ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

டெல்லி சுல்தானேட் வரலாறு 2

குதுப்தீன் அய்பக்கிற்குப் பிறகு, ஷம்சுத்தீன் இல்டுட்மிஷ் என்பவர் டெல்லி சுல்தானேட்டுக்கு ஆட்சியில் வந்தார். இல்டுட்மிஷ் என்பது துருக்கிய பெயர். இவர் துர்கிஸ்தானைச் சேர்ந்த இல்பரி பழங்குடியைச் சேர்ந்தவர். இவர் சிறுவயதாக இருந்த போது புகாரா அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார். அங்கு முஹம்மது கோரியின் தர்பாருக்கு வாங்கப்பட்டார். இவருடைய திறமையால் விரைவில் சுல்தானுக்கு தனிப்பட்ட உதவியாளரானார். பின்னர் குதுப்தீன் அய்பக்கின் மகளையே மணந்து தபரிந்த், க்வாலியர், பரான் பகுதிகளுக்கு கவர்னரானார். அய்பக் மரணமடைந்தபின் இஸ்லாமிய தலைவர்கள் அரம்ஷா என்பவரை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். குத்பி தலைவர்கள் இல்டுட்மிஷை தேர்ந்தெடுத்தார்கள். அரம்ஷா லாகூரிலும், இல்டுட்மிஷ் டெல்லியிலும் ஆட்சி அமைத்தார்கள். அரம்ஷா, இல்டுட்மிஷ்ஷுக்கு எதிராக டெல்லி நோக்கி படையெடுத்துவர பாக் இ ஜுட் என்ற மலைப்பகுதியில் இல்டுட்மிஷ்ஷால் கொல்லப்பட்டு குரித் தலைவர்களின் வேண்டுகோள்படி குரித்களின் டெல்லி சுல்தான் ஆனார். அதுவரை தலைநகராக இருந்த லாகூரை, இல்டுட்மிஷ் டெல்லிக்கு மாற்றியதால் இவரே முதல் டெல்லியின் ஆட்சியாளராக சிலர் கணக்கிடுகிறார்கள். இவருக்கு ஆரம்பத்தில் பல இடையூறுகள் இருந்தன. முஹம்மது கோரியின் பகுதிகளைப் பிரித்து ஆண்டவர்களாலும், குதுப்தின் அய்பக்கால் வெல்லப்பட்ட இந்து மன்னர்களாலும், அரம்ஷாவின் ஆதரவாளர்களாலும் எதிர்ப்பு இருந்தது. முதலில் அவாத்ம் பதாவுன், பெனாரஸ், சிவாலிக் ஆகிய பகுதிகளை வென்றார். இவர் மகன் நசீருத்தீன் மஹ்மூத் மூலம் பெரும் இழப்புகளைச் சந்தித்து பெனாரஸையும், ரோஹில்கந்தையும் வென்றார். 1221 ல் ஒரு புயலைப்போல மங்கோலியர்கள் மத்திய மற்றும் மேற்கு ஆசியாவில் நுழைந்து நாசம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கவாரிஸ்மை வெல்ல அதன் ஆட்சியாளர் ஜலாலுத்தீன் மிங்புர்மு பஞ்சாபில் நுழைந்து இல்டுட்மிஷ்ஷின் உதவியை நாடினார். ஆனால் இல்டுட்மிஷ் அவருக்கு உதவாமல் மறுப்பு தெரிவித்தார். இதை சரித்திர ஆய்வாளர்கள் வெகுவாகப் புகழ்கிறார்கள். ஏனென்றால் முல்டான் வரை வந்த மங்கோலியர்கள் இவரைத்தேடி இந்தியாவில் நுழைந்திருந்தால் இந்தியாவின் சரித்திரம் மாறி இருக்கும். (பின்னால் மங்கோலியர்கள் டெல்லியைச் சூறையாடினார்கள். அதுவேறு சூழ்நிலை). முல்டானை ஆண்ட நசீருத்தீன் கபாச்சா, கஸ்னியை ஆண்ட தாஜுத்தீன் யில்டோஸ், பெங்காலை ஆண்ட இக்தியாருத்தீன் முஹம்மது பின் பக்தியார் கில்ஜி ஆகியோரை வரிசையாக இல்டுட்மிஷ் வென்றார். அஜ்மீர், நாக்பூர், க்வாலியர் ஆகியவற்றையும் வென்ற இல்டுட்மிஷ் பெரும் இழப்புடன் குஜராத்தின் சாளுக்கியர்களை எதிர்த்து உஜ்ஜைய்னியைக் கைப்பற்றினார். இவர் பதாவுனில் கட்டிய கோட்டையும், மஸ்ஜிதும் புகழ் வாய்ந்தது. டெல்லியின் ஜும்மா மஸ்ஜிதை அலாவுத்தீன் விரிவாக்கம் செய்வதற்கு முன் இல்டுட்மிஷ்ஷின் மஸ்ஜித் பெரியதாக இருந்தது. பல மடங்களையும், அப்போது டெக்கானில் பிரபலமாக இருந்த காரணத்தால் சூஃபி ஞானிகளுக்கு தர்காக்களையும் கட்டினார். கந்தகி பௌலி தர்காவுக்கருகில் இவர் கட்டிய அவ்ஸ் இ ஷம்சி என்னும் பெரிய தண்ணீர் தொட்டி மிகவும் புகழ் பெற்றது. அதன் அருகில் ஜஹாஸ் மஹால் என்ற ஒன்றையும் கட்டினார். பின்னாளில் அதை மொகலாயர்கள் பயன்படுத்தினார்கள். இவர் இறந்த பின் இவர் மகன் நசீருத்தீன் மஹ்மூத் கட்டியதுதான் டெல்லியில் முதல் இஸ்லாமியர்களின் சமாதி ஆகும். குதுப்மினாரில் குவ்வத் உல் இஸ்லாம் என்ற மஸ்ஜிதைக் கட்டினார். அதுவரை இந்து ராஜபுத்திரர்களின் நாணயங்களே பயன்பட்டுவந்த நிலையில் இல்டுட்மிஷ் 3.38 கிராம் எடையில் 0.59 கிராம் வெள்ளியுடன் செம்பும் கலந்து நாணயங்களை வெளியிட்டார். இன்று நாம் ரூபாய் என்றழைக்கும் மதிப்பு இவர் காலத்தில் டங்கா என்று அழைக்கப்பட்டது. 53 வகை ஈரடியாக நாசிரி என்ற கவிஞரால் எழுதப்பட்ட கவிதைக்கு 53,000 டாங்காக்கள் பரிசளித்தார். ரூஹானி அல் சமர்கண்டி என்பவரும் இவரைப் பற்றி புகழ்பெற்ற கவிதை எழுதியுள்ளார். புகழ்பெற்ற கவிஞர் அமீர்குஸ்ரு இவர் அரசவையில் இருந்தவர். 1229 ல் இல்டுட்மிஷ் நோய்வாய்ப்பட்டிருந்த போது மூத்தமகன் நசீருத்தீன் மஹ்மூத் பெங்காலில் இறந்து போனார். இல்டுட்மிஷ்ஷின் மற்ற மகன்கள் ஆட்சிக்கு தகுதியில்லாத காரணத்தால் அவர் தன் மகள் ரஸியாவை (ரஸியா சுல்தானா என்று புகழ்பெற்ற இவரைப்பற்றிய தனிப்பதிவு இன் ஷா அல்லாஹ் பின்னால் வரும்) ஆட்சிக்கு பரிந்துரைத்தார். ஆனால் இஸ்லாமிய தலைவர்கள் பெண்கள் ஆட்சிக்குத் தகுதியற்றவர்கள் என்று மறுத்து விட்டார்கள். இதனால் இல்டுட்மிஷ்ஷின் இன்னொரு மகன் ருக்னுத்தீன் ஃபிருஸ் ஆட்சிக்கு வந்தார். இவர் நிர்வாகத்தை தன் தாயார் ஷா துர்கினிடம் கொடுத்தார். ஆறு மாதங்களிலேயே ருக்னுத்தீன் ஃபிருஸ் ஆட்சி இழந்தார். மகள் ரஸியா தனது தனிப்பட்ட தகுதியால் குழப்பங்களிடையே ஆட்சிக்கு 1236 ல் வந்தார். 1240 ல் இல்டுட்மிஷ்ஷின் இன்னொரு மகன் முஃஇஸ்ஸத்தின் பஹ்ரமால் புரட்சி செய்யப்பட்டு ரஸியாவுக்கு பதில் அவர் ஆட்சிக்கு வந்தார். சகோதரி ரஸியா பாதிண்டா பகுதியில் இருக்கும்போது 40 தலைவர்களின் ஆதரவில் ஆட்சியை இவர் பிடித்தார். பாதிண்டாவின் தலைவராக இருந்த தன் கணவர் அல்தூனியாவின் துணையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ரஸியா முயன்றபோது கைது செய்யப்பட்டு கணவருடன் தூக்கிலிடப்பட்டார். இரண்டு ஆண்டுகள் பஹ்ராமின் ஆட்சியின் போதுதான் மங்கோலியர்கள் டெல்லியை துவம்சம் செய்தார்கள். அதைத் திறமையாக கையாளத் தவறியதால் ஆட்சியில் அமர்த்திய 40 தலைவர்களே இராணுவத்தைவிட்டு இவரைக் கொன்றார்கள். அடுத்து ருக்னுத்தீன் ஃபிருஸின் மகன் அலாவுத்தீன் மசூத் என்பவரை 1242 ல் தேர்ந்தெடுத்தார்கள். அவர் கொஞ்சம் கூட ஆட்சி ஆளும் திறமை இல்லாதவராக இருந்து மதுபோதைக்கு அடிமையாக இருந்தார். அதனால் அவரை நீக்கினார்கள். யாருடைய குரித்களின் ஆட்சியும் நிலையாக இல்லாத பட்சத்தில் இல்டுட்மிஷ்ஷின் அடிமை கியாசுத்தீன் பால்பனைத் துணையாகக் கொண்டு இல்டுட்மிஷ்ஷின் இன்னொரு பேரர் நசீருத்தீன் மஹ்மூத் 1246 ல் ஆட்சிக்கு வந்தார். இவர் மிகவும் இஸ்லாத்தை நேசிப்பவராக இருந்தார். கடமையான தொழுகைகள், ஏழைகளுக்கு உதவுதல் என்று இருந்து, திருக்குரானை கைகளால் எழுதி அதில் வரும் வருமானத்தில் தனது சொந்த செலவுகளைச் செய்தார். மற்ற சுல்தான்களைப்போல் ஆடம்பரமில்லாமல் தன் மனைவியைச் சமைக்கச் சொல்லி அதையே உண்டார். தன் சொந்த வேலைகள் அனைத்தையும் உதவியாளர் இன்றி தானே செய்து கொண்டார். 1266 ல் நசீருத்தீன் மஹ்மூத் இறந்துபோக, பின்னர் கியாசுத்தீன் பால்பனே ஆட்சி செய்தார்.
கியாசுத்தீன் பால்பன் துருக்கியைச் சேர்ந்த ஒரு தலைவரின் மகன். இவர் குழந்தையாய் இருந்த போது மங்கோலியர்களால் பிடிக்கப்பட்டு, கஸ்னி அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார். பஸ்ராவைச் சேர்ந்த க்வாஜா ஜமாலுத்தீன் என்பவர் இவரை வாங்கி பஹாவுத்தீன் என்று பெயரிட்டார். பின் அவர் டெல்லி அழைத்து வரப்பட்டு மற்ற அடிமைச் சிறுவர்களுடன் விற்கப்பட, சுல்தான் இல்டுட்மிஷ், கியாசுத்தீன் பால்பனை வாங்கினார். ஆரம்பத்தில் தண்ணீர் சுமப்பவராக பணியில் இருந்த கியாசுத்தீன் பால்பன் திறமையால் சுல்தானின் தனி செயலாளர் ஆனார். டெல்லியின் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் 40 துருக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். ரஸியா சுல்தானின் ஆட்சியின்போது இராணுவத்தையும், நிர்வாகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரம் கொண்டிருந்தார். ரஸியாவிற்குப் பிறகு, பஹ்ராம் ஆட்சியில் ரிவாரியின் தலைவராகவும், ஹான்சி பகுதியின் ஜாகீராகவும் இருந்து முன்ணனிக்கு வந்தார். தன் மகளை முந்தைய ஆட்சியாளர் நசீருத்தீன் மஹ்மூதுக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார். தன் இளைய சகோதரர் கிஷ்லு கானை அமீர் இ ஹாஜிப்பாக ஆக்கினார். தன் உறவினர் ஷேர்கானை லாகூர் மற்றும் பாதிண்டா பகுதிக்கு ஜாகீராக்கினார். இவர் முன்பு தளபதியாக இருந்த போது பல இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். பட்டப்பகலிலேயே டெல்லியில் நுழைந்து மேவாத் பகுதி ஆட்கள் கொள்ளை அடித்தபோது அவர்கள் மீது கியாசுத்தீன் பால்பன் கடுமையான நடவடிக்கை எடுத்து புகழ் பெற்றார். மேவாத்கள் தப்பித்து அருகில் காட்டுக்குள் ஒளிந்து கொள்ள, சுற்றிலும் மரங்களை வெட்டிக் கொண்டுவந்து அவர்களை சிறைப்பிடித்துக் கொன்றார். டெல்லியைச் சுற்றி புறக்காவல் நிலையங்களை அமைத்து கண்காணிக்க வைத்து வாணிபத்திற்கும், யாத்ரீகர்களுக்கும் பாதுகாப்பளித்தார். நீண்ட முற்றுகையிட்டு ரனதம்போர் கோட்டையைக் கைப்பற்றினார். நசீருத்தீன் மஹ்மூதுக்கு ஆண் வாரிசில்லாத நிலையில் ஆட்சிக்கு வந்த கியாசுத்தீன் பால்பனுக்கு அப்போது 60 வயது. அடிக்கடி ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரம் கொண்ட 40 பேர் குழுவை முதலில் கலைத்தார். இரும்புக்கரம் கொண்டு அடக்கி அனைவரும் ஆட்சியாளருக்கு நன்றியுடன் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். திறமையான ஓற்றர்படையையும் அமைத்தார். ஒருமுறை குடிந்திருந்த காரணத்தால் ஒரு அடிமையை சாகும்வரை அடித்துக் கொல்லச் செய்தார். இன்னொரு அடிமையின் விதவை மனைவியுடன் தொடர்பிருந்த காரணத்தால் அந்த விதவையின் முன்பாகவே  ஒரு தலைவரைக் கொன்றார். இவைகளை கவனிக்காமல் இருந்த ஒற்றனை நகரத்தின் முகப்பில் தூக்கில் தொங்கவிடச் சொன்னார். மங்கோலியர்களின் மிரட்டல் இருந்ததால் இராணுவத்தை மறுசீரமைத்தார். அதுவரை டெல்லிப்பக்கமே வராத தன் சகோதரர் ஷேர்கானை விஷம் வைத்துக் கொல்லும் அளவுக்கு இவரின் முன்னெச்சரிக்கை பிரபல்யமாக இருந்தது. இவர் எப்போதும் தர்பாருக்கு முழு ராஜ உடையுடன் தான் வருவார். தர்பாரில் தானும் சிரிக்காமல், யாரையும் சிரிக்க அனுமதிக்க மாட்டார். மேலும், மது, சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்தார். 1286 வரை 20 வருடங்கள் ஆட்சி செய்த இவர் 80 வயதில் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். கியாசுத்தீன் பால்பனின் மூத்தமகன் முஹம்மது கான் மங்கோலியர்களுடன் போரிட்டு இறந்து போனார். அடுத்த மகன் புக்ரா கான் ஆட்சிக்கு தகுதியில்லாத நிலையில் பெங்காலை மட்டும் நிர்வகித்து வந்தார். அதனால் கியாசுத்தீன் பால்பன் புக்ராகானின் மகன் கைய் குஸ்ராவை ஆட்சிக்கு பரிந்துரைத்தார். ஆனால் கியாசுத்தீன் பால்பன் இறந்த பிறகு தலைவர்கள் இன்னொரு பேரன் கைய்குபாத்தை தேர்ந்தெடுத்தார்கள்.  கைய்குபாத் ஆட்சிக்கு வந்தவுடன் பெங்காலில் இருந்த தந்தை புக்ரா கான் அதை சுதந்திரமாக அறிவித்துக் கொண்டார். கொஞ்சம் கூட திறமையே இல்லாத கைய்குபாத் உறுப்புகளும் செயலிழந்த நிலையில் தன் மூன்று வயது மகன் ஷம்சுத்தீன் கயுமார்சிடம் ஆட்சியை மாற்றினார். அக்குழந்தைக்கு பொறுப்பாளராக இருந்த ஜலாலுத்தீன் ஃபிருஸ் கில்ஜி குழந்தையைக் கொன்று, கில்ஜி ஆட்சிவம்சம் தோன்றச்செய்து மம்லுக்குகளின் அடிமை ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கியாசுத்தீன் பால்பனின் சமாதி இன்றும் டெல்லியின் மெஹ்ராலி ஆர்சியாலஜி பூங்காவில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக