படையில் 1990-91 ல் சிறையிலிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அரபு நாடுகளில் முதல் முறையாக எதிர்கட்சியாக மொரோக்கோ அவர்களை அங்கீகரித்தது. ராயல்குழு ஒன்றை ஏற்படுத்தி நாட்டில் மனித உரிமைக்கு எதிரான புகார்களை கவனிக்கச் சொன்னார். இவரது மனைவி லல்லா லதிஃபா ஹம்மூ மூலம் ஐந்து குழந்தைகள் இவருக்கு பிறந்தது. இளவரசி லல்லா மெர்யெம், மன்னர் ஆறாம் முஹம்மது, இளவரசிகள் லல்லா அஸ்மா, லல்லா ஹஸ்னா மற்றும் இளவரசர் மௌலாய் ரச்சிட் ஆகியோர் ஆவார்கள். இரண்டாம் ஹஸனுக்கு லல்லா ஃபாத்திமா பிந்த் கைட் என்ற மனைவியும் இருந்தார். அவர் மூலம் குழந்தைகள் இல்லை. 1999 ஜூலை 23 ல் 70 வது வயதில் இயற்கையான முறையில் தான் பிறந்த ஊரில் இரண்டாம் ஹஸன் மரணமடைந்தார். இவரது உடல் ராஜமரியாதையு டன் ரபாத்துக்கு கொண்டுவரப்பட்டு 40 நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள ஐந்தாம் முஹம்மதுவின் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலை மகன்கள் ஆறாம் முஹம்மது, இளவரசர் மௌலாய் ரச்சிட் மற்றும் சிறிய தகப்பனார் மௌலாய் ஹிச்சாம் ஆகியோர் சுமக்க, உடல் மீது ‘அல் லாஹ் ஒருவனே அவனின்றி வேறு இறைவன் இல்லை’ என்று எழுதப்பட்ட பச்சைத் துணியால் மூடப் பட்டிருந்தது.
1999 ல் இரண்டாம் ஹஸனின் மகன் மன்னர் ஆறாம் முஹம்மது ஆட்சிக்கு வந்தார். பிறந்த போது இவர் தான் அடுத்த ஆட்சிக்கு உரியவர் என்று அறிவிக்கப் பட்டவர் மன்னர் ஆறாம் முஹம்மது. சிறுவயதிலிருந்தே இஸ்லாமியக் கல்வியும், அரசியல் பயிற்சியும் தந்தையால் அளிக்கப் பெற்றார். நான்கு வயதிலேயே அரண்மனையில் திருக்குரான் படிக்கும் பயிற்சியைத் துவங்கினார். பள்ளிப்படிப்பு முடித்து இளநிலை சட்டப்படிப்பை அக்டலில் நான்காம் முஹம்மது பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஆராய்ச்சி படிப்பாக இவர் தேர்ந்தெடுத்த ‘அரபு-ஆப்பிரிக்க கூட்டுறவு’ என்ற படிப்பு சர்வதேச உறவுகளை வெளிப்படுத்தியது. ரபாத் பல்கலைக்கழகத்திலும் படித்த மன்னர் ஆறாம் முஹம்மது பான்-அராப் விளையாட்டின் தலைவராகவும், கர்னல் மேஜராக ராயல் மொரோக்கோ ஆர்மியிலும் நியமிக்கப்பட்டார். 1987 ல் ஆரசியல் விஞ்ஞானத்திற்கான பட்டமும், 1988 ல் பொதுச் சட்டத்திற்கான அத்தாட்சி பட்டமும் (டிப்ளமா) பெற்றார். 1993 ல் ஃப்ரான்சின் நைஸ் சோபியா ஆண்டி பொலிஸ் பல்கலைக்கழகத்திலும் சட்டத்திற்கான ஆராய்ச்சி பட்டம் பெற்றார். 1994 ல் மொரோக்கோ இராணுவத்தின் மேஜர் ஜெனரலாக பதவி பெற்றார். மன்னர் ஆறாம் முஹம்மதுவுக்கு சரளமாக அரபு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஃப்ரென்ச் மொழிகள் தெரியும்.
இவருக்கு ஒரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் இருப்பதை முன்பே பார்த்தோம். இவர் மனைவி பெயர் சல்மா பென்னானி ஆகும். திருமணத்தின் போதே மொரோ க்கோவின் இளவரசியாக ஹெர் ராயல் ஹைனஸ் லல்லா சல்மா என்று பட்டம் சூட்டப்பட்டார். இவரு க்கு 2003 ல் பிறந்த பட்டத்து இளவரசர் மௌலாய் ஹஸன் என்ற மகனும், 2007 ல் பிறந்த இளவரசி லல்லா கதீஜா என்ற மகளும் உண்டு. மன்னர் ஆறாம் முஹம்மதுவின் பிறந்த நாளான ஆகஸ்டு 21 ல் மொரோக்கோவில் பொது விடுமுறை தினமாகும். பதவியேற்ற அன்றே நாட்டின் வறுமையையும், ஊழ லையும் ஒழித்து மனித உரிமையைப் பாதுகாப்பேன் என்று உறுதி அளித்தார். நாட்டுக்கான இவரின் மறுசீரமைப்பு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் எதிர்க்கப்பட்டது. 2004 ல் ‘முதவானா’ என்று பெண்கள் அதிகாரம் பெற சட்டம் போட்டார். 2010 ல் விக்கிலீக்ஸ் என்ற வலைப்பதிவு மொரோக்கோவின் உயர்மட்ட அளவில் ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தையும், மன்னர் ஆறாம் முஹம்மதுவுக்கும் அதில் பங்குண்டு என்று வெளியிட்டது. 2011 ல் உலகப் பொருளாதார வீழ்ச்சியினால் இங்கும் மக்கள் பல போராட்டங்களை நடத்தினார்கள். 2011 ல் புது அரசியல் சட்டத்தை நிர்மாணிக்க குழு அமைத்தார். அதன்படி அரபுமொழியுடன் பெர்பெர் மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட்டது. சிதைந்து போய்க்கொண்டிருந்த ஹஸானியா மொழுயை சீர்படுத்தவும், புராதன மொரோக்கோவின் கலாச்சாரத்தையும் பாரம் பரியத்தையும் பாதுகாக்கவும் தீர்மானம் உண்டாக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்காக தேர்தல் நடத்தப் பட்டு பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கட்சித்தலைவராகத்தான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இத ற்கு முன் மன்னர் தான் விரும்பியவரை பிரதம மந்திரியாகக் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தது. மேலும் ஜனநாயக முறையில் நவீன பல திட்டங்களுக்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மொரோக்கோவின் வாணிபத்தில் மன்னர் குடும்பத்தினர் தான் முதலிடத்தில் இருந்தார்கள். 2009 ல் ‘ஃபொர்ப்ஸ்’ என்னும் பத்திரிக்கை இவர்களின் வியாபார மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று செய்தி வெளியிட்டது. இவர்களின் ஒரே நிறுவனம் காஸாப்ளாங்காவின் பங்குச் சந்தையில் 50 பில்லியன் திர்ஹாம்கள் (US $ 6 மில்லியன்) வைத்திருப்பதாக மதிப்பிட்டது. SIN எனப்படும் சோஷியல் நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் என்ற அந்நிறுவனம் அத்திஜாவரிவஃபா வங்கி, மானாகம் சுரங்கம், ஓனாபர் என்ற கம்பெனி, சோமட் (சுற்றுலா, ரியல் எஸ்டேட் மற்றும் மஸி ரெட்டி என்னும் விலைமதிப்பான காரின் விநியோகம்), வஃபா இன்சூரன்ஸ், மர்ஜானி என்ற சூப்பர் மார்கெட் கம்பெனி, வானா-இன்வி என்னும் தொலைதொடர்பு நிறுவனம், லஃபார்ஜி என்னும் சிமெண்ட் தாயாரிப்பு நிறுவனம், சோனாசிட், சோப்ரியம் (பீஜட், கிட்ரியான் கார் விநியோகம்), ரினால்ட் கார் விநியோகம், நரீவா என்னும் எனர்ஜி நிறுவனம் ஆகியவைகள். மேற்படி அத்தனை நிறுவனங்களும் இந்த SNI மூலம் ஓம்னியம் நார்ட் ஆஃப்ரிக்கன் (ONA)  நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன. இந்த SNI  நிறுவனம் பல உணவு தயாரிப்புகள் கம்பெனியும் கொண்டுள்ளது. இது 2013 ல் சில நிறுவனங்களை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்றதின் மூலம் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டியது. SNI  யும் ONA  வும் இணைந்து மிகப்பெரிய மது உற்பத்தியாளர்களாக ‘ஹெனிகான்’ என்னும் மதுவைத் தயாரிக்கிறார்கள். இதை எல்லாம் நான் ஏன் இங்கு விளக்கமாக குறிப்பிடுகிறேன் என்றால் 1859 ல் ஆட்சிக்கு வந்த நான்காம் முஹம்மதுவின் காலத்தில் எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சியை மொரோக்கோ சந்தித்தது. ஃப்ரான்சிடம் மிகப்பெரிய கடன் சுமையை வைத்திருந்தது. ஆனால் தற்போது இந்த ராஜ குடும்பம் மட்டுமே எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காகத்தான்.
தற்போதும் மன்னர் ஆறாம் முஹம்மது தான் மொரோக்கோவை ஆட்சி செய்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக