ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 1

டெல்லி சுல்தானேட்  வரலாறு
கூ.செ. செய்யது முஹமது
அடிமைகளாய் இருந்து உமய்யாக்களின் ஆட்சியின் போது, இஸ்லாத்தில் இணைந்த பின்  இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மம்லுக்குகள். இவர்கள் 9 ம் நூற்றாண்டிலிருந்தே பல ஆட்சியாளர்களின் ஆட்சியில் இராணுவத்தில் பெரும் பதவிகளை வகித்தார்கள். குறிப்பாக அரசியலிலும், இராணுவத்திலும் இவர்கள் எகிப்து, லீவண்ட், ஈராக், இந்தியா போன்ற பகுதிகளில் தலையெடுத்தார்கள். தற்போதைய மத்திய ஆப்கானிஸ்தானிலிருந்த கோர் என்ற பகுதியை கஸ்னவித் ஆட்சியாளர் கஸ்னி முஹம்மதுவிடமிருந்து அபு அலி இப்ன் முஹம்மது வெற்றி பெற்று சுன்னிப்பிரிவு இஸ்லாமாக ‘குரித் ஆட்சிவம்சம்’ என்று துவக்கினார். 1011 லிருந்து ஆண்ட இவர் பல மஸ்ஜித்கள், இஸ்லாமிய பள்ளிக்கூடங்களைக் கோர் பகுதியில் கட்டினார். 1186 ல் கஸ்னவித்களிடம் கடைசியாக எஞ்சி இருந்த லாகூரை கோரியின் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது (கோரி முஹம்மது) வெற்றி பெற்று அவர்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
குரித் ஆட்சிவம்சம்
குரித் ஆட்சிவம்சமாக இருந்த அவர்கள் ஆட்சியின் உச்சமாக மேற்கில் கோரசானையும் வடக்கில் இந்தியாவின் பெங்கால் வரை வந்தார்கள். குரித்கள் பெர்ஷிய கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள். இவர்கள் புஷ்டோ என்னும் மொழியை பேசுபவர்களாக இருந்தார்கள். ஆரம்பத்தில் கோர் பகுதியை அமீர் பான்ஜி என்ற குரித் இளவரசர் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் அல் ரஷீதின் கீழ் நிர்வகித்து வந்தார். குரித்கள் 150 ஆண்டுகாலம் கஸ்னவித் மற்றும் செல்ஜுக் ஆட்சியாளர்கள் கீழும் ஆண்டு வந்தார்கள். தாங்கள் சுயமாகவே ஆளவேண்டும் என்று பிரியப்பட்ட குரித் தலைவர் குத்ப் அல் தீன் முஹம்மது என்பவர் கஸ்னவித் ஆட்சியாளர் பஹ்ராம் ஷா என்பவரை விஷம் வைத்துக் கொன்றார். 1161 க்குப் பிறகு, கியாத் அல்தீன் முஹம்மதும், அவர் சகோதரர் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மதும் குரித் ஆட்சிக்கு போட்டியாக இருந்த அபுல் அப்பாஸைக் கொன்றார்கள். 1173 ல் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது சகோதரர் கியாத்துடன் இணைந்து கஸ்னாவை வென்று ‘க்வாரிஸ்மித் பேரரசு’ என்று கோரசானில் ஏற்படுத்தினார். இந்த சகோதரர்களுக்கு எதிராக இவர்களின் சிறிய தந்தை ஃபக்ருத்தீன் மசூத், ஹிராத்தின் செல்ஜுக் கவர்னர் தஜிதுதுதீன் யில்ஸித்துடன் சேர்ந்து கொண்டு எதிர்த்தார். சகோதரர்கள் அவரை வென்று கவர்னரைக் கொன்று, ஸமீன்தவார், பட்கிஸ், கார்சிஸ்தான், குஸ்கன் ஆகிய பகுதிகளை வென்றார்கள். 1175 க்குப் பிறகு, முல்டான், உச், லாகூரை வென்று குரித்கள் ஆட்சியை நிலைப்படுத்தினார். தென் ஆசியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கு இவர்தான் வித்திட்டார்.
இவரது ஆட்சியின் பகுதிகளாக தற்போதைய ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், ஈரான், இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகியவை இருந்தன. குஜராத்தில் போரிடும் போது அதன் இந்து ராணி நைகிதேவியால் தோற்கடிக்கப்பட்டார். 1191 ல் முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது தற்போதைய பாகிஸ்தானின் கைபர் கணவாய் வழியாக பஞ்சாபில் நுழைந்து பிரித்திவிராஜ் சௌஹான் வசமிருந்து பதிண்டா கோட்டையை வென்றார். அதற்கு காஸி ஜியாசுத்தீன் என்பவரை கவர்னராக்கினார். பின் அக்கோட்டையை மீண்டும் பிடிக்க பிரித்திவிராஜ் உத்தரவின் பேரில் இளவரசர் கோவிந்த் தாய் என்பவனுடன் ஹரியானாவில் போரிட்டார். அதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. 3000 யானைகள், 300,000 காலாட்படை, குதிரைப்படைகளுடனும், ராஜபுத்திர ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடனும் போரிட்ட கோவிந்தை, திறமையான 120,000 வீரர்களுடன் போரிட்டு வென்று பிரித்திவிராஜையும் கைது செய்தார். 1193 ல் அஜ்மீர் பகுதியிலிருந்து ஒழுங்காக கப்பம் வராததால் அதை குதுப்தீன் அய்பக் மூலம் கைப்பற்றச் செய்தார். பின்னர், இந்துக்களின் சிறிய பிரதேசங்களான சரஸ்வதி, சமனா, கோஹ்ரம் மற்றும் ஹன்சி ஆகியவற்றை சிரமமில்லாமல் கைப்பற்றினார். வடக்கிந்திய பகுதிக்கு குதுப்தீன் அய்பக்கை கவர்னராக துர்கிய ஜெனெரல்களுடன் நியமித்தார். பஞ்சாபில் கலவரம் நடக்க அதைச் சரிசெய்து இந்தியாவின் நடவடிக்கைகளை குதுப்தீன் அய்பக்கிடம் ஒப்படைத்து விட்டு, கஸ்னி திரும்பினார். வரும் வழியில் ஜீலம் நதிக்கரையில் கோகர் பழங்குடி ஒருவனால் கொலை செய்யப்பட்டு 1206 ல் இறக்கும் வரை ஆட்சி செய்தார். முஃஇஸ்ஸத்தீன் முஹம்மது (கோரி முஹம்மது) தன்னுடன் இருந்த அடிமைகளை மிகவும் அன்பாக நடத்தினார். எப்போதும் சிலருக்கு சில மகன்கள் தான் இருக்கும் ஆனால், எனக்கு ஆயிரக்கணக்கான இந்த அடிமைகளும் மகன்கள் தான் என்பாராம். இவருக்குப் பிறகு இவருடைய ஆட்சியை அடிமைகளாய் இருந்த குதுப்தீன் அய்பக் 1206 ல் டெல்லி சுல்தானேட்டையும், நசீருத்தீன் கபாச்சா 1210 ல் முல்டானையும், தாஜுத்தீன் யில்டோஸ் கஸ்னியையும், இக்தியாருத்தீன் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி பெங்காலையும் பிரித்து ஆண்டு வந்தார்கள். இந்து மன்னனான பிரித்திவிராஜ் சௌஹானை வென்றதால், முஃஇஸ்ஸத்தீன் முஹம்மதை பாகிஸ்தானியர்கள் பெரிதும் மதிப்பார்கள். இன்றைக்கும் சில பாகிஸ்தானியர்கள் இவருடைய மற்றும் மம்லுக் இராணுவத்தினரின் வழித்தோன்றல்கள் தான். பாகிஸ்தான் இராணுவம் இவரைக் கௌரவிக்கும் வகையில் நடுத்தர வீச்சுள்ள ஏவுகணைகளான கௌரி 1,2,3 க்கு இவர் பெயரை வைத்துள்ளது.
குதுப்தீன் அய்பக், கோரி முஹம்மதிடம் அடிமையாக இருந்தவர். டெல்லியைத் தலைநகராகக் கொண்டு, வடமேற்கு இந்தியாவை 1206 லிருந்து 1210 வரை ஆட்சி செய்தார். இன்றளவும் இந்தியாவைக் குறிக்க பாரம்பரிய சின்னமாக அறியப்படும் “குதுப்மினாரை’ இவர்தான் கட்டினார். 100 மீட்டர் உயரத்தில் மொஹாலியிலுள்ள ஃபதேஹ்புர்ஜுக்குப் பிறகு, இந்தியாவிலேயே இரண்டாவது உயரமான கோபுரம் இந்த குதுப்மினார் தான். இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும் இருக்கிறது. டெல்லியின் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்துள்ள குதுப்மினார் 73 மீட்டர் உயரத்தில் கீழ்புறம் 14.32 மீட்டர் அகலமும், உச்சியில் 2.75 மீட்டர் அகலமும் உள்ளது. 1981 ல் உச்சியைப் பார்வையிடச் செல்லும்போது மின்சாரம் தடைபட்டதால், இருட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் இறந்த பிறகு, இதன் பார்வையாளர்கள் அனுமதி தீவிரமாக்கப்பட்டது. கீழிருந்து மேலே செல்ல 379 படிக்கட்டுகள் உள்ளன. டெல்லியின் ஆட்சியை நிர்மாணித்த குதுப்தீன் அய்பக்கால் 1220 ல் ஆரம்பிக்கப்பட்ட குதுப்மினார் அவர் மருமகன் ஷம்சுத்தீன் மற்றும் ஃபிரோஸ் ஷா துக்ளக் ஆகியோராலும் சில பாகங்கள் கட்டப்பட்டது. செந்நிற கற்களாலும், பளிங்கு கற்களாலும் கட்டப்பட்ட இதில் பல சரித்திர அடையாளங்களான குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித், அலய் தர்வாஜா, இல்டுட்மிஷ் சமாதி, அலய் மினார், அலாவுத்தீன் மதரஸா மற்றும் சமாதி, இமாம் ஜமீனின் சமாதி ஆகியவை உள்ளன. குதுப்மினார் பலமுறை பூகம்பத்தாலும், இடியாலும் பாதிக்கப்பட்டு அவ்வப்போதைய டெல்லி ஆட்சியாளர்களால் பழுது பார்க்கப்பட்டது. டெல்லி மெட்ரோ இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள குதுப்மினாரை தனது சினிமாவில் பதிவு செய்ய ஆசைப்பட்டு தேவ் ஆனந்த் என்ற இந்தி திரைப்பட நடிகர் ‘தேரே கர் கி சாம்னே’ என்ற படத்தில் தில்கா பன்வார் கரே புகார் என்ற பாடலில் பதிவு செய்தார். 2006 ல் தாஜ்மஹால் 2.5 பார்வையாளர்களைக் கொண்டிருக்க, குதுப்மினார் 3.9 பார்வையாளர்களைக் கொண்டு ஆச்சரியப்படுத்தியது. இதன் வளாகத்திலுள்ள குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜிதின் தென்பகுதியில் பிரத்தியேகமான ‘அலய் தர்வாஸா’ (அலய் கதவு) என்ற நுழைவுவாயிலை 1311 ல் அலாவுத்தீன் கில்ஜி அமைத்தார். துருக்கிய கலைஞர்களின் கை வண்ணத்தில் கோபுரத்துடன் செந்நிற கற்களைக் கொண்டு இந்த நுழைவுவாயிலை அவர் அமைத்தார். குதுப் மஸ்ஜித் எனப்படும் குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித் தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் முதல்முறையாகக் டெல்லியில் கட்டப்பட்ட மஸ்ஜிதாகும். குதுப்மினாரின் நடைவளாகத்தில் 7.21 மீட்டர் உயரத்தில் 6 டன் எடையுள்ள இரும்பு தூண் நிறுவப்பட்டுள்ளது. குதுப்தீன் அய்பக் லாகூர் நகரில் போலோ என்னும் குதிரை விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்து போனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக