திங்கள், 13 ஜூலை, 2015

அல்மொஹத்கள் வரலாறு 1

அல்மொஹத்கள் வரலாறு

கூ.செ. செய்யது முஹமது   
மொரோக்கோவைச் சேர்ந்த பெர்பெர் முஸ்லீம் ஆட்சியாளர்களால் 12 ம் நூற்றாண்டில் தோன்றியது அல்மொஹத் ஆட்சிவம்சம். இவ்வாட்சிவம்சம் ஆட்சியாளர்களை கலீஃபா என்று அழைத்தது. தென் மொரோக்கோவின் மஸ்முதா பழங்குடியினத்தைச் சேர்ந்த இப்ன் துமார்ட் என்பவர் பேரரசைத் தோற்றுவித்தார். இவரின் முழுப்பெயர் அபு அப்த் அல்லாஹ் முஹம்மது இப்ன் துமார்ட் ஆகும். மஸ்முதா பழங்குடியினரின் மதபோதகராக இருந்த இப்ன் துமார்ட் அருகாமை ஆட்சியாளர்களாக இருந்த அல்மொராவிட்களை எதிர்த்து அடிக்கடி கலவரங்கள் நடத்தினார். இவர் தோராயமாக 1078 லிருந்து 1082 க்குள் சூயஸ் பள்ளத்தாக்கில் இகிலிஸ் கிராமத்தில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் தந்தை மஸ்ஜிதில் தினசரி விளக்கு ஏற்றுபவராக இருந்தார். இப்ன் துமார்ட் தான் முஹம்மது நபி (ஸல்) களின் வழிவந்தவர் என்று சொன்னார். 8 ம் நூற்றாண்டில் நபி (ஸல்) களாரின் ஒரு பேரர் அகதியாக மொரோக்கோ வந்தார். அவர் வழிமுறையில் தோன்றியவர்கள் என்றார். இதை இப்ன் கல்தூன் ஆதரித்தார். ஆனால் சிலர் அக்காலகட்டத்தில் ஆதாயம் பெறுவதற்காக நிறைய தலைவர்கள் தாங்கள் நபி வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள் என்று கருத்து வெளியிட்டார்கள். இப்ன் துமார்ட் பாக்தாத் சென்று அஷ்அரிட் என்ற பள்ளியில் மதம் சார்ந்த கல்வியைக் கற்றார். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) யிடமிருந்து சூஃபி ஷரீய சிறப்பு இஸ்லாமிய பயிற்சியும் பெற்றார். இமாம் அவர்களின் சிறப்பான புத்தகமான “இஹ்யா உலூம் அல் தீன்” என்ற புத்தகத்தை சுன்னிப்பிரிவு வழியில் வந்த அல்மொராவிட்கள் பொதுவில் வைத்து தீயிட்டார்கள். இமாம் அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த இப்ன் துமார்டையே தலைவராக இருந்து அல்மொராவிட்களை எதிர்க்கச் சொன்னார்கள். இப்ன் துமார்ட் முதலில் அல்மொராவிட்களின் மாலிகி மதபின் வழி பள்ளிக் கூடங்களை எதிர்த்தார். மது, பன்றிக்கறிகளை பொதுவில் வைத்து விற்பனை செய்வதையும் எதிர்த்தார். மசூதிகளிலிருந்த மற்ற இஸ்லாமிய வழிமுறையினர்களின் அடையாளங்களை மறைத்தும், அழித்தும் வந்த அல்மொராவிட்களை எதிர்த்தார். இதை அவர் முழுவீச்சில் செய்ததால் தன் பகுதி மக்களை ஒன்றினைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இப்ன் துமார்ட்டின் வழியைப் பின்பற்றியவர்கள் “அல் முவ்வாஹிதூன்” என்று அழைத்துக் கொண்டார்கள்.
பாக்தாதில் கல்வியை முடித்துக் கொண்டு புனித மக்கா பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அதற்கு ஈடாக தன் மக்களை நேர்வழியில் கொண்டு வந்து விட்டு பிறகு பயணம் போகலாம் என்று தங்கள் பகுதிக்கு வந்தார். இவரால் தொல்லை என்று அல்மொராவிட்கள் இவரைத் துரத்தினார்கள். அங்கிருந்து கெய்ரோ, அலெக்ஸாண்டிரியா சென்றவர் 1117 ல் மக்ரெப் திரும்ப கப்பல் ஏறினார். அக்கப்பலிலிருந்த மதுவைக் கொட்டி, கப்பல் பணியாளர்களை நேரத்திற்கு தொழும்படியும், மேலும் மதரீதியான பிரச்சாரத்தையும் செய்தார். இதனால் ஆத்திரமுற்ற கப்பல் பணியாளர்கள் இப்ன் துமார்ட்டைக் கடலில் தூக்கி எறிந்தனர். அரைநாள் கடலில் மிதந்த இப்ன் துமார்ட்டை பின்னர் தூக்கிப்போட்டவர்களே கப்பலில் ஏற்றிக்கொண்டார்கள். பின்னர் மஹ்தியா, துனீஸ் மற்றும் பெஜாயா ஆகிய இடங்களுக்குச் சென்று தீவிர மதப்பிரச்சாரம் செய்தார். மதுஅருந்துவது, இசைப்பது, பெண்கள் பர்தா அணியாமல் ஆண்களுடன் ஒன்றாக நடமாடுவது ஆகியவற்றை எல்லாம் எதிர்த்து பிரச்சாரம் செய்தார். அல்மொராவிட்களின் காதுகளுக்கு இது எட்டியது. அவர்கள் இவரை நகரம் நகரமாக துரத்தினார்கள். இறுதியில் 1119 ல் மெல்லாலா என்ற தென்பகுதிக்கு வந்தார். அங்கு இப்ன் துமார்ட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவாளர்கள் திரண்டார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் தலைமைப்பதவிக்கு வந்த அல் பஷீர், ஸெனாடா பெர்பெர்களின் மதபோதகர் அப்த் அல் முஃமீன், பின்னாளில் அல்மொஹதுகளைப் பற்றி “கிதாப் அல் அன்சாப்” என்ற புத்தகத்தை எழுதிய அபு பக்ர் முஹம்மது அல் பைதக் ஆகியோர் முக்கியமானவர்கள். நாளடைவில் இவர்கள் இப்ன் துமார்ட் தலைமையில் அரசியல் நடவடிக்கையில் இறங்கினார்கள்.
1120 ல் இப்ன் துமார்ட் சிறிய குழுவுடன் மொரோக்கோவின் மேற்கு பகுதிகளுக்குச் சென்றார். ஃபெஸ் நகரத்தில் இவரை தடுத்த மாலிகி மதபைச் சேர்ந்தவர்கள் இவர் சார்ந்த ஷியா பிரிவு கொள்கைகளை விளக்கச் சொன்னார்கள். அதில் திருப்தி அடையாத ஃபெஸ் நகர உலமாக்கள் அவரை நகரை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டார்கள். பின்னர் இப்ன் துமார்ட் மனம் தளராமல் நகரநகரமாக சுற்றி தீன் பணியாற்றினார். பூ ரிக்ரிக் என்ற பகுதிக்குச் செல்ல படகு பயணத்திற்கு அனுமதிக்காததால், தன் ஆதரவாளர்களுடன் நீந்தியே சென்றார். விரைவில் மர்ரகெஷ் திரும்பிய இப்ன் துமார்ட் உள்ளூர் மஸ்ஜித் ஒன்றில் அல்மொராவிட்டின் ஆட்சியாளர் அலி இப்ன் யூசுஃபைச் சந்தித்தார். மன்னரை அறிமுகப்படுத்தியவர்களிடம் இப்ன் துமார்ட் எங்கே மன்னர் நான் ஒரு பெண்ணைத்தான் பார்க்கிறேன் என்று மன்னரை அவமானப்படுத்தினார். காரணம் பத்து மீட்டர் துணியை தலைப்பாகை போல் சுருட்டி பின் அதை முகத்தைச் சுற்றி கண்கள் மட்டும் திறந்திருக்க மூடிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட தலைப்பாகையை அல்மொராவிட் ஆட்சியாளர் அணிந்திருந்ததால் இப்ன் துமார்ட் கேட்டார். (இப்போது அனைத்து போராளி இயக்கங்களும் இப்படித்தான் அணிகிறார்கள்) சிலர் உடனிருந்த ஆட்சியாளரின் சகோதரி முக்காடு அணிந்து மூடாததால் இப்ன் துமார்ட் அவரை அடித்தார் என்றார்கள். உடனிருந்த அலி இப்ன் யூசுஃபின் மதபோதகர்களுக்கும், இப்ன் துமார்ட்டுக்கும் இடையே இஸ்லாத்தைப்பற்றி நீண்ட விவாதம் நடந்தது. மன்னரின் மதபோதகர்கள் இப்ன் துமார்ட்டை கொன்றுவிட அறிவுறுத்தினார்கள். ஆனால், அலி இப்ன் யூசுஃப், பதினான்கு சவுக்கடி கொடுத்து அவரை நகரை விட்டுத் துரத்துமாறு உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து அக்மட்டுக்கு வந்த இப்ன் துமார்ட் சாலையில் போக வருபவர்களைப் பிடித்து உடைகளை அப்படி அணியாதே, இப்படிப் பேசாதே என்று கூறி சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த மது வகைகளைக் கீழே கொட்டினார். இதனால் ஆத்திரமடைந்த அம்மக்கள் மன்னரிடம் முறையிட்டார்கள். அவர் இப்ன் துமார்ட்டை சிறையிலடைக்க உத்தரவிட்டார். சரியான நேரத்திற்கு மஸ்முதாவைச் சேர்ந்த ஹஸ்ரஜா பழங்குடியின தலைவர் அபு இப்ராஹீம் இஸ்மாயில் இப்ன் யஸல்லாலி அல் ஹஸ்ரஜி வந்து இப்ன் துமார்ட்டைக் காப்பாற்றி நகருக்கு வெளியே விட்டார். பின் சூஸ் பள்ளத்தாக்கிலுள்ள தன் மக்களிடம் வந்து பதுங்கிக் கொண்டார்.
அங்கிருந்த குகையில் நீண்ட நாட்கள் இருந்த இப்ன் துமார்ட்டிடம் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சக்தி இருப்பதாகவும், அவர் ஒரு புனித மனிதர் என்று பேச ஆரம்பித்தார்கள். எவ்வளவு முயன்றும் அல்மொராவிட் மதபோதகர்களைத் திருப்திபடுத்த முடியாத நிலையில் ஒருநாள் தானே ஒரு மெஹ்தி என்று சொல்ல ஆரம்பித்தார். இதனால் ஆட்சியாளர்களுக்கு எதிராக போர் அறிவித்தது போல் உணர்ந்தார்கள். பொதுவாகவே சூஸ் பள்ளத்தாக்கைச் சுற்றி இருந்தவர்கள் ஃபாத்திமிட்களின் ஷியா கொள்கை உடையவர்களாகவே இருந்தார்கள். இப்ன் துமார்ட்டைக் காப்பாற்ற ஹிண்ட்டா என்ற பழங்குடி தலைவர் ஒமர் ஹிண்டடி உயர்வான தங்கள் மலைப்பகுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கிருந்தபடி தன் ஆதரவாளர்களைத் திரட்டி அல்மொராவிட்களுக்கு எதிராக புரட்சி செய்து ரிபாத்தில் டின்மெல் என்ற பகுதியைக் கைப்பற்றினார். அங்கிருந்த கோட்டையை மதப்பிரச்சாரத்திற்கும், இராணுவப்பயிற்சிக்கும் பயன்படுத்தினார். அங்கிருந்தபடி தன் ஆதரவாளர்களுக்கு பல புத்தகங்களை எழுதினார். (பின்னால் வந்த அல்மொஹத் கலீஃபா யூசுஃப் இப்ன் அப்த் அல் மஃமூனால பாதுகாக்கப்பட்டு 1903 ல் ஃப்ரென்ச் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.) மஸ்முதாவைச் சேர்ந்த ஹர்கா, கன்ஃபிசா, கட்மிவா, ஹின்டடா, ஹஸ்குரா மற்றும் ஹஸ்ரஜா அகிய பழங்குடி இனங்கள் ஒன்று சேர்ந்தன. எட்டு ஆண்டுகள் இடைவிடாத பல சண்டைகளால் அல்மொராவிட் ஆட்சியாளர்களின் அதிகாரம் முற்றிலும் மஸ்முதா மலைப்பகுதிகளில் தடைபட்டது. மேலும் முக்கியபகுதியான மர்ரகெஷ்-ட்ரா பள்ளத்தாக்கின் இடையே உள்ள அவ்கிரா மற்றும் டிஸி நி டிச்கா பகுதிகள் மிரட்டலாகிப் போகின. அந்த வழி ஒன்றுதான் பல நகரங்களை வியாபார ரீதியாக இணைத்தது. 1130 ல் முதல் முறையாக மலையைவிட்டு கீழே இறங்கிய அல்மொஹத்கள் அக்மத் பகுதியைத் தாக்கினார்கள். அல்மொராவிட் ஆட்சியாளர் அலி இப்ன் யூசுஃப் மொரோக்கோவின் மற்ற பகுதிகளிலிருந்த படைகளையும் அழைத்து புஹைரா போரில் பெரும் சண்டையிட்டு ஏறக்குறைய அல்மொஹத்களின் 12,000 கொன்று போட்டார். இதில் அல் பஷீர் போன்ற முக்கிய நபர்கள் அல்மொஹத்களின் பக்கம் கொல்லப்பட்டனர். அவர்களின் அதிர்ஷ்டம் அனைவரும் கொல்லப்படுமுன் பெரு மழைவந்து மிச்சமிருந்தவர்கள் மலைகளில் ஏறித் தப்பித்தார்கள். புஹைரா போருக்குப் பிறகு இப்ன் துமார்ட் 1132 ல் இறந்து போனார். போரில் பல பழங்குடியின தலைவர்களும் இறந்து போனார்கள். இப்ன் துமார்ட்டுக்குப் பிறகு அப்த் அல் முஃமீன் அல் கௌமி என்பவர் தலைமை இடத்திற்கு வந்தார்.
அப்த் அல் முஃமீன் லெம்சென் பகுதியில் டக்ரா என்ற இடத்தில் பிறந்தவர். பெரிய பழங்குடியான பெர்பெர் ஸெனடாவின் கௌமியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். சில ஆராய்ச்சியாளர்கள் இவர் இப்ன் கல்தூனின் பரம்பரை வழியைச் சேர்ந்தவர் என்றார்கள். இளம்வயதில் லெம்சென் சென்று இஸ்லாமிய சட்டமான ஃபிக் கல்வி பயின்றார். கல்வி முடியுமுன் இவரின் ஆசிரியர் இறந்து போக இப்ன் துமார்ட்டிடம் சேர்ந்தார். இப்ன் துமார்ட் சொந்த ஊரான டின்மெல்லுக்குச் செல்லும் வழியில் அவரை சந்தித்த அப்த் அல் முஃமீன் தங்கள் பகுதியில் லெம்சென்னில் தங்கும்படி அழைத்தார். இப்ன் துமார்ட் சம்மதித்து தங்கிய பிறகு, அங்கிருந்து இருவரும் மொரோக்கோ பயணித்தார்கள். இப்ன் துமார்ட்டும், இரண்டாம் மட்ட தலைவருமான அல் பஷீரும் இறந்த பின், அவர் துவக்கிய அல்மொஹ்த்களுக்கு அப்த் அல் முஃமீன் தலைவரானார். அப்போது நடந்து முடிந்த புஹைரா போரில் பெரும் இழப்பைச் சந்தித்திருந்த அல்மொஹத்கள் இப்ன் துமார்ட் இறப்பை மூன்று ஆண்டுகளுக்கு மறைத்து வைத்தார்கள். அப்த் அல் முஃமீன் வெளிப்புற பழங்குடி இனத்தவராதலால் இப்ன் துமார்டின் மஸ்முதா இனத்தவர்கள் தன்னை ஆதரிப்பார்களா என்று சிறிது அச்சப்பட்டார். நாளடைவில் மஸ்முதா கூட்டத்துப் பெண்ணையே மணந்தார். முதலில் சேதத்திலிருந்து வெளிவர பலம் வாய்ந்த படை ஒன்றை அமைத்தார். அடிக்கடி மலையை விட்டு கீழே வந்து படிப்படியாக அல்மொராவிட் ஆட்சியாளர்களை எதிர்த்தார். முதலில் அட்லாஸ் மலைப்பகுதி முழுவதையும் வென்றார். பின் லெம்சென், ரிஃப் பகுதியைக் கைப்பற்றினார். மிகச்சரியாக திட்டமிட்டு 1147 ல் மர்ரகெஷ்ஷைப் பிடித்தார். பின்னால் ஆட்சி கை நழுவும் வண்ணம் எதுவும் புரட்சி வருமோ என்று உடனடியாக 30,000 அல்மொராவிட்களை கொன்றார். முதல் முறையாக மொரோக்கோவில் அல்மொஹத்களின் ஆட்சியை ஏற்படுத்தினார். மர்ரகெஷ்ஷை தலைநகரமாக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக