திங்கள், 13 ஜூலை, 2015

அல்மொராவிட்கள் வரலாறு

அல்மொராவிட்கள் வரலாறுகூ.செ. செய்யது முஹமது   
மொரோக்கோவில் 11 ம் நூற்றாண்டில் தோன்றிய பெர்பெர் இனத்தவர்களின் ஆட்சிவம்சம். அல்மொராவிட் என்பதற்கு கோட்டைக்காக போரிடும் ஒருவன் என்று பொருள். முன்ணனிக் கோட்டையான மொரோக்கோவின் ரிபாத் (ரபத்-ஒன்று கூடு) என்பதைக் குறிக்கும். சிலர் வஜ்ஜல் இப்ன் ஸல்வி என்பவர் ‘தார் அல் முரபதின்’ என்ற அமைப்பின் மூலம் தன் மாணவர் அப்த் அல்லாஹ் இப்ன் யாசீன் என்பவரை மேற்கு சஹாரா பகுதியில் வசித்த சன்ஹஜா பெர்பெர்களுக்கு இஸ்லாம் போதிக்கச் சென்றார். இந்த முரபதின் பெயரால் அவர்களுக்கு அல்மொராவிட் என்று பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள். வட ஆப்பிரிகாவிலும் சேர்ந்த சில பகுதிகளைக் கொண்ட மக்ரெப் பகுதியைச் சேர்ந்த பெர்பெர் மக்கள் மூன்று முக்கிய கூட்டங்களாகக் கருதப்பட்டார்கள். மொரோக்கோவின் வடக்கிலிருந்தவர்கள் ஸினாடா என்றும், மத்தியில் இருந்தவர்கள் மஸ்முதா என்றும், இரண்டு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் சன் ஹாஜா என்றும் அழைக்கப்பட்டார்கள். சஹாராவின் மேற்குப்பகுதி மக்ரெப்பின் கிழக்குப்பகுதியாகும். கிழக்கு சன்ஹாராவில் குதாமா பெர்பெர்கள் என்று இருந்த கூட்டம் ஃபாத்திமிட்கள் சார்ந்த ஸிரிட் ஆட்சிவம்சம் என்று 10 ம் இஃப்ரிகியாவில் ஆரம்பித்து எகிப்து வரை பரவியது. அல்மொராவிட்களின் பூர்வீகம் பற்றி அறிந்தால் தலை சுற்றிப் போக்கும் பல இன மக்கள், பல மதத்தலைவர்கள், பல இடங்கள், பல பகுதிகள 5 நூற்றாண்டுகளாகச் சுற்றிச் சுற்றி வரும் புரிந்து கொள்வது கடினம். அதனால் நாம் நேரடியாக ஆட்சியாளர்கள் வரலாறைப் பார்ப்போம். யஹ்யா இப்ன் உமர் என்பவரும், அப்தல்லாஹ் இப்ன் யாசீன் என்பவரும் சேர்ந்து தங்களை அல்மொராவிட்கள் (அல் முரபிதின்) என்று அழைத்துக் கொண்டார்கள்.
அப்தல்லாஹ் இப்ன் யாசீன் மொரோக்கோவின் ரோம்மனி என்ற இடத்தில் பிறந்தவர். சிறந்த மதபோதகராக இருந்து, அல்மொராவிட் ஆட்சிவம்சத்தை தோற்றுவித்தார். சூஸ் என்னும் பழங்குடி இனத்தின் உட்பிரிவான சன்ஹஜாவின் ஜஸூலாஹ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமின் நான்கு மதபுகளில் ஒன்றான மாலிகி பிரிவைச் சேர்ந்தவர். ரிபாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வக்காக் இப்ன் ஸல்லு அல் லம்தி என்ற மாலிகி பிரிவு போதகரின் மாணவர். ரிபாத்தில் அக்லூ என்ற கிராமத்தில்(தற்போது இது டிஸ்நிட் நகரமாகும்) ‘தார் அல் முராபிதின்’ என்ற அமைப்பு இருந்தது. 1046 ல் மாரிடானியாவின் பகுதியிலிருந்து குடாலா மக்களின் தலைவர் யஹ்யா இப்ன் இப்ராஹீம் என்பவர் ரிபாத்தின் தார் அல் முராபத்தினை அணுகி, வக்காக் இப்ன் ஸல்லூவிடம் தங்கள் பெர்பெர் பகுதிக்கு வந்து இஸ்லாமைப் போதிக்குமாறு அழைத்தார். வக்காக், அப்தல்லாஹ் இப்ன் யாசீனை அவருடன் அனுப்பினார். அம்மக்களிடம் இஸ்லாம் தாறுமாறாக கடைபிடிக்கப்பட்டிருந்ததை அப்தல்லாஹ் இப்ன் யாசீன் ஒழுங்குபடுத்தி ‘சுன்னிப்பிரிவு’ வழியில் கொண்டு வந்தார். இதற்கிடையில் குடாலா மக்கள் பகுதியில் கலவரம் நடக்க தன் ஆதரவாளர்களை பிரித்து, லம்தூனா பழங்குடியினரின் தலைவராக இருந்த யஹ்யா இப்ன் உமருடன் இணைந்து கலவரத்தை அடக்கினார். பின்னர் அப்தல்லாஹ் இப்ன் யாசீன் குடாலா மற்றும் லம்தூனா மக்களை இணைத்து ஒரு படை உருவாக்கி அதற்கு யஹ்யா இப்ன் உமரை இராணுவத் தளபதி ஆக்கினார். 1054 ல் மக்ரவா வெற்றி கொள்ளப்பட்டது. அப்தல்லாஹ் இப்ன் யாசீன் மது, இசை ஆகியவற்றைத் தடை செய்தும், இஸ்லாமிய முறையில் அல்லாத வரிகளையும் தடை செய்தார். போரில் கிடைக்கும் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை தீனுக்காகச் செலவழித்தார். இந்த நடைமுறைகளை கடுமையாகக் கருதிய மக்கள் 1055 ல் கலவரத்தில் ஈடுபட்டார்கள். 1056 ல் குடாலா பகுதி கலவரத்தில் யஹ்யா இப்ன் உமர் கொல்லப்பட்டார். அப்தல்லாஹ் இப்ன் யாசீன் யஹ்யாவின் சகோதரர் அபு பக்ர் இப்ன் உமரை இராணுவத் தளபதி ஆக்கினார். அபு பக்ர் சிஜில்மஸா வை வெற்றி கொண்ட போதிலும் குடாலா மக்களை அல்மொராவிட்டின் கீழ் கொண்டுவர முடியவில்லை. 1057 ல் அபு பக்ர் சூஸ் மற்றும் அதன் தலைநகர் அக்மட்டை வெல்லச் சென்றார். 1059 ல் அட்லாண்டிக்கின் கடற்கரைப்பகுதியான பர்கவதாவில் போரிடச் சென்றபோது அப்தல்லாஹ் இப்ன் யாசீன் மரணமடைந்தார். இவருடைய சமாதி தென்ரபாத்தின் ரோம்மனிக்கருகில் உள்ளது. சமாதிக்கருகில் மஸ்ஜிதும், நினைவு தூணும் எழுப்பட்டு இன்றளவும் இருக்கிறது.
லம்துனா பழங்குடியின் தலைவரான யஹ்யா இப்ன் உமர், அப்துல்லாஹ் இப்ன் யாசீனின் துணையுடன் முதல் அல்மொராவிட்களின் எமிர் ஆனார். 9 ம் நூற்றாண்டில் சஹாரா பாலைவனத்தில் இருந்த பல பழங்குடியினர்கள் மத்தியில் சன்ஹஜா பிரிவைச் சேர்ந்த குடாலா மற்றும் லம்துனா பழங்குடிகள் இஸ்லாமை ஏற்றார்கள். இதனால் பழைய காட்டுமிராண்டித்தனமாக இருந்த சூடானியர்களுடன் அடிக்கடி சண்டை போட்டார்கள். சன்ஹாஜாக்கள் சஹாராவின் பல பகுதிகளைக் கைப்பற்றினார்கள். சில காலங்களில் சன்ஹாஜாக்களின் கூட்டு பிரிய ட்ரான்ஸ்-சஹாரா வாணிபவழி தடைப்பட்டது. அப்துல்லாஹ் இப்ன் யாசீனுடன் சேர்ந்து அனைவரையும் ஒன்று திரட்டினார். மளமளவென்று பலபகுதிகளை வென்றார். கானாவை எதிர்ப்பதற்காக செனெகல் ஆற்றின் அருகில் இருந்த டக்ருர் என்ற கருப்பின ஆட்சியாளர் வார்ஜபி என்பவரின் ஒத்துழைப்புடன் தப்ஃபரில்லா போரில் 1056 ல் ஈடுபட்டார். அப்போரின் போது யஹ்யா இப்ன் உமர் கொல்லப்பட்டார்.
 மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் சாலிஹ் இப்ன் தாரீஃப் என்பவர் அமைத்த ‘ஹெரிஸி’ என்பதைத் தொடரும் ‘பெர்கோவட்டா’ என்ற பெர்பெர் பழங்குடியினர்கள் அவ்வப்போது நடத்தும் கூட்டத்தின் பார்வையில் பட்டார்கள். பின் 1059ல் மொரோக்கோவின் ரோம்மனி நகருக்கருகில் உள்ள க்ரிஃப்லா என்ற கிராமத்தில் அவர்களுடன் நடந்த சண்டையில் அப்தல்லாஹ் இப்ன் யாசீன் கொல்லப்பட்டார். ஆனாலும் போரில் அவர்களை அபு பக்ர் இப்ன் உமர் வெற்றி கொண்டு அனைத்துக் குழுக்களுக்கும் இஸ்லாமை அறிமுகப்படுத்தி இணைய வைத்தார். அபு பக்ர் இப்ன் உமர், புகழும் வசதியும் பெற்ற பெண்ணான ஸைனப் அந் நஃப்ஸவிய்யத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மேலும் அல்மொராவிட் ஆட்சிவம்சத்தை முன்னேற உதவி செய்தார். ஸைனப், கைரோவானைச் சேர்ந்த ஹூவரா பகுதியின் பெரும் வணிகர் ஒருவரின் மகளாவார். 1061 ல் அபு பக்ர் இப்ன் உமர் வென்ற பகுதிகளை தன் மைத்துனர் யூசுஃப் இப்ன் தஷ்வினின் அதிகாரத்திற்குக் கொடுத்து, மனைவி ஸைனபை அவருக்கு உதவ வைத்தார். அபு பக்ர் இப்ன் உமர் அந்த பகுதிகளில் அடிக்கடி நடந்த பழங்குடியினரின் புரட்சியை அடக்குவதற்காகச் சென்றார். 1087 ல் அவர் திரும்பி வந்து அதிகாரத்தைத் திரும்ப பெறலாம் என்ற போது மைத்துனர் யூசுஃப் இப்ன் தஷ்வின் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்தார். சூடான் நாட்டுக்கு எதிராக நடந்த ஒரு சண்டையில் அபு பக்ர் இப்ன் உமர் விஷம் தோய்ந்த அம்பினால் எறியப்பட்டு மரணமடைந்தார்.
யூசுஃப் இப்ன் தஷ்வின் மேலும் சில பகுதிகளை வென்று மொரோக்கோவின் மேற்கு சஹாரா மற்றும் மாரிடானியாவை முழு அதிகாரத்தில் கொண்டு வந்தார். 1062 ல் இவர்தான் மர்ரகெஷ் நகரத்தை உருவாக்கினார். 1080 ல் லெம்சென் என்ற பகுதியை வெற்றி கொண்டார். அதுதான் தற்போதைய அல்ஜீரியா நாடு. மேலும் தூரக்கிழக்கில் ஓரன் நகரம் வரை வென்றார். 1075 ல் கானா பேரரசை வென்ற பின், 1100 ல் அல்மொராவிட் பேரரசு இராணுவத்திலும், வாணிபத்திலும் மிகவும் பெயர் பெற்றது. சில பழங்குடியின தலைவர்களால் சிதறுண்டு மாலி பேரரசு என்று ஒன்றைத் தோன்றச் செய்தார்கள். இவர்கள் இராணுவ பலத்தைக் குறைத்துக் கொண்டு மதரீதியாக அணுக ஆரம்பித்தார்கள். பழங்குடியினரின் பெண்களை திருமணம் செய்து உறவுகள் மூலம் எதிர்ப்பை அடக்கினார்கள். ஐபீரிய தீபகற்பத்தில் அல் அண்டலூசின் இஸ்லாமிய தைஃபா இளவரசர்கள் தங்கள் பகுதிகளை லியூன் மற்றும் காஸ்டிலின் மன்னன் ஆறாம் அல்ஃபோன்சா ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், தங்களுக்கு இராணுவ உதவி செய்யுமாறும் வேண்டி, யூசுஃப் இப்ன் தஷ்கினை அழைத்தார்கள். அவர் கடினமான ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்து சென்று அல்ஜிசிராஸ் அடைந்து அஸ் ஸல்லாகாஹ் (சக்ராஜாஸ்) போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். பின்னால் இவர் ஆப்பிரிக்காவில் காலூன்ற சிரமப்பட்டார். தன் பேரரசை தைஃபா பிரதேசங்களுடன் இணைக்க ஒப்புக்கொண்டு 1090 ல் ஐபீரியாவிலிருந்து திரும்பினார். அதிகமான ஐபீரிய மக்கள் இவரின் வரவை விரும்பியதற்கான காரணம், அவர்களின் ஆட்சியாளர்கள் கடுமையான வரிகளை அவர்கள் மீது விதித்திருந்தார்கள். அம் மக்களின் மதபோதகர்களும் (குறிப்பாக பெர்ஷியாவின் அல் கஸாலி, டோர்டோஸாவின் அல் தர்டுஷி) தைஃபாக்கள் இஸ்லாமிய கொள்கைகளை விட்டு நழுவுவதால் வெறுப்படைந்திருந்தனர். இதனால் மத ஈடுபாடுள்ள யூசுஃப் இப்ன் தஷ்கினுக்கு தைஃபாக்களை வெல்ல அனுமதி இருக்கிறது என்று ஃபத்வா (மதம் சார்ந்த சட்டம்) வெளியிட்டார்கள். 1094 ல் யூசுஃப் இப்ன் தஷ்கின் சரகொஸ்ஸாவைத் தவிர தைஃபாக்களின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றினார். எல் சிட் என்பவரின் மகன், டெய்கோ ரோட்ரிகஸ் ஆகியவர்களை எதிர்த்து ‘கன் சுயூக்ரா போரில்’ அல்மொராவிட்கள் வென்றார்கள். பாக்தாத் கலீஃபாவின் நட்பு கிடைக்க யூசுஃப் இப்ன் தஷ்கினுக்கு ‘அமீர் அல் முஃமீன் (உண்மையின் தளபதி), ‘அமீர் அல் முஸ்லிமீன் (முஸ்லீம்களின் தளபதி) போன்ற பட்டங்களை பாக்தாத் கலீஃபா வழங்கினார். அல்மொராவிட்களின் அதிகாரம் உச்சத்திலிருந்த போது நூறு வயதை நெருங்கும் நிலையில் யூசுஃப் இப்ன் தஷ்கின் மரணமடைந்தார். 1108 ல் தமீம் அல் யூசுஃப் என்பவர் காஸ்டைல் பேரரசுடன் ‘உச்லிஸ் போரில் வென்றார். கிறிஸ்தவர்களை எதிர்த்து வாலென்ஷியாவை வென்றார். பல பகுதிகளை வெல்ல முடியாவிட்டாலும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு தடையை ஏற்படுத்தினார். 1134 ல் ‘ஃப்ராகா போரில்” அல்மொராவிட்கள் வென்றார்கள். மேலும் 1139 ல் அரகானின் முதலாம் அல்ஃபோன்ஸாவையும் வென்று உச்சமடைந்தார்கள்.
அடுத்த மூன்றாண்டுகள் கழித்து யூசுஃப் இப்ன் தஷ்கினின் மகன் அலி இப்ன் யூசுஃப் ஆட்சிக்கு வந்தார். அவர் சின்ட்ரா மற்றும் சண்டாரீம் பகுதிகளை பேரரசில் இணைத்தார். 1119 லும், 1121 லும் ஐபீரியாவுக்கும் ஊடுருவினார் ஆனால் அது அரகானியர்களுக்கு ஃப்ரான்ஸ் உதவி புரிந்ததால் பலனளிக்கவில்லை. அலி இப்ன் யூசுஃபின் ஆட்சியின் போது 1138 ல் லியூனின் ஏழாம் அல்ஃபோன்சாவிடம் தோற்றுப் போனார். 1139ல் ‘ஊரிக்யூ போரில்’ போர்ச்சுக்கலின் முதலாம் அல்ஃபோன்சாவிடம் தோற்றுப்போனார். 1147 ல் போர்ச்சுகல்லிடம் லிஸ்பனை இழந்தார். இதற்கு சரித்திர ஆராய்ச்சியாளர்கள் அலி இப்ன் யூசுஃப் புதிய தலைமுறையச் சேர்ந்தவராய் அப்போது இருந்ததால் பாலைவனப் போர்முறையை மறந்து போனார் என்று சொல்லப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்தவ எதிரிகளால் ஐபீரியாவிலும், அல் மொஹத் என்பவர்களால் மொரோக்கோவிலும் தோல்வியைத் தழுவினார். 1143 ல் அலி இப்ன் யூசுஃபின் மறைவிற்குப் பிறகு, அவர் மகன் தஷ்ஃபின் இப்ன் அலி ஆட்சிக்கு வந்து தொடர்ந்து பல பகுதிகளை அல் மொஹதுகளிடம் இழந்தார். தஷ்ஃபின் இப்ன் அலி தந்தை ஆளும் போது 1129 ல் அல்மீரியாவிலும், க்ரனாடாவிலும் கவர்னராக இருந்தார். பின்னர் 1131 ல் கோர்டோபாவிலும் கவர்னராக இருந்தார். 1143 ல் அல்மொராவிட்களின் ஆட்சியாளராக வந்தார். 1145 ல் அப்த் அல் முஃமீன் தலைமையில் ஓரன் பகுதிக்கு அல்மொஹதுகளை எதிர்த்து போருக்குச் சென்றார். போரின் போது தோல்வியுற்று போர் கூடாரங்களை கொளுத்திவிட்டு இரவோடு இரவாக கப்பலில் தப்பிக்க இருந்தார். அதற்காக இரவில் விரைவாக குதிரையைச் செலுத்தியவர்  செங்குத்தான பாறையிலிருந்து விழுந்து இறந்து போனார்.
இவருக்குப்பின் இவர் சகோதரர் இப்ராஹீம் இப்ன் தஷ்ஃபின் அல்மொராவிட்களின் ஆட்சிக்கு வந்தார். இவர் குழந்தையாக இருந்ததால் உறவினர் இஷாக் இப்ன் அலி ஆட்சிக்கு வந்தார். ஆனால் விரைவில் அல்மொஹத்களிடம் தோல்வியுற்று இப்ராஹீமும், இஷாக் அலியும் கொல்லப்பட்டு அல்மொராவிட்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்தல்லாஹ் இப்ன் யூசுஃப் இராணுவத்தை இஸ்லாம் கூறிய சட்டப்படி கட்டுப்பாடுடன் வைத்திருந்தார். அல்மொராவிட்களின் முதல் ஆட்சியாளர் யஹ்யா இப்ன் உமர் இராணுவத்திற்கு சிறந்த பயிற்சி கொடுத்தார். முன்ணனிப்படையாக அம்புகள் ஏந்திய காலாட்படையும், அடுத்து ஈட்டி எறியும் படையும், பின்னால் இவர்களை ஆதரித்த வண்ணம் ஒட்டகம் மற்றும் குதிரைப்படையும் இருக்கும்படி போர் நடவடிக்கையை வைத்திருந்தார். முன்னால் ஒரு குதிரையில் நீண்ட கொடியைப் பிடித்தபடி செல்லும் வீரன் கொடியை மேலும் கீழும் உயர்த்திக் காட்டினால் படைகள் தொடரும், அதே கொடியை எதிரிகளைப் பார்த்துவிட்டு கீழே தாழ்த்தினால் படைகள் தரையில் படுத்து பதுங்கிக் கொள்ளும். யாராவது தனது போர்வீரர்கள் முன்ணனியிலிருந்து பின் வாங்கினால் அல்மொராவிட்கள் கொன்றுவிடுவார்கள். முன்னேறியவர்கள் நிச்சயம் எதிரியிடம் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தால் பின் வாங்காமல் முடிந்தால் எதிரிக்கு இழப்பேற்படுத்திவிட்டு போரிட்டுத்தான் இறப்பார்கள். அந்த சமயத்தில் இந்த போர்முறை புதியதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக