திங்கள், 13 ஜூலை, 2015

அல்மொஹத்கள் வரலாறு 2


சேதமான அரண்மனை, மஸ்ஜித்களைப் புதுப்பித்து தன் எல்லையை மொரோக்கோவின் கிழக்கில் எகிப்து எல்லைவரை நீட்டித்தார். 1151 ல் அரபு பழங்குடியினர்களின் துணையுடன் கான்ஸ்டண்டைன் பகுதியை வென்றார்.  1158 ல் துனீஷியா மற்றும் ட்ரிபோலோடானியா ஆகியவற்றை வென்றார். செல்லா என்ற பகுதியில் கோட்டையைக் கட்டினார். அது ஐபீரியாவை எதிர்க்க தளமாக அமைந்தது. வாழ்க்கையின் கடைசியில் அல் அண்டலூசில் படையெடுத்தார். நிர்வாகத்தை பழைய பெர்பெர் பழங்குடியினத்தவருக்கு ஏற்றவகையில் அமைத்தார். அல்மொஹத் ஆட்சியை மத்திய ஆட்சியாக அமைத்து அதற்கு ஸ்பானிஷ் முஸ்லீம்களை நிர்வாகம் செய்யச் சொன்னார். கலைகளில் ஆர்வமிருந்தாலும் அரசை நிர்மாணிக்க உதவியர்களுக்காக பல மசூதிகளைக் கட்டினார். நிலப்பதிவு சட்டம் கொண்டு வந்து வருவாயைப் பெருக்கினார். 1163 ல் அப்த் அல் முஃமீன் இறந்த பிறகு அவர் மகன் அபு யஃகூப் யூசுப் ஆட்சிக்கு வந்தார். இவர் ஸஹீரிஸ்ட் என்னும் மதச்சட்டங்களைப் படித்தவர். மதபோதகராகவும் இருந்தார். சஹீஹ் புகாரி, சஹீஹ் முஸ்லீம் என்ற இரு ஹதீஸ் புத்தகங்களையும் அதிகார எண் உட்பட மனப்பாடம் செய்திருந்தார். மதிப்பு வாய்ந்த இப்ன் ருஷ்த், இப்ன் துஃபைல் ஆகியோர் இவரின் தர்பாருக்கு கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். இவர் சுன்னிப்பிரிவை ஆதரித்தார். 1170 ல் ஐபீரியாவை ஆக்கிரமித்தார். அல் அண்டலூசை வெற்றி கொண்டார். வாலென்ஷியா மற்றும் கடலோனியாவை அழித்தார். அபு யஃகூப் யூசுப் காடல்க்யூவில் ஆற்றின் பகுதியிலிருந்த செவில்லி என்ற நகரத்தை சீரமைத்தார். அங்கு பல கட்டிடங்களைக் கட்டினார். குறிப்பாக அல்காஸர் அரண்மனை மிகவும் புகழ் பெற்றது. பின்னாளில் கிறிஸ்தவர்கள் தாங்களே கட்டியது போல் இந்த அரண்மனையில் இவர் பிறந்தார், அவர் இதைச் செய்தார் என்று புகழ் பாடினார்கள். மேலும் புஹைரா அரண்மனை, அல்கலா டி க்வாடைரா என்ற புகழ் பெற்ற கோட்டையையும் கட்டினார். அபு யஃகூப் யூசுப் போர்ச்சுகலின் முதலாம் அல்ஃபோன்சாவுடன் சாண்டரீம் போரில் சண்டையிட்டு இறந்து போனார். அவர் உடல் டின்மெல் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவருக்குப் பின் இவர் மகன் அபு யூசுப் யாஃகூப் அல் மன்சூர் ஆட்சிக்கு வந்தார்.
தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன் என்றார். ஆனால், எஞ்சியிருந்த சில முன்னாள் ஆட்சியாளர்களான அல்மொராவிட்களுடனான சண்டையில் ஈடுபட்டார். பின் ஐபீரிய தீபகற்பத்தில் தந்தைக்காக பழிவாங்கச் சென்றார். 1190 ல் டோமரில் நடந்த போரில் போர்ச்சுகீசியர்களால் தோற்கடிக்கப்பட்டார். 1191 ல் மேலும் தென்பகுதிக்கு முன்னேறி 1182 லிருந்து போர்ச்சுகீசிய மன்னன் முதலாம் சான்சோவின் கட்டுப்பாட்டிலிருந்த பாடர்னி அரண்மனைக் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள அல்கார்வி பகுதிகளை வென்றார். வரும்போது 3000 கிறிஸ்தவ படைகளைப் பிடித்து வந்தார். யாஃகூப் அல் மன்சூர் ஆப்பிரிக்கா திரும்பியவுடன் கிறிஸ்தவர்கள் மீண்டும் ஐபீரிய தீபகற்பம் வந்து மூரீஷ் நகரங்களையும், சில்வெஸ், வெரா, பெஜா ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள். இதைக் கேள்விப்பட்ட யாஃகூப் அல் மன்சூர் மீண்டும் ஐபீரியா சென்று பழையபடி கிறிஸ்தவர்களை வென்று பிடிபட்டவர்களை 50 பேர் கொண்ட குழுவாக சங்கிலியால் பிணைத்து ஆப்பிரிக்காவின் அடிமைச் சந்தையில் விற்றார். அவர் ஆப்பிரிக்காவில் இருக்கிறார் என்று கேள்விப்பட்ட கிறிஸ்தவர்கள் 300,000 பேர் கொண்ட பெரும் படையுடன் வந்தார்கள். உடனடியாக செய்தி யாஃகூப் அல் மன்சூருக்குத் தெரிவிக்கப்பட 1195 ல் காஸ்டிலியன் மன்னன் எட்டாம் அல்ஃபோன்சாவை எதிர்த்து வென்றார். இப்போரில் 150,000 வீரர்கள் கிறிஸ்தவர்கள் அணியில் இறந்து போனார்கள். பல மதிப்புமிக்க பொருள்கள், பணம் என்று பிரமாண்டமாக யாஃகூப் அல் மன்சூர் இந்தப் போரில் கைப்பற்றினார். இதனால் அவரை “அல் மன்சூர் பில்லாஹ்” என்று அழைத்தார்கள்.
யாஃகூப் அல் மன்சூர் பல கட்டிடங்களைக் கட்டினார். மர்ரகெஷ்ஷில் கௌடௌபியா மற்றும் எல் மன்சௌரியா மஸ்ஜித்களைக் கட்டினார். கஸ்பாஹ் ஆஃப் உதயாஸ் என்னும் அரண்மனையையும், மர்ரகெஷ் நகரத்தின் 19 கதவுகளில் இரண்டான பாப் அக்னாஓ மற்றும் பாப் சிபா ஆகியவற்றையும் கட்டினார். இக்கதவுகள் மதீனா நகர் செல்ல தென்பகுதி வாசலாக இருந்ததால் வரிவசூலித்து வருவாயைத் தந்தது. உலகின் மிகப்பெரிய மசூதியை ரபாத்தில் கட்ட முடிவு செய்தார். ஆனால் இவர் இறந்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட மசூதி மட்டும் ஹசன் கோபுரத்துடன் கட்டப்பட்டது. சற்று இந்த கட்டிடங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். கௌடௌபியா என்பது அவர்களின் பழங்குடி பெர்பெர் மொழியில் சொல்லப்பட்டது. உண்மையில் அது குதூபியா மஸ்ஜித் ஆகும். மர்ரகெஷின் மிகப்பெரிய மஸ்ஜித் இதுதான். மதீனாவின் தென்மேற்கைப் பார்த்தால் போல் கட்டப்பட்டது. மர்ரகெஷ் ஃப்ரான்சின் ஆதிக்கத்திலிருந்த போது இந்த மஸ்ஜிதை நோக்கி பல சாலைகளை அமைத்ததால் மேலும் புகழ் பெற்றது. குதூபியா மஸ்ஜித் நான்காம் முஹம்மதுவின் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டது. இதன் வளாகத்தின் தெற்கிலும், மேற்கிலும் ரோஜாத் தோட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு, ஒருபுறம் யூசுஃப் இப்ன் தஷ்ஃபினின் நினைவு மண்டபமும் உள்ளது. இம்மஸ்ஜிதின் வளாகத்தின் முன்பு ஏறக்குறைய 100 புத்தகக்கடைகள் உள்ளன. 1147 லிருந்து 1154 வரை மஸ்ஜித் கட்டப்பட்டு, 1157 ல் மற்ற பணிகளுடன் முடிக்கப்பட்டது. இதன் தொழுகை இடம் மக்காவை சரியாக நேர்நோக்காததால் 12 ம் நூற்றாண்டில் பலமுறை மாற்றம் செய்யப்பட்டது. முதல்முறை 5 டிகிரி அதிகமாக மக்கா நகரிலிருந்து திசைமாறியும், இரண்டாவதுமுறை 10 டிகிரி எதிர்திசையில் குறைந்தது. குதூபியா மஸ்ஜிதின் அனைத்து பகுதிகளும் ஒரே மாதிரி வடிவமைப்பில் இருக்கும். பின் இரண்டாவது மஸ்ஜித் கட்டப்பட்டது.
குதூபியா மஸ்ஜிதை அழகுபடுத்த அண்டலூசியாவின் மூர்கள் வரவழைக்கப்பட்டார்கள். யூசுஃப் இப்ன் தஷ்ஃபின் அப்பகுதியில் ஒரு கோட்டை கட்டி இருந்தார். நகரை விரிவுபடுத்தும் போது அதை இடித்தார்கள். இதேமாதிரி தோற்றம் கொண்ட மஸ்ஜிதை ரபாத்திலும், ஸ்பெயினின் கிரால்டாவிலும் பிற்காலத்தில் கட்டினார்கள். இது முழுக்க செந்நிற கற்களால் கட்டப்பட்டு மேலே வர்ணம் அடிக்கப்பட்டது. உச்சியின் மேல் கூம்பு செம்பினால் ஆனது. 80 மீட்டர் அகலமும், 60 மீட்டர் நீளமும் கொண்டது இந்த மஸ்ஜித். வெளிப்புறம் சுற்றிலும் நான்கு திசை சுவர்களும் மணற்கற்களால் ஆனது. அனைத்து ஜன்னல்களும் குதிரையின் கால்குளம்பு போல் அமைக்கப்பட்டிருந்தன. இதன் நான்கு வாசல்களில் மூன்று நேரடியாக தொழுகைப் பகுதிக்கு செல்லும், ஒரு வாசல் முற்றத்திற்கு செல்லும், முற்றத்தில் பெரிய குளம் தொழுகைத்தூய்மை செய்வதற்காக அமைக்கப்பட்டது. இதல்லாமல் இரண்டு சிறப்பு வாசல்கள் ஒன்று இமாம் அறையிலிருந்து நேரடியாக மிம்பர் பகுதிக்குச் செல்ல, மற்றொன்று மன்னர்கள் நேரடியாக அவர்கள் தொழும் திரையிட்ட பகுதிக்குச் செல்ல. மேலிருந்து பார்த்தால் குதூபியா மஸ்ஜித் குதிரையின் கால்குளம்பு போல் தெரியும். 100 தூண்கள் கீழே மொத்த மஸ்ஜிதையும் தாங்கி நிற்கும்.
அடுத்து கஸ்பாஹ் ஆஃப் உதயா என்பது இப்ன் துமார்ட் அவர்களின் நினைவாக அல் மஹ்திய்யா என்று அழைக்கப்பட்டது. அல்மொராவிட்களுடன் நடந்த போரில் இந்த பகுதி அல்மொஹத்களாலேயே சிதிலமடைந்தது. இந்த கஸ்பாஹ் ஆஃப் உதயா மஸ்ஜிதுடன் கூடிய அரண்மனையைக் கொண்டது. யாஃகூப் அல் மன்சூர் இறந்த பிறகு கஸ்பா பாலைவனமானது. பாப் அக்னாஓ என்ற நகர்கதவு மன்னர்கள் நுழைவதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. அக்னாஓ என்பதின் நாவோவா என்ற சொல் பெர்பெர் மொழியில் கருப்பின மக்கள் என்று குறிக்கும். இதன் முகப்பு கற்களால் ஆனது. சுற்றிலும் உள்ள சுவர்களின் செங்கற்கள் குதிரையின் குளம்பு போல் தோற்றம் தரும். இதன் கதவுகளில் மூன்று பட்டிகள் அமைக்கப்பட்டு அதில் திருக்குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 18 ம் நூற்றாண்டில் வந்த சுல்தான் முஹம்மது பென் அப்துல்லாஹ்வால் இதன் நுழைவு வாயில் சிறிதாக்கப்பட்டது. பாப் சிபா இதுவும் மர்ரகெஷ் நகரின் 19 கதவுகளில் ஒன்று. சிபா என்றால் சிறிய கோட்டை என்று பொருள். இந்த கதவின் அருகில் உலகின் மிகவும் பழைமையான யூகலிப்டஸ் மரம் உள்ளது. மதீனா நகரின் தென்பகுதியான கஸ்பா மாகாணத்தை அடைய இந்த கதவுகள் வழியாகத் தான் மொரோக்கோவிலிருந்து கடக்க வேண்டும். மொரோக்கோ சுல்தான்களின் முதல் அரண்மனை இங்குதான் கட்டப்பட்டது. யுனெஸ்கோ (UNESCO) இந்த பாப் சிபா கதவை பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது. சுற்றுலா செல்பவர்களுக்கு தங்கும் வசதியுடன் கூடிய ஸ்தலமாக இருக்கிறது. 1199 ல் யாஃகூப் அல் மன்சூர் இறந்து போனார்.
அவருக்குப் பிறகு, அவர் மகன் முஹம்மது அல் நாசிர் ஆட்சிக்கு வந்தார். இவர் வந்த போது ஏற்கனவே தந்தையால் கிறிஸ்தவர்கள் எதிர்க்கப்பட்டு நிலைமை பதட்டமாக இருந்தது. பனூ கனியா என்ற கூட்டத்தினர் துனீஷியாவின் இஃப்ரிகியாவைக் கைப்பற்ற படையெடுத்தார்கள். அதை முறியடித்த முஹம்மது அல் நாசிர் இஃப்ரிகியாவுக்கு அபு முஹம்மது இப்ன் அபி ஹஃப்ஸ் என்பவரை கவர்னராக்கி ஹஃப்சிட் பேரரசு என்று ஒன்றை தோன்றச் செய்தார். போப் மூன்றாம் இன்னோசெண்ட் அனுப்பிய சிலுவைப்படைகளிடம் லாஸ் நவாஸ் டி டோலோசா போரில் தோல்வி அடைந்தார். 13 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து மன்னன் ஜானுக்கும், போப் மூன்றாம் இன்னோசெண்டுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வாய்த்தகராறாக மாறியது. அப்போது ஜான், தனக்கு உதவுமாறு முஹம்மது அல் நாசிரிடம் கெஞ்சியதாகவும், பதிலுக்கு ஜான் இஸ்லாம் மதம் மாறி, இங்கிலாந்தையும் இஸ்லாமிய நாடாக அறிவிப்பதாகவும் வேண்ட அதற்கு அல் நாசிர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் ஒரு வரலாறு உள்ளது. முஹம்மது அல் நாசிர் 1213 ல் இறந்து போனார். அடுத்து இவர் மகன் அபு யாஃகூப் யூசுஃப் அல் முஸ்தன்சிர் என்ற இரண்டாம் யூசுஃப் ஆட்சிக்கு வந்தார். தந்தை திடீரென்று இறந்ததால் அல்மொஹத்களின் ஷெய்குகள் கூடி உடனடியாக 10 வயதே ஆன இரண்டாம் யூசுஃப் ஆட்சியில் வைத்தார்கள். இவர் தாயார் ஒரு கிறிஸ்தவ அடிமைப் பெண்ணான கமர் என்பவர். இரண்டாம் யூசுஃப் கவனமாக திறமையாக தன் உறவினர்கள் அனைவரையும் அல்மொஹத் ஆட்சியின் நிர்வாகத்தில் வைத்தார். அல் அண்டலூசில் தந்தையின் சகோதரரையும், இன்னொரு உறவினரை இஃப்ரிகியாவிலும், மர்ரகெஷ் அரண்மனையில் வைசியர் அபு சாஃத் உதுமான் இப்ன் ஜமிஃஇ யையும் பொறுப்பில் வைத்தார். இவரது ஆட்சியில் பல புரட்சிகள் வெடித்தன. இஃப்ரிகியா ஹஃப்சிட் பேரரசு என்று பிளவுபட்டது. 1224 ல் தனது வளர்ப்பு பசுவுடன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டாம் யூசுஃப் பசுவால் குத்திக் கிழிக்கப்பட்டு இறந்து போனார். உடனே வசிராய் இப்ன் ஜமிஃஇ முதலாம் அப்த் அல் வாஹித் என்பவரை கலீஃபாவாக தேர்ந்தெடுத்தார்.   அப்த் அல் வாஹித் முன்னாள் சிறப்பான ஆட்சியாளர் அபு யாஃகூப் யூசுஃபின் மகனும், கலீஃபா யாஃகூப் அல் மன்சூரின் இளைய சகோதரரும் ஆவார். முன்பு இவர் மாலகா பகுதியில் கவர்னராக இருந்தார். ஹஸ்குரா பழங்குடியினரின் ஷெய்க் ஆகவும் இருந்தார். மேலும் சில சமயம் சிஜில்மஸ்ஸா மற்றும் செவில்லியிலும் கவர்னராக இருந்தார். அறுபது வயதிற்கு மேல் ஆட்சிக்கு வந்தார். அப்த் அல் வாஹிதின் ஆட்சியை அல் அண்டலூஸ் பகுதிகளில் கவர்னர்களாக இருந்த அல் நாசிரின் சகோதரர்கள் எதிர்த்தார்கள். திறமையே இல்லாத அவர்கள் இரண்டாம் யூசுஃபின் ஆட்சியின் போது பல சலுகைகளை அனுபவித்து சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதனால் அல்மொஹத்களின் ஆட்சி வழிமுறைக்கு அது ஒத்துவராது என்று முதல்முறையாக அல்மொஹத்களின் ஆட்சியில் கலீஃபா பதவிக்கு பிரச்சினையை உண்டு செய்தார்கள். 1224 ல் அப்த் அல் வாஹித் கொல்லப்பட்டார். பின் அல்மொஹத் ஷெய்குகள் அப்தல்லாஹ் அல் ஆதிலை ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக