வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சிலுவைப்போர் 5

சில நாட்கள் கழித்து தப்பித்த சிலர் பாலஸ்தீன அகதிகளாக டமாஸ்கஸ் நகரம் வந்தார்கள். அவர்கள் நடந்த கொடூரங்களை மற்ற முஸ்லீம்களுக்கும், நகரங்களுக்கும் தெரியப்படுத்தி இஸ்லாமிய ஜிஹாத் நடத்தப்பட வேண்டும் என்றார்கள். ஆனால் அரபுகள் துருக்கி களாக, ஃபாத்திமிட்களாக, அப்பாஸிட்களாக, பெர்ஷியர்களாக, பல சிறிய ஆட்சியாளர்களாக பிரிந்து கிடந்தார்கள். எகிப்தின் ஆட்சியாளர் ஐரோப்பியர்களை பாலஸ்தீனத்திலிருந்து விரட்ட படையைத் தயார் செய்தார். சிலுவைப் படைகள் ஜெருசலம் முழுவதையும் கொள்ளையடித்து, எஞ்சிய நகரவாசிகளைக் கொன்றார்கள். 20 நாட்கள் கழித்து 1099 ஆகஸ்டில் எகிப்திய படைகள் ஜெருசலத்தை அடைந்தது. பாலஸ்தீனின் துறைமுக நகரமான அஸ்கலானில் முகாமிட்டிருந்த எகிப்திய படைகளுடன் சிலுவைப் படைகள் மோதி பத்தாயிரத்துக்கும் அதிகமான உயிர்களைக் கொன்று அவர்களின் கூடாரங்களை அழித்தது. சில நாட்களுக்குப் பிறகு அபு சாஃத் அல் ஹரவி என்ற டமாஸ்கஸின் நீதிபதி தலைமையில் ஒரு அகதிகள் குழு பாக்தாத் சென்று அப்பாஸிய கலீஃபா அல் முஸ்தஸீரைச் சந்தித்து அரபுகள் சிலுவைப் போராளிகளுக்கு எதிராக இணைய வேண்டியதின் அவசியத்தை உணர்த்தினார். 1099 ஆகஸ்டு 19 வெள்ளிக்கிழமை தொழுகையிலும் ஐரோப்பாவுக்கு எதிராக முஸ்லீம்கள் ஒன்று சேர வேண்டுமென்று அல் ஹரவி கேட்டுக்கொண்டார். 1011 ல் சிலுவைப் படைகள் பாலஸ்தீனின் துறைமுக நகரமான கெய்சரீயாவில் நுழைந்து கொள்ளையடித்தும், கொலைகளையும் செய்தார்கள். நகர மக்கள் அனைவரையும் பெரிய மஸ்ஜிதின் முன்பு கொண்டு வந்து நிறுத்திக் கொன்றார்கள். 1102 லும் ரெய்மா ண்ட் தலைமையில் திரிபோலி நகரத்தில் நுழைந்து 7,000 அரபு முஸ்லீம்களைக் கொன்றனர்.
1102 மே மாதம் முஸ்லீம்களுக்கு சிலுவைப் படைகளை ஒழிக்க அருமையான வாய்ப்பு வந்தது. ஆனால் நழுவ விட்டார்கள். எகிப்திய இராணுவம் திடீரென்று பாலஸ்தீனின் ரம்லாஹ் நகரில் சிலுவைப் படைகளை எதிர்த்தது. அதில் அதிகமான எதிரிகள் கொல்லப்பட்டு, சிறை பிடிக்கப்பட்டார்கள். ஜெருசலம் மன்னன் பால்ட்வின் பிடிபடாமல் தப்பிக்க ஒரு கூறையின் கீழே வயிறை சுருக்கிக் கொண்டு ஒளிந்து கொண்டான். அப்போது பாதுகாப்பு அதிகமில்லாத ஜெருசல த்தை அரபுகள் பிடித்திருக்கலாம். ஆனால் தீர்மானமாக இல்லாமலும், தயக்கத்துடனும் இருந்த அதன் தளபதியால் சந்தர்ப்பத்தை நழுவ விட்டார்கள். அதற்கடுத்த வருடம் புதிய இராணுவத்தை எகிப்து அனுப்பிய போது ஜெருசலத்தைப் பிடிக்க முடியாமல் போனது. ஒவ்வொரு தோல்வியின் போதும் உயிர் களுடன் நகரங்களையும் சிலுவைப் போராளிகளிடம் இழந்தார்கள். 1104 ல் சிலுவைப் படைகள் வரிசை யாக ஜஃப்ஃபா, ஹைஃபா மற்றும் அக்ரி ஆகிய அரபு நகரங்களைப் பிடித்தார்கள். 1109 ல் திரிபோலியின் மீது படையெடுத்து மிகக் கொடூரமான முறையில் கொன்று குவித்து அதைக் கைப்பற்றினார்கள். அரபு களின் கிழக்குப்பகுதி துறைமுக நகரமான திரிபோலி ‘ஜுவல் ஆஃப் அராப்’ என்று அழைக்கப்பட்டது. கனி வகைகளும், கரும்புத் தோட்டங்களும், ஆலீவ் மரங்களும் பூத்துக் குலுங்கும் நகரம் திரிபோலி. படித்த நீதிபதிகளும், தைரியமான கடலாடிகளும், மத போதகர்களும், புகழ் பெற்ற நூலகங்களும் கொண்ட நகரம் திரிபோலி. படிப்பறிவில்லாத காட்டுமிராண்டி கிறிஸ்தவ படைகள் திரிபோலியை நாசம் செய்தார்கள். முஸ்லீம்களின் பொக்கிஷமான தார் அல் இல்ம் என்றும் ஹவுஸ் ஆஃப் நாலட்ஜ் என்றும் அழைக்கப்பட்ட ‘பனூ அம்மார்’ நூலகத்தை சூறையாடினார்கள். ஒப்பற்ற களஞ்சியங்களான அதன் 100,000 புத்தகங்கள் இன்றுவரை வெளி உலகத்தினரால் படிக்க முடியாமல் போனது. பிடிக்கப்பட்ட திரிபோலி மக்கள் ஐரோப்பிய அடிமைச் சந்தையில் விற்கப்பட்டார்கள். செல்வந்தர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு நகரத்தை விட்டு விரட்டப்பட்டார்கள். திரிபோலியிலிருந்து வெளியேறிய சிலர் அருகா மை நகரமான டைரில் அகதிகளாக நுழைந்தார்கள். ஆண்டியாக், ஜெருசலத்தைத் தொடர்ந்து திரிபோ லியும் மேற்கத்தியர்களின் ஐரோப்பிய காலனியானது. மூன்றிலொரு பங்கு ஜினோயிசின் காலனியாக வும், மூன்றில் இரண்டு பங்கு காட்டுமிராண்டி ரெய்மாண்டும் பிரித்துக் கொண்டார்கள்.
1110 மே மாதம் சிலுவைப் படைகள் மற்றுமொரு கொடூரத் தாக்குதலுக்கு பெய்ரூட் நகரத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அதே ஆண்டு டிசம்பரில் புராதன சிடோன் நகரின் துறைமுகமான சைதாவைத் தாக்கி அதிகமான மக்களை டைருக்கும், டமாஸ்கஸுக்கும் அகதிகளாக துரத்தினார்கள். குறுகிய காலத்தில் ஜஃப்ஃபா, ஹைஃபா, அக்ரி, திரிபோலி, பெய்ரூட், சைதா ஆகிய ஆறு நகரங்களைப் பிடித்து அதிலிருந்த மசூதிகளை இடித்தார்கள். இவைகள் ஒட்டுமொத்த அரபு தேசங்களையும் உலுக்கியது. அடுத்த நகரங்களான டைர், அலிப்போ, மோசூல், டமாஸ்கஸ், கெய்ரோ, பாக்தாத் ஆகியவை மக்கா உட்பட பயத்துடன் இருந்தன. அலிப்போவின் நீதிபதி அப்துல் ஃபதல் இப்ன் அல் கஷாப், அப்பாஸிய கலீஃபா அல் முஸ்தஸிரின் கவனம் ஈர்க்கும் வண்ணம் தலைநகர் பாக்தாதில்  மக்களைத் திரட்டி ஜிஹாத் போர் செய்ய வேண்டுமென்று பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தினார். இது பெரிய கலவரமாக மாறியது. 1111 ஜூலையில் அஸ்கலோன் நகர மக்களும் தங்கள் கோழை தலைவர் ஷம்ஸ் அல் கலீஃபா 7,000 தீனார்களை கப்பமாக ஜெருசலம் மன்னன் பால்ட்வின்னுக்கு கொடுத்ததைக் கண்டித்து புரட்சி செய்தார்கள். புரட்சியை அறிந்த பால்ட்வின் கலீஃபாவுக்கு பாதுகாப்பாக 300 சிலுவைப்படை வீரர்களை அனுப்பினான். ஆனால் அஸ்கலோன் மக்கள் கலீஃபாவையும், 300 சிலுவைப்படை வீரர்களையும் கொன்று தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.
1119 ஜூனில் அலிப்போவின் ஆட்சியாளர் நஜ்ம் உத் தீன் இல் காஸி ஆண்டியாக்கில் சர்மதா என்ற இடத்தில் சிலுவைப் படைகளைத் தோற்கடித்தார். ஆண்டியாக் வழியாக மக்கா செல்லும் யாத்திரிகர்களிடம் வரி வசூலித்த இத்தாலியின் இளவரசர் ரிச்சர்டின் மகன் கொடுமைக்காரன் ஸர். ரோஜரை போரில் கொன்றார். இது பெரிய இழப்பாக கருதாத சிலுவைப் படைகள் வழக்கம் போல் அடுத்த நகரமாக டைரை 1124 ல் கைப்பற்றி மொத்த அரபு கிழக்கு மெடிட்டரேனியன் பகுதிகளையும் தங்கள் அதிகாரத்தில் கொண்டு வந்தார்கள். 1144 ல் மேற்கத்திய கிறிஸ்தவ வெறியாளர்களுக்கு இறங்கு முகம் ஆரம்பித்தது. ஈராக்கின் மோசூல் நகரின் கவர்னராக இருந்த இமாத் அத்தீன் ஸங்கி, பாக்தாதின் அப்பாஸிய கலீஃபாவின் ஆதரவில் இருந்தார். முதலில் எடிஸ்ஸாவை சுதந்திரமாக்கி, அடுத்தடுத்து நான்கு சிலுவைப் படைகளின் காலனிகளை வென்றெடுத்தார். அரபு உலகம் மொத்தமும் வெற்றிக் களிப்பில் மிதந்தது. பின்னர் ஆண்டியாக்கையும், திரிபோலியையும் சிலுவைப் படைகள் இழந்தது.
எடிஸ்ஸா நகரம் முஸ்லீம்கள் வசம் போனதை அறிந்த போப் மூன்றாம் ஈஜீனியஸ் ஐரோப்பாவில் இரண்டாம் சிலுவைப் போருக்கு கூக்குரலிட்டான். இதை செவியேற்ற ஐரோப்பா சக்திவாய்ந்த படையை தயார் செய்தது. அப்படைக்கு ஜெர்மனியின் பேரரசர் மூன்றாம் கொனார்டும், ஃப்ரான்சின் மன்னன் ஏழாம் லூயிஸும் தலைமை தாங்கினார்கள். ஐரோப்பாவின் முக்கிய மாகாணங்கள் கலந்து கொண்ட இரண்டாம் சிலுவைப் போர் அவர்களுக்கு பெரும் தோல்வியில் முடிந்தது. 1148 ல் ஸங்கியின் மகன் நூருத்தீன் டமாஸ்கஸில் சிலுவைப் படைகளை துவம்சம் செய்தார். அதுவும் ஜெர்மனி மற்றும் ஃப்ரான்ஸ் மன்னர்களை சாதுரியமாக நூருத்தீன் எதிர்த்து வெற்றி பெற்ற செய்தி மொத்த அரபு உலகத்தையும் உற்சாகப்படுத்தியது. விரைவில் முஸ்லீம்கள் பிரதேசங்களான ஜெருசலம், ஆண்டியாக், திரிபோலியிலிருந்து அனைத்து ஐரோப்பியர்களும் வெளியேற்றப்பட்டு விடுவார்கள் என்று நம்பிக்கை கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக