ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 6

துக்ளக் ஆட்சிவம்ச வரலாறு

துருக்கியிலிருந்து வந்து டெல்லியை ஆண்ட முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்த துக்ளக் ஆட்சிவம்சத்தினர். இவர்கள் 1320 ல் ஆட்சிக்கு வந்தார்கள். அதற்கு முன் கில்ஜி வம்சத்தினர் டெல்லியை ஆண்டார்கள். கில்ஜி வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் குஸ்ரோ கான். இவர் ஒரு இந்துத் தளபதி. 1316 ல் அலாவுதீன் கில்ஜி மரணமடைய அவர் பிள்ளை முபாரக் கில்ஜியை குஸ்ரோ கான் கொன்று தான் முஸ்லீமாக மாறி ஆட்சியில் அமர்ந்தார். அவருக்கு பெர்ஷிய, ஆப்கான் மற்றும் டெல்லித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். டெல்லியில் இருந்த முஸ்லீம்கள் கில்ஜிகளின் கீழ் பஞ்சாபில் கவர்னராக இருந்த துருக்கிய வம்சாவழியினரான காஸி மாலிக்கை ஆட்சியிலிருந்து நீக்கி கொன்றுவிட்டு, 1320 ல் காஸி மாலிக்கை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆட்சியில் அமர்ந்தவுடன் காஸி மாலிக், கியாசுத்தீன் துக்ளக் என்று பெயர் மாற்றிக் கொண்டார். இவர் துருக்கிய தந்தைக்கும், இந்துத் தாய்க்கும் பிறந்தவர். தான் ஆட்சிக்கு வர ஆதரவாய் இருந்த மாலிக்குகள், ஆமிர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் பதவியும் அதிகாரமும் அளித்தார். டெல்லியின் கிழக்கே ஆறு கிலோமீட்டர்கள் நகரத்தை வளர்த்து ஒரு கோட்டையையும் கட்டி, மங்கோலியர்களின் எதிர்ப்பிலிருந்து காத்தார். அப்பகுதி துக்ளகாபாத் என்று அழைக்கப்பட்டது. 1321 ல் உலுக் கான் என்ற முஹம்மது பின் துக்ளக் என்னும் தன் மகனை அனுப்பி அரங்கல் மற்றும் திலங் (தெலிங்கானா) ஆகிய பகுதிகளைக் கைப்பற்றச் சொன்னார். அவர் தோல்வியடைந்து திரும்பினார். பின் நான்கு மாதங்கள் கழித்து பெரும் படையுடன் மகனை அனுப்ப அவர் இம்முறை அரங்கலை வென்று சுல்தான்பூர் என்று பெயர் மாற்றினார். அங்கிருந்த பொருட்களைக் கைப்பற்றி டெல்லிக்கு அனுப்பினார். பெங்காலிலிருந்த முஸ்லீம் தலைவர்கள் கியாசுத்தீன் துக்ளக்கை லுக்னாடியைக் கைப்பற்ற அழைக்க தன் மகன் முஹம்மது பின் துக்ளக்கை டெல்லியின் ஆட்சியில் அமர்த்திவிட்டு, இன்னொரு மகன் மஹ்மூத் கானுடன் லுக்னாடியை வெல்லச் சென்றார்.
அவர்கள் லுக்னாடியை வெற்றி கொண்டு திரும்பி வரும்போது டெல்லியில் முஹம்மது பின் துக்ளக், நிஜாமுத்தீன் அவ்லியா என்னும் சூஃபி ஞானியை ஒரு மரக்கட்டுமானத்தின் மேலிருந்து தள்ளிக் கொன்றுவிட்டு விபத்து போல் காணச் செய்தார். அதேபோல் மரக்கட்டுமானத்தில் 1325 ல் கியாசுத்தீன் துக்ளக்கும், அவர் மகன் மஹ்மூத் கானும் இறந்து போனார்கள். இவைகளில் இருவேறு கருத்துகள் உண்டு. ஒருசாரார் கொலை என்றும், மற்றொரு சாரார் யானைகள் அந்த மரக்கட்டுமானத்தீன் மீது நடந்து அது வலுவிழந்திருந்தது என்றும் கூறினார்கள்.
கியாசுத்தீன் துக்ளக்கின் மரணத்திற்குப் பிறகு, முஹம்மது பின் துக்ளக் 1325 ல் ஆட்சிக்கு வந்து 26 வருடங்கள் ஆண்டார். இவரது ஆட்சியில் டெல்லியின் துக்ளக் ஆட்சிவம்சம் பல மாகாணங்களை நோக்கி பரவியது. மால்வா, குஜராத், திலங், கம்பிலா, துர் சமுந்தர், மாபார், லக்னாடி, சிட்டகாங், சுனர்காவ், திர்ஹுத் ஆகிய பகுதிகளைத் தாக்கினார். பெரிதாகிப்போன நிலப்பரப்பில் ஆள்வது சிரமமாகி, ஆங்காங்கு புரட்சிகள் வெடித்தன. முஹம்மது பின் துக்ளக் வரிகளை உயர்த்தினார். குறிப்பாக கங்கா, யமுனா போன்ற விவசாயம் சார்ந்த பகுதிகளில் வரிகளை அதிகப்படுத்தினார். குறிப்பாக இவர் இந்துக்கள் மீது மட்டும் வரிசுமத்தியதாகச் சொல்லப்படுகிறது. வரி சுமையைப் பொருக்கமுடியாமல் மக்கள் காடுகளில் சென்று வாழ்ந்து, நாட்டில் எதையும் பயிர் செய்யாமல் அரசை தண்டித்தார்களாம். நாட்டில் வறுமை ஏற்பட்டு பல கொள்ளைகளும் நடந்தது. இதனால் கோபமுற்ற முஹம்மது பின் துக்ளக் கடும் தண்டனைகளை விதித்தார். முஸ்லீம்களான் ஷியா சைய்யதுகள், சூஃபிகள், கலந்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கொன்றார். டெல்லியில் இணையும் வண்ணம் சிரி பகுதியில் புதிய நகரம் ஒன்றை அமைத்தார். அதற்கு ‘ஜஹன்பன்னாஹ்’ என்று பெயரிட்டார். தலைநகரை டெல்லியிலிருந்து மஹாராஷ்டிராவின் தௌலதாபாதுக்கு மாற்றினார். டெல்லியிலிருந்த பெரும் மக்களை தௌலதாபாதுக்கு கட்டாயமாக மாறச் சொன்னார். அப்படி குடிபெயர மறுத்தவர்களை கொல்ல உத்தரவிட்டார். இத்திட்டம் விரைவில் தோல்வி கண்டது. தௌலதாபாத் வறண்ட பகுதியாக இருந்து போதிய குடிநீர் வசதி இல்லாமல் போனது. பின்னர் மீண்டும் தலைநகரம் டெல்லிக்கு மாற்றப்பட்டது. இப்போது பெரும்பான்மையான முஸ்லீம்கள் டெல்லி திரும்பாமல் மத்திய மற்றும் தென்பகுதிகளில் குடியேறினார்கள். 1327 ல் முஹம்மது பின் துக்ளக் ஆட்சிக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. 1335 ல் அருகாமை தெற்கிலிருந்து விஜயநகர பேரரசு டெல்லி மீது போர் தொடுத்தது. அது டெல்லியிலிருந்து தென் இந்தியாவைப் பிரித்து வென்றது. 1336 ல் மசுனுரி நாயக் என்பவர் டெல்லியிடமிருந்து வாராங்கலை வென்றார். 1338 ல் உறவுக்காரர் ஒருவரே மால்வாவில் புரட்சி செய்தார். கிழக்குப் பகுதியிலிருந்த முஸ்லீம் கவர்னர்கள் இந்து மன்னர்களின் ஆதரவில் புரட்சி செய்து தங்கள் பகுதிகளை சுதந்திரப்பகுதிகளாக அறிவித்துக் கொண்டார்கள். சுருங்கிக் கொண்டிருக்கும் தனது நிலப்பரப்பை எந்தவித ஆதரவுமில்லாமல் முஹம்மது பின் துக்ளக் வேடிக்கை பார்த்தார். இவர் இஸ்லாமைப்பற்றியும், திருக்குரான் பற்றியும் மிகச் சிறந்த அறிவைப் பெற்றிருந்தாராம். ஆனால், ஆட்சியாளும் தகுதி இல்லாதிருந்தாராம். அரசு கஜானா காலியானவுடன் குறிப்பிட்ட உலோகத்தில் வடிக்க வேண்டிய நாணயங்களை சாதாரண உலோகத்தில் வடிக்கச் சொன்னாராம். இதனால் மக்கள் அவரவர் வீடுகளில் நாணயம் அடித்துக் கொண்டார்கள். குறிப்பாக இந்துக்கள் பெருவாரியாக வீடுகளில் நாணயம் அடித்து முஹம்மது பின் துக்ளக் கேட்கும் வரிகளை இல்லை என்று சொல்லாமல் உடனுக்குடன் கொடுத்தார்களாம். இதனால் நாட்டின் பொருளாதாரம் படுவேகமாக வீழ்ந்து வறுமை எங்கும் தாண்டவமாடியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக